Showing posts with label Culture. Show all posts
Showing posts with label Culture. Show all posts

Sunday, October 23, 2011

ஜப்பானிய பெளத்த மம்மிகள்

சோகுஷின்பிட்சு எனப்படும் ஜப்பானிய பெளத்த் மம்மிகளை பற்றி படித்தேன்.இது பெளத்த பிட்சுகள் தம்மையே சமாதியாக்கிகொள்ளும் முறை. இந்த முறைப்படி புத்தராக துணியும் பிக்ஷுகள் மூன்று வருடங்களுக்கு விதைகள் மற்றும் பருப்புகளை மட்டும் உட்கொள்வர்.அத்துடன் கடும் உடற்பயிற்சியை மேற்கொள்வர்.இது அவர்கள் உடலில் இருந்த கொழுப்பு முழுவதையும் கரைத்துவிடும்.அதன்பின் மூன்று வருடங்களுக்கு மரபட்டை மற்றும் விதைகளை மட்டும் உட்கொள்வர்.அத்துடன் உருஷி மரத்திலிருந்து தயாரித்த விஷ டீயை தினமும் அருந்துவர்.இந்த மரசாறு பாத்திரம் கழுவ பயன்படும் அளவு வீரியமிகுந்த விஷம்.இந்த உணவு வாந்தியை வரவழைத்து உடலில் உள்ள நீர்சத்துக்களை முழுக்க அகற்றிவிடும்.அதுபோக இந்த டீ உடலை விஷமாக்கி இறப்புக்கு பின் உடலை எந்த பூச்சியும் உண்னாமல் செய்துவிடும் இப்படி மூன்று வருடங்கள் கழிந்தபின்னர் அந்த பிக்ஷு சமாதி ஒன்றில் பத்மாசன நிலையில் அமர்வார்.அவர் உடலை விட கொஞ்சமே பெரிதான அந்த சமாதியில் நகர கூட இடம் இருக்காது.காற்று போக டியூப் ஒன்றும் மணி ஒன்றும் இருக்கும்.தினமும் காலையில் அந்த மணியோசை கேட்டால் பிக்ஷு உயிருடன் இருக்கிறார் என பொருள்.மணியோசை நின்றால் அடுத்த நாளே குழாய் பிடுங்கபட்டு டியூப் பிடுங்கபட்டு சமாதிக்கு சீல் வைக்கபடும். அதன்பின் பலவருடங்கள் கழித்து சமாதியை திறப்பார்கள்.பிணம் அழுகி இருந்தால் மீண்டும் சமாதியின் உள்ளே வைத்து அடைத்துவிடுவார்கள்.ஆனால் வழிபட மாட்டார்கள்.பிணம் அழுகாமல் இருந்தால் அந்த பிக்ஷு புத்தரானதாக கருதி வழிபடுவார்கள். இந்த சோகுஷின்பிட்சு முறையை ஜப்பானிய அரசு 20ம் நூற்றாண்டில் தடை செய்துவிட்டது. slide_193868_417384_large.jpg slide_193868_424071_large.jpg slide_193868_424086_large.jpg slide_193868_424091_large.jpg

Sunday, December 19, 2010

குடிகாரர்கள், வேசிகள், கடல் கொள்ளையர்

ஜனநாயக நாடுகளின் மக்கள் இன்று அனுபவிக்கும் பல அடிப்படை உரிமைகளின் ஆரம்பம் எது என்று பார்த்தால் அவை குடிகாரர்கள்,பாலியல் தொழிலாளிகள், கடல் கொள்ளையர் என சமூகத்தால் புறக்கணிக்கப்ட்டு ஒதுக்கப்பட்ட மக்கள் மூலமே கிடைத்துள்ளதாக வரலாற்று அறிஞர் தேடியஸ் ரஸ்ஸல் தெரிவிக்கிறார்.

அந்த உரிமைகள் பின்வருமாறு

1) திருமணத்துக்கு அப்பாற்பட்ட செக்ஸ்

18ம் நூற்றாண்டு அமெரிக்காவில் திருமணத்துக்கு அப்பாற்பட்ட செக்ஸ் என்பது பாலியல் தொழிலாளிகளால் மட்டுமே சலூன்கள் போன்ற இடங்களில் நடத்தபட்டதாகவும், அதை அமெரிக்க தேசதந்தைகள் கடுமையாக வெறுத்து, நிந்தித்தகாகவும் ரஸ்ஸல் கூறுகிறார். பாலியல் தொழிலாளிகளே முதல் முதலாக திருமண பந்தத்தை தாண்டி உறவு கொண்ட பெண்கள் எனவும் அதன்பின்னரே இந்த உரிமை பிறபெண்களுக்கு கிடைத்தது என்கிறார்

2) ஓரினசேர்க்கை

ஓரினசேர்க்கை காலனி ஆதிக்க காலகட்டத்தில் கடல்கொள்லையர்கள் கப்பலில் சரமாரியாக நடந்ததாக ரஸ்ஸல் கூறுகிறார்.கடலில் சர்வசுதந்திரமாக நடந்த இந்த விஷயம் துறைமுகங்களுக்கும் பரவியதாகவும் அந்த காலகட்டத்தில் பத்திரிக்கைகளில் விளம்பரம் தந்து பார்ட்னர் தேடும் அளவுக்கு ஓரினசேர்க்கையாளர்கள் சுதந்திரமாக இருந்ததாக ரஸ்ஸல் கூறுகிறார்.ஹோமோசெக்சுவாலிட்டி எனும் வார்த்தை 19ம்க் நூற்றாண்டில் உருவாக்கபடுவதுக்கு முன்பே இது போன்ற நிலை நிலவியதாகவும் ரஸ்ஸல் கூறுகிறார்.ரோமானிய பேரரசுக்கு பிறகு மேற்குலகின் இருண்ட நிழல்களுக்கு சென்ற ஓரினசேர்க்கை பகிரங்கமாக வெளிச்சத்துக்கு வந்தது கடல்கொள்ளையர் மூலம் தானாம்

3)விவாகரத்து

கிறிஸ்தவம் விவாகரத்துக்கு அனுமதி அளிக்கவில்லை.ஆனால் காலனி ஆதிக்க காலகட்டத்தில் பல ஆண்கள் உலகம் முழுக்க சென்றதாலும், போன இடங்களில் கிடைத்த பெண்களை மணந்ததாலும் குடும்ப உறவுகளில் மிகபெரும் மாற்ரம் ஏற்பட்டது.பெண்கள் தம்மை விட்டு பிரிந்த கணவனை சர்வசாதாரணமாக விவாகரத்து செய்யதுவங்கினர் என ரஸ்ஸல் கூறுகிறார்.அதுவரை கொடியபாவமாக கருதப்பட்ட விவாகரத்து இதன்மூலம் சாதாரண சம்பவமாகியது என்கிறார் ரஸ்ஸல்

4)மேற்கத்திய நடனம்

இன்று மேற்கத்திய நடனம் மிக பிரபலம்.ஆனால் அன்று நடனம் அடிமைகள், அடித்தட்டு தொழிலாளர்கள் மது அருந்திவிட்டு ஆடும் விடுதிகள் போன்ற இடங்களேயே பிறந்தது என்கிறார் ரஸ்ஸல்.அமெரிக்க தேசதந்தைகள் நடனம் ஆடுபவர்ஜளை மனிதர்களாகவே கருதியதில்லையாம்..."ஆம்பளைகள் நடனம் ஆடுவதா?நடனம் ஆடும் ஆண் எதுக்காவது பிரயோஜனபடுவானா?" என ஜான் ஆடம்ஸ் குறிப்பு எழுதினாராம்.

5) சனி-ஞாயிறு விடுமுறை

முந்தி எல்லாம் ஞாயிறு மட்டுமே விடுமுறை இருந்தது.ஆனால் வெள்ளியன்று சாயந்திரம் அமெரிக்க தொழிலாளிகள் கன்னாபின்னாவென குடிப்பது வழக்கமாக இருந்ததாம்.இப்படி குடித்துவிட்டு அவர்கள் சனி,ஞாயிறு,திங்கள் என மூன்றுந் ஆளும் வேலைக்கு வராமல் மட்டம் போட்டதால் தான் காம்ப்ரமைசாக சனி,ஞாயிறு இரு நாட்கள் வாரவிடுமுறை நமக்கு கிடைத்தது.ஆக வாரவிடுமுறை கிடைக்க காரணம் குடிகாரர்கள்.

6) ஸ்போர்ட்ஸ்

கிரேக்கம் அழிய காரணமே ஒலிம்பிக் ஆட்டம் தான் என அன்றைய மக்கள் கருதினர்.ஆர்கனைஸ்ட் ஸ்போர்ட்ஸ் மேல் அப்படிஒரு வெறுப்பு மக்களுக்கு.இதுவும் அடித்தட்டு தொழிலாளர்கள்,அடிமைகள் மூலமே மக்களுக்கு கிடைத்தது.

Tuesday, October 12, 2010

ஆயிஷாவின் மூக்கு - பாகம் 2

ஆயிஷாவின் மூக்கு - பாகம் 2

மூக்கு அறுக்கப்பட்ட ஆயிஷா பீபியின் கதையை அறிவோம்.டைம் பத்திரிக்கையின் புண்ணியத்தால் ஆயிஷாவின் கதை உலகெங்கும் பரவியது.அதன்பின் கலிபோர்னியாவின் தொண்டுநிறுவனம் ஒன்று ஆயிஷாவை தத்தெடுத்தது.கலிபோர்னியாவுக்கு ஆயிஷா அழைக்கபட்டார்.அங்கே அவருக்கு அறுவை சிகிச்சை நடைபெற்று புதிதாக மூக்கு பொருத்தப்பட்டது.அதன்பின் கலிபோர்னியா கவர்னர் ஆர்னால்டின் மனைவி மரியா தலைமையில் நடந்த நிகழ்ச்சியில் "தாங்கும் இதயம் (enduring heart)" என்ற விருது ஆயிஷாவுக்கு வழங்கபட்டது.வாழ்க்கையில் துன்பங்களை தாங்கி போராடி வெல்லும் பெண்களுக்கு வழங்கப்படும் இந்த விருதை ஆயிஷா வாங்கினார்

ஆயிஷா அன்று

l7q4yb-l7q4wytime3.jpg

ஆயிஷா இன்று

article-1319804-0B952C9F000005DC-161_306x423.jpg

God Bless America

Friday, June 18, 2010

438.ஐடியா மணி

ராமநாதபுரத்தில் காதல் ஜோடிகள் வீட்டை விட்டு ஓடுவது அதிகமாகிவிட்டது என வருத்தப்படும் தினமலர் இதை தவிர்க்க ஒரு சூப்பரான ஐடியாவை பெற்றோருக்கு கொடுத்துள்ளது.

அது என்ன தெரியுமா?

http://www.dinamalar.com/News_Detail.asp?Id=22151

பெண்ணே, தன்னை விரும்பியவரை திருமணம் செய்து கொண்டு கோர்ட் அல்லது போலீஸ் ஸ்டேஷனில் தஞ்சம் புகுந்து விடுகிறார். அதன் பின் பெற்றோர் தலையில் அடித்துக்கொண்டு அழுதுபுலம்புகின்றனர்.

இது ராமநாதபுரம் மாவட்டத்தில் சமீப காலமாக அதிகரித்து வருகிறது. ஒவ்வொரு முறையும் பிரச்னை ஏற்பட்ட பிறகே, அதை தடுக்க பெற்றோர் முன்வருகின்றனர். அதே அக்கறையை தங்கள் குழந்தைகளின் கண்காணிப்பிலும், வளர்ப்பிலும் காட்டினால் இது போன்ற கசப்பான சம்பவங்களை தடுக்கலாமே. கல்விக்கும், குடும்ப கலங்கத்துக்கும் வழிவகுக்கும் சினிமா, "டிவி' போன்றவற்றிக்கு முற்றுப்புள்ளி வைப்பதால் இது போன்ற கசப்பான அனுபவங்களையும் தவிர்க்கலாம்.

ஐயோ என் ஐடியா மணியே.....எப்படி ராசா இப்படி எல்லாம்?கலக்குற போ..

Thursday, September 24, 2009

417.கயானாவின் கலாசாரம் காப்பாற்றப்பட்டது


"என் பெயர் மிஸ்டர் தீமை

நான் இந்த ஏகே 47 வாங்கியது

ஓரினசேர்க்கையாளர் மேல் தோட்டாக்களை தூவ

தோட்டாக்களுடன் வெறியையும் தூவுவேன்

இசைதொகுப்பாளரை வேண்டுவேன்

பின்புறபுணர்ச்சியாளருக்கு வைப்போம் குண்டு

உங்களை வெறுக்கிறேனடா புழுக்களா.."

கயானாவில் புகழ்பெற்ற இசைகுழுவான மிஸ்டர் ஈவில்(Mr.evil) பலத்த கரகோஷங்களுக்கிடையே பாடும் பாடலின் சில வரிகள் இவை.

கயானா..மேற்கிந்திய தீவுநாடுகளில் ஒன்று.ஓரினசேர்க்கையாளரை மற்ற நாடுகள் ஜெயிலில் போடும் என்றால் கயானாவில் கைக்கு கிடைத்தால் அடித்தே கொல்வார்கள்.சில மாதங்களுக்கு முன்பு பார்க்கில் பிடிபட்ட இரு லெஸ்பியன் பெண்களை கயானிய கலாசார காவலர்கள் பலாத்காரம் செய்து அதன்பின் நாயை அடிப்பது போல் அடித்து கொன்று கயானிய கலாசார்த்தை காப்பாற்றினார்கள்.

கயானா ஓரினசேர்க்கையாளர் மேல் நடக்கும் தாக்குதலை நிறுத்த சொல்லி கயானா ஓரினசேர்க்கையாளர் மற்றும் அரவாணிகள் சங்கம் விட்ட வேண்டுகோள் காற்றில் பறக்கும் பஞ்சாய் போனது.இன்று உயிர்பிழைக்க கயானாவை விட்டு ஓரினசேர்க்கையாளர்கள் அருகிலிருக்கும் அமெரிக்காவுக்கும் கனடாவுக்கும் குடிபெயர்கிறார்கள்.கயானாவின் விஞ்ஞானிகளும், படித்தவர்களும் இவர்களில் அடக்கம் என்பதால் கயானிய அரசு கவலையில் ஆழ்ந்துள்ளது.அதேச்டமயம் "ஓரினசேர்க்கையை குற்றமற்றதாக்க அமெரிக்காவும் மேலைநாடுகளும் தரும் பிரஷருக்கு அடிபணிய போவதில்லை" என கயானிய பாராளுமன்றத்தில் அரசு உறுதிமொழி கொடுத்து கயானிய கலாசாரத்தை காப்பாற்றி உள்ளது.

ஓரினசேர்க்கையாளர் மேல் வெறுப்பை பரப்பும் கயானிய இசைகுழுக்களுக்கு அமெரிக்கா ஐரோப்பாவில் தடை விதிக்கப்பட்டு வருகிறது.இதனால் இந்த இசைகுழுக்களில் இருந்து பலர் விலகினாலும் கயானியர்கள் கவலைபடுவதாக தெரியவில்லை.ஓரினசேர்க்கையாளர்கள் மேல் வெறுப்பை பரப்பும் கலாசாரகாவலர் கடமையை தொடர்ந்து அரங்கேற்றி வருகிறார்கள்.

இந்த மிஸ்டர் ஈவில் மாதிரி நடனகுழுக்களை தடை செய்யாமல் வேடிக்கை பார்க்கும் கயானிய சுற்றுலாதுறை அமைச்சர் இந்திய வம்சாவழியை சேர்ந்த மணிராம் பிரசாத் என்பதுதான் எனக்கு வருத்தமளிக்கும் செய்தி.

Sunday, September 20, 2009

416.ஸ்டைல் சக்ரவர்த்திக்கும் கவியரசனுக்கும் என் கேள்விகள்

ஸ்டைல் மன்னன் என்று ரஜினியை சொல்வதுண்டு.ஆனால் ரஜினியிடம் கேட்டபோது 'ஸ்டைல் மன்னன் என்பதெல்லாம் சும்மா. எனக்கும் மேலே ஸ்டைல் சக்ரவர்த்தி ஒருவர் இருக்கிறார்.அவர் தான் நடிகர் திலகம்" என்றார்.

அந்த சிவாஜி ஸ்டைலில் கலக்கிய ஒரு பாடலை யுடியூபில் கேட்டேன்."நீரோடும் வைகையிலே" என துவங்கும் அந்த பாடல் என் மனதை கொள்ளை கொண்டது.

இருந்தாலும் என் குறுக்குபுத்தி என்னைவிட்டு எங்கே போகும்?அதனால்

ஸ்டைல் சக்ரவர்த்திக்கும் கவியரசனுக்கும் என் கேள்விகள்

1) ஸ்டைல் சக்ரவர்த்தி.....இத்தனை அழகான இரண்டு குழந்தைகளையும், மனைவியையும் பக்கத்தில் வைத்துகொண்டு சிகரெட் குடித்தால் செகண்ட் ஹாண்ட் ஸ்மோக் அவர்களை பாதிக்கும்னு தெரியாதா?

2) கவியரசே...

"நான் காதலெனும் கவிதை சொன்னேன் கட்டிலின் மேலே" என்று தலைவனையும்

"அந்த கருணைக்கு நான் பரிசு தந்தேன் தொட்டிலின் மேலே" என்று தலைவியையும் பாடவைத்திருக்கிறாயே?காதல் என்பது தலைவன் தலைவிக்கு அளிக்கும் கருணையா?இது நியாயமா?

60களில் உன்னிடம் இருந்த இந்த மனபோக்கு "ஆதிக்கநாயகன் சாதிக்க வந்தால் அடங்குதல் முறைதானே?" என்று 80களிலும் தொடர்ந்திருக்கிறதே?

இது நியாயமா கவியரசே?

Monday, April 13, 2009

389.தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

நண்பர்கள் அனைவருக்கும் இனிய தமிழ்புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

Wednesday, February 18, 2009

God Bless America

மதங்களை தாண்டிய பரந்த மனப்பான்மையை "கேதலிக் மனப்பான்மை" என்று சொல்வதுண்டு என்றாலும் பொதுவாக கிறிஸ்தவர்கள் இறைவனை கிறிஸ்தவ மதத்தின் மூலம் மட்டுமே அடைய முடியும் என நம்புவார்கள்.ஆனால் அமெரிக்க கிறிஸ்தவர்களிடையே எடுக்கப்பட்ட ஒரு ஆய்வு இந்த முன்முடிவை தகர்த்தெறிந்திருக்கிறது.அதாவது அமெரிக்க கிரிஸ்தவர்களில் சுமார் 70% "பல மதங்களும் இறைவனை அடைய உதவும்" என கருத்து தெரிவித்துள்ளனர்...இந்த ஆய்வு முடிவு பலத்த அதிர்ச்சிகளையும் விவாதங்களையும் கிளப்பி விட்டுள்ளது.

 பொதுவாக அமெரிக்கர்கள் மதசார்பின்மை தத்துவத்தில் நம்பிக்கை கொண்டவர்கள்.அமெரிக்கா மத சுதந்திரத்தையும், வழிபாட்டு உரிமையையும் கட்டிகாக்கும் தேசம் என்றாலும் இங்கிருக்கும் கிறிஸ்தவர்கள், லிபரல்களால் ஸ்டிரியோடைப் செய்யப்பட்டே வந்திருக்கின்றனர்.அந்த ஸ்டிரியோடைப்பை இந்த ஆய்வு தகர்த்தெறிந்துள்ளது.

 கிறிஸ்தவத்தை பரப்பும் பணியில் ஈடுபட்டுள்ள எவான்க்ஜலிக்கல் கிறிஸ்தவர்கள் எனப்படும் பிரிவில் கூட சுமார் 57% பேர் "பல மதங்களை பின்பற்றியும் இறைவனை அடையலாம்" என கூறியுள்ளனர்.இந்த நம்பிக்கை அமெரிக்க கிரிஸ்தவ பிரிவுகள் அனைத்திலும் காணப்படுகிறது."இறைவனை அடைய எங்கள் மார்க்கம் மட்டுமெ வழி" என்று கூறுபவர்கள் அமெரிக்க கிறிஸ்தவரிடையே உள்ள இரு பிரிவினர் தான்..மோர்மான்கள் மற்றும் ஜெஹோவாவின் சாட்சிகள்....மற்ற மெயின்ஸ்ட்ரீம் புராட்டஸ்டண்டு,கேதலிக்,எவாஞலிக்கல் பிரிவுகளில் பெரும்பான்மையானோர் மாற்று மதங்களின் உண்மையை ஒப்புக்கொள்ளும் பரந்த மனப்பான்மையினராகவே உள்ளனர்.

 "இந்த மதங்களை தாண்டிய பரந்த மனப்பான்மை அமெரிக்க தேசத்தின் மகத்துவம் மிகுந்த கோட்பாடு" என பெருமையுடன் கூறுகிறார் பாஸ்டன் பல்கலைகழக புரபசர் பெர்ஜர்.தீவிர கிரிஸ்தவ நம்பிக்கையாளரிடையே இது அதிர்ச்சியை ஊட்டி ஒரு விவாதத்தையும் ஏற்படுத்தி உள்ளது.அனைத்து மதங்களும் ஒன்றே என்றால் ஏசுவின் உயிர்ப்பலியும், மரணமும் வீணானதா என அவர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

"இந்த பரந்த மனப்பான்மைக்கு காரணம் அதிகரிக்கும் ஆசியர்களின் குடியேற்றமே" என்றும் கூறப்படுகிறது."உங்கள் குழந்தையின் நல்ல நண்பன் இந்துவாகவோ பவுத்தனாகவோ இருந்தால் அது மக்களின் மனதில் அந்த மதங்களைப்பற்றிய நல்ல அபிப்பிராயத்தையே உருவாக்குகிறது" என்கிறார் லிண்ட்சே என்ற ஆசிரியர்.

 நற்பண்புகளையும், கோட்பாடுகளையும் உலகெங்கிலும் இருந்து சுவீகரிக்கும் இந்த மாபெரும் ஜனநாயக தொட்டிலில் மக்களிடையே காணப்படும் இப்பரந்த மனப்பான்மை ஆச்சரியத்தை ஏற்படுத்த கூடியதா என்ன?மதத்தை எல்லாம் தாண்டிய சக்தியை கொண்டது மனித நேயமே என்பதை உலகுக்கு உணர்த்தும் அமெரிக்க மக்களுக்கு என் வாழ்த்துக்கள். இந்த மாபெரும் தேசத்தை ஏசுநாதன் என்றென்றும் வாழ்த்தி அருள் பாலிக்கட்டும்..

 

 God Bless America 

Saturday, January 26, 2008

372.பள்ளிகளில் செக்ஸ் கல்வி

முத்தமிழில் நடந்த ஒரு விவாதத்தில் இது பற்றிய சில கருத்துக்கள் பரிமாறப்பட்டன. அதனால் இது பற்றி ஒரு கட்டுரை எழுதிவிட்டேன்.

செக்ஸ் என்பது ஆபாசமோ, அசிங்கமோ அல்ல.அது குழந்தைகள் தெரிந்து கொள்ள கூடாத விஷயமும் அல்ல. குழந்தை பிராயத்தை கடக்குமுன்னரே பலரும் வயதுக்கு வந்துவிடுகின்றனர்.அந்த வயதில் மனதில் வரும் பயமும், சந்தேகங்களும், குழப்பங்களும் ஏராளம்.குழந்தைகள் அதை வெளியே சொல்வதில்லை என்பதால் அவர்கள் மனதில் அந்த நினைப்பே இல்லை என்று அர்த்தமில்லை.அந்த மாதிரி நினைத்துக்கொண்டு நாம் தான் ஏமாந்து போகிறோம்.

விவரம் தெரிந்த குழந்தைகள் செக்சை பற்றி அறிந்துகொள்வதும், அதனால் கவரப்படுவதும் தவறே இல்லை.சொல்லப்போனால் குழந்தைக்கு பருவம் வந்ததும் செக்சை பற்றிய ஈர்ப்பின்றி இருப்பது அப்நார்மல்.அப்படி எந்த டீனேஜராவது இருந்தால் அவர்களை டாக்டரிடம் கூட்டிபோய் சோதிக்க வேண்டும்.

ஏன் என்றால் உறவினர்களால், நண்பர்களால், ஆசிரியர்களால் வல்லுறவுக்கு/சீண்டலுக்கு ஆளாகி அதனால் செக்ஸையே வெறுப்பவர்கள் நிறைய உண்டு.அல்லது மருத்துவ ரீதியாக கோளாறுகள் இருக்கலாம்.அல்லது செக்ஸ் என்றால் என்னவென்றே தெரியாமல் பயந்துபோய் இருக்கலாம்.

சிறு வயதிலேயே தாய்,தந்தை குழந்தைகளுக்கு பாலியல் ரீதியான சீண்டல்களை எப்படி எதிர்கொள்வது என்பதை கற்றுக்கொடுக்க வேண்டும்.ஆண் குழந்தைகளுக்கும் தான்.உலகில் நடக்கும் கற்பழிப்பு குற்றங்களில் 10% ஆண்களுக்கு எதிராக தான் நடத்தப்படுகிறது.

முறையான செக்ஸ் கல்வி பள்ளிகளில் அளிக்கப்பட்டால் இது போன்ற பல பிரச்சனைகளை தவிர்க்கலாம்.வயதுக்கு வருவது,பாதுகாப்பான உடலுறவு,கர்ப்பத்தை தவிர்ப்பது எப்படி என்று பல விஷயங்களை பள்ளிகளில் சொல்லித்தர வேண்டும்."நமது குழந்தைகளுக்கு இதெல்லாம் எதுக்கு தெரியணும்?" என அலறினால் பிரயோசனமில்லை.ஆசிரியர் சொல்லவில்லை என்றான் கூட படிக்கும் மாணவன் அரைகுறையா சொல்லித்தருவான்.போதாகுறைக்கு சினிமா,பத்திரிக்கை சொல்லிக்கொடுக்கும்.அதுக்கு ஆசிரியர் சொல்வதே மேல் அல்லவா?

பெரும்பாலானோர் இந்த விஷயத்தில் இன்னமும் முட்டாள்தனமாக வாதங்களை வைத்துக் கொண்டிருக்கின்றனர்."ஸ்கூலில் எதுக்கு செக்சை பத்தி சொல்லிக்கொடுக்கணும்?"னு கேட்டா அப்புறம் வேற எங்க சொல்லித்தர முடியும்?ஸ்கூல்ல வாத்தியார் சொல்லலைன்னா கூட படிக்கும் மாணவன் சொல்லித்தர்ரான்.வாத்தியாராவது தியரடிக்கலா தான் சொல்லித்தருவார். இவன் பிராக்டிகலாவே வகுப்பெடுத்துடுவான்:)

எந்த வயசுலயாவது அவன்/அவளுக்கு செக்ஸை பத்தி சொல்லிக்கொடுத்தே ஆகணும் இல்லையா? "எனக்கெல்லாம் எவனும் சொல்லிக்கொடுக்கலை.நான் தெரிஞ்சுக்கலையா?"ன்னு கேட்பது உளறல்.நீ என்ன மரத்தடியில தியானம் பண்ணியா தெரிஞ்சுகிட்ட?கூட படிக்கறவன்,சினிமா,பத்திரிக்கை, பருவகாலம், ப்ளூபிலிம்னு பாத்து தனே தெரிஞ்சுகிட்ட?அதுக்கு பதில் ஒழுங்கா கவர்மெண்ட் சிலபஸ் போட்டு,வல்லுனர்கள் கூடி புஸ்தகம் எழுதி, பாட புத்தகம் மூலமா வகுப்பறையில் வாத்தியார் சொல்லிக்கொடுப்பதில் என்ன குறையை கண்டுவிட்டீர்கள்?

சிலபேர் செக்ஸ் கல்வியை எதிர்ப்பதில்லை. "அப்ஸ்டினன்ஸ் ஒன்லி" செக்ஸ் கல்வியை வலியுறுத்துவார்கள்.அதாவது வயதுக்கு வருவது, சுய இன்பம், கற்பழிப்பு தடுப்பு இம்மாதிரி கல்வியை மட்டும் கற்றுத்தரவேண்டும்.பாதுகாப்பான உடலுறவு, பாலியல் வியாதிகள் பற்றி சொல்லிக்கொடுக்க கூடாது என்று சண்டைக்கு வருவார்கள்.பாலியல் வியாதியை தடுக்க செக்சே கூடாது என்று சொல்லிக்கொடுக்க வேண்டும் என்பார்கள்.

இவர்களை கட்டி வைத்து அடித்தால் கூட இவர்கள் திருந்த போவதில்லை என்பது உறுதி. அதாவது பாதுகாப்பான உடலுறவு பற்றி என்னைக்காவது அவனுக்கு/அவளுக்கு தெரியணுமா கூடாதா? நாம சொல்லிக்கொடுக்கலைன்னா அவங்களுக்கு என்ன தெரியாம போக போவுதா?பூனை கண்ணை மூடிகிட்டு உலகத்தையே இருட்டுன்னு சொன்ன கதைதான் இது.

நான் எல்லாம் நிரோத் என்றால் என்ன என்று தெரிந்துகொண்டதே பாக்கியராஜின் எங்க சின்ன ராசா படம் பார்த்துத்தான். அதுக்கு முந்தி அது ஏதோ கருத்தடை மாத்திரை என்று நினைத்து இருந்தேன்.

செக்ஸ் கல்வி ஒருத்தன் வாழ்க்கை முழுவதற்கும் பயனளிப்பது.எந்த வயதிலாவது அதை கட்டாயம் சொல்லித்தந்தே ஆகவேண்டும்.அதை சொல்லிக்கொடுக்க பள்ளீயை விட ஏற்ற இடம் எதுவும் கிடையாது.கல்லூரிக்கு வந்து செக்ஸ் கல்வியை சொல்லிக்கொடுக்க வேண்டிய அவசியமே இல்லை.அவனுக்கே அப்ப அது தெரிஞ்சுடும்.அந்த மாதிரி முறைசாரா கல்வி வேண்டாம்னுதான் பள்ளி வயதிலேயே சொல்லித்தர சொல்வது.

மேலும் எந்த வாத்தியாருக்கும் தொழில் தர்மம்னு இருக்கு.'உறை மாட்டிட்டு புகுந்து விளையாடுங்க'ன்னு எந்த வாத்தியாரும் சொல்லப்போறதில்லை.....ஆனாலும் அளவோட அழும்பு பண்ணுங்கடா டேய்...:))

வாத்தியாருக்கு சொல்லித்தர கூச்சம், மாணவனும் மாணவியும் எப்படி ஒண்ணா உக்காந்து கேப்பாங்கன்னல்லாம் உளற கூடாது. வாத்தியார் என்ற முறையில் சொல்கிறேன். வாத்தியாருக்கு முதல் நாள் தான் கூச்சம் எல்லாம் இருக்கும்.அப்புறம் பழகிடும். இல்லைன்னா செக்ஸ் கல்விக்குன்னு ஒரு வாத்தியாரை நியமிச்சு சொல்லிதர சொல்லலாம். மாணவன் முன்னாடி சில சந்தேகங்களை கேக்க மானவிகளுக்கு கூச்சம் இருந்தா தனியாவும் அவங்களுக்கு வகுப்பெடுக்கலாம்.அதெல்லாம் ஸ்கூல் நிர்வாகம் அழகா பாத்துக்கும்.

நெருப்பு பற்றாமல் தடுக்கும் வழிமுறையை சொல்லிவிட்டு, நெருப்பு பற்றியபின் என்ன செய்யவேண்டும் என்பதை சொல்லாமல் விடகூடாது.பாதுகாப்பா ரோட்டை கிராஸ் செய்வது எப்படி என்று சொல்லிவிட்டு அதே சமயம் ஆக்ஸிடெண்ட் ஆனால் முதலுதவி எப்படி செய்யவேண்டும் என்பதையும் சொல்லியே ஆகவேண்டும் அல்லவா?அதே போல் செக்ஸ் கல்வி வகுப்பிலும் அப்ஸ்டினன்ஸின் மகத்துவத்தை சொல்லிவிட்டு அதே சமயம் உறையின் அருமை, பெருமைகளையும் கண்டிப்பா சொல்லணும்:)..அதுபோக மாரல் சைன்ஸ் வகுப்பில் ஒழுக்கத்தை கத்துகுடுங்க.வீட்டில் குழந்தைகளை ஒழுக்கமா வளர்த்துங்க.

நம்ம நாட்ல ஜனத்தொகை நூறுகோடிடா...ஒழுங்கா செக்ஸ் கல்வி சொல்லிகொடுக்கப்பட்டிருந்தா இந்த அளவுக்கு ஜனத்தொகை வளர்ந்திருக்காது. இனியும் சொல்லிக்கொடுக்காம விட்டா ஜனத்தொகை டபிள்,டிரிபிளாயி நிக்க கூட இடம் இல்லாம இருக்கவேண்டியதுதான். நாட்டை கெடுக்காதிங்கடா டேய்:-)))))

Tuesday, June 19, 2007

303. ஒருவன் ஒருவன் சூப்பர் ஸ்டார்

சூப்பர் ஸ்டார், சூப்பர் ஸ்டார் என்று ஒருவர் இருந்தார். திரையுலகில் இவர் போல் யாரும் இதற்கு முன் வெற்றிகள் அடைந்ததில்லை, இதற்கு பின்னும் அடையப்போவதில்லை என்ற என்ற புகழை அடைந்த வெகு சிலரில் அவரும் ஒருவர்.அவருக்கு மக்களிடையே கிடைத்த புகழ் ஸ்டார் ஒருவருக்கு பொறாமையை ஏற்படுத்தியது.

"சூப்பர் ஸ்டார் போல் நானும் புகழ் பெறுவது எப்படி?" என யோசித்தார். தயாரிப்பாளர் ஒருவரை கூப்பிட்டு "உங்களுக்கு ஏன் சூப்பர் ஸ்டாரை பிடிக்கிறது?" என கேட்டார்.

"அவர் இத்தனை பெரிய நடிகராக இருந்தும் எந்த ஈகோவும் இல்லாமல் இருக்கிறார்.அவுட்டோர் ஷூட்டிங்கின்போது 30,000 ரூபாய் வாடகையில் அவருக்கு ஐந்து நட்சத்திர ஓட்டலில் ரூம் போட்டேன். வேண்டாம் என்று சொல்லிவிட்டு சாதாரண அறையிலேயே தங்கினார். ஷூட்டிங்குக்கு லேட்டாக வருவதில்லை. சொன்ன வார்த்தை மாறுவதில்லை. தயாரிப்பாளரின் கஷ்டம் தெரிந்த நடிகர் அவர்" என்றார் தயாரிப்பாளர்.

அடுத்த தடவை அவுட்டோர் ஷூட்டிங் போனபோது ஸ்டார் விலை குறைந்த ஓட்டல் அறையில் தங்கினார்.ஷூட்டிங்குக்கு சொன்ன நேரத்தில் போனார்.தயாரிப்பாளர்களிடம் அன்பாக இருக்க முயன்றார்.

சிலமாதங்கள் இப்படியே போயின. ஆனாலும் ஸ்டார் புகழ் அடைவதாக காணோம்.கோபமடைந்த ஸ்டார், துணை நடிகர் ஒருவரை கூப்பிட்டு "உனக்கு சூப்பர்ஸ்டாரை ஏன் பிடிக்கிறது?' என்று கேட்டார்.

"அவர் எங்களை மனிதர்களாக மதிக்கிறார்.அன்பு செலுத்துகிறார்" என்று சொன்னார் துணை நடிகர்.

ஸ்டாரும் அடுத்த நாள் முதல் துனை நடிகர்களை மதிக்க துவங்கினார்.அன்போடு பழகினார்.

நாட்கள் கடந்தன.தன் புகழ் உயர்வதாக ஸ்டாருக்கு தெரியவில்லை.எல்லோரும் அவரைப்பார்த்து நக்கலாக சிரிப்பதுபோல் தெரிந்தது.

கோபமடைந்த ஸ்டார் ஒரு டைரக்டரை கூப்பிட்டு திட்டினார்.'சூப்பர் ஸ்டார் செய்வது எல்லாவற்றையும் நானும் செய்கிறேன்.ஆனால் என்னை யாரும் புகழ்வதில்லை.அவரை தான் புகழ்கிறார்கள்.ஏன்?"

"அவரை புகழ காரனம் அவர் படம் பாக்ஸ் ஆபீசில் அடையும் வெற்றிகள் தான்" என்றார் டைரக்டர்."நீங்களும் வெற்றிபெற்றால் உங்களையும் எல்லோரும் புகழ்வார்கள்."

ஸ்டாரால் இதை மட்டும் கடைசிவரை அடைய முடியவில்லை.கடைசிவரை சாதாரணமாக இருந்துவிட்டு மறைந்தார்.

Wednesday, June 13, 2007

300.அதனால்தான் சூப்பர் ஸ்டார்

1992ம் வருடம் ரஜினியின் கார் சென்னை ராதாகிருஷ்ணன் சாலையில் சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென ஒரு போலிஸ் ஜீப் ரஜினியின் காரை ஓவெர்டேக் செய்து, ரஜினியின் காரை நிற்கும்படி சிக்னல் செய்தது.

"முதல்வரின் கார் போகும்வரை இங்கு டிஃராபிக் நிறுத்தப்படுகிறது. ஓரம் கட்டி நில்லுங்கள்" என ரஜினியை எச்சரிக்கை செய்தார் போலிஸ் அதிகாரி.1991 - 1996ல் ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது மணிக்கணக்கில் டிராஃபிக்கை நிறுத்துவது சென்னை போலிஸின் வழக்கம்.

ஒன்றும் பேசாமல் காரை ஓரம் கட்டி நிறுத்திவிட்டு கீழே இறங்கினார் சூப்பர் ஸ்டார். ரோட்டோரமாக இருந்த பெட்டி கடை ஒன்றுக்கு நடந்து போனார். ஒரு பாக்கட் சிகரெட்டை வாங்கி, ஒரு சிகரெட்டை உருவி புகைபிடிக்க துவங்கினார்.

சூப்பர்ஸ்டாரை சுற்றி கூட்டம் சேர துவங்கியது. விரைவில் அந்த ஏரியாவே ஸ்தம்பித்து போனது. எங்கெங்கிருந்தோ எல்லாம் மக்கள் வெள்ளம் சூப்பர் ஸ்டாரை காண ஓடி வந்தது. ராதா கிருஷ்ணன் சாலையே ஜாம் ஆகி, முதல்வரின் கார் மட்டுமல்ல, ஈ, காக்கா கூட நுழைய முடியாத அளவு கூட்டம் கூடியது.

கூட்டத்தை விலக்கிகொண்டு போலிஸ் அதிகாரிகள் ஓடி வந்தனர். "முதல்வர் அவரது வீட்டை விட்டு கூட கிளம்ப முடியாமல் இருக்கிறார். தயவு செய்து நீங்கள் வீட்டுக்கு போங்கள்." என கெஞ்சினர் போலிசார்.

"முதல்வர் போகட்டும். நான் வெயிட் செய்கிறேன். வெயிட் செய்வதில் எனக்கு எந்த சிரமுமில்லை" என்றார் தளபதி.

'அய்யா சாமி' என்று கெஞ்சி கூத்தாடி அவரை காரில் ஏற்றி வழி அனுப்பி வைத்தது போலிஸ்.அவர் அங்கிருந்து கிளம்பும் வரை அம்மா தனது வீட்டை விட்டு நகர முடியாமல் இருந்தார்.

'தமிழ்நாட்டுக்கு முதல்வர் நீயாக இருக்கலாம், மக்கள் மனதில் என்றும் இருப்பது நானே' என்பதை அம்மாவுக்கு சூப்பர்ஸ்டார் உணர்த்திய சம்பவம் இது.

அதனால்தான் அவர் சூப்பர் ஸ்டார்.

நன்றி: பாலிவுட் நியூஸ், மற்றும் திரு கேபிடல்

Sunday, March 25, 2007

300 தொடரும் கிழக்கு- மேற்கு யுத்தம்?

300 என்ற ஹாலிவுட் திரைப்படம் பலத்த சர்ச்சையை கிளப்பிவிட்டுள்ளது.இனவாதம், கிழக்கு எதிர் மேற்கு, மதவாதம், மத்தியகிழக்கை ஆக்கிரமிக்க அமெரிக்கா செய்யும் சதி, என பல பிரச்சனைகளை கிளப்பி விட்டுள்ளது இந்த படம். ஈரானிய அதிபர் அஹ்மெதெஞானி இதை கடுமையாக கண்டிக்க, ஈரானிய மீடியாவும் இதை காய்ச்சித் தள்ளியுள்ளது. படத்துக்கு இத்தனை பப்ளிசிட்டி கிடைத்தால் படம் ஓடாமலா இருக்கும்? படம் ரிலீசான ஒரே வாரத்தில் பாக்ஸ் ஆபிஸ் வசூல் ஜுராசிக்பார்க்கின் வசூலை தொட்டு விட்டதாம். இந்த நூற்றாண்டின் சிறந்த வசூல்படங்களில் ஒன்றாக இது இருக்கும் என்கிறார்கள்.

படத்தின் கதை பாரசீகம் மற்றும் கிரேக்க நாடுகளில் ஒன்றான ஸ்பார்ட்டாவுக்கும் இடையே நடக்கும் மோதலை களமாக கொண்டு அமைக்கப்பட்டிருக்கிறது.ஐரோப்பிய நாடுகளுக்கும் பாரசீகத்துக்கும் வரலாற்றுகாலம் தொட்டே ஜென்மபகை என்பார்களே அதுபோல் ஒரு பகை இருந்துவருகிறது.அலெக்சாந்தர் டைரஸ, அதன்பின் ரோமானிய பேரரசு எதிர் பாரசீகம் , அதன்பின் புனித ரோமானிய பேரரசு பாரசீகம் என்று மாறி அதன்பின் சிலுவைப்போராக பரிணமித்து (ரிச்சர்ட்- சலாதீன்) என்று சென்று இப்போது அமெரிக்கா - ஈராக் வரை வந்து நிற்கிறது. வரலாற்று காலம் தொட்டே ஐரோப்பாவுக்கும் பாரசீகத்துக்கும் அப்படி ஒரு ஜென்மப்பகை.

இப்போது பாரசீகம் என்பது ஈரான் மற்றும் ஈராக் என்று இருநாடுகளாக பிரிந்து நிற்கிறது.ஈராக் அமெரிக்கர்களிடம் வீழ்ந்துவிட்டது. அடுத்து ஈரான் அணுகுண்டு வைத்திருப்பதாக சொல்லி அதன்மேல் தாக்குதல் நடக்கலாம் என்று ஒரு பேச்சும் கிளம்பியிருக்கிறது. ஈரானிய அதிபருக்கும் அமெரிக்காவுக்கும் இடையே தமிழ் வலைப்பதிவு ரேஞ்சில் அறிக்கைப்போர் நடந்து கொண்டிருக்கிறது:) இந்த சூழலில் இந்த படம் ரிலீசானது எரியும் நெருப்பில் எண்னையை காய்ச்சி ஊற்றியது போல் ஆகிவிட்டது.

அப்படி என்னதான் இந்தபடம் செய்தது?

பாரசிகத்துக்கும் கிரேக்கத்துக்கும் BCE 450ம் வருடம் நடந்த வீரம் செறிந்த ஒரு போரை இதுகாட்டியது.அந்த போரில் வெறும் 300 ஸ்பார்டா வீரர்கள் சுமார் 10 லட்சம் பேர் அடங்கிய பாரசீக படையை 3 நாட்கள் எதிர்த்துநின்று பேரிழப்பை ஏற்படுத்திவிட்டு உயிரிழந்தார்கள். அதன்பின் 10,000 பேர் அடங்கிய ஸ்பார்ட்ட படையை கண்டவுடன் 300 பேரே இப்படி சண்டைபிடித்தால் 10,000 பேர் என்ன செய்வார்களோ என்று பயந்து பாரசீக படை தோற்றோடுகிறது. இதுதான் கதை (இது உண்மையிலேயே நிகழ்ந்த வரலாற்று நிகழ்வு என்பது குறிப்பிடத்தக்கது)

இதில் ஈரானிய அதிபர் ஆட்சேபம் தெரிவிக்க என்ன இருக்கிறது?

ஈரானை மட்டம் தட்டும் இந்தபடத்துக்கு அமெரிக்க அரசு நிதிஉதவி செய்தது என்ற வதந்தி பலமாக உலாவருகிறது. இந்த படத்தில் பாரசீகர்களை காட்டுமிராண்டிகளாகவும், அசுரர்கள் போலவும் சித்தரித்து கிரேக்கர்களை மாவீரர்களாக காட்டியுள்ளனர்.(10 லட்சம் பேரை 300 பேர் எதிர்த்தால் அவர்களை மாவீரர்களாகத்தானே காட்டமுடியும் என்கிறது மறுதரப்பு).

பாரசிகத்தின் புகழ்பெற்ற மன்னர் செரெக்சை( Xerxes) கிட்டத்தட்ட திருநங்கை போல சித்தரிக்கின்றனர், கிரேக்கர்களை ஆண்மை நிரம்பிய வீரர்களாக காட்டுகின்றனர் என்பதுதான் ஈரானிய அதிபரை கொதிப்படைய வைத்துவிட்டது. மனிதர் பாய்ந்து தள்ளிவிட்டார். பாரசீகத்தின் வரலாற்று புகழ் பெற்ற மன்னர் செர்க்செசை ஜட்டி போன்ற ஒரு உடையில் , மொட்டை தலையுடன், மீசை இல்லாமல் பெண்மை குணத்துடன அடியாள் காஸ்டுயூமில் படம் முழுக்க உலாவவிட்டிருக்கின்றனர். (பார்க்க: இந்த பதிவிலுள்ள படம்) பாரசீக கலாச்சாரத்தில் பெண்மை குணம் நிரம்பிய ஆணாக காட்டப்படுவது மிகுந்த அவமானத்தை தருவதாகும். தமிழ்நாட்டுக்கு அடுத்து மீசை மேல் அதீத பெருமை கொண்ட இன்னொரு கலாச்சாரம் பாரசீக கலாச்சாரம்தான். குவைத் தூதரை சதாம் 'மீசை இல்லாத குரங்கு' என்ரெல்லாம் திட்டியிருக்கிறார்.

படத்தை பார்த்த இடதுசாரி எழுத்தாளர்கள் பலரும் அதில் பாரசீகர்கள் கறுப்பர்களாக்வும்,பழுப்பர்களாகவும் கிரேக்கர்கள் வெள்ளையர்களாக்வும் இருப்பதையும் வைத்து நிறவெறி கண்ணோட்டத்தில் குற்றம் சுமத்துகின்றனர்( உண்மையில் அவர்கள் நிறம் அதுதானே என்கிறது இன்னொருதரப்பு). நவ்ரூஸ் எனும் பாரசீக புதுவருடத்தன்று இதை ரிலீஸ் செய்ததும் ஈரானியர்களை கொதிப்படைய வைத்துள்ளது.

"இந்த படம் எங்கள் கலாச்சாரத்தின் மீது தொடுக்கப்பட்ட தாக்குதல்" என்று ஈரான் யுனெஸ்கோவிலும், ஐநா சபையிலும் புகார் தந்துள்ளது.பிரான்சில் இதை ரிலீஸ் செய்ய அனுமதிக்ககூடாது என்று ஈரானிய தூதரகம் கேட்டுக்கொண்டுள்ளது. "வரலாற்றை படமாக எடுப்பதில் என்ன தவறு" என்று டைரக்டர் தரப்பும், "இது ஒரு வரலாற்று மோசடி" என்று ஈரானும் மாறிமாறி குற்ரம் சாட்ட அமெரிக்க இடதுசாரிகள் இதை திட்ட வலதுசாரிகள் இதை கொண்டாட, சர்ச்சை வலுவடைய, வலுவடைய படம் வசூலை வாரிக்குவித்து வருகிறது.உலகின் டாப் 19 வசூல்படங்கள் பட்டியலில் வெறும் 20 நாளிலேயே சேர்ந்துவிட்டது 300.

அரசியல் சர்ச்சை போக படம் மிக நேர்த்தியாக எடுக்கப்பட்ட படம் என்று ஒருதரப்பும் "வீடியோ கேம் போல் இருக்கிறது" என்று இன்னொருதரப்பும் பிரச்சாரம் செய்துவருகின்றன. ராட்டன் டொமேட்டோஸ் என்ற மிக கடும் விமர்சகர்கள் தளத்திலேயே படம் மிக நல்ல படம் என்று சர்ட்டிபிகேட் வாங்கியுள்ளது. ஹிஸ்டாரிகல் பேன்டசி எனும் வகையறா படம் இது என்று சிலர் சொல்ல படத்தின் டைரக்டர் "இந்த படத்தின் 90% காட்சிகள் உண்மையான வரலாறு" என்று வரலாற்று நிபுணர்கள் சொன்னதாகவும் இன்னும் சில நிபுனர்கள் "எப்படி வரலாற்றை இப்படி கண்முன் கொண்டுவந்தீர்கள்?" என்று அதிசயித்து கேட்டதாகவும் சொல்கிறார்.

Thursday, March 08, 2007

250.போதிமரமும் புத்தனின் நிர்வாணமும்

க்ளென்வுட் ஸ்ப்ரிங்க்ஸ் (Glenwood springs) கொலராடோவிலுள்ள அழகான ஒரு சுற்றுலாத்தளம்.மலைமேல் அமைந்த சிறிய நகரம்.டென்வரிலிருந்து அங்கே விமானம் மூலம் செல்லலாம் என்றாலும் சாலையின் அழகை ரசிக்க கார் அல்லது பஸ் பிரயாணமே சரி என்பதால் க்ரேஹவுண்ட் மூலம் கிளம்பினேன். மொத்தம் 3.5 மணிநேர பஸ்பயணம்.

வழியெங்கும் வானுயர்ந்த பனிமலைகள். பனிமலைகளிடையே புதுமணப்பெண் போல் நாணிக் கோணிச் செல்லும் அழகிய கொலராடோ ஆறு. ஆற்றுக்கும் மலைக்கும் நடுவே அந்தரத்தில் தொங்கும் ரயில் பாதை. வசந்தகால பருவத்தில் பூத்துக்குலுங்கும் மலர்கள், இளவெயிலில் உருகி வழியும் பனி என வழியெங்கும் கண்கொள்ளா காட்சிகள்.

க்ளென்வுட்டில் ஒரு கேஸ் ஸ்டேஷன் தான் பஸ் நிலையம். அங்கே காலை 10.30க்கு பஸ் என்னை இறக்கிவிட்டது.19ம் நூறாண்டின் ஐரோப்பிய நகரம் போல் காட்சியளித்தது க்ளென்வுட்.அங்கே ஓடும் பஸ்கள் பலவும் இலவச பஸ்கள் என அறிந்து வியந்தேன்.ஒரே பஸ்ஸில் ஏறினால் நகர் முழுவதையும் ஒரு ரவுண்ட் வந்துவிடலாம். அத்தனை சிறிய ஊர்.ஆனால் பிரயாண களைப்பில் பஸ்ஸை பிடிக்க விருப்பமின்றி எனது காரில் ஏறிக்கொண்டு(வாடகை கார் எல்லாம் எனது கார்:)) தங்கும் விடுதிக்கு சென்றேன். காரோட்டி பழைய பிரிட்டிஷ் போர்வீரன் போல் உடை அணிந்திருந்தார். கம்பீரமாக இருந்தார். $12 கட்டணத்துடன் $3 டிப்ஸையும் தந்ததும் மகிழ்வாக கைகொடுத்தார்.

தங்கும் விடுதியின் உரிமையாளரும் அவரது மகளும் மிக கனிவுடன் முகமன் கூறி வரவேற்றனர்.ஹில்டன்,மரியாட் போன்ற விடுதிகளில் கிடைக்கும் இயந்திரமயான செயற்கை புன்னகையை அப்போது நினைத்துக் கொண்டேன். அறை வாடகையும் மிக குறைவுதான்($80). ஆனால் அறை மிக சுத்தமாக இருந்தது. மைக்ரவேவ்,பிரிட்ஜ்,கேஸ் அடுப்பு முதலியவையும் அரையில் இருந்ததால் வெளியே உணவு சாப்பிடும் செலவு சுத்தமாக இல்லாமல் போனது.

பசி வயிற்றை கிள்ளவே வெளியே வந்தேன். அருகிலுள்ள அங்காடிக்கு சென்று டாப்ரேமன் நூடில்ஸ் வாங்கி அறைக்கு வந்து மைக்ரவேவ் செய்து சாப்பிட்டேன். ஒரு டின் பெப்சிக்கும் இரண்டு நூடில்சுக்கும் சேர்த்து திருப்திகரமான மதிய உணவு $1.50 செலவில். அப்புறம் ஊர் சுற்ற வெளியே கிளம்பினேன்.

இதமான வெயில் இருந்தாலும் குளிரும் அடித்தது. இலவச பஸ்ஸீல் ஏறி முதலில் அட்வெஞ்சர் பார்க் சென்றேன். மலை உச்சியில் அமைந்த பார்க்குக்கு கம்பியில் கட்டி இழுக்கும் இழுவை ட்ராமில் தான் செல்ல வேண்டும். அதற்கான கட்டணம் $10. அதில் ஏறி சென்றால் வழியில் தெரியும் இயற்கை காட்சிகளை கண்டுகளிக்க நடுநடுவே நிறுத்துகிறார்கள். சுற்றிலும் 14,000 அடி உயர பனிமலைகள் நடுவே, வளைந்தோடும் கொலராடோ ஆறும் அதன் கரையில் அமைந்த க்ளென்வுட் நகரமும் கண்முன் தெரிந்தது. தொழிற்சாலைகளால் மாசுபடா நகரை மேலிருந்து அதன் இயற்கை அழகோடு தரிசிக்கும் காட்சி காணக்கிடக்காத அற்புதம்.

மலைமேல் சென்றதும் அங்கே ஒரு குகைப்பயணம் சென்றேன்.மலைக்குள் இருக்கும் சுரங்கங்கள் அமெரிக்காவெங்கும் பல நகரங்களில் இருக்கும்.பல குகைகளுக்கு அதுபோல் போயிருக்கிறேன்.

இந்த குகைப்பயணத்துக்கு வந்த வழிகாட்டி உற்சாகமான 50 வயது இளைஞர்.ஆகிருதியான உடல்கட்டும், முறுக்கு மீசையும் வைத்திருந்த வெள்ளையர்.14ஸ் என்று அழைக்கப்ப்டும் 14,000 அடிக்கு மேலான மலைகளில் ஏறுவதில் சமர்த்தர்.மிக இனிமையாக பேசக்கூடியவர்.குகையின் வரலாறு, ஸ்டால்கமைட்ஸ் போன்ரவற்றை விளக்கிக்கொண்டே வந்தார். ஏற்கனவே பல குகைகளில் கேட்டதுதான் எனினும் இவர் தமது சொந்த அனுபவத்தையும் கதையாக சொல்லிக்கொண்டே வந்தார்.

14000 அடிக்கு மேற்பட்ட டிம்பர்லைன் எனப்படும் புல்பூண்டு கூட வளரா உயரம் படைத்த மலைகளை அவர் வென்ற கதைகளை சுவாரசியமாக சொன்னார்.எத்தனை சதவிகிதம் உண்மை,எத்தனை சதவிகிதம் பொய் என தெரியவில்லை எனினும் நன்றாக் ரசிக்க முடிந்தது. "இந்தியாவுக்கு வாருங்கள்.அங்கே எவெரெஸ்ட் இருக்கிறது.22000 அடி உயரம்" என்றேன்."எவெரெஸ்ட் ஏறுவது என் வாழ்நாள் கனவு" என பதிலளித்தார்.

மலைசுற்றுப்பயணம் முடிந்து விடுதி வந்து சேர இரவாகிவிட்டது.இரவு உணவுக்கு மீண்டும் அங்காடிக்கு சென்று உறையவைக்கப்பட்ட மெக்சிகன் எஞ்சிலாடாவையும், புட்டியில் அடைக்கப்ட்டிருந்த 2% பாலையும் மக்காசோள டப்பாவையும் வாங்கிவந்து மைக்ரோவேவில் சூடு செய்து வயிராற உண்டேன்.மலையில் நடந்த களைப்பு.நன்றாக உறக்கம் வந்தது. அடுத்தநாள் முழுக்க சுடுநீர் ஊற்றில் குளிக்க திட்டம்.க்ளென்வுட் ஸ்ப்ரிங்க்ஸ் முழுக்க எங்கே குழி தோண்டினாலும் சுடுநீர் தான் பீறிட்டு வரும்.அந்த சுனைகளில் குளிப்பது சுகமான அனுபவம்.அப்படி ஒட்ரு சுடுநீர் குளத்தில் குளிப்பது உடல்நலத்துக்கு மிகவும் நல்லது என்பதுடன் நல்ல பொழுதுபோக்கும் ஆகும்.

சுடுநீர் சுனைக்கு இலவச பஸ்ஸீல் சென்றேன்.நாள் முழுதும் குளிக்க $10 கட்டணம்.நீச்சல் குளத்தை கண்டதும் அதிர்ந்தேன்.சுற்றிலும் நீச்சல் உடை அணிந்த அத்தனை மனிதர்களை அருகருகே காணும்போது கலாச்சார அதிர்வு நிகழத்தான் செய்தது.

குளத்தில் இறங்கினேன்.சூடான நீரின் வெதுவெதுப்பில் உடல்வலிகள் அனைத்தும் மறைந்தன. எதிரே நீச்சல் உடையில் யுவர்கள், யுவதிகள், குழந்தைகள், கிழவர்கள், கிழவிகள் என நூற்றுக்கணக்கான பேர்.குளத்தில் கட்டிப்பிடித்து ஜலக்கிரிடை நடத்தும் காதலர்கள், அவர்களுக்கு ஐந்தடி தள்ளி பந்து வீசி விளையாடும் குழந்தைகள்,நீச்சல் குளத்தில் ப்ரெட்ரிக் போர்சித் படிக்கும் முதியவர் ஒருவர்,குளத்தில் அமர்ந்து உணவை ஒருவருக்கொருவர் ஊட்டி விட்ட 80வயதுக்கு மேற்பட்ட முதிய தம்பதியினர் என மனிதவாழ்வின் அத்தனை பரிணாமங்களும் அங்கே இருந்தன. இவை அனைத்தும் எனக்கு அன்பின் பல்வேறு பரிணாமங்களாகத்தான் தெரிந்தன. காதலரின் அன்பும், குழந்தைகளின் அன்பும், முதியவரின் அன்பும் அந்தந்த வயதுக்குரிய அன்பின் வெளிபாடுகளாகத்தான் தெரிந்தன.

ஜலக்கிரிடை நடத்தும் காதலர்களை கண்டபோது அருவறுப்பே வரவில்லை. மனிதகுலத்தின் இயற்கையான உனர்வு அங்கே வெளிப்பட்டுக் கொண்டிருந்தது. அவர்களை யாரும் உற்றுப் பார்த்தார்களில்லை. அதை இயற்கையான ஒரு நிகழ்வாக அங்கிருந்த அனைவராலும் எடுத்துக்கொள்ள முடிந்திருந்தது. மிகக்குறைந்த ஆடை அணிந்திருந்த பெண்களையும் யாரும் அங்கே ஊற்றுப்பார்க்கவுமில்லை, கிண்டல் செய்யவுமில்லை. அவர்கள் அருகே நீரில் கிடந்து எந்த கல்மிஷமுமின்றி சகமனிதர்களாக அனைவராலும் அங்கே இருக்க முடிந்தது. மஞ்சள்,கறுப்பு,பழுப்பு,வெள்ளை என பல கண்டங்களை சேர்ந்த பல வண்ண உடல்கள். சிலுவை, கறுப்பு கயிறு, புத்தர் டாட்டு என பலமத சின்னங்கள் கொண்ட உடல்கள். பல்வேறு மொழிகள். இவை அனைத்துமிருந்தும் அங்கே வெளிப்பட்டது அனைத்தும் அன்பின் பரிணாமங்கள் தான்.

சீன குழந்தைகள் சீனமொழியில் கூச்ச்லிட்டபடி சுடுநீரில் ஆடியபோது அவர்கள் உணர்வை அறிய சீனமொழி தேவையாயிருக்க்வில்லை. 80 வயதை தாண்டிய ஹிஸ்பானிக் தம்பதியினர் கையை பிடித்தபடி பலமணிநேரம் கொஞ்சிக் கொண்டிருந்தபோது அந்த அன்பை உணர ஸ்பானிய மொழி தெரிந்திருக்க வேண்டிய அவசியமில்லை. மதம்,நிறம்,மொழி ஆகியவற்றை தாண்டி மனித இனம் முழுமைக்கும் பொதுமொழி அன்பே என்பது அங்கே வெளிப்படையாக தெரிந்தது.

முன்பொரு காலத்தில் இந்திரவிழா எனும் பெயரில் தமிழ்நாட்டில் இதேபோல் நீர்விழா நடந்த நிகழ்வுகள் நினைவுக்கு வந்தன.

காலை முதல் இரவு வரை குளத்தில் இருந்துவிட்டு வெளியே வந்தேன். லாக்கர் ரூமில் நிர்வான மனிதர்களை கண்டபோது சுத்தமாக அருவறுப்பே வரவில்லை. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை நிர்வாணமாக அங்கே சிரித்து பேசிக்கொண்டிருந்தனர். தொந்தி,தொப்பை, கட்டுடல் என பல வடிவங்கள். மனதில் மிச்ச்மிருந்த கலாச்சாரத்தின் பாதிப்பால் துண்டு கட்டிக்கொண்டு அங்கே குளித்தபோதும் அவர்கள் கலாச்சாரத்தை மதிக்கவும் என்னால் முடிந்தது.

வெளியே வந்தபோது நீச்சல்குளத்தில் சாதாரணமாக காட்சியளித்த அதே ஆண்களும், பெண்களும் ஆடை அலங்காரத்தில் மிகவும் அழகாக தோற்றமளித்தனர். தொப்பைகள் பெல்டால் சுருக்கி கட்டப்பட்டிருந்தன. வழுக்கைகள் தொப்பியால் மூடப்பட்டிருந்தன. உடைகள் அவர்கள் அந்தஸ்தையும் செய்யும் தொழிலையும் வெளிக்காட்டின. குளத்தில் இதெல்லாம் தெரியவில்லையே? ஏன்?

கதவை திறந்து வெளியே வந்தேன். நாகரீக உலகில் கலந்தேன்.ஆடை அணிந்த மனிதர்கள் செல்வத்தை தேடிக்களைத்து வீடுதிரும்பிக் கொண்டிருந்தனர். போதிமரத்தடியில் அமர்ந்த அனுபவத்துடன் விடுதிக்கு திரும்பினேன்.

Monday, February 26, 2007

246.கண்ணகியின் காதல்

"தாயே..யாரம்மா நீ?ஏன் இப்படி அலங்கோலத்துடன் இருக்கிறாய்?பராசக்தியின் வடிவாக காணப்படும் உனக்கு இந்த கொடுமையை செய்ய துணிந்தவன் யார்?" என்று மணிமேகலை பரிவோடு கேட்டாள்.

கண்மூடி தவமிருந்த தேவி கண்ணகி கண்திறந்தாள். எதிரே தன் கணவனே பெண்வடிவெடுத்து நின்றுகொண்டிருப்பது போல் தெரிந்தது. கண்ணை கசக்கினாள். கிள்ளிப் பார்த்தாள். வலித்தது. ஆம் இது கனவில்லை.ஆனால் தனக்கு சித்தபிரம்மை பிடித்துவிட்டதோ,காணும் யாவும் கோவலனாய் தோற்றம் அளிக்கிறதே..பெண்வடிவில் கோவலனா?ஆனால் அந்த குரல்,கண்கள்..ஏன் அது மட்டும் மாதவியை போல் தெரிகிறது??

"அம்மா.." மணிமேகலை மீண்டும் கண்ணகியின் தோளை உலுக்கினாள்.

"யாரம்மா நீ? உன் பெயர் என்ன?என் கணவன் போலவே நீ இருக்கிறாயே?" என ஆதங்கத்துடன் கேட்டாள் கண்ணகி.

"என் பெயர் மணிமேகலை. நான் ஒரு பிக்குணி. மதுரை மாநகரில் தீ பற்றி எரிந்து பலர் இறந்து விட்டனராம். மன்னர் கூட இறந்ததால் மக்களுக்கு மருந்திடவும், பிணங்களை எரிக்கவும் கூட ஆள் இல்லையாம் தாயே. அதனால் தான் பிக்குகள் அனைவரும் மதுரைமாநகர் செல்கிறோம்" என்றாள் மணிமேகலை.

"எனக்கு ஒரு பெண்மகவு பிறந்தால் மணிமேகலை என்று பெயர் வைக்கப்போவதாக என் கணவர் அடிக்கடி சொல்வார்" என்றாள் கண்ணகி.

"அது இருக்கட்டும் தாயே, உங்கள் முலையை எவன் அறுத்தது?தமிழ்பெண்ணுக்கு இப்படி கொடுமை நடக்க பாண்டியன் பார்த்தானோ?பார்க்க பொறாது இறந்தானோ?" என கண்கலங்கினாள் மணிமேகலை.

"என் முலையை நானே அறுத்தேன்.பாண்டியனையும், மதுரையையும் எரித்தேன். அவன் மேல் குற்றமில்லை" என்றாள் கண்ணகி.

"மதுரையை நீயா எரித்தாய்? நீதி வழுவா மன்னனை நீயா கொன்றாய்?தாயே உனக்கு புத்தி பேதலித்து விட்டதா? ஏன் இப்படி செய்தாய்?" என ஆவேசத்துடன் கேட்டாள் மணிமேகலை.

"கீழே பார்" என சுட்டிக் காட்டினாள் கண்ணகி.

மலை மேலிருந்து கீழே இருக்கும் காட்டை உற்றுப்பார்த்தாள் மணிமேகலை.

வனவேடன் ஒருவன் வில்லை வளைத்து ஆண்யானை ஒன்றை கொன்றான். தந்தத்தை உடைத்து எடுத்துக்கொண்டு வெற்றியுடன் திரும்பினான். நீர் குடிக்க போன பிடி வந்து தன் காதலன் உடலை கண்டு அழுது புலம்பியது. துதிக்கை தூக்கி பிளறியது.வெறி ஏறி அருகிலிருந்த மரங்களை முட்டி சாய்த்தது. துதிக்கையில் சிக்கிய பறவைகளையும், மான்களையும், மற்ற மிருகங்களையும் காலில் போட்டு மிதித்தது.காட்டையே அதலபாதாலம் செய்துவிட்டு மயங்கிச் சாய்ந்தது.

"வெறி பிடித்த பிடி" என்று உடல் சிலிர்த்தாள் மணிமேகலை.

"என் கணவன் என்னை பிடிநடையாள் என்று தான் அழைப்பான்" என்றாள் கண்ணகி. அந்த துயரிலும் அவள் முகத்தில் லேசான பெருமிதம் தெரிந்தது. "தாயே..அந்த மிருகத்தின் மனநிலையையா நீ அடைந்தாய்? யானைக்கு மதம் பிடிக்கலாம். மனிதனுக்கு பிடிக்கலாமா?" என்று ஆதூரத்துடன் கேட்டாள் மணிமேகலை.

"யானையோ,எறும்போ,மனிதனோ..உணர்ச்சிகள் ஒன்றுதானே மகளே" என்றாள் கண்ணகி.

"நீ செய்ததற்கு நியாயம் கற்பிக்கிறாயா தாயே" என்றாள் மணிமேகலை.

வெறி தெளிந்த பிடி அழுதபடி எழுந்தது.தான் மிதித்துக்கொன்ற மிருகங்களை பார்த்து அழுது புலம்பியது. கண்ணீர் வடித்தபடி பிளிறியது. காதலன் அருகே கிடந்து உயிர்விட்டது.

"என் கணவன் அழைக்கிறான்" என்றாள் கண்ணகி.

"சாகும் வயதா உனக்கு?" என்றாள் மணிமேகலை.

"என் கணவனை பிரிந்து வாழும் ஒவ்வொரு நொடியும் நரகம் போலல்லவா இருக்கிறது" என்றாள் கண்ணகி.

"கொடுத்துவைத்த பெண் நீ" என்றாள் மணிமேகலை. "இப்படிப்பட்ட பெண்ணின் அன்பை பெற்ற கணவன் பெரும் பாக்கியவான்....ஆனால் என் அன்னைக்கும் ஒரு தறுதலை கணவன் வாய்த்தான்.கடைசிவரை கூட இருப்பேன் என்று சொல்லிவிட்டு கைவிட்டுவிட்டான். அந்த வினாடியே ஆணினத்தையே வெறுத்தேன்.என் காதலனான உதயகுமாரனையும் ஆண் என்பதால் துறந்தேன்.துறவறம் பூண்டேன்." என்றாள் மணிமேகலை.

"உண்மையான காதல் யாரையும் உதறாது.பிரியாது" என்றாள் கண்ணகி.

'உன் காதல் உண்மை என்பதை ஊரை எரித்து நிருபித்தாய் தாயே.ஆனால் உன் கணவன் உன்மேல் கொண்ட காதல் உண்மையா என்பதை நீ எப்படி உணர்ந்தாய்?" என கேட்டாள் மணிமேகலை.

"என் கணவனுக்கு என்னைப்பிரிய சுதந்திரம் கொடுத்தேன்.பிரிந்து சென்றான்.பிறகு மீண்டும் திரும்பி வந்தான். அதனால் அவன் என்னுடையவனானான்" என்றாள் கண்னகி.

"திரும்பி வந்திருக்காவிட்டால்.." என்று கேட்டாள் மணிமேகலை.

'அவன் என்றுமே என்னுடையவனாக இருந்ததில்லை என்று பொருள்" என்றாள் கண்ணகி.

கண்மூடி உதயகுமாரனை நினைத்தாள் மணிமேகலை. ஒரே வினாடி. அதன்பின் மனதில் அருகக்கடவுள் தோன்றியதும் திடுக்கிட்டு கண்விழித்தாள்....

"உன் காதலனை நினைத்துக்கொண்டாயா குழந்தாய்" என்றாள் கண்ணகி. அவள் முகத்தில் புன்னகை அரும்பியது. "அவனும் உனக்கு சுதந்திரம் தான் கொடுத்திருக்கிறான். நீ திரும்பி போய் அவனுடன் சேர்ந்தால் நீ அவனுடையவள். போகாவிட்டால் நீ என்றுமே அவனுடையவளாக இருந்ததில்லை என்று அர்த்தம்"

"என் மனதில் இருக்கும் அருகக்கடவுளை தூக்கி எறிந்து அவனை குடியேற்ற இன்னும் ஒரு ஜென்மம் ஆகுமே?உதயகுமாரன் அத்தனை நாள் திருமணம் செய்யாது எனக்காக காத்திருப்பானா?" என கேட்டாள் மணிமேகலை.

"உண்மை காதல் காத்திருக்கும்.பொய்க்காதல் காத்திருக்காது" என்றாள் கண்ணகி.

"நான் அவனிடம் திரும்ப மாட்டேன். என் காதல் பொய்க்காதல். ஆனால் உதயன் எனக்காக காலமெல்லாம் காத்திருப்பான். அவனுடையது உண்மை காதல்.." என கண்ணீர் சிந்தினாள் மணிமேகலை.ஒரு முடிவோடு எழுந்தாள்.

"தாயே..உண்மையான காதலை நீ உன் கணவன் மேல் வைத்தாய். அவனும் அதையே உன் மேல் வைத்தான்.அன்பை கொடுத்து அன்பை பதிலுக்கு நீ பெற்றாய்....உன் காதலை அடைந்த உன் கணவன் கொடுத்து வைத்தவன். அவன் காதலை அடைந்த நீயும் கொடுத்து வைத்தவள். பொய்யான காதலை காதலர்க்கு கொடுத்த நானும், என் தாயும் அதற்கான பரிசை அனுபவிக்கிறோம்.தமிழ்நாட்டு மங்கையர் தம் கணவர் மீது வைக்கும் மாசிலா அன்புக்கு நீயே உதாரணம். .....அம்மா...நீ நீடூழி வாழி. தமிழ் உள்ளவரை,தமிழர் உள்ளவரை,சூரியன் சந்திரன் உள்ளவரை உன் பெயர் தமிழர் மத்தியில் நிலைத்து நிற்கும்." என்றாள் மணிமேகலை.

தூர நின்று இதைக்கேட்ட இன்னொரு பிக்குவான இளங்கோ உடல் சிலிர்த்தார். அருக்கக் கடவுளின் புகழை அன்றி எதையும் எழுதி அறியா அவரது எழுத்தாணியை எடுத்தார்.கண்ணகியின் காதல் கதையை எழுத துவங்கினார்.....

தம்முடைய தண்ணளியும், தாமும், தம் மான் தேரும்,

எம்மை நினையாது, விட்டாரோ? விட்டு அகல்க;
அம் மென் இணர அடும்புகாள்! அன்னங்காள்!
நம்மை மறந்தாரை நாம் மறக்க மாட்டேமால்.

கைதை வேலிக் கழிவாய் வந்து, எம்

பொய்தல் அழித்துப் போனார், ஒருவர்
பொய்தல் அழித்துப் போனார், அவர்நம்
மையல் மனம் விட்டு அகல்வார் அல்லர்.