Tuesday, October 17, 2006

198.ஐடியா மணியும் தமிழ வாத்தியாரும்

கல்யாணம் பண்ணிப்பார், வீட்டை கட்டிப்பார் என்பார்கள். வீடு கட்டுவது சுலபமோ, கஷ்டமோ ஆனால் கோயில் கட்டுவது ரொம்ப கஷ்டமான காரியம் என தோன்றுகிறது. இது ஒரு கோயில் உருவான கதை அதாவது எனது சொந்தக்காரர்கள் கோவை அருகே புதிதாக உருவாகியிருந்த ஒரு குடியிருப்பில் குடியேறினர். குடியேறியதும் அவர்களுக்கு இந்த ஊரில் எல்லாம் இருக்கு,ஆனால் ஒரு கோயில் இல்லையே என தோன்றிவிட்டது. இம்மாதிரி பிரச்சனைகளை தீர்த்து வைக்கத்தான் ஆல் இன் ஆல் அழகுராஜாவான நாம் இருக்கோமே?உடனடியா அங்கே ஆஜராகிவிட்டேன். அவர்கள் கற்பனை செய்துவைத்திருந்த கோயிலை சொன்னார்கள். அந்த மாதிரியே கட்டியிருந்தால் அது ராஜ,ராஜ சோழீச்சுவரம் மாதிரி உருவாகியிருக்கும் என்பதில் எந்த சந்தேகமுமில்லை:-)அவர்கள் ஐடியா எல்லாம் கேட்டுவிட்டு நல்ல ஐடியா, இதுக்கு இத்தனை பட்ஜெட் ஆகும்னு சொன்னதும் மயக்கம் போடாத குறையாய் மயஙகி விழுந்துவிட்டனர். அவர்கள் கையில் இருந்தது 2000. இதை வைத்துக்கொண்டு எந்த கோயிலை கட்ட முடியும்?:-) இதெல்லாம் ஊர்கூடி தேரிழுக்க வேண்டிய விஷயம் என்று சொல்லி அந்த காலனி மக்களை கூட்டி ஒரு கமிட்டி போட்டு அதுக்கு எங்க மாமா பையன் ஐடியாமணியை தலைவராக்கி ஆரம்ப கட்ட வசூலை முடிங்க,அப்புறம் மத்ததை பாத்துக்கலாம்னு சொல்லிட்டு வந்தேன். அப்புறம் சில மாசம் கழிச்சு அந்த பக்கம் போனா கிட்டத்தட்ட 200,000 வரை தேத்தி வெச்சிருந்தாங்க. ஒரு கவர்மென்ட் ஆபிசர் அந்த காலனியில இருந்திருக்கார்.அவர் போன இடமெல்லாம் வசூல் மழையாய் பொழிஞ்சிருக்கு. பத்தாகுறைக்கு ஒரு கோடீஸ்வர டாக்டர் புதுசா குடி வந்திருக்கார்.அவர் கிட்ட ஏதோ ஜோசியகாரன் போயி நீங்க கோயில் கட்டலேன்னா செத்துபோயிருவீங்கன்னு சொல்ல அவர் அலறி அடிச்சுட்டூ என்ன பண்னலாம்னு யோசிக்க, நம்ம மக்கள் சமயம் பாத்து வசூலுக்கு போக உடனடியா 50,000 ரூபாயை எடுத்து கொடுத்துட்டார். 200,000 வெச்சுட்டு டீ தான் குடிக்க முடியும்.ஏன்னா அப்ப அந்த காலனியில் ரியல் எஸ்டேட் விலை சென்டுக்கு 45,000 ரூபாய்ன்னு போயிட்டிருந்துச்சு. இடத்துக்கு ஏதாவது ஏற்பாடு பண்ணுங்க மக்களேன்னு சொல்லிட்டு வந்தேன். குறைந்தது 10 சென்ட்டாவது வேணும். அத்தனை காசுக்கு எங்கே போவாங்க மக்கள்? அதனால் ஏதாவது சூழ்ச்சி பண்ணி தான் இடத்தை தேத்தணும்னு நம்ம சிஷ்ய புள்ளை ஐடியா மணி (கமிட்டி தலைவரே அவந்தான்:) முடிவு பண்ணினான். ஜனநாயகத்தில் மக்கள்=அரசு என சொல்லியிருப்பதால் புறம்போக்கு நிலத்தில் கோயில் கட்டுவதென்று ஏகமனதாக குழுவினரால் தீர்மானிக்கப்பட்டது. அப்போதே ஐடியாமணி கிட்ட "அடேய் இதெல்லாம் வேணாம்ன்டா. கமிட்டி தலைவன் நீ தான்.மாட்டினா ஆப்பு உனக்குத்தான்னு" சொன்னேன். இதுக்கெல்லாம் பயந்தா நம்மூரில் பிழைக்கவே முடியாதுன்னு சொல்லி ஐடியாமணி எல்லாத்தையும் நான் பார்த்துக்கறேன்னு தீர்மானமா சொல்லிட்டான். மகனே உன் சமத்துன்னு சொல்லிட்டு நான் அப்க்ஸ்காண்ட் ஆயிட்டேன். தீர்மானம் பண்ணிட்டா ஆச்சா? பூனைக்கு மணிகட்டுவது யார்?பாதி கட்ட, கட்ட வந்து கார்ப்பரேஷன்காரன் கோயிலை இடிச்சா என்ன பண்றது? அதனால் யோசிச்சுகிட்டே இருந்தாங்க பசங்க. அப்புறம் நைசா அந்த ஊரு கவுன்சிலர் கிட்ட போயி பேசினாங்க. காலனியில் 100 குடும்பம் இருக்கு. எப்படி கணக்கு போட்டாலும் 300 ஓட்டு தேரும். அவரு பச்சைகொடி காட்டிட்டார்."கோயில் கட்டுங்க. எவன் வந்தாலும் நான் பார்த்துக்கறேன்னு" சொல்லிட்டார். அப்புறம் என்ன? இடம் தேட வேண்டியது தானே பாக்கி? இவங்களும் தேடு, தேடுன்னு தேடி மாநகாரட்சி பூங்காவுக்குன்னு ஒதுக்கின இடத்தை தேர்ந்தெடுத்துட்டாங்க. அதுதான் காலனியில் நடுவே இருக்கும் இடம். எந்த புதுகாலனி உருவாக்கினாலும் பூங்காவுக்குன்னு ஒரு இடம் ஒதுக்கணும். தேன்கூட்டில் கைவைக்கிறோம்னு தெரியாம பசங்க அந்த இடத்தை தேர்ந்தெடுத்து "கவுன்சிலர் பார்த்துக்குவார்ன்னு" சொல்லிட்டு கோயில் கட்ட ஆரம்பிச்சுட்டாங்க. அந்த இடத்துக்கு நேர் பின்னாடி தமிழ்வாத்தியார் ஒருத்தர் வீடு இருக்கு. கோயில் கட்ட காலனியில் பணம் தராத ஒரே ஆள் அவர் தான். சாமி என்பதே அவருக்கு சுத்தமா புடிக்காத விசயம். அவர் வீட்டுக்கு எதிரே "வினாயகனே வினை தீர்ப்பவனேன்னு" அதிகாலை 4 மணிக்கு சத்தமா மைக்செட்டு வெச்சு அலற விட்டுட்டு கவர்மென்டு நிலத்தில் கோயிலுக்கு பூமி பூஜை போட்டாங்க. விடுவாரா நண்பர்? பெட்டிஷன் போட்டுட்டார். கார்ப்பரேஷன்காரன் வந்து கெடுபிடியா விசாரிச்சுட்டு போனதும் ஜனங்களுக்கு பயம்வந்து கோயில் வேலையை நிப்பாட்டிட்டாங்க. அப்புறமா நம்ம ஐடியாமணி சூப்பரா ஒரு ஐடியா கொடுத்தான். 2004 தேர்தல் வந்துச்சு. அப்ப கோயில் கட்ட ஆரம்பிக்கலாம். தேர்தல் சமயம். இதை பெருசு பண்னமாட்டாங்கண்ணு சொன்னான்.அதே மாதிரி தான் ஆச்சு,. 2004ல் அதே மாதிரி பாராளுமன்ற தேர்தல் சமயத்தில் கோயில் கட்ட ஆரம்பிச்சாங்க. ஓட்டு கேட்டு வந்த வேட்பாளரெல்லாம் கோயிலுக்கு டொனேஷன் குடுத்துட்டு போக, ஐடியாமணி நல்லா பாபுலர் ஆயிட்டான். தேர்தல் முடிஞ்சு ரிசல்ட் வரும்போது கோயில் பாதி கட்டி முடிச்சாச்சு. பெட்டிஷன் மேல பெட்டிஷன் பறந்தும் கார்ப்பரேஷனிலிருந்து ஒருத்தரும் ஏன்னு கேக்கலை கோயில் கும்பாபிஷேகம்னு இமெயிலில் அழைப்பிதழ் வந்துச்சு. இந்தியா போறப்ப போயி கும்பிடு போடணும். ஏன்னா கோயில் பிள்ளையார் பேரு "செல்வ வினாயகர்" ஐடியாமணிக்கு என் மேல பாசம் அதிகம். அப்புறம் நம்ம ஆன்மிகவாதிகள் முக்கியமான இந்த சந்தேகத்துக்கு பதில் சொல்லணும்னு கேட்டுக்கறேன். அதாவது பிள்ளையார் கோயில் கட்டினா புண்ணீயம்னு வினாயகபுராணத்தில் போட்டிருக்கு. சகல விதமான கோல்மால்களும (அது கோல்மால் இல்லை, ராஜதந்திரம்னு சொல்றான் ஐடியாமணி) செஞ்சு கோயில் கட்டின ஐடியாமணி சொர்க்கத்துக்கு போவானா, இல்லை பிராடு செய்ததால் நரகத்துக்கு போவானா? பிள்ளையார் கோயில் கட்டுவதை தடுத்தால் மகாபாவம்னும் வினாயக புரானத்தில் போட்டிருக்கு. அதனால அந்த தமிழ வாத்தியார் நரகத்துக்கு போவாரா இல்லை கடமையை செஞ்சதுக்காக சொர்க்கத்துக்கு போவாரா?

43 comments:

நாமக்கல் சிபி said...

இதுக்கெல்லாம் ஐடியா கொடுத்தவர் எங்க போவார்னு யாராவது சொல்லுங்க ;)

நாமக்கல் சிபி said...

2 to 200 :-)

எப்படித்தான் இவ்வளவு வேகமா போறீங்களோ???

ஒரு சின்ன விண்ணப்பம்... 200வது பதிவு இராமனோட பெருமைகளை விலக்கி போட முடியுமா???

நேயர் விருப்பம்...

tamizhppiriyan said...

"4 பேருக்கு நல்லது பண்ணனும்னா எதுவும் தப்பு இல்ல..நாம் வாங்குறோம்..50 ஆம்புலன்ஸ் வாங்குறோம்..ஏழைங்களுக்கு மட்டும் தான் ஓடும்" --நாயகன் கமல் சொன்னத வச்சு பார்த்தா ஐடியா மணிக்கு சொர்க்கம் தான்..தொடரட்டும் நற்பணி!..

கால்கரி சிவா said...

ஆரம்பிச்சாசா, சொர்க்கம் நரகம் அப்பிடின்னு. அவங்க எங்கே போவங்க்கின்னு தெரியாது ஆனா செத்து போவங்க என தெரியும்

இலவசக்கொத்தனார் said...

1அ) நரகம்தான்
1ஆ) கடைசியில் வேலையை முடிக்கலையே. அதனால பெண்டிங் லிஸ்ட்.

அந்த மாதிரி காலனிகளில் கோயிலை விட முக்கியம் பூங்காதான். அந்த மாதிரி சுவாசிக்க இடம் இல்லாம கான்கிரீட் காடுகளா மாறுதே நம்ம ஊருங்க. அங்க தங்கி இருக்கறதே நரகத்தில் தங்கி இருக்கற மாதிரிதான்.

அதனால ஐடியா மணிக்கு நரகம்தான். அந்த வாத்தியார் சீக்கிரமே காலி பண்ணிட்டு போவாருன்னு நினைக்கிறேன். இல்லைன்னா அவருக்கும் நரகம்தான்.

Unknown said...

பாலாஜி:-)

எனக்கு நரகம்னு எப்பவோ முடிவாயாச்சு. வாழ்க்கையில் செஞ்ச கோல்மால் எல்லாம் ஒண்ணா ரெண்டா?எண்ணிகையிலடங்கா கோல்மால்கள் அல்லவா செய்திருக்கிறேன்?:-))

நிச்சயமா 200வது பதிவு ராமனை பற்றியதாக தான் இருக்கும். அருமையான் ஆலோசனைக்கு நன்றி.ஆன்மிக பதிவெழுதி ரொம்ப காலமாச்சு. கொஞ்சம் ஆன்மிக பக்கம் திரும்பணும்

இலவசக்கொத்தனார் said...

//ஒரு சின்ன விண்ணப்பம்... 200வது பதிவு இராமனோட பெருமைகளை விலக்கி போட முடியுமா??? //

அது முடியாதுங்க. இவரு இராமர் பெருமையை எப்படி விலக்க முடியும்? :)

(வெ.பை. அது எழுத்துப்பிழைன்னு தெரியும். இது சும்மா டமாஸு.)

யப்பா, செல்வன். நம்மாளு கேக்குறாப்டி. கொஞ்சம் விளக்கிப் போடுமய்யா.

Unknown said...

தமிழ்ப்பிரியன்

பாத்தீங்களா?நானும் இதை தான் நினைச்சேன்.ஆனா கொத்தனார் வந்து பூங்கா தான் முக்கியம், மழை முக்கியம்னு சொல்றார்

கொத்தனாரய்யா

பிள்ளையார் அருள் புரிஞ்சா மழை வருமா வராதா?பிள்லையார் அருள் இருந்தா மரம் இருந்தாலும் இல்லாட்டாலும் மழை பெய்யுமே?

இப்ப என்ன பண்ணுவீங்க, இப்ப என்ன பண்ணுவீங்க:-)))

Unknown said...

சிவா

அதெல்லாம் ஒத்துக்க முடியாது. ரெண்டில் ஒரு பதில் சரியா யாராவது சொல்லியே தீரணும்.அதுவும் நம்ம சொந்தகார பையனுக்கு சாதகமான தீர்ப்பா இருக்கணும்னு கேட்டுக்கறேன்:-))

இலவசக்கொத்தனார் said...

மழை வர மரம் வேணுமய்யா. இருக்கற கோவிலில் விளக்கேத்த வழி இல்லை, இப்படி புது கோயில்கள் கட்டுறதே தப்பு. அதுலையும் பொது இடத்தை ஆக்கிரமிப்பு வேற. இதுக்கு சப்போர்ட்டா நாலு பேரு வேற.

உங்களை எல்லாம் என்ன சொல்லி திருத்த. நான் இதுக்கு மேல வந்தா எனக்குத்தான் இரத்தக் கொதிப்பு. விடுறேன் ஜூட்.

குமரன் (Kumaran) said...

:-)

என்ன எல்லாரும் புதிர் போடக் கெளம்பிட்டீங்க?

1. ரெண்டு இடத்துக்கும் போவார். பாவம் புண்ணியத்தைச் சரி செய்வதும் புண்ணியம் பாவத்தைச் சரி செய்வதும் கிடையாது. இரண்டிற்குமான பயன்களை அனுபவிக்கவேண்டும். இரண்டையும் கலந்து செய்ததால் சொர்க்கத்திற்கும் நரகத்திற்கும் போகாமால் விரைவிலேயே சேர்த்து வைச்சதை அனுபவிக்கிறதுக்கும் மீண்டும் சேர்க்கிறதுக்கும் மறுபிறவி எடுத்து வந்துடுவார்.

2. தமிழாசிரியர் பூங்காவின் இடத்தில் ஒரு கட்டிடம் கட்டுகிறார்கள் என்று எண்ணி அதனைத் தடுக்க முயன்றிருந்தால் அவருக்குத் தன் கடமையைச் செய்த பயன் கிட்டும். மாறாக (அ) தன் வீட்டின் முன்னால் (ஆ) தனக்குப் பிடிக்காத ஆத்திகம் என்னும் கொள்கைக்காக (இ) கோவில் கட்டுகிறார்கள் அதனைத் தடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில் செய்திருந்தால் அது கடமையைச் செய்ததாகாது; அதற்குரிய பயனை அடைவார்.

வேதாளத்திற்குச் சரியான பதிலை விக்ரமாதித்தன் சொன்னதால் அது மீண்டும் முருங்கை மரத்தில் ஏறிவிட்டதா?

குமரன் (Kumaran) said...

//மழை வர மரம் வேணுமய்யா. இருக்கற கோவிலில் விளக்கேத்த வழி இல்லை, இப்படி புது கோயில்கள் கட்டுறதே தப்பு. அதுலையும் பொது இடத்தை ஆக்கிரமிப்பு வேற. இதுக்கு சப்போர்ட்டா நாலு பேரு வேற.
//

வழி மொழிகிறேன். அதற்குப் பதிலாக பள்ளிச்சாலைகள் கட்டியிருக்கலாம். பாரதி சொன்ன மாதிரி. ஆயிரம் கோவில்களைக் கட்டிய பயன் கிடைக்கும்.

குமரன் (Kumaran) said...

இது கற்பனை நிகழ்ச்சியா உண்மை நிகழ்ச்சியா செல்வன்?

இந்த மாதிரி நிறைய நடக்கிறது. அந்த வகையில் இது கற்பனை இல்லை. ஆனால் உங்களுடைய ஈடுபாடு இதில் இருப்பதாகச் சொல்கிறீர்களே - அது கற்பனையா?

Unknown said...

குமரன்

இது கற்பனை நிகழ்ச்சி அல்ல. ஐடியா மணி என்பது மட்டும் அவனுக்கு நாங்கள் வைத்த செல்லப்பெயர்.மற்றது அனைத்தும் உண்மைதான்.

கோவையில் உள்ள கோயில்கள்களில் மிகப்பெரும்பாலானவை அரசு நிலத்தில் கட்டப்பட்டவைதான். காந்திபுரம் சிக்னலில் உள்ள வினாயகர் கோயில் மிக பிரசித்தி பெற்றது. அது பிளாட்பாரத்தின் நடுவே, நகரின் இதய பகுதியில் உள்ளது.அப்சரா தியேட்டர் அருகே உள்ள மாரியம்மன் கோயிலும் அப்படிக் கட்டப்பட்டதுதான்.

குமரன் (Kumaran) said...

மதுரையில் அரசு நிலத்தில் கட்டப்பட்ட கோவில்களை இடித்தார்களே அது போல் விரைவில் கோவையிலும் நடக்கும் போல் இருக்கிறது. நடக்கட்டும் நடக்கட்டும்.

Unknown said...

என் ஈடுபாடு என்பது ஒன்றுமில்லை குமரன். இது நடந்தது என் உறவினர் வீடு இருந்த காலனியில். 1000 ரூபாய் டொனேஷன் ஆரம்ப கட்டத்தில் கொடுத்தேன். அப்போது இவர்கள் செய்யவிருக்கும் கோல்மால் எல்லாம் தெரியாது:-)

இலவசக்கொத்தனார் said...

//காந்திபுரம் சிக்னலில் உள்ள வினாயகர் கோயில் மிக பிரசித்தி பெற்றது. அது பிளாட்பாரத்தின் நடுவே, நகரின் இதய பகுதியில் உள்ளது.//

எவ்வளவு இடைஞ்சலான இடம் என எனக்குத் தெரியும். அத்துமீறிக் கட்டப்பட்ட எல்லா விதமான கட்டடங்களும் இடிக்கப்பட வேண்டும். இத்தகைய செயல்களுக்கு கடுமையான தண்டனைகள் விதிக்கப்பட வேண்டும்.

இதற்கு அரசாங்கத்திலிருந்து கொண்டு உதவியவர்களும் தண்டிக்கப்பட வேண்டும்.

இலவசக்கொத்தனார் said...

இதை விவாத மேடை என வகைப்படுத்தாமல் ஆன்மீகம் என வகைப்படுத்தியதில் இருக்கும் உ.கு.வை வன்மையாகக் கண்டிக்கிறேன். ;)

Unknown said...

//அத்துமீறிக் கட்டப்பட்ட எல்லா விதமான கட்டடங்களும் இடிக்கப்பட வேண்டும். இத்தகைய செயல்களுக்கு கடுமையான தண்டனைகள் விதிக்கப்பட வேண்டும்.

இதற்கு அரசாங்கத்திலிருந்து கொண்டு உதவியவர்களும் தண்டிக்கப்பட வேண்டும். //

கொத்தனார்,

கோவைநகரில் பல இடங்களில் தலித்கள் புறம்போக்கு இடத்தில் தான் குடிசை போட்டிருக்கின்றனர். அங்கே எல்லாம் கண்டிப்பாக மாரியம்மன் கோயில் இருக்கும். அதெல்லாம் கவர்மென்ட் புறம்போக்கு நிலத்தில் கட்டியதுதான். இந்த காலனியிலும் புறம்போக்கு நிலத்தில் பல தலித்துகள் குடிசை மற்றும் பக்கா சிமென்ட் ஷீட் வீடுகள் கட்டியுள்ளனர். பட்டத்தரசி அம்மன் கோயிலும் சின்னதாக கட்டியுள்ளனர்.எல்லாம் புறம்போக்கு நிலம்தான்.

சட்டப்படி இடிக்கிறோம் என வந்தால் கோவையில் ஒரு தலித் காலனியோ, அதில் உள்ள மாரியம்மன் கோயிலோ மிஞ்சாது. கோவையை பற்றி உங்களுக்கு தெரியாதா என்ன?

Unknown said...

அரசாங்க சட்டங்களில் உள்ள ஓட்டைகளே இதற்கெல்லாம் காரணம். புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமிப்பு செய்து சில வருடங்கள் கழித்து மனுபோட்டால் அரசே பட்டா போட்டு கொடுத்துவிடும். நிலம் இல்லாத ஏழைமக்கள் அப்படித்தான் நிலத்தை பெறுகின்றனர்.

இப்போதுகூட தரிசு நிலத்தை பட்டா போட்டு கொடுத்துக் கொண்டுள்ளனர். இந்த இடத்துக்கும் பட்டாவுக்கு மனுபோட்டிருப்பார்கள் என நினைக்கிறேன். போன் செய்யும்போது விசாரித்து சொல்கிறேன்

Santhosh said...

சொல்ல முடியாது செல்வன்,
இப்பொழுது ஏழை மக்களுக்கு இலவசமா இரண்டு ஏக்கரா நிலம் தராங்க இல்ல நம்ம பிளையாரும் ஏழை(எல்லா சாமிங்களும் மயிலு சிங்கமுன்னு வாகனம் வச்சிட்டு இருக்கும் பொழுது இவரு வெறும் மூஞ்சூரைத்தான் வாகனமா வச்சிட்டு இருக்காரு எனவே அவரும் ஏழை தான்) தான் அவருக்கும் வாங்கிகலாம். :))

Unknown said...

தலை சந்தோஷ்:-)))

தமிழ்நாட்டில் எலிக்கறி சாபிடறாங்கன்னு செய்தி வந்துச்சில்ல. அதனால் நிஜமாவே ஏழைகளின் உணவான எலியை வாகனமாக கொண்டவரும் ஏழைதான்:-))

Sivabalan said...

செல்வன் சார்

இப்படி குண்டக்க மண்டக்க கேள்வி கேட்காதீங்க.. அப்பறம் குமரன் சார் தனிப் பதிவு போட்டிடுவார்.. :-)

ஆமா அந்த சொர்க்கம் நரகம் விலாசம் கொடுங்க.. இமெயில் முகவரியோட..:-)

Unknown said...

சிவபாலன்,

:-)))

//ஆமா அந்த சொர்க்கம் நரகம் விலாசம் கொடுங்க.. இமெயில் முகவரியோட:-)//

அதாவது ஏழையின் சிரிப்பில் இறைவனை காணலாம்னு அண்ணா சொன்னார். ஏழை மக்களை சந்தோஷமாக வைத்திருந்தால் அதுக்கு மேல் புண்ணீயமும் இல்லை, சொர்க்கமும் இல்லை.

நாம் வாழும் உலகம் தான் சொர்க்கமும்,நரகமும்.

BadNewsIndia said...

interesting ஆன பதிவு.

செல்வன், இதுக்கெல்லாம் சொர்கமோ நரகமோ கிடையாது.
பூங்கா வரவேண்டிய எடத்துல, கோயில் கட்டினதால, உங்க ஐடியாமணி யோட பசங்கள் விளையாட வேண்டிய வயசுல விளையாட முடியாம அவதி படுவாங்க. அதனால வியாதிகள் வரலாம் மற்ற பல அசௌகரியங்கள் வரலாம்.

(சும்மா வெளையாட்டுக்கு சொன்னேன். பசங்க பாவம். அவங்க என்னா பண்ணுவாங்க. )

கோயில் அவசியம்தான். அதைக் கட்டினதால ஐடியாமணி பசங்களுக்கு புண்ணியம் சேரும். ஐடியாமணிக்கு எண்ணை கொப்பரைதான். கடவுளே இல்லன்னு நெனைக்கர மூட வாத்தியார் அநேகமா சொர்கத்துக்கும் நரகத்துக்கும் நடூல தன்னந்தனியா கெடப்பார். வெறுத்துப்போயிடும் அவர் இறந்த பிறகு கிடைக்கும் 'வாழ்க்கை'.

குமரன் (Kumaran) said...

//இப்படி குண்டக்க மண்டக்க கேள்வி கேட்காதீங்க.. அப்பறம் குமரன் சார் தனிப் பதிவு போட்டிடுவார்.. :-)
//

செல்வன் மட்டும் மத்தவங்க கருத்துகளை கருத்தாக மட்டும் எடுத்துக்காம ஹைஜாக் செய்றாங்கன்னு சொல்லட்டும். உண்மையிலேயே தனிப்பதிவுகளா போட்டு ஹைஜாக் பண்ணிடலாம். :-) என்ன சொல்றீங்க சிவபாலன்? :-)

ச.சங்கர் said...

இலவசக்கொத்தனார் said...

//////அத்துமீறிக் கட்டப்பட்ட எல்லா விதமான கட்டடங்களும் இடிக்கப்பட வேண்டும். /////

இதென்ன கொத்தனார் கட்டுறதைப் பத்தி பேசாம இடிக்கிறதைப் பத்தியே பேசிக்கிட்டு இருக்காரு...இவரு கொத்தனார் சர்ட்டிபிகேட்டை வாங்கி செக் பண்னணுங்கப்பா...

எல்லாத்தையும் அரசியல் பண்ணலேன்னா நமக்கு பொழுது போகாதுங்கோ :))

//////அத்துமீறிக் கட்டப்பட்ட எல்லா விதமான கட்டடங்களும் இடிக்கப்பட வேண்டும். /////

கொத்தனாரே..... முன்னால ராமர் கோயில் இருந்த இடத்துல அவுரங்க சீப் அத்து மீறி கட்டின பாபர் மஸ்ஜித் இடிச்சது சரீங்கருதுக்காக இப்படி சொல்றீங்களா இல்லை 200 வருஷமா இருந்த பாபர் மசூதியை இடிச்சுட்டு அங்க அத்து மீறி கட்டப்பட்ட ராமர் கோயில் இடிக்கப்பட வேண்டும் அப்படீன்னு சொல்றீங்களா ?

அப்பா...இன்னைக்கு பொழுதுக்கு இது போதும் :))

பி.கு : செல்வன், பதிவு நல்லா இருக்கு

(டேய்... உன் பின்னூட்டத்த பப்ளிஷ் பண்றதுக்காண்டி ஐஸ் வைக்காதே...வைக்கா...வைக்... அப்படீன்னு கேட்டு மறைவது நம்ம மனசோட எக்கோ (யக்கோவ் ! இல்லீங்க) தாங்க :))

Sivabalan said...

குமரன் சார்

அப்படியே ஆகட்டும்..:-)

அப்பறம் இந்த ஹைஜாக் என்றால் என்ன என்பதைப் பற்றி உங்களிடம் தனி மடலில் விளக்கம் பெற்றுக் கொள்கிறேன்.:-)

இலவசக்கொத்தனார் said...

//இப்படி குண்டக்க மண்டக்க கேள்வி கேட்காதீங்க.. அப்பறம் குமரன் சார் தனிப் பதிவு போட்டிடுவார்.. :-)//

ஆன்மீக செம்மல் குமரனா இருக்கட்டும், கடவுள் நம்பிக்கை இருக்கும் நானாகட்டும், இங்கு தப்பான விதத்தில் கோயில் கட்டுவதைக் கண்டித்துதான் இருக்கிறோம். நன்றாகத் திட்டமிடப்பட்ட ஒரு நகரத்தில் இருக்கும் வசதிகளை சிகாகோவில் இருக்கும் நீங்கள் அறிந்துதான் இருப்பீர்கள். அதைப் போன்ற வசதிகள் நம் நாட்டிலும் புதிதாகக் கட்டப்படும் பகுதிகளாவது இருக்க வேண்டுமென்பதுதான் எங்கள் எண்ணம். கேட்ட கேள்விக்கு தெளிவாகத்தான் பதில் சொல்லி இருக்கிறோம்.

தங்கள் கருத்துகளுக்கு எதிர்வினைக் கருத்து கொண்டவர்களை எள்ளுவது உங்களுக்கு இப்பொழுது ஒரு பழக்கமாகவே ஆகிவிட்டது. நான் இங்கு இட்ட பின்னூட்டத்தைப் பற்றி மட்டும் சொல்லவில்லை. என்னதான் நகைச்சுவை என்ற போர்வையின் கீழ் நீங்கள் பதுங்கிக் கொண்டாலும், அது அடுத்தவரை பாதிக்கத்தான் செய்கிறது என்பதை நீங்கள் உணர்ந்து கொள்ள வேண்டும். நாம் சொல்வது அடுத்தவரை புண்படுத்துமா என ஒரு முறை யோசித்து, அவ்வாறு ஆகாது என உணர்வதை மட்டும் போடலாமே. அவரவர் வழியில் அடுத்தவரை தொந்தரவு செய்யாமல் செல்லலாமே. (நான் உங்கள் கடவுள் மறுப்பு பதிவுகளுக்கு வராமல் செல்வது போல.)

மற்றவர்களுக்கு நான் சொல்ல மாட்டேன். நீங்கள் புரிந்து கொள்வீர்கள், தப்பாக எடுத்துக் கொள்ள மாட்டீர்கள் என்ற எண்ணமிருப்பதால்தான் சொல்கிறேன். இதற்கு நீங்கள் இங்கு பதில் சொல்லி செல்வன் பதிவை திசைதிருப்பிய பாவதிற்கு நாம் ஆளாக வேண்டாம். இதைக் குறித்து நான் உங்களிடம் விவாதிக்கவும் போவதில்லை. சொல்ல வேண்டும் எனத் தோன்றியது. சொல்லிவிட்டேன். அவ்வளவுதான்.

Sivabalan said...

இகொ

குமரன் சார் பதிவையும்/ பதிலையும், படித்திருப்பீர்கள் என நம்புகிறேன். உங்கள் அலோசனைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

Unknown said...

குமரன்
பிள்ளையார் கோயில் கட்டினால் மோட்சம் உறுதி என்பதாக ஒரு கதையில் படித்திருக்கிறேன்.ஆனால் செய்த பாவத்தை எல்லாம் களைந்துவிட்டு வரவேண்டுமாம். ஐடியாமணிக்கு மோட்சம் உறுதி என்றாலும் அவன் இன்னும் ஓராயிரம் ஜென்மமாவது எடுத்தால் தான் அவன் செய்த பாவம் எல்லாம் தீரும் என நினைக்கிறேன். ஏனென்றால் ஓவர் குசும்பு பார்ட்டி:-)

அந்த வாத்தியார் அந்த இடத்தில் தமிழன்னை சிலையோ வள்ளுவர் சிலையோ வைத்திருந்தால் ஆட்சேபம் தெரிவித்திருக்க மாட்டார்.ஆனால் கோயில் என்பதால் எக்ஸ்ட்ரா மோடிவேஷன் வந்து பெடிஷன் போட்டு விட்டார்.இதனாலேயே அவருக்கு நரகம் வரும் என நான் நம்பவில்லை. கல்வி கற்பித்தல் எனும் உயர்ந்த தொழில் செய்பவர்.ஆனால் ஊரில் அவர் மேல் செம கடுப்பாக இருக்கிறார்கள்

Unknown said...

பேட்நியூஸ் இந்தியா

நன்றி. நன்றாக கருத்து சொல்லியுள்ளீர்கள். உங்கள் வலைத்தளமும் அருமையாக உள்ளது

Unknown said...

//கொத்தனாரே..... முன்னால ராமர் கோயில் இருந்த இடத்துல அவுரங்க சீப் அத்து மீறி கட்டின பாபர் மஸ்ஜித் இடிச்சது சரீங்கருதுக்காக இப்படி சொல்றீங்களா இல்லை 200 வருஷமா இருந்த பாபர் மசூதியை இடிச்சுட்டு அங்க அத்து மீறி கட்டப்பட்ட ராமர் கோயில் இடிக்கப்பட வேண்டும் அப்படீன்னு சொல்றீங்களா ?

அப்பா...இன்னைக்கு பொழுதுக்கு இது போதும் :))//


தலைவா..ஷங்கர்..என்ன இது? ஒரு வெடிகுண்டை எடுத்து போட்டுட்டு சாவகாசமா இன்னைக்கு பொழுதுக்கு இது போதும்ங்கறீங்க?:-)))

(டேய்... உன் பின்னூட்டத்த பப்ளிஷ் பண்றதுக்காண்டி ஐஸ் வைக்காதே...வைக்கா...வைக்... அப்படீன்னு கேட்டு மறைவது நம்ம மனசோட எக்கோ (யக்கோவ் ! இல்லீங்க) தாங்க :))

அப்படி எல்லாம் இல்லைங்க. எப்படி எழுதினாலும் பின்னூட்டத்தை பப்ளிஷ் பண்ணுவேன்.கருத்து சுதந்திரம் தான் முக்கியம். எப்படி வேண்டுமெனிலும் விமர்சியுங்கள்.அது உங்கள் உரிமை.

Kannabiran, Ravi Shankar (KRS) said...

செல்வன்

விவாதங்களின் சூடு குறைந்தவுடன், குளிர்வதால் பின்னூட்டுகிறேன் :-)

//பத்தாகுறைக்கு ஒரு கோடீஸ்வர டாக்டர் புதுசா குடி வந்திருக்கார்.அவர் கிட்ட ஏதோ ஜோசியகாரன் போயி நீங்க கோயில் கட்டலேன்னா செத்துபோயிருவீங்கன்னு சொல்ல ....உடனடியா 50,000 ரூபாயை எடுத்து கொடுத்துட்டார்.//
சிரித்து விட்டேன்; ஒரு டாக்டரே இப்படி என்றால், நீங்கள் ஐடியா மணியைக் குறை சொல்லிப் பிரயோசனமில்லை; பேசாமல் சட்டம் தன் கடமையைச் செய்ய வேண்டியது தான்.

//குறைந்தது 10 சென்ட்டாவது வேணும். அத்தனை காசுக்கு எங்கே போவாங்க மக்கள்?//
என்னங்க 10cents இல்லையா நம்ம பூமிங் எகானமி மக்களிடம்?? நீங்க $1 அனுப்பியிருக்கலாமே :-) ச்ச்ச்சும்மா சொன்னேன்!

"செல்வ" விநாயகப் பெருமானே; செல்வனாரைக் குணச்"செல்வனாகிய" இராமன் பதிவே போட வைச்சியானா...பூங்கா இடத்துக்கு அடுத்தபடியா, கவுன்சிலர் ஆபீசுக்குப் பக்கத்திலேயே அடுத்த கோவிலை ரெடி பண்ணிடறோம்பா!!! :-))

பினாத்தல் சுரேஷ் said...

செல்வன்,

நல்ல கேள்விகள்.

என் சார்பாக இன்னொரு கேள்வி: சொர்க்கம் நரகம் என்பதை நம்பாதவர்கள், ஏன் கோயில் கட்ட வேண்டும்? (அ) கோயில் கட்ட என்ன வேண்டுமென்றாலும் செய்யலாம் என்றால் பணக்காரர்களுக்குத் தானே சொர்க்கத்தில் முழு இட ஒதுக்கீடு இருக்கும்?

பதில் வந்தா சொல்லுங்க சாமி!

Unknown said...

தலைவா

சொர்க்கம்,நரகம் என்பதை நம்பாதவர்கள் கூட சாமியை நம்பலாம் அல்லவா?:-))

//கோயில் கட்ட என்ன வேண்டுமென்றாலும் செய்யலாம் என்றால் பணக்காரர்களுக்குத் தானே சொர்க்கத்தில் முழு இட ஒதுக்கீடு இருக்கும்?//

கோயில் பணக்காரன் தான் கட்டணும் என்றில்லை. 10 ரூபா கோயில் கட்ட டொனேஷன் குடுத்த நீங்க கூடதான் கோயில் கட்டலாம். ரெண்டு செங்கல்லை குறுக்கால வெச்சு பிள்ளையார் சிலையை நடுவில் வெச்சா அதுவும் கோயில் தான். அதுவும் முடியலைன்னா பூசலார் மாதிரி மனசிலேயே கோயில் கட்டலாம்.அதுவும் முடியலைன்னா குடியிருந்த கோயிலை (தாயை) கும்பிடலாம்.:-))

Kannabiran, Ravi Shankar (KRS) said...

செல்வன்
Jokes apart, நீங்க கேட்ட கேள்விக்குக் குமரன் மிகவும் இயைந்த பதிலே அளித்துள்ளார். சொர்க்கமோ, நரகமோ
செய்யும் வினைகளுடன், அவற்றின் நோக்கமும் மிக முக்கியமான ஒன்று.

நல்ல நோக்குடன் கோவிலை அப்புறப்படுத்தச் சொல்வதும், தீய நோக்குடன் கோவிலை எழுப்பச் சொல்வதும், அவன் அறிய மாட்டானா என்ன விளையாட்டை?
"பொக்கம் மிக்கவர் பூவும் நீரும் கண்டு, நக்கு(சிரித்து) நிற்பான் அவர் தமை நாணியே" என்பது அப்பர் வாக்கு!

குடிமக்களை வருத்தி செய்த கோவில் குடமுழுக்குக்குப் போகாமல், உள்ளக் கோவில் கட்டிய பூசலார் குடமுழுக்குக்குத் தானே அவன் வந்தான்!

//இருக்கற கோவிலில் விளக்கேத்த வழி இல்லை, இப்படி புது கோயில்கள் கட்டுறதே தப்பு.//

இது முற்றிலும் உண்மை;
இவ்வாறு செய்வது தப்போ தப்பு!!
கடவுள் எற்கனவே குடியிருக்கும் வீடு பொலிவின்றி சீர் அழிந்து இருக்கும் போது, அதைச் சரி செய்து சமூகத்துக்கும் பயன் அளிப்பதை விட்டு விட்டு,
"வேணும்னா நான் கட்டுற புது வீட்டுல வந்து இருந்துக்க்கோ" என்பது சுயநலம்; அகந்தை!

"எங்க ஏரியாவில் கோவில் வேணுமே; எங்க தெருவில் கோவில் வேணுமே; எங்களால ஊருக்குப் பத்து தெரு தள்ளி இருக்குற கோவிலுக்கு எல்லாம் போக முடியாது. யார் நடப்பா அவ்வளவு தூரம்" அப்பிடின்னு சொன்னா, பக்தி போய் விடுகிறது; சுயநலமும், செளகர்யமும் தான் முன்னே வருகிறது.

குடும்பத்தைப் பெருக்கும் முன் நம்மால் சமாளிக்க முடியுமா என்று யோசிக்கும் மக்கள், கோவில்களைப் பெருக்கும் முன்னும், இன்னும் நூறு வருடம் கழித்து அதன் நிலை என்ன, யார் பாதுகாப்பார்கள் என்று யோசிக்க மறுப்பது தான் விசித்திரம்.

வேறு சில பேர் ஆர்வக் கோளாறினால் செய்வார்கள்; அவர்கள் கூட இதைப் புரிந்து கொள்ளணும்; நாமும் அவர்கள் நல்ல மனம் புண்படாதவாறு புரியவும் வைக்கணும்! நம் பங்கும் இதில் சிறிது உள்ளது!!

இதற்கு ஒரு நல்ல இயக்கம் வட தமிழ்நாட்டில் இயங்குகிறது. ஒரு சில பதிவுகளில் அவர்களை அறிமுகப்படுத்துகிறேன்.

Kannabiran, Ravi Shankar (KRS) said...

செல்வன்

தொடர் பின்னூட்டத்துக்கு மன்னிக்கவும்! நான் ஏதும் பின்னூட்டக் கயமைத்தனம் செய்து விட வில்லையே? நீங்கள் துவக்கி விட்ட படியால் இன்னொரு மிக முக்கியமான விடயம்.

இராமானுசர் காலத்தில், மதுரையில் ஒரு பெரும் ராமர் கோவில் அந்நியர்களின் படையெடுப்பாலும் மற்ற சில காரணங்களாலும் தரைமட்டமாக்கி, அந்த இடத்தில் அங்காடி ஒன்று கட்டி விட்டனர். அழகு விக்ரகங்களை (அதுவும் ஒய்யார ராமர், வெட்கச் சீதை கொள்ளை அழகு) எடுத்துக் கொண்டு இராமானுசரிடம் ஓடி வந்தனர் கோவில் நிர்வாகிகள், ஊர் மக்கள். ஆனால் அவர் என்ன செய்தார் தெரியுமா? மன்னனிடம் சொல்லி மறுபடியும் அங்கேயே கோவில் எழுப்பி இருக்க முடியும். ஆட்சியும் சில நாளில் மாறி, இயைந்த ஆட்சி வந்து விட்டது.

ஆனால், அந்த விக்ரகங்களைத் திருமலை மேல் சேர்த்து விட்டார். இன்றும் அந்த "ராமர் மேடை" கருவறையில் உண்டு!

புதிய கோவில் எழுப்பவில்லை; அங்காடி வந்து சமூகக் கூடம் போல் ஆகி விட்டது; அதனால் அதை இடிக்கச் சொல்லவில்லை.
எங்கோ ஒரு ஊரில் இருந்த ராமனுக்கு, திருமலையில் வாசம் ஏற்படுத்தி, அழியாப் பெருமை செய்து விடச் சம்மதமா? என்ற கேள்வி எழுப்பி,
அந்தக் கோவில் நிர்வாகிகளைச் சமாதானப்படுத்தி விட்டார்.

இந்த நிகழ்ச்சியைக் கோவில் கட்டும் உள்ளங்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும்! பல நூறு ஆண்டுகளுக்கு முன்பே இப்படி என்றால், இந்தக் காலத்தில் எது தேவை என்பதை நிச்சயம் யோசிக்க வேண்டும்!

ஆண்டவன் காரியம் ஆனாலும் கூடத் தன்னலம் விடுத்து பொது நலம் பேணுவதே ஆண்டவனுக்கு நாம் செய்யும் தொண்டு!

Unknown said...

கண்ணபிரான்,

புதிதாக கோயில் கட்டவேண்டாம், இருக்கும் கோயில்களை பராமரியுங்கள் என்ற கோரிக்கை பலரால் எழுப்பப்பட்டு வருகிறது. பழைய கோயில்களை பராமரிப்பது நம் கடமை என்றபோதிலும் சில சமயங்களில் புது கோயில் கட்ட நேரிடுகிறது. நான் சொல்லும் காலனி மிக புதிதாக உருவானது.பஸ் வசதி அரிது. பக்கத்தில் உள்ள கோயிலுக்கு போக 6 கிலோமீட்டர் போகணும்.

இங்கேயே கோயில் கட்டியதால் காலை, மாலை இருவேளையும் பக்தர்கள் வந்து தரிசிக்கின்றனர். பஸ்ஸில் சிரமப்பட்டு போவது என்றால் பலர் மாதத்துக்கு ஒருமுறை கூட போவார்களா என்பது சந்தேகமே.

//சிரித்து விட்டேன்; ஒரு டாக்டரே இப்படி என்றால், நீங்கள் ஐடியா மணியைக் குறை சொல்லிப் பிரயோசனமில்லை; பேசாமல் சட்டம் தன் கடமையைச் செய்ய வேண்டியது தான்.//

:-))).

என்னங்க செய்வது?அப்புறம் இன்னொரு விஷயம் தெரியுமா?பிர்லா குடும்பத்தினர் ஊரெங்கும் பிர்லா மந்திர் கட்ட இதுதான் காரணம் என்பார்கள். அதாவது பிர்லா மந்திர் கட்டவில்லை என்றால் குடும்பத்தில் துக்க காரியம் நடக்கும் என ஒரு ஜோசியகாரன் சொன்னதால் இப்படி எல்லா இடங்களிலும் பிர்லா மந்திர் கட்டுகின்றனராம். உண்மையா, பொய்யா தெரியவில்லை

Unknown said...

//தொடர் பின்னூட்டத்துக்கு மன்னிக்கவும்! நான் ஏதும் பின்னூட்டக் கயமைத்தனம் செய்து விட வில்லையே?//

பின்னூட்ட கயமைத்தனம் என்பது நமது பதிவில் நாமே தொடர் பின்னூட்டம் இட்டுக்கொள்வது. இதெல்லாம் அந்த பட்டியலில் வராது.:-))))

Unknown said...

//இந்த நிகழ்ச்சியைக் கோவில் கட்டும் உள்ளங்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும்! பல நூறு ஆண்டுகளுக்கு முன்பே இப்படி என்றால், இந்தக் காலத்தில் எது தேவை என்பதை நிச்சயம் யோசிக்க வேண்டும்!

ஆண்டவன் காரியம் ஆனாலும் கூடத் தன்னலம் விடுத்து பொது நலம் பேணுவதே ஆண்டவனுக்கு நாம் செய்யும் தொண்டு! //.


அருமையான நிகழ்வு. அந்தக்காலத்தில் ராமானுஜர் போன்ற பெரிய மனிதர்கள் இருந்தனர். நல்லது நடந்தது. இப்போது????

நல்லவர் இல்லாததால் மழைகூட பெய்யமாட்டேன் என்கிறது:-(((

Anonymous said...

இதப் பாரு ராசா..
http://kuttapusky.blogspot.com/

Anonymous said...

ஹா ஹா ஹா... பதிவு ரொம்ப நல்ல இருந்துச்சுங்க... சொர்கமா நரகமானு தெரியது.. சிலர் பிள்ளையாரை திருடி கும்பிட்ட நல்லதுனு சொன்னாங்க.. வேணும்ன.. நீங்க அதை சோதிச்சு பாருங்க....