Sunday, June 25, 2006

115.அஞ்சாதே என்று சொல்லாத ஆண்மை

இத்தனை நாள் வராத ஆசை ஒன்று என்னை திடீரென பிடித்து கொண்டது.அதாவது கதை எழுதவேண்டும் என்பதுதான்.குட்டிகதைகள் சில எழுதியிருக்கிறேன்.இருப்பினும் பெரிய தொடர்கதை ஒன்று எழுதவேண்டும் என ஆசை.இது கொஞ்சம் நீண்ட தொடர்.வலைபதிவில் தொடர்கதை எந்த அளவு வெற்றி அடையும் என தெரியவில்லை.ஆனாலும் ஆண்டவன் மேல் பாரத்தை போட்டும் உங்களை நம்பியும் எழுத துவங்கிவிட்டேன்.வார வாரம் மூன்று எபிசோட்கள் தர எண்ணியுள்ளேன் முன்னுரை சந்திரசேகரன் நீண்டநாள் வெளியூர் சுற்றுப்பயணம் போய்விட்டு திரும்பி வந்தான்.வந்தபோது அவன் மனைவி காணாமல் போயிருந்தாள்.எஙெங்கு தேடியும் அவள் கிடைக்கவில்லை.போலிஸ் புகார் கொடுத்தான்.பிறகு எதேச்சையாய் அவள் டயரி சிக்க அதில் "ஷென்ரிக்கியோ" என அடிக்கோடிட்டு எழுதப்பட்டிருந்தது. டயரியை எடுத்துக்கொண்டு போலிஸிடம் போனான்.விசாரித்து பார்த்ததில் அது கொரியாவில் உள்ள ஒரு கல்ட்டின்(Cult) பெயர் என தெரியவந்தது.அந்த மதம் புதிதாக துவங்கப்பட்டது என்றும் லீ என்ற மததலைவர் துவக்கியது என்றும் என்றும் தெரியவந்தது.சந்திரசேகரனின் மனைவி அம்மதத்தில் சேர்ந்து துறவியாகிவிட்டாள்.ஏன் அதில் திடீரென்று சேர்ந்தாள்,அவளை மீண்டும் பார்க்க முடியுமா என சந்திரசேகரனுக்கு புரியவில்லை.அந்த கல்டின் மும்பை கிளையில் விசாரிக்க முடிவு செய்து மும்பை கிளம்பினான். அந்த கல்ட்டின் அலுவலகம் சென்றபோது வெளியே அழுதுகொண்டு ஒருவர் நின்றிருந்தார்.என்ன விஷயம் என விசாரித்தபோது அவர் மகள் திடீரென இந்த மதத்தில் சேர்ந்து விட்டதாகவும்,அதன் பின் அவரை பார்க்கவே முடியவில்லை என்றும் சொன்னார்.போலீசில் புகார் கொடுத்தபோது எந்த ஆதாரமும் இல்லாததால் நடவடிக்கை எடுக்க முடியவில்லை என்றார்.எப்படி இவர்கள் ஆட்களை சேர்க்கிறார்கள்,அதன்பின் அவர்களுக்கு என்ன ஆகிறது என எதுவுமே தெரியவில்லை என சொல்லி புலம்பினார்.சந்துருவுக்கு பகீரென்றது.இப்படி இந்த கல்ட்டால் பாதிக்கப்பட்டோர் அனைவரும் சேர்ந்து ஒரு ரகசிய சங்கம் அமைத்திருப்பதாகவும் அவரவர் குடும்ப உறுப்பினர்களை மீட்பதே லட்சியம் என்றும் சொன்னார். சந்துரு தான் அந்த ஆபீசில் சென்று பேசிப்பார்ப்பதாக சொல்லி உள்ளே போனான்.உள்ளே ஒரு பிட்சு இருந்தார்.அவன் மனைவியை பார்க்க விரும்புவதாய் சொன்னான் சந்துரு."உன் மனைவி பிக்குணி ஆகிவிட்டாள்.பார்க்க முடியாது.எங்கள் மதத்தை சார்ந்தவர்கள் மட்டுமே அவளை பார்க்க முடியும்" என்றார் பிட்சு."அப்படியானால் நான் உங்கள் மதத்தில் உடனடியாக சேர்கிறேன்.அதன்பின் பார்க்க முடியுமா?" என கேட்டான் சந்துரு. (இனி....)Part 1 "எங்கள் மதத்தில் சேர்வது அவ்வளவு சுலபமா?" என்று சிரித்தார் பிட்சு."உன் முன்னாள் மனைவியை பார்க்க வேண்டும் என்பதற்காக சும்மாவாச்சும் சொல்கிறாய்.உண்மையிலேயே எங்கள் மதத்தில் சேரணும் என்றால் எங்கள் கோயில் இந்த முகவரியில் இருக்கிறது.அங்கே போய் பிட்சுகளை அணுகு" என சொல்லி ஒரு பேம்ப்லெட்டை கொடுத்தார். "உங்களை எல்லாம் ஒழிச்சு கட்டாம விடமாட்டேண்டா" என சந்துரு சத்தம் போட்டான்.பிட்சு மேல் பாய்ந்தான்.டேபிளை மேல் ஏறி அவர் முகத்தில் ஒரு குத்து விட முயன்றான்.அவர் அவனை எளிதில் தடுத்தார்.அவன் காலில் ஒரு கராத்தே தட்டு தட்ட அவன் கீழே விழுந்தான். சந்துருவுக்கு சண்டை பிடிக்க எல்லாம் தெரியாது.பள்ளியில் கிரிக்கட் ஆடியதோடு சரி,அதன் பின் உடற்பயிற்ச்சியே கிடையாது.பிட்சு பார்க்க பசு மாதிரி இருந்தார்.ஆனால் ஏதோ தற்காப்பு கலை பயின்றவர் போல் இருந்தது.அவரிடம் நாலைந்து அடி வாங்கியதும் சந்துரு நிலைகுலைந்து போனான். விண்,விண் என வலி எடுத்தது.நொண்டி,நொண்டி வெளியே நடந்து வந்தான்.வெளியே அவனை உள்ளே போக வேண்டாம் என்று சொன்ன நபர்(இளங்கோ) நின்றிருந்தார்."எனக்கும் இதுதான் நடந்தது" என அவனை பார்த்ததும் சொன்னார். "இவனுகளை ஒழிக்கணும்.வெடிகுண்டு கட்டிட்டு போக தயார்" என ஆவேசத்துடன் சொன்னான் சந்துரு."இவனை கொன்னா ஆச்சா?என் பொண்ணு எங்க இருக்கான்னு தெரியலை.உங்க சம்சாரம் எங்க இருக்காங்கன்னு தெரியலை.ஆவேசம் பிரயோஜனபடாது" என்றார் இளங்கோ. "இவங்க யாரு?ஏன் இப்படி பண்றாங்க?" என புரியாமல் கேட்டான் சந்துரு. "யாருக்கும் தெரியலை.எங்க வீட்டுக்கு நன்கொடைன்னு கேட்டு ரெண்டு பிட்சுணிகள் வந்தாங்க.என் மகள்,மனைவி கிட்ட சகஜமா பேசினாங்க.நான் ஆபிஸ் மும்முரத்துல இதை கண்டுக்கவே இல்லை.கொஞ்ச நாள் கழிச்சு அவங்க கோயிலுக்கு என் மகள் அடிக்கடி போக ஆரம்பிச்சா.திடீர்னு ஒரு நாள் பிட்சுணி ஆகப்பொறேன்னு சொன்னா.எவ்வளவு சொல்லியும் கேக்கலை.கோயிலுக்கு இனி மேல் போக கூடாதுன்னு தடுத்தோம்.நைட்டோடு நைட்டா வீட்டை விட்டு போயிட்டா.அதுக்கப்புறம் ஒரு தகவலும் இல்லை" என சொன்னார் இளங்கோ. "இவர்களால் பாதிக்கப்பட்டவர்கள் சங்கம் வைத்திருக்கிறார்கள்ன்னு சொன்னீங்களே,அங்க எதாவது உருப்படியான தகவல் கிடைச்சதா?" என கேட்டான் சந்துரு. "எல்லார் வீட்டிலும் இதே கதைதான் நடந்திருக்கு.சகஜமா பேசி கோயிலுக்கு கூப்பிடுவாங்க.அங்கபோன கொஞ்ச நாள் கழிச்சு பிட்சு ஆறேன்,பிட்சுணி ஆறேன்னு ஓடினவங்க தான் அதிகம்.எல்லா வயசு ஆண்களும்,பெண்களும் இப்படி ஓடிருக்காங்க.." என்றார் இலங்கோ "ஒருத்தரை பத்தியும் தகவல் கிடைக்கலையா?" என கேட்டான் சந்துரு. "எல்லாத்தையும் ரோடில் நின்னுகிட்டே பேச முடியுமா?இன்னைக்கு சாயந்திரம் ஒரு சேட்டு வீட்டுல சங்க மீட்டிங் நடக்குது.அங்க வாங்க தெளிவா பேசலாம்,இப்ப முதல்ல டாக்டர் கிட்ட போலாம்.உங்க கால் வீங்கிருக்கு" என சொன்னார் இளங்கோ. (தொடரும்)
Post a Comment