Thursday, June 29, 2006

part 4 அஞ்சேல் எனாத ஆண்மை- post 118

.தான் வகையாக மாட்டிக்கொண்டதை பிட்சு உணர்ந்தார்.அவர் தற்காப்பு கலைகளில் மிகுந்த திறன் பெற்றவர்.அந்த இயக்கத்து பிட்சுகள் அனைவரும் தற்காப்பு கலையில் தேர்ந்தவர்கள்.ஆனால் கைகால் கட்டிப் போடப்பட்ட நிலையில் பிட்சு செயலற்றவராக இருந்தார். பிட்சு முன் தன் மகளின் போட்டோவை நீட்டினார் இளங்கோ."இவள் எங்கே இருக்கிறாள்?" என அமைதியாக கேட்டார்.பதில் சொல்லாமல் மவுனமாக இருந்தார் பிட்சு.முட்டியை மடக்கி அடிவயிற்றில் குத்தினார் இளங்கோ."அம்மா.." என அலறினார் பிட்சு.தற்காப்பு கலைகளில் ஓரளவு வலி தாங்க கற்றுக் கொடுத்திருக்கிறார்கள்.ஆனால் சித்ரவதையை ஓரளவுக்கு மேல் தாங்க முடியாது. காலிங்பெல் அடித்தது.கதவை திறந்தால் சந்துரு."வாயை திறக்க மாட்டேன் என்கிறான்" என்றார் இளங்கோ.இருவரும் பிட்சுவிடம் வந்தார்கள்."என்ன அடிக்கவே ஆரம்பிக்கவில்லை போலிருக்கிறதே?" என சந்துரு கேட்க "இப்போதுதான் ஆரம்பித்தேன்" என்றார் இளங்கோ. "அடி எல்லாம் சரிப்பட்டு வராது.போய் சூட்டுக்கோலை அடுப்பில் வைத்து எடுத்து வாருங்கள்" என்றான் சந்துரு.அவன் அம்மா அவனை அப்படித்தான் சின்ன வயதில் மிரட்டுவார்கள்.அந்த மிரட்டல் எப்போதும் வேலை செய்திருக்கிறது.பிட்சுவிடம் அதை கேட்டவுடன் கண்ணில் பயம் தாண்டவமாடியது."வேண்டாம்.சொல்கிறேன்.கட்டை அவிழ்த்து விடுங்கள்" என்றார். "நீ என்னை அடித்த அடி இன்னும் நினைவில் இருக்கிறது.கட்டை அவிழ்க்க முடியாது.அப்படியே சொல்" என்றான் சந்துரு. "நீங்கள் செய்வது நியாயமா?" என்றார் பிட்சு."எங்கள் மதத்தில் இந்தியாவில் மட்டும் லட்சம் பேர் இருக்கிறார்கள்.அதில் முக்கால்வாசி பேர் பெண்கள்.இதில் இரண்டு போட்டோவை காட்டி இவர்கள் எங்கே என கேட்டால் எனக்கு எப்படி தெரியும்?அனைத்து மடங்களுக்கும் கடிதம் போடுகிறேன்.அவர்கள் எங்கே இருக்கிறார்கள் என அப்போதுதான் தெரியும்" என்றார் பிட்சு. "இவன் சரிப்பட்டு வரமாட்டான்.சூட்டுக்கோலை எடுத்து வாருங்கள்.சூடு போடவேண்டுமென்பது எனக்கு ரொம்ப நாள் ஆசை" என்றான் சந்துரு. "நான் பொய் சொல்லவில்லை.என்னை கொன்றாலும் உண்மை இதுதான்" என்றார் பிட்சு. "சரி.அனைத்து கிளைகளுக்கும் இமெயில் இருக்கிறதல்லவா?நான் உங்கள் சங்க வெப்சைட்டில் பார்த்திருக்கிறேன்.ஈமெயிலில் போட்டோவை அனுப்பி கேட்கிறோம்.உங்கள் மெயில் ஐடியும் பாஸ்வர்டும் கொடுங்கள்" என்றான் சந்துரு. "நான் காணாமல் போனது இந்தியா முழுக்க அனைத்து கிளைகளுக்கும் இன்னேரம் தெரிந்திருக்கும்.நீ என் மின்னஞ்சலில் மெயில் அனுப்பினால் பதில் வராது.நீயும் அடுத்த நிமிடம் மாட்டி கொள்வாய்" என்றார் பிட்சு. "நிஜம் தான்" என்றார் இளங்கோ."ஆனால் இது உண்மை என்றால் நீ சந்தோஷமாக மெயில் ஐடியை தந்து எங்களை மாட்டி விட்டிருப்பாய்.இதை சொல்லி இருக்க மாட்டாய்.ஆக மெயில் ஐடியில் ஏதோ விஷயம் இருக்கிறது.உன் பாஸ்வர்ட் என்ன,சொல்கிறாயா?" என்றார் இளங்கோ. "நான் சொன்னால் நம்ப மாட்டேன் என்கிறீர்கள்.நான் காணாமல் போனதும் இந்நேரம் என் ஆபிஸ் இமெயில் ஐடியை முடக்கியிருப்பார்கள்.நீங்கள் லாகின் செய்தால் ஐபி கண்டுபிடித்து விடுவார்கள்.எனக்கு என் ஆபிஸ் ஐடி தவிர யாகூ ஐடி ஒன்று இருக்கிறது.நம்பலை என்றால் ஐடி பாஸ்வர்ட் தருகிறேன்.எக்கேடோ கெட்டு ஒழியுங்கள்.எனக்கென்ன?" என்றார் பிட்சு. "சரி..உன் சங்கத்தை பற்றி சொல்.அதாவது தெரியுமல்லவா?இல்லை அதுவும் தெரியாதா?யார் உன் தலைவர்?இப்படி ஆள்பிடித்து அவர்களை என்ன செய்கிறீர்கள்?அதை ஒழுங்காகா சொல்லாவிட்டால் சூடு தான்" என்றான் சந்துரு. "எங்கள் மதம் ஷின்ரிக்கியோ எனும் கொரிய மதமாகும்" என்றார் பிட்சு."மனிதர்கள் உய்வடைய லீ ஷோகோ அசாரா எனும் மானிட உருவில் இறைவன் அவதாரம் எடுத்தார்.அவர் அளித்த வேதம் அவும் ஷென்ரிக்கியோ என அழைக்கப்படும்.இதில் சேருபவர்கள் துறவறம் பூண்டு மற்ற மக்களை கடவுளின் பாதையில் திருப்பும் பணியில் ஈடுபடுவார்கள்.உலகின் அனைத்து நாடுகளிலும் நாங்கள் இருக்கிறோம்.4 கோடி பேர் எங்கள் மதத்தில் உள்ளனர்.இதில் மர்மம் எதுவும் இல்லை" என்றார் பிட்சு. "உங்கள் சங்க வெப் சைட்டில் இருப்பதையே ஒப்பிக்காதே" என எரிச்சலுடன் சொன்னார் இளங்கோ."நீ உன் இமெயில் ஐடியை தா.அது முடக்கப்பட்டுள்ளதா என்ன என்பதை முதலில் சரிபார்க்கிறேன்" என்றார் இளங்கோ. எரிச்சலுடன் இமெயில் விவரத்தை தந்தார் பிட்சு.லாகின் செய்ய ஈமெயில் திறந்தது.உள்ளே உள்ள மடல்களை பிரித்து படித்து கொண்டே வந்தனர். சந்துருவின் மனைவியின் போட்டோவை ஒரு மடலில் இணைத்து தலைமை அலுவலகத்துக்கு அனுப்பியிருந்தார் பிட்சு."புதிதாக சேர்ந்தவர்" என்ற ஒரே குறிப்புடன்.அதற்கு பதில் மடல் "ஆலயத்துக்கு அனுப்பி வைக்கவும்" என வந்திருந்தது.பழைய மடல்களை மீண்டும் தேடியதில் இளங்கோவின் மகளுக்கும் அதே போல் மடல் பரிமாற்றம் நடந்திருந்தது தெரியவந்தது. "பிட்சு பொய் சொல்லியிருக்கிறான்.அவனுக்கு எல்லாம் தெரியும்" என ஆவேசத்துடன் சொன்னார் இளங்கோ. ---- அதே வினாடியில் பெங்களூரில் ஷென்ரிக்கியோ சங்க அலுவலகத்துக்கு ஒரு ஈமெயில் பறந்தது.பிட்சுவின் இமெயில் ஐடியையும்,சங்க வெப்சைட் நுழைவு அனுமதியையும் முடக்கும்படி.ஐடியை முடக்க முனைந்த கம்ப்யூட்டர் நிபுணர் அது லாகின் செய்யப்பட்டிருந்ததை கண்டார்.அந்த ஐபி அட்ரஸ் வினாடியில் போலிசுக்கு அனுப்பப்பட்டது. அடுத்த 10வது நிமிடத்தில் இளங்கோவின் வீட்டை நோக்கி போலிஸ் ஜீப் சீறிக்கொண்டு கிளம்பியது. -- "என் மனைவியை எங்கே அனுப்பி வைத்தாய்?" என கோபத்துடன் பிட்சுவை கேட்டான் சந்துரு. சந்துரு" என்றார் இளங்கோ."ஈமெயில் செயலிழந்து விட்டது.கண்டுபிடித்து விட்டார்கள் என நினைக்கிறேன்" என்றார் இளங்கோ."பிட்சு சொன்னது உண்மைதான்.போலிஸ் எந்நேரமும் நம்மை தேடி வரலாம்" என்றார். --- போலிஸ் இளங்கோவின் வீட்டுக்குள் நுழைந்தபோது அவர்கள் மூவரும் அங்கு இல்லை.ஷெட்டில் நிறுத்தியிருந்த மாருதி காரும் இல்லை.விட்டை குடைந்த போலிசார் இளங்கோவின் புகைப்படம் கிடைக்காமல் ஏமாந்தனர்.அவர் வேலை செய்த கம்பனிக்கு அவரை பற்றி விசாரிக்க கிளம்பினர் --- கோசல்ராம் சேட்டின் வீட்டு எதிரிலிருந்த பிள்ளையார் கோயிலுக்கு முன் ஒரு மாருதி கார் வந்து நின்றது.பகலிலேயே கூட்டமில்லாத அந்த கோயிலுக்கு இரவில் வாட்ச்மேன் கூட இல்லை.காரிலிருந்து ஒரு உருவம் கேட்டை எட்டிதாண்டி உள்ளே போனது.உண்டியல் பூட்டை சுத்தியலால் உடைத்தது.அதிலிருந்த கவரை எடுத்தது.பிள்ளையாரப்பனுக்கு ஒரு கும்பிடு போட்டுவிட்டு ஓடி வந்து காரில் ஏறிக்கொண்டது. ---- "கவரில் என்ன இருக்கிறது?" என ஆர்வத்துடன் கேட்டார் இளங்கோ. "வெற்றுபத்திரம் ஒன்றிலும்,பிளான்க் செக்புக்கிலும் கையெழுத்து போட்டு வைத்திருக்கிறார்.எனக்கு ஒரு கடிதமும் அவர் தம்பிக்கு ஒரு கடிதமும் எழுதியுள்ளார்.அவர் வீடு மற்றும் அனைத்து ஆஸ்திகளும் என் பெயரில் அந்த பத்திரத்தை பயன்படுத்தி மாற்றிக் கொள்ள சொல்லியிருக்கிறார்.தன் மகளை கண்டுபிடிக்கும் செலவுகளுக்கு அதை பயன்படுத்த சொல்லியிருக்கிறார்" என நெகிழ்ச்சியுடன் சொன்னான் சந்துரு. "அந்த செக் செல்லுபடியாகாது.அவர் இறந்த செய்தி தெரிந்ததும் வங்கி கணக்கை முடக்கி இருப்பார்கள்" என சொல்லி சிரித்தார் பிட்சு.பின்சீட்டில் அவரை கட்டிபோட்டு உட்கார வைத்திருந்தார்கள்.சந்துரு அவரருகே அமர்ந்திருந்தான். "நண்பரை கொஞ்சம் கவனியுங்கள்" என்றார் இளங்கோ. "நீ ஏன் பொய் சொன்னாய்?" என கேட்டான் சந்துரு. "நீங்கள் போய் பார்ப்பதற்குள் ஈமெயில் ஐடி முடக்கப்பட்டிருக்கும் என நினைத்தேன்.சோம்பேறிகள்.லேட்டாக முடக்கினார்கள்.நான் மாட்டிக்கொண்டேன்" என சொன்னார் பிட்சு. "சரி ஆலயத்துக்கு அனுப்பு என்றால் என்ன?நீ எதற்கு இத்தனை பெண்கள் போட்டோவை அனுப்பினாய்?யாருக்கு அந்த மடல் அனுப்பினாய்?" என கேட்டான் இளங்கோ. "தலைமை அலுவலகத்துக்கு அனுப்பினேன்.பெண்கள் போட்டோவை அனுப்பினேன் என சொல்வது தவறு.நீங்கள் தான் பார்த்தீர்களே.பல ஆண்கள் போட்டோவையும் அனுப்பியிருக்கிறேன்.எங்கள் மடத்தில் உறுப்பினர்களுக்கு ஒரு பரிட்சை வைப்பார்கள்.அதில் நல்ல மதிப்பெண் பெற்றவர்களின் விவரங்கள் எனக்கு அனுப்பப்படும்.அவர்களின் பயோடேட்டாவை கொரியாவில் உள்ள தலைமை அலுவலகத்துக்கு அனுப்புவேன்.அவர்கள் அதை பரிசீலித்து சில நபர்களை கொரியாவுக்கு வந்து குருவின் அருள் பெற சொல்லி அனுப்புவார்கள்.அனுப்புவோம்.அதுதான் ஆலயம்.இது மிகப்பெரும் பாக்கியம்" என பரவசத்துடன் சொன்னார் பிட்சு. "என்ன பரிட்சை வைப்பீர்கள்?" என கேட்டான் சந்துரு. "எங்கள் வேதநூலில் இருந்துதான் கேள்வி கேட்போம்.அதுபோக கடவுளின் மொழியை(கொரிய மொழி) கற்று கொடுப்போம்.மற்றபடி பொது அறிவு சம்பந்தமாக சில கேள்விகள்.வினாத்தாள் மாதிரி எங்கள் சங்க வெப்சைட்டில் இருக்கும்.பார்த்து கொள்ளுங்கள்" என்றார் பிட்சு. "அப்போது என் மனைவியும் இவர் மகளும் இப்போது எங்கே இருக்கிறார்கள்?" என கேட்டான் சந்துரு. "வடகொரியாவில்" என சொல்லி சிரித்தார் பிட்சு. "எப்போது திரும்பி இங்கு வருவார்கள்?" என கேட்டார் இளங்கோ. "இதுவரை அங்கு போன ஒருவர் கூட திரும்பி வந்ததில்லை" என்றார் பிட்சு."அங்கு என்ன நடக்கிறது என கேட்டு என்னை அடிக்காதீர்கள்.எனக்கு சத்தியமாக தெரியாது" என்றார். --- அடுத்தநாள் காலை 10 மணிக்கு இந்திய வங்கி காண்டிவெளி கிளை அலுவலகத்தை திறந்தது.10.02க்கு டிப்-டாப்பாக உடை அணிந்து இளங்கோ உள்ளே நுழைந்தார்.சேட்டின் செக்கை நிரப்பி அக்கவுண்டிலிருந்த 816,000 ரூபாயில் மினிமம் பேலன்ஸ் 1000 ரூபாய் தவிர்த்து பூராத்தொகையயும் வித்ட்ரா செய்தார்.10.15க்கு வங்கியை விட்டு வெளியேறினார். 10.30க்கு வங்கி மேனேஜர் வந்தார்.சேட்டு கோசல்ராம் முந்தைய நாள் சாயந்திரம் மரணமடைந்த செய்தியை டைனிக் ஜாக்ரனில் 10.45க்கு படித்தார்.உடனடியாக அவர் கணக்கை மூட உத்தரவிட்டார்.அரைமணி நேரத்துக்கு முன் 815,000 எடுக்கப்பட்ட செய்தி அவருக்கு தெரிவிக்கப்பட்டது.தொலைபேசியை எடுத்து போலிசுக்கு தகவல் சொன்னார் மேனேஜர். ---- "வட கொரியாவுக்கு விசா எப்படி எடுப்பது?" என கேட்டான் சந்துரு. நமட்டு சிரிப்பு சிரித்தார் பிட்சு. "அங்கே போக விசா கிடைப்பது சிரமம்" என்றார் இளங்கோ."அது சர்வாதிகார நாடு.அங்கே யாரும் போக மாட்டார்கள்.போனாலும் குறிப்பிட்ட சில இடங்களுக்கு மட்டுமே போக அனுமதி கிடைக்கும்.கடுமையாக உளவுபோலிஸ் வேவு பார்ப்பார்கள்.அங்குள்ள மக்கள் எலிகளையும் பூச்சிகளையும் உண்டு வாழ்கிறார்கள்" என்றார். "நான் படித்து படித்து சொன்னேன்.நீங்கள் யாரும் கேட்கவில்லை" என்றார் பிட்சு."சந்துரு நான் சொல்லுகிறேன் என்று கோபித்துக் கொள்ளாதே.மனதை திடப்படுத்திக்கொள்.உன் முன்னாள் மனைவி எங்கள் சங்க நிர்வாகியை திருமணம் செய்துகொண்டார்.இப்போது அவர்கள் இருவரும் கொரியாவில் சந்தோஷமாக தம்பதி சமேதராக மதபிரச்சாரம் செய்துகொண்டிருக்கிறார்கள்.நீ வேறு ஒரு பெண்ணை கல்யாணம் பண்ணிக்கொண்டு புது வாழ்க்கையை துவங்கு" என்றார் பிட்சு. அதிர்ச்சியில் உறைந்தான் சந்துரு.அவனுக்கு பேச்சே வரவில்லை. "நித்தம் நித்தமே பொய்யடா பேசும் மாதர் சகவாசமே விட்டு உய்யடா" என சித்தர் பாடலை உற்சாகமாக பாடினார் பிட்சு. (தொடரும்) அத்யாயம் 1 அத்யாயம் 2 அத்யாயம் 3

7 comments:

நாமக்கல் சிபி said...

$elvan,
இன்னைக்கு நேரம் எல்லாம் போட்ருக்கீங்க...
இன்னும் சந்துரு, இளங்கோ, பிட்சு இவங்க எல்லாம் பாக்க எப்படி இருப்பாங்கனு போட்டீங்கன கற்பனை செய்ய வசதியா இருக்கும்...

நரியா said...

செல்வன்,
கதை நல்ல சுறுசுறுப்பாக போகிறது. இப்படி வேகமாக போவதால், சீக்கிரம் முடித்து விடாதீர்கள். இந்த வேகத்தில் நிறைய தகவல்களையும் சொல்லியிருக்கிறீர்கள்.

விறுவிறுப்பாக செல்கிறது.
வட கொரியா பற்றி கட்டுரை எழுதும் போதே இந்த கதையின் கருவும் உருவாயிற்றா :)

ஒரு சிறிய கருத்து: ஜேம்ஸ் பாண்ட் படம் மாதிரி நீங்க சென்ற நாடெல்லாம் சேர்த்து எழுதுங்க. மீடியா இந்த கதைக்குள் வந்தால், பாண்டேஜ் பாண்டியனை மறந்து விடாதீர்கள் :).

நன்றி!

Unknown said...

வெட்டிப்பயல்

என்னங்க பேரு இது?உங்களை திட்டற மாதிரியே இருக்கு:-)))

அதை கொஞ்சம் வித்யாசமாக செய்யலாம்னு தான் விட்டுட்டேன்.ஆடியன்ஸ் யூகத்துக்கே விட்டா கதையை நல்லா ரசிப்பாங்கன்னு தோணுது.இருந்தாலும் கதை ஓட,ஓட அறிமுகம் செய்கிறேன்

அஷ்லின்,
விறுவிறுப்பை மெயின்டெய்ன் செய்யணும்னு எழுதலை.கதை அப்படி அமைந்து விட்டது.முன்னுரை நீளமா இருந்திருந்தா கதை நல்லா போயிருக்கும்.

நரியா
வடகொரியா பற்றி படித்ததும் தான் இந்த கதை கரு உருவானது.பாண்டேஜ் பாண்டியன் கொரியாவுக்குள் போனால் பின்னி பெடலெடுத்து விடுவார்கள்:-))

கொரியா போனதும் கதை மெல்ல நகரும்.அதுவரை பாத்திர அறிமுகம்,அவர்களை பற்றிய தகவல்கள் வராது.கொரியாவில் அவர்களுக்கு பேச நிரைய நேரம் இருக்கும்.அப்போது நிறைய வர்ணனைகள்,உரையாடல்கள் வரும்.

நாமக்கல் சிபி said...

$elvan atleast வயசு, தோற்றமாவது சொல்லலாம்...
ரொம்ப வேகமா போயிட்டு ஸ்லோ ஆனாலும் பிரச்சனைதான்...

Unknown said...

நல்ல யோசனை வெட்டிப்பயல்.அடுத்த எபிசோடில் நிச்சயம் எழுதுகிறேன்.மிக்க நன்றி

நாகை சிவா said...

ஹம், அப்ப கொரியாவில் சந்திப்போம்.

Unknown said...

நாகை சிவா,

சீக்கிரம் கொரியாவுக்கு கதை நகர்ந்துவிடும்.

திங்களன்று அடுத்த பகுதியை இடுகிறேன்

அன்புடன்
செல்வன்