Showing posts with label Personal. Show all posts
Showing posts with label Personal. Show all posts

Monday, August 10, 2009

406. மனிதனை கண்டேன்

சிகாகோவின் டவுன்டவுன் ஒரு காங்கிரீட் காடு.அதில் மூன்றுநாள் மூச்சுதிணறி போய்விட்டேன்.கையில் கத்தை கத்தியாக காசு இருந்தால் தான் டவுன் டவுனில் நடமாடவே முடியும்.காரை பார்க் செய்ய தினமும் முப்பது டாலர் கட்டணம்னா பார்த்துகுங்க.

கடைகளில் கொள்ளை விலை.எங்கூரில் 2 டாலருக்கு கிடைக்கும் பொருள் இங்கே நாலு டாலர்.இந்த காங்கிரீட் காட்டில் சாலைகளில் அத்தனை நெரிசல்.டிரைவர்களுக்கு ஹாரன் அடிப்பதென்றால் கொள்ளை பிரியம்.யாருக்கும் நிற்ககூட நேரமில்லை.

இத்தனை இயந்திரமயமான இடத்தில் வால்க்ரீன்ஸ் ஸ்டோருக்கு என் காரை எடுத்துகொண்டு கிளம்பினேன்.ஸ்டோரில் காரை நிறுத்த இடமில்லை.கூட வந்த நண்பரை கடைக்கு முன் இறக்கிவிட்டுவிட்டு அருகே இருந்த பார்க்கிங் கராஜுக்கு போனேன்.அரைமணிநேரத்துக்கு காரை நிறுத்த $9 கட்டணம்.நண்பர் உள்ளே போனது $2 மதிப்புள்ள மருந்தை வாங்க.

$2 மருந்துக்கு $9 பார்க்கிங் கட்டணம் என்று திட்டிகொண்டு காரை நிறுத்திவிட்டு உள்ளே போய் நண்பருடன் சேர்ந்து மருந்தை வாங்கிகொண்டு பார்க்கிங் கராஜுக்கு வந்தேன்.

"இத்தனை சீக்கிரம் வந்துவிட்டீர்கள்" என்றார் வியப்புடன் பார்க்கிங் அட்டெண்டெண்ட்.காசை நீட்டியபோது வாங்க மறுத்துவிட்டார்.

இந்த காங்கிரீட் காட்டிலும் மனிதம் சாகாமல் இருக்கிறது என்பது எனக்கு அப்போதுதான் புரிந்தது.

மனநிறைவுடன் வெளியே வந்து மக்கள் கூட்டத்தில் கலந்தேன்.

Friday, July 03, 2009

400. சுதந்திர தேவிக்கு பிறந்தநாள்


பெண்கள் பூவாய் சிரிக்கும்

தேசத்தில் பொன்னாய் கொட்டும்


பாடசாலைகள் பெண்பிள்ளைகளால்

நிரம்பிவழியும் தேசத்தில்

ஆயகலைகள் அனைத்தும் செழித்தோங்கும்

மங்கலங்கள் பொங்கி வழியும்


இன்பங்கள் அனைத்தையும்

ஆணுக்கும் பெண்ணுக்கும்

சமமாக்கும் தேசத்தில்

இவ்விரு இனங்களுக்கிடையான

சகோதரத்துவமும் பூத்து குலுங்கும்.


பெண்ணியத்தையும், சுதந்திரத்தையும்

ஜனநாயகத்தையும், விஞ்ஞானத்தையும்

சமூகவியலையும், அதற்கும் மேலான

நம்பிக்கை ஒளியையும்

உலக மக்கள் அனைவருக்கும் தந்த

சுதந்திரதேவியே...


சூலைத்திங்கள் நாலாம் நாள்

இன்று உன் பிறந்தநாள்.

உன் விடுதலையொளி உலகெங்கும் பரவட்டும்

விடுதலையடைந்த மானிட இனத்தின்

திறனுக்கு உன் தேசம் ஒரு சான்றாய் இருக்கட்டும்.


அன்னியன் என்னை அள்ளி அணைத்த

என் அமெரிக்க அன்னையே

வானம் உள்ளவரை

வையகம் உள்ளவரை

உன் தேசம் வாழட்டும்!!!

Wednesday, January 30, 2008

374.ஜில்லுன்னு ஒரு போட்டி முடிவுகள்

முத்தமிழ் ஆண்டுவிழா பரிசு போட்டி இனிதே முடிவடைந்தது.

போட்டி நடுவர்கள்: விழியன்

மஞ்சூர் ராசா

தமிழ் பயணி சிவா

போட்டியில் வெற்றி பெற்றவர்கள்: பதிவர் சார்லஸ்

மற்றும் பெயர் குறிப்பிட விரும்பாத சென்னை வாசகர் ஒருவர்

நடுவர்களுக்கும், போட்டியில் கலந்துகொண்ட அனைவருக்கும் நன்றி

(பி.கு: 2 weeks நாள் வெளியூர் பயணம் இருப்பதால் பதிவுகள் வராது (ரொம்ப சந்தோஷம் என்கிறீர்களா?:-)

Monday, October 01, 2007

341.பீளமேடு

கோவையில் பல பகுதிகள் ஒவ்வொரு விஷயத்துக்கும் புகழ் பெற்றவை என்றாலும் எனக்கு மிகவும் பிடித்த பகுதி பீளமேடு தான்.எனக்கு மட்டுமல்ல கோவையில் உள்ள பலருக்கும் பீளமேடு என்றாலே தனிபாசத்துடன் உருகுவார்கள்.ஏன் என்றால் கோவையின் பெரும்பாலான தனியார் கல்லூரிகள்,ஸ்கூல்கள் பீளமேட்டில் தான் இருக்கின்றன என்பதால் கோவைகாரர்கள் பலரும் இங்கேதான் படித்து,தங்கி,இங்குள்ள மெஸ்களில் உண்டு மகிழ்ந்திருப்பார்கள். அதனால் பலருக்கும் மறக்க முடியாத ஊர் பீளமேடு என்றால் அது மிகையல்ல.

கோவை காந்திபுரம் பஸ் நிலையத்தில் காலை 8 மணி முதல் 10 மணிவரை செல்லும் பீளமேடு பஸ்களில் இடம் கிடைப்பது சிவாஜி படத்துக்கு டிக்கட் கிடைப்பதை விட மிக கடினமான காரியம்.அத்தனை கூட்டம் பஸ்களில் இருக்கும்.அத்தனையும் மாணவ மாணவியர் கூட்டம்.காந்திபுரம் டூ ஓப்காலேஜ் போகும் பஸ்கள் வழியெங்கும் நிற்கும் அனைத்து நிறுத்தங்களிலும் ஏதாவது கல்வி நிலையம் இருக்கும்.அப்படி ஒரு பஸ்ஸீல் ஏறிக்கொள்வோம்.ஓப்ஸ் காலேஜுக்கு டிக்கட் வாங்கிக்கொள்வோம்.

பஸ் முதலில் நிற்பது மகளிர் பாலிடெக்னிக் ஸ்டாப்பில்.இது கோவையின் தொன்மையான பாலிடெக்னிக். பாப்பநாயக்கன் பாளையம் ஊர் இங்கே துவங்குகிறது என்று சொல்லலாம்.பஸ் அடுத்து நிற்பது மணி ஸ்கூல் ஸ்டாப்பிங்கில்.மணி ஸ்கூல் கோவையின் மிக புகழ் பெற்ற நிறுவனம்.அரசு உதவி பெறும் தனியார் பள்ளி இது.இதன் எதிரே குப்புசாமி நாயுடு ஆஸ்பத்திரி உள்ளது.லட்சுமி மில் நிர்வாகத்தினரின் கட்டுப்பாட்டில் இருக்கும் இந்த இரு நிறுவனங்களும் மிக புகழ் பெற்ற நிறூவனங்கள்.திரையுலகை கலக்கி வந்த பாக்கியராஜ் மணிஸ்கூல் மாணவர்தான்.பாப்ப நாயக்கன் பாளையத்தில் பிறந்தவர்.மணிஸ்கூலில் பாக்கியராஜ் அடித்த லூட்டிகளை அந்த ஆசிரியர்கள் கதை கதையாய் சொல்வார்கள்.

அடுத்த ஸ்டாப்பிங் லட்சுமி மில்ஸ்.கோவையின் மிகப்பெரும் மில் இது.ஆயிரக்கணகான தொழிலாளர் பணிபுரியும் நிறுவனம் இது.இப்போது சற்று நலிந்த நிலையில் இருந்தாலும் பிக்-அப் செய்துவிட்டது என்கிறார்கள்.லட்சுமி மில் ஸ்டாப்பிங்கில் தான் புகழ் பெற்ற பீளமேடு துவங்குகிறது.

அடுத்த ஸ்டாப்பிங் நவ இந்தியா. நவ இந்தியா எனும் பத்திரிக்கை அந்த காலத்தில் சக்கை போடு போட்டதாம்.ஆனால் இப்ப அந்த நினைவாக பீளமேட்டுகாரர்களுக்கு இருப்பது நவ இந்தியா பஸ் ஸ்டாப்தான்.நவ இந்தியா பஸ் ஸ்டாப்பில் இறங்கினால் எஸ்.என்.ஆர் கல்லூரி மற்றும் இந்துஸ்தான் கல்லூரி ஆகியவை இருக்கும்.

எஸ்.என்.ஆர் கல்லூரி நிர்வாகத்தினர் கோவையில் புகழ் பெற்ற ராமகிருஷ்ணா மருத்துவமனையை நடத்தி வருகிறார்கள்.கோவையின் புகழ் பெற்ற தனியார் கல்லூரிகளில் இது ஒன்று.இந்துஸ்தான் கல்லூரி புதிது என்றாலும் சில வருடங்களுக்கு முன்பு 17 நடிகைகளை கல்லூரிக்கு கூட்டி வந்து கோவையையே ஒரு கலக்கு கலக்கி விட்டார்கள்.

அடுத்த ஸ்டாப்பிங் எஸ்ஸோபங்க். இங்கே பீளமேடு சாந்தி தியெட்டர் இருக்கும்.சி வகை திரையரங்கு என்பதைதவிர வேறு சிறப்பு ஏதும் இல்லை.

அடுத்த ஸ்டாப் தான் பீளமேடு மெயின் ஸ்டாப்.இதை ராதாகிருஷ்ணா மில் ஸ்டாப் என்றும் அழைப்பார்கள்.இங்கே கோவையின் புகழ் பெற்ற கல்லூரிகளான பி.எஸ்.ஜி பாலிடெக்னிக், பி.எஸ்.ஜி எஞினியரிங்,ஆகியவை உண்டு.பி.எஸ்.ஜிக்கு எதிரே என்.எம்.பி பாக்கரியில் மாணவர் கூட்டம் அலைமோதும்.(பத்து வருடத்துக்கு முந்தியே இங்கே பர்கர் பாணியில் ஒரு ஐட்டம் செய்து அசத்தினார்கள்.)பப்ஸ்,கேக்,டீ ஆகியவை இங்கே புகழ் பெற்ற ஐட்டம்கள்.

கோவையின் புகழ் பெற்ற பழமுதிர் நிலையம் இங்கே உண்டு.அனைத்துவகை கனிகளும்,பழசாறும்,காய்கனிகளும் இங்கே கிடைக்கும்.இந்த ஸ்டாப்பிங்கில் சூப்பரான மெஸ்கள் பல உண்டு.

பி.எஸ்.ஜி பாலிடெக்னிக் காண்டினுள் நுழைந்தால் ஓட்டல்களுடன் போட்டி போடும் வெரைடீயில் உணவுகள் கிடைக்கும்.அன்னபூர்ணா மாடலில் சாம்பாரில் மிதக்கும் இட்லி இங்கே ஃபேமஸ்.பாலிடெக்னிக்குக்கு எதிரே இருக்கும் பி.எஸ்.ஜி மேனேஜ்மென்ட் இன்ஸ்டிட்யூட் கோவையின் புகழ் பெற்ற பிசினஸ் பள்ளியாகும்.அமிர்தா மேனேஜ்மென்ட் இன்ஸ்டிடூய்ட் வரும்வரை பி.எஸ்.ஜி தான் கோவையின் நம்பர் ஒன் பிசினஸ் ஸ்கூலாக இருந்தது.

இதே ஸ்டாப்பிங்கில் இருக்கும் சர்வஜன மேல்நிலைப்பள்ளிக்கு மகாத்மா காந்தி ஒருதரம் வருகை புரிந்திருக்கிறார்.அவர் விருந்தினர் வருகை கையேட்டில் கையெழுத்திட்ட குறிப்பு இன்னமும் அந்த பள்ளி நிர்வாகத்தினரால் பாதுகாக்கப்படுகிறது

பீளமேடு மெயின் பஸ்ஸ்டாப்பிலேயே நின்று விட்டால் எப்படி?தொடர்ந்து போவோம்.அடுத்த ஸ்டாப்பிங் கிருஷ்ண்ணம்மாள் கல்லூரி.இங்கே கிருஷ்ணம்மாள் மகளிர் பள்ளியும், கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரியும் உள்ளன.கோவை நகர இளவட்டங்கள் மாலை நேரமானால் இந்த பக்கம் தான் வட்டமடிப்பார்கள்.ஆனால் கல்லூரி காம்பவுண்டிலேயே போலிஸ் ஸ்டேஷன் இருப்பதால் அடக்கித்தான் வாசிப்பார்கள்:).இந்த நிறுவனமும் பி.எஸ்.ஜி க்ரூப்பை சேர்ந்ததுதான்.இதற்கு அருகில் பி.எஸ்.ஜி மருத்துவமனை இருக்கும்.கோவையின் மிகபெரிய மருத்துவமனை இது.

கிருஷ்ணம்மாள் ஸ்டாப்பிங்கை தாண்டினால் பீளமேட்டின் மெயின் ஏரியா முடிந்துவிடும்.அடுத்து ஓப்ஸ் காலேஜ் என்ற பஸ் ஸ்டாப்பில் இறங்கினால் அங்கே கோவை மருத்துவ கல்லூரி,அரசினர் ஆண்கள் பாலிடெக்னிக்,பி.எஸ்.ஜி கலைகல்லூரி, சி.ஐ.டி எஞினியரிங் கல்லூரி, ஜி.ஆர்.டி கல்லூரி, ஜி.ஆர்.ஜி ஸ்கூல், கே.எம்.சி எச் மருத்துவமனை,அரவிந்த் கண் மருத்துவமனை ஆகியவை இருக்கும். அதுபோக கோவை விமான நிலையம் இருப்பதும் இங்குதான்.

பீளமேடு கல்வியுடன் ஆன்மிகத்தையும் அளிக்கும் ஊர்.இங்கே அகிலாண்டீஸ்வரி அம்மன் கோயில்,பிளேக் மாரியம்மன் கோயில், கரிவரதராஜ பெருமாள் கோயில் ஆகியவற்றில் பக்தர் கூட்டம் அலைமோதும்.

ஆஸ்பத்திரிகளும், பள்ளிகளும்,கல்லூரிகளும்,மில்களும் நிரம்பிய இடமாக பீளமேடு இருப்பதால் இங்கே கூட்டம் அலைமோதும்.மெயின்ரோட்டை விட்டு ஊருக்குள் போனால் ஏகப்பட்ட கிரைண்டர் தொழிற்சாலைகள், பவுண்டரிகள் ஆகியவை இருக்கும்.இங்கே ஏராளமான தொழிலாளர் வேலை பார்ப்பார்கள்.பீளமேடு சிறக்க காரணமே இந்த சிறுதொழில்கள் தான்.இவைதான் கோவையின் மூலதனமே.ஆம் சுயதொழில் செய்து தாமும் முன்னேறி நாட்டையும் முன்னேற்றும் துடிப்பான உழைப்பாளிகள் நிரம்பிய இடமே பீளமேடு.

Wednesday, August 08, 2007

320.வாஷிங்டனில் ராஜாஜி

"வாஷிங்டன் டி,சியை எனது விமானம்(!) நெருங்கிக் கொண்டிருந்தது. பொன்மாலைப்பொழுதின் இனிய மாலை வெயிலில் நனைந்தபடி அந்திநேர சூரியனுக்கு பிரியாவிடை தந்துவிட்டு அலுமினியப்பறவையின் அடிவயிற்றிலிருந்து கீழிறங்கினேன்"

(சாயந்திரநேரம் வாஷிங்டன் ஏர்போர்ட்டுக்கு போய் சேர்ந்தேனு சொல்ல இத்தனை பில்டப்பா?இது ரொம்ப ஓவர்-அனானி பின்னூட்டம்)

ரோனல்ட் ரேகன் ஏர்போர்ட் ஏதோ மூன்றாவது உலக நாட்டின் ஏர்போர்ட் மாதிரி இருந்தது.சின்ன ஏர்போர்ட்.துரித உணவகங்களில் சுத்தமாக வெரைட்டியே இல்லை.ஒப்பீட்டளவில் டென்வர் விமான நிலையம் மிகப்பெரிது.பர்கர் கிங், பாண்டா எக்ஸ்பிரஸ் என பல வெரைட்டிகளில் அங்கே உணவு கிடைக்கும்.ஆனால் தலைநகரின் ஏர்போர்ட்டில் சான்ட்விட்சை தவிர எதுவும் கிடையாது.பேக்கேஜ் க்ளைமிலும் அதிக கூட்டம்,இட நெருக்கடி.

ஹில்டன் செல்ல ஷட்டில் இருக்கிறதா என தேடினேன்.எதுவும் கண்ணுக்கு படவில்லை.ஓட்டலுக்கு போன்போட்டு கேட்டால் ஷட்டில் இல்லை என்று சொல்லி விட்டார்கள்.அப்புறம் ஒரு டாக்சியை பிடித்து ஓட்டலுக்கு போனேன்.டாக்சி டிரைவர் இந்தியர்.போகும் வழியில் உள்ள லாண்ட்மார்க்குகளை சுட்டிக் காட்டிக்கொண்டே வந்தார்.வழியில் இருந்த வாட்டர்கேட் எனும் பில்டிங்கை காட்டினார்.வாட்டர்கேட் நிக்சனை கவிழ்த்த இடமாச்சே என அதிசயத்துடன் பார்த்துக்கொண்டே போனேன்.

ஹில்டன் ஓட்டலுக்கு போனால் லாபியில் செக்-இன் செய்ய வரிசையில் நிற்கவேண்டும்.15 நிமிடம் வரிசையில் நின்றால் ஒரு ஸ்மைலோ, "ஹர் ஆர் யூ டுயிங் டுடே?"வோ கூட கிடையாது.'வாட் கேன் ஐ டூ ஃபார் யூ?" என நேரடியாக பிசினசுக்கு வருகிறார்கள்.போகும்போதும் ஒரு "ஹாவ் அ நைஸ் டே" கிடையாது.

எலெவேட்டருக்கு தவமிருக்க வேண்டும் போலிருந்தது.சுமார் 10 நிமிடங்கள் தவமிருந்து தான் மேலே போக எலவேட்டர் கிடைத்தது என்று சொன்னால் நம்ப கடினமாக இருக்கலாம்.ஆனால் தலைநகரின் ஹில்டனில் இதுதான் நிலைமை.ரூமிலும் அதிக இடவசதி இல்லை.பெட், பாத்ரூம், காபி மெஷின்,டிவி- இவ்வளவுதான்.

தலைநகரில் வெயில் கொளுத்தி எடுக்கிறது.புதரகத்தில் பல மாநிலங்களில் வெயில் 111, 119 என அடிக்கவிருப்பதாக வெதர் சேனல் சொல்லியிருந்தது.கொளுத்தும் வெயிலில் அறை அனலாக தகித்தது.ஏசியை திருகினால் 71.5 டிகிரிக்கு கீழே போக மறுத்தது.ரூம் சர்வீசை கூப்பிட்டு புகார் செய்தவுடன் ஏசியை ரிப்பேர் செய்ய ஆளை அனுப்பினார்கள்.வந்து பார்த்தவர் "இந்த ஓட்டலில் எந்த அறையிலும் 71.5 டிகிரிக்கு கீழே ஏசியை திருக முடியாதபடி புரக்ராம் செய்துள்ளார்கள்" என தெரிவித்தார்"

இது போல் கிறுக்குத்தனத்தை எந்த ஓட்டலிலும் கேள்விப்பட்டதில்லை என்பதால் அதிர்ச்சி அடைந்தேன்.$80 வாடகை வாங்கும் சூப்பர் எட்டு மோட்டலில் கூட இதுபோல் செய்வதில்லை.கரண்டை இப்படித்தான் மிச்சம் பிடிக்க வேண்டுமா என்ன?

இந்த வெயிலில் 71.5 டிகிரியில் தூங்க முடியாது, கம்ஃபர்ட்டரை போர்த்தினால் மேலும் வெப்பம் அதிகரிக்கும் போன்ற வாதங்களை எடுத்து வைத்தவுடன் வேறு ஏற்பாடு செய்கிறேன் என்று சொல்லி கீழே போனவர் கொஞ்சநேரம் கழித்து ஒரு ஃபேனை கொண்டுவந்து அறையில் வைத்தார்.

ஃபேன் காற்றில் தூங்கவா இந்த வாடகை வாங்குகிறீர்கள் என திட்டியபடி ரூமை பூட்டிவிட்டு சாப்பிட கிளம்பினேன்.ஓட்டலில் ஒரே ஒரு ரெஸ்டராண்ட் தான் இருந்தது.அதில் எதிர்பார்த்தபடி எந்த சைவ உணவும் இல்லை.வெளியே போய் தேடியதில் ஒரு இந்திய உணவகம் கண்ணில் பட்டது.மென்யூ கார்டை வாங்கியதும் மயக்கமே வருவது போல் விலை.தலைநகரமாச்சே, விலை அப்படி இப்படித்தான் இருக்கும் என சமாதானம் சொல்லிக்கொண்டு ஆர்டர் செய்தபின் உணவு சுத்தமாக நன்றாக இல்லை.தண்டம்.

அடுத்தநாள் காலை கேபில் ஏறி ஜூவுக்கு போனேன்.போகும் வழியில் "ராஜாஜி உணவகம்" கண்ணில் பட்டதும் சிரிப்பு வந்துவிட்டது.நம்ம வலைபதிவு நண்பர்கள் இதை பார்த்தால் ஆக்ரோஷமாக பதிவு போடுவார்களே என நினைத்தபடி ஜூவுக்கு போனேன்.

ஜூவில் அட்ராக்ஷன் பாண்டா கரடிதான்.பாண்டாவின் கண்னாடி கூண்டுக்கு வெளியே நின்று போட்டோ எடுத்துக்கொண்டு, இன்வெர்டிப்ரேட்சை சுற்றி சுற்றிபார்த்துவிட்டு நடந்தால் வெயிலில் தலை சுற்றுவது போல் இருந்தது. வெண்டிங் மெஷின்களில் கிரெடிட் கார்ட் வாங்குகிறார்கள்.இந்த டெக்னாலஜி இன்னும் மற்ற ஊர்களில் அதிகமாக பரவவில்லை.

ஜூவை விட்டு வெளியே வந்து வெள்ளை மாளிகைக்கு கேபில் போனேன். வெள்ளைமாளிகையை பார்க்க டூரிஸ்ட்கள் முண்டியடித்தனர். ஏகப்பட்ட பேர் போட்டோ எடுப்பதால் அந்த வழியில் நடப்பதே சிரமம்."எக்ஸ்கியூஸ்மி" சொல்லிக்கொண்டே நடக்க வேண்டியிருக்கிறது.

நான் போன அன்று ஆப்கனிஸ்தான் ஜனாதிபதி ஹமீத் கர்சாய் வெள்ளை மாளிகை வந்திருந்தார்.வெள்ளைமாளிகை புல்வெளியில் அவரும் ஜார்ஜ் புஷ்ஷும் நிருபர்களுக்கு பேட்டி கொடுத்து கொண்டிருந்தனர்...பேட்டியை நான் பார்த்தேனா என கேட்காதீர்கள்..அன்றைக்கு சாயந்திரம் சி என் எனில் பார்த்தேன்:)

வஷிங்டனில் ஸ்மித்சோனியன்,லிங்கன் மெமோரியல், ஆர்ட் மியூசியம் என பார்க்க வேண்டிய இடங்களின் பெரிய பட்டியலையே கொடுத்திருந்தனர். ஆனால் எங்கும் போக முடியவில்லை.வெயில் மற்றும் போன வேலைபளு என அடுத்த நாலைந்து நாளுக்கு எங்கும் நகர முடியவில்லை. நேற்றுதான் ஊர் வந்து சேர்ந்தேன்.

Monday, June 18, 2007

302. கோடையை வெல்வது எப்படி?

இந்த வருட குளிர்காலம் படுத்தி எடுத்து விட்டது. தொடர் பனிமழை, ஸ்னோ ப்ளிசார்ட் என டென்வரில் குளிர் படுத்தி எடுத்ததால் எப்படா வெயில் காலம் வரும் என ஆசையாய் இருந்தேன். ஆனால் வெயில் காலத்தில் அனலடிக்கும் கோடையை சுத்தமாக சமாளிக்க முடியலை.எப்படா ஆகஸ்ட் செப்டெம்பர் வரும்னு இருக்கு:)

கோடையை சமாளிக்க செய்த முதல் காரியம் பெப்சி, கோக் குடிப்பதை நிறுத்தியது. இவை கோடைக்கு ஏற்ற பானங்களே அல்ல. ஏன் என்றால் இவற்றில் காஃபின் அதிகம் இருப்பதால் இவை உடலில் உள்ள நீரை உறிஞ்சி எடுத்து விடுகின்றன.அதாவது அரை லிட்டர் பெப்சி குடித்தால் அது அரை லிட்டருக்கும் அதிகமான அளவு சிறுநீரை உற்பத்தி செய்கிறது. ஆக உடலில் நீர் சத்து குறைந்துவிடும். தாகமாக இருக்கிறது என்று கோடையில் இவற்றை அதிகம் குடிப்பது ஆபத்து.அதனால் பெப்சி, கோக் வகையறாக்களை முழுக்க நிறுத்தி விட்டேன்.

அதற்கு பதில் லிப்டன் க்ரீன் டீ குடிக்க ஆரம்பித்து விட்டேன். டயட் டீ அருந்துவதால் சுத்தமாக ஒரு கலோரி கூட சேர்வது இல்லை. க்ரீன் டீ இந்தியா மற்றும் சீனாவின் இயற்கையான பானம். தினமும் ஒரு லிட்டர் கோக் குடித்து வந்த நான், இப்போது தினமும் அரை லிட்டர் க்ரீன் டீ குடிக்கிறேன். அதில் ஜின்செங், தேன் முதலிய பல மூலிகைகளை சேர்க்கிறார்கள். கோடை முடிந்த பின்னும் கோக்குக்கு திரும்பும் உத்தேசம் இல்லை.

கோடையில் அதிக அளவு மினரல் மற்றும் வைடமின்கள் வியர்வையில் வெளியேறிவிடும் என்பதால் ரெகுலராக மல்டி-வைடமின் சப்ளிமெண்டுகளை சாப்பிட துவங்கி விட்டேன். கோடையில் நீர் இழப்பை தடுக்க அதிக அளவில் நீர் பருக வேண்டும். சூடான காப்பி, டீ, பால் எல்லாம் நிறுத்தி விட்டு குளிர்பால், காஃபி மோச்சா, ஃப்ரப்புசினோவுக்கு மாறியாகி விட்டது.

பழமும், காய்கறியும் எனக்கு அலர்ஜி.நேரடியாக சாப்பிட பிடிக்காது. ஆனால் ஆரஞ் ஜூஸ், மாம்பழ ஸ்க்வாஷ், ஆப்பிள் செடார் என வாங்கி வைத்துள்ளேன். மாம்பழ ஸ்க்வாஷில் பாலை ஊற்றி மேங்கோ லஸ்ஸி செய்ய முயன்றேன். நன்றாகத்தான் இருந்தது.காய்கறி சாப்பிட பிடிக்காததால் V8 கேன் வாங்கி குடித்துகொண்டிருக்கிறேன்.

உணவு வகைகளிலும் மாற்றம். அதிக காரமாகவும், மசாலாவோடும் இருக்கும் பிரியாணி, தந்தூரி, மசலா வகைகளை ஒதுக்கிவிட்டு நம் ஊர் உப்புமா, சாம்பார் வகைக்கு மாறியாகிவிட்டது. கோடையில் மசாலா சாப்பிடுவது ஏற்றது அல்ல.

முக்கியமாக கோடையில் செய்ய துவங்கியது உடற்பயிற்ச்சி. முதலில் தினம் ஒரு மணிநேரம் என ஆரம்பித்து, இப்போது தினமும் 2 மணிநேரம் நடக்க துவங்கியிருக்கிறேன். உடற்பயிற்ச்சி உடலில் இருக்கும் கெட்ட நீரை வெளியேற்றுகிறது. இரவு நன்றாக தூக்கம் வர வைக்கிறது.

கோடையில் வந்து சேர்ந்த ஒரு கெட்ட பழக்கம் சினிமா பார்ப்பது. பல வருடங்களுக்கு பிறகு மீண்டும் தீவிரமாக சினிமா பார்க்க துவங்கிவிட்டேன். அற்புதத்தீவு, நான் அவனில்லை, பட்டியல், ஆட்டோகிராஃப் என பல வருடங்களாக பார்க்காத படங்களை பார்த்துக் கொண்டிருக்கிறேன்.

இப்ப மீண்டும் குளிர்காலம் வரக்கூடாது என்று தோன்றுகிறது:)

Sunday, May 27, 2007

292. மகாத்மா செல்வன்

வேகஸ் மெக்கேரன் விமான நிலையத்தில் இறங்கினேன். இறங்கியதும் விமான நிலையத்திலேயே சூதாட்ட வெண்டிங் மெஷின்கள் வரவேற்றன. நகருக்குள் நுழையுமுன்னரே அங்கே சிலர் உட்கார்ந்து தமது அதிர்ஷ்டத்தை சோதித்து கொண்டிருந்தனர்.

ஒரு வாரம் தங்க வேண்டியிருந்ததால் இரண்டு பெரிய சூட்கேஸ்கள் கொண்டு வந்திருந்தேன். (சூட்கேசுக்குள் என்ன இருந்தது என்ற ரகசியம் விரைவில் உடைக்கப்படும்:)..சூட்கெஸ்களில் பொருத்தப்பட்டிருக்கும் வீல்களும், விமான நிலையங்களில் இருக்கும் டிராலிகளும் போர்ட்டர் என்ற வர்க்கத்தையே கிட்டத்தட்ட ஒழித்து கட்டிவிட்டன. டிராலியில் வைத்து தள்ளிக்கொண்டு வெளியே வந்ததும் வெயில் சுள்ளென்று அடிக்க ஆரம்பித்துவிட்டது. விமான நிலையத்திலிருந்து ஓட்டல் செல்ல ஷட்டில் சர்வீஸ்...'

ஷட்டில் டிரைவர் நமது சூட்கேஸை எடுத்து உள்ளே வைக்கிறார். சிரித்த முகத்துடன் முகமன் சொல்கிறார். ஜோக்கும் அடிக்கிறார்.ஒவ்வொரு ஓட்டலுக்கும் பஸ் வரும்போது மைக்கில் அறிவிப்பு செய்கிறார். பஸ்ஸை நிறுத்தி சூட்கேசை எடுத்து தருகிறார். டாக்சி டிரைவரும் போர்ட்டரும் கலந்தது போன்ற ஒரு தொழில். டிப்ஸ் தந்தால் மகிழ்ச்சியுடன் பெற்றுக்கொண்டு நன்றி சொல்கிறார். சிலர் அவருக்கு டிப்ஸ் தராமல் போவதையும் காண முடிந்தது. கணக்கு போட்டால் ஒரு ட்ரிப்புக்கு எப்படியும் ஐந்து முதல் பத்து டாலராவது டிப்ஸ் கிடைக்கும் என்று தோன்றியது.ஒரு நாளைக்கு 10 ட்ரிப் தாராளமாக அடிக்கலாம் என்றாலும் மாதம் இதிலேயே 1500 முதல் 3000 கிடைக்கும். அதுபோக சம்பளம்....ஷட்டிலில் ஏறுபவர்களும் அவரை மரியாதையாக நடத்துகின்றனர். விளிம்புநிலை தொழிலாளி ஒருவர் மகிழ்வுடனும் நல்ல வாழ்க்கைதரத்துடனும் இருப்பதை காணும்போது சந்தோஷமாக இருந்தது.

ஓட்டலுக்கு போனவுடன் ரூமை செகின் செய்தவுடன் நம் ஊரில் வழக்கமாக இருக்கும் "ரூம் சர்வீஸ் பாய்" என்ற ஒருவரை நிஜமாக மிஸ் செய்தேன். ஓட்டலிலிருந்து ரூமுக்கு பெட்டிகளை உருட்டிக்கொண்டே போனேன். (சுமார் அரை கிலோமீட்டர்). கைவலி எடுத்துவிட்டது. அந்த வேலை எத்தனை கடினமானது என்பது புரிய ஒரு வாய்ப்பு என்று நினைத்துக் கொண்டேன். ஓட்டல் அறையில் நுழைந்தபோது அங்கே ஒரு ப்ரிட்ஜ் இருந்தது- சந்தேகப்பட்டமாதிரி மைக்ரொவேவ் அவன் இருக்கவில்லை. பெட்டியை திறந்து ரைஸ் குக்கரை எடுத்து அரிசி வைத்து ரெடிமேட் சாம்பாரை எடுத்து அதில் ஊற்றி சாப்பிட்டதும் பசி பறந்துவிட்டது. ஒரு பெட்டி முழுக்க உனவுப்பொருட்கள்தான். ஒருவாரம் வெளியே சாப்பிடுவது என்பது பட்ஜெட்டுக்கும், உடல் நலத்துக்கும் ஒத்துவருமா சொல்லுங்கள்:)..(கஞ்சன் என்று யாரப்பா முனகுவது?)

சாப்பிட்டுவிட்டு ஊர் சுற்ற கிளம்பினேன்.தெருக்களில் பெர்முடா, பச்சை டிஷர்ட், கூலிங்க்ளாஸ், தொப்பி அணிந்தவர்கள் நின்று வருகிற, போகிறவர்களுக்கு எல்லாம் துண்டு பிரசுரங்களை கொடுத்து கொண்டிருந்தனர். என்னவென்று வாங்கிப் பார்த்தால் உலகின் பழமையான தொழிலுக்கு விளம்பரம்.

ஒரு மணிநேர கம்பனிக்கு $69. போன் செய்தால் நமது ரூமுக்கே 20 நிமிடத்தில் வந்து விடுவார்களாம். வெறும் டான்ஸ் என்றால் அதற்கு தனிரேட். எந்த வியாதியும் இல்லை என்று உத்திரவாதம். இதுவும் ஒரு விளிம்புநிலை தொழில்தான்...தெருவில் நின்று எந்த கூச்சமும் இன்று பாம்ப்லெட் கொடுக்கின்றனர். அவர்களை யாரும் வெறுப்புடன் பார்க்கவில்லை. இவர்களும் தொழிலில் ஒரு நேர்மையை கடைபிடித்தனர். குடும்பத்துடன் போகும் ஆண்களிடம் அந்த விளம்பரங்களை கொடுக்கவில்லை. பெண்களிடமும் கொடுக்கவில்லை. அரசால் அங்கீகரிக்கப்பட்ட தொழில்..அந்த $69ல் இவர்களுக்கும் கமிஷன் இருக்குமா அல்லது துண்டுபிரசுரத்தை கொடுக்க மணிக்கு இத்தனை ரேட் என்பதா என தெரியவில்லை.

அவர்களில் இளைஞர்கள் பலர் இருந்தனர். நடுத்தர வயதினர் பலர் இருந்தனர்...இயந்திரம் போல் தலையை குனிந்துகொண்டு பாம்ப்லெட் கொடுப்பவர் இருந்தனர்...பெருமையுடன் பாம்ப்லெட்டை தந்து வாங்குபவர்களிடம் ஜோக் அடிப்பவர்கள் சிலரும் இருந்தனர்..அதில் ஒருவர் வழியில் போகும் பெண்களிடம் கூட ஜோக் அடித்தார்...அவருக்கு அவர்கள் சிரித்தபடி பதில் சொல்லிப்போனார்கள்.காபரே நடனத்துக்கு டிக்கட் வாங்கிய பெண்களும் இருந்தனர்...ஒப்பீட்டளவில் சமூகத்தில் ஓரளவு மரியாதையுடன் இவர்களும் இருப்பதாகவே தோன்றியது..

சூதாட்ட விடுதிகளில் மதுவும், உணவும் பரிமாறுவது கவர்ச்சியான உடையணிந்த பெண்கள்....டிப்ஸ் அதிகம் கிடைக்கும் வேஅலி இது.இந்த தீமிலேயே பிரபலமடைந்த ஹூட்டர்ஸ் எனும் உணவுவிடுதி புதரக்மெங்கும் உண்டு.

வேகசின் தெருக்களில் தள்ளுவண்டியில், நடைபாதை வியாபாரம் ஜோராக நடைபெறுகிறது. டிஷர்ட், ஐஸ்க்ரீம், கிளியோடு போடா எடுப்பது...பெப்சி என அனைத்தும் விற்கிறார்கள். பெருமுடா மட்டும் அணிந்த ஆண்கள் கொளுத்தும் வெயிலில் கூடையில் பெப்சியும் தண்ணிரும் விற்கிரார்கள். நம்மூர் நடைபாதை வியாபாரம்தான்...ஆனால் நல்ல வரும்படி கிடைக்கும் என்று தோன்றியது. கவர்ச்சியான உடையில் கொளுத்தும் வெயிலில் பெண்களும் இதை செய்கின்ரனர். பாவமாக இருந்தது.. ஆனால் நிழற்குடையின் கீழே அமர்ந்து ரோட்டை அடைககமல் தான் விற்கின்றனர்....

ஒரு ஷாப்பிங்மாலில் நுழைந்து இலவசமாக கிளிகளை வைத்து வித்தைகாட்டுகிறவர் ஒருவரின் (ஜோ க்ராதோவ்ல் ) ஷோவை பார்த்தேன். 15 நிமிடம் ஷோ. ஷோவுக்கு எப்படியும் $20 டிப்ஸ் கிடைக்கும் என தோன்றியது. வேகசின் பல ஓட்டல்களில் ஷோ நடத்துவதாக சொன்னார்.கிளிகளை நன்கு பராமரிக்க செலவு அதிகம் ஆவதாக சொன்னார்..கிளிகளின் இறகை வெட்டாமல் தான் வளர்க்கிறார். அவையும் கொழு,கொழு என இருந்தன....

இரவில் Treasure island எனும் ஓட்டலுக்கு வெளியே தெருவில் ஒரு நடன/நாட்டிய நிகழ்ச்சி நடந்தது. சுமார் 20 பெண்கள் இரண்டு ஆண்கள் கலந்துகொண்ட ஒரு ஷோ..கூட்டம் முண்டியடித்தது....நம் ஊரு தெருக்கூத்தாடி வேலைபோல்தான் இதுவும்....ஆனால் நல்ல உடைகள்..சம்பளம்..தொழில்பாதுகாப்பு..கூட்டமும் கமெண்ட் அடிக்காமல் ரசித்தது..கைதட்டி மகிழ்ந்தது...

விளிம்புநிலை மக்களுக்கு வேகஸ் நன்கு வருமானம் தருகிறது. மரியாதை அளிக்கிறது. இப்போது சொன்ன இவர்கள் இல்லாவிட்டால் அந்த பாலைவன நகருக்கு மக்கள் யாரும் வரமாட்டார்கள். விபச்சாரமும், பெண்ணுடலும், சூதாட்டமும் இல்லாவிட்டால் வேகஸ் வெறும் பாலைவனம்தான்....சூதாட்ட விடுதிகளை நடத்துபவர்கள் பில்லியனில் சம்பாதிக்கிறார்கள்....இதோ இவர்கள் ஆயிரத்தில் சம்பாதிக்கிறார்கள்....ஆனால் டூரிஸ்ட் முதல் விளிம்புநிலை மக்கள் முதலாளி என அனைவரும் மகிழ்வோடுதான் இருக்கிறார்கள்....ஒவோருவரும் மற்ரவரை மரியாதையுடன் நடத்துகிறார்கள்....

இந்த நகருக்கு இருண்ட பக்கம் இருக்கிறதா?ஆம்...சூதுக்கு அடிமையாகி கைகாசு அனைத்தையும் தொலைத்தவர்கள் பலருண்டு...போதைமருந்து யக்கத்தில் தெருக்களில் திரிகிறவர்கள் உண்டு..தெருக்களில் கார்கள் ஹாரன் அடிப்பது டென்வரில் கேட்கவே முடியாது.ஆனால் இங்கே வாகன ஓட்டிகள் அடிக்கடி ஹாரன் அடிக்கிரார்கள். (ஹாரன் அடிப்பது இங்கே rude behavior என கருதுவார்கள்)

வேகஸின் மிகப்பெரிய ஓட்டலான சீசர்ஸ் பேலசின் நடுமத்தியில் பிரம்மாவுக்கு வெண்பளிங்கில் அழகான ஒரு கோயில் கட்டியிருக்கிறார்கள். தெற்காசிய நாடுகள் அனைத்திலும் தொழப்படும் கடவுள் என்று கல்வெட்டு வைத்து திருநீறும் ஊதுபத்தியும் எலுமிச்சம்பழமும் வைத்திருக்கிறார்கள். பலபேர் அங்கே வந்து வணங்கி தியானித்து போவதை பார்க்க முடிந்தது. அந்த சிலையை வழங்கியவர் வியட்னாமிய தம்பதியினர் என்று தெரிந்தது. பாவங்களின் தலைநகரத்துக்கு இப்படி ஒரு ஆன்மிக மறுபக்கம்....

கலவையான உணர்வுகளுடன் அறைக்கு திரும்பினேன். அறையை ர்ரும்சர்வீஸ் பெண் ஒருவர் சுத்தம் செய்து வைத்திருந்தார். அவரது பெயர் க்றிஸ்டி என்பது அவர் விட்டு சென்ற சீட்டிலிருந்து தெரிந்துகொண்டேன். அங்கே தங்கியிருந்த ஏழு நாளும் அவரை பார்க்கவே இல்லை. ஆனால் அறை தினமும் மிக நன்றாக சுத்தம் செய்யப்பட்டிருந்தது.வரும்போது அறையில் கணிசமான டிப்ஸ் வைத்துவிட்டு வந்தேன்.

டென்வர் வந்து சேர்ந்ததும் அன்று இரவு டென்வர் மலையாள சங்கம் நடத்தும் நடிகை திவ்யா உண்ணி நடன நிகழ்ச்சிக்கு டிக்கட் கிடைத்தது....திவா உண்ணி டெக்சாஸில் குடியேறியிருக்கிறார். அங்கே நாட்டியபள்ளி நடத்துகிறார். மோகினி ஆட்டம் என்ற நடனத்தை ஆடினார்... கல்யாணத்துக்கு பிறகும் திவ்யா உண்ணி அப்படியே இருந்தார். எதுவும் பேசவில்லை. டான்ஸ் மட்டும் ஆடிவிட்டு மேடையை விட்டு இறங்கிப் போய்விட்டார்.

திரும்பிவரும் வழியில் ஒரு ரெஸ்டாரண்டில் நுழைந்தேன்...கூட்டம்...உனவுவகைகளை வாங்கிக்கொண்டு பார்த்தால் அனைத்து டேபிளிலும் ஆட்கள் இருந்தனர். ஒரு டேபிளில் ஒரு வயதான அம்மா மட்டும் இருந்தார்.. அங்கே உட்கார அவரிடம் அனுமதி கேட்காலாம் என்று போய் கேட்டேன்.

"நோ" என்றார். வெறுப்புடன் முகத்தை திருப்பி கொண்டார்....

நிறவெறி...

அது இன்னும் பூமியில் அழியவில்லை....

இங்கே எத்தனை லட்சம் சம்பாதித்தாலும் நான் ஒரு கறுப்பன் தான்....நம் ஊரில் கலக்டராக இருந்தாலும் சில சமயங்களில் ஒருவருக்கு அவரது ஜாதி நினைவூட்டப்படும்...

சிறிதுநேரம் தயங்கி நின்றேன்..அதன்பின் நாற்காலியை இழுத்துப்போட்டு அந்த அம்மையார் முன்பு உட்கார்ந்தேன்.

வெறுப்புடன் அவர் எழுந்தார். முனகிக்கொண்டே இடத்தை காலி செய்தார்.

சாதாரண மனிதனாக சுற்றுப்பயணத்தை துவக்கிய நான் மகாத்மாவானது இப்படித்தான்

மகாத்மாக்கள் பிறப்பதில்லை..உருவாக்கப்படுகிறார்கள்