Tuesday, October 17, 2006

198.ஐடியா மணியும் தமிழ வாத்தியாரும்

கல்யாணம் பண்ணிப்பார், வீட்டை கட்டிப்பார் என்பார்கள். வீடு கட்டுவது சுலபமோ, கஷ்டமோ ஆனால் கோயில் கட்டுவது ரொம்ப கஷ்டமான காரியம் என தோன்றுகிறது. இது ஒரு கோயில் உருவான கதை அதாவது எனது சொந்தக்காரர்கள் கோவை அருகே புதிதாக உருவாகியிருந்த ஒரு குடியிருப்பில் குடியேறினர். குடியேறியதும் அவர்களுக்கு இந்த ஊரில் எல்லாம் இருக்கு,ஆனால் ஒரு கோயில் இல்லையே என தோன்றிவிட்டது. இம்மாதிரி பிரச்சனைகளை தீர்த்து வைக்கத்தான் ஆல் இன் ஆல் அழகுராஜாவான நாம் இருக்கோமே?உடனடியா அங்கே ஆஜராகிவிட்டேன். அவர்கள் கற்பனை செய்துவைத்திருந்த கோயிலை சொன்னார்கள். அந்த மாதிரியே கட்டியிருந்தால் அது ராஜ,ராஜ சோழீச்சுவரம் மாதிரி உருவாகியிருக்கும் என்பதில் எந்த சந்தேகமுமில்லை:-)அவர்கள் ஐடியா எல்லாம் கேட்டுவிட்டு நல்ல ஐடியா, இதுக்கு இத்தனை பட்ஜெட் ஆகும்னு சொன்னதும் மயக்கம் போடாத குறையாய் மயஙகி விழுந்துவிட்டனர். அவர்கள் கையில் இருந்தது 2000. இதை வைத்துக்கொண்டு எந்த கோயிலை கட்ட முடியும்?:-) இதெல்லாம் ஊர்கூடி தேரிழுக்க வேண்டிய விஷயம் என்று சொல்லி அந்த காலனி மக்களை கூட்டி ஒரு கமிட்டி போட்டு அதுக்கு எங்க மாமா பையன் ஐடியாமணியை தலைவராக்கி ஆரம்ப கட்ட வசூலை முடிங்க,அப்புறம் மத்ததை பாத்துக்கலாம்னு சொல்லிட்டு வந்தேன். அப்புறம் சில மாசம் கழிச்சு அந்த பக்கம் போனா கிட்டத்தட்ட 200,000 வரை தேத்தி வெச்சிருந்தாங்க. ஒரு கவர்மென்ட் ஆபிசர் அந்த காலனியில இருந்திருக்கார்.அவர் போன இடமெல்லாம் வசூல் மழையாய் பொழிஞ்சிருக்கு. பத்தாகுறைக்கு ஒரு கோடீஸ்வர டாக்டர் புதுசா குடி வந்திருக்கார்.அவர் கிட்ட ஏதோ ஜோசியகாரன் போயி நீங்க கோயில் கட்டலேன்னா செத்துபோயிருவீங்கன்னு சொல்ல அவர் அலறி அடிச்சுட்டூ என்ன பண்னலாம்னு யோசிக்க, நம்ம மக்கள் சமயம் பாத்து வசூலுக்கு போக உடனடியா 50,000 ரூபாயை எடுத்து கொடுத்துட்டார். 200,000 வெச்சுட்டு டீ தான் குடிக்க முடியும்.ஏன்னா அப்ப அந்த காலனியில் ரியல் எஸ்டேட் விலை சென்டுக்கு 45,000 ரூபாய்ன்னு போயிட்டிருந்துச்சு. இடத்துக்கு ஏதாவது ஏற்பாடு பண்ணுங்க மக்களேன்னு சொல்லிட்டு வந்தேன். குறைந்தது 10 சென்ட்டாவது வேணும். அத்தனை காசுக்கு எங்கே போவாங்க மக்கள்? அதனால் ஏதாவது சூழ்ச்சி பண்ணி தான் இடத்தை தேத்தணும்னு நம்ம சிஷ்ய புள்ளை ஐடியா மணி (கமிட்டி தலைவரே அவந்தான்:) முடிவு பண்ணினான். ஜனநாயகத்தில் மக்கள்=அரசு என சொல்லியிருப்பதால் புறம்போக்கு நிலத்தில் கோயில் கட்டுவதென்று ஏகமனதாக குழுவினரால் தீர்மானிக்கப்பட்டது. அப்போதே ஐடியாமணி கிட்ட "அடேய் இதெல்லாம் வேணாம்ன்டா. கமிட்டி தலைவன் நீ தான்.மாட்டினா ஆப்பு உனக்குத்தான்னு" சொன்னேன். இதுக்கெல்லாம் பயந்தா நம்மூரில் பிழைக்கவே முடியாதுன்னு சொல்லி ஐடியாமணி எல்லாத்தையும் நான் பார்த்துக்கறேன்னு தீர்மானமா சொல்லிட்டான். மகனே உன் சமத்துன்னு சொல்லிட்டு நான் அப்க்ஸ்காண்ட் ஆயிட்டேன். தீர்மானம் பண்ணிட்டா ஆச்சா? பூனைக்கு மணிகட்டுவது யார்?பாதி கட்ட, கட்ட வந்து கார்ப்பரேஷன்காரன் கோயிலை இடிச்சா என்ன பண்றது? அதனால் யோசிச்சுகிட்டே இருந்தாங்க பசங்க. அப்புறம் நைசா அந்த ஊரு கவுன்சிலர் கிட்ட போயி பேசினாங்க. காலனியில் 100 குடும்பம் இருக்கு. எப்படி கணக்கு போட்டாலும் 300 ஓட்டு தேரும். அவரு பச்சைகொடி காட்டிட்டார்."கோயில் கட்டுங்க. எவன் வந்தாலும் நான் பார்த்துக்கறேன்னு" சொல்லிட்டார். அப்புறம் என்ன? இடம் தேட வேண்டியது தானே பாக்கி? இவங்களும் தேடு, தேடுன்னு தேடி மாநகாரட்சி பூங்காவுக்குன்னு ஒதுக்கின இடத்தை தேர்ந்தெடுத்துட்டாங்க. அதுதான் காலனியில் நடுவே இருக்கும் இடம். எந்த புதுகாலனி உருவாக்கினாலும் பூங்காவுக்குன்னு ஒரு இடம் ஒதுக்கணும். தேன்கூட்டில் கைவைக்கிறோம்னு தெரியாம பசங்க அந்த இடத்தை தேர்ந்தெடுத்து "கவுன்சிலர் பார்த்துக்குவார்ன்னு" சொல்லிட்டு கோயில் கட்ட ஆரம்பிச்சுட்டாங்க. அந்த இடத்துக்கு நேர் பின்னாடி தமிழ்வாத்தியார் ஒருத்தர் வீடு இருக்கு. கோயில் கட்ட காலனியில் பணம் தராத ஒரே ஆள் அவர் தான். சாமி என்பதே அவருக்கு சுத்தமா புடிக்காத விசயம். அவர் வீட்டுக்கு எதிரே "வினாயகனே வினை தீர்ப்பவனேன்னு" அதிகாலை 4 மணிக்கு சத்தமா மைக்செட்டு வெச்சு அலற விட்டுட்டு கவர்மென்டு நிலத்தில் கோயிலுக்கு பூமி பூஜை போட்டாங்க. விடுவாரா நண்பர்? பெட்டிஷன் போட்டுட்டார். கார்ப்பரேஷன்காரன் வந்து கெடுபிடியா விசாரிச்சுட்டு போனதும் ஜனங்களுக்கு பயம்வந்து கோயில் வேலையை நிப்பாட்டிட்டாங்க. அப்புறமா நம்ம ஐடியாமணி சூப்பரா ஒரு ஐடியா கொடுத்தான். 2004 தேர்தல் வந்துச்சு. அப்ப கோயில் கட்ட ஆரம்பிக்கலாம். தேர்தல் சமயம். இதை பெருசு பண்னமாட்டாங்கண்ணு சொன்னான்.அதே மாதிரி தான் ஆச்சு,. 2004ல் அதே மாதிரி பாராளுமன்ற தேர்தல் சமயத்தில் கோயில் கட்ட ஆரம்பிச்சாங்க. ஓட்டு கேட்டு வந்த வேட்பாளரெல்லாம் கோயிலுக்கு டொனேஷன் குடுத்துட்டு போக, ஐடியாமணி நல்லா பாபுலர் ஆயிட்டான். தேர்தல் முடிஞ்சு ரிசல்ட் வரும்போது கோயில் பாதி கட்டி முடிச்சாச்சு. பெட்டிஷன் மேல பெட்டிஷன் பறந்தும் கார்ப்பரேஷனிலிருந்து ஒருத்தரும் ஏன்னு கேக்கலை கோயில் கும்பாபிஷேகம்னு இமெயிலில் அழைப்பிதழ் வந்துச்சு. இந்தியா போறப்ப போயி கும்பிடு போடணும். ஏன்னா கோயில் பிள்ளையார் பேரு "செல்வ வினாயகர்" ஐடியாமணிக்கு என் மேல பாசம் அதிகம். அப்புறம் நம்ம ஆன்மிகவாதிகள் முக்கியமான இந்த சந்தேகத்துக்கு பதில் சொல்லணும்னு கேட்டுக்கறேன். அதாவது பிள்ளையார் கோயில் கட்டினா புண்ணீயம்னு வினாயகபுராணத்தில் போட்டிருக்கு. சகல விதமான கோல்மால்களும (அது கோல்மால் இல்லை, ராஜதந்திரம்னு சொல்றான் ஐடியாமணி) செஞ்சு கோயில் கட்டின ஐடியாமணி சொர்க்கத்துக்கு போவானா, இல்லை பிராடு செய்ததால் நரகத்துக்கு போவானா? பிள்ளையார் கோயில் கட்டுவதை தடுத்தால் மகாபாவம்னும் வினாயக புரானத்தில் போட்டிருக்கு. அதனால அந்த தமிழ வாத்தியார் நரகத்துக்கு போவாரா இல்லை கடமையை செஞ்சதுக்காக சொர்க்கத்துக்கு போவாரா?
Post a Comment