Monday, October 01, 2007

341.பீளமேடு

கோவையில் பல பகுதிகள் ஒவ்வொரு விஷயத்துக்கும் புகழ் பெற்றவை என்றாலும் எனக்கு மிகவும் பிடித்த பகுதி பீளமேடு தான்.எனக்கு மட்டுமல்ல கோவையில் உள்ள பலருக்கும் பீளமேடு என்றாலே தனிபாசத்துடன் உருகுவார்கள்.ஏன் என்றால் கோவையின் பெரும்பாலான தனியார் கல்லூரிகள்,ஸ்கூல்கள் பீளமேட்டில் தான் இருக்கின்றன என்பதால் கோவைகாரர்கள் பலரும் இங்கேதான் படித்து,தங்கி,இங்குள்ள மெஸ்களில் உண்டு மகிழ்ந்திருப்பார்கள். அதனால் பலருக்கும் மறக்க முடியாத ஊர் பீளமேடு என்றால் அது மிகையல்ல.

கோவை காந்திபுரம் பஸ் நிலையத்தில் காலை 8 மணி முதல் 10 மணிவரை செல்லும் பீளமேடு பஸ்களில் இடம் கிடைப்பது சிவாஜி படத்துக்கு டிக்கட் கிடைப்பதை விட மிக கடினமான காரியம்.அத்தனை கூட்டம் பஸ்களில் இருக்கும்.அத்தனையும் மாணவ மாணவியர் கூட்டம்.காந்திபுரம் டூ ஓப்காலேஜ் போகும் பஸ்கள் வழியெங்கும் நிற்கும் அனைத்து நிறுத்தங்களிலும் ஏதாவது கல்வி நிலையம் இருக்கும்.அப்படி ஒரு பஸ்ஸீல் ஏறிக்கொள்வோம்.ஓப்ஸ் காலேஜுக்கு டிக்கட் வாங்கிக்கொள்வோம்.

பஸ் முதலில் நிற்பது மகளிர் பாலிடெக்னிக் ஸ்டாப்பில்.இது கோவையின் தொன்மையான பாலிடெக்னிக். பாப்பநாயக்கன் பாளையம் ஊர் இங்கே துவங்குகிறது என்று சொல்லலாம்.பஸ் அடுத்து நிற்பது மணி ஸ்கூல் ஸ்டாப்பிங்கில்.மணி ஸ்கூல் கோவையின் மிக புகழ் பெற்ற நிறுவனம்.அரசு உதவி பெறும் தனியார் பள்ளி இது.இதன் எதிரே குப்புசாமி நாயுடு ஆஸ்பத்திரி உள்ளது.லட்சுமி மில் நிர்வாகத்தினரின் கட்டுப்பாட்டில் இருக்கும் இந்த இரு நிறுவனங்களும் மிக புகழ் பெற்ற நிறூவனங்கள்.திரையுலகை கலக்கி வந்த பாக்கியராஜ் மணிஸ்கூல் மாணவர்தான்.பாப்ப நாயக்கன் பாளையத்தில் பிறந்தவர்.மணிஸ்கூலில் பாக்கியராஜ் அடித்த லூட்டிகளை அந்த ஆசிரியர்கள் கதை கதையாய் சொல்வார்கள்.

அடுத்த ஸ்டாப்பிங் லட்சுமி மில்ஸ்.கோவையின் மிகப்பெரும் மில் இது.ஆயிரக்கணகான தொழிலாளர் பணிபுரியும் நிறுவனம் இது.இப்போது சற்று நலிந்த நிலையில் இருந்தாலும் பிக்-அப் செய்துவிட்டது என்கிறார்கள்.லட்சுமி மில் ஸ்டாப்பிங்கில் தான் புகழ் பெற்ற பீளமேடு துவங்குகிறது.

அடுத்த ஸ்டாப்பிங் நவ இந்தியா. நவ இந்தியா எனும் பத்திரிக்கை அந்த காலத்தில் சக்கை போடு போட்டதாம்.ஆனால் இப்ப அந்த நினைவாக பீளமேட்டுகாரர்களுக்கு இருப்பது நவ இந்தியா பஸ் ஸ்டாப்தான்.நவ இந்தியா பஸ் ஸ்டாப்பில் இறங்கினால் எஸ்.என்.ஆர் கல்லூரி மற்றும் இந்துஸ்தான் கல்லூரி ஆகியவை இருக்கும்.

எஸ்.என்.ஆர் கல்லூரி நிர்வாகத்தினர் கோவையில் புகழ் பெற்ற ராமகிருஷ்ணா மருத்துவமனையை நடத்தி வருகிறார்கள்.கோவையின் புகழ் பெற்ற தனியார் கல்லூரிகளில் இது ஒன்று.இந்துஸ்தான் கல்லூரி புதிது என்றாலும் சில வருடங்களுக்கு முன்பு 17 நடிகைகளை கல்லூரிக்கு கூட்டி வந்து கோவையையே ஒரு கலக்கு கலக்கி விட்டார்கள்.

அடுத்த ஸ்டாப்பிங் எஸ்ஸோபங்க். இங்கே பீளமேடு சாந்தி தியெட்டர் இருக்கும்.சி வகை திரையரங்கு என்பதைதவிர வேறு சிறப்பு ஏதும் இல்லை.

அடுத்த ஸ்டாப் தான் பீளமேடு மெயின் ஸ்டாப்.இதை ராதாகிருஷ்ணா மில் ஸ்டாப் என்றும் அழைப்பார்கள்.இங்கே கோவையின் புகழ் பெற்ற கல்லூரிகளான பி.எஸ்.ஜி பாலிடெக்னிக், பி.எஸ்.ஜி எஞினியரிங்,ஆகியவை உண்டு.பி.எஸ்.ஜிக்கு எதிரே என்.எம்.பி பாக்கரியில் மாணவர் கூட்டம் அலைமோதும்.(பத்து வருடத்துக்கு முந்தியே இங்கே பர்கர் பாணியில் ஒரு ஐட்டம் செய்து அசத்தினார்கள்.)பப்ஸ்,கேக்,டீ ஆகியவை இங்கே புகழ் பெற்ற ஐட்டம்கள்.

கோவையின் புகழ் பெற்ற பழமுதிர் நிலையம் இங்கே உண்டு.அனைத்துவகை கனிகளும்,பழசாறும்,காய்கனிகளும் இங்கே கிடைக்கும்.இந்த ஸ்டாப்பிங்கில் சூப்பரான மெஸ்கள் பல உண்டு.

பி.எஸ்.ஜி பாலிடெக்னிக் காண்டினுள் நுழைந்தால் ஓட்டல்களுடன் போட்டி போடும் வெரைடீயில் உணவுகள் கிடைக்கும்.அன்னபூர்ணா மாடலில் சாம்பாரில் மிதக்கும் இட்லி இங்கே ஃபேமஸ்.பாலிடெக்னிக்குக்கு எதிரே இருக்கும் பி.எஸ்.ஜி மேனேஜ்மென்ட் இன்ஸ்டிட்யூட் கோவையின் புகழ் பெற்ற பிசினஸ் பள்ளியாகும்.அமிர்தா மேனேஜ்மென்ட் இன்ஸ்டிடூய்ட் வரும்வரை பி.எஸ்.ஜி தான் கோவையின் நம்பர் ஒன் பிசினஸ் ஸ்கூலாக இருந்தது.

இதே ஸ்டாப்பிங்கில் இருக்கும் சர்வஜன மேல்நிலைப்பள்ளிக்கு மகாத்மா காந்தி ஒருதரம் வருகை புரிந்திருக்கிறார்.அவர் விருந்தினர் வருகை கையேட்டில் கையெழுத்திட்ட குறிப்பு இன்னமும் அந்த பள்ளி நிர்வாகத்தினரால் பாதுகாக்கப்படுகிறது

பீளமேடு மெயின் பஸ்ஸ்டாப்பிலேயே நின்று விட்டால் எப்படி?தொடர்ந்து போவோம்.அடுத்த ஸ்டாப்பிங் கிருஷ்ண்ணம்மாள் கல்லூரி.இங்கே கிருஷ்ணம்மாள் மகளிர் பள்ளியும், கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரியும் உள்ளன.கோவை நகர இளவட்டங்கள் மாலை நேரமானால் இந்த பக்கம் தான் வட்டமடிப்பார்கள்.ஆனால் கல்லூரி காம்பவுண்டிலேயே போலிஸ் ஸ்டேஷன் இருப்பதால் அடக்கித்தான் வாசிப்பார்கள்:).இந்த நிறுவனமும் பி.எஸ்.ஜி க்ரூப்பை சேர்ந்ததுதான்.இதற்கு அருகில் பி.எஸ்.ஜி மருத்துவமனை இருக்கும்.கோவையின் மிகபெரிய மருத்துவமனை இது.

கிருஷ்ணம்மாள் ஸ்டாப்பிங்கை தாண்டினால் பீளமேட்டின் மெயின் ஏரியா முடிந்துவிடும்.அடுத்து ஓப்ஸ் காலேஜ் என்ற பஸ் ஸ்டாப்பில் இறங்கினால் அங்கே கோவை மருத்துவ கல்லூரி,அரசினர் ஆண்கள் பாலிடெக்னிக்,பி.எஸ்.ஜி கலைகல்லூரி, சி.ஐ.டி எஞினியரிங் கல்லூரி, ஜி.ஆர்.டி கல்லூரி, ஜி.ஆர்.ஜி ஸ்கூல், கே.எம்.சி எச் மருத்துவமனை,அரவிந்த் கண் மருத்துவமனை ஆகியவை இருக்கும். அதுபோக கோவை விமான நிலையம் இருப்பதும் இங்குதான்.

பீளமேடு கல்வியுடன் ஆன்மிகத்தையும் அளிக்கும் ஊர்.இங்கே அகிலாண்டீஸ்வரி அம்மன் கோயில்,பிளேக் மாரியம்மன் கோயில், கரிவரதராஜ பெருமாள் கோயில் ஆகியவற்றில் பக்தர் கூட்டம் அலைமோதும்.

ஆஸ்பத்திரிகளும், பள்ளிகளும்,கல்லூரிகளும்,மில்களும் நிரம்பிய இடமாக பீளமேடு இருப்பதால் இங்கே கூட்டம் அலைமோதும்.மெயின்ரோட்டை விட்டு ஊருக்குள் போனால் ஏகப்பட்ட கிரைண்டர் தொழிற்சாலைகள், பவுண்டரிகள் ஆகியவை இருக்கும்.இங்கே ஏராளமான தொழிலாளர் வேலை பார்ப்பார்கள்.பீளமேடு சிறக்க காரணமே இந்த சிறுதொழில்கள் தான்.இவைதான் கோவையின் மூலதனமே.ஆம் சுயதொழில் செய்து தாமும் முன்னேறி நாட்டையும் முன்னேற்றும் துடிப்பான உழைப்பாளிகள் நிரம்பிய இடமே பீளமேடு.

42 comments:

இலவசக்கொத்தனார் said...

அண்ணா, அப்படியே நம்ம விமானநிலையத்தைச் சொல்லாம விட்டுட்டீங்களே!! :))

Unknown said...

சொல்லிருக்கேன் கொத்ஸ்.ஒரே வரில சொல்லிருக்கேன்(கடைசிக்கு மூணாவது பத்தில:-)

Unknown said...

update:

பதிவில் சேர்க்கப்பட்டது

பீளமேடு ஸ்டாப்பிங்கில் இருக்கும் சர்வஜன மேல்நிலைப்பள்ளிக்கு மகாத்மா காந்தி ஒருதரம் வருகை புரிந்திருக்கிறார்.அவர் விருந்தினர் வருகை கையேட்டில் கையெழுத்திட்ட குறிப்பு இன்னமும் அந்த பள்ளி நிர்வாகத்தினரால் பாதுகாக்கப்படுகிறது

ILA (a) இளா said...

தொடர்ச்சி:
ஓப்ஸ் காலேஜ் தாண்டினவுடனே இருப்பாது மருத்துவ கல்லூரி,CITக்கும் இதேதான் நிறுத்தம். அடுத்தது GPT/GRD கலைக்கல்லூரி மற்றும் பள்ளிக்கான நிறுத்தம். GPT என்பது அரசு பாலிடெக்னிக் ஆகும். இதோடு கோவை மாநகராட்சி முடிகிறது என்றாலும் அடுத்த கட்டடம் பி எஸ்ஜி கலைக் கல்லூரி. இப்போது அதே நிறுத்தம் அரவிந்த கண் மருத்துவமனைக்காக அதிகம் பயன் படுகிறது. PSGCAS க்கு எதிரே கஸ்தூரி சிரினிவாசன் art gallery உள்ளது. அடுத்தது SITRA.

Unknown said...

இளா

நன்றி.இதையும் எழுதியிருக்க வேண்டும்.பதிவு நீளம் அதிகமானதால் விட்டுவிட்டேன்.குறிப்பாக சிட்ரா என்பது கோவையின் புகழ் பெற்ற ஆராய்ச்சி நிலையம்.அதுபோக இதே பஸ் ஸ்டாப்பில் இரங்கி உள்ளே போனால் கொடிசியா மைதானமும் இஸ்கான் கோயிலும் உண்டு.கொடிசியா மைதானத்தின் புகழ் பெற்ற இன்டெக் கண்காட்சி வருடா வருடம் நடக்கும்

பாரதி said...

பீளமேடுன்னா முதல்ல ஞாபகம் வருவது..
கீர்த்தி மெஸ். அப்புறம் இன்னும் ஒன்று முக்கியமான்து.. சாதியம் பார்ப்பது...
அங்கு உள்ள பிஎஸ்ஜி குருப் நிருவனங்கள் அனைத்திலும் முக்கியமான ஒரு பிரிவினர்களுக்கு மட்டும் முதலிடம் கொடுப்பது....

பெருசு said...

அண்ணா,

அப்டியே கண்ணு மின்னாடி கொண்டாந்துட்டீங்களே,ஒரே நேரத்துலே நெறய கொசுவத்தி
கண்ணு முன்னாடி சுத்துது.

நம்ம விமான நிலைய ரோட்லே
பொழுது சாயற நேரத்துலே வாக்கிங்
போயிருக்கீங்களா.

அனுசுயா said...

அப்டியே சிஐடிக்கு எதிர்த்தாப்புல ஜென்னி க்ளப் ஆரம்பிச்சு இருக்காங்க சூப்பர் கட்டிடம் அதுக்கு பக்கத்துல உள்ள போனா கொடிசியாவுக்கு எதிர்த்தாப்புல இஸ்கான் கோவில் இருக்குங்க அங்க பொங்கல் பிரமாதமா இருக்கும். அதை எப்டி விட்டுட்டீங்க. :)

மீட்டர்பாலா said...

ஐயா,

நான் படிச்சப்ப சுத்துன‌ இடங்கள கண்முன்ன கொண்டாந்துட்டீங்க. உண்மையிலியே பழைய நினைவுகள நினைச்சி உருகிட்டேன். என்.எம்.பி மறக்க முடியாத இடம்...

மங்கை said...

ஏனுங்கண்ணா இது உங்களுக்கே நல்லா இருக்கா...இப்படி கொசுவத்தி சுதோ சுத்தி சுத்தி அழுவாச்சியாவருதே
பிறந்து வளர்ந்த பாப்பநாயக்கன்பாளையம். படிச்ச(?) மணீஸ் ஸ்கூல், கிரிஷ்ணம்மாள் கல்லூரி, பி.எஸ்.ஜி ஆர்ட்ஸ், பணி புரிந்த குப்ஸ் மருத்தவமனை, பி.எஸ்.ஜி.மருத்துவமனை..இப்படி கண் முன்னாடி டேன்ஸ் ஆடுதே..

நினப்பு வந்ததும் ஒரே மூச்சுல எழுதிடீங்களா...ஏன்னா.. நான் பீளமேடு பேர பார்த்ததும் எப்ப படிக்க ஆரம்பிச்சேன்
எப்ப முடிச்சேன்னே தெரியலை..:-))

Suka said...

செல்வன் :)

நவ இந்தியா அருகில் உள்ள ஒரு பெரியபள்ளியை குறிப்பிடாததை மென்மையாக கண்டிக்கிறேன்..

இன்னும் சிலவருடங்களில் பழைய அவிநாசி சாலையை நினைவுகளில் மட்டுமே பார்க்கமுடியும் போலிருக்கிறது..

ஹோப்ஸ்ல ரைட் எடுத்து அப்படியே எங்க வீட்டுப் பக்கமும் வந்துட்டு போங்க :)

Subbiah Veerappan said...

இன்றைய நிலமை
பீளமேடு மைனஸ் இயற்கை அழகு!
ஆறுவழிச் சாலை என்ற பெயரில்
இருபுறமும் இருந்த ஆயிரத்திற்கும்
மேற்பட்ட மரங்களை
வெட்டிச்சாய்த்து விட்டார்கள்
வந்து பார்த்தால்
வருத்தம் கொள்வீர்கள்!

Unknown said...

பாரதி,

நன்றி.கீர்த்தி மெஸ் பெயர் மறந்துவிட்டது.இருந்தாலும் அங்கு பல மெஸ்களில் சாப்பிட்டிருக்கிறேன்.இங்கும் சபபிட்டிருப்பேன் என நினைக்கிறேன்.

பி.எஸ்.ஜியில் சாதியம்- தெரியவில்லை.நான் அங்கே படித்ததில்லை.வேலை பார்த்ததும் இல்லை.அதனால் இது பற்றி தெரியவில்லை.

Unknown said...

பெருசு

நன்றி.விமான நிலய ரோட்டில் வாக்கிங் போனதில்லை.அதுக்கு தான் ரேஸ்கோர்ஸ் இருக்கே?

விமானநிலையத்துக்கு உள்ளே போனது இதுவரை ஒரே தரம் தான்:-).வாழ்க்கையின் முதல் விமான பயணமும் அதுதான்.

Unknown said...

மீட்டர் பாலா

நன்றி.என்.எம்.பி ஒரு நோஸ்டால்ஜிக்கான இடம்.தம்+ டீ+பப்ஸ் அடிக்க சிறந்த இடம்.வெரைட்டியான பேக்கரி ஐட்டம்களை குறைந்த விலையில் கொடுப்பார்கள்.விலை என்பதை விட அங்கே கிடைத்த நட்புகள் ஏராளம்

Unknown said...

மங்கை

நிஜம்தான்.பீளமேடு நினைவு வந்ததும் உக்காந்து ஒரே மூச்சில் எழுதிட்டேன்.இன்னமும் எழுத ஏராளம் இருக்கு.காமராஜர் ரோட்டில் கிடைக்கும் பானிபூரி,சிங்கை கண்ணனின் மோகன் ஸ்வீட் ஸ்டால்,அங்கே இருக்கும் நண்பர்கள்.....மறக்க முடியாத ஊர் பீளமேடு

Unknown said...

சுகா

நவ இந்தியா அருகே உள்ள கோபால் நாயுடு பள்ளியை தானே குறிப்பிடுகிறீர்கள்?.அங்கே படித்ததில்லை என்பதால் அது பற்றி அதிக விவரம் தெரியவில்லை.அதனால் தான் எழுதலை.

உங்க வீடு காமராஜர் ரோட்டிலா இருக்கிறது?அந்த ரோட்டில் சுற்றி திரிந்த நாட்கள் ஏராளம்.சிங்காநல்லூர் கூத்தாண்டவர் விழாவுக்கு வருடா வருடம் ஆஜராயிடுவேன்.நிஜமான கிராமிய திருவிழா அது.

வாத்தியார் ஐயா

மரங்களை வெட்டியது வேதனையாக இருந்தாலும் ஆறு லேன் ரோடு போட்டது மகிழ்சியாக இருக்கிரது.ஏராளமான விபத்துக்கள் நடக்கும் இஅம் அவினாசி சாலை.இனியாவது மரங்களை நடுவார்களா பார்ப்போம்.இல்லாவிட்டால் மக்களாக நடவேண்டியதுதான்

மங்கை said...

செல்வன் நீங்கள் ஒன்டிப்புதூரா.. ஸ்டேன்ஸ் காலனி?

Unknown said...

மங்கை

நான் ஒண்டிபுதூர் இல்லை.சொந்த ஊர் பீளமேடுதான்.பிறகு நாலைந்து இடம் மாறிவிட்டோம் என்றாலும் படித்தது எல்லாம் பீளமேடுதான்.

Anitha(Nikki's mom) said...

பீளமேடுங்கற தலைப்பைப் பார்த்து படிக்க வந்தேன். அப்பிடியே ஊரை கண்முன்னாடி நிறுத்திட்டீங்க. அழுகையா வருது, எப்போடா ஊரைப் பாக்க போவோமுன்னு.பிளேக் மாரியம்மன் கோவிலுக்கு நேர் பின்னாடி தான் எங்க பாட்டி வீடு. வளர்ந்தது பூரா அங்க தான்.

குறிப்பு:
1 கிருஷ்ணம்மாள் பள்ளிக்கும், ஹோப்ஸ்க்கும் நடுவுல வரதராஜா மில்ஸ் ஸ்டாப் இருக்கும்.

2 பீளமேட்டுல பெரியமாரியம்மன் கோவிலும் பிரசித்தி. மார்கழி மாசம் காலைல பாட்டி கூட ரவுண்ட் அடிக்க கிளம்பினா, மொதல்ல கரிவரதராஜப் பெருமாள் கோவில், அடுத்து வர்ற வழில பெரிய மாரியம்மன் கோவில், அடுத்து அகிலாண்டேஸ்வரி அம்மன் கோவில், கடைசியா வீட்டுப்பக்கம் இருக்க பிளேக் மாரியம்மன் கோவில்.

ம்ம்ம்ம்... இனி கொஞ்ச நாளைக்கு ஆட்டோகிராப் தான்.

Suka said...

செல்வன்..

காமராஜர் ரோடு தான் .. ESI க்கு எதிரே ..

அப்போது அரவான் பண்டிகை ஒரு வாரக் கொண்டாட்டம்.. மகாபாரதத்திற்கும் அதற்கும் உள்ள தொடர்பெல்லாம் தெரியாமல் ..பண்டிகை ..பட்டாசு .. கலர் கலராய் தோரணம் தோரணமாய் சீரியல் லைட் .. ( ஒகே இதோட நிறுத்திக்கலாம் .. அடுத்த பதிவுக்கு டாபிக் ரெடி :)) ) அது ஒரு பொற்காலம்..

ப்ளேக் மாரியம்மன் கோவில் திருச்சி ரோட்டில் கூட இருக்கிறது .. கொஞ்சம் சின்ன கோவில் ..குளத்தேறி அருகில் அழகாக இருக்கும் .. அந்த கோவிலைப் பற்றி சின்ன கவுண்டர் செந்தில் ஸ்டைலில் ஒரு சந்தேகம் கூட இருந்தது .. :P

கோவை மக்களை கொசுவர்த்தி சுத்தவைத்துவிட்டீர்களே..

Suka said...

செல்வன் , கோபால் நாயுடுவே தான் :)

தனசேகர் said...

பீளமேடு பற்றி எழுதி ... பழசை எல்லாம் ஞாபகப்படுத்தி விட்டீர்கள் ...

இரவு 12 ‍ . . 1 மணி வரை லேபில் இருந்துவிட்டு .. சிங்காநல்லூர் ரோட்டில் கதவை சாத்திவிட்டு திறந்து வைத்திருக்கும் டீ கடையில் டீ அடிப்பதே தனி சுகம்தான். .

என்ன .. இப்பொழுது எனக்குத்தெரிந்து எல்லா கல்லூரி விடுதியிலும் freenight இல்லாமல் செய்து விட்டார்கள் :(

K.R.அதியமான் said...

கோவையில், குமரகுரு கல்லூரியில் படித்து, பிறகு அங்கு பங்கு சந்தை
வர்த்தகதில் (1991- 92) ஈடுபட்ட எனக்கு, பீளமேடு பற்றி படிப்பதில் மிக்க மகிழ்சி.

எஸ்ஸோ பங்க என்பது அமெரிக்க நிருவனமான ஸ்டாண்டர் ஆயில் (S.O) பெட்ரோல் பங்க் இருந்த இடம். 1972ல் சோஸியலிச அரசாங்கத்தால், 'தேசிய மயமாக்கப்ட்டு'. இப்போது ஊழல் மயமாகி, கலப்பட பெட்ரோல் ஆக விற்க்கப்படுகிரது....

Unknown said...

அனிதா

இப்ப லேடஸ்டா எஸ்ஸோ பங்க் கிட்ட ஒரு ஆஞ்சனேயர் கோயில் கட்டிருக்காங்க.கூட்டம் அலைமோதுது.அடுத்த தரம் போனா போயி பாருங்க.

வரதராஜா மில்ஸ்,ஆர்கஸ்,காய்கடை - இந்த மூணு ஸ்டாப்பிங்கையும் விட்டுட்டேன்.அப்ப ஞாபகம் இருந்தது.ஆனா நீளம் அதிகமானதால் விட்டுட்டேன்

Unknown said...

சுகா

குளத்தேரி கிட்ட இருக்கும் மாரியம்மன் கோயில் நோம்புக்கு ஓரிருமுறை வந்திருக்கிறேன்.ஆனால் அரவான் பண்டிகையை பீட் அடிக்க கோயமுத்தூரில் எந்த கோயில் திருவிழாவும் கிடையாது(கூட்டத்தில் அல்ல, பொழுதுபோக்கில்).

ஆடிமாசம் வந்தா கோவையே மாரியம்மன் நகரா அல்ல மாறிடும்?

கோபால் நாயுடு ஸ்கூல் போக அங்கே ஈ.பாலகிருஷ்னா நாயுடு ஸ்கூல் என ஒன்றும் இருக்கிறது.அதன் நிறுவனர் தமிழில் பல நல்ல நாவல்களை எழுதியிருக்கிறார். அதில் டணாய்க்கன் கோட்டை எனும் சரித்திர நாவல் மிக புகழ் பெற்றது.கிடைத்தால் படித்து பாருங்கள்.மிக அழகான சரித்திர கதை

Unknown said...

தனசேகர்

இப்பல்லாம் 11 மணிக்கு எல்லா கடையையும் மூடிவிட போலிஸ் கெடுபிடி.கோவையில் நைட் லைபே இல்லாமல் போய்விட்டது:(

கல்லூரி விடுதிகளிலும் கட்டுப்பாடு அதிகரித்திருப்பது உண்மை.அதனால் பல மாணவர்கள் டவுனில் மேன்ஷன் எடுத்து தங்குகிறார்கள்.

Unknown said...

அதியமான்

குமரகுரு கல்லூரி கோவையில் புகழ் பெற்ற கல்லூரி ஆச்சே?சின்னவேடம்பட்டி சின்ன ஊர் என்றாலும் அதில் மூணு காலேஜ் வந்து ஊரில் ரியல் எஸ்டேட் விலை எகிறிடுச்சு.அங்கே மூணு காலேஜ் இருந்தும் நல்ல மெஸ் இல்லை என்ற குறைபாடு உண்டு.நல்ல சாப்பாடு வேணும்னா கணபதி வந்துதான் சாப்பிடவேண்டும்.

எஸ்ஸோவின் தாய்நிறுவனம் ஸ்டாண்டர்ட் ஆயில் இப்ப எக்ஸான் மோபில் ஆயிடுச்சு.உலகின் நம்பர் ஒன் பெட்ரோலிய நிறுவனம் அது.இந்திய பெட்ரோலிய துறையை பற்றி எழுதினால் எழுதிக்கொண்டே போகலாம்.பெட்ரோலிய ரிடெயில் இன்னமும் அரசின் கட்டுபாட்டில் இருப்பது, காஸ் மானியம்,தனியார் மய எதிர்ப்பு,பெட்ரோலிய துறை அமைச்சர்கள்(வாழப்பாடி:)),சூடானில் இந்தியன் ஆயில் இப்படி பல விசயங்களை எழுதலாம்.

மங்கை said...

போதுங்கண்ணா...ஆளாளுக்கு இப்படி புட்டு புட்டு வைக்கறீங்களே..ஹ்ம்ம்ம்
:-(((

Anonymous said...

எனக்கு பூளைமேடு சொந்த ஊரு இல்லைன்னாலும் மூணு வருசம் 'வந்து போன' அனுபவம் உண்டு. டே ஸ்காலரா டெக்-ல படிச்சாலும் எங்க சரணாலயம் வரதராஜா மில் எதிரே இருக்கும் டெக் அடிசினல் ஹாஸ்டல். எங்க ஃபேவரைட் உணவகம் என்னவோ 'அய்யர் கடை'தான். மசால் தோசையும், தக்காளி ஊத்தாப்பமும் அப்போதுதான் விருப்ப உணவானது. கம்பைண்ட் ஸ்டடி என கூத்தடிக்கும்போது இரவுகளில் சாப்பிடச் செல்வது ஹோப் காலேஜ் ஏரியாவிலிருக்கும் மெஸ்களுக்கு. oh.. those nostalgic moments!!!

Anonymous said...

Keerthi mess enbathai vida "aunty mess" endarae pala perukum ternitha peyar....

NMB patri kuripitathu miga porutham..PSG TECH manvaragal(sila) campus il iruntha neram vida NMB matru darshan vasalagalil iruntha neram aathigam!!

Anonymous said...

KMCH ஹாஸ்பிடல் கூட ஒரு முக்கியமான லேண்ட் மார்க்தான் இல்லையா?

K.R.அதியமான் said...

///குமரகுரு கல்லூரி கோவையில் புகழ் பெற்ற கல்லூரி ஆச்சே?சின்னவேடம்பட்டி சின்ன ஊர் என்றாலும் அதில் மூணு காலேஜ் வந்து ஊரில் ரியல் எஸ்டேட் விலை எகிறிடுச்சு.அங்கே மூணு காலேஜ் இருந்தும் நல்ல மெஸ் இல்லை என்ற குறைபாடு உண்டு.நல்ல சாப்பாடு வேணும்னா கணபதி வந்துதான் சாப்பிடவேண்டும்.///

enna Selvan,

neengalam ippadi sonna eppadi ?
real estate price hikes due to
excess money supply by defict financing govts. there may be some local hikes due to prosperity thru
entrepriese, etc. but if money supply and deficts of govts are tightly controlled in proportion to
GDP annual growth, there may be very little inflation.

as land is commodity which cannot be prodcuced, its price soars ;

also in India, where-ever black money is generated, the local real estate prices increase in proportion. the best place to stash black (or even white) money, as a hedge against inflation and for security.

real estate has not spiked so much near thriruvannamali, even throght there a couple of engg collages nearby...

and KCT was not so glorious when we studied there in 1986-90. and our first two years were held in NPT campus, Pollachi. and i spent some years in Thirupur. And for three years i traded in yarn at Karur (depot for a major mill near Anuur). still cherish memories and nostalgia about life in Gandhipuram.

my Dad studied in P.S.G Arts (1959) and we spent many many years in Coimby, which is like a second home town for us...

Kasi Arumugam said...

நல்ல மீள்பார்வை செல்வன்.

//சின்னவேடம்பட்டி சின்ன ஊர் என்றாலும் அதில் மூணு காலேஜ் வந்து ஊரில் ரியல் எஸ்டேட் விலை எகிறிடுச்சு.//

அப்படியா? அங்க மட்டுமா, எல்லாப்பக்கமுந்தான்.

சாயிபாபாகாலனியில் என் எஸ் ஆர் ரோட்டிலிருந்து 1 கிமி உள்ளே போய் செண்ட் 7 லட்சம்!

-சின்னவேடம்பட்டியிலிருந்து காசி.

Unknown said...

மங்கை,சித்ரன்,அதியமான்,காசி மற்றும் அனானிமஸ்

நன்றி

சித்ரன்,

KMCH கோவையின் பெரிய ஆஸ்பத்திரிகளில் ஒன்று

அதியமான்,காசி

சின்னவேடம்பட்டியில் ஒரு சின்ன தடுப்பணை கட்டியதும் அதுவரை அதலபாதாளத்தில் இருந்த அந்த குக்கிராமத்தின் ரியல் எஸ்டேட் விலை ஏறியது.(80களில்).அப்புறம் குமரகுரு, சி.எம்.எஸ்,சங்கரா கல்லூரிகள் தலைகாட்டின.(80, 90களில்).அப்போதும் ரியல் எஸ்டேட் நல்ல விலைக்கு போனது.ஆனால் காசி சொன்னதுபோல் கடந்த இரு வருடங்களாக ரியல் எஸ்டேட் கோவை முழுக்க எகிறிவிட்டது.

மூணு காலேஜ் இருக்கு என்றுதான் பெயரே தவிர சின்னவேடம்பட்டிக்கு சரிவர பஸ் வசதி இல்லை(இப்போது என்ன நிலைமை என தெரியாது).அங்கே இருக்கும் மடத்தில் அருமையான கோயில்கள் உள்ளன.அழகான கிராமம்.

ரியல் எஸ்டேட் விலை உயர்வுக்கும், குறைவுக்கும் அதியமான் சில காரணங்களை குறிப்பீட்டிருந்தார். கோவையை பொறுத்தவரை குண்டுவெடிப்புக்கு பிறகு சில வருடங்கள் மந்தமாக இருந்த ரியல் எஸ்டேட் பிறகு பொருளாதாரம் பிக்கப் ஆனதாலும் டைடல் பார்க் வரவிருப்பதாக சொல்லப்பட்டதாலும் உச்சத்துக்கு போனது.

அமெரிக்காவில் ரியல் எஸ்டேட் உச்சத்தில் இருந்து இப்போது விழுந்து கொண்டிருக்கிறது.1890யில் என்ன விலையோ அதே விலையில் (inflation adjusted) இப்போது சில ஊர்களில் நிலம் கிடைப்பதாக டைமில் படித்தேன்.

நகர்புற நில உச்சவரம்பு சட்டத்தை மத்திய அரசு கொண்டுவந்ததால் இந்தியாவில் முன்பு நிலத்தின் விலை செயற்கையாக ஏறியது.வட்டிவிகிதம், வீட்டுகடன், வருமானம் போன்றவை நிலத்தின் விலையை தீர்மானிக்கும் காரணிகள்

Anonymous said...

நானும் பி.எஸ்.ஜி லதான் படிச்சேன். ஹோப் காலேஜ் லதான் வீடு. ஹோப் காலேஜ்க்கு அடுத்த பஸ்டாப் UMS பேக்ட்ரி, கோவை மருத்துவக் கல்லூரி (CMS) எல்லாம் விட்டுடீங்க.

Unknown said...

இனியவன்

மறக்கலை,ஆனால் பதிவு நீளம் அதிகமானதால் விட்டுட்டேன்.இந்த இடம் எல்லாம் பிறந்து/வளர்ந்த இடமாச்சே?

வெட்டிப்பயல் said...

எல்லா இடத்தையும் கண் முன்னாடி கொண்டு வந்துட்டீங்க...

சூப்பர் பதிவு :-)

K.R.அதியமான் said...

Kovai Ayyamuthu is my icon and inspiring hero :

To : Thriru Sujatha

Dear Sir,

"Enadu Ninavugal" by Kovai Ayyamuthu (1898-1975) is a remarkable autobiography of a remarakble personality. Freedom fighter, Gandhian, poet,
writer-director,entreupreuner and agriculturist, whose career took many turns. Served in WW 1 in Iraq,
worked in Rangoon, became a mechant in Coimbatore ;after hearing Gandhiji's call, joinned Congress and established Kadar movement in Tirupur and TN ; was collegue of EVR,C.S and Kamaraj and Kalki Sadasivam in 1930s and 40s.(jailed in Vaikom struggle).

And was a sisya of Rajaji till the end. Helped establish the Gandhi Ashram near Tiruchengode in 1925.
Quaerelled with Gandhiji over an issue and resigned from Khadi movement in 1942 and went on to become a successful trader and businessman in Coimbatore ;
wrote and directed the film "Kanchan" in 1947 at
Coimbatore Central Studios (jupiter films) ; and finally settled down as agriculturist near Pollachi in 1950. N.Mahalingam was his sisya.Subsequently joined Swatanta party under Rajaji.Worked tirelessly till the end.

His book continues to inspire me and i treasure it.

Thanks & Regards
K.R.Athiyaman

ஓகை said...

செல்வன்,

கொசுவர்த்தியை ஒரு சுருள்வில் போல் தொடர வைத்துவிட்டீர்கள். நான் படித்தது GCT யில். ஐந்து வருட கல்லூரி விடுதி வாழ்க்கையில் அந்நாளின் கோவை நகரமே எங்களுக்கு அத்துபடி ஆகியிருந்தது. PSG Tech லும் CIT யிலும் பல நண்பர்கள் இருந்ததால் நீங்கள் விவரித்த பீளமேடு பகுதி நான் அதிகம் சென்று வந்த பகுதி.

அப்போது (1974-79) தமிழகத்திலேயே சுமார் பத்து பொறியியல் கல்லூரிகள்தான் இருந்தன. அவற்றில் மூன்று கோவை நகரிலேயே இருந்தது மிகப்பெரிய பெருமை. அவற்றிலும் இரண்டு கல்லூரிகள் இந்த பீளமேடு பகுதியில் இருந்தன.(இப்போதும் இருக்கின்றன). நான் படித்த GCT தடாகம் சாலையில் இருக்கிறது.

இந்தியாவில் விவசாய பம்புகளின் விலையை வெகுவாகக் குறைத்தது கோவை நகரமாகும்.

ஒரு மொக்கை: எங்கள் வகுப்பில் உஷா, சித்ரா என்ற பெயர்களில் இருந்த இரண்டு மாணவிகளை ஓர் ஆண்டுவிழா கிண்டல் நிகழ்ச்சியில்(TOAST) இப்படிச் சொன்னார்கள். பீளமேடு SITRA செல்லும் பேருந்தில் இருவரும் சென்றபோது அவர்கள் பேசிக் கொண்டார்களாம்.

சித்ரா: "கண்டக்டர், எனக்கு ஒரு சித்ரா கொடுங்கள்."
உஷா: "கண்டக்டர், எனக்கு ஒரு உஷா கொடுங்கள்."

(மொக்கைக்கு மன்னிக்கவும்)

தமிழ் said...

பழைய நினைவுகளைக் கிளம்பி விட்டு வீட்டீர்கள்
இப்போது தான் இந்த இடுகையைப் படிக்கின்றேன்.

அந்த வழியில் தினமும் சென்று கல்லூரி வாழ்வைக் கழித்தவன் என்னும் முறையில்

அன்புடன்
திகழ்

/இந்த இடுகையை அப்படியே எடுத்து இட விழைக்கின்றேன்.இப்போது எழுதுவதில் சோம்பல் ஆகையால் தங்களின் அனுமதி வேண்டுகின்றேன்.
மீள்பதிவாக கொங்குவாசல் வலைப்பதிவில்/

Unknown said...

Sure thigal.Go ahead and repost it