Sunday, March 25, 2007

300 தொடரும் கிழக்கு- மேற்கு யுத்தம்?

300 என்ற ஹாலிவுட் திரைப்படம் பலத்த சர்ச்சையை கிளப்பிவிட்டுள்ளது.இனவாதம், கிழக்கு எதிர் மேற்கு, மதவாதம், மத்தியகிழக்கை ஆக்கிரமிக்க அமெரிக்கா செய்யும் சதி, என பல பிரச்சனைகளை கிளப்பி விட்டுள்ளது இந்த படம். ஈரானிய அதிபர் அஹ்மெதெஞானி இதை கடுமையாக கண்டிக்க, ஈரானிய மீடியாவும் இதை காய்ச்சித் தள்ளியுள்ளது. படத்துக்கு இத்தனை பப்ளிசிட்டி கிடைத்தால் படம் ஓடாமலா இருக்கும்? படம் ரிலீசான ஒரே வாரத்தில் பாக்ஸ் ஆபிஸ் வசூல் ஜுராசிக்பார்க்கின் வசூலை தொட்டு விட்டதாம். இந்த நூற்றாண்டின் சிறந்த வசூல்படங்களில் ஒன்றாக இது இருக்கும் என்கிறார்கள்.

படத்தின் கதை பாரசீகம் மற்றும் கிரேக்க நாடுகளில் ஒன்றான ஸ்பார்ட்டாவுக்கும் இடையே நடக்கும் மோதலை களமாக கொண்டு அமைக்கப்பட்டிருக்கிறது.ஐரோப்பிய நாடுகளுக்கும் பாரசீகத்துக்கும் வரலாற்றுகாலம் தொட்டே ஜென்மபகை என்பார்களே அதுபோல் ஒரு பகை இருந்துவருகிறது.அலெக்சாந்தர் டைரஸ, அதன்பின் ரோமானிய பேரரசு எதிர் பாரசீகம் , அதன்பின் புனித ரோமானிய பேரரசு பாரசீகம் என்று மாறி அதன்பின் சிலுவைப்போராக பரிணமித்து (ரிச்சர்ட்- சலாதீன்) என்று சென்று இப்போது அமெரிக்கா - ஈராக் வரை வந்து நிற்கிறது. வரலாற்று காலம் தொட்டே ஐரோப்பாவுக்கும் பாரசீகத்துக்கும் அப்படி ஒரு ஜென்மப்பகை.

இப்போது பாரசீகம் என்பது ஈரான் மற்றும் ஈராக் என்று இருநாடுகளாக பிரிந்து நிற்கிறது.ஈராக் அமெரிக்கர்களிடம் வீழ்ந்துவிட்டது. அடுத்து ஈரான் அணுகுண்டு வைத்திருப்பதாக சொல்லி அதன்மேல் தாக்குதல் நடக்கலாம் என்று ஒரு பேச்சும் கிளம்பியிருக்கிறது. ஈரானிய அதிபருக்கும் அமெரிக்காவுக்கும் இடையே தமிழ் வலைப்பதிவு ரேஞ்சில் அறிக்கைப்போர் நடந்து கொண்டிருக்கிறது:) இந்த சூழலில் இந்த படம் ரிலீசானது எரியும் நெருப்பில் எண்னையை காய்ச்சி ஊற்றியது போல் ஆகிவிட்டது.

அப்படி என்னதான் இந்தபடம் செய்தது?

பாரசிகத்துக்கும் கிரேக்கத்துக்கும் BCE 450ம் வருடம் நடந்த வீரம் செறிந்த ஒரு போரை இதுகாட்டியது.அந்த போரில் வெறும் 300 ஸ்பார்டா வீரர்கள் சுமார் 10 லட்சம் பேர் அடங்கிய பாரசீக படையை 3 நாட்கள் எதிர்த்துநின்று பேரிழப்பை ஏற்படுத்திவிட்டு உயிரிழந்தார்கள். அதன்பின் 10,000 பேர் அடங்கிய ஸ்பார்ட்ட படையை கண்டவுடன் 300 பேரே இப்படி சண்டைபிடித்தால் 10,000 பேர் என்ன செய்வார்களோ என்று பயந்து பாரசீக படை தோற்றோடுகிறது. இதுதான் கதை (இது உண்மையிலேயே நிகழ்ந்த வரலாற்று நிகழ்வு என்பது குறிப்பிடத்தக்கது)

இதில் ஈரானிய அதிபர் ஆட்சேபம் தெரிவிக்க என்ன இருக்கிறது?

ஈரானை மட்டம் தட்டும் இந்தபடத்துக்கு அமெரிக்க அரசு நிதிஉதவி செய்தது என்ற வதந்தி பலமாக உலாவருகிறது. இந்த படத்தில் பாரசீகர்களை காட்டுமிராண்டிகளாகவும், அசுரர்கள் போலவும் சித்தரித்து கிரேக்கர்களை மாவீரர்களாக காட்டியுள்ளனர்.(10 லட்சம் பேரை 300 பேர் எதிர்த்தால் அவர்களை மாவீரர்களாகத்தானே காட்டமுடியும் என்கிறது மறுதரப்பு).

பாரசிகத்தின் புகழ்பெற்ற மன்னர் செரெக்சை( Xerxes) கிட்டத்தட்ட திருநங்கை போல சித்தரிக்கின்றனர், கிரேக்கர்களை ஆண்மை நிரம்பிய வீரர்களாக காட்டுகின்றனர் என்பதுதான் ஈரானிய அதிபரை கொதிப்படைய வைத்துவிட்டது. மனிதர் பாய்ந்து தள்ளிவிட்டார். பாரசீகத்தின் வரலாற்று புகழ் பெற்ற மன்னர் செர்க்செசை ஜட்டி போன்ற ஒரு உடையில் , மொட்டை தலையுடன், மீசை இல்லாமல் பெண்மை குணத்துடன அடியாள் காஸ்டுயூமில் படம் முழுக்க உலாவவிட்டிருக்கின்றனர். (பார்க்க: இந்த பதிவிலுள்ள படம்) பாரசீக கலாச்சாரத்தில் பெண்மை குணம் நிரம்பிய ஆணாக காட்டப்படுவது மிகுந்த அவமானத்தை தருவதாகும். தமிழ்நாட்டுக்கு அடுத்து மீசை மேல் அதீத பெருமை கொண்ட இன்னொரு கலாச்சாரம் பாரசீக கலாச்சாரம்தான். குவைத் தூதரை சதாம் 'மீசை இல்லாத குரங்கு' என்ரெல்லாம் திட்டியிருக்கிறார்.

படத்தை பார்த்த இடதுசாரி எழுத்தாளர்கள் பலரும் அதில் பாரசீகர்கள் கறுப்பர்களாக்வும்,பழுப்பர்களாகவும் கிரேக்கர்கள் வெள்ளையர்களாக்வும் இருப்பதையும் வைத்து நிறவெறி கண்ணோட்டத்தில் குற்றம் சுமத்துகின்றனர்( உண்மையில் அவர்கள் நிறம் அதுதானே என்கிறது இன்னொருதரப்பு). நவ்ரூஸ் எனும் பாரசீக புதுவருடத்தன்று இதை ரிலீஸ் செய்ததும் ஈரானியர்களை கொதிப்படைய வைத்துள்ளது.

"இந்த படம் எங்கள் கலாச்சாரத்தின் மீது தொடுக்கப்பட்ட தாக்குதல்" என்று ஈரான் யுனெஸ்கோவிலும், ஐநா சபையிலும் புகார் தந்துள்ளது.பிரான்சில் இதை ரிலீஸ் செய்ய அனுமதிக்ககூடாது என்று ஈரானிய தூதரகம் கேட்டுக்கொண்டுள்ளது. "வரலாற்றை படமாக எடுப்பதில் என்ன தவறு" என்று டைரக்டர் தரப்பும், "இது ஒரு வரலாற்று மோசடி" என்று ஈரானும் மாறிமாறி குற்ரம் சாட்ட அமெரிக்க இடதுசாரிகள் இதை திட்ட வலதுசாரிகள் இதை கொண்டாட, சர்ச்சை வலுவடைய, வலுவடைய படம் வசூலை வாரிக்குவித்து வருகிறது.உலகின் டாப் 19 வசூல்படங்கள் பட்டியலில் வெறும் 20 நாளிலேயே சேர்ந்துவிட்டது 300.

அரசியல் சர்ச்சை போக படம் மிக நேர்த்தியாக எடுக்கப்பட்ட படம் என்று ஒருதரப்பும் "வீடியோ கேம் போல் இருக்கிறது" என்று இன்னொருதரப்பும் பிரச்சாரம் செய்துவருகின்றன. ராட்டன் டொமேட்டோஸ் என்ற மிக கடும் விமர்சகர்கள் தளத்திலேயே படம் மிக நல்ல படம் என்று சர்ட்டிபிகேட் வாங்கியுள்ளது. ஹிஸ்டாரிகல் பேன்டசி எனும் வகையறா படம் இது என்று சிலர் சொல்ல படத்தின் டைரக்டர் "இந்த படத்தின் 90% காட்சிகள் உண்மையான வரலாறு" என்று வரலாற்று நிபுணர்கள் சொன்னதாகவும் இன்னும் சில நிபுனர்கள் "எப்படி வரலாற்றை இப்படி கண்முன் கொண்டுவந்தீர்கள்?" என்று அதிசயித்து கேட்டதாகவும் சொல்கிறார்.

No comments: