Wednesday, August 08, 2007

320.வாஷிங்டனில் ராஜாஜி

"வாஷிங்டன் டி,சியை எனது விமானம்(!) நெருங்கிக் கொண்டிருந்தது. பொன்மாலைப்பொழுதின் இனிய மாலை வெயிலில் நனைந்தபடி அந்திநேர சூரியனுக்கு பிரியாவிடை தந்துவிட்டு அலுமினியப்பறவையின் அடிவயிற்றிலிருந்து கீழிறங்கினேன்"

(சாயந்திரநேரம் வாஷிங்டன் ஏர்போர்ட்டுக்கு போய் சேர்ந்தேனு சொல்ல இத்தனை பில்டப்பா?இது ரொம்ப ஓவர்-அனானி பின்னூட்டம்)

ரோனல்ட் ரேகன் ஏர்போர்ட் ஏதோ மூன்றாவது உலக நாட்டின் ஏர்போர்ட் மாதிரி இருந்தது.சின்ன ஏர்போர்ட்.துரித உணவகங்களில் சுத்தமாக வெரைட்டியே இல்லை.ஒப்பீட்டளவில் டென்வர் விமான நிலையம் மிகப்பெரிது.பர்கர் கிங், பாண்டா எக்ஸ்பிரஸ் என பல வெரைட்டிகளில் அங்கே உணவு கிடைக்கும்.ஆனால் தலைநகரின் ஏர்போர்ட்டில் சான்ட்விட்சை தவிர எதுவும் கிடையாது.பேக்கேஜ் க்ளைமிலும் அதிக கூட்டம்,இட நெருக்கடி.

ஹில்டன் செல்ல ஷட்டில் இருக்கிறதா என தேடினேன்.எதுவும் கண்ணுக்கு படவில்லை.ஓட்டலுக்கு போன்போட்டு கேட்டால் ஷட்டில் இல்லை என்று சொல்லி விட்டார்கள்.அப்புறம் ஒரு டாக்சியை பிடித்து ஓட்டலுக்கு போனேன்.டாக்சி டிரைவர் இந்தியர்.போகும் வழியில் உள்ள லாண்ட்மார்க்குகளை சுட்டிக் காட்டிக்கொண்டே வந்தார்.வழியில் இருந்த வாட்டர்கேட் எனும் பில்டிங்கை காட்டினார்.வாட்டர்கேட் நிக்சனை கவிழ்த்த இடமாச்சே என அதிசயத்துடன் பார்த்துக்கொண்டே போனேன்.

ஹில்டன் ஓட்டலுக்கு போனால் லாபியில் செக்-இன் செய்ய வரிசையில் நிற்கவேண்டும்.15 நிமிடம் வரிசையில் நின்றால் ஒரு ஸ்மைலோ, "ஹர் ஆர் யூ டுயிங் டுடே?"வோ கூட கிடையாது.'வாட் கேன் ஐ டூ ஃபார் யூ?" என நேரடியாக பிசினசுக்கு வருகிறார்கள்.போகும்போதும் ஒரு "ஹாவ் அ நைஸ் டே" கிடையாது.

எலெவேட்டருக்கு தவமிருக்க வேண்டும் போலிருந்தது.சுமார் 10 நிமிடங்கள் தவமிருந்து தான் மேலே போக எலவேட்டர் கிடைத்தது என்று சொன்னால் நம்ப கடினமாக இருக்கலாம்.ஆனால் தலைநகரின் ஹில்டனில் இதுதான் நிலைமை.ரூமிலும் அதிக இடவசதி இல்லை.பெட், பாத்ரூம், காபி மெஷின்,டிவி- இவ்வளவுதான்.

தலைநகரில் வெயில் கொளுத்தி எடுக்கிறது.புதரகத்தில் பல மாநிலங்களில் வெயில் 111, 119 என அடிக்கவிருப்பதாக வெதர் சேனல் சொல்லியிருந்தது.கொளுத்தும் வெயிலில் அறை அனலாக தகித்தது.ஏசியை திருகினால் 71.5 டிகிரிக்கு கீழே போக மறுத்தது.ரூம் சர்வீசை கூப்பிட்டு புகார் செய்தவுடன் ஏசியை ரிப்பேர் செய்ய ஆளை அனுப்பினார்கள்.வந்து பார்த்தவர் "இந்த ஓட்டலில் எந்த அறையிலும் 71.5 டிகிரிக்கு கீழே ஏசியை திருக முடியாதபடி புரக்ராம் செய்துள்ளார்கள்" என தெரிவித்தார்"

இது போல் கிறுக்குத்தனத்தை எந்த ஓட்டலிலும் கேள்விப்பட்டதில்லை என்பதால் அதிர்ச்சி அடைந்தேன்.$80 வாடகை வாங்கும் சூப்பர் எட்டு மோட்டலில் கூட இதுபோல் செய்வதில்லை.கரண்டை இப்படித்தான் மிச்சம் பிடிக்க வேண்டுமா என்ன?

இந்த வெயிலில் 71.5 டிகிரியில் தூங்க முடியாது, கம்ஃபர்ட்டரை போர்த்தினால் மேலும் வெப்பம் அதிகரிக்கும் போன்ற வாதங்களை எடுத்து வைத்தவுடன் வேறு ஏற்பாடு செய்கிறேன் என்று சொல்லி கீழே போனவர் கொஞ்சநேரம் கழித்து ஒரு ஃபேனை கொண்டுவந்து அறையில் வைத்தார்.

ஃபேன் காற்றில் தூங்கவா இந்த வாடகை வாங்குகிறீர்கள் என திட்டியபடி ரூமை பூட்டிவிட்டு சாப்பிட கிளம்பினேன்.ஓட்டலில் ஒரே ஒரு ரெஸ்டராண்ட் தான் இருந்தது.அதில் எதிர்பார்த்தபடி எந்த சைவ உணவும் இல்லை.வெளியே போய் தேடியதில் ஒரு இந்திய உணவகம் கண்ணில் பட்டது.மென்யூ கார்டை வாங்கியதும் மயக்கமே வருவது போல் விலை.தலைநகரமாச்சே, விலை அப்படி இப்படித்தான் இருக்கும் என சமாதானம் சொல்லிக்கொண்டு ஆர்டர் செய்தபின் உணவு சுத்தமாக நன்றாக இல்லை.தண்டம்.

அடுத்தநாள் காலை கேபில் ஏறி ஜூவுக்கு போனேன்.போகும் வழியில் "ராஜாஜி உணவகம்" கண்ணில் பட்டதும் சிரிப்பு வந்துவிட்டது.நம்ம வலைபதிவு நண்பர்கள் இதை பார்த்தால் ஆக்ரோஷமாக பதிவு போடுவார்களே என நினைத்தபடி ஜூவுக்கு போனேன்.

ஜூவில் அட்ராக்ஷன் பாண்டா கரடிதான்.பாண்டாவின் கண்னாடி கூண்டுக்கு வெளியே நின்று போட்டோ எடுத்துக்கொண்டு, இன்வெர்டிப்ரேட்சை சுற்றி சுற்றிபார்த்துவிட்டு நடந்தால் வெயிலில் தலை சுற்றுவது போல் இருந்தது. வெண்டிங் மெஷின்களில் கிரெடிட் கார்ட் வாங்குகிறார்கள்.இந்த டெக்னாலஜி இன்னும் மற்ற ஊர்களில் அதிகமாக பரவவில்லை.

ஜூவை விட்டு வெளியே வந்து வெள்ளை மாளிகைக்கு கேபில் போனேன். வெள்ளைமாளிகையை பார்க்க டூரிஸ்ட்கள் முண்டியடித்தனர். ஏகப்பட்ட பேர் போட்டோ எடுப்பதால் அந்த வழியில் நடப்பதே சிரமம்."எக்ஸ்கியூஸ்மி" சொல்லிக்கொண்டே நடக்க வேண்டியிருக்கிறது.

நான் போன அன்று ஆப்கனிஸ்தான் ஜனாதிபதி ஹமீத் கர்சாய் வெள்ளை மாளிகை வந்திருந்தார்.வெள்ளைமாளிகை புல்வெளியில் அவரும் ஜார்ஜ் புஷ்ஷும் நிருபர்களுக்கு பேட்டி கொடுத்து கொண்டிருந்தனர்...பேட்டியை நான் பார்த்தேனா என கேட்காதீர்கள்..அன்றைக்கு சாயந்திரம் சி என் எனில் பார்த்தேன்:)

வஷிங்டனில் ஸ்மித்சோனியன்,லிங்கன் மெமோரியல், ஆர்ட் மியூசியம் என பார்க்க வேண்டிய இடங்களின் பெரிய பட்டியலையே கொடுத்திருந்தனர். ஆனால் எங்கும் போக முடியவில்லை.வெயில் மற்றும் போன வேலைபளு என அடுத்த நாலைந்து நாளுக்கு எங்கும் நகர முடியவில்லை. நேற்றுதான் ஊர் வந்து சேர்ந்தேன்.

Post a Comment