விஷால் படத்தை இதுவரை பார்த்ததில்லை என்றாலும் அவரைப்பற்றி நல்லமுறையில் கேள்விப்பட்டதால் சிவப்பதிகாரம் படத்தை நம்பிக்கையுடன் பார்க்க துவங்கினேன்.
படம் அருமையாக துவங்கியது.நாடோடிப்பாடல் ஆராய்ச்சிக்காக கிராமத்துக்கு வருகிறார் ஓய்வுபெற்ற பேராசிரியர் ரகுவரன்.அவரது மகள் மம்தா.ஆராய்ச்சிக்கு உதவ ரகுவரனின் முன்னாள் மாணவன் விஷால் என கதை துவங்குகிறது.காதலுக்கு மிக பொருத்தமான களம், ஆனால் என்ற சலிப்புடன் படத்தை தொடர்ந்து பார்த்தேன்.இதில் அடுத்தடுத்த காட்சிகளை யூகிக்க முடிகிறதா என்று பார்த்தால்...முடிந்தது.வழக்கமாக முதலமைச்சர் கனவில் இருக்கும் கதாநாயகர்கள் நடிக்கும் படங்களில் கதாநாயகிகள் காதலில் விழ கதாநாயகனின் வீரம், பெருந்தன்மை ஆகியவை காரணமாக காட்டப்படும்.தாங்கள் அழகாக இருப்பதாக நினைத்துக்கொள்ளும் கதாநாயகர்கள் நடிக்கும் படங்களில் கதாநாயகனின் அழகைக் கண்டு கதாநாயகி மயங்குவதாக காட்டுவார்கள்.மோதலுக்குபின் காதல் என்பது எல்லா படங்களிலும் வரும் உத்தி.
விஷால் முதலாம் வகையறா நடிகர்களின் பார்முலாவை பின்பற்றுகிறார்.இவருக்கு பின்னால் தான் கதாநாயகி சுற்றுகிறார்.கறுப்பான நாயகனுக்கு பின்னால் வெள்ளைத்தோல் நாயகியை சுற்றவைத்து (அமாவாசை பவுர்ணமி பார்முலா) இடைவேளைக்குபின் காதலை ஏற்கும் ரஜினி, விஜயகாந்த் பார்முலாவை இவரும் கடைபிடித்தார்.கறுப்புகலரை புகழ்ந்து ஏதாவது பாடல் வரும் என்று பார்த்தேன், நல்லவேளை வரவில்லை. அடுத்தடுத்த படங்களில் வருமோ என்னவோ?
நாடோடி பாடலை வைத்து ஆராய்ச்சி சேய்யும் காட்சிகளை நன்றாக எடுத்துள்ளனர்.மிக இயல்பாக பிண்ணனி இசை இல்லாமல் அசல் கிராமத்து மனிதர்களை அவர்கள் சொந்த குரலில் பாடவைத்து எடுத்த காட்சி போல் தோன்றியது.அவர்களை எடுத்த இண்டர்வியூவும் இயல்பாக இருந்தது. ஓரிரண்டு பாடல்களை பாடவிட்டு அதன்பின் கதாநாயகியின் கனவில் பாடலை தொடரும் தந்திரம் இங்கு நடைபெறாதது வித்யாசமாக இருந்தது.
ஹீரோவின் அஸிஸ்டெண்டாக கஞ்சாகருப்பு.வழக்கமான பார்முலா வேடம் தான் என்றாலும் இந்த ரோலில் வடிவேலு, கவுண்டர், விவேக் ஆகியோர் இருந்திருந்தால் காட்டியிருக்க கூடிய வெரைட்டி கருப்பிடம் மிஸ்ஸிங்.ராம் படத்தில் இவரை அமீர் அருமையாக வேலை வாங்கியிருப்பார். இந்த படத்தில் கருப்பு சிரிப்பு வரவைக்க கடுமையாக முயலுகிறார்.சிரிப்புதான் வரமறுக்கிறது.
ரகுவரனின் புத்தகத்தை வெளியிட விஷால் புத்தக கடைக்கு போகும்வரை ஃபார்முலா கிராம படம்போல் செல்கிறது.அதன்பின் டிராக் மாறுகிறது. அரசியல்வாதிகளை ஒவ்வொருவராக கொல்ல ஆரம்பிக்கிறார். ஏன் என்று சொல்வதில்லை என்றாலும் காரணத்தை யூகிப்பதில் ஒன்றும் சிரமம் இருக்க போவதில்லை அல்லவா? படத்துக்கு சோகமுடிவு என்று அப்போதே தெரிந்துவிட்டது என்றாலும் 'சரி மாமூல் மசாலாவை எப்படியாவது வித்யாசமாக சொல்கிறார்களா பார்க்கலாம்' என்ற ஆவலில் மேலும் பார்த்துக் கொண்டிருந்தேன்.
கொலைகளில் பெரிதாக வித்யாசம் காட்டுவதில்லை.கூட்டத்தோடு கூட்டமாக போய் பெரும்கூட்டத்தின் நடுவே பொறுமையாக நிதானமாக அரசியல்வாதிகளை நிறுத்தி சிவப்பேறிய விழிகளால் அவரை முறைத்து மெதுவாக கத்தியை எடுத்து குத்தி அதன்பின் கத்தியை துடைத்து அதிரும் பிண்ணனி இசையுடன் ஸ்லோமோஷனில் நடந்து மறைகிறார் ஹீரோ.கதையிலோ, படத்திலோ, காட்சிஅமைப்பிலோ ரியாலிட்டி இருக்க வேண்டும் என்ற கோட்பாட்டில் சுத்தமாக நம்பிக்கை இல்லாத ,காட்சி அமைப்பிலும் திரைக்கதையிலும் மட்டுமே ஒரு படத்தை அளவிடவேண்டும் என்ற கோட்பாடு உடைய எனக்கு இந்த காட்சிகளை இயக்குநர் ஒப்பேற்றிய விதம் சுத்தமாக பிடிக்கவில்லை. குறிப்பாக குற்ராலத்தில் அருவியில் கூட்டத்தோடு கூட்டமாக மந்திரியை கத்தியால் குத்திவிட்டு அருவிநீரில் நனைந்துகொண்டே கத்தியை செத்தவனின் வேட்டியில் துடைக்கும் காட்சி குபீர் என்று சிரிப்பைத்தான் வரவழைத்தது. அடுத்து கொட்டும் மழையில் குடை பிடித்துக் கொண்டு செடிக்கு தண்ணீர் ஊற்றும் காட்சி எதாவது படத்தில் வரும் என்று எதிர்பார்க்கிறேன்.
பிளாஷ்பேக் எப்போது வரும் என்று யோசித்துக் கொண்டிருந்தேன். இடைவேளைக்கு பின் "நீ ஏன் கொலை செய்தாய்?" என்று யாராவது கேட்டு அதன்பின் பிளாஷ்பேக்கை சொல்லி அதில் பிள்லைபூச்சியாக இருந்தவன் வில்லனால் பாதிக்கப்பட்டு கடைசியில் கத்திதூக்க வேண்டிய அவசியம் வலியுறுத்தப்பட்டு கடைசியில் கோர்ட்காட்சி அல்லது நீளமான் வசனம்+மெஸ்ஸேஜ் என்ற பார்முலாவை எதிர்பார்த்தேன். அது அப்படியே நடந்தது. (இதே பார்முலா கதையை மிக அருமையாக சொன்ன படங்களில் எனக்கு மிக பிடித்தவை திருப்பாச்சியும், ரமணாவும்,ஜென்டில்மேனும்)
ஓடும் ரயிலில் கன்னடபிரசாத் ஸ்டய்லில் நடக்கும் விபச்சாரம் இதுவரை சினிமாவில் காட்டப்படாதது. கன்னடபிராசத் பற்றி வெளிவந்த செய்திகளால் சினிமாவுக்கு கிடைத்த புது காட்சி அமைப்பு இது. ஓடும் ரெயிலில் நடக்கும் கொலை வழக்கமான கத்திகுத்து + பிண்ணனி இசை + ஸ்லோமோஷன்.
பிளாஷ்பேக்கில் விஷாலில் கல்லூரி மாணவர்கள் 40 பேரை அரசியல்வாதிகள் எரிக்கும் காட்சி பயங்கரபோர்.பிளாஷ்பேக் முழுக்க போர் தான்.எம்.எல்.ஏ வேட்பாளர் பட்டபகலில் சுவர் ஏறி குதித்து அவரே கல்லூரியை கொளுத்துகிறார்.
கடைசியாக மந்திரி ஒருவரை அழகர் திருவிழாவில் கொல்லும் காட்சியில் எந்த புதுமையும் இல்லை. அதற்குபிறகு பேசும் வசனங்களில் எந்த தெளிவுமில்லை."அரசியல்வாதிக்கு ஏதாவது தகுதி வேண்டும்" எனும் (ஒரே) உருப்படியான வாதத்தை முன்வைக்கிறார் இயக்குனர். "ஏதாவது செய்யணும் சார்" என்ற பஞ்ச் டயலாக்குடன் படம் முடிவடைகிறது.
மற்றபடி சிவப்பதிகாரம் என்று டைட்டிலை வைத்துவிட்டு அதில் சிவப்பு, கம்யூனிசம் என்று எதையும் சொல்லாமல் விட்டது மிகுந்த ஆறுதலை அளித்தது.
சிவப்பதிகாரத்தை விஜயகாந்த் படங்களை மதிப்பிட பயன்படுத்தும் அளவுகோளால் அளந்தால் ஏமாறமாட்டோம்.
7 comments:
:)) நம்ம ரெண்டனா... Sivappathikaram « Snap Judgment
Good review for a bad movie.
பாபாஜி, சுந்தர்ராஜன்
நன்றி
படம் அவ்வுளவு மோசம் இல்ல ஆனா பில்டப்பை கொஞ்சம் குறைச்சி இருக்கலாம்.
பில்டப்பை குறைத்தால் அப்புறம் எப்படி அடுத்த சூப்பர் ஸ்டாராவது சந்தோஷ்?:))ரஜினியின் நாற்காலிக்கு விஜய், அஜீத், விக்ரம் வரிசையில் இப்போது விஷாலும் போட்டியில் இருக்கிறார் போலிருக்கிறது
முதல் படம் நன்றாக இருந்தது.
இந்தப் படத்துல...
இறுதில வரும் வசனத்தை மட்டும்தான் பிடித்திருந்தது.
.
/"அரசியல்வாதிக்கு ஏதாவது தகுதி வேண்டும்" எனும் (ஒரே) உருப்படியான வாதத்தை முன்வைக்கிறார் இயக்குனர்.
/
/
"ஏதாவது செய்யணும் சார்" என்ற பஞ்ச் டயலாக்குடன் ../
பஞ்ச் டயலாக்கே ஏன் பாவமா சொல்றாரு?
குறிப்பா அரசியல வர்ரவங்களுக்கு qualification தேவை-கிறதை சொல்லறது.
தென்றல்,
நன்றி.அந்த பஞ்ச் டயலாக்கை பாவமாக சொல்ல காரணம் அது நிஜத்தில் நடக்காது என்பதால் இருக்குமோ?:))
Post a Comment