Tuesday, October 17, 2006

199.பகுத்தறிவின் பரிணாம வளர்ச்சி-I

ஆத்திகம் மற்றும் நாத்திகம் குறித்து சுவாரசியமான விவாதம் நடைபெற்று வருகிறது. ஆத்திகம் மற்றும் நாத்திகம் இடையேயான இந்த மோதல் எத்தனை பழமையானது என அனைவரும் அறிவீர்கள். தத்துவஞான உலகில் இந்த மோதல் இன்னும் தொடர்கிறது. புதிய பெயர்களில் இந்த பழைய விவாதங்கள் நடைபெறுகின்றன. இதை ஒரு நீண்ட தத்துவ தொடராக எழுதலாமா என்ற எண்ணம் இருக்கிறது. பார்க்கலாம்...எல்லாம் நீங்கள் தரும் ஆதரவை பொறுத்தது:-) ஆத்திகம் என்ற மெடாபிஸிக்ஸ் தத்துவ உலகை பல ஆயிரம் வருடங்களாக ஆண்டு வந்தது. "பெரியவர்கள் சொன்னால் பெருமாள் சொன்னது மாதிரி" என்பது தான் இத்துறையின் உண்மை அறியும் முறை. அதாவது மதிப்புக்குரிய மனிதர் ஒருவர் ஒரு கருத்தை சொன்னால் அது உண்மை. அப்படிப்பட்ட மனிதர்களுக்கு சாமியார், ரிஷி, அவதாரம், இறைதூதர் என பெயரிட்டு அழைத்து வந்தனர் மக்கள். அதன்பின் இதை கேள்விக்குள்ளாக்க வந்தது பகுத்தறிவு.(Rationalism) "காண்பதும், உணர்வதுமே உண்மை" என இது உரைத்தது. மனிதன் தன் அறிவால், பகுத்து ஆராயும் திறனால் உண்மையை அறிய முடியும் என இது நம்பியது.வோல்டேர்(1694 - 1778) போன்ற அறிஞர்கள் பகுத்தறிவு சுடரை மேற்கெங்கும் பரப்பினர். தற்போது வலைப்பூக்களில் நடந்து வரும் விவாதம் எனக்கு இந்த காலகட்டங்களில் நடந்த விவாதத்தை தான் நினைவுபடுத்துகிறது. தத்துவ ஞான துறை மெடாபிஸிக்சையும், பகுத்தறிவையும் தாண்டி வெகுதூரம் வந்துவிட்டது. இந்த இரண்டு கோட்பாடுகளும் தப்பு என்று சொல்லி இப்போது பல புது கோட்பாடுகள் வந்துவிட்டன. பகுத்தறிவின் பிரச்சனை என்னவென்று சொல்கிறேன். "ஒரு கருத்தை கேட்டால் அதை யார் சொன்னார்கள் என்பது முக்கியமல்ல. அது உண்மையா, பொய்யா என ஆராய்ந்து முடிவெடு" என்றது பகுத்தறிவு. மனிதனின் ஆராய்ந்து முடிவெடுக்கும் திறனுக்கு எல்லைகள் உண்டு. இப்போது தினம், தினம் பல விஞ்ஞான ஆராய்ச்சி முடிவுகள் வெளிவந்து கொண்டுள்ளன. அவை எல்லாம் உண்மையா, பொய்யா என நம்மால் ஆராய்ந்து பார்க்க முடிவதில்லை. அப்படிப்பட்ட விஞ்ஞான அறிவும் திறனும் யாருக்குமே கிடையாது. ஆனால் அவை பொய் என நாம் யாரும் நம்புவதில்லை. விஞ்ஞானிகள் சொல்கின்றனர், ஜர்னல் ஆப் பிசிக்சில் வந்திருக்கிறது அத்னால் அது உண்மை எனத்தான் நாம் நினைக்கிறோம்.இல்லை அதெல்லாம் பொய் அவற்றை எல்லாம் ஆராய்ந்து பார்த்துதான் முடிவெடுப்பேன் என நாம் யாரும் சொல்லுவதில்லை. ஜர்னல் ஆப் பிசிக்சில் வந்திருக்கிறது. சோதனை செய்யாமலா அவன் அதை வெளியிட்டிருக்க போகிறான்?என நம்பிக்கொண்டு அதை ஏற்பது தான் நடந்தது. ஆக "பெரியவர்கள் சொல்வது உண்மை" என மெடாபிசிக்ஸ் சொன்ன வழிக்குத்தான் பகுத்தறிவும் வந்து நின்றது. மேலும் சிலவற்றை ஆராயும் சக்தியே மனிதனுக்கு கிடையாது. உதாரணத்துக்கு 19ம் நூற்றாண்டில் ஜீன்களை பற்றி ஆராய வசதியோ, திறனோ நமக்கு கிடையாது. அப்போது யாராவது ஜீனை பற்றி நம்மிடம் சொல்லியிருந்தால் பகுத்தறிவு அதை ஆராயவே முடியாமல் அது பொய் எனத்தான் சொல்லியிருக்கும். (உடனே இதை வைத்துக்கொண்டு 'கடவுளை ஆராயும் திறன் மனிதனுக்கு இன்னும் வரவில்லை' என்ற ஜல்லியை யாரும் அடிக்காதிர்கள் சாமிகளா..இதை பற்றி பின்வரும் அதியாயங்களில் எழுதுகிறேன்:-)) ஆக பகுத்தறிவில் குறைபாடுகள் உண்டு என்பதால் அதை கைகழுவி விட்டுவிட்டு தத்துவஞான துறை கையில் எடுத்தது ஜெர்மன் ஐடியலிசம். ஜெர்மானிய தத்துவஞானிகள் இத்துறையை ஆர்வத்துடன் பரப்பினர். மெடாபிசிக்ஸ்-->பகுத்தறிவு-->ஜெர்மன் ஐடியலிசம் என உண்மையை அறியும் ஞானத்தேடல் தொடர்ந்தது. 201வது பதிவில் தொடர்கிறேன்.....

20 comments:

கோவி.கண்ணன் [GK] said...

//மேலும் சிலவற்றை ஆராயும் சக்தியே மனிதனுக்கு கிடையாது. உதாரணத்துக்கு 19ம் நூற்றாண்டில் ஜீன்களை பற்றி ஆராய வசதியோ, திறனோ நமக்கு கிடையாது. அப்போது யாராவது ஜீனை பற்றி நம்மிடம் சொல்லியிருந்தால் பகுத்தறிவு அதை ஆராயவே முடியாமல் அது பொய் எனத்தான் சொல்லியிருக்கும்.//

இது கற்பனை !

உலகம் உருண்டையென்ற கலிலியோவை விரட்டியது யார் ?
பகுத்தறிவாளர்களா ?
:)

Sivabalan said...

செல்வன் சார்

நல்ல தொடர்.

வாழ்த்துக்கள்

Unknown said...

கோவிகண்ணன்

மெடாபிசிக்சை விட சிறந்தது பகுத்தறிவு என்பது தான் என் கருத்தும்.

ஞானத்தேடலின் முதல்படி மெடாபிசிக்ஸ்
இரண்டாம் படி பகுத்தறிவு
மூன்றாம் படி ஜெர்மன் ஐடியலிசம் என கதையை கொண்டு போய்க்கொண்டிருக்கிறேன்

கடைசிபடி மீண்டும் மெடாபிசிக்ஸ் என்று கொண்டுவந்து முடிக்க மாட்டேன்:-))அந்த நோக்கில் இதை எழுதவில்லை:-))

ஒன்றுமில்லை said...

செல்வன் நல்ல பதிவு.

தொடர்ந்து எழுதுங்கள்

மற்றப்படி எல்லா சிந்தனைகளுக்கும் reference point உண்டு.

ஆராயும் அறிவுக்கும் journal of physics ஓரு reference point.

பல நபர்களின் விவாதங்களுக்கு பிறகே அது அச்சேறுகிறது. ஆய்வு சாலை நிறுபனங்கள் உண்டு. journal of physicsல் அச்சேறிய காரணத்தால் அதுவே இறுதி என அக்கருத்தை மொழிந்தவர்களே ஆய்வை மூட்டை கட்ட போவதில்லை.

ஆய்வுகள் அனைத்தும் விவாத்துக்குரியவையே. புரிந்து கொள்ளும் அளவுக்கு அறிவை விருத்தி செய்ய வழியுண்டு. முயற்சி மட்டுமே தேவை. அறிவை அந்த அளவுக்கு கொண்டு செல்லும் தருணத்தில் நீங்களும் ஆய்வு கூடத்தில் பரிசோத்தித்து பார்க்கலாம்

மெட்டா பிஸிக்ஸ் எனப்படுவது இதுவே இறுதி என கூறுகிறது. வேறு தள சிந்தனைகள் வரும் போது ஒடுக்கி விடுகிறது. ஆராய்சிக்கோ, விவாத்த்திற்கோ அப்பால் உள்ள சிந்தனை கோர்வைகளை கையில் வைத்துக் கொண்டு துதி பாடுதலை ஊக்குவிக்கிறது. இங்கிருக்கும் reference point- சாமியரோ, இறைதூதரோ சொல்வது. ஆய்வு சாலை நிருபணங்கள் இல்லை.

கோவி.கண்ணன் [GK] said...

பகுத்தறிவின் பரிணாமம் காலத்தின் ஊடாக வளர்கிறது. இன்றைய தத்துவம் நாளைக்கு ஆராய்சிப் பூர்வமாக மெய்பிக்கப்பட்டால் அதையும் ஏற்றுக் கொள்கிறது. ஆனால் ஆத்திகம் அப்படியில்லையே, அது அடிப்படை வாதத்தில் அல்லவா பின்னப் பட்டு இருக்கிறது. பகுத்தறிவு வாதிகள் குறிப்பாக யாருடைய கோட்பாடுகளையும் பின்பற்றுவதில்லை. கேள்விகளை மட்டும் அடுத்த தலைமுறைக்காக விட்டுச் செல்கின்றனர், அதனுடன் புதிய கேள்விகள் எழ புதிதாக வளர்கிறது. முன்பு மதம் என்ற அளவில் எதிர்த்து நின்ற பகுத்தறிவுவாதிகள் இன்று மதங்கள் என்ற அளவில் எதிர்த்து நிற்கவேண்டிய நிலைமைக்கு வந்துவிட்டார்கள்.

ஆத்திகம் முறை / நெறி தவறிய காலங்களில் காலத்தின் கட்டாயமாக நாத்திகம் தேவைப்படுகிறது.

Unknown said...

கண்ணன்

இது ஆத்திக ஆதரவு பதிவல்ல.அல்ல.அல்ல...

நீங்கள் சொல்லும் குறைபாடுகளை ஏற்கிறேன்.

அதே சமயம் பகுத்தறிவு குறைகளுக்கு அப்பாற்பட்ட துறை என நீங்கள் சொன்னால் பகுத்தறிவை இன்னொரு மதமாக ஆக்குகிறீர்கள் என்றுதான் பொருள்.

கோவி.கண்ணன் [GK] said...

//அதே சமயம் பகுத்தறிவு குறைகளுக்கு அப்பாற்பட்ட துறை என நீங்கள் சொன்னால் பகுத்தறிவை இன்னொரு மதமாக ஆக்குகிறீர்கள் என்றுதான் பொருள்.//

இது எப்போதும் சாத்தியேமே இல்லை ! அதற்கு ஒரு சமயத்தலைவர் வரவேண்டுமே !
:))

மற்றபடி உங்கள் கட்டுறையை ஆத்திக ஆதரவென்று நான் நினைக்கவில்லை !
என்னுடைய கருத்துக்களை சொல்கிறேன். ஆத்திகத்தை சாடுவதென்பதும் என்நோக்கம் அல்ல !

http://kaalangkal.blogspot.com/2006/10/blog-post_116113752513402139.html

Unknown said...

சில கேள்விகள்

நன்றி.

நான் கேட்பது ஜர்னல் ஆப் பிசிக்சில் வருவது உண்மை அல்லது பொய் என ஒரு சாதாரன மனிதனுக்கு எப்படி தெரியும் என்பதுதான்.அதில் உள்ள எந்த ஆய்வையும் செய்து பார்க்கும் சக்தி அவனுக்கு இல்லை. ஆக அவன் அதை உண்மை என ஏற்பானா, பொய் என ஏற்பானா?

ஆக ஆராய்ந்து பார்க்கும் சக்தி இல்லாத பொதுமனிதன் ஜர்னல் ஆப் பிசிக்ஸ் சொல்கிறது என ஒன்றை நம்பித்தானே தீருகிறான்?

Unknown said...

என்னுடைய கருத்துக்களை சொல்கிறேன். ஆத்திகத்தை சாடுவதென்பதும் என்நோக்கம் அல்ல !////

நன்றி கண்ணன்

ஆத்திகத்தை தாரளமாக சாடலாம். கேள்விகளுக்கும், விமர்சனத்துக்கும் அப்பாற்பட்டது எதுவுமில்லை என நினைத்ததால் தான் மானுட இனம் முன்னேறியது.

சன்னாசி said...

//தத்துவ ஞான துறை மெடாபிஸிக்சையும், பகுத்தறிவையும் தாண்டி வெகுதூரம் வந்துவிட்டது. இந்த இரண்டு கோட்பாடுகளும் தப்பு என்று சொல்லி இப்போது பல புது கோட்பாடுகள் வந்துவிட்டன.//

மீமெய்யியல், தவறு/சரி என வகைப்படுத்தப்படக்கூடிய ஒன்றென்று இப்போதுதான் அறிகிறேன்!!! இதுகுறித்து மேலும் விளக்க முடியுமா? மீமெய்யியல், இன்றுவரை பதிலளிக்கமுடியாத கேள்விகளை (கடவுள் இருக்கிறானா இல்லையா? மனித வாழ்வின் நோக்கம் என்ன? இத்யாதி...) அன்றைக்கிருந்த சாத்தியங்களைப் பயன்படுத்தி ஆராய்ந்தது - நீங்கள் உபயோகிக்கும் தாண்டி வந்துவிட்டது என்ற சொற்றொடரைச் சற்றுக் கவனமாக உபயோகிக்கவும்.

//அப்போது யாராவது ஜீனை பற்றி நம்மிடம் சொல்லியிருந்தால் பகுத்தறிவு அதை ஆராயவே முடியாமல் அது பொய் எனத்தான் சொல்லியிருக்கும்.//

தவறு/சரி இரண்டில் எதைச் சொன்னாலும் அது பகுத்தறிந்து சொல்லப்பட்டதே. சிலரின் நிரூபணங்கள் தவறாயிருக்கையில் அவை நிராகரிக்கப்படுகின்றன, ஊர்ஜிதப்படுத்தப்படுபவை, ஒப்புக்கொள்ளப்பட்ட நிரூபணங்களாகின்றன. இதில் பகுத்தறிவு பொய் சொல்லியிருக்கும் என்பதை ஒப்புக்கொள்ளமுடியுமென்று தோன்றவில்லை. ஜீன் என்று தற்போதுள்ளது ஒரு பெயர் - அவ்வளவே. லமார்க், ஜான் லாக்கிலிருந்து homunculus theoryயிலிருந்து பின்பு க்ரிகர் மெண்டல் செடிகளில் தனது ஆராய்ச்சிகளை மேற்கொண்டதிலிருந்து, சந்ததியினரூடாக கடத்தப்படும் ஒன்று என்ற ஒரு கருத்தாக்கம் தொடர்ந்து வந்துகொண்டுதானிருந்தது. மெண்டல் இதை factors என்று அழைத்தார், ஹோமன்குலஸ் தியரிப்படி, விந்துக்குள் ஒரு சின்ன மனித உருவம் இருக்கிறது, கர்ப்பத்தில் அது பெரிதாகிறது என்று கூறப்பட்டது - பெயர்கள் மாறிவந்திருக்கின்றனவே தவிர கருத்தாக்கம் துவங்கிய காலம் இதுதானென்று கூறமுடியாது. ஜீன் என்பது டி.என்.ஏவால் ஆனது என்ற விவரம் கடந்த ஒரு நூற்றாண்டாகத்தான் பேசப்பட்டு வருகிறது.

சஞ்சிகை முடிவுகளைவைத்து பெரியவர்கள் சொன்னால் பெருமாள் சொன்னமாதிரி என்று அறிவியல் களத்திலுள்ள எவரும் நம்புவதில்லை என்று உங்களுக்குத் தெரியாததில்லை. ஆராய்ச்சி முடிவுகளில் replication இல்லாமல் எந்தக் கருத்தும் நிரூபணமாவதில்லை. முதலில் வரும் பெரும்பாலான புதுக் கருத்தாக்கங்களுக்கு எதிர்ப்பும், replication மேற்கொண்டு நிகழ நிகழ அது ஒப்புக்கொள்ளப்படுவதுமே நடைமுறையில் இருப்பது. கண்டுபிடித்தவன் ஞானக்கிறுக்கனாக இருந்தால் சந்தைக்கு கண்டுபிடிப்பு வரத் தாமதமாகும் - நுண்ணோக்கியைக் கண்டுபிடித்த அண்டன் வான் லீவன்ஹூக் இறக்கும் வரையில் ராயல் சொசைட்டி ஆஃப் லண்டனில் ராபர்ட் ஹூக் லீவன்ஹூக் உருவாக்கிய அளவு துல்லியமான நுண்ணோக்கியை உருவாக்க இயலாமல் போனது ஒரு உதாரணம். ஜர்னல் ஆஃப் ஃபிசிக்ஸ் அல்லது வேறெந்த சஞ்சிகைக்கும் இதே நிலைதான் - பலரால் ஊர்ஜிதப்படுத்தப்படாத கருத்துக்கள் நடைமுறைக்கு வருவது தற்போதைய சூழலில் சாத்தியமில்லை. பொதுமனிதன் சஞ்சிகைகளைப் படிப்பதில்லை - அதிலிருந்து வடிகட்டப்பட்டு ஊடகங்கள் தரும் செய்திகளையே தெரிந்துகொள்கிறான் (பெரும்பாலும்). இதில் எந்தத் தவறும் இல்லை - ஒரு கருத்தாக்கம் தவறென்று நிரூபிக்கப்படும்போதும் அதே ஊடகங்கள்தான் அவனுக்கு செய்தியை எடுத்துச்செல்கின்றன. சமீபத்திய அறிவியலில் நிரூபணங்கள்/மறுப்புக்கள் என்பதுகுறித்த வெகு எளிதான உதாரணத்தைச் சொல்லவேண்டுமானால், ப்ளூட்டோ ஒரு கோள் அல்ல என்று அகற்றப்பட்டதைச் சொல்லலாம் - இந்த விஷயத்தில் எது நிரூபிக்கப்பட்டது/எது நிரூபிக்கப்படவில்லை என்பதைச் சொல்லமுடியுமா?

பகுத்தறிவை ஒரு மதமாக்க முடியும் என்றெல்லாம் சொல்கிறீர்கள் - எப்படி இதை நியாயப்படுத்துகிறீர்கள் என்று தெரிந்துகொள்ள வெகு ஆர்வமாக இருக்கிறேன்!! நல்ல முயற்சி, தொடர்ந்து எழுதவும். தாமஸ் குன் எழுதிய The structure of scientific revolutions படித்திருக்கிறீர்களா என்று தெரியவில்லை - வாய்ப்பிருந்தால் படித்துப் பார்க்கவும், ஒருவேளை மேற்கொண்டு நீங்கள் எழுதுபவற்றுக்கும் உதவியாக இருக்கலாம்.

Unknown said...

சன்னாசி,

மிக விரிவாக இதற்கு பதில் போடவேண்டும். நாளை இடுகிறேன். அருமையான கேள்விகளுக்கு நன்றி

Anonymous said...

Mr. Periyar Ramaswamy is one of the athiest's god. Isn't?. That's why his followers adore idol of Mr. Periya

senthil.c.kumaran@gmail.com (செந்தில் குமரன்) said...

ஐயா உங்களின் வாதமே தவறான அடிப்படையில் அமைந்திருக்கிறது.

ரொம்ப பொதுப்படுத்தி சொல்லி இருக்கிறீர்கள்.

ஆத்திகம் அல்லது ஆன்மீகத்தில் மதம் என்பது நம்பிக்கையின் அடிப்படையில் அமைவது. இன்று இஸ்லாம் மாற்று மதத்தவர்கள் அனைவரும் காபிர் என்றும் அவர்களுக்கு மறுமையில் தண்டணை கிடைக்கும் என்கிறார்களே இது இஸ்லாம் மதம் சார்ந்த நம்பிக்கை. தலையில் இருந்து தோன்றினார்கள் என்று வேதங்கள் சொல்வது இந்து மதத்தில் ஒரு சாராரின் நம்பிக்கை.

காபிர்கள், வருணாசிரமம் போன்ற baseless நம்பிக்கைகளைக் கொண்டது ஆத்திகத்தில் மதம் சார்ந்த நம்பிக்கைகள்.

இதில் பல அற்புதமான தத்துவங்களும் அடங்கி இருக்கிறது என்பதை மறுப்பதகில்லை. ஆனால் மூட நம்பிக்கைகள் சார்பான பல நம்பிக்கைகளையும் மதங்கள் உள்ளடக்கி இருக்கின்றன.

இந்த மூட நம்பிக்கைகளை எதிர்ப்பது நாத்திகத்தில் ஒரு பகுதி. கடவுளே இல்லை என்று ஏன் எதிர்ப்பு தொடங்கியது என்றால் கடவுள் என்பதை பின் தள்ளி இந்த மூட நம்பிக்கைகள் எதிர்ப்பது இயலாது என்பதால் தான் பிரம்மா இருக்கிறார் ஆனால் அவர் தலையில் இருந்து யாரும் தோன்றவில்லை என்பதை விட பிரம்மா என்பதை முட்டாள்தனம் என்று சொல்வது எளிது என்பதால்தான்.

காலம் காலமாக வந்த நம்பிக்கைகளை தவறு என்றால் திருத்திக் கொள்ள யாரும் தயாராக இல்லை. வருணாசிரமம் தவறு என்று அறிவியல் எப்படி நிரூபிக்க முடியும் காபிர்கள் என்பது கயமைத்தனம் என்பதை எந்த எக்ஸ்பீரிமெண்டில் நீரூபிக்க முடியும்?

ஆகவே தான் கடவுள் எதிர்ப்பு.

இன்று பாபர் மசூதி இடித்து ராமர் கோயில் கட்டுவோம் என்பது மதம் சார்ந்த மூடத்தனம். இந்து மதம் என்ன சொல்கிறது? எல்லா இடங்களிலும் இறைவன் நிரம்பி இருக்கிறார் என்று அப்படியானால் இவர்களால் மசூதியிலும் இறைவனைக் காண முடியாதா? இல்லை என் கொள்கைகள் முக்கியம் என் ஈகோ என்று மசூதியை ஏன் இடிக்க வேண்டும்? அது மூடத்தனமான சிலரின் நம்பிக்கை.

இதனை எதிர்ப்பதும் நாத்திகம்.

மதம், இறைவன் என்பதை வேற்றுமை படுத்தியே ஆக வேண்டும். ஏனெனில் இன்று பலரின் நிலை அதுதான்.

ஆக இந்து மதத்தை எதிர்ப்பது நாத்திகம் ஆனால் எதிர்ப்பது இறைவனை அல்ல மதம் சார்ந்த மூடத்தனத்தை.

புத்தர் ஒரு அருமையான நாத்திகர் சமூகத்தில் இருக்கும் அவலங்களை மதங்களில் இருக்கும் மூடத்தனங்களை எதிர்த்தார். அவர் கடவுள் என்ற கான்செப்டை எதிர்க்கவில்லை.

அது என்ன இறைவனை மதத்தின் மூலமாகத் தான் காண முடியும் என்ற பிடிவாதம்? அது உண்மை அல்ல.

அறிவியலை இறைவன் எப்படி இந்த உலகை இயக்குகிறான் என்ற உண்மையை அறியும் விதமாக பார்க்க வேண்டும். எல்லா மதங்களும் இறைவன் இப்படித்தான் படைத்தான் என்று கூறுவதை இல்லை இறைவன் Evolution மூலம் படைத்தான் என்று கூறி உண்மையை உணர வைத்து மூட நம்பிக்கைகளை அகற்றுவது அறிவியல் என்பது என் கருத்து.

ஆக அறிவியல் பற்றி பேசுபவர்கள் எல்லாம் நாத்திகம் என்று கூறுவது தவறு.

மதங்கள் காண்பிப்பது தவறாக இருக்கலாம் என்றும் உண்மையான இறைவனை அனைவரும் factual உணருங்கள் நம்பிக்கையின் அடிப்படையில் உணர்ந்து உங்கள் ஈகோவால் முட்டாள்தனம் செய்யாதீர்கள் என்று சொல்வதுதான் என் வகையில் நாத்திகம்.

மேலும் ஜர்னல் ஆப் சயின்ஸில் சும்மா யாரும் எதை வேண்டுமானலும் எழுதி வெளியிட்டு விடலாம் என்பது போல சொல்கிறீர்கள். ஒரு விஞ்ஞானி ஒரு கட்டுரை அனுப்பினால் அது எந்த அளவு சாத்தியம் என்பதை அவர்கள் நிரூபித்திருக்க வேண்டும். மேலும் அந்த கட்டுரை குறித்து அந்தத் துறையின் பல விஞ்ஞானிகளிடம் கருத்து கேட்கப் பட்டு அதன் அடிப்படையிலேயே வெளியிடப் படும்.

ஆனால் மதங்களில் இப்படி சாத்தியமா? மதத்தில் இருக்கும் நம்பிக்கைகளை ஒருவருக்கு அனுப்பி அவர் வேற்று மதத்தினரிடம் அனுப்பி அதற்கு கருத்து கேட்டு அதன் பின்னால் இது உண்மை என்று வெளியிட முடியுமா?

முடியாது ஏனென்றால் இது வெறும் நம்பிக்கை அறிவியல் என்பது fact. இன்று அறிவியலில் உண்மை என்று சொல்வதை நாளை பொய் என்றாகி விடும் என்பது மிகவும் பொதுமை படுத்தப் பட்டு தவறான அர்த்தத்தில் உபயோகப் படுத்தப் பட்டிருக்கிறது.

Big Bang தவறு என்று Bubble என்று இன்று சொல்பவர்கள். Big Bang முழுக்க தவறு என்று சொல்லவில்லை அதனிலிருந்து சில இடங்களில் மாறு படுகின்றனர். Child universe என்பதும் Big bang என்பதில் இருந்து கொஞ்ச தூரத்தில் பிரிவது தான்.

ஜீன்கள் என்பது கண்டு பிடிக்கும் முன் அதனை வேறு யாராவது தீர்க்க தரிசனத்தின் மூலம் சொல்லி இருக்க முடியும் என்று நீங்கள் நம்புவதே ஒரு மூட நம்பிக்கைதான் என்பது என் கருத்து. ஆராயாமல் எல்லாவற்றையும் உணர முடியும் கடவுள் அனுக்கிரகம் இருந்தால் என்று சொல்வது, நான் பிரம்மன் தலையில் இருந்து சொல்வதைப் போலத்தான். அது கூட இருக்கலாம் இன்னும் நிரூபிக்கப் படவில்லை என்று சொல்வது கயமைத்தனம்.

குமரன் (Kumaran) said...

நல்ல தொடர் செல்வன். இன்னும் நான் நிறைய தெரிந்து கொள்ளலாம் இந்த தொடரின் மூலமும் பின்னூட்டங்களின் மூலமும் என்று நம்புகிறேன். நன்றி.

Floraipuyal said...

இறைவன் = இயற்கை.

சென்னையில் கூவம் என்றொரு ஆறு. சில ஆண்டுகளாக ஆலைக்கழிவுகள் சேர்ந்து துர்நாற்றம் வீசுகின்றது. சென்னையைத் தாண்டி இவ்வாற்றைக் காணாதவர்களுக்கு (சென்னை வாசிகளோ அல்லது சென்னைக்கு வந்து கூவத்தைக் கண்ட மற்றவர்களோ) கூவம் என்பதே ஒரு சாக்கடை ஆறு என்று தோன்றும்.

"முதலில் இன்னும் கழிவுகள் சேருவதைத் தவிர்க்க வேண்டும். கழிவுகள் சேருவதற்குக் காரணிகளை அகற்ற வேண்டும். பிறகு ஆற்றைச் சுத்தப் படுத்த வேண்டும்." இது உண்மையான பகுத்தறிவு.

"கூவம் என்றாலே துர்நாற்றம் வீசும். அதை மணலில் மூடிப் புதைக்க வேண்டும்" என்பது பகுத்தழிவு.

மதுரையில் இருந்து கொண்டு "ஆறுகள் துர்நாற்றம் வீசா. எனவே கூவம் என்று ஒன்று இல்லவே இல்லை" என்பது நாத்திகம்.

"கூவம் தன்னைத் தானே சுத்தப் படுத்திக் கொள்ளும்" என்று மேலும் கழிவுகளைக் கொட்டுவது ஆத்திகம்.

குமரன் (Kumaran) said...

//"கூவம் தன்னைத் தானே சுத்தப் படுத்திக் கொள்ளும்" என்று மேலும் கழிவுகளைக் கொட்டுவது ஆத்திகம்.//

????

எப்படி?

:-))

Unknown said...

நண்பர்களே

இன்றும், நாளையும் வேலை இருக்கிறது. வெள்ளி அல்லது சனி வந்து பதிலிடுகிறேன், அல்லது தனிபதிவாக எழுதுகிறேன்.

நன்றி
செல்வன்

Unknown said...

மக்களே

பதில் இந்த பதிவில் இட்டிருக்கிறேன். பின்னூட்டங்களை அனுப்புங்கள். வார கடைசியில் விரிவாக பதில் அளிக்கிறேன்.

நன்றி

http://holyape.blogspot.com/2006/10/16-ii.html

ஓகை said...

செல்வன்,

//ஆத்திகத்தை தாரளமாக சாடலாம். கேள்விகளுக்கும், விமர்சனத்துக்கும் அப்பாற்பட்டது எதுவுமில்லை என நினைத்ததால் தான் மானுட இனம் முன்னேறியது.//

'சாடலாம்' என்பது நிச்சயமாகத் தவறு. கெள்வி கேட்கலாம் என்று இருந்திருக்கவேண்டும். கேள்விகளின் நோக்கமும் உண்மை அறிதலில் பொருட்டு இருக்கவேண்டும். அதை விடுத்து மனிதனின் இன்றைய நாகரீகத்துக்கு அடிப்படையாக இருந்தவற்றையெல்லாம் அவை இதுவரை இதுபோன்ற கேள்விகளை சந்தித்திருக்கவில்லை என்ற முன்முடிவோடு அனுகுதல் பகுத்தறிவு மட்டுமல்ல எந்த அறிவோடும் சேர்க்கத் தகுதியில்லாதது.

முடிவான அறிவை மனிதன் எட்டிவிட்டான் ஆனால் ஆத்திகம் அதைத் தடுக்கிறது என்கிற மாயையை தோற்றுவிக்கும் நாத்திக வாதங்களால் மனித குலத்துக்கு ஏதும் பயன் உண்டா?

அரவிந்தன் நீலகண்டன் said...

மேலும் சிலவற்றை ஆராயும் சக்தியே மனிதனுக்கு கிடையாது. உதாரணத்துக்கு 19ம் நூற்றாண்டில் ஜீன்களை பற்றி ஆராய வசதியோ, திறனோ நமக்கு கிடையாது. அப்போது யாராவது ஜீனை பற்றி நம்மிடம் சொல்லியிருந்தால் பகுத்தறிவு அதை ஆராயவே முடியாமல் அது பொய் எனத்தான் சொல்லியிருக்கும்.//
ஜீன்கள் முதலில் கருதுகோளாக உருவாக்கப்பட்டு அண்மைக்காலம் வரை கண்டுபிடிக்கப்படாமல் ஒருவித கணித ஊகமாகவே உயிரியலாளர்களால் பயன்படுத்தப்பட்டு வந்தன. கிரிகோர் மெண்டல் காலம் முதல் வாட்ஸன் & க்ரிக் காலம் வரைக்கும் ஏறக்குறைய க்ரோமோசோம்களில் எங்கே எப்படி இருக்கிறது என்பது குறித்தும் ஊகங்கள் இருந்து வந்தன. என்ற போதிலும் கறாரான கணித விதிகளுக்கும் பரிசோதனைகளுக்கும் தேறியும் மாறியும் வந்துள்ளது ஜீன்கள் கோட்பாடு. இதே கறார் தன்மையும் தவறெனில் தூக்கி எரியும் பரிசோதனைகளும் ஆன்மீகத்திற்கும் வேண்டும். Personal God as an external reality ஏற்கனவே குப்பைத் தொட்டியை சேர்ந்துவிட்டது. அடிப்படைவாதிகளின் மூளைகளில் மட்டுமே இந்த 'படைத்தவன்' ஆசாமி வாழ்கிறார்.