Thursday, October 19, 2006
200. வேண்டுதல் வேண்டாமை இலன்
கேட்பதை கொடுக்கும் கற்பக விருட்சம் ஒன்றுண்டு.ஒரு மனிதன் மீது அது மிகுந்த கருணை கொண்டு "உனக்கு என்ன வேண்டுமோ கேள்.தருகிறேன்" என்று சொன்னதாம்.
ரொம்ப நேரம் யோசித்த அந்த மனிதன் "என் கோவணம் கிழிந்து விட்டது.அதை தைக்க ஊசி நூல் கொடு" என்று வரம் கேட்டானாம்.
என்ன வகையான மூடன் இந்த மனிதன் என்று தோன்றுகிறதல்லவா?
கற்பக விருட்சத்திடம் கோவணமா கேட்பது?
இப்படிப்பட்ட புத்திசாலித்தனம் நிறைந்த அந்த மனிதன் யார் என்று கேட்கிறீர்களா?
நாம் தான்.
கடவுளிடம் நாம் என்ன வேண்டுகிறோம்?"எனக்கு வேலை வாங்கிக்கொடு, காசு பணம் கொடு, குழந்தை வேண்டும், நல்ல மனைவி வேண்டும்..." இப்படி எல்லாம் வேண்டுகிறோம்.
கற்பக விருட்சத்திடம் கோவனம் கேட்பதற்கும் கடவுளிடம் இதை கொடு,அதை கொடு என கேட்பதற்கும் என்ன வித்தியாசம்?
ஒன்றுமில்லை.ஒரு வித்தியாசமுமில்லை.இரண்டும் ஒன்று தான்.
இறைவனிடம் வேண்டப்பட வேண்டிய பொருள் யாது?
அவனைத்தான் கேட்க வேண்டும்."நீ தான் எனக்கு வேண்டும்.உன் அருள் தான் எனக்கு வேண்டும்" என மட்டுமே அவனிடம் கேட்க வேண்டும்.வேறெதை கேட்பதும் கோவணத்துனி கேட்பது போல்தானாம்.
ஒரு ராஜாவிடம் ஒருவன் போனானாம்.போய் ஒரு எலுமிச்சம் பழத்தை கொடுத்து "ராஜனே.உனக்கு இந்த எலுமிச்சம் பழத்தை கொடுத்து விட்டேன்.பதிலுக்கு எனக்கு கோடி பொன் கொடு" என்று கேட்டானாம்.
மகா குணவானான அந்த ராஜன் சிரி சிரி என்று சிரித்தானாம். அந்த எலுமிச்சம் பழத்தை வாங்கிக்கொண்டு கோடிப்பொன் கொடுத்து அனுப்பினானாம். கோடிப்பொன் கொடுத்தது எதற்கு? எலுமிச்சம் பழத்துக்காகவா கொடுத்தான்? அந்த ராஜன் மகா குணவான் என்பதாலும் கருணை உள்ளம் படைத்தவன் என்பதாலும் பொன்னை தந்தானே தவிர எலுமிச்சம் பழம் அவனுக்கு கால்தூசிக்கு சமானமல்லவா? அதை அவன் பெற்றுக்கொண்டது கூட அதை கொண்டு வந்தவனின் அன்பை மதித்துத்தானே தவிர வேறெதற்கும் அல்ல.
எலுமிச்சம் பழம் தந்த முட்டாள் யாரென்று கேட்கிறீர்களா?
அதுவும் நாம் தான்.
"கடவுளே உன் உண்டியலில் 101 ரூபாய் போடுகிறேன்.எனக்கு வேலை வாங்கிக்கொடு" என்று வேண்டுகிறோமே...இதற்கும் எலுமிச்சம்பழ கதைக்கும் என்ன வித்தியாசம் சொல்லுங்கள்?
இந்த 101 ரூபாய்க்ககவா அவன் நமக்கு வேலை வாங்கித்தருகிறான்?
நாம் 101 ரூபாய் போடுகிறேன் என வேண்டுவதும் 101 கோடி ரூபாய் உண்டியலில் போடுகிறேன் என்பதும் அவனை பொறுத்தவரை ஒன்று தான்.
இரண்டும் அவனை பொறுத்தவரை எலுமிச்சம்பழத்துக்கு சமம் தான்.
நாம் எதை கொடுத்தாலும் அது அவனுக்கு கால் தூசுக்கு சமம் தான்.
நம் அன்பைத்தவிர.
அது ஒன்றைத்தான் அவன் மதிப்பான்.அது வேண்டுமென்று தான் அவன் நம் பின்னால் ஓடி வருவான்.அதை மட்டும் அவனுக்கு கொடுப்போம்.எலுமிச்சம் பழத்தை தர வேண்டாம்
எதாவது வேண்டுமென்று கேட்டால் தப்பு என்றால் அப்புறம் எதைத்தான் கடவுளிடம் கேட்பது?
ஒன்றுமே கேட்ககூடாதாம். ஆசை இருப்பவனுக்கு தானே அது வேண்டும், இது வேண்டும் என தோன்றும்?அதை அறுத்தவனுக்கு வேண்டியது என்ன? ஒன்றுமே இல்லை தானே? ஈசனோடு இருக்கும் ஆசையை கூட அறுக்கவேண்டும் என்கின்றனர் சித்தர்கள். அப்படி செய்த ஒரு மகான் ஈசனுக்கே வரம் தரும் அளவுக்கு உயர்ந்தாராம். அவர் தான் சனத்குமாரர்.
சனத்குமாரர் என்பவர் மிகப்பெரும் ஞானி.ரிஷி.அனைத்தும் பரமேச்வர ச்வரூபம் எனும் அத்வைத நிலையை அடைந்தவர்.கல்லையும்,பொன்னையும் சமமாக பார்க்கும் மனப்பாங்கு பெற்றவர்.துன்பத்தையும் இன்பத்தையும் சரிசமமாக எண்ணுபவர்.
ஒரு நாள் சனத்குமாரர் ஒரு மரத்தின் அடியில் படுத்திருந்தார்.விண்ணில் சிவனும் பார்வதியும் சென்று கொண்டிருந்தனர்.சனத்குமாரரை கண்டதும் "இதோ ஒரு ஞானி" என சிவன் சொன்னார். "அப்படி என்ன சிறப்பான ஞானம் இவருடையது?" என அன்னை உமை கேட்டார்."இதோ காட்டுகிறேன்" என சொல்லி இருவரும் சனத்குமாரர் முன்பு தோன்றினர்.
சனத்குமாரர் சிவனையும் பார்வதியையும் பார்த்தார்.யாருக்கும் கிட்டாத
இறைதரிசனம், தவமிருந்து யாசிப்போருக்கே கிட்டாத இறை தரிசனம் அவர் கேட்காமலேயே கிடைத்தது. ஆனால் அவர் அதை கண்டுகொள்ளவே இல்லை. சிவனும் பார்வதியும் எதிரில் நின்ற போது அவர்களை ஒரு மரத்தை, செடியை எப்படி பார்ப்பாரோ அப்படித்தான் அவர் பார்த்தார். அனைத்தையும் பரமேச்வர ச்வரூபமாகவே பார்க்கும் அவருக்கு பரமேச்வரனும் பார்வதியும் எதிரில் நின்றது வித்த்யாசமாகவே தெரியவில்லை.
சிவனை அவர் வணங்கவே இல்லை.கண்டு கொள்ளவும் இல்லை.பேசாமல் இருந்தார்.
"என்னை நீ வணங்கவில்லையா?" என சிவன் கேட்டார்.
"எதற்கு வணங்க வேண்டும்?" என சனத்குமாரர் கேட்டார்.
"வணங்கினால் நீ எது கேட்டாலும் தருவேன்" என்றார் சிவன்.
"எனக்கு வேண்டியது எதுவுமில்லையே, நான் எதை வேண்டி உன்னை வணங்க வேண்டும்" என கேட்டார் சனத்குமாரர்.
"நீ வணங்காவிட்டால் என் கோபத்துக்கு ஆளவாய்" என்றார் சிவன்
"உன் கோபம் என் உடலை தான் பாதிக்கும்.உள்ளிருக்கும் ஆத்மாவை
பாதிக்காது.எனக்குள் இருப்பது பரமாத்மன். அவனை யாராலும் ஒன்றும் செய்ய முடியாது" என்று சொன்னார் சனத்குமாரர்.
இப்படி ஒரு ஞானியா என்று உமைக்கு அதிசயம் வந்து விட்டது.
"அவர் உனக்கு வரம் தராமல் போகட்டும்.நீ எனக்கு ஒரு வரம் கொடுப்பாயா?" என உமை ஆசையோடு கேட்டார்.
"என்ன வரம் வேண்டும்" என சனத்குமாரர் கேட்டார்.
"என் வயிற்றில் நீ பிள்ளையாய் பிறக்க வேண்டும்" என உமை வேண்டினார்.
அதை ஏற்ற மக ஞானியான சனத்குமாரர் முருகனாய் பிறந்தார்.
ref: நரசிம்மாச்சாரியார் உரை
அன்பு நண்பர் பாலாஜி விரும்பிய விஷ்ணு கதை. அவர் கேட்ட ராமகாதையை எழுத சிறிது தாமதமாகிறது. விரைவில் அதையும் எழுதுகிறேன். ரொம்ப நாள் கழித்து ஒரு ஆன்மிக பதிவு எழுத தூண்டிய பாலாஜிக்கு நன்றி.
அப்புறம் நாளைக்கு தீபாவளி வேற வருது. அன்பு நண்பர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த தீபாவளி வாழ்த்துக்கள். இன்று பொங்கும் மங்கலம் என்றும் தங்குக.
Subscribe to:
Post Comments (Atom)
43 comments:
செல்வன். 200வது பதிவிற்கு வாழ்த்துகள். பெருமாள் பெருமையை படிச்சுட்டு திரும்பவும் வர்றேன்.
நன்றி குமரன். உங்களுக்கு என் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.
Dear Selvan
Excellent post. Congrats on you double century. Happy deepavali.
Anbudan
Sa.Thirumalai
செல்வன்,
தீபாவளி வாழ்த்துக்கள்
செல்வன்,
மிக்க நன்றி!!!
ஆனால் இந்த குணம் நமக்கு சாத்தியம் இல்லைனு தோனுது.
அடுத்து ராமகாதையும் வரும்னு கேக்கும் போது ரொம்ப சந்தோஷம்...
தீபாவளி வாழ்த்துக்கள்!!!
செல்வன், நல்ல சாத்வீகமான பதிவு நன்றி.
தீபாவளி வாழ்த்துக்கள்.
200-ம் பதிவுக்கு வாழ்த்துக்கள்.
அருமையான படம். இதே போன்ற படம் பெரிய சைஸில் எங்கள் வீட்டில் இருந்தது. அதை ஞாபகப்படுத்தி விட்டீர்கள்.
அந்த தொடர்கதையை அம்போன்னு விட்டுட்டீங்களே...அதையும் ஆரம்பியுங்கள்.
திருமலை
மிக்க நன்றி. உங்களுக்கும் நண்பர்கள் அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துக்கள்
சிவா, பாலாஜி
நன்றி. ராமகாதை அடுத்து சீக்கிரம் எழுதுகிறேன்.ஆன்மிக பதிவும் இனி அப்பப்ப எழுத போறேன்
கொத்தனார்
நன்றி. எழுத ஆரம்பிச்சா அதை ஒரே மூச்சில் முடிக்சிடணும்னு தான் வெயிட்டிங்க இருந்துச்சு. நவம்பர் 10லிருந்து முழு மூச்சா எழுதி முடிச்சிடறேன். நடுவில கான்பரன்ஸுக்கு வெளியூர் போகணும். அதனால சின்னதா ஒரு கேப்
இந்த போட்டோ ஒரு புக்ழ பெற்ற ஓவியம்னு நினைக்கறேன். அதனால் தான் நிறைய இடத்தில் இருக்கு. எங்க வீட்டில் கூட இதே மாதிரி போட்டோ இருந்தது.
//நன்றி. ராமகாதை அடுத்து சீக்கிரம் எழுதுகிறேன்.ஆன்மிக பதிவும் இனி அப்பப்ப எழுத போறேன்//
மிக்க மகிழ்ச்சி!!!
பத்துக்கு ஒண்ணாவாது போடுங்க!!!
நிச்சயமா எழுதறேன் பாலாஜி. நன்றி.
அன்புடன்
செல்வன்
//"என் வயிற்றில் நீ பிள்ளையாய் பிறக்க வேண்டும்" என உமை வேண்டினார்.
அதை ஏற்ற மக ஞானியான சனத்குமாரர் முருகனாய் பிறந்தார்.//
இந்த செய்தி உண்மையிலே எனக்குப் புதிய செய்திதான் மிஸ்டர் செல்வன்
நன்றாக உள்ளது - நெகிழ்ச்சியாகவும் உள்ளது!
14
நன்றி வாத்தியார் ஐயா
வட இந்தியாவில் சனத்குமாரர் முருகனின் அவதாரமாக தான் கருதப்படுகிறார். அது பற்றிய புராண கதையே இது
அன்புடன்
செல்வன்
200 பதிவிற்கு வாழ்த்துக்கள் செல்வன்.
நல்ல விஷயங்கள் பல தொடர்ந்து சொல்லுங்கள்.
கடவுள் கிட்ட உங்களுக்காக ஏதாவது கேக்கறதுதான் தப்பு. அடுத்தவங்களுக்காக கேக்கறது தப்பில்லைனு நெனைக்கரேன்.
தீபாவளி வாழ்த்துக்கள் எல்லோருக்கும்!
நன்றி பேட் நியூஸ் இந்தியா
உங்களுக்கும் என் மனம் கனிந்த தீபாவளி வாழ்த்துக்கள்.
யாருக்கு என்ன தரவேண்டும் என இறைவன் அறிந்து வைத்திருப்பதால் அவரவர்க்கு தரவேண்டியதை கண்டிப்பாக கொடுப்பான். நம் வேண்டுகோள் நம் அன்பை வெளிக்காட்டுவதாக அமையும் என்பது உண்மை. அதற்கு நிச்சயம் பலன் உண்டு
நன்றி
அன்புடன்
செல்வன்
நாலு மாசத்தில 100ல இருந்து 200! John Grisham speedல எழுதுரீங்க (ஆனா அவரை மாதிரி இல்லாம நிறைய நல்ல எழுத்து!). உங்கள் நல்ல மனதிற்க்கும் மிகுந்த உழைப்பிற்க்கும் நன்றியும் வாழ்த்துக்களும்.
ஸ்வாமி
நன்றி. ஆனால் ஜான் க்ரிஷாம் எங்கே, நான் எங்கே?உங்கள் அன்பு என் மனதை நெகிழ வைக்கிறது. மிக்க நன்றி
அன்புடன்
செல்வன்
நல்ல கருத்துகள் செல்வன். நன்று. தீபாவளி நல்வாழ்த்துகள்.
Selvan...indha maadhiri nirrraiyaaaa ezhudha vazhthukkal..vara vara unga fan aagikittae varean...
naan blog aarambicha adhoda url kandippa http://Selvadhasan.blogspot.com thaan.
Anbudan,
Nagesh
செல்வத் திருநாளாம் தீபாவளி போது 200 தொட்ட செல்வனாரே, உங்களுக்கும், குடும்பத்தார் மற்றும் நண்பர்களுக்கும் இனிய தீபாவளி நன்னாள் வாழ்த்துக்கள்!
செல்வன்
"பகுத்தறிவின் பரிணாம வளர்ச்சி" பற்றி எழுத ஆரம்பித்துள்ள நீங்கள் சனத்குமாரரைத் தொட்டுச் சென்றது மிகவும் பொருத்தமானதே!
மேலும் சில தகவல்கள் (உங்கள் 200க்குப் பரிசாக :-)
"ஈசா வாச்யம் இதம் சர்வம்" என்ற உபநிடத வாக்கியங்கள் இவர் கருத்துகளாகவே அறியப்படுகின்றன. நாரத மகரிஷியின் குருவும் ஆவார்.
குழந்தை உருவமாக கருதப்படுபவர்கள் சனகாதி முனிவர்கள் நால்வரும். அதில் ஒருவர் சனத்குமாரர். எம்பெருமானின் வைகுண்டத்தில் எவ்வித அனுமதியும் இன்றி, எப்போது வேண்டுமானாலும் சென்று, இறைவனிடம் ஞான அளவளாவல் செய்பவர்கள்.
முருகப்பெருமான் இவரின் அம்சமாகவே சில நேரங்களில் கருதப்பட்டாலும் (ஞானஸ்கந்தன் என்று), உமையன்னை வரம் வேண்டிப் பெற்றது புதிய தகவல்; மிக்க நன்றி!
//நாம் 101 ரூபாய் போடுகிறேன் என வேண்டுவதும் 101 கோடி ரூபாய் உண்டியலில் போடுகிறேன் என்பதும் அவனை பொறுத்தவரை ஒன்று தான்.
இரண்டும் அவனை பொறுத்தவரை எலுமிச்சம்பழத்துக்கு சமம் தான்.//
மிக அழகாகச் சொல்லி விட்டீர்கள் செல்வன். கோவணம் வேண்டிய முட்டாளாகவும் இருக்க வேண்டாம்; எலுமிச்சம்பழப் பேராசைக்காரனாகவும் இருக்க வேண்டாம்!
"வேண்டுதல் வேண்டாமை இலான் அடி சேர்ந்தார்க்கு
யாண்டும் இடும்பை இல" அல்லவா?
ஆழ்வார்கள் எல்லாம் இறைவனிடம் நிறைய வேண்டினரே என்று கேட்கலாம்; பெற்ற தாயிடம் பசியினால் அழுத குழந்தைகளின் வேண்டல் அவை; அதுவும் அவர்கள் வேண்டியது என்ன?
நம் அனைவரின் வேண்டுதல்களையும், குழந்தையின் பசியாக எண்ணி நிறைவேற்றும் 'இறைவனையே வேண்டும்' என்று வேண்டினர்! சரியான 'பேராசைக்காரர்கள்' அல்லவா? :-))
வாழ்த்துக்கள் செல்வன்; இது போல நிறைய பதிவுகள் நீங்கள் தர வேண்டும் என்று நாங்களும் 'பேராசை' பிடித்து வேண்டுகிறோம் :-))
செல்வன் சார்,
200க்கு வாழ்த்துக்கள்..
சீக்கிரமே 500 எட்ட வாழ்த்துக்கள்..
நீங்கள் 200 அடித்ததை தொடர்ந்து கோவை காந்திபுரத்தில் மிக பெரிய கட் அவுட் வைத்து பால் அபிசேகம் செய்யப்படும் என்று கோவை செல்வன் இரசிகர் மன்றம் சார்பாக தெரிவித்துக்கொள்கிறேன்.
( பதிவுக்கு சம்பந்தமில்லாதது... யாரேனும் இரவுசு கிளப்பினால் தயவு செய்து Delete செய்துவிடவும்.) HI HI HI
நன்றி
நன்றி குமரன். தீபாவளி ஸ்வீட் எல்லாம் ஒரு வெட்டு வெட்டியாச்சா?எனக்கு இன்னைக்கு பார்சலில் ஸ்வீட் வருது. ஒரு வெட்டு வெட்டணும்:-))
நாகேஷ்
மிக நன்றி. உங்கள் அன்புக்கு தகுதியின்றி திக்குமுக்காடி நிற்கிறேன். இறைவன் பெயரால் கண்ணதாசன் அல்லது ராமதாசன் என பதிவு துவக்குங்கள். நானெல்லாம் அவன் கால்தூசுக்கு கூட சமமில்லாதவன்.
உங்கள் அன்பான வாழ்த்துக்கு மிக்க நன்றி நாகேஷ்
அன்புடன்
'செல்வன்
தீபாவளி வாழ்த்துக்கள்.
அருமையான தகவல்களுக்கு நன்றி கண்ணபிரான்,
சனத்குமாரர், குமாரில பட்டர் ஆகிய இரண்டு ஞானிகளும் முருகனின் அவதாரமாக கருதப்படுகின்றனர். சைவ கடவுள்கள் அவதாரம் எடுப்பதாக பெரும்பாலும் வராது.ஆனால் வடநாட்டில் இந்த இரண்டு முனிவர்களும் முருகனின் அவதாரமாக தான் கருதப்படுகின்றனர்.
இந்த கதையின் இன்னொரு வெர்ஷன் என்னவென்றால் உமை வரம் கேட்கவில்லை, சிவன் தான் கேட்டார் அதனால் சனத்குமாரர் வரம் கேட்ட சிவனுக்கு மட்டுமே மகனாக உமை வயிற்றில் பிறக்காமல் அவதரித்தார் என்றும் சொல்வார்கள்.
ஆழ்வார்கள் பிரபந்த பாடல்களை எழுதும்போது பரப்பிரம்ம நிலையை அடைந்தவர்கள் அல்லர். பக்தியோகத்தில் ஊறி திளைத்தவர்கள். அந்த யோக நிலையில் அவர்கள் பாடியவையே பிரந்தபாடல்கள். அதனால் தான் வேண்டுதல் எல்லாம் அவர்கள் பாடல்களில் நிகழ்கிறது. வேண்டுதல், வேண்டாமையை கடந்த பரப்பிரம்ம நிலையை அவர்கள் அடைந்தபோது இறைவன் அவர்களை தன்னகத்தே அழைத்துகொண்டு அவர்களோடு ஒன்றிவிடுகிறான். உதாரணத்துக்கு ஆண்டாள் அரங்கனோடு ஒன்றீயதை குறிப்பிடலாம்.
சாதாரண மனிதனுக்கு வேண்டியது பக்தியோகமே என்பதால் இறைவன் அந்த நிலையில் அவர்களை பலகாலம் இருக்கவிட்டு நமக்கு அமுதூறும் பக்தியை ஆழ்வார்கள் மூலம் அளிக்க வைத்தான். பக்தியோகத்தில் திளைத்த இம்மாகான்கள் "எங்களுக்கு வேறெந்த சுகமும் வேண்டாம், உன் பெயரை உச்சரித்துக்கொண்டே இருக்கும் பாக்கியம் கிடைத்தால் போதும்" என அதிலேயே மூழ்கி இருக்க விரும்புகின்றனர்.
மாணிக்கவாசகர் "மனித பிறவியும் வேண்டுவதே இம்மாநிலத்தே" என பாடியது பக்தியோகத்தின் உச்சநிலை. இம்மாதிரி நிலையை அவர்கள் அடைந்தபின் அவர்களுக்கு பரப்பிரம்ம நிலையை அளித்து இறைவன் அருள்பாலிக்கிறான். அடியாரை தன்னகத்தே சேர்த்துக்கொண்டு மிகப் பெரும் பேறு அளிக்கிறான். அந்நிலையில் இரைவனை போலவே அவர்களும் வேண்டுதல், வேண்டாமை எனும் நிலையை அடைகின்றனர்
சிவபாலன்:-)))
உங்கள் அன்புக்கும் வாழ்த்துக்கும் என் மனமார்ந்த நன்றி
கட்டவுட்டுக்கு பாலாபிஷேகம் செய்தா அம்மா கட்சிகாரங்க சும்மா விடுவாங்களா?எதோ போட்டி கட்சின்னு நினைச்சு சண்டைக்கு வந்துட போறாங்க:-))
யாரும் ரவுசு கிளப்பினா உள்ளாட்சி தேர்தலில் நடந்த மாதிரி உருட்டுகட்டையில் கவனிச்சிடுவோம்:-))
//ஆழ்வார்கள் பிரபந்த பாடல்களை எழுதும்போது பரப்பிரம்ம நிலையை அடைந்தவர்கள் அல்லர். பக்தியோகத்தில் ஊறி திளைத்தவர்கள். அந்த யோக நிலையில் அவர்கள் பாடியவையே பிரந்தபாடல்கள். அதனால் தான் வேண்டுதல் எல்லாம் அவர்கள் பாடல்களில் நிகழ்கிறது. வேண்டுதல், வேண்டாமையை கடந்த பரப்பிரம்ம நிலையை அவர்கள் அடைந்தபோது இறைவன் அவர்களை தன்னகத்தே அழைத்துகொண்டு அவர்களோடு ஒன்றிவிடுகிறான். உதாரணத்துக்கு ஆண்டாள் அரங்கனோடு ஒன்றீயதை குறிப்பிடலாம்.
//
தவறு. தவறு. முழுக்க முழுக்கத் தவறு செல்வன். வைணவத்தில் இறைவனுடன் முழுக்க ஒன்றிவிடுவதோ பரப்பிரம்ம நிலையை அடைவதோ இல்லை. முக்தி என்பது நித்யர்களும் முக்தர்களும் நிலையாக இருந்து பகவத் சேவையில் ஈடுபடும் பரமபதத்தை அடைவதே.
குமரன்
நீங்கள் சொல்வது உண்மை. வைணவத்தில் பரப்பிரம்ம நிலை இல்லை. ஆனால் பரப்பிரம்ம நிலையை நம்புவோர் கோணத்தில் இருந்து தான் நான் இதை எழுதினேன். அத்வைதமும், விசிஷ்டாத்வைதமும் மாறுபடுவது இக்கோணத்தில் தான்.
32
நன்றி பாபா. பாஸ்டனையே கலக்கும் விதத்தில் தீபாவளி கொண்டாட வாழ்த்துகிறேன்.
அன்புடன்
செல்வன்
// செல்வன் said...
குமரன்
நீங்கள் சொல்வது உண்மை. வைணவத்தில் பரப்பிரம்ம நிலை இல்லை. ஆனால் பரப்பிரம்ம நிலையை நம்புவோர் கோணத்தில் இருந்து தான் நான் இதை எழுதினேன். அத்வைதமும், விசிஷ்டாத்வைதமும் மாறுபடுவது இக்கோணத்தில் தான்.//
குமரன் இதைச் சுட்டிக்காட்டி விட்டதால், நம்மில் பலருக்கு இதை நினைவில் வைத்துக் கொள்ள ஒரு எளிய shortcut!
"பல்லாண்டும் பரமனைச் சூழ்ந்து இருந்து ஏத்துவர் பல்லாண்டே" என்ற பாடல் வரிகளை நினைவில் வைத்துக் கொண்டால், அடுத்த முறை எடுத்தாள எளிதாக இருக்கும்! :-)
---பாஸ்டனையே கலக்கும் விதத்தில் தீபாவளி கொண்டாட வாழ்த்துகிறேன்.---
பிடிச்சு உள்ளே தள்ளறதுக்கு வழிய சொல்றீங்களே :))
பக்கத்து ஊரு நியு ஹாம்ப்ஷைர் போனாத்தான் வேட்டு போடலாம்.
பாபா,
கவலையே படாதீங்க. உங்க இஷ்டத்துக்கு பிடிச்ச இடத்துல பட்டாசு வெடிச்சு ஜமாய்ங்க. மாட்டிகிட்டா நம்ம மனித உரிமை ஆர்வலர்கள் பெரும் திரளா வந்து பேராதரவு கொடுப்பாங்க. :-))
நம்மூரு பார்லிமெண்ட்ல கூட தான் தீபாவளி கொண்டாட அனுமதி இல்லை. ஆனா நம்ம மனித உரிமை ஆர்வலர்கள் அதுக்கெல்லாம் அனுமதி கேட்டு போராடறாங்கில்லையா?அந்த மாதிரிதான்:-))))
கண்ண பிரான்
அத்வைதத்தை பின்பற்றினால் கடவுளாகலாம். விசிஷ்டாத்வைதத்தை பின்பற்றினால் தொண்டராக மட்டுமே ஆகமுடியும்:-))
அதனால நைசா நம்ம வழிக்கு வந்திடுங்க. ரெண்டு பேரும் கடவுளாகிடலாம்:-)))
//செல்வன் said...
கண்ணபிரான்
அத்வைதத்தை பின்பற்றினால் கடவுளாகலாம். விசிஷ்டாத்வைதத்தை பின்பற்றினால் தொண்டராக மட்டுமே ஆகமுடியும்:-))
அதனால நைசா நம்ம வழிக்கு வந்திடுங்க. ரெண்டு பேரும் கடவுளாகிடலாம்:-))) //
ஹை....நல்லா ஆசை காட்டுறீங்களே! மிக்க நன்றி கடவுளே, என்னைக் கடவுள் ஆக்கறேன் சொன்னதுக்கு!
கடவுளே, ரொம்ப வம்பு பண்ணாதிங்க! உங்களை எத்தனை பேர் வையறாங்க தெரியுமா? உங்களை இல்லைன்னு சொன்னாலும் சொல்லுவாங்களே தவிர, தொண்டர்களாகிய எங்களை இல்லை-ன்னே சொல்ல மாட்டாங்க!
நீங்க தீந்தமிழ்ப் பாசுரங்களைக் கேட்கத் தான் முடியும்; பாடினீங்க-ன்னு வைச்சிக்குங்க, அவ்வளவு தான் தற்பெருமை பேசறீங்கன்னு சொல்லி தமிழ்மணத்தில் ஜல்லி அடிச்சிடுவாங்க:-))
ஆனா நாங்க அப்படியா? ஜாலியா கேக்கவும் முடியும், நாவினிக்க பாசுரம் பாடவும் முடியும்!
இவ்வளவு எதுக்கு? நீங்க உங்க வீட்டம்மாவைக் கேட்டுப் பாருங்க. அம்மா சப்போர்ட் உங்களுக்கா, எங்களுக்கான்னு? அப்பறம் தெரியும்:-)
நீங்களே அம்மா சப்போர்ட் இல்லாம தான மலை மேல வந்து, கடன் வாங்கிட்டுக் கால் கடுக்க நின்னுக்கிட்டு இருக்கீங்க! :-))
தொண்டராக ஆனால் வேறு என்ன என்னவெல்லாம் கிடைக்கும் தெரியுமா?
பேசாம நீங்க ஒரு நாள் தொண்டரா வந்து, எங்க உடையவர் பேரைச் சொல்லிக்கிட்டு, இன்பமா இருந்து பாருங்க! அப்பறம் போகவே மனசு வராது! ஜாலியா எங்க கூடவே இருந்திடுவீங்க!
குமரன், என்ன சொல்றீங்க, நம்ம செல்வன் கடவுளைத் தொண்டர் குழாத்தில் சேர்த்துக் கொள்ளலாமா? இல்லை இல்லை....சேரச் சொல்லலாமா?? :-))
---நம்மூரு பார்லிமெண்ட்ல கூட தான் தீபாவளி கொண்டாட அனுமதி இல்லை.---
ஆஹா... கிளம்பிட்டீங்களே!
ஜூலை 4 (அமெரிக்க சுதந்திர தினம்) அன்று வெடித்தாலாவது 'போனாப் போகுது... தேச பக்தி' என்று விட்டு விடுவார்கள். சீக்கிரமே இருட்டி விடுகிற இப்போது வெடித்தால், சேலம் சூனியக்காரி கதையாக கம்பியெண்ண வேண்டியதுதான்.
(இதே மாதிரி பார்த்தால், இந்தியப் பாராளுமன்றம் == ஜூலை 4;
அமெரிக்காவில் இந்திய தீபாவளி ≠ What is Scientology? vs Islam
ரொம்ப மண்டை காய விடலியே?!)
ஓ அந்த அடங்காதமுனிவரின் மறுபிறவிதான் இந்த தாய் தந்தை பேச்சி கேட்டகாத கோவணஆண்டியா முற்பிறப்பு குணம் மாராமல் இருக்கிறதா?
தீபாவளி நல் வாழ்த்துகள் செல்வன்
கண்ணபிரான்
இதெல்லாம் நியாயமா?உலகின் புதிய கடவுள்ன்னு பதிவு போட்டூட்டு உக்கார்ந்துகிட்டிருக்கேன். என்னை உலகின் புதிய தொண்டனாக ஆக்கிவிடுவீர்கள் போலிருக்கிறதே?
தமிழ்மணத்தில் எப்படி பேசினாலும் சண்டைகட்ட ஆள் இருப்பார்கள். அவர்களுக்கு பயந்து நான் கடவுள் இல்லை என்று பொய் சொல்ல முடியுமா?:-))) அவர்களை எல்லாம் திருத்தி உய்விக்க வேண்டாமா?:-)
பாபா
கவலையே படாதீர்கள். க்வாண்டமானோ சிறையில் அடைத்தாலும் சரி, கொள்கையில் உறுதியாக நின்று பட்டாசு வெடியுங்கள். ஆதரவாக பதிவு போட நம் மனித உரிமை ஆர்வலர்கள் தயாராக உள்ளனர்
ஆனா சொல்ல முடியாது...நரகாசுரன் செத்த நாளை கொண்டாடறீங்க என்பதால் அவர்கள் ஆதரவு தராமல் போகவும் வாய்ப்புள்ளது:-))
ஜுலை 4 = பாரளுமன்றம் பத்தி என்ன சொல்றீங்கன்னு புரியுது:-) ஆனா அத்தனை விவரமா எல்லாம் நம் மக்கள் யோசிக்க மட்டார்கள். அமெரிக்கா என்றாலே எதிர்க்க ஆரம்பித்து விடுவார்கள்:-))
//கவலையே படாதீங்க. உங்க இஷ்டத்துக்கு பிடிச்ச இடத்துல பட்டாசு வெடிச்சு ஜமாய்ங்க. மாட்டிகிட்டா நம்ம மனித உரிமை ஆர்வலர்கள் பெரும் திரளா வந்து பேராதரவு கொடுப்பாங்க. :-))//
செல்வன் அய்யா,
நீங்க ஒண்ணு..நம்ம புதுவை மனித உரிமைக் காவலர் கிட்ட சொன்னால் பெரிய பெரிய பட்டாசு எல்லாம் வாங்கி கொடுப்பார்..கூடவெ முன் ஜாமினும்..
காசும் மிச்சம்.
பாலா
Bala,
:-))
These intellectuals give people the licence to Kill:-)))
Post a Comment