Wednesday, February 18, 2009

God Bless America

மதங்களை தாண்டிய பரந்த மனப்பான்மையை "கேதலிக் மனப்பான்மை" என்று சொல்வதுண்டு என்றாலும் பொதுவாக கிறிஸ்தவர்கள் இறைவனை கிறிஸ்தவ மதத்தின் மூலம் மட்டுமே அடைய முடியும் என நம்புவார்கள்.ஆனால் அமெரிக்க கிறிஸ்தவர்களிடையே எடுக்கப்பட்ட ஒரு ஆய்வு இந்த முன்முடிவை தகர்த்தெறிந்திருக்கிறது.அதாவது அமெரிக்க கிரிஸ்தவர்களில் சுமார் 70% "பல மதங்களும் இறைவனை அடைய உதவும்" என கருத்து தெரிவித்துள்ளனர்...இந்த ஆய்வு முடிவு பலத்த அதிர்ச்சிகளையும் விவாதங்களையும் கிளப்பி விட்டுள்ளது.

 பொதுவாக அமெரிக்கர்கள் மதசார்பின்மை தத்துவத்தில் நம்பிக்கை கொண்டவர்கள்.அமெரிக்கா மத சுதந்திரத்தையும், வழிபாட்டு உரிமையையும் கட்டிகாக்கும் தேசம் என்றாலும் இங்கிருக்கும் கிறிஸ்தவர்கள், லிபரல்களால் ஸ்டிரியோடைப் செய்யப்பட்டே வந்திருக்கின்றனர்.அந்த ஸ்டிரியோடைப்பை இந்த ஆய்வு தகர்த்தெறிந்துள்ளது.

 கிறிஸ்தவத்தை பரப்பும் பணியில் ஈடுபட்டுள்ள எவான்க்ஜலிக்கல் கிறிஸ்தவர்கள் எனப்படும் பிரிவில் கூட சுமார் 57% பேர் "பல மதங்களை பின்பற்றியும் இறைவனை அடையலாம்" என கூறியுள்ளனர்.இந்த நம்பிக்கை அமெரிக்க கிரிஸ்தவ பிரிவுகள் அனைத்திலும் காணப்படுகிறது."இறைவனை அடைய எங்கள் மார்க்கம் மட்டுமெ வழி" என்று கூறுபவர்கள் அமெரிக்க கிறிஸ்தவரிடையே உள்ள இரு பிரிவினர் தான்..மோர்மான்கள் மற்றும் ஜெஹோவாவின் சாட்சிகள்....மற்ற மெயின்ஸ்ட்ரீம் புராட்டஸ்டண்டு,கேதலிக்,எவாஞலிக்கல் பிரிவுகளில் பெரும்பான்மையானோர் மாற்று மதங்களின் உண்மையை ஒப்புக்கொள்ளும் பரந்த மனப்பான்மையினராகவே உள்ளனர்.

 "இந்த மதங்களை தாண்டிய பரந்த மனப்பான்மை அமெரிக்க தேசத்தின் மகத்துவம் மிகுந்த கோட்பாடு" என பெருமையுடன் கூறுகிறார் பாஸ்டன் பல்கலைகழக புரபசர் பெர்ஜர்.தீவிர கிரிஸ்தவ நம்பிக்கையாளரிடையே இது அதிர்ச்சியை ஊட்டி ஒரு விவாதத்தையும் ஏற்படுத்தி உள்ளது.அனைத்து மதங்களும் ஒன்றே என்றால் ஏசுவின் உயிர்ப்பலியும், மரணமும் வீணானதா என அவர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

"இந்த பரந்த மனப்பான்மைக்கு காரணம் அதிகரிக்கும் ஆசியர்களின் குடியேற்றமே" என்றும் கூறப்படுகிறது."உங்கள் குழந்தையின் நல்ல நண்பன் இந்துவாகவோ பவுத்தனாகவோ இருந்தால் அது மக்களின் மனதில் அந்த மதங்களைப்பற்றிய நல்ல அபிப்பிராயத்தையே உருவாக்குகிறது" என்கிறார் லிண்ட்சே என்ற ஆசிரியர்.

 நற்பண்புகளையும், கோட்பாடுகளையும் உலகெங்கிலும் இருந்து சுவீகரிக்கும் இந்த மாபெரும் ஜனநாயக தொட்டிலில் மக்களிடையே காணப்படும் இப்பரந்த மனப்பான்மை ஆச்சரியத்தை ஏற்படுத்த கூடியதா என்ன?மதத்தை எல்லாம் தாண்டிய சக்தியை கொண்டது மனித நேயமே என்பதை உலகுக்கு உணர்த்தும் அமெரிக்க மக்களுக்கு என் வாழ்த்துக்கள். இந்த மாபெரும் தேசத்தை ஏசுநாதன் என்றென்றும் வாழ்த்தி அருள் பாலிக்கட்டும்..

 

 God Bless America 

No comments: