Sunday, May 27, 2007

292. மகாத்மா செல்வன்

வேகஸ் மெக்கேரன் விமான நிலையத்தில் இறங்கினேன். இறங்கியதும் விமான நிலையத்திலேயே சூதாட்ட வெண்டிங் மெஷின்கள் வரவேற்றன. நகருக்குள் நுழையுமுன்னரே அங்கே சிலர் உட்கார்ந்து தமது அதிர்ஷ்டத்தை சோதித்து கொண்டிருந்தனர்.

ஒரு வாரம் தங்க வேண்டியிருந்ததால் இரண்டு பெரிய சூட்கேஸ்கள் கொண்டு வந்திருந்தேன். (சூட்கேசுக்குள் என்ன இருந்தது என்ற ரகசியம் விரைவில் உடைக்கப்படும்:)..சூட்கெஸ்களில் பொருத்தப்பட்டிருக்கும் வீல்களும், விமான நிலையங்களில் இருக்கும் டிராலிகளும் போர்ட்டர் என்ற வர்க்கத்தையே கிட்டத்தட்ட ஒழித்து கட்டிவிட்டன. டிராலியில் வைத்து தள்ளிக்கொண்டு வெளியே வந்ததும் வெயில் சுள்ளென்று அடிக்க ஆரம்பித்துவிட்டது. விமான நிலையத்திலிருந்து ஓட்டல் செல்ல ஷட்டில் சர்வீஸ்...'

ஷட்டில் டிரைவர் நமது சூட்கேஸை எடுத்து உள்ளே வைக்கிறார். சிரித்த முகத்துடன் முகமன் சொல்கிறார். ஜோக்கும் அடிக்கிறார்.ஒவ்வொரு ஓட்டலுக்கும் பஸ் வரும்போது மைக்கில் அறிவிப்பு செய்கிறார். பஸ்ஸை நிறுத்தி சூட்கேசை எடுத்து தருகிறார். டாக்சி டிரைவரும் போர்ட்டரும் கலந்தது போன்ற ஒரு தொழில். டிப்ஸ் தந்தால் மகிழ்ச்சியுடன் பெற்றுக்கொண்டு நன்றி சொல்கிறார். சிலர் அவருக்கு டிப்ஸ் தராமல் போவதையும் காண முடிந்தது. கணக்கு போட்டால் ஒரு ட்ரிப்புக்கு எப்படியும் ஐந்து முதல் பத்து டாலராவது டிப்ஸ் கிடைக்கும் என்று தோன்றியது.ஒரு நாளைக்கு 10 ட்ரிப் தாராளமாக அடிக்கலாம் என்றாலும் மாதம் இதிலேயே 1500 முதல் 3000 கிடைக்கும். அதுபோக சம்பளம்....ஷட்டிலில் ஏறுபவர்களும் அவரை மரியாதையாக நடத்துகின்றனர். விளிம்புநிலை தொழிலாளி ஒருவர் மகிழ்வுடனும் நல்ல வாழ்க்கைதரத்துடனும் இருப்பதை காணும்போது சந்தோஷமாக இருந்தது.

ஓட்டலுக்கு போனவுடன் ரூமை செகின் செய்தவுடன் நம் ஊரில் வழக்கமாக இருக்கும் "ரூம் சர்வீஸ் பாய்" என்ற ஒருவரை நிஜமாக மிஸ் செய்தேன். ஓட்டலிலிருந்து ரூமுக்கு பெட்டிகளை உருட்டிக்கொண்டே போனேன். (சுமார் அரை கிலோமீட்டர்). கைவலி எடுத்துவிட்டது. அந்த வேலை எத்தனை கடினமானது என்பது புரிய ஒரு வாய்ப்பு என்று நினைத்துக் கொண்டேன். ஓட்டல் அறையில் நுழைந்தபோது அங்கே ஒரு ப்ரிட்ஜ் இருந்தது- சந்தேகப்பட்டமாதிரி மைக்ரொவேவ் அவன் இருக்கவில்லை. பெட்டியை திறந்து ரைஸ் குக்கரை எடுத்து அரிசி வைத்து ரெடிமேட் சாம்பாரை எடுத்து அதில் ஊற்றி சாப்பிட்டதும் பசி பறந்துவிட்டது. ஒரு பெட்டி முழுக்க உனவுப்பொருட்கள்தான். ஒருவாரம் வெளியே சாப்பிடுவது என்பது பட்ஜெட்டுக்கும், உடல் நலத்துக்கும் ஒத்துவருமா சொல்லுங்கள்:)..(கஞ்சன் என்று யாரப்பா முனகுவது?)

சாப்பிட்டுவிட்டு ஊர் சுற்ற கிளம்பினேன்.தெருக்களில் பெர்முடா, பச்சை டிஷர்ட், கூலிங்க்ளாஸ், தொப்பி அணிந்தவர்கள் நின்று வருகிற, போகிறவர்களுக்கு எல்லாம் துண்டு பிரசுரங்களை கொடுத்து கொண்டிருந்தனர். என்னவென்று வாங்கிப் பார்த்தால் உலகின் பழமையான தொழிலுக்கு விளம்பரம்.

ஒரு மணிநேர கம்பனிக்கு $69. போன் செய்தால் நமது ரூமுக்கே 20 நிமிடத்தில் வந்து விடுவார்களாம். வெறும் டான்ஸ் என்றால் அதற்கு தனிரேட். எந்த வியாதியும் இல்லை என்று உத்திரவாதம். இதுவும் ஒரு விளிம்புநிலை தொழில்தான்...தெருவில் நின்று எந்த கூச்சமும் இன்று பாம்ப்லெட் கொடுக்கின்றனர். அவர்களை யாரும் வெறுப்புடன் பார்க்கவில்லை. இவர்களும் தொழிலில் ஒரு நேர்மையை கடைபிடித்தனர். குடும்பத்துடன் போகும் ஆண்களிடம் அந்த விளம்பரங்களை கொடுக்கவில்லை. பெண்களிடமும் கொடுக்கவில்லை. அரசால் அங்கீகரிக்கப்பட்ட தொழில்..அந்த $69ல் இவர்களுக்கும் கமிஷன் இருக்குமா அல்லது துண்டுபிரசுரத்தை கொடுக்க மணிக்கு இத்தனை ரேட் என்பதா என தெரியவில்லை.

அவர்களில் இளைஞர்கள் பலர் இருந்தனர். நடுத்தர வயதினர் பலர் இருந்தனர்...இயந்திரம் போல் தலையை குனிந்துகொண்டு பாம்ப்லெட் கொடுப்பவர் இருந்தனர்...பெருமையுடன் பாம்ப்லெட்டை தந்து வாங்குபவர்களிடம் ஜோக் அடிப்பவர்கள் சிலரும் இருந்தனர்..அதில் ஒருவர் வழியில் போகும் பெண்களிடம் கூட ஜோக் அடித்தார்...அவருக்கு அவர்கள் சிரித்தபடி பதில் சொல்லிப்போனார்கள்.காபரே நடனத்துக்கு டிக்கட் வாங்கிய பெண்களும் இருந்தனர்...ஒப்பீட்டளவில் சமூகத்தில் ஓரளவு மரியாதையுடன் இவர்களும் இருப்பதாகவே தோன்றியது..

சூதாட்ட விடுதிகளில் மதுவும், உணவும் பரிமாறுவது கவர்ச்சியான உடையணிந்த பெண்கள்....டிப்ஸ் அதிகம் கிடைக்கும் வேஅலி இது.இந்த தீமிலேயே பிரபலமடைந்த ஹூட்டர்ஸ் எனும் உணவுவிடுதி புதரக்மெங்கும் உண்டு.

வேகசின் தெருக்களில் தள்ளுவண்டியில், நடைபாதை வியாபாரம் ஜோராக நடைபெறுகிறது. டிஷர்ட், ஐஸ்க்ரீம், கிளியோடு போடா எடுப்பது...பெப்சி என அனைத்தும் விற்கிறார்கள். பெருமுடா மட்டும் அணிந்த ஆண்கள் கொளுத்தும் வெயிலில் கூடையில் பெப்சியும் தண்ணிரும் விற்கிரார்கள். நம்மூர் நடைபாதை வியாபாரம்தான்...ஆனால் நல்ல வரும்படி கிடைக்கும் என்று தோன்றியது. கவர்ச்சியான உடையில் கொளுத்தும் வெயிலில் பெண்களும் இதை செய்கின்ரனர். பாவமாக இருந்தது.. ஆனால் நிழற்குடையின் கீழே அமர்ந்து ரோட்டை அடைககமல் தான் விற்கின்றனர்....

ஒரு ஷாப்பிங்மாலில் நுழைந்து இலவசமாக கிளிகளை வைத்து வித்தைகாட்டுகிறவர் ஒருவரின் (ஜோ க்ராதோவ்ல் ) ஷோவை பார்த்தேன். 15 நிமிடம் ஷோ. ஷோவுக்கு எப்படியும் $20 டிப்ஸ் கிடைக்கும் என தோன்றியது. வேகசின் பல ஓட்டல்களில் ஷோ நடத்துவதாக சொன்னார்.கிளிகளை நன்கு பராமரிக்க செலவு அதிகம் ஆவதாக சொன்னார்..கிளிகளின் இறகை வெட்டாமல் தான் வளர்க்கிறார். அவையும் கொழு,கொழு என இருந்தன....

இரவில் Treasure island எனும் ஓட்டலுக்கு வெளியே தெருவில் ஒரு நடன/நாட்டிய நிகழ்ச்சி நடந்தது. சுமார் 20 பெண்கள் இரண்டு ஆண்கள் கலந்துகொண்ட ஒரு ஷோ..கூட்டம் முண்டியடித்தது....நம் ஊரு தெருக்கூத்தாடி வேலைபோல்தான் இதுவும்....ஆனால் நல்ல உடைகள்..சம்பளம்..தொழில்பாதுகாப்பு..கூட்டமும் கமெண்ட் அடிக்காமல் ரசித்தது..கைதட்டி மகிழ்ந்தது...

விளிம்புநிலை மக்களுக்கு வேகஸ் நன்கு வருமானம் தருகிறது. மரியாதை அளிக்கிறது. இப்போது சொன்ன இவர்கள் இல்லாவிட்டால் அந்த பாலைவன நகருக்கு மக்கள் யாரும் வரமாட்டார்கள். விபச்சாரமும், பெண்ணுடலும், சூதாட்டமும் இல்லாவிட்டால் வேகஸ் வெறும் பாலைவனம்தான்....சூதாட்ட விடுதிகளை நடத்துபவர்கள் பில்லியனில் சம்பாதிக்கிறார்கள்....இதோ இவர்கள் ஆயிரத்தில் சம்பாதிக்கிறார்கள்....ஆனால் டூரிஸ்ட் முதல் விளிம்புநிலை மக்கள் முதலாளி என அனைவரும் மகிழ்வோடுதான் இருக்கிறார்கள்....ஒவோருவரும் மற்ரவரை மரியாதையுடன் நடத்துகிறார்கள்....

இந்த நகருக்கு இருண்ட பக்கம் இருக்கிறதா?ஆம்...சூதுக்கு அடிமையாகி கைகாசு அனைத்தையும் தொலைத்தவர்கள் பலருண்டு...போதைமருந்து யக்கத்தில் தெருக்களில் திரிகிறவர்கள் உண்டு..தெருக்களில் கார்கள் ஹாரன் அடிப்பது டென்வரில் கேட்கவே முடியாது.ஆனால் இங்கே வாகன ஓட்டிகள் அடிக்கடி ஹாரன் அடிக்கிரார்கள். (ஹாரன் அடிப்பது இங்கே rude behavior என கருதுவார்கள்)

வேகஸின் மிகப்பெரிய ஓட்டலான சீசர்ஸ் பேலசின் நடுமத்தியில் பிரம்மாவுக்கு வெண்பளிங்கில் அழகான ஒரு கோயில் கட்டியிருக்கிறார்கள். தெற்காசிய நாடுகள் அனைத்திலும் தொழப்படும் கடவுள் என்று கல்வெட்டு வைத்து திருநீறும் ஊதுபத்தியும் எலுமிச்சம்பழமும் வைத்திருக்கிறார்கள். பலபேர் அங்கே வந்து வணங்கி தியானித்து போவதை பார்க்க முடிந்தது. அந்த சிலையை வழங்கியவர் வியட்னாமிய தம்பதியினர் என்று தெரிந்தது. பாவங்களின் தலைநகரத்துக்கு இப்படி ஒரு ஆன்மிக மறுபக்கம்....

கலவையான உணர்வுகளுடன் அறைக்கு திரும்பினேன். அறையை ர்ரும்சர்வீஸ் பெண் ஒருவர் சுத்தம் செய்து வைத்திருந்தார். அவரது பெயர் க்றிஸ்டி என்பது அவர் விட்டு சென்ற சீட்டிலிருந்து தெரிந்துகொண்டேன். அங்கே தங்கியிருந்த ஏழு நாளும் அவரை பார்க்கவே இல்லை. ஆனால் அறை தினமும் மிக நன்றாக சுத்தம் செய்யப்பட்டிருந்தது.வரும்போது அறையில் கணிசமான டிப்ஸ் வைத்துவிட்டு வந்தேன்.

டென்வர் வந்து சேர்ந்ததும் அன்று இரவு டென்வர் மலையாள சங்கம் நடத்தும் நடிகை திவ்யா உண்ணி நடன நிகழ்ச்சிக்கு டிக்கட் கிடைத்தது....திவா உண்ணி டெக்சாஸில் குடியேறியிருக்கிறார். அங்கே நாட்டியபள்ளி நடத்துகிறார். மோகினி ஆட்டம் என்ற நடனத்தை ஆடினார்... கல்யாணத்துக்கு பிறகும் திவ்யா உண்ணி அப்படியே இருந்தார். எதுவும் பேசவில்லை. டான்ஸ் மட்டும் ஆடிவிட்டு மேடையை விட்டு இறங்கிப் போய்விட்டார்.

திரும்பிவரும் வழியில் ஒரு ரெஸ்டாரண்டில் நுழைந்தேன்...கூட்டம்...உனவுவகைகளை வாங்கிக்கொண்டு பார்த்தால் அனைத்து டேபிளிலும் ஆட்கள் இருந்தனர். ஒரு டேபிளில் ஒரு வயதான அம்மா மட்டும் இருந்தார்.. அங்கே உட்கார அவரிடம் அனுமதி கேட்காலாம் என்று போய் கேட்டேன்.

"நோ" என்றார். வெறுப்புடன் முகத்தை திருப்பி கொண்டார்....

நிறவெறி...

அது இன்னும் பூமியில் அழியவில்லை....

இங்கே எத்தனை லட்சம் சம்பாதித்தாலும் நான் ஒரு கறுப்பன் தான்....நம் ஊரில் கலக்டராக இருந்தாலும் சில சமயங்களில் ஒருவருக்கு அவரது ஜாதி நினைவூட்டப்படும்...

சிறிதுநேரம் தயங்கி நின்றேன்..அதன்பின் நாற்காலியை இழுத்துப்போட்டு அந்த அம்மையார் முன்பு உட்கார்ந்தேன்.

வெறுப்புடன் அவர் எழுந்தார். முனகிக்கொண்டே இடத்தை காலி செய்தார்.

சாதாரண மனிதனாக சுற்றுப்பயணத்தை துவக்கிய நான் மகாத்மாவானது இப்படித்தான்

மகாத்மாக்கள் பிறப்பதில்லை..உருவாக்கப்படுகிறார்கள்

Post a Comment