Sunday, November 05, 2006

207.ஓப்ரிலாந்தில் உலகின் புதிய கடவுள்

நாஷ்வில் நகரிலிலுள்ள கேலார்ட் ஒப்ப்ரிலான்ட் ஹோட்டேலை நோக்கி எனது கார் (நண்பனின் கார் எல்லாம் எனது கார்:-) நெருங்கிக் கொண்டிருந்தது.அந்த ஓட்டலை பற்றி சந்தையியல் துறையில் ஒரு கேஸ் ஸ்டடியை படித்ததிலிருந்து அங்கே போய் தங்கி பார்க்க வேண்டும் என ஆசை.போதாகுறைக்கு விளம்பரங்களில் எல்லாம் "உலகின் ஏழாவது பெரிய ஹோட்டேல்", "3000 அறைகள்" என்றெல்லாம் அடித்து விட்டிருந்தார்கள்.அங்கே உள்ள அக்வேரியம் ரெஸ்டாரண்டை பற்றி பல கதைகள் உலா வந்து கொண்டிருந்தன.கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்திற்காக 1.5 மில்லியன் பவுண்ட் ஐஸ்கட்டிகளை வைத்து ஒரு பிரம்மாண்ட பனிமாளிகை கட்டிக்கொண்டிருப்பதாக செய்தி. சரி..இதெல்லாவற்றையும் கண்குளிர பார்க்க வேண்டாமா என ஒரு ட்ரிப்பை ஏற்பாடு செய்தாகிவிட்டது. ஓப்ரிலாந்த் ஓட்டலினுள் நுழைந்ததும் மிகப்பெரும் அலங்கரிக்கப்பட்ட கிறிஸ்துமஸ் மரம் வரவேற்றது. காரை விட்டு இறங்கியதும் குளிர் சுர்ரீர் என தாக்கியது. 23 டிகிரி குளிர். (இதெல்லாம் குளிரா என யாரப்பா முணுமுணுப்பது?வெறும் டிஷர்ட்டும் ஜீன்சும் போட்டுக்கொண்டு போனால் குளிராதா என்ன?).கார்பார்க் செய்ய ஒரு நாளைக்கு $10 என போர்டு பயமுறுத்தியது."சரி" பெரிய ஓட்டல்களில் அப்படித்தான் இருக்கும் என மனதை தேற்றிக்கொண்டு ரிசப்ஷனை நோக்கி, நடந்தோம், நடந்தோம்...நடந்து கொண்டே இருந்தோம். வழியெங்கும் தெரிந்த அலங்காரங்களை ரசிக்க விடாமல் குளிர். ரிசப்ஷனுக்கு போனால் அங்கே இரண்டே பேர் மட்டும் இருந்தனர்.3000 அறைகள் உள்ள விடுதிக்கு 2 பேர் மட்டும் ரிசப்ஷனுக்கு போதுமா என நண்பர் ஜானும் நானும் விவாதித்துக் கொண்டே இருந்தோம்.டெக்னாலஜி மூலம் சமாளிக்கலாம் என நானும், இல்லை இது மோசமான கஸ்டமர் சர்வீஸ் என அவரும் விவாதித்தோம். எப்படியோ 7 நிமிடம் மட்டுமே வெயிட் செய்தோம். எனது அறை சாவியை (அறை சாவி என்பது எலக்ட்ரானிக் கார்ட் தான்) பெற்றுக்கொண்டு அறைக்குள் நுழைந்தேன். ஜானுக்கு வேறு பிளாக்கில் அறை. வழக்கமாக எல்லா ஓட்டல்களிலும் காபி மேக்கரை பாத்ரூம் அருகே உள்ள வாஷ்பேசின் அருகே வைத்திருப்பார்கள். இங்கே பாத்ரூமுக்குளேயே காபிமேக்கரை வைத்திருந்தனர். பார்த்ததும் பயங்கர கடுப்பாகி விட்டது.அந்த காபியை தொடவே இல்லை. ரூம் டெம்பரேச்சரை 74ல் வைத்து ஹாயாக தூங்கி எழுந்தேன். காலையில் எழும்போது மணி 7.30. சாப்பிட ஏதாவது ஆர்டர் செய்யலாம் என மென்யு கார்டை எடுத்தால் சீரியல் $6.50, வெஜ்ஜி பர்கர் $11.50 என போட்டிருந்தனர். அதுபோக டாக்ஸ், டெலிவரி சார்ஜ் $5.50....படித்ததும் சாப்பிடும் ஆசையே போய் விட்டது.சரி..பின்னூட்டங்களை மட்டுறுத்தல் செய்யலாம் என லேப்டாப்பை திறந்தால் 'வைஃfஐக்கு ஒரு நாளைக்கு $10' என செய்தி வந்தது.அப்படியே மூடி வைத்து விட்டேன். ஜானின் கம்ப்யூட்டரில் ஓசியில் மெயில் பார்த்துகொள்லலாம் என ஒரு ஐடியா செய்துகொண்டேன். பசி வயிற்றை கிள்ளீயது.ஜானுக்கு போன் போட்டால் மனிதர் எந்திரிக்கவே இல்லை.மெதுவாக கீழே இறங்கி வந்தேன். 'ரஷெல்லஸ் பஃபெ' என்ற ரெஸ்டராண்ட் ஓட்டலில் இருந்தது, அதை தேடிக்கொண்டே வந்து காணாமல் போய் விட்டேன்.ஓட்டல் அத்தனை பெரியது.படகு, நீர்வீழ்ச்சி, ஆறு என எல்லாம் உள்ளே இருக்கிறது. 1 மணிநேரம் அதை தேடி, தேடி அலுத்து மேப்பை பார்த்தால் அது இன்னும் குழப்பம். கடைசியில் ரஷல்ஸ் பஃபேயை கண்டுபிடித்து உள்ளே நுழைந்தால் அங்கேயும் ஒரு க்யூ. 10 நிமிடம் கியூவில் நின்றபின் இருக்கைக்கு அழைத்து சென்றனர். காபி வேண்டுமா ஆரஞ்ச் ஜூஸ் வேண்டுமா என கேட்ட வெய்ட்ரஸிடம் இரண்டும் வேண்டும் என ஆர்டர் செய்துவிட்டு:-) பஃபேயை நோக்கி வேட்டைக்கு கிளம்பினேன். அங்கே போனால் எனது சந்தேகம் ஊர்ஜிதமானது. மலை போல் அடுக்கி வைக்கப்பட்டிருந்த ஐட்டம்களில் சீரியலும், பாலும், பிரெட்டும் மட்டுமே வெஜிடேரியன் ஐட்டம்கள். விதியே என நொந்துகொண்டு பேகலையும், பாலையும், சீசையும் தூக்கிக் கொண்டு வந்தேன். அடுத்த ரவுண்ட் போனபோது ஃபிரய்ட் உருளை கிடைத்தது. அதையும், பிரூட் சாலட்டையும் ஒரு கட்டு கட்டியபின் பில் வந்தது. தண்டம் அழுதபின் 20% டிப்ஸ் வைத்தேன் (பிளாண்ட் வெயிட்ரஸ் என்றால் நிறைய டிப்ஸ் தரவேண்டும் என்பது எங்கள் குழுவில் நிலவும் மூடநம்பிக்கை:-) அதன்பின் ஓட்டலில் உள்ள ஆற்றில் படகு சவாரி.படகில் ஏறியபோது போட்டோ எடுக்கிறார்கள். படகு சவாரிக்கு $8. படகோட்டி ஓட்டல் அருமை, பெருமைகளை சொல்லிக்கொண்டே வந்தார். படகு சவாரி முடிந்தபின் போட்டோவை கண்ணுக்கு தெரியும் வகையில் அழகாக பிரேம் செய்து வைத்திருந்தனர்.$10. வாங்கலாமா, வேண்டாமா என யோசித்து கடைசியில் வாங்கியே விட்டேன். ஓப்ரிலாந்தில் ஒரு பாஸ்ட் புட் கடை இருந்தது, அங்கே வெஜ்ஜி விராப்பும், பிரெஞ்சு பிரையும் மட்டும் தான் சாப்பிட முடியும். மதியம் அதை தின்றுவிட்டு இரவு அருகிலுள்ள மாலுக்கு கிளம்பினோம். அங்கேதான் புகழ் பெற்ற அக்வேரியம் ரெஸ்டராண்ட் இருக்கிறது. ரெஸ்டராண்ட் நடுவே மிகப்பெரும் கண்ணாடி மீன் தொட்டி. அதில் சால்ட் வாட்டரில் உள்ள மீன்கள் நீந்தின. ஈல், சுறாமீன், மற்றும் பெயர் தெரியாத பல மீன்கள்.சுறாமின் மற்ற மீன்களை தின்னாதா ஒரு சந்தேகம்.வெயிட்ரஸிடம் கேட்டதற்கு அக்வேரியத்தின் வரலாற்றை சொன்னார். ஒரு மரைன் பயாலஜிஸ்ட் தான் மீன்களை கவனித்து கொள்கிறாராம். அனைத்து மீன்களுக்கும் மிக அதிக அளவில் சுவையான உணவுகள் அளிக்கப்படுவதால் மற்ற மீன்களை அவை வேட்டையாடுவதில்லையாம். அதில் உள்ள மீன்கள் சிலவற்றின் விலை $8000 என்றார்.அப்படி இருந்தும் அபூர்வ மீன்களை வேட்டையாடிய ஒரு மீனை வெளியே எடுத்து தனிமை சிறையில் வைத்து கொஞ்சம், கொஞ்சமாக கொன்று கொன்டிருக்கின்றனராம்:-( மேங்கோ ஜூஸும், பர்மஜினியாவும்(பெயர் மறந்து விட்டது) ஆர்டர் செய்தேன். வெயிட்ரஸோடு ஜான் கடலை போட்டு அவரது வாழ்க்கை வரலாற்றை தெரிந்து கொண்டார். ஒயினில் தயாரித்த பார்மஜீனியாவை சாப்பிட்டால் எனது டீ டோட்டலர் வாழ்க்கைக்கு எந்த பங்கமும் வராது என வெயிட்ரஸ் உறுதியளித்தார். அது சும்மா சுவைக்காக ஒயினில் தயாரித்த பார்மஜியானா, போதை வராது, ஒயின் ஆவியாகிவிடும் என்றார். சாப்பிட்டதில் அவர் சொன்னது உண்மைதான் என தெரிந்தது.பார்மஜியானா என்பது பாஸ்டா மாதிரி தான் இருந்தது.ஆனால் விலை மிக, மிக அதிகம். இன்று காலை ஓட்டலுக்கு வந்து ஜானின் கம்ப்யூட்டரை ஓசியில் வாங்கி பின்னூட்டங்களை மட்டுறுத்தலாம் என திறந்தால் தலைவர் பி.கே.எஸின் பின்னூட்டம், மற்றும் அனானிமஸ் நண்பர் ஒருவரின் பின்னூட்டம். மட்டுறுத்திவிட்டு அப்படியே விட மனசு கேட்கிறதா என்ன? ஒரு பதிவை தட்டிவிடு என மனம் ஆணையிட இதோ....உங்கள் முன் இந்த பதிவு..

23 comments:

கதிர் said...

நகைச்சுவையா எழுதறீங்க!
ரசித்து படித்தேன். இங்கும் புர்ஜ் அல் அரப் ஓட்டலில் அக்வேரிய்ம் ஓட்டல் இருக்கிறது அதைப்பற்றியும் பல கதைகள் சொல்லிர்யிருக்காங்க நுழைவுக்கட்டணமே 300 திராம்ஸ், ஆணியே புடுங்க வேணாம்னு ஒதுங்கிட்டேன்.

தொடர் சிறப்பாக வர வாழ்த்துக்கள்

கால்கரி சிவா said...

வாங்க சாமி 3 வாரத்துக்கு முன்னாடி இந்த ஒட்டலா ஆஸ்டினா என கேட்டதற்கு ஆஸ்டின் என செலக்ட் செய்து 12 வருடங்களாக சந்திக்காத ஒரு நண்பரையும் 26 வருடங்களாக சந்திக்காத ஒரு ஆசிரியரியையும் சந்தித்தேன். இந்த மீன்கள் விட அந்த ஆசிரியர் சுவராசியமானவர்

Unknown said...

தம்பி நன்றி,

அக்வேரியம் ஓட்டல் அமெரிக்காவில் பல இடங்களில் இருப்பதாக அந்த வெயிட்ரஸ் சொன்னார். இதை துவக்கியவர் மிகப்பெரும் கோடிஸ்வரராம். இங்கே உணவூக்கு அதிக விலை வைத்து, நுழைவு கட்டணமின்றி சமாளிக்கின்றனர். போதாகுறைக்கு வெயிட்ரஸ்கள் மிக அருமையாக பேச்சு கொடுக்க பயிற்றுவிக்கப்பட்டிருக்கின்றனர்:-)ஜான் இன்னும் அந்த வெயிட்ரஸை ஒருமுறை பார்க்க அக்வேரியம் போக வேண்டும் என சொல்லிக் கொண்டிருக்கிறார்:-))

Unknown said...

சிவா

பழைய நண்பர்களை சந்திப்பது மிக இனிமையான அனுபவம். அந்த மீன்களை பார்த்தபோது ஆரம்பத்தில் நன்றாக இருந்தது.ஆனால் அதன்பின் கேட்டபோது பல கொடுமையான தகவல்கள் வெளிவந்தன.

இரண்டு சுறாக்களை உள்ளே விட்டிருக்கின்றனர்.இரண்டும் ஆணாம். வேறு வழியின்றி இரண்டும் ஓரினச் சேர்க்கையில் ஈடுபடுகின்றனவாம்.

கேட்டதும் மனசு கனத்து விட்டது.

யாரோ லாபம் சம்பாதிக்க சுறாக்கள் இப்படி கஷ்டப்படவேண்டுமா என்ன?:-(

Sivabalan said...

செல்வன் சார்,

சுவாரசியமாக எழுதியிருக்கீங்க..

ரொம்ப பிஸியா?

Kannabiran, Ravi Shankar (KRS) said...

வெல்கம் பேக், செல்வன்!
ஆமாம், அந்த ஃபோட்டோவில் 4 பேர் உக்காந்து சாப்பிடறாங்க!
அதுல நீங்க எங்க? அந்த கடைக்குட்டியா? :-))

உலகின் புதிய கடவுளைச் "சரியாக" கவனித்த ஓட்டலுக்குக் கடவுள் என்ன வரம் தருவதாக உத்தேசம்? :-))

Unknown said...

நன்றி சிவபாலன்

ஆம். கொஞ்சம் வேலை அதிகம் தான். சென்ற 1 வாரம் ஊரில் இல்லை. அடுத்த வாரமும் கொஞ்சம் வேலை இருக்கிறது.ஆனால் ஒன்றோ, இரண்டோ பதிவுகள் இடலாம் என இருக்கிறேன்.

Unknown said...

கண்ணபிரான்,

அது வலையில் இருந்து எடுத்த போட்டோ. டிஜிட்டல் யுகத்துக்கு நான் இன்னும் வராததால்:-) டிஜிட்டல் காமிரா வாங்கவில்லை. போட்டோவை கழுவ வால்கிரின்ஸில் தரவேண்டும். அதுக்கு ஒரு சோம்பல்:-) அதனால் நெட்டில் சுட்ட போட்டோவை பதிவில் போட்டு விட்டேன்.

ஓட்டலுக்கு என்ன வரம் தரலாம் என கேட்டபோது மிகப்பெரும் தொகை ஒன்றை வரமாக பெற்றுக்கொண்டனர்:-))அதுபோக பார்க்கிங்குக்கு ஒரு நாளைக்கு $10, உணவு விடுதிக்கு அழுத தண்டம் என வரம் கொடுத்து, கொடுத்து பஸ்மாசுரனுக்கு வரம் தந்த சிவன் கதையாகி விட்டது.மகாவிஷ்ணு வந்து இனி காப்பாற்றினால் தான் உண்டு:-)

மு. சுந்தரமூர்த்தி said...

Opryland ஆ? ரொம்ப பக்கமாத்தான் வந்திருக்கிறீங்க. Have a nice stay in the Music City.

Unknown said...

சுந்தரமூர்த்தி

நன்றி. நாட்டுப்புறப்பாடல்களின் நகரம் நாஷ்வில் என்றார்கள். சில சிடிக்கள் வாங்கி கேட்டுபார்க்கணும்

மு. சுந்தரமூர்த்தி said...

செல்வன்,
//நாட்டுப்புறப்பாடல்களின் நகரம் நாஷ்வில் என்றார்கள்.//

ஆமாம். Downtown இல் Country Music Hall of Fame இருக்கிறது. முடிந்தால் பார்க்கவும். இந்த வட்டாரத்து இந்தியர்களுக்கிடையே இன்னொரு பிரபலமான இடம், நாஷ்வில் பிள்ளையார் கோவில்.

Unknown said...

நன்றி சுந்தரமூர்த்தி. Country Music Hall of Fame & நாஷ்வில் பிள்ளையார் கோவில இனி அடுத்த தரம் வரும்போது தான் பார்க்க முடியும். இப்போது ஊரை விட்டு கிளம்பியாச்சு:-(

பிராங்க்ளின் என்ற வனப்பிரதேசத்தில் ஒரு வீட்டில் இரண்டுநாட்கள் தங்கியிருந்தேன். மிருகங்கள் எல்லாம் வரும் என்றார்கள். இரண்டு மான்களை மட்டும் பார்க்க முடிந்தது
:-)

மொத்தத்தில் அருமையான ஊர் நாஷ்வில்.

மு. சுந்தரமூர்த்தி said...

//பிராங்க்ளின் என்ற வனப்பிரதேசத்தில் ஒரு வீட்டில் இரண்டுநாட்கள் தங்கியிருந்தேன்.//

தமிழர் வீடா? கோவைப் பக்கத்துக்காரர்களா? ஆமெனில், ஆட்சேபனையில்லையென்றால் தனி அஞ்சலில் பெயரைக் குறிப்பிடவும். தெரிந்திருக்கலாம்.


//மிருகங்கள் எல்லாம் வரும் என்றார்கள். இரண்டு மான்களை மட்டும் பார்க்க முடிந்தது//

மான்களைத் தவிர முயல்களும், வளர்ப்புப் பிராணிகளான மாடுகளும், குதிரைகளும் இருக்கும். நீங்கள் எதையும் miss செய்ததாகத் தெரியவில்லை.

நாமக்கல் சிபி said...

வெஜிடேரியனா காலம் ஓட்டறது ரொம்ப கஷ்டம்தாங்க செல்வன். அதுவும் சமைக்காமனா சொல்லவே தேவையில்லை...

அப்பறம் பாஸ்டன் பக்கம் ஏதாவது வரீங்களா?

Unknown said...

சுந்தரமூர்த்தி

நான் தங்கியிருந்தது என் வகுப்புதோழர் வீட்டில். அவர் ஆங்கிலேயர். இந்தியரல்ல.

இப்போதுதான் உங்கள் வலைப்பக்கம் வந்து பார்த்தேன். நீங்கள் இருப்பது டென்னசியில்.(இதற்குமுன்னும் உங்கள் பல பதிவுகளை படித்துள்ளேன்.ஆனால் வசிப்பிடம் டக்கென்று நினைவில் வரவில்லை)

முன்பே தெரிந்திருந்தால் "நாஷ்வில் வலைபதிவர் சந்திப்பு" ஏற்பாடு செய்திருக்கலாம்.நல்ல சந்தர்ப்பம் நழுவிப்போனது:-(

Unknown said...

பாலாஜி

ஆமாம்.வெஜிடேரியன் வாழ்க்கை இங்கே கஷ்டம் தான்.ஆனால் சமைத்தால் பிரச்சனையில்லை. உணவு விடுதியில் தேடி, தேடி வெஜிடேரியன் வகைகளை கண்டுபிடிக்க வேண்டும்.

பாஸ்டன் இப்போதைக்கு வரும் திட்டமில்லை பாலாஜி.ஆனால் கண்டிப்பாக ஒரு நாள் வந்தே தீருவேன்.பாஸ்டனில் வலைபதிவர் சந்திப்பு என ஒரு பதிவு போட்டே தீருவேன்.

நவம்பர் 17- 19 டெக்ஸாஸ் மாநிலம் சான் அன்டோனியோவில் இருப்பேன். அங்கே வலைபதிவர்கள் யாராவது இருக்கிறார்களா?இருந்தால் மடல் அனுப்பவும்

holyox@gmail.com

கைப்புள்ள said...

நல்லா சுவாரசியமா எழுதிருக்கீங்க. நல்லாருந்துது படிக்கறதுக்கு. ஒரு ரெண்டு சுறா மீன் படமும் ரெண்டு ஸ்டிங்ரே படமும் போட்டுருந்தா நாங்களும் பாத்துருப்போம்ல?
:)

ஓசியில் பதிவெழுதும் சுகத்தைப் பத்தி ஒரு பதிவெழுதுங்க செல்வன்...முடிஞ்சா அதையும் ஓசியிலே :)

Unknown said...

தலை கைப்பு

வாழ்த்துக்கு நன்றி. ஆனால் பயணக்கட்டுரை எழுதுவதில் நீங்க தான் கிங். உங்க ராஜஸ்தான் மற்றும் வட இந்திய கட்டுரைகள் அனைத்தும் சூப்பராக இருந்தது.

சுறாவை படம் எடுக்கலை தலைவா.ராத்திரியில் போனதால் காமிரா எடுத்துட்டு போகலை

Santhosh said...

செல்வன்,
நீங்களா இது. சீரியல் எழுத்தில் இருந்து இப்போ நகைச்சுவை பக்கம் தாவிட்டிங்க. திரும்பி வாங்க சீக்கிரமா. நம்ம ஊர் பக்கம் வந்திங்களா என்ன? நேஷ்வில் வரைக்கு வந்து இருக்கிங்க.

Unknown said...

தலைவா சந்தோஷ்

நீங்க எந்த ஊர்?உங்க பதிவில் ஊர் பேர் கண்டுபிடிக்க முடியலை.நாஷ்வில் தாண்டி எந்த ஊருக்கும் வரலை.

முன்கூட்டியே திட்டமிட்டிருந்து வந்திருந்தா உங்களையும், சுந்தரமூர்த்தியையும் சந்திச்சிருக்கலாம்னு தோணுது. அடுத்த வருஷம் மறுபடி நாஷ்வில் வருவேன். அப்ப மீட்டிங் போட்டுடலாம்.

////சீரியல் எழுத்தில் இருந்து இப்போ நகைச்சுவை பக்கம் தாவிட்டிங்க. //

ஒரே மாதிரி எழுதுணா போரடிச்சிடும்:-)அப்பப்ப சுவாரசியமா படுவதை எல்லாம் எழுதுவேன்

மு. சுந்தரமூர்த்தி said...

செல்வன்,
அடுத்த முறை இந்த பக்கம் வரும்போது கண்டிப்பா வாங்க. வீட்டிலேயும் வந்து தங்குங்க. ஊரைச் சுத்தி காட்டுறேன். ஆனா, இந்த 'வலைப்பதிவாளர் மாநாடு' மாதிரியான விவகாரங்கள் எதுவும் வேண்டாம் ;-)

மஞ்சூர் ராசா said...

ஓப்ரிலாந்து வர முடியுமான்னு தெரியலெ. இங்கெ பக்கத்தில் துபாய்லெ இருக்கற ஓட்டலுக்கு ஒரு முறை போகவேண்டும்.

அது சரி கடைசிவரை உங்க கணினியை திறந்தீங்களா இல்லையா?

Unknown said...

//அடுத்த முறை இந்த பக்கம் வரும்போது கண்டிப்பா வாங்க. வீட்டிலேயும் வந்து தங்குங்க. ஊரைச் சுத்தி காட்டுறேன். //

நன்றி சுந்தரமூர்த்தி.

//ஆனா, இந்த 'வலைப்பதிவாளர் மாநாடு' மாதிரியான விவகாரங்கள் எதுவும் வேண்டாம் ;-) //

"வலைபதிவாளர் மாநாடு" என ஒன்றை நடத்தி போண்டா சாப்பிடலாம் என பார்த்தால் வேண்டாம் என்று சொல்லி விட்டீர்களே?:-)

மஞ்சூர் அண்ணா,

கணினியை திரக்கவே இல்லை.ஓசியில் தான் பதிவு போட்டேன்:-)