Wednesday, June 28, 2006

117.அஞ்சேல் எனாத ஆண்மை-3

வேன் மோதி நின்றதும் அனைவருக்கும் பலமாக அடிபட்டது.முன்சீட்டிலிருந்த சந்துரு கண்ணாடியை உடைத்துக்கொண்டு வெளியே போய் விழுந்தான்.மோத்தி குண்டு துளைத்த வினாடியே உயிரை விட்டிருந்தான்.வேன் அடித்து மோதிய ஜீப்பிலிருந்த போலிசார் பலர் கீழே அடிபட்டு கிடந்தனர். ஐரோலி பாலத்தில் கூட்டம் அலைமோதும்.இந்த களேபரத்தில் ஏகப்பட்ட வண்டிகள் குறுக்கே ஓடியதால் இன்னொரு போலிஸ் ஜீப்பில் இருந்தவர்களால் மானாவாரியாக சுட முடியவில்லை.ஆனால் இவர்களை நோக்கி ஓடிவந்தனர். துப்பாக்கி சத்தம் திடீரென கேட்டது.சந்துருவின் வேனிலிருந்து யாரோ போலிசை நோக்கி சுட்டனர்.குறி தவறினாலும் போலிஸ் உஷாராக அதுபோதுமானதாக இருந்தது.அவர்களிடம் கட்டை துப்பாக்கிகள் இருந்தன.பதுங்க இடம் தேடி அவர்கள் ஓட அதற்குள் இரண்டு போலிஸார் குண்டடி பட்டு விழுந்தனர். துப்பாக்கி வெடித்ததும் அங்கு மக்கள் சிதறி ஓடினர்.வேன் கதவை திறந்து பிட்சுவை தூக்கி தானே ஆற்றில் வீசினார் இளங்கோ.அவரும் ஆற்றில் குதித்தார். சந்துரு எழுந்தான்.உடலெங்கும் வலி.பட்டகாலிலே படும் என்பதுபோல் அடிபட்ட காலில் மீண்டும் வலி.கையில் எந்த ஆயுதமும் இல்லை.போலிஸ் வேனை சுற்றி வளைத்து சுட்டுக்கொண்டிருந்தனர்.சுற்றிலும் மக்கள் சிதறி ஓடினர்.இனி செய்ய ஏதுமீலை என உணர்ந்த சந்துரு மக்களோடு மக்களாக அவர்களோடு சேர்ந்து ஓடினான்.தானே பெலாபூர் ரோட்டுக்கு ஓடி நின்றான்.உடலெங்கும் ரத்தம்,காயம்.ஆட்கள் அவனை வித்யாசமாக பார்த்தனர்.ஆனால் விடு விடு என நடந்து போனான்.இளங்கோ தப்பியது அவனுக்கு தெரியாது.வேனில் இருந்தவர்கள் என்ன ஆனார்களோ என்ற பீதி வாட்டியது. டெலிபோன் பூத்தில் காசை போட்டு சேட்டுக்கு தகவல் சொன்னான்.மகன் இறந்துவிட்டான் என்பதை பதட்டத்தில் சொல்லி விட்டான்.சொன்னபின் நாவை கடித்து கொண்டான். "மகனும் போய்விட்டான்.மகளும் போய்விட்டாள்.வேனை அடையாளம் கண்டுபிடித்து போலிஸ் வருவது நிச்சயம்.நான் ஓடி தப்பிக்க முடியாது.வயதாகிவிட்டது" என்றார் சேட்டு."முடிந்தால் என் மகளை அங்கிருந்து மீட்டு என் தம்பி வீட்டில் விட்டு விடு.இல்லாவிட்டால் விதி விட்ட வழி" என்றார் அவர்."என் வீட்டு எதிரில் உள்ள பிள்ளையார் கோயில் உண்டியலில் ஒரு பொட்டலத்தை போடுகிறேன்.உனக்கு அது மிக உதவும்.அடுத்த திங்கட்கிழமைக்குள் உண்டியலை உடைத்து அதை எடுத்துக்கொள்.இல்லாவிட்டால் அது பிள்ளையாருக்கு போயிடும்.உண்டியலை திங்களன்று தான் திறப்பார்கள்" என்றார் சேட்டு.போனை வைத்து விட்டார். சந்துரு வெளியே வந்தான்.எங்கே போவது என தெரியவில்லை.அவன் அடையாளம்,பேர்,ஊர் தெரிந்தவர் இளங்கோ ஒருவர்தான்.அவரை தவிர வேனில் இருந்த அனைவருக்கும் புனை பெயர் ஒன்றை தான் சொல்லி இருந்தான்.இளங்கோ அப்போது புனை பெயர் சொல்ல சொன்னது எவ்வலவு உதவியானது என நினைத்துக்கொண்டான்.ஆனால் இளங்கோ மாட்டினால் அவனும் மாட்டுவது உறுதி. அவன் தங்கி இருந்த விடுதிக்கு சென்று அவசர அவசரமாக இடத்தை காலி செய்தான்.போலிஸ் அங்கு வந்தால்,விசாரித்தால் அவன் அட்ரஸ் கிடைப்பது உறுதி.என்ன செய்வது என யோசித்துக்கொண்டே ஓட்டலை விட்டு வெளியே வந்தான். "சாப்..போன்" என சத்தம் கேட்டது.ஓட்டல் பையன் வந்து அழைத்தான்.போய் போனை எடுத்தான்....இளங்கோ. "இங்கே தான் இருக்கிறாயா?ஒரு நப்பாசையில் தான் அழைத்தேன்.வேனில் இருந்த அனைவரும் இறந்துவிட்டனர்.இருவர் பிடிப்பட்டனர்.பிட்சுவை இழுத்துக்கொண்டு நான் தப்பி விட்டேன்.என் வீட்டில் கட்டி வைத்திருக்கிறேன்.உடனே கிளம்பி வா" என்றார். நிம்மதி பெருமூச்சு விட்டான் சந்துரு.புது நம்பிக்கை அவன் மனதில் பிறந்தது. இளங்கோ தவிர வேனில் இருந்த யாருக்கும் அவன் அடையாளம் தெரியாது.இந்த ஓட்டல் ரெஜிஸ்டரில் மட்டுமே அவன் அட்ரஸ் இருந்தது.ஆனால் போலிஸ் இங்கு மோப்பம் பிடித்து வரப்போவதில்லை. ஆக இப்போது சந்துரு சுதந்திர மனிதன். ஆனால் அவன் மனைவி எங்கோ மாட்டிக் கொண்டிருக்கிறாள். அவளுக்கு என்ன ஆச்சு என்பது முதலில் தெரியவேண்டும்.அது தெரிந்த ஆள் அந்த பிட்சு தான். "பிட்சு ...உனக்கு சாவு என் கையால் தான்" என சந்துரு முணுமுணுத்தான்.டாக்ஸி பிடித்து இளங்கோ வீட்டுக்கு போனான்.வழியில் மாலை செய்தித்தாளில் "மும்பையில் துப்பாக்கி சண்டை" என கடைகளில் தொங்க நிறுத்தி பேப்பர் வாங்கினான். வேனில் இருந்தவர்களில் இருவர் செத்துவிட்டனராம்.மூவர் பிடிபட்டனராம்.விசாரனை நடக்கிறதாம்.அவர்கள் அடிதாங்க மாட்டார்கள் என்பது சந்துருவுக்கு தெரியும்.சங்க உறுப்பினர்கள் மற்றவர்கள் பேரை சொல்லிவிடுவார்கள்.சேட்டையும் சீக்கிரம் பிடித்து விடுவார்கள்.சங்கம் மொத்தமும் காலி....இவனையும் இளங்கோவையும் தவிர. "விடமாட்டேன்...உங்கள் ஒவ்வொருவர் வீட்டு பெண்ணையும் மீட்பேன்" என சொல்லிக்கொண்டன் சந்துரு.அசாத்தியமான உறுதி அவன் மனதில் வந்திருந்தது.அவன் கண்ணில் கொலைவெறி தாண்டவமாடியது.சாகதுணிந்தவனுக்கு வரும் உறுதி அப்போது அவன் மனதில் நிரம்பியது. --------------------------------------- சேட்டு கோசல்ராம் பிள்ளையார் கோயிலுக்கு போனார்.ஒரு கவரை சந்துருவின் புனை பெயர் எழுதி உண்டியலுக்குள் திணித்தார்.கையோடு கொண்டு சென்ற ஜிலேபியை விழுங்கினார்.உள்ளே கலந்திருந்த விஷத்தால் ஜிலேபி கசந்தது.தொந்தியப்பனுக்கு ஒரு கும்பிடு போட்டார்.தள்ளாடியபடி வெளியே நடந்து வந்தார்.தலை சுற்றியது.நடைபாதையில் அப்படியே உட்கார்ந்தார். தன் வீட்டு முன் போலிஸ் ஜீப் பிரேக் போட்டு நிற்பது போல் காட்சி தெரிந்தது.அது நிஜமா பிரமையா என தெரியவில்லை.கண்னை கசக்கினார்.சின்ன வயது மோத்தியும்,மீராவும் கண்ணில் தெரிந்தனர்.இதுவும் நிஜமா பிரமையா..... "மோத்தி..மீரா.. "என முணுமுணுத்தார் சேட்டு.தங்கை மேல் அவ்வளவு பாசம் மோத்திக்கு."மீரா கே லியே குச்ச் பீ கரேகா" (மீராவுக்காக எதையும் செய்வேன்)என அடிக்கடி சொல்லுவான்.அது பொய்யில்லை.உண்மைதான்.... மகனையும் மகளையும் நினைத்தபடி கோசல்ராம் சேட் சந்தோஷமாக செத்து போனார். ------------------------------------------ சந்துருவின் டாக்ஸி இளங்கோ வீட்டை நோக்கி சென்றது. இளங்கோ வீட்டில் பிட்சு கண்விழித்தார்.அவர் எதிரே அவரை உற்று பார்த்தபடி இளங்கோ அமைதியாய் அமர்ந்திருந்தார்."குட் ஈவினிங்" என்று சொன்னார் இளங்கோ (தொடரும்) அத்யாயம் 1 அத்யாயம் 2
Post a Comment