Monday, February 26, 2007

246.கண்ணகியின் காதல்

"தாயே..யாரம்மா நீ?ஏன் இப்படி அலங்கோலத்துடன் இருக்கிறாய்?பராசக்தியின் வடிவாக காணப்படும் உனக்கு இந்த கொடுமையை செய்ய துணிந்தவன் யார்?" என்று மணிமேகலை பரிவோடு கேட்டாள்.

கண்மூடி தவமிருந்த தேவி கண்ணகி கண்திறந்தாள். எதிரே தன் கணவனே பெண்வடிவெடுத்து நின்றுகொண்டிருப்பது போல் தெரிந்தது. கண்ணை கசக்கினாள். கிள்ளிப் பார்த்தாள். வலித்தது. ஆம் இது கனவில்லை.ஆனால் தனக்கு சித்தபிரம்மை பிடித்துவிட்டதோ,காணும் யாவும் கோவலனாய் தோற்றம் அளிக்கிறதே..பெண்வடிவில் கோவலனா?ஆனால் அந்த குரல்,கண்கள்..ஏன் அது மட்டும் மாதவியை போல் தெரிகிறது??

"அம்மா.." மணிமேகலை மீண்டும் கண்ணகியின் தோளை உலுக்கினாள்.

"யாரம்மா நீ? உன் பெயர் என்ன?என் கணவன் போலவே நீ இருக்கிறாயே?" என ஆதங்கத்துடன் கேட்டாள் கண்ணகி.

"என் பெயர் மணிமேகலை. நான் ஒரு பிக்குணி. மதுரை மாநகரில் தீ பற்றி எரிந்து பலர் இறந்து விட்டனராம். மன்னர் கூட இறந்ததால் மக்களுக்கு மருந்திடவும், பிணங்களை எரிக்கவும் கூட ஆள் இல்லையாம் தாயே. அதனால் தான் பிக்குகள் அனைவரும் மதுரைமாநகர் செல்கிறோம்" என்றாள் மணிமேகலை.

"எனக்கு ஒரு பெண்மகவு பிறந்தால் மணிமேகலை என்று பெயர் வைக்கப்போவதாக என் கணவர் அடிக்கடி சொல்வார்" என்றாள் கண்ணகி.

"அது இருக்கட்டும் தாயே, உங்கள் முலையை எவன் அறுத்தது?தமிழ்பெண்ணுக்கு இப்படி கொடுமை நடக்க பாண்டியன் பார்த்தானோ?பார்க்க பொறாது இறந்தானோ?" என கண்கலங்கினாள் மணிமேகலை.

"என் முலையை நானே அறுத்தேன்.பாண்டியனையும், மதுரையையும் எரித்தேன். அவன் மேல் குற்றமில்லை" என்றாள் கண்ணகி.

"மதுரையை நீயா எரித்தாய்? நீதி வழுவா மன்னனை நீயா கொன்றாய்?தாயே உனக்கு புத்தி பேதலித்து விட்டதா? ஏன் இப்படி செய்தாய்?" என ஆவேசத்துடன் கேட்டாள் மணிமேகலை.

"கீழே பார்" என சுட்டிக் காட்டினாள் கண்ணகி.

மலை மேலிருந்து கீழே இருக்கும் காட்டை உற்றுப்பார்த்தாள் மணிமேகலை.

வனவேடன் ஒருவன் வில்லை வளைத்து ஆண்யானை ஒன்றை கொன்றான். தந்தத்தை உடைத்து எடுத்துக்கொண்டு வெற்றியுடன் திரும்பினான். நீர் குடிக்க போன பிடி வந்து தன் காதலன் உடலை கண்டு அழுது புலம்பியது. துதிக்கை தூக்கி பிளறியது.வெறி ஏறி அருகிலிருந்த மரங்களை முட்டி சாய்த்தது. துதிக்கையில் சிக்கிய பறவைகளையும், மான்களையும், மற்ற மிருகங்களையும் காலில் போட்டு மிதித்தது.காட்டையே அதலபாதாலம் செய்துவிட்டு மயங்கிச் சாய்ந்தது.

"வெறி பிடித்த பிடி" என்று உடல் சிலிர்த்தாள் மணிமேகலை.

"என் கணவன் என்னை பிடிநடையாள் என்று தான் அழைப்பான்" என்றாள் கண்ணகி. அந்த துயரிலும் அவள் முகத்தில் லேசான பெருமிதம் தெரிந்தது. "தாயே..அந்த மிருகத்தின் மனநிலையையா நீ அடைந்தாய்? யானைக்கு மதம் பிடிக்கலாம். மனிதனுக்கு பிடிக்கலாமா?" என்று ஆதூரத்துடன் கேட்டாள் மணிமேகலை.

"யானையோ,எறும்போ,மனிதனோ..உணர்ச்சிகள் ஒன்றுதானே மகளே" என்றாள் கண்ணகி.

"நீ செய்ததற்கு நியாயம் கற்பிக்கிறாயா தாயே" என்றாள் மணிமேகலை.

வெறி தெளிந்த பிடி அழுதபடி எழுந்தது.தான் மிதித்துக்கொன்ற மிருகங்களை பார்த்து அழுது புலம்பியது. கண்ணீர் வடித்தபடி பிளிறியது. காதலன் அருகே கிடந்து உயிர்விட்டது.

"என் கணவன் அழைக்கிறான்" என்றாள் கண்ணகி.

"சாகும் வயதா உனக்கு?" என்றாள் மணிமேகலை.

"என் கணவனை பிரிந்து வாழும் ஒவ்வொரு நொடியும் நரகம் போலல்லவா இருக்கிறது" என்றாள் கண்ணகி.

"கொடுத்துவைத்த பெண் நீ" என்றாள் மணிமேகலை. "இப்படிப்பட்ட பெண்ணின் அன்பை பெற்ற கணவன் பெரும் பாக்கியவான்....ஆனால் என் அன்னைக்கும் ஒரு தறுதலை கணவன் வாய்த்தான்.கடைசிவரை கூட இருப்பேன் என்று சொல்லிவிட்டு கைவிட்டுவிட்டான். அந்த வினாடியே ஆணினத்தையே வெறுத்தேன்.என் காதலனான உதயகுமாரனையும் ஆண் என்பதால் துறந்தேன்.துறவறம் பூண்டேன்." என்றாள் மணிமேகலை.

"உண்மையான காதல் யாரையும் உதறாது.பிரியாது" என்றாள் கண்ணகி.

'உன் காதல் உண்மை என்பதை ஊரை எரித்து நிருபித்தாய் தாயே.ஆனால் உன் கணவன் உன்மேல் கொண்ட காதல் உண்மையா என்பதை நீ எப்படி உணர்ந்தாய்?" என கேட்டாள் மணிமேகலை.

"என் கணவனுக்கு என்னைப்பிரிய சுதந்திரம் கொடுத்தேன்.பிரிந்து சென்றான்.பிறகு மீண்டும் திரும்பி வந்தான். அதனால் அவன் என்னுடையவனானான்" என்றாள் கண்னகி.

"திரும்பி வந்திருக்காவிட்டால்.." என்று கேட்டாள் மணிமேகலை.

'அவன் என்றுமே என்னுடையவனாக இருந்ததில்லை என்று பொருள்" என்றாள் கண்ணகி.

கண்மூடி உதயகுமாரனை நினைத்தாள் மணிமேகலை. ஒரே வினாடி. அதன்பின் மனதில் அருகக்கடவுள் தோன்றியதும் திடுக்கிட்டு கண்விழித்தாள்....

"உன் காதலனை நினைத்துக்கொண்டாயா குழந்தாய்" என்றாள் கண்ணகி. அவள் முகத்தில் புன்னகை அரும்பியது. "அவனும் உனக்கு சுதந்திரம் தான் கொடுத்திருக்கிறான். நீ திரும்பி போய் அவனுடன் சேர்ந்தால் நீ அவனுடையவள். போகாவிட்டால் நீ என்றுமே அவனுடையவளாக இருந்ததில்லை என்று அர்த்தம்"

"என் மனதில் இருக்கும் அருகக்கடவுளை தூக்கி எறிந்து அவனை குடியேற்ற இன்னும் ஒரு ஜென்மம் ஆகுமே?உதயகுமாரன் அத்தனை நாள் திருமணம் செய்யாது எனக்காக காத்திருப்பானா?" என கேட்டாள் மணிமேகலை.

"உண்மை காதல் காத்திருக்கும்.பொய்க்காதல் காத்திருக்காது" என்றாள் கண்ணகி.

"நான் அவனிடம் திரும்ப மாட்டேன். என் காதல் பொய்க்காதல். ஆனால் உதயன் எனக்காக காலமெல்லாம் காத்திருப்பான். அவனுடையது உண்மை காதல்.." என கண்ணீர் சிந்தினாள் மணிமேகலை.ஒரு முடிவோடு எழுந்தாள்.

"தாயே..உண்மையான காதலை நீ உன் கணவன் மேல் வைத்தாய். அவனும் அதையே உன் மேல் வைத்தான்.அன்பை கொடுத்து அன்பை பதிலுக்கு நீ பெற்றாய்....உன் காதலை அடைந்த உன் கணவன் கொடுத்து வைத்தவன். அவன் காதலை அடைந்த நீயும் கொடுத்து வைத்தவள். பொய்யான காதலை காதலர்க்கு கொடுத்த நானும், என் தாயும் அதற்கான பரிசை அனுபவிக்கிறோம்.தமிழ்நாட்டு மங்கையர் தம் கணவர் மீது வைக்கும் மாசிலா அன்புக்கு நீயே உதாரணம். .....அம்மா...நீ நீடூழி வாழி. தமிழ் உள்ளவரை,தமிழர் உள்ளவரை,சூரியன் சந்திரன் உள்ளவரை உன் பெயர் தமிழர் மத்தியில் நிலைத்து நிற்கும்." என்றாள் மணிமேகலை.

தூர நின்று இதைக்கேட்ட இன்னொரு பிக்குவான இளங்கோ உடல் சிலிர்த்தார். அருக்கக் கடவுளின் புகழை அன்றி எதையும் எழுதி அறியா அவரது எழுத்தாணியை எடுத்தார்.கண்ணகியின் காதல் கதையை எழுத துவங்கினார்.....

தம்முடைய தண்ணளியும், தாமும், தம் மான் தேரும்,

எம்மை நினையாது, விட்டாரோ? விட்டு அகல்க;
அம் மென் இணர அடும்புகாள்! அன்னங்காள்!
நம்மை மறந்தாரை நாம் மறக்க மாட்டேமால்.

கைதை வேலிக் கழிவாய் வந்து, எம்

பொய்தல் அழித்துப் போனார், ஒருவர்
பொய்தல் அழித்துப் போனார், அவர்நம்
மையல் மனம் விட்டு அகல்வார் அல்லர்.
Post a Comment