Saturday, October 14, 2006

193. நான் என்ன செய்தேன் நாட்டுக்கு?

காட்டுப்புத்தூரில் நுழைந்தால் ஏதோ மலேசியா, சிங்கப்பூருக்குள் நுழைந்த மாதிரி இருக்கிறது. தெருக்கள் அனைத்தும் அத்தனை சுத்தம். கண்ட இடத்தில் குப்பை கொட்டும் வழக்கம் இல்லை. முக்கியமான விஷயம், ஒன்றரை வயது குழந்தைகூட ரோட்டில் ‘உச்சா’ போய்ப் பார்க்க முடியவில்லை. ‘‘அட, சுத்தபத்தத்துக்குப் பெயர் போன நம் மாநிலத்தில், இப்படி ஒரு சுத்தமான கிராமமா?’’ என்கிற ஆச்சரியத்தோடு விசாரிக்க ஆரம்பித்தோம். ‘‘உண்மைதாங்க. வேலூர் மாவட்டத்திலேயே இப்படி ஒரு சுத்தமான, சுகாதாரமான கிராமம் இல்லை! இதற்காக ஜனாதிபதி அப்துல் கலாமிடமிருந்து நிர்மல் புரோஸ்கார் என்கிற விருதே கிடைத்திருக்கிறது’’ என்று ஊர்மக்கள் பெருமை பொங்கச் சொல்ல, நம் ஆர்வம் இன்னும் அதிகமாகி, விசாரிக்க ஆரம்பித்தோம். ‘‘இந்த மாற்றத்திற்கெல்லாம் காரணம், காட்டுப்புத்தூர் ஊராட்சித் தலைவியான சந்திரிகாவும், அவரது கணவர் விஸ்வநாதனும்தான்’’ என்று சொல்ல, அவர்களைத் தேடிப் போனோம். வீட்டின் உச்சந் தலையில் இரண்டு ‘புனல் ஒலிபெருக்கி’கள் இருவேறு திசைகளைப் பார்த்தபடி இருக்க, விஸ்வநாதன் மைக்கில் பேசிக் கொண்டிருந்தார். ‘‘ஊர் மக்கள் அனைவருக்கும் வணக்கம். தீபாவளிப் பண்டிகை வருது. வெளியூர்ல இருந்து நிறைய துணிமணி, பட்டாசு, இனிப்பு வாங்கிகிட்டு வருவீங்க. எல்லாப் பொருட்களையும் பிளாஸ்டிக் பையில்தான் எடுத்துக்கிட்டு வருவீங்க! இந்த பிளாஸ்டிக் பைகளை வெளியில் தூக்கி எறிஞ்சிடாதீங்க. அப்படித் தூக்கி எறிஞ்சீங்கன்னா நூறு ரூபா ஃபைன் கட்டணும். மறந்துடாதீங்க’’ என்று சொன்னதும் ஊர் மக்கள் மந்திரத்துக்குக் கட்டுப்பட்டவர்கள் போல அப்படியே கேட்டுக் நடக்கிறார்கள். மைக்கில் பேசி முடித்துவிட்டு வந்தவர், நம்மிடம் பேச ஆரம்பித்தார். ‘‘வேலூர்ல எம்.ஏ. படித்து விட்டு என்னென்ன வேலையெல்லாமோ பார்த்தேன். ‘அறிவொளி இயக்கம்’ உள்பட பல அரசுத் திட்டங்களை நடத்தியிருக்கிறேன். அஞ்சு, ஆறு வருஷத்துக்கு முன்னாலதான் எங்க கிராமத்துக்கு ஏதாவது செஞ்சாகணும்ங்கிற கங்கணத்துல நானும், என் மனைவியும் களத்தில் இறங்கினோம். அப்ப இந்தக் கிராமத்துல யார் வீட்லயும் கக்கூஸ் இல்லை. ஆம்பிளைங்க, பொம்பளைங்க, பெரியவங்க, சின்னப்பசங்கன்னு எல்லோரும் திறந்த வெளியிலதான் போய்க்கிட்டு இருந்தாங்க. முதல் காரியமா எல்லார் வீட்லயும் கழிப்பறை கட்ட வேண்டியதன் அவசியத்தை எடுத்துச் சொன்னேன். இந்த ஐந்தாண்டுகளுக்குள் இந்தக் கிராமத்தில் கழிவறை இல்லாத வீடே இல்லை என்கிற அளவுக்கு நிலைமை மாறிவிட்டது. பள்ளிகளில் கூட கழிவறைகள் கட்டி வைத்திருப்பதால், குழந்தைகள்கூட வெளியில் ஒண்ணுக்கு இருப்பதில்லை. தப்பித் தவறி யாராவது திறந்த வெளியில் ஒண்ணுக்குப் போனால்கூட 25 ரூபாய் அபராதம் போடுவோம். இதேபோல, 14 வயதுக்கு உட்பட்ட எல்லாக் குழந்தைகளையும் பள்ளிக்கு அனுப்பி, படிக்க வைக்கிறோம். கடந்த ஐந்தாண்டுகளில் எங்கள் கிராமத்தில் பள்ளிக்குச் சென்று படிக்காத குழந்தைகளே இல்லை என்று சொல்கிற அளவுக்கு நிலைமையை மாற்றிவிட்டோம். எனவே, பள்ளியில் படிக்க வேண்டிய வயதில் படிக்க முடியாமல், வேலைக்குச் செல்லும் பிஞ்சுக் குழந்தையை யாரும் பார்க்க முடியாது. அப்படி ஏதாவது ஒரு குழந்தை இருந்தால், அதைக் கண்டுபிடித்துச் சொல்பவர்களுக்கு ஆயிரம் ரூபாய் பரிசாக அளிக்கப்படும் என்று அறிவித்திருக்கிறோம். இதுவரை ஒருவர்கூட அந்தப் பரிசைப் பெற்றதில்லை என்பது சுவாரஸ்யமான விஷயம். எங்கள் ஊராட்சியில் உள்ள கிராமங்களில் அனைத்து வீடுகளிலும் மழைநீர் சேகரிப்பு அமைப்பு உள்ளது. எல்லோருக்கும் சுத்தமான தண்ணீர் கிடைக்கவேண்டும் என்பதற்காக பெரிய, பெரிய டேங்குகளையும், மினி டேங்குகளையும் கட்டியிருக்கிறோம். சுகாதாரமற்ற வகையில் தண்ணீர் தேக்கி பயன்படுத்தத் தடை விதித்திருக்கிறோம். கிராமங்களில் உள்ள எல்லோருக்கும், குறிப்பாக பெண்களுக்கு, அயோடின் உப்பு கிடைக்க ஏற்பாடு செய்திருக்கிறோம். எங்கள் ஊருக்குப் பக்கத்தில் உள்ள மலையில் மரங்களை எல்லாம் வெட்டிவிட்டு, மொட்டையடித்திருந்தார்கள். இப்போது முன்னூறு ஏக்கரில் ஐந்து லட்சம் மரக்கன்றுகளை வைத்து, காடு வளர்க்கிறோம். அந்த மரங்கள் இப்போது நன்றாக வளர்ந்து, காட்டு விலங்குகள் தேடி வருகிற அளவுக்கு மாறிவிட்டது. இந்த மரங்களை வெட்டுவதைத் தடுக்க, ஊர் மக்களைக் கூட்டி வனக்குழு அமைத்திருக்கிறோம். காட்டில் உள்ள மரங்களை யாராவது வெட்டினாலோ, விலங்குகளுக்கு ஆபத்து விளைவித்தாலோ கடுமையான நடவடிக்கை எடுக்கிறோம். காட்டில் பெய்யும் மழை நீர் காட்டாற்று வெள்ளமாய் வழிந்தோடிவிடும் என்பதால் குளங்கள், தடுப்பு அணைகள், கற்களாலான தடுப்புச்சுவர்கள், கசிவு நீர்க் குட்டைகளை அமைத்திருக்கிறோம். இதற்குப் பிறகுதான், எங்கள் கிராமங்களில் விவசாயம் செழிப்பாக இருக்கிறது. இதெல்லாம் நாங்கள் செய்த வேலைகளில் சில உதாரணங்கள்தான். இன்னும் பல வேலைகளைச் செய்திருக்கிறோம். எங்கள் ஊராட்சி, மாதிரி ஊராட்சியாக மாறிவிட்ட பிறகு, நிறைய ஊராட்சித் தலைவர்கள் வந்து பார்க்கிறார்கள். ‘உங்களால் மட்டும் கிராமத்தை எப்படி மாற்ற முடிந்தது?’ என்று கேட்கிறார்கள். அவங்களுக்கு நான் சொன்ன பதில் என்ன தெரியுமா? ‘முடியும். தமிழ்நாட்டில் உள்ள எந்தக் கிராமத்தையும் மாற்ற முடியும். முன்னேற்றம் காண வைக்கமுடியும். ஒரு சதவிகிதம்கூட சுயநலமில்லாமல் மக்களுக்கு சேவை செய்யவேண்டும் என்கிற நோக்கத்தோடு, முழுமனதோடு உழைக்க வேண்டும் என்கிற எண்ணம் உங்களுக்கு இருக்கவேண்டும். உங்கள் கிராமத்துக்காக நீங்களே உயிரைவிடத் தயாராக இருக்கிறீர்கள் என்றால், உங்கள் மக்கள் அனைவரும் உங்கள் பின்னால் நிற்கிறார்கள் என்பதைப் புரிய வைத்தீர்கள் என்றால் எல்லா அரசு அதிகாரிகளும் சிரித்த முகத்தோடு உங்களுக்கு வேண்டியதைச் செய்து கொடுப்பார்கள். உங்களுக்குள் ஒற்றுமை இல்லை என்பதற்காக அரசியல்வாதிகளையும், அரசு அதிகாரிகளையும் குறை சொல்லாதீர்கள்!’ ’’ ஊரையே மாற்றிக் காட்டிய வெற்றித் தம்பதிகளின் ஒருமித்த கருத்து இது. மற்ற ஊராட்சித் தலைவர்களுக்கு இது ஒரு ஆத்திச்சூடி. நன்றி: குமுதம் என்ன யோசிக்கிறீர்கள்? நாடு எனக்கென்ன செய்தது என இனியும் கேட்டுக ்கொண்டு நிற்கப ்போகிறீர்களா அல்லது நாட்டுக்கு இவர்களை போல் சேவை செய்யப் போகிறீர்களா? வாழ்நாள் முழுக்க குறைகளை சொல்லியே காலம் கழிக்க போகிறீர்களா அல்லது நீங்கள் சொல்லும் குறையை நீக்க நீங்களே போரடப்போகிறீர்களா? நீங்கள் சொல்லும் பிரச்சனைகளை எல்லாம் தீர்க்க எந்த தேவதூதனும் வானத்தில் இருந்து இறங்கி வரமாட்டான். உங்கள் வீட்டின், உங்கள் ஊரின், உங்கள் நாட்டின் பிரச்சனைகளை தீர்க்க வேண்டியவர்கள........் நீங்கள் தான்..... இது உங்கள் வீடு. நீங்கள் தான் சுத்தம் செய்ய வேண்டும். நீங்கள் காண விரும்பும் சமூகமாற்றத்தை நீங்கள் தான் உருவாக்க வேண்டும். நாடு உங்களுக்கு என்ன செய்யவேண்டும் என விரும்புகிறீர்களோ அதை நீங்கள் நாட்டுக்கு செய்யுங்கள். வாழிய பாரத மணித்திருநாடு (படம் உதவி :கால்கரி சிவா)

21 comments:

ஒன்றுமில்லை said...

நல்ல பதிவு செல்வன்

ஒன்றுமில்லை said...

பழைய பதிவொன்றை படிக்கையில் இது போல் கடலூர் அருகே திறம்பட பணியாற்றிய ஒரு கிராம தலைவர் பற்றி படித்ததாக நியாபகம்

Anonymous said...

>>எல்லா அரசு அதிகாரிகளும் சிரித்த முகத்தோடு உங்களுக்கு வேண்டியதைச் செய்து கொடுப்பார்கள்.<<<

அந்த அதிகாரிகளும் கிராமத்து மக்களாகவே இருந்தால் இன்னும் சிறப்பு ஈனும்.
வங்கதேசத்துக்கு அடுத்த அமைதிக்கான நோபல் பரிசு தமிழகத்துக்கு கிடைக்க வாய்ப்பு உண்டு.

பெத்தராயுடு said...

இச்செய்தியை படிக்க மனதுக்கு நிறைவாக இருந்தது செல்வன்.

கூத்தம்பாக்கம் ஊராட்சி இளங்கோவன், பன்ருட்டி நகராட்சி பஞ்சவர்ணம் வரிசையில் இம்மாதிரி உள்ளூர் தலைவர்கள் கொண்டு வரும் மாற்றங்கள்தான் இன்றைய தேவை.

மற்ற ஊர் உள்ளூர் தலைவர்களுக்கு இவர்களின் பணி ஒரு எடுத்துக்காட்டாக அமையவேண்டும்.

இதைவிட, ஒவ்வொரு ஊரிலுள்ள மக்களும் அவர்களின் பஞ்சாயத்து தலைவர்களிடம் இதேமாதிரியான சேவையை எதிர்பார்க்கவேண்டும், கேட்டுப் பெறவேண்டும்.

BadNewsIndia said...

அற்புதமான பதிவு.
சந்தோஷத்தை தரும் விஷயங்கள்.

Gandhi's "Be the change you want to see in the world" is very apt.

Unknown said...

சில கேள்விகள், பெத்தராயுடு, பேட்நியூஸ் இந்தியா

அனைவருக்கும் நன்றி. காலையில் விரிவாக பதிலளிக்கிறேன்.

அன்புடன்
செல்வன்

நாகை சிவா said...

நல்ல பதிவு செல்வன்
இதே போல சிதம்பரத்திற்கு அருகில் ஒரு கிராமம் உள்ளது. அந்த கிராமும் திரு. கலாம் அவர்களிடம் பரிசு பெற்ற கிராமம் தான். கீரப்பாளையம் என்று நினைக்கின்றேன்.கடலூர் மாவட்டம்.
சேத்தியாதோப்பிற்கு அந்த வழியாகவும் செல்லாம்.

இது போன்று ஒவ்வொரு கிராமமும் செயல்ப்பட ஆரம்பித்தால் தமிழகமே விரைவில் சுத்தமாக மாறி விடும்.

வவ்வால் said...

ஆகா செல்வன்,

ஒரே அடியா புல்லரிக்க வைக்கரிங்களே !

நாகை சிவா நினைக்காதிங்க கூறியது சரி தான் ,கீரப்பாளையம் பஞ்சாயத்து தான் புவனகிரிக்கு அருகில் உள்ளது , சிதம்பரம் கடலூர் சாலையில் , சிதம்பரத்தில் இருந்து 8 கிலோ மீட்டர் தான் அந்த கிராமம். இப்போது இந்த கிராமம் வாங்கிய அதே போன்று விருது வாங்கியது , அண்ணாமலை பல்கலைக்கு பட்டமளிப்பு வழங்க வந்த போது அந்த கிராமத்திற்கு கலாம் நேராக சென்றும் பார்த்தார்.

இது போன்று திருவள்ளூர் அருகில் உள்ள ஒரு கிராமமும் முன்மாதிரியாக உள்ளதாக விகடனில் முன்பு போட்டு இருந்தான்.

Kannabiran, Ravi Shankar (KRS) said...

கலாமின் பிறந்த நாள் அதுவுமா, ஒரு தூண்டும் பதிவு! பாப்பாப்பட்டி, கீரிப்பட்டி ஊராட்சிகளும் உண்டு, காட்டுப்புத்தூர் ஊராட்சியும் உண்டு!

வெற்றித் தம்பதியர்க்கு வாழ்த்து!! "தம்பதி சமேதராக" என்று சொல்லுவார்கள்! எனக்கு என்னவோ, இந்தக் காட்டுப்புத்தூர் தம்பதி சமேதராகச் செய்வது, அனைத்திலும் சிறந்த அறம்!
'அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை' !!

இவர்கள் பணி சிறக்கப் பிரார்த்தனையும் வாழ்த்துக்ளும்!

"Little drops of water make a mighty ocean"

Anonymous said...

Hi Selvan,

fed up in reading the caste, religious hatred blogs
Hats off!!
really wonderful and cheerful article
make me so happy,
may god bless that couple and you for bringing such enthusiastic article to the thamizmanam which has become a site of hatred nowadays.

Regards
Raghs

Santhosh said...

நிறைய கிராமங்கள் இதுமாதிரி ஆரம்பிச்சிட்டாங்க செல்வன். பத்திரிக்கைகளில் இதுக்கு சரியான விளம்பரம் குடுத்தால் தயங்கிக்கொண்டு இருக்கும் இன்னும் சில கிராமங்களும் சேர்வார்கள். நல்ல பதிவு செல்வன்.

Unknown said...

சிலகேள்விகள்

நன்றி. நானும் அந்த செய்தியை படித்தேன். வவ்வால் அந்த ஊர் பெயர் கீரபாளையம் என சொல்கிறார். திருவள்ளூர் அருகே உள்ள ஒரு ஊரையும் முன்மாதிரி ஊராக குறிப்பிடுகிறார்

Unknown said...

பெத்தராயுடு

எந்த கட்சியையும் சாராமல் இருந்தால் தான் உள்ளாட்சிகளில் சரிவர பணிபுரிய முடியும் போல் தோன்றுகிறது.இதே போல் நிறைய பேர் ஊர்சேவை செய்ய முன்வர வேண்டும்

Unknown said...

பேட்நியூஸ் இந்தியா

காந்தி சொன்னதுபோல் இந்த இளைஞர்கள் செய்து காட்டினர். இனி நாமும் அதே போல் செய்து காட்டி நமது ஊரையாவது முன்னேற்ற வேண்டும்

Unknown said...

நன்றி நாகையாரே

கலாம் பிறந்த நாளில் நல்ல ஊக்குவிக்கும் பதிவை இட்டது மனதுக்கு மகிழ்வாக இருக்கிறது. நீங்கள் சொன்ன ஊரை வவ்வால் அழகாக அடையாளம் கண்டு சொல்லியிருக்கிறார் பாருங்கள்.

வவ்வால்
நன்றி.புல்லரிக்க வைத்தது நானல்ல:-)அந்த சாதனை தம்பதியினர் தான்.அவர்களுக்கு நாம் அனைவரும் நன்றி சொல்லவேண்டும்

Unknown said...

கண்ணபிரான்

நம் ஊரை பாப்பா பட்டியாக்குவதும், காட்டுபுத்தூராக்குவதும் நம் கையில் தான் இருக்கிறது.

வாழ்நாள் முழுக்க குறைகளை பேசி காலம் கழிப்போர் உண்டு.களத்தில் இறங்கி செய்து முடிப்போர் உண்டு.சொல்பவர்கள் செய்யமாட்டார்கள்.செய்பவர்கள் சொல்லமாட்டார்கள் என்பது வேதனையான உண்மை.

Unknown said...

ரகு

நன்றி.இதேபோல் செய்திகளை இட்டு மக்கள் ஊக்கம் பெற்றால் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி.

நன்றி சந்தோஷ்

இந்த மாதிரி செய்திகளை வெளியிட்டால் நிறைய பேர் ஊக்கம் பெறுவார்கள். வசதிபடைத்த அன்பர்கள் நிறையபேர் இனையத்தில் இருப்பதால் நிச்சயம் நல்லது செய்ய முன்வருவார்கள் என நம்பலாம்

Anonymous said...

மிக பெருமையாக
இருக்கின்றது,ஏற்கனவே பல
பத்திரிக்கைகள் இந்த
தம்பதிகள் பற்றி நிறைய
எழுதிவிட்டாலும்
இணையத்தில் பார்ப்பது
சந்தோஷமாக உள்ளது.

விஸ்வநாதன் எனக்கு நல்ல
நண்பர். காட்டுபுத்தூரில்
இருந்து எங்கு
வேண்டுமானாலும் தன்
சைக்கிளில் தான் செல்வார்.
குழந்தைகள் அறிவியல்
விழாக்களை ஒருங்கிணைத்து
நடத்தும் போது அறிவியர்
வகுப்பை அத்தனை அருமையாக
எடுப்பார். தலைமை
ஆசிரியர்கள் கூட
ஆச்சரியமாக கேட்பார்கள்.

பள்ளி முடித்தவுடன்
நான்,விஸ்வநாதன் (என்னை விட
மிக மூத்தவர்) மற்றும் பலர்
அறிவியல் கலைக்குழுவில்
ஒன்றாக நாடகம்
போட்டுள்ளோம்.


காட்டுப்புத்தூரில்

தினமும் காலை தன்
சைக்கிளில் மைசெட்டுன்
கிளம்பி "யாரும் வெளியே
போகவேண்டாம். மீறினால்
தண்டனை என செல்வாராம்.

என் வீட்டிற்கு வந்தால்
நிச்சயம்,
காட்டுப்புத்தூர் அழைத்து
செல்கிறேன் :-)

தருமி said...

என் சிலமணி நேரத் தூக்கத்தைக் 'கெடுத்த' பதிவு.

சகோதரன் ஜெகதீஸ்வரன் said...

அட நம்ம ஊரும் காட்டுப்புத்தூருதாங்க. ஆனா அது திருச்சி மாவட்டத்துள்ள இருக்குது.

என்னடா நம்ம ஊரு திருந்திருச்சேன்னு நெனைச்சேன், பரவாயில்ல கiாட்டுப்புதூருன்னு பேரு வைச்சுக்கிட்டு இந்த ஊரு உருப்புட்டுடுச்சு.

வாழ்க வளமுடன்.

http://sagotharan.wordpress.com/

சகோதரன் ஜெகதீஸ்வரன் said...

எனது ஊரைப் பற்றி படிக்க,...

http://www.google.co.in/url?sa=t&source=web&ct=res&cd=1&ved=0CAgQFjAA&url=http%3A%2F%2Fta.wikipedia.org%2Fwiki%2F%25E0%25AE%2595%25E0%25AE%25BE%25E0%25AE%259F%25E0%25AF%258D%25E0%25AE%259F%25E0%25AF%2581%25E0%25AE%25AA%25E0%25AF%258D%25E0%25AE%25AA%25E0%25AF%2581%25E0%25AE%25A4%25E0%25AF%258D%25E0%25AE%25A4%25E0%25AF%2582%25E0%25AE%25B0%25E0%25AF%258D&ei=tSLNS73AD8u-rAekvJGmAQ&usg=AFQjCNEnPGSKhHSDRVx6pwLveGjPu62WpA&sig2=pIUH-mSkdcOUVUiHy74CVw