Friday, April 13, 2007

267.நடிப்புக்கடவுளும் சில நாத்திகர்களும்

ரஜினியின் சிவாஜி வெளிவர இருப்பதை தொடர்ந்து ஊடகங்களில் அழுகுரல்களும் ஒப்பாரிகளும் ஆரம்பித்து விட்டன.வழக்கமாக ஒவ்வொரு ரஜினி படத்துக்கும் நடக்கும் சம்பிரதாயம் இது என்பதால் பெரிதாக அலட்டிக்கொள்ள தேவை இல்லைதான். இருந்தாலும் இந்திய திரையுலகின் மிகச்சிறந்த படைப்பு வெளிவரும் நேரத்தில் காந்தாரிகளின் ஒப்பாரிகளும், மூளி அலங்காரிகளின் ஓலங்களும் ஒலிப்பது காதுக்கு இதமாகத்தான் இருக்கிறது.

மகாபாரதத்தில் ஒரு கதை உண்டு.அதாவது குந்திக்கு பிள்ளை பிறந்துவிட்டது என்று கேள்விப்பட்டதும் பிள்ளை பெறாத காந்தாரி அம்மிக்கல்லை எடுத்து வயிற்றில் இடித்துக்கொண்டு அழுதாளாம்.அந்தமாதிரி தான் ரஜினியின் சிவாஜி வெளிவர இருப்பதால் பொறாமையில் நவீன காந்தாரிகள் கறுப்புத்துணியில் கண்ணைக் கட்டிக்கொண்டு குருடாகி "லபோ..திபோ" என வைக்கும் ஒப்பாரியும் சுருதிபேதமாக ஒலிக்கிறது.

இந்த காந்தாரிகள் யார் என்று பார்த்தால் பொதுவாக இவர்களிடம் காணப்படும் ஒற்றுமை இவர்கள் பொதுவாக விரக்தி அடைந்த ஜென்மங்கள் என்பதுதான்.இந்த விரக்தி தான் இவர்களை வெற்றி அடைந்த மனிதர்களை இகழத்தூண்டுகிறது.இது புரிந்து கொள்ளக்கூடிய உணர்வுதான் என்பதால் பொதுமக்கள் இவர்களை சற்று அனுதாபத்துடனே பார்ப்பது வழக்கம்.இந்த விரக்தி ஏன் உருவானது என்று பார்த்தால் இவர்கள் மக்களால் கைவிடப்பட்டது தான் காரணம் என தெரியவருகிறது.

இந்த விரக்தி அடைந்த மனிதர்களில் முதல்வகையினர் அறிவுஜீவி ரசிகர்கள் என்று தம்மைத்தாமே அழைத்துக்கொள்ளும் வகையறாக்கள்.ரிலீசே ஆகாமல் டப்பாவுக்குள் முடங்கி தயாரிப்பாளரை முச்சந்தியில் நிற்கவைத்து பிச்சை எடுக்க வைத்த டப்பா தமிழ்படங்களை இவர்கள் விரும்பி ரசிப்பது வழக்கம்.இவர்கள் போகும் தியேட்டர்களில் பொதுவாக இவர்களும் கூட்டம் இல்லாத இடம் தேடி வந்த காதல்ஜோடிகளும் தான் இருப்பது வழக்கம்."ஈரான் படத்தை பார்", "கஜகஸ்தான் படத்தைப்பார்" என உலகமேப்பில் எங்கேயோ பதுங்கி இருக்கும் ஐநாசபை தலைவருக்கு மட்டுமே தெரியக்கூடிய தேசங்களின் படங்களை மட்டும் ரசிப்பது இவர்களின் வழக்கம்.ரஜினி, எம்ஜிஆர் என்ற பெயர்களைக் கேட்டாலே இவர்கள் பல்லை நற,நற என கடித்துக் கொண்டு "சிட்டிசன் கேன், பைசைக்கிள் தீவ்ஸ்" என்று தமிழ்நாட்டில் எவனுமே பார்க்காத படங்களை உதாரணம் காட்டி தமிழில் இந்தமாதிரி படங்கள் வராமல் இருக்க காரணம் ரஜினியும், எம்ஜிஆரும் தான் என்று உரைப்பது இவர்கள் வழக்கம்.(அகிரா குரொசோவா, செவன் சமுராய் என இவர்கள் புலம்ப,புலம்ப ஜப்பானில் ரஜினிபடங்கள் வசூலைக்குவிப்பது வேறுவிஷயம்.இவர்கள் தலையில் தூக்கி வைத்து ஆடும் மலையாள சூப்பர் ஸ்டார்கள் ஷகீலாவையும், ஷர்மிலியையும் போட்டிபோட்டு ஜெயிக்க முடியாமல் தோற்றவர்கள். இப்போது கேரளாவில் தமிழ் மசாலாப்படங்கள் தான் பட்டையை கிளப்புகின்றன)

இந்த அறிவுசீவிகளை அடையாளம் கண்டுபிடிப்பது அவ்வளவு கடினமல்ல. வாங்கிய நாளிலிருந்து இன்றுவரை துவைக்காத ஜிப்பா, தோளில் தொங்கும் ஜோல்னாபை (உள்ளே என்னதான் வைத்திருக்கிறார்களோ?), பிரதாப் போத்தன் போட்டிருப்பது போன்ற உருண்டை கண்ணாடி ஆகியவற்றை வைத்து இவர்களை எளிதில் அடையாளம் கண்டு கொள்ளலாம்.இவர்கள் ஊர் முழுவதுக்கும் அட்வைஸ் செய்யும் தகுதி உடையவர்கள் என்பதால் இவர்களுக்கு நமது அட்வைஸ் தேவைல்ல்லை. இருந்தாலும் "ஈரான் படஙளைப்பார், நைஜீரியப்படங்களைப்பார், டோக்கியோவைப்பார்" என உளறும் இவர்களைக்கண்டு இரக்கப்பட்ட வள்ளுவப்பெருந்தகை அன்றே ஒரு குறளை பாடிவைத்தார்.

"குழலினிது யாழினிது என்பர் தம்மக்கள்

மழலைச்சொல் கேளாதவர்"

அடுத்த வகை காந்தாரிகள் திரைத்துறையில் இருக்கின்றனர்.இந்த காந்தாரிகள் நினைப்பு தான் பிழைப்பை கெடுக்கும் என்ற வகையறாவை சேர்ந்தவர்கள். ரஜினிபடம் ஓடுவதால் தான் இவர்கள் படம் ஓடுவதில்லை என்று ஒரு நினைப்பு இவர்களுக்கு. மக்களால் முற்றிலும் கைவிடப்பட்ட இவர்களின் திரைப்படங்களை சன்டிவியில் ஓசியில் பார்க்கக்கூட ஆளில்லை என்பதால் விரக்தி அடைந்த இவர்கள் ரஜினிபட வசூலைக்கண்டு ஏஞ்சலினா ஜோலிக்கு பிள்ளை பிறந்த செய்தியை அறிந்த ஜெனிஃபர் ஆனிஸ்டனின் மனநிலையில் இருப்பது வழக்கம். வீராச்சாமி தந்த டி.ஆர், வில்லன் நடிகர் மன்சூர் அலிகான், புரட்சிவீரர் வேலுபிரபாகரன் ஆகியோர் இந்த வகையறாவை சேர்ந்தவர்கள். (வேலு கடைசியில் திருந்தினார் என வைத்துக்கொள்ளுங்கள்). இவர்களும் ஒவ்வொரு ரஜினிபட ரிலீசின்போதும் தங்கள் படங்களை போட்டிக்கு திரையிடுவேன் என காமடி செய்வது வழக்கம்.

அடுத்தவகை மூளி அலங்காரிகள் மக்களால் முற்றிலும் கைவிடப்பட்ட சில தனித்தமிழ் இயக்கங்கள். ரஜினி ஒரு கன்னடர் என்று சொல்லி இவர்கள் ரஜினிமீது கடும் கோபமாக இருப்பார்கள் (இவர்கள் பொதுவாக எல்லோர் மீதும் கடுங்கோபத்தில் தான் இருப்பார்கள்). அதுபோக ரஜினி தன் படத்தில் ஆன்மிக கருத்துக்களை சொல்வதால் ரஜினிபட ரிலீசின்போது இவர்கள் பைல்ஸ் வந்தவன் மிளகாய்ப்பொடி மூட்டைமேல் உட்கார்ந்தது போன்ற எரிச்சலை அடைவது வழக்கம்.."பெரியார் ஆனதென்ன ராஜாஜி" என்ற பாடல்வரியை 'தெய்வகுத்தம்' என்று சொல்லி அதை எடுக்கவைத்து அந்தவரியை தமிழ்நாடெங்கும் புகழடைய வைத்த இந்த பிரகஸ்பதிகள் இப்போது "காவிரி" என்ற வார்த்தை ரஜினிபடப் பாடலில் வருவதை வைத்து "காவிரியைப் பற்றி பாட ரஜினிக்கு என்ன தகுதி இருக்கிறது?" என்ற புல்லரிக்க வைக்கும் கேள்வியை எழுப்பிக்கொண்டு மக்கள் மன்றத்தில் வலம் வருகின்றனர். (சிவாஜியின் தஞ்சை, திருச்சி ஏரியா வசூல் தான் இவர்களுக்கு மக்கள் கொடுக்கும் பதிலாக இருக்கும்).

இதுபோக இன்னும் சில புல்லரிக்க வைக்கும் கேள்விகளை எழுப்பிக்கொண்டு விரக்தி அடைந்த பல இம்சை அரசர்கள் சிவாஜி ஓடவிருக்கும் அடுத்த மூன்றாண்டுகளுக்கு ஊடகங்களில் புலம்பித்தீர்க்க இருக்கின்றனர்."குமரிகள் கொஞ்சி விளையாடும் மண்டபத்தில் என்ன கிளவி இழுத்துக் கொண்டிருக்கிறாய்" என மக்களும் எரிச்சல் அடையத்தான் போகின்றனர்.

(Key words: Movies, Tamil)

Post a Comment