Saturday, October 14, 2006

193. நான் என்ன செய்தேன் நாட்டுக்கு?

காட்டுப்புத்தூரில் நுழைந்தால் ஏதோ மலேசியா, சிங்கப்பூருக்குள் நுழைந்த மாதிரி இருக்கிறது. தெருக்கள் அனைத்தும் அத்தனை சுத்தம். கண்ட இடத்தில் குப்பை கொட்டும் வழக்கம் இல்லை. முக்கியமான விஷயம், ஒன்றரை வயது குழந்தைகூட ரோட்டில் ‘உச்சா’ போய்ப் பார்க்க முடியவில்லை. ‘‘அட, சுத்தபத்தத்துக்குப் பெயர் போன நம் மாநிலத்தில், இப்படி ஒரு சுத்தமான கிராமமா?’’ என்கிற ஆச்சரியத்தோடு விசாரிக்க ஆரம்பித்தோம். ‘‘உண்மைதாங்க. வேலூர் மாவட்டத்திலேயே இப்படி ஒரு சுத்தமான, சுகாதாரமான கிராமம் இல்லை! இதற்காக ஜனாதிபதி அப்துல் கலாமிடமிருந்து நிர்மல் புரோஸ்கார் என்கிற விருதே கிடைத்திருக்கிறது’’ என்று ஊர்மக்கள் பெருமை பொங்கச் சொல்ல, நம் ஆர்வம் இன்னும் அதிகமாகி, விசாரிக்க ஆரம்பித்தோம். ‘‘இந்த மாற்றத்திற்கெல்லாம் காரணம், காட்டுப்புத்தூர் ஊராட்சித் தலைவியான சந்திரிகாவும், அவரது கணவர் விஸ்வநாதனும்தான்’’ என்று சொல்ல, அவர்களைத் தேடிப் போனோம். வீட்டின் உச்சந் தலையில் இரண்டு ‘புனல் ஒலிபெருக்கி’கள் இருவேறு திசைகளைப் பார்த்தபடி இருக்க, விஸ்வநாதன் மைக்கில் பேசிக் கொண்டிருந்தார். ‘‘ஊர் மக்கள் அனைவருக்கும் வணக்கம். தீபாவளிப் பண்டிகை வருது. வெளியூர்ல இருந்து நிறைய துணிமணி, பட்டாசு, இனிப்பு வாங்கிகிட்டு வருவீங்க. எல்லாப் பொருட்களையும் பிளாஸ்டிக் பையில்தான் எடுத்துக்கிட்டு வருவீங்க! இந்த பிளாஸ்டிக் பைகளை வெளியில் தூக்கி எறிஞ்சிடாதீங்க. அப்படித் தூக்கி எறிஞ்சீங்கன்னா நூறு ரூபா ஃபைன் கட்டணும். மறந்துடாதீங்க’’ என்று சொன்னதும் ஊர் மக்கள் மந்திரத்துக்குக் கட்டுப்பட்டவர்கள் போல அப்படியே கேட்டுக் நடக்கிறார்கள். மைக்கில் பேசி முடித்துவிட்டு வந்தவர், நம்மிடம் பேச ஆரம்பித்தார். ‘‘வேலூர்ல எம்.ஏ. படித்து விட்டு என்னென்ன வேலையெல்லாமோ பார்த்தேன். ‘அறிவொளி இயக்கம்’ உள்பட பல அரசுத் திட்டங்களை நடத்தியிருக்கிறேன். அஞ்சு, ஆறு வருஷத்துக்கு முன்னாலதான் எங்க கிராமத்துக்கு ஏதாவது செஞ்சாகணும்ங்கிற கங்கணத்துல நானும், என் மனைவியும் களத்தில் இறங்கினோம். அப்ப இந்தக் கிராமத்துல யார் வீட்லயும் கக்கூஸ் இல்லை. ஆம்பிளைங்க, பொம்பளைங்க, பெரியவங்க, சின்னப்பசங்கன்னு எல்லோரும் திறந்த வெளியிலதான் போய்க்கிட்டு இருந்தாங்க. முதல் காரியமா எல்லார் வீட்லயும் கழிப்பறை கட்ட வேண்டியதன் அவசியத்தை எடுத்துச் சொன்னேன். இந்த ஐந்தாண்டுகளுக்குள் இந்தக் கிராமத்தில் கழிவறை இல்லாத வீடே இல்லை என்கிற அளவுக்கு நிலைமை மாறிவிட்டது. பள்ளிகளில் கூட கழிவறைகள் கட்டி வைத்திருப்பதால், குழந்தைகள்கூட வெளியில் ஒண்ணுக்கு இருப்பதில்லை. தப்பித் தவறி யாராவது திறந்த வெளியில் ஒண்ணுக்குப் போனால்கூட 25 ரூபாய் அபராதம் போடுவோம். இதேபோல, 14 வயதுக்கு உட்பட்ட எல்லாக் குழந்தைகளையும் பள்ளிக்கு அனுப்பி, படிக்க வைக்கிறோம். கடந்த ஐந்தாண்டுகளில் எங்கள் கிராமத்தில் பள்ளிக்குச் சென்று படிக்காத குழந்தைகளே இல்லை என்று சொல்கிற அளவுக்கு நிலைமையை மாற்றிவிட்டோம். எனவே, பள்ளியில் படிக்க வேண்டிய வயதில் படிக்க முடியாமல், வேலைக்குச் செல்லும் பிஞ்சுக் குழந்தையை யாரும் பார்க்க முடியாது. அப்படி ஏதாவது ஒரு குழந்தை இருந்தால், அதைக் கண்டுபிடித்துச் சொல்பவர்களுக்கு ஆயிரம் ரூபாய் பரிசாக அளிக்கப்படும் என்று அறிவித்திருக்கிறோம். இதுவரை ஒருவர்கூட அந்தப் பரிசைப் பெற்றதில்லை என்பது சுவாரஸ்யமான விஷயம். எங்கள் ஊராட்சியில் உள்ள கிராமங்களில் அனைத்து வீடுகளிலும் மழைநீர் சேகரிப்பு அமைப்பு உள்ளது. எல்லோருக்கும் சுத்தமான தண்ணீர் கிடைக்கவேண்டும் என்பதற்காக பெரிய, பெரிய டேங்குகளையும், மினி டேங்குகளையும் கட்டியிருக்கிறோம். சுகாதாரமற்ற வகையில் தண்ணீர் தேக்கி பயன்படுத்தத் தடை விதித்திருக்கிறோம். கிராமங்களில் உள்ள எல்லோருக்கும், குறிப்பாக பெண்களுக்கு, அயோடின் உப்பு கிடைக்க ஏற்பாடு செய்திருக்கிறோம். எங்கள் ஊருக்குப் பக்கத்தில் உள்ள மலையில் மரங்களை எல்லாம் வெட்டிவிட்டு, மொட்டையடித்திருந்தார்கள். இப்போது முன்னூறு ஏக்கரில் ஐந்து லட்சம் மரக்கன்றுகளை வைத்து, காடு வளர்க்கிறோம். அந்த மரங்கள் இப்போது நன்றாக வளர்ந்து, காட்டு விலங்குகள் தேடி வருகிற அளவுக்கு மாறிவிட்டது. இந்த மரங்களை வெட்டுவதைத் தடுக்க, ஊர் மக்களைக் கூட்டி வனக்குழு அமைத்திருக்கிறோம். காட்டில் உள்ள மரங்களை யாராவது வெட்டினாலோ, விலங்குகளுக்கு ஆபத்து விளைவித்தாலோ கடுமையான நடவடிக்கை எடுக்கிறோம். காட்டில் பெய்யும் மழை நீர் காட்டாற்று வெள்ளமாய் வழிந்தோடிவிடும் என்பதால் குளங்கள், தடுப்பு அணைகள், கற்களாலான தடுப்புச்சுவர்கள், கசிவு நீர்க் குட்டைகளை அமைத்திருக்கிறோம். இதற்குப் பிறகுதான், எங்கள் கிராமங்களில் விவசாயம் செழிப்பாக இருக்கிறது. இதெல்லாம் நாங்கள் செய்த வேலைகளில் சில உதாரணங்கள்தான். இன்னும் பல வேலைகளைச் செய்திருக்கிறோம். எங்கள் ஊராட்சி, மாதிரி ஊராட்சியாக மாறிவிட்ட பிறகு, நிறைய ஊராட்சித் தலைவர்கள் வந்து பார்க்கிறார்கள். ‘உங்களால் மட்டும் கிராமத்தை எப்படி மாற்ற முடிந்தது?’ என்று கேட்கிறார்கள். அவங்களுக்கு நான் சொன்ன பதில் என்ன தெரியுமா? ‘முடியும். தமிழ்நாட்டில் உள்ள எந்தக் கிராமத்தையும் மாற்ற முடியும். முன்னேற்றம் காண வைக்கமுடியும். ஒரு சதவிகிதம்கூட சுயநலமில்லாமல் மக்களுக்கு சேவை செய்யவேண்டும் என்கிற நோக்கத்தோடு, முழுமனதோடு உழைக்க வேண்டும் என்கிற எண்ணம் உங்களுக்கு இருக்கவேண்டும். உங்கள் கிராமத்துக்காக நீங்களே உயிரைவிடத் தயாராக இருக்கிறீர்கள் என்றால், உங்கள் மக்கள் அனைவரும் உங்கள் பின்னால் நிற்கிறார்கள் என்பதைப் புரிய வைத்தீர்கள் என்றால் எல்லா அரசு அதிகாரிகளும் சிரித்த முகத்தோடு உங்களுக்கு வேண்டியதைச் செய்து கொடுப்பார்கள். உங்களுக்குள் ஒற்றுமை இல்லை என்பதற்காக அரசியல்வாதிகளையும், அரசு அதிகாரிகளையும் குறை சொல்லாதீர்கள்!’ ’’ ஊரையே மாற்றிக் காட்டிய வெற்றித் தம்பதிகளின் ஒருமித்த கருத்து இது. மற்ற ஊராட்சித் தலைவர்களுக்கு இது ஒரு ஆத்திச்சூடி. நன்றி: குமுதம் என்ன யோசிக்கிறீர்கள்? நாடு எனக்கென்ன செய்தது என இனியும் கேட்டுக ்கொண்டு நிற்கப ்போகிறீர்களா அல்லது நாட்டுக்கு இவர்களை போல் சேவை செய்யப் போகிறீர்களா? வாழ்நாள் முழுக்க குறைகளை சொல்லியே காலம் கழிக்க போகிறீர்களா அல்லது நீங்கள் சொல்லும் குறையை நீக்க நீங்களே போரடப்போகிறீர்களா? நீங்கள் சொல்லும் பிரச்சனைகளை எல்லாம் தீர்க்க எந்த தேவதூதனும் வானத்தில் இருந்து இறங்கி வரமாட்டான். உங்கள் வீட்டின், உங்கள் ஊரின், உங்கள் நாட்டின் பிரச்சனைகளை தீர்க்க வேண்டியவர்கள........் நீங்கள் தான்..... இது உங்கள் வீடு. நீங்கள் தான் சுத்தம் செய்ய வேண்டும். நீங்கள் காண விரும்பும் சமூகமாற்றத்தை நீங்கள் தான் உருவாக்க வேண்டும். நாடு உங்களுக்கு என்ன செய்யவேண்டும் என விரும்புகிறீர்களோ அதை நீங்கள் நாட்டுக்கு செய்யுங்கள். வாழிய பாரத மணித்திருநாடு (படம் உதவி :கால்கரி சிவா)
Post a Comment