க்ளென்வுட் ஸ்ப்ரிங்க்ஸ் (Glenwood springs) கொலராடோவிலுள்ள அழகான ஒரு சுற்றுலாத்தளம்.மலைமேல் அமைந்த சிறிய நகரம்.டென்வரிலிருந்து அங்கே விமானம் மூலம் செல்லலாம் என்றாலும் சாலையின் அழகை ரசிக்க கார் அல்லது பஸ் பிரயாணமே சரி என்பதால் க்ரேஹவுண்ட் மூலம் கிளம்பினேன். மொத்தம் 3.5 மணிநேர பஸ்பயணம்.
வழியெங்கும் வானுயர்ந்த பனிமலைகள். பனிமலைகளிடையே புதுமணப்பெண் போல் நாணிக் கோணிச் செல்லும் அழகிய கொலராடோ ஆறு. ஆற்றுக்கும் மலைக்கும் நடுவே அந்தரத்தில் தொங்கும் ரயில் பாதை. வசந்தகால பருவத்தில் பூத்துக்குலுங்கும் மலர்கள், இளவெயிலில் உருகி வழியும் பனி என வழியெங்கும் கண்கொள்ளா காட்சிகள்.
க்ளென்வுட்டில் ஒரு கேஸ் ஸ்டேஷன் தான் பஸ் நிலையம். அங்கே காலை 10.30க்கு பஸ் என்னை இறக்கிவிட்டது.19ம் நூறாண்டின் ஐரோப்பிய நகரம் போல் காட்சியளித்தது க்ளென்வுட்.அங்கே ஓடும் பஸ்கள் பலவும் இலவச பஸ்கள் என அறிந்து வியந்தேன்.ஒரே பஸ்ஸில் ஏறினால் நகர் முழுவதையும் ஒரு ரவுண்ட் வந்துவிடலாம். அத்தனை சிறிய ஊர்.ஆனால் பிரயாண களைப்பில் பஸ்ஸை பிடிக்க விருப்பமின்றி எனது காரில் ஏறிக்கொண்டு(வாடகை கார் எல்லாம் எனது கார்:)) தங்கும் விடுதிக்கு சென்றேன். காரோட்டி பழைய பிரிட்டிஷ் போர்வீரன் போல் உடை அணிந்திருந்தார். கம்பீரமாக இருந்தார். $12 கட்டணத்துடன் $3 டிப்ஸையும் தந்ததும் மகிழ்வாக கைகொடுத்தார்.
தங்கும் விடுதியின் உரிமையாளரும் அவரது மகளும் மிக கனிவுடன் முகமன் கூறி வரவேற்றனர்.ஹில்டன்,மரியாட் போன்ற விடுதிகளில் கிடைக்கும் இயந்திரமயான செயற்கை புன்னகையை அப்போது நினைத்துக் கொண்டேன். அறை வாடகையும் மிக குறைவுதான்($80). ஆனால் அறை மிக சுத்தமாக இருந்தது. மைக்ரவேவ்,பிரிட்ஜ்,கேஸ் அடுப்பு முதலியவையும் அரையில் இருந்ததால் வெளியே உணவு சாப்பிடும் செலவு சுத்தமாக இல்லாமல் போனது.
பசி வயிற்றை கிள்ளவே வெளியே வந்தேன். அருகிலுள்ள அங்காடிக்கு சென்று டாப்ரேமன் நூடில்ஸ் வாங்கி அறைக்கு வந்து மைக்ரவேவ் செய்து சாப்பிட்டேன். ஒரு டின் பெப்சிக்கும் இரண்டு நூடில்சுக்கும் சேர்த்து திருப்திகரமான மதிய உணவு $1.50 செலவில். அப்புறம் ஊர் சுற்ற வெளியே கிளம்பினேன்.
இதமான வெயில் இருந்தாலும் குளிரும் அடித்தது. இலவச பஸ்ஸீல் ஏறி முதலில் அட்வெஞ்சர் பார்க் சென்றேன். மலை உச்சியில் அமைந்த பார்க்குக்கு கம்பியில் கட்டி இழுக்கும் இழுவை ட்ராமில் தான் செல்ல வேண்டும். அதற்கான கட்டணம் $10. அதில் ஏறி சென்றால் வழியில் தெரியும் இயற்கை காட்சிகளை கண்டுகளிக்க நடுநடுவே நிறுத்துகிறார்கள். சுற்றிலும் 14,000 அடி உயர பனிமலைகள் நடுவே, வளைந்தோடும் கொலராடோ ஆறும் அதன் கரையில் அமைந்த க்ளென்வுட் நகரமும் கண்முன் தெரிந்தது. தொழிற்சாலைகளால் மாசுபடா நகரை மேலிருந்து அதன் இயற்கை அழகோடு தரிசிக்கும் காட்சி காணக்கிடக்காத அற்புதம்.
மலைமேல் சென்றதும் அங்கே ஒரு குகைப்பயணம் சென்றேன்.மலைக்குள் இருக்கும் சுரங்கங்கள் அமெரிக்காவெங்கும் பல நகரங்களில் இருக்கும்.பல குகைகளுக்கு அதுபோல் போயிருக்கிறேன்.
இந்த குகைப்பயணத்துக்கு வந்த வழிகாட்டி உற்சாகமான 50 வயது இளைஞர்.ஆகிருதியான உடல்கட்டும், முறுக்கு மீசையும் வைத்திருந்த வெள்ளையர்.14ஸ் என்று அழைக்கப்ப்டும் 14,000 அடிக்கு மேலான மலைகளில் ஏறுவதில் சமர்த்தர்.மிக இனிமையாக பேசக்கூடியவர்.குகையின் வரலாறு, ஸ்டால்கமைட்ஸ் போன்ரவற்றை விளக்கிக்கொண்டே வந்தார். ஏற்கனவே பல குகைகளில் கேட்டதுதான் எனினும் இவர் தமது சொந்த அனுபவத்தையும் கதையாக சொல்லிக்கொண்டே வந்தார்.
14000 அடிக்கு மேற்பட்ட டிம்பர்லைன் எனப்படும் புல்பூண்டு கூட வளரா உயரம் படைத்த மலைகளை அவர் வென்ற கதைகளை சுவாரசியமாக சொன்னார்.எத்தனை சதவிகிதம் உண்மை,எத்தனை சதவிகிதம் பொய் என தெரியவில்லை எனினும் நன்றாக் ரசிக்க முடிந்தது. "இந்தியாவுக்கு வாருங்கள்.அங்கே எவெரெஸ்ட் இருக்கிறது.22000 அடி உயரம்" என்றேன்."எவெரெஸ்ட் ஏறுவது என் வாழ்நாள் கனவு" என பதிலளித்தார்.
மலைசுற்றுப்பயணம் முடிந்து விடுதி வந்து சேர இரவாகிவிட்டது.இரவு உணவுக்கு மீண்டும் அங்காடிக்கு சென்று உறையவைக்கப்பட்ட மெக்சிகன் எஞ்சிலாடாவையும், புட்டியில் அடைக்கப்ட்டிருந்த 2% பாலையும் மக்காசோள டப்பாவையும் வாங்கிவந்து மைக்ரோவேவில் சூடு செய்து வயிராற உண்டேன்.மலையில் நடந்த களைப்பு.நன்றாக உறக்கம் வந்தது. அடுத்தநாள் முழுக்க சுடுநீர் ஊற்றில் குளிக்க திட்டம்.க்ளென்வுட் ஸ்ப்ரிங்க்ஸ் முழுக்க எங்கே குழி தோண்டினாலும் சுடுநீர் தான் பீறிட்டு வரும்.அந்த சுனைகளில் குளிப்பது சுகமான அனுபவம்.அப்படி ஒட்ரு சுடுநீர் குளத்தில் குளிப்பது உடல்நலத்துக்கு மிகவும் நல்லது என்பதுடன் நல்ல பொழுதுபோக்கும் ஆகும்.
சுடுநீர் சுனைக்கு இலவச பஸ்ஸீல் சென்றேன்.நாள் முழுதும் குளிக்க $10 கட்டணம்.நீச்சல் குளத்தை கண்டதும் அதிர்ந்தேன்.சுற்றிலும் நீச்சல் உடை அணிந்த அத்தனை மனிதர்களை அருகருகே காணும்போது கலாச்சார அதிர்வு நிகழத்தான் செய்தது.
குளத்தில் இறங்கினேன்.சூடான நீரின் வெதுவெதுப்பில் உடல்வலிகள் அனைத்தும் மறைந்தன. எதிரே நீச்சல் உடையில் யுவர்கள், யுவதிகள், குழந்தைகள், கிழவர்கள், கிழவிகள் என நூற்றுக்கணக்கான பேர்.குளத்தில் கட்டிப்பிடித்து ஜலக்கிரிடை நடத்தும் காதலர்கள், அவர்களுக்கு ஐந்தடி தள்ளி பந்து வீசி விளையாடும் குழந்தைகள்,நீச்சல் குளத்தில் ப்ரெட்ரிக் போர்சித் படிக்கும் முதியவர் ஒருவர்,குளத்தில் அமர்ந்து உணவை ஒருவருக்கொருவர் ஊட்டி விட்ட 80வயதுக்கு மேற்பட்ட முதிய தம்பதியினர் என மனிதவாழ்வின் அத்தனை பரிணாமங்களும் அங்கே இருந்தன. இவை அனைத்தும் எனக்கு அன்பின் பல்வேறு பரிணாமங்களாகத்தான் தெரிந்தன. காதலரின் அன்பும், குழந்தைகளின் அன்பும், முதியவரின் அன்பும் அந்தந்த வயதுக்குரிய அன்பின் வெளிபாடுகளாகத்தான் தெரிந்தன.
ஜலக்கிரிடை நடத்தும் காதலர்களை கண்டபோது அருவறுப்பே வரவில்லை. மனிதகுலத்தின் இயற்கையான உனர்வு அங்கே வெளிப்பட்டுக் கொண்டிருந்தது. அவர்களை யாரும் உற்றுப் பார்த்தார்களில்லை. அதை இயற்கையான ஒரு நிகழ்வாக அங்கிருந்த அனைவராலும் எடுத்துக்கொள்ள முடிந்திருந்தது. மிகக்குறைந்த ஆடை அணிந்திருந்த பெண்களையும் யாரும் அங்கே ஊற்றுப்பார்க்கவுமில்லை, கிண்டல் செய்யவுமில்லை. அவர்கள் அருகே நீரில் கிடந்து எந்த கல்மிஷமுமின்றி சகமனிதர்களாக அனைவராலும் அங்கே இருக்க முடிந்தது. மஞ்சள்,கறுப்பு,பழுப்பு,வெள்ளை என பல கண்டங்களை சேர்ந்த பல வண்ண உடல்கள். சிலுவை, கறுப்பு கயிறு, புத்தர் டாட்டு என பலமத சின்னங்கள் கொண்ட உடல்கள். பல்வேறு மொழிகள். இவை அனைத்துமிருந்தும் அங்கே வெளிப்பட்டது அனைத்தும் அன்பின் பரிணாமங்கள் தான்.
சீன குழந்தைகள் சீனமொழியில் கூச்ச்லிட்டபடி சுடுநீரில் ஆடியபோது அவர்கள் உணர்வை அறிய சீனமொழி தேவையாயிருக்க்வில்லை. 80 வயதை தாண்டிய ஹிஸ்பானிக் தம்பதியினர் கையை பிடித்தபடி பலமணிநேரம் கொஞ்சிக் கொண்டிருந்தபோது அந்த அன்பை உணர ஸ்பானிய மொழி தெரிந்திருக்க வேண்டிய அவசியமில்லை. மதம்,நிறம்,மொழி ஆகியவற்றை தாண்டி மனித இனம் முழுமைக்கும் பொதுமொழி அன்பே என்பது அங்கே வெளிப்படையாக தெரிந்தது.
முன்பொரு காலத்தில் இந்திரவிழா எனும் பெயரில் தமிழ்நாட்டில் இதேபோல் நீர்விழா நடந்த நிகழ்வுகள் நினைவுக்கு வந்தன.
காலை முதல் இரவு வரை குளத்தில் இருந்துவிட்டு வெளியே வந்தேன். லாக்கர் ரூமில் நிர்வான மனிதர்களை கண்டபோது சுத்தமாக அருவறுப்பே வரவில்லை. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை நிர்வாணமாக அங்கே சிரித்து பேசிக்கொண்டிருந்தனர். தொந்தி,தொப்பை, கட்டுடல் என பல வடிவங்கள். மனதில் மிச்ச்மிருந்த கலாச்சாரத்தின் பாதிப்பால் துண்டு கட்டிக்கொண்டு அங்கே குளித்தபோதும் அவர்கள் கலாச்சாரத்தை மதிக்கவும் என்னால் முடிந்தது.
வெளியே வந்தபோது நீச்சல்குளத்தில் சாதாரணமாக காட்சியளித்த அதே ஆண்களும், பெண்களும் ஆடை அலங்காரத்தில் மிகவும் அழகாக தோற்றமளித்தனர். தொப்பைகள் பெல்டால் சுருக்கி கட்டப்பட்டிருந்தன. வழுக்கைகள் தொப்பியால் மூடப்பட்டிருந்தன. உடைகள் அவர்கள் அந்தஸ்தையும் செய்யும் தொழிலையும் வெளிக்காட்டின. குளத்தில் இதெல்லாம் தெரியவில்லையே? ஏன்?
கதவை திறந்து வெளியே வந்தேன். நாகரீக உலகில் கலந்தேன்.ஆடை அணிந்த மனிதர்கள் செல்வத்தை தேடிக்களைத்து வீடுதிரும்பிக் கொண்டிருந்தனர். போதிமரத்தடியில் அமர்ந்த அனுபவத்துடன் விடுதிக்கு திரும்பினேன்.
11 comments:
செல்வன், ராக்கி மவுண்டன் எங்க ஊர் வரைக்கும் வருது. இதன் நடு நடுவே நீங்கள் சொன்னது போல் பல அழகான ஊர்கள் உண்டு. இந்த மாதிரி சுற்றுலாத்தளங்களை அருமையாக பேணுகிறார்கள் இங்கே.
நன்றாக இருந்தது உங்கள் பயணக்கட்டுரை. செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல் என்றபாடல் (முள்ளும் மலரூம் படத்தில் இடம்பெற்றது) ஞாபத்திற்கு வந்தது
// காரோட்டி பழைய பிரிட்டிஷ் போர்வீரன் போல் உடை அணிந்திருந்தார்//
ஆ..நாங்க வாடகைக்காரை எடுத்தால் நாங்களே ஓட்டி செல்லவேண்டும் :)))
//எதிரே நீச்சல் உடையில் யுவர்கள், யுவதிகள், குழந்தைகள், கிழவர்கள், கிழவிகள் என நூற்றுக்கணக்கான பேர்.//
அவ்வளவு பேரை அவ்வளவு குறைந்த ஆடையில் பார்த்து பழக்கமில்லா நமக்கு சிறிது நேரம் கூச்சமாக இருக்கும். பிறகு பழகி போய்விடும்
//குளத்தில் கட்டிப்பிடித்து ஜலக்கிரிடை நடத்தும் காதலர்கள்,//
அடப்பாவி :)))
//மிகக்குறைந்த ஆடை அணிந்திருந்த பெண்களையும் யாரும் அங்கே ஊற்றுப்பார்க்கவுமில்லை//
இதெல்லாம் சகஜமப்பா இங்கே. வரும் கோடைக் காலத்திற்கு இப்பவே ஜட்டி கடை வியாபாரம் சூடு பிடித்துவிட்டது
//லாக்கர் ரூமில் நிர்வான மனிதர்களை கண்டபோது சுத்தமாக அருவறுப்பே வரவில்லை. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை நிர்வாணமாக அங்கே சிரித்து பேசிக்கொண்டிருந்தனர்.//
புத்தர் கண்ட நிர்வாணர்களோ :))))
சிவா
வாடகை கார் என்பது cab என்ற பொருளில் தான் குறிப்பிட்டேன்.அந்த குட்டி ஊரில் ஹெர்ட்சும், ஏவிசும் இருப்பதாக தெரியவில்லை.Downtown Mall'ல் கூட 15 கடைகள் தான் இருந்தன என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்:)
//அவ்வளவு பேரை அவ்வளவு குறைந்த ஆடையில் பார்த்து பழக்கமில்லா நமக்கு சிறிது நேரம் கூச்சமாக இருக்கும். பிறகு பழகி போய்விடும்//
ஆம் சிவா.அதுதான் நடந்தது.கலாச்சார அதிர்ச்சிதான் இது:))
//புத்தர் கண்ட நிர்வாணர்களோ :)))) //
புத்தர் சொன்னது மன நிர்வாணம்.மகாவீரர் சொன்னது உடல் நிர்வாணம்.இவர்கள் அடைந்தது மகாவீரரின் நிர்வாணம்:))
இப்போ ரொம்ப குளிராதோ? நல்லத்தான் பொழுதைக் கழித்து இருக்கீங்க. இப்போ என்ன விடுமுறை? முதல் முறை ஐஸ்லாந்தில் ஒரு பொது நீச்சல் குளத்திற்கு சென்ற பொழுது எனக்கு இந்த மாதிரி லாக்கர் ரூம் அனுபவம்தான்.
கொத்ஸ்
கொலராடோவில் இப்போ 62 டிகிரி (Farenheit) வெப்பம்.குளிர் எல்லாம் இல்லை.
இப்ப ஸ்ப்ரிங் ப்ரேக் விடுமுறை.
ஐஸ்லாந்தில் நீச்சல் அடித்தீர்களா?நல்ல அனுபவம் தான்.அங்கேயும் ஹாட் ஸ்ப்ரிங்க்ஸ் உண்டு என கேள்விப்பட்டுள்ளேன்.
செல்வன், சொல்ல மறந்துட்டனே. இங்கே உடற்பயிற்சி கூடத்தில் தினம் தினம் மஹாவீரர்களை சந்திக்கிறேன் ஒரு மஹாவீரனாக :))))
சத்தமாக சொல்லாதீர்கள் சிவா.சமன முனிக்கு கோவணம் கட்டிய புத்தி சிகாமணிகள் கோவணத்துடன் லாக்கர்ரூம்களை நோக்கி படை எடுத்துவிடுவார்கள்;)))
பல அமெரிக்கர்களுக்கு/அமெரிக்காவில் வாழ்பவர்களுக்கு இந்த மனப்பாண்மைதான் இருக்கும் போல- வாழ வந்துள்ளேன்,வாழுகிறேன்.
இங்கு வரும்/வாழும் பலரும் அப்படியே மாறி வாழகற்றுக்கொள்கிறார்கள்,அதானாலேயே மற்றவர்கள் என்ன நினைப்பார்களோ என்ற நினைப்பு இல்லாமல் தன் மனதிற்கு ஏற்றவாறு நடந்துகொள்கிறார்கள்.
ஏங்க அந்த ஹாட் ஸ்பிரிங் சுட்டி கொடுத்தீங்க??!! அப்படியே ஓடிப்போய் தொப் என்று குதிக்கலாம் போல உள்ளது.
சிங்கையிலும் நீச்சல் குள குளியல் அறையிலும் அவ்வப்போது பார்க்கலாம்.
ஆனா பூணூலை மட்டும் ஒரு மாதிரி பாக்கிறாங்கப்பா!! ;-))
வாங்க வடுவூராரே
அடுத்தவனுக்கா வாழ்ந்தால் அது நாடகம்.நமக்காக வாழ்ந்தால் தான் அது வாழ்க்கை.அதனால் தான் இங்குள்ள மக்கள் அடுத்தவனை பற்றி கவலைப்படுவதும் இல்லை.அடுத்தவன் விவகாரத்தில் தலையிடுவதும் இல்லை.
//ஏங்க அந்த ஹாட் ஸ்பிரிங் சுட்டி கொடுத்தீங்க??!! அப்படியே ஓடிப்போய் தொப் என்று குதிக்கலாம் போல உள்ளது.//
இங்கே ஒரு ட்ரிப் வாங்க.ஹாட் ஸ்ப்ரிங்க்ஸ் கண்டிப்பாக போகலாம்.அமெரிக்கா படிப்பு பற்றிய சுட்டியில் இங்கே வர முயற்சிப்பதாக கூறியிருந்தீர்கள்.நிச்சயம் அதை செய்யுங்கள்.
//சிங்கையிலும் நீச்சல் குள குளியல் அறையிலும் அவ்வப்போது பார்க்கலாம்.
ஆனா பூணூலை மட்டும் ஒரு மாதிரி பாக்கிறாங்கப்பா!! ;-)) //
:))))
நல்ல பயணக் கட்டுரை
250 க்கு வாழ்த்துக்கள்
நன்றி நாகையாரே.உங்கள் முதலாம் ஆண்டு வெற்றி விழாவுக்கும் வாழ்த்துக்கள்
Post a Comment