Saturday, January 26, 2008

372.பள்ளிகளில் செக்ஸ் கல்வி

முத்தமிழில் நடந்த ஒரு விவாதத்தில் இது பற்றிய சில கருத்துக்கள் பரிமாறப்பட்டன. அதனால் இது பற்றி ஒரு கட்டுரை எழுதிவிட்டேன்.

செக்ஸ் என்பது ஆபாசமோ, அசிங்கமோ அல்ல.அது குழந்தைகள் தெரிந்து கொள்ள கூடாத விஷயமும் அல்ல. குழந்தை பிராயத்தை கடக்குமுன்னரே பலரும் வயதுக்கு வந்துவிடுகின்றனர்.அந்த வயதில் மனதில் வரும் பயமும், சந்தேகங்களும், குழப்பங்களும் ஏராளம்.குழந்தைகள் அதை வெளியே சொல்வதில்லை என்பதால் அவர்கள் மனதில் அந்த நினைப்பே இல்லை என்று அர்த்தமில்லை.அந்த மாதிரி நினைத்துக்கொண்டு நாம் தான் ஏமாந்து போகிறோம்.

விவரம் தெரிந்த குழந்தைகள் செக்சை பற்றி அறிந்துகொள்வதும், அதனால் கவரப்படுவதும் தவறே இல்லை.சொல்லப்போனால் குழந்தைக்கு பருவம் வந்ததும் செக்சை பற்றிய ஈர்ப்பின்றி இருப்பது அப்நார்மல்.அப்படி எந்த டீனேஜராவது இருந்தால் அவர்களை டாக்டரிடம் கூட்டிபோய் சோதிக்க வேண்டும்.

ஏன் என்றால் உறவினர்களால், நண்பர்களால், ஆசிரியர்களால் வல்லுறவுக்கு/சீண்டலுக்கு ஆளாகி அதனால் செக்ஸையே வெறுப்பவர்கள் நிறைய உண்டு.அல்லது மருத்துவ ரீதியாக கோளாறுகள் இருக்கலாம்.அல்லது செக்ஸ் என்றால் என்னவென்றே தெரியாமல் பயந்துபோய் இருக்கலாம்.

சிறு வயதிலேயே தாய்,தந்தை குழந்தைகளுக்கு பாலியல் ரீதியான சீண்டல்களை எப்படி எதிர்கொள்வது என்பதை கற்றுக்கொடுக்க வேண்டும்.ஆண் குழந்தைகளுக்கும் தான்.உலகில் நடக்கும் கற்பழிப்பு குற்றங்களில் 10% ஆண்களுக்கு எதிராக தான் நடத்தப்படுகிறது.

முறையான செக்ஸ் கல்வி பள்ளிகளில் அளிக்கப்பட்டால் இது போன்ற பல பிரச்சனைகளை தவிர்க்கலாம்.வயதுக்கு வருவது,பாதுகாப்பான உடலுறவு,கர்ப்பத்தை தவிர்ப்பது எப்படி என்று பல விஷயங்களை பள்ளிகளில் சொல்லித்தர வேண்டும்."நமது குழந்தைகளுக்கு இதெல்லாம் எதுக்கு தெரியணும்?" என அலறினால் பிரயோசனமில்லை.ஆசிரியர் சொல்லவில்லை என்றான் கூட படிக்கும் மாணவன் அரைகுறையா சொல்லித்தருவான்.போதாகுறைக்கு சினிமா,பத்திரிக்கை சொல்லிக்கொடுக்கும்.அதுக்கு ஆசிரியர் சொல்வதே மேல் அல்லவா?

பெரும்பாலானோர் இந்த விஷயத்தில் இன்னமும் முட்டாள்தனமாக வாதங்களை வைத்துக் கொண்டிருக்கின்றனர்."ஸ்கூலில் எதுக்கு செக்சை பத்தி சொல்லிக்கொடுக்கணும்?"னு கேட்டா அப்புறம் வேற எங்க சொல்லித்தர முடியும்?ஸ்கூல்ல வாத்தியார் சொல்லலைன்னா கூட படிக்கும் மாணவன் சொல்லித்தர்ரான்.வாத்தியாராவது தியரடிக்கலா தான் சொல்லித்தருவார். இவன் பிராக்டிகலாவே வகுப்பெடுத்துடுவான்:)

எந்த வயசுலயாவது அவன்/அவளுக்கு செக்ஸை பத்தி சொல்லிக்கொடுத்தே ஆகணும் இல்லையா? "எனக்கெல்லாம் எவனும் சொல்லிக்கொடுக்கலை.நான் தெரிஞ்சுக்கலையா?"ன்னு கேட்பது உளறல்.நீ என்ன மரத்தடியில தியானம் பண்ணியா தெரிஞ்சுகிட்ட?கூட படிக்கறவன்,சினிமா,பத்திரிக்கை, பருவகாலம், ப்ளூபிலிம்னு பாத்து தனே தெரிஞ்சுகிட்ட?அதுக்கு பதில் ஒழுங்கா கவர்மெண்ட் சிலபஸ் போட்டு,வல்லுனர்கள் கூடி புஸ்தகம் எழுதி, பாட புத்தகம் மூலமா வகுப்பறையில் வாத்தியார் சொல்லிக்கொடுப்பதில் என்ன குறையை கண்டுவிட்டீர்கள்?

சிலபேர் செக்ஸ் கல்வியை எதிர்ப்பதில்லை. "அப்ஸ்டினன்ஸ் ஒன்லி" செக்ஸ் கல்வியை வலியுறுத்துவார்கள்.அதாவது வயதுக்கு வருவது, சுய இன்பம், கற்பழிப்பு தடுப்பு இம்மாதிரி கல்வியை மட்டும் கற்றுத்தரவேண்டும்.பாதுகாப்பான உடலுறவு, பாலியல் வியாதிகள் பற்றி சொல்லிக்கொடுக்க கூடாது என்று சண்டைக்கு வருவார்கள்.பாலியல் வியாதியை தடுக்க செக்சே கூடாது என்று சொல்லிக்கொடுக்க வேண்டும் என்பார்கள்.

இவர்களை கட்டி வைத்து அடித்தால் கூட இவர்கள் திருந்த போவதில்லை என்பது உறுதி. அதாவது பாதுகாப்பான உடலுறவு பற்றி என்னைக்காவது அவனுக்கு/அவளுக்கு தெரியணுமா கூடாதா? நாம சொல்லிக்கொடுக்கலைன்னா அவங்களுக்கு என்ன தெரியாம போக போவுதா?பூனை கண்ணை மூடிகிட்டு உலகத்தையே இருட்டுன்னு சொன்ன கதைதான் இது.

நான் எல்லாம் நிரோத் என்றால் என்ன என்று தெரிந்துகொண்டதே பாக்கியராஜின் எங்க சின்ன ராசா படம் பார்த்துத்தான். அதுக்கு முந்தி அது ஏதோ கருத்தடை மாத்திரை என்று நினைத்து இருந்தேன்.

செக்ஸ் கல்வி ஒருத்தன் வாழ்க்கை முழுவதற்கும் பயனளிப்பது.எந்த வயதிலாவது அதை கட்டாயம் சொல்லித்தந்தே ஆகவேண்டும்.அதை சொல்லிக்கொடுக்க பள்ளீயை விட ஏற்ற இடம் எதுவும் கிடையாது.கல்லூரிக்கு வந்து செக்ஸ் கல்வியை சொல்லிக்கொடுக்க வேண்டிய அவசியமே இல்லை.அவனுக்கே அப்ப அது தெரிஞ்சுடும்.அந்த மாதிரி முறைசாரா கல்வி வேண்டாம்னுதான் பள்ளி வயதிலேயே சொல்லித்தர சொல்வது.

மேலும் எந்த வாத்தியாருக்கும் தொழில் தர்மம்னு இருக்கு.'உறை மாட்டிட்டு புகுந்து விளையாடுங்க'ன்னு எந்த வாத்தியாரும் சொல்லப்போறதில்லை.....ஆனாலும் அளவோட அழும்பு பண்ணுங்கடா டேய்...:))

வாத்தியாருக்கு சொல்லித்தர கூச்சம், மாணவனும் மாணவியும் எப்படி ஒண்ணா உக்காந்து கேப்பாங்கன்னல்லாம் உளற கூடாது. வாத்தியார் என்ற முறையில் சொல்கிறேன். வாத்தியாருக்கு முதல் நாள் தான் கூச்சம் எல்லாம் இருக்கும்.அப்புறம் பழகிடும். இல்லைன்னா செக்ஸ் கல்விக்குன்னு ஒரு வாத்தியாரை நியமிச்சு சொல்லிதர சொல்லலாம். மாணவன் முன்னாடி சில சந்தேகங்களை கேக்க மானவிகளுக்கு கூச்சம் இருந்தா தனியாவும் அவங்களுக்கு வகுப்பெடுக்கலாம்.அதெல்லாம் ஸ்கூல் நிர்வாகம் அழகா பாத்துக்கும்.

நெருப்பு பற்றாமல் தடுக்கும் வழிமுறையை சொல்லிவிட்டு, நெருப்பு பற்றியபின் என்ன செய்யவேண்டும் என்பதை சொல்லாமல் விடகூடாது.பாதுகாப்பா ரோட்டை கிராஸ் செய்வது எப்படி என்று சொல்லிவிட்டு அதே சமயம் ஆக்ஸிடெண்ட் ஆனால் முதலுதவி எப்படி செய்யவேண்டும் என்பதையும் சொல்லியே ஆகவேண்டும் அல்லவா?அதே போல் செக்ஸ் கல்வி வகுப்பிலும் அப்ஸ்டினன்ஸின் மகத்துவத்தை சொல்லிவிட்டு அதே சமயம் உறையின் அருமை, பெருமைகளையும் கண்டிப்பா சொல்லணும்:)..அதுபோக மாரல் சைன்ஸ் வகுப்பில் ஒழுக்கத்தை கத்துகுடுங்க.வீட்டில் குழந்தைகளை ஒழுக்கமா வளர்த்துங்க.

நம்ம நாட்ல ஜனத்தொகை நூறுகோடிடா...ஒழுங்கா செக்ஸ் கல்வி சொல்லிகொடுக்கப்பட்டிருந்தா இந்த அளவுக்கு ஜனத்தொகை வளர்ந்திருக்காது. இனியும் சொல்லிக்கொடுக்காம விட்டா ஜனத்தொகை டபிள்,டிரிபிளாயி நிக்க கூட இடம் இல்லாம இருக்கவேண்டியதுதான். நாட்டை கெடுக்காதிங்கடா டேய்:-)))))

Post a Comment