Sunday, May 27, 2007

292. மகாத்மா செல்வன்

வேகஸ் மெக்கேரன் விமான நிலையத்தில் இறங்கினேன். இறங்கியதும் விமான நிலையத்திலேயே சூதாட்ட வெண்டிங் மெஷின்கள் வரவேற்றன. நகருக்குள் நுழையுமுன்னரே அங்கே சிலர் உட்கார்ந்து தமது அதிர்ஷ்டத்தை சோதித்து கொண்டிருந்தனர்.

ஒரு வாரம் தங்க வேண்டியிருந்ததால் இரண்டு பெரிய சூட்கேஸ்கள் கொண்டு வந்திருந்தேன். (சூட்கேசுக்குள் என்ன இருந்தது என்ற ரகசியம் விரைவில் உடைக்கப்படும்:)..சூட்கெஸ்களில் பொருத்தப்பட்டிருக்கும் வீல்களும், விமான நிலையங்களில் இருக்கும் டிராலிகளும் போர்ட்டர் என்ற வர்க்கத்தையே கிட்டத்தட்ட ஒழித்து கட்டிவிட்டன. டிராலியில் வைத்து தள்ளிக்கொண்டு வெளியே வந்ததும் வெயில் சுள்ளென்று அடிக்க ஆரம்பித்துவிட்டது. விமான நிலையத்திலிருந்து ஓட்டல் செல்ல ஷட்டில் சர்வீஸ்...'

ஷட்டில் டிரைவர் நமது சூட்கேஸை எடுத்து உள்ளே வைக்கிறார். சிரித்த முகத்துடன் முகமன் சொல்கிறார். ஜோக்கும் அடிக்கிறார்.ஒவ்வொரு ஓட்டலுக்கும் பஸ் வரும்போது மைக்கில் அறிவிப்பு செய்கிறார். பஸ்ஸை நிறுத்தி சூட்கேசை எடுத்து தருகிறார். டாக்சி டிரைவரும் போர்ட்டரும் கலந்தது போன்ற ஒரு தொழில். டிப்ஸ் தந்தால் மகிழ்ச்சியுடன் பெற்றுக்கொண்டு நன்றி சொல்கிறார். சிலர் அவருக்கு டிப்ஸ் தராமல் போவதையும் காண முடிந்தது. கணக்கு போட்டால் ஒரு ட்ரிப்புக்கு எப்படியும் ஐந்து முதல் பத்து டாலராவது டிப்ஸ் கிடைக்கும் என்று தோன்றியது.ஒரு நாளைக்கு 10 ட்ரிப் தாராளமாக அடிக்கலாம் என்றாலும் மாதம் இதிலேயே 1500 முதல் 3000 கிடைக்கும். அதுபோக சம்பளம்....ஷட்டிலில் ஏறுபவர்களும் அவரை மரியாதையாக நடத்துகின்றனர். விளிம்புநிலை தொழிலாளி ஒருவர் மகிழ்வுடனும் நல்ல வாழ்க்கைதரத்துடனும் இருப்பதை காணும்போது சந்தோஷமாக இருந்தது.

ஓட்டலுக்கு போனவுடன் ரூமை செகின் செய்தவுடன் நம் ஊரில் வழக்கமாக இருக்கும் "ரூம் சர்வீஸ் பாய்" என்ற ஒருவரை நிஜமாக மிஸ் செய்தேன். ஓட்டலிலிருந்து ரூமுக்கு பெட்டிகளை உருட்டிக்கொண்டே போனேன். (சுமார் அரை கிலோமீட்டர்). கைவலி எடுத்துவிட்டது. அந்த வேலை எத்தனை கடினமானது என்பது புரிய ஒரு வாய்ப்பு என்று நினைத்துக் கொண்டேன். ஓட்டல் அறையில் நுழைந்தபோது அங்கே ஒரு ப்ரிட்ஜ் இருந்தது- சந்தேகப்பட்டமாதிரி மைக்ரொவேவ் அவன் இருக்கவில்லை. பெட்டியை திறந்து ரைஸ் குக்கரை எடுத்து அரிசி வைத்து ரெடிமேட் சாம்பாரை எடுத்து அதில் ஊற்றி சாப்பிட்டதும் பசி பறந்துவிட்டது. ஒரு பெட்டி முழுக்க உனவுப்பொருட்கள்தான். ஒருவாரம் வெளியே சாப்பிடுவது என்பது பட்ஜெட்டுக்கும், உடல் நலத்துக்கும் ஒத்துவருமா சொல்லுங்கள்:)..(கஞ்சன் என்று யாரப்பா முனகுவது?)

சாப்பிட்டுவிட்டு ஊர் சுற்ற கிளம்பினேன்.தெருக்களில் பெர்முடா, பச்சை டிஷர்ட், கூலிங்க்ளாஸ், தொப்பி அணிந்தவர்கள் நின்று வருகிற, போகிறவர்களுக்கு எல்லாம் துண்டு பிரசுரங்களை கொடுத்து கொண்டிருந்தனர். என்னவென்று வாங்கிப் பார்த்தால் உலகின் பழமையான தொழிலுக்கு விளம்பரம்.

ஒரு மணிநேர கம்பனிக்கு $69. போன் செய்தால் நமது ரூமுக்கே 20 நிமிடத்தில் வந்து விடுவார்களாம். வெறும் டான்ஸ் என்றால் அதற்கு தனிரேட். எந்த வியாதியும் இல்லை என்று உத்திரவாதம். இதுவும் ஒரு விளிம்புநிலை தொழில்தான்...தெருவில் நின்று எந்த கூச்சமும் இன்று பாம்ப்லெட் கொடுக்கின்றனர். அவர்களை யாரும் வெறுப்புடன் பார்க்கவில்லை. இவர்களும் தொழிலில் ஒரு நேர்மையை கடைபிடித்தனர். குடும்பத்துடன் போகும் ஆண்களிடம் அந்த விளம்பரங்களை கொடுக்கவில்லை. பெண்களிடமும் கொடுக்கவில்லை. அரசால் அங்கீகரிக்கப்பட்ட தொழில்..அந்த $69ல் இவர்களுக்கும் கமிஷன் இருக்குமா அல்லது துண்டுபிரசுரத்தை கொடுக்க மணிக்கு இத்தனை ரேட் என்பதா என தெரியவில்லை.

அவர்களில் இளைஞர்கள் பலர் இருந்தனர். நடுத்தர வயதினர் பலர் இருந்தனர்...இயந்திரம் போல் தலையை குனிந்துகொண்டு பாம்ப்லெட் கொடுப்பவர் இருந்தனர்...பெருமையுடன் பாம்ப்லெட்டை தந்து வாங்குபவர்களிடம் ஜோக் அடிப்பவர்கள் சிலரும் இருந்தனர்..அதில் ஒருவர் வழியில் போகும் பெண்களிடம் கூட ஜோக் அடித்தார்...அவருக்கு அவர்கள் சிரித்தபடி பதில் சொல்லிப்போனார்கள்.காபரே நடனத்துக்கு டிக்கட் வாங்கிய பெண்களும் இருந்தனர்...ஒப்பீட்டளவில் சமூகத்தில் ஓரளவு மரியாதையுடன் இவர்களும் இருப்பதாகவே தோன்றியது..

சூதாட்ட விடுதிகளில் மதுவும், உணவும் பரிமாறுவது கவர்ச்சியான உடையணிந்த பெண்கள்....டிப்ஸ் அதிகம் கிடைக்கும் வேஅலி இது.இந்த தீமிலேயே பிரபலமடைந்த ஹூட்டர்ஸ் எனும் உணவுவிடுதி புதரக்மெங்கும் உண்டு.

வேகசின் தெருக்களில் தள்ளுவண்டியில், நடைபாதை வியாபாரம் ஜோராக நடைபெறுகிறது. டிஷர்ட், ஐஸ்க்ரீம், கிளியோடு போடா எடுப்பது...பெப்சி என அனைத்தும் விற்கிறார்கள். பெருமுடா மட்டும் அணிந்த ஆண்கள் கொளுத்தும் வெயிலில் கூடையில் பெப்சியும் தண்ணிரும் விற்கிரார்கள். நம்மூர் நடைபாதை வியாபாரம்தான்...ஆனால் நல்ல வரும்படி கிடைக்கும் என்று தோன்றியது. கவர்ச்சியான உடையில் கொளுத்தும் வெயிலில் பெண்களும் இதை செய்கின்ரனர். பாவமாக இருந்தது.. ஆனால் நிழற்குடையின் கீழே அமர்ந்து ரோட்டை அடைககமல் தான் விற்கின்றனர்....

ஒரு ஷாப்பிங்மாலில் நுழைந்து இலவசமாக கிளிகளை வைத்து வித்தைகாட்டுகிறவர் ஒருவரின் (ஜோ க்ராதோவ்ல் ) ஷோவை பார்த்தேன். 15 நிமிடம் ஷோ. ஷோவுக்கு எப்படியும் $20 டிப்ஸ் கிடைக்கும் என தோன்றியது. வேகசின் பல ஓட்டல்களில் ஷோ நடத்துவதாக சொன்னார்.கிளிகளை நன்கு பராமரிக்க செலவு அதிகம் ஆவதாக சொன்னார்..கிளிகளின் இறகை வெட்டாமல் தான் வளர்க்கிறார். அவையும் கொழு,கொழு என இருந்தன....

இரவில் Treasure island எனும் ஓட்டலுக்கு வெளியே தெருவில் ஒரு நடன/நாட்டிய நிகழ்ச்சி நடந்தது. சுமார் 20 பெண்கள் இரண்டு ஆண்கள் கலந்துகொண்ட ஒரு ஷோ..கூட்டம் முண்டியடித்தது....நம் ஊரு தெருக்கூத்தாடி வேலைபோல்தான் இதுவும்....ஆனால் நல்ல உடைகள்..சம்பளம்..தொழில்பாதுகாப்பு..கூட்டமும் கமெண்ட் அடிக்காமல் ரசித்தது..கைதட்டி மகிழ்ந்தது...

விளிம்புநிலை மக்களுக்கு வேகஸ் நன்கு வருமானம் தருகிறது. மரியாதை அளிக்கிறது. இப்போது சொன்ன இவர்கள் இல்லாவிட்டால் அந்த பாலைவன நகருக்கு மக்கள் யாரும் வரமாட்டார்கள். விபச்சாரமும், பெண்ணுடலும், சூதாட்டமும் இல்லாவிட்டால் வேகஸ் வெறும் பாலைவனம்தான்....சூதாட்ட விடுதிகளை நடத்துபவர்கள் பில்லியனில் சம்பாதிக்கிறார்கள்....இதோ இவர்கள் ஆயிரத்தில் சம்பாதிக்கிறார்கள்....ஆனால் டூரிஸ்ட் முதல் விளிம்புநிலை மக்கள் முதலாளி என அனைவரும் மகிழ்வோடுதான் இருக்கிறார்கள்....ஒவோருவரும் மற்ரவரை மரியாதையுடன் நடத்துகிறார்கள்....

இந்த நகருக்கு இருண்ட பக்கம் இருக்கிறதா?ஆம்...சூதுக்கு அடிமையாகி கைகாசு அனைத்தையும் தொலைத்தவர்கள் பலருண்டு...போதைமருந்து யக்கத்தில் தெருக்களில் திரிகிறவர்கள் உண்டு..தெருக்களில் கார்கள் ஹாரன் அடிப்பது டென்வரில் கேட்கவே முடியாது.ஆனால் இங்கே வாகன ஓட்டிகள் அடிக்கடி ஹாரன் அடிக்கிரார்கள். (ஹாரன் அடிப்பது இங்கே rude behavior என கருதுவார்கள்)

வேகஸின் மிகப்பெரிய ஓட்டலான சீசர்ஸ் பேலசின் நடுமத்தியில் பிரம்மாவுக்கு வெண்பளிங்கில் அழகான ஒரு கோயில் கட்டியிருக்கிறார்கள். தெற்காசிய நாடுகள் அனைத்திலும் தொழப்படும் கடவுள் என்று கல்வெட்டு வைத்து திருநீறும் ஊதுபத்தியும் எலுமிச்சம்பழமும் வைத்திருக்கிறார்கள். பலபேர் அங்கே வந்து வணங்கி தியானித்து போவதை பார்க்க முடிந்தது. அந்த சிலையை வழங்கியவர் வியட்னாமிய தம்பதியினர் என்று தெரிந்தது. பாவங்களின் தலைநகரத்துக்கு இப்படி ஒரு ஆன்மிக மறுபக்கம்....

கலவையான உணர்வுகளுடன் அறைக்கு திரும்பினேன். அறையை ர்ரும்சர்வீஸ் பெண் ஒருவர் சுத்தம் செய்து வைத்திருந்தார். அவரது பெயர் க்றிஸ்டி என்பது அவர் விட்டு சென்ற சீட்டிலிருந்து தெரிந்துகொண்டேன். அங்கே தங்கியிருந்த ஏழு நாளும் அவரை பார்க்கவே இல்லை. ஆனால் அறை தினமும் மிக நன்றாக சுத்தம் செய்யப்பட்டிருந்தது.வரும்போது அறையில் கணிசமான டிப்ஸ் வைத்துவிட்டு வந்தேன்.

டென்வர் வந்து சேர்ந்ததும் அன்று இரவு டென்வர் மலையாள சங்கம் நடத்தும் நடிகை திவ்யா உண்ணி நடன நிகழ்ச்சிக்கு டிக்கட் கிடைத்தது....திவா உண்ணி டெக்சாஸில் குடியேறியிருக்கிறார். அங்கே நாட்டியபள்ளி நடத்துகிறார். மோகினி ஆட்டம் என்ற நடனத்தை ஆடினார்... கல்யாணத்துக்கு பிறகும் திவ்யா உண்ணி அப்படியே இருந்தார். எதுவும் பேசவில்லை. டான்ஸ் மட்டும் ஆடிவிட்டு மேடையை விட்டு இறங்கிப் போய்விட்டார்.

திரும்பிவரும் வழியில் ஒரு ரெஸ்டாரண்டில் நுழைந்தேன்...கூட்டம்...உனவுவகைகளை வாங்கிக்கொண்டு பார்த்தால் அனைத்து டேபிளிலும் ஆட்கள் இருந்தனர். ஒரு டேபிளில் ஒரு வயதான அம்மா மட்டும் இருந்தார்.. அங்கே உட்கார அவரிடம் அனுமதி கேட்காலாம் என்று போய் கேட்டேன்.

"நோ" என்றார். வெறுப்புடன் முகத்தை திருப்பி கொண்டார்....

நிறவெறி...

அது இன்னும் பூமியில் அழியவில்லை....

இங்கே எத்தனை லட்சம் சம்பாதித்தாலும் நான் ஒரு கறுப்பன் தான்....நம் ஊரில் கலக்டராக இருந்தாலும் சில சமயங்களில் ஒருவருக்கு அவரது ஜாதி நினைவூட்டப்படும்...

சிறிதுநேரம் தயங்கி நின்றேன்..அதன்பின் நாற்காலியை இழுத்துப்போட்டு அந்த அம்மையார் முன்பு உட்கார்ந்தேன்.

வெறுப்புடன் அவர் எழுந்தார். முனகிக்கொண்டே இடத்தை காலி செய்தார்.

சாதாரண மனிதனாக சுற்றுப்பயணத்தை துவக்கிய நான் மகாத்மாவானது இப்படித்தான்

மகாத்மாக்கள் பிறப்பதில்லை..உருவாக்கப்படுகிறார்கள்

20 comments:

மாசிலா said...

ஓஹோ, அப்படியா? மகாதமா ஆவது இவ்வளவு சுலபமா? முன்னமே தெரியாமல் போய்விட்டதே! பரவாயில்லை நாளைக்கே நானும் மகாத்மா ஆக முயற்சிக்கிறேன்.:-)

பயண அனுபவங்களை நல்ல நடையுடன் எழுதி இருக்கிறீர்கள். கூடவே பூலோக வரை படங்கள், நிழற்படங்கள் இருந்து இருந்தால் மேலும் இரசனையாக இருந்திருக்கும்.

திவ்யா உண்ணியிடம் வாங்கிய கையெழுத்து பிரதியை எதிர்பார்க்கிறோம்.:-)

பூலோக ரீதியில் அமெரிக்கா ஒரு பெரிய அழகிய நாடு. எனக்கும் அமெரிக்காவை சுற்றிப்பார்க்க வேண்டும் என்கிற ஆசை உண்டுதான். அதெற்கென நேரம் வருகையில் பார்ப்போம்.

அனுபவங்களை பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி செல்வன்.

Unknown said...

மாசிலா

நன்றி. அநீதிக்கு எதிராக போராடும் ஒவ்வொருவரும் மகாத்மாதான்;)

புகைப்படங்களை தனிபதிவாக வலையேற்ற வேண்டும். இன்னும் டைனசோர் காலத்திலேயே இருப்பதால் டிஜிட்டல் காமிரா பயன்படுத்தவில்லை. வால்க்ரீன்ஸில் கொடுத்து சிடியில் மாற்றி வலையேற்ர வேண்டும்.

திவ்யா உண்ணியிடம் கையெழுத்து எதுவும் வாங்கவில்லை:)

அமெரிக்கா நிச்சயம் வாருங்கள். எப்போது வந்தாலும் ஒரு மடலை தட்டி விடுங்கள். நிச்சயம் சந்திப்போம்

Anonymous said...

//சிறிதுநேரம் தயங்கி நின்றேன்..அதன்பின் நாற்காலியை இழுத்துப்போட்டு அந்த அம்மையார் முன்பு உட்கார்ந்தேன்.

வெறுப்புடன் அவர் எழுந்தார். முனகிக்கொண்டே இடத்தை காலி செய்தார்.//

Nice try. The post should end with a punch, right? If it is true, my protests. If it is what I think it is, then hahaha.

Unknown said...

That was a true incident, my friend.

கால்கரி சிவா said...

செல்வன், பாவநகரமான வேகஸில் மக்கள் மக்களாக இருக்கிறார்கள். பரிசுத்தமானவர்கள் என சொல்லிக் கொண்டு பாவங்களை செய்பவர்கள்தாம் பாவ நகரத்தை சேர்ந்தவர்கள்.

மேலும் ஒன்று. நான் லாஸ் வேகஸில் அந்த தெருவோர பிம்பிடம் எனக்கு பெண்கள் மேல் இன்ட்ரஸ்ட் இல்லை என்றதும் ஒரு கட்டழகன் படத்தை நீட்டினான் அசந்து விட்டேன் அவனின் பணம் பண்ணும் திறமையைப் பார்த்து.

வடுவூர் குமார் said...

வேகஸ் ஏதோ ஒரே சூதாட்டமாக மட்டும் இருக்கும் என்று நினத்துக்கொண்டிருந்த நான் ,இதைப்படித்தவுடன் தான் இவ்வளவு விஷயம் நடப்பது தெரிந்தது.
ஹாரன் அடிப்பது ரூட் எனபது இங்கும் சில வருடங்களுக்கு முன்பு சொல்லாமல் தெரிந்தது ஆனால் இப்போது அப்படியில்லை.மக்களுக்கு பொருமை இல்லை,அதுவும் சிரங்கூன் சாலை(நம் மக்கள் புழங்கும் இடம்) என்றால் ஒலிப்பான் ஒரு தடவை கூட அடிக்காமல் கடந்தால் அது சாதனை தான்.

முகமூடி said...

// அரசால் அங்கீகரிக்கப்பட்ட தொழில்.. //

செல்வன்.. எல்லாருமே பொதுவாக அப்படித்தான் நினைக்கிறார்கள். ஆனால் விபச்சாரம் வேகாஸில் (ஒரு சில இடங்கள் தவிர்த்து, அமெரிக்கா முழுவதுமே) சட்டவிரோதம்.

வெட்டிப்பயல் said...

சூதாட்டம் பத்தி எல்லாம் எழுதவே இல்லை :-(

Anonymous said...

செல்வன்

அப்பாடா ஒரு வழியா மகாத்மா ஆனது குறித்து மகிழ்ச்சி. பார்த்து இருந்துக்குங்க நீங்க கஷ்டப் பட்டு மகாத்துமாவாக எவளோ இத்தாலிக் காரி உங்க பேரை வச்சு காசு பாத்த்துடப் போறா.

லாஸ் வேகாசின் அருமை பெருமைகளை விவரிக்கும் எண்ணம் இல்லை போலும் பாரீஸ், நியுயார்க் நியுயார்க், வெனிஸ், fரீமாண்ட் தெருவின் வண்ணக் கோலங்கள், வேகாசின் அட்டகாசமான பஃபே சாப்பாடு (வெஜிடேரியனுக்கே 100 வகையான ஐட்டங்கள் கிடைக்குமே), மிராஜ், எம் ஜி எம்மில் சிங்கம் என்று காட்டப் படும் பூனைக் குட்டிகள், தெருவோரத்தில் எரியும் எரிமலை, பாடலுக்கு ஆடும் நீரூற்று, உலகின் பெரிய ஹோட்டல் பிள்ஜியோ அதில் தொங்கும் வண்ணமயக் கோரால்கள் அதன் பூங்கா, என்று எல்லாவற்றையும் போகிற போக்கில் தொடுவீர்கள் என்று பார்த்தால் ஒரு சமூக விஞ்ஞாநியின் பார்வையில் வேகாசை அறிமுகப் படுத்தி விட்டீர்கள். சூப்பர், நச்சென்று சொல்லியுள்ளீர்கள் வேகாசின் மறுபக்கத்தை. காசினோ என்ற ராபர்ட் டி நீரோ படத்தைப் பார்த்திருக்கிறீர்களா?

அது என்ன விளிம்பு நிலை, வேகாசில் யாரும் விளிம்பு நிலை மாந்தர்கள் அல்லர். அவரவர உழைப்புக்கு ஓரளவுக்கு நல்ல வருமானம் கிடைக்கிறது, கண்ணியமான வாழ்க்கை வாழ்கிறார்கள். யாரும் எந்தத் தொழிலையும் கேவலமாக எண்ணுவதில்லை, அங்கு ஆடும் நிர்வாண நங்கைகளில் இருந்து தெருவில் ஃப்ளையர் கொடுக்கும் ஆள் வரை எல்லோரும் மரியாதையுடனே நடத்தப் படுகின்றனர். நாம் யாரையும் அங்கே கேவலமாகப் பேசி விட முடியாது. வேகாசில் சூதாட்டத்தை விட பல வங்கிகளின் கிரிடிட் கார்டு பிராசசிங் நிறுவனங்களும் உள்ளன. நம்ம ஊர் ஐ டி ஆட்களும் அங்கு நிறைய உண்டு, கோவில் கூட உண்டு.

அந்த பிரம்மா சிலையை நான் சென்ற பொழுது பார்க்கவில்லையே, புதிதாக வைத்திருப்பார்கள் போல இருக்கு, வேகாசுக்கும் நயகராவுக்கும் டிஸ்னிக்கும் இப்பொழுது எல்லாம் அதிகம் போகும் ஆட்கள் நம்ம ஆட்கள்தான் ஆனால் 5 டாலருக்குள் மட்டுமே தங்கள் சூதாட்டத்தை முடித்துக் கொண்டு வேகாசின் வயித்தெரிச்சலைக் கொட்டிக் கொள்வார்கள். அறையைச் சுத்தம் செய்பவர்களுக்கு டிப்ஸ் விட்டு விட்டுப் போக வேண்டும் என்பதை நான் உணர்ந்ததேயில்லை. கற்றுக் கொண்டேன் நன்றி. கிராண்ட் கான்யான் சென்றிருந்தீர்களா அங்கு விஷ்ணு சிவா பிரம்மா பேர்களில் சிகரங்கள் இருப்பதைப் பார்த்தீர்களா? நம்ம ஊர் நாரதர் பெயரில் அமெரிக்காவில் ஒரு நீர்வீழ்ச்சியும் உண்டு, வாஷிங்டன் மாகாணத்தில்.

அன்புடன்
ச.திருமலை

Santhosh said...

செல்வன் sin city போயிட்டு வந்துடிங்க :)).. Grand Canyon போயி இருந்திங்களா அருமையா இருக்கும் அது.

//அரசால் அங்கீகரிக்கப்பட்ட தொழில்.//
இல்ல செல்வன் இது தவறு விபச்சாரம் அங்கு கூட தடை செய்யப்பட்ட தொழில்.

//மகாத்மாக்கள் பிறப்பதில்லை..உருவாக்கப்படுகிறார்கள்//
சரியாக சொன்னீர்கள்.

Unknown said...

சிவா,

பாவங்களின் நகரம் என்று வேகஸ்காரர்கள் பிசினஸ் ஸ்டண்டுக்கு போட்டுக்கொண்ட பெயர். அங்கே இருக்கும் சராசரி மக்கள் அமெரிக்காவின் மற்ர பகுதிமக்களை போன்றவர்கள்தான். வேகசுக்கு வரும் டூரிஸ்டுகள் தான் சூதாடுவார்கள், மற்ர லீலைகள் எல்லாம் செய்வார்கள்

வடுவூர் சார்

வேகசை பற்றி சொன்னது கைமண்னளவுதான். 1968ல் நிக்சனை பதவிக்கு வரவைக்கும் அளவு அரசியல் செல்வாக்கு வேகசின் தந்தை எனப்படும் ஹியூக்சுக்கு இருந்தது.

Unknown said...

முகமூடி

விபச்சாரம் அங்கே தடைசெய்யப்பட்டதா?ஆனால் அங்கே பப்ளிக்காக விளம்பரம் செய்கிறார்கள். ஒரு வேனில் விளம்பர தட்டி வைத்து ஊரெல்லாம் வலம் வந்தார்கள். இதில் என்ன சட்ட நுணுக்கம் இருக்கிறது என்பது தெரியவில்லை

பாலாஜி,

நன்றி

சூதாட்டம் எனக்கு புரியாத விஷயம். காசினோக்குள் போனால் பல இயந்திரங்கள் முன் ஆட்கள் உட்கார்ந்து சூதாடிக்கொண்டிருந்தனர். அது என்னவென்றே தெரியாததால் ஒரு பைசா கூட நான் கட்டவில்லை. எனக்கு சீட்டு கூட ஆடதெரியாது.

ஆனால் நிறையபேர் சூதில் காசை தொலைப்பது தெரிந்தது. ஊரை சுற்றி அத்தனை அடகுகடைகள் இருந்தன.:-(

Unknown said...

திருமலை,

வேகஸ் முழுக்க நீங்கள் சொன்ன இடங்களை சுற்றிபார்த்தேன். பஃபே விஷயத்தில் ஏமாந்துபோய் இந்திய ரெஸ்டாரண்டுகளுக்கு மட்டும் சென்றேன். டாம்பா என்ற இந்திய உணவகம்...நன்றாக இருந்தது. காந்தி உணவகம் நன்ராக இருந்தது. ஆனால் எம்ஜிஎம், நியூயார்க், நியுயார்க் பஃபேக்களை சாப்பிடவில்லை. நீங்கள் சொல்லித்தான் 100 வகை உணவு இருக்கும் என தெரிகிறது.

எம்ஜிஎம்மில் கண்னாடிகூண்டு மேலே பாவமாக இரண்டு சிஙங்கள் படுத்துக்கொண்டிருந்தன..அதைபார்க்க ஒரு கியூ...நான் அங்கே அதிகநேரம் நிற்கவில்லை.பல்லாஜியோ நீரூற்றை பலமுறை பார்த்தேன். மிகவும் பிரமிப்பாக இருந்தது. ஸ்டாடோஸ்பியரில் புகைப்படம் எடுத்துக்கொண்டேன்.

இன்னும் டிஸ்னிலாண்ட் வந்ததை எல்லம் எழுதவில்லை.ஏற்கனவே இரண்டுபாகம் எழுதியாகிவிட்டதே என்ற எண்னத்தில் பலவற்றை மிஸ் செய்தது தெரிகிறது.பிரம்மா கோயில் புகைப்படங்களுடன் விரைவில்பதிவிடுகிறேன்

Unknown said...

வாங்க சந்தோஷ்

கிராண்ட் கான்யான் போகவில்லை. அதற்குபதில் டிஸ்னிலாண்ட் போய்விட்டேன்.

விபச்சாரம் பற்றி நீங்களும் முகமூடியும் சொல்வது அதிசயமாக இருக்கிறது. இதில் ஏதோ சட்டநுணுக்கம் இருக்கிறது என நினைக்கிறேன். பப்ளிக்காக பாம்ப்லெட் தருகிறார்கள்.ஆனால் சட்டவிரோதம் என்றால் எப்படி என்று தெரியவில்லை

Santhosh said...

//இதில் ஏதோ சட்டநுணுக்கம் இருக்கிறது என நினைக்கிறேன். பப்ளிக்காக பாம்ப்லெட் தருகிறார்கள்.ஆனால் சட்டவிரோதம் என்றால் எப்படி என்று தெரியவில்லை//
அதில் எனக்கு தெரிந்த வரையில் விபச்சாரம் சம்மந்தமான வாசகங்கள் எதுவும் இருக்காது. சும்மா lapdance போன்றவையே இருக்கும். விபச்சாரம் நடப்பது எல்லாருக்கும் தெரியும் இருந்த பொழுதும் நம்ம ஊர் மாதிரி தான் கண்டும்காணமல் இருக்கிறார்கள். அவ்வப்பொழுது raid நடக்கும் கைதுகளும் நடக்கும்.
//அதற்குபதில் டிஸ்னிலாண்ட் போய்விட்டேன்.
//
அங்க எங்க இருக்கு டிஸ்னி?

Unknown said...

சந்தோஷ்,

திருட்டுத்தனமாகத்தான் இதெல்லாம் நடக்கிறதா? இப்ப புரியுது விஷயம்.

டிஸ்னிலாண்ட் பக்கத்து கலிபோர்னியாவில் இருக்கே? அங்கேதான் போனேன். க்ரேஹவுண்டில் போக 6 மணிநேரம்தான் ஆகிறது

ACE !! said...

நல்ல பதிவு..

சந்தோஷ் சொல்வது போல் அங்கே விநியோகம் செய்யும் துண்டுகளில், night club / exotic dancers னுதான் போட்டிருந்த மாதிரி ஞாபகம்..

கடைசி பஞ்ச், சூப்பர் :D:D

Anonymous said...

செல்வன்

பெண்கள் துணையளிப்பது என்றுதான் இருக்கும் நியூயார்க்கில் கூட எஸ்கார்ட் சர்வீசஸ் உண்டு. யெல்லோ பேஜில் பார்த்து எந்த நாட்டு அழகி வேண்டும் என்று வீட்டுக்கே தேர்ந்தெடுத்துக் கூப்பிடலாம் ஆனால் சட்டப் படி அது வெறும் கம்ன்பெனிதான் ஆனால் அறைக்குள் நடப்பது வேறு. என் பக்கத்து அறை நண்பர் சும்மா "பேச்சு" துணைக்காக அடிக்கடி அழைப்பது வழக்கம் :))

ஒரு முறை நியூயார்க் ஃப்ளெஷிங்கில் உள்ள விநாயகர் கோவிலுக்குப் போய் விட்டு அங்கு சென்னையில் இருந்து வந்திருந்த நாதஸ்வர வித்வான்களை அருகில் இருந்த என் வீட்டுக்குச் சாப்பிட அழைத்துச் சென்று கொண்டிருந்தேன், பொளனித் தெருவில். அப்பொழுது சரேலென ஒரு நீளக் காரில் வந்து எங்கள் அருகில் நிறுத்தி ஆளுக்கொரு விசிடிங்கார்ட் கொடுத்தார்கள். அதில் ஒருவருக்குக் கொடுக்காமல் விட அவர் என்னவோ ஏதோ என்று நினைத்து ஓடிப் போய் எனக்கு ஒன்று கொடுங்கள் என்று கேட்டு வாங்கிக் கொண்டார். அவர்களுக்கோ ஆங்கிலம் படிக்கத் தெரியாது. அவர்களது ஆவலைக் கண்ட மனம் மகிழ்ந்த கார்டு கொடுத்த மாமா உடனே காரின் கதவைத் திறந்து மெக்சிகோ, சீனா என்று உள்ளேயிருந்த நாலு அழகிகளை அங்கேயே காட்ட ஆரம்பித்து யார் வேண்டும் என்று ஏலம் போட ஆரம்பித்து விட்டார். நாதஸ்வரக் கோஷ்டிகள் துண்டைக் காணோம், துணியைக் காணோம் என்று ஓடி விட்டனர். அதில் தலமை வித்வானுக்கு ஒரே பெருமை தான் அந்தக் கண்றாவிக் கார்டைக் கையில் தொடவேயில்லை என்று. எனக்கோ ஆச்சரியம், இப்படி பட்டப் பகலில் நடு ரோட்டில் கடை விரிக்கிறார்களே என்று. அதுக்கு வேகாஸ் எவ்வளவோ தேவலை.

அது போலத்தான் வேகாசிலும். பாங்காக் மாதிரி வெளிப்படையான அனுமதி கிடையாது. யாரேனும், நீங்கள் சொன்னதை நம்பி பேரம் பேசி மாட்டிக் கொள்ளப் போகிறார்களே என்பதற்காகச் சொன்னேன். ஏற்கனவே ஜெ லினோவின் லேட் நைட் ஷோ வரை டேட் லைனில் மாட்டிக் கொண்ட நம்ம இந்திய சாஃப்ட்வேர்காரர்கள் மானம் கப்பலேறிக் கொண்டிருக்கிறது.

அன்புடன்
ச.திருமலை

ஓகை said...

//ஒரு சமூக விஞ்ஞாநியின் பார்வையில் வேகாசை அறிமுகப் படுத்தி விட்டீர்கள்.//

ஆமாம். லாஸ் வேகாஸ் பற்றிய பொது விவரிப்பும் நான் படங்களில் பார்த்ததும் கேளிக்கை, சூது மற்றும் கிளுகிளுப்புகள்தான். செல்வனுடையது வேறுவிதமான விவரிப்பு. தொடருங்கள் செல்வன்.

மணிகண்டன் said...

செல்வன்,

சந்தோஷ் சொல்வது போல் லாஸ் வேகஸ் கவுண்டியில் விபச்சாரம் சட்ட விரோதமானது. நெவாடாவில் சில கவுண்டிகளில் மட்டுமே விபச்சாரம் அனுமதிக்கப்பட்டுள்ளது. அங்கும் ப்ராத்தல்கள் எனப்படும் அனுமதி பெற்ற இடங்களில் மட்டுமே நடத்த முடியும். பாம்ப்லெட்களில் Lapdance போன்ற விஷயங்கள் தான் இருக்கும். அதேபோல் பாம்ப்லெட் தருபவர்கள் முன்பு எல்லோருக்கும் கொடுத்து தொல்லை செய்தவர்களே. அதன்பின் தெருவோரம் பாம்ப்லெட் கொடுப்பது தடை செய்யப்பட்டது. பிறகு சில நிபந்தனைகளுடன் (பெண்கள், குடும்பஸ்தர்களுக்கு தரக்கூடாது) அனுமதிக்கப்பட்டது.

இவையெல்லாம் படித்துத் தெரிந்து கொண்டவையே :)