Tuesday, October 10, 2006

189.No 7

கோவையில் உள்ள திரையரங்குகளை பற்றி திடீரென நினைவுக்கு வந்து விட்டது.ஒவ்வொரு திரையரங்குக்கும் ஒரு வரலாறே இருக்கிறது. கோவையில் 7ம் நம்பர் பஸ்ஸில் ஏறினால் அனைத்து புகழ் பெற்ற திரையரங்குக்கும் போய்வரலாம். 7ம் நம்பர் பஸ்ஸில் (காந்திபார்க் டூ காந்திபார்க்) காந்திபுரத்தில் ஏறினோம் என வைத்துகொண்டால் கீதாலயா, கேஜி, சாந்தி, ராயல், அர்ச்சனா தர்சனா, சென்ட்ரல், கங்கா யமுனா, ஜீபி என ரவுண்டு வந்தால் அனைத்து பெரிய ஏ க்ளாஸ் தியேட்டர்களும் இதற்குள் அடங்கிவிடும். இப்படி ஒரே பஸ்ஸில் ஏறி எல்லா தியேட்டர்களுக்கும் போகும் வண்ணம் திட்டமிட்ட மகானுபாவர்கள் வாழ்க கேஜியை 1980களின் ஆரம்பத்தில் கட்டினார்கள். கட்டியவுடன் சகலகலா வல்லவன் ரிலீசாகி பட்டையை கிளப்பியது. 175 நாள் ஹவுஸ்புல்லாக ஓடியது.மணல்கயிறு, முந்தானை முடிச்சு என பின்னி எடுத்தது. முன்பெல்லாம் பெரிய புரட்யூசர்கள், பெரிய பட்ஜட் படங்கள் என்றாலே அது கேஜி என்பதாக இருந்தது. பாலச்சந்தர் படங்கள் அனைத்தும் இதில் உள்ள பல்லவி தியேட்டரில் தான் திரையிடுவார்கள். மொத்தம் நாலு திரையரங்குகள் இதில் (ராகம், தானம், பல்லவி, அனுபல்லவி). நான் இங்கே காண்டீனில் முன்பு விற்ற ரொட்டி, சுண்டல் குழம்புக்கு நிரந்தர அடிமை. கேஜி தியேட்டரில் குடும்பத்துடன் படம் பார்த்துவிட்டு வெளியே வந்து அன்னபூர்ணாவில் அல்லது காயத்ரியில் சாப்பிடுவது கோவைவாசிகளின் ரெகுலர் பழக்கம்.கேஜி நிர்வாகத்தினர் துவக்கிய இந்த திரையரங்கு அதன்பின் ஆர்பி சவுத்ரி விலைக்கு வாங்கியதாக சொன்னார்கள்.கோவையின் முதல் 3டி படம் திரையிடப்பட்ட திய்யேட்டர், முதல் டிடிஎஸ் தியேட்டர் என பல பெருமைகள் இதற்கு உண்டு. தியேட்டருக்கு வெளியே உள்ள காண்டீனில் சூடாக உருளைக்கிழங்கு போண்டாவும், முட்டை போண்டாவும் விற்பார்கள். விற்பனை சூடு பறக்கும். அர்ச்சனா தர்சனா தியேட்டர் பூமார்க்கட்டுக்கு அருகே உள்ளது. பஸ் வசதி சரியாக இல்லை என்ற குறைபாடு உண்டு. காந்திபுரத்திலிருந்து 7ம் நம்பர் பஸ் மட்டுமே அதுவும் கூட்டத்தோடு அடித்து பிடித்துக் கொண்டு வரவேண்டும் என்பதால் பலமுறை இந்த திரையரங்கில் உள்ள படங்களை மிஸ் செய்திருக்கிறேன். தியெட்டர் அருகே பாட்டிகடை என்ற இட்லிக்கடை உண்டு. ஒரு இட்லி 50 பைசா, செட் தோசை ஒரு ரூபாய், டஜன் பணியாரம் ஐந்து ரூபாய் என விற்பார்கள். அதை சாப்பிடவே பலமுறை அங்கே போனதுண்டு. கங்கா,யமுனா,காவேரியில் முதல் படம் ஜேம்ஸ்பாண்டின் ஆக்டோபசி. முதல் ஆளாக அதை பார்த்த நியாபகம் இருக்கிறது. கங்கா யமுனா நன்றாக பராமரிக்கப்பட்டிருந்தால் கேஜிக்கு போட்டியாக வந்திருக்கும்.ஏனோ செய்யாமல் விட்டுவிட்டார்கள். கீதாலயா தியேட்டர் மிக புகழ் பெற்ற தியேட்டர். ஆனால் மத்திய பேருந்து நிலையத்துக்கு நடுவே இருப்பதால் காரிலோ, பைக்கிலோ போவது சிரமம்.சதா பார்க்கிங் தகராறு. இந்த திரையரங்கில் திரிசூலம் 300 நாள் ஓடியது இன்றுவரை ரெகார்டு. கீதாலயா தாண்டினால் அப்சரா,அருள். ஜொள்ளர்களுக்கு மிக பிடித்த திரையரங்குகள்:) இதுபோக பிகிளாஸ் திரையரங்குகளில் ஜீபி கீத்தம்,ப்ரீத்தம் புகழ் பெற்றவை. இங்கே கரகாட்டக்காரன் ஓடாத ஓட்டம் ஓடி வரலாறு படைத்தது. டிக்கட் விலை குறைவு, புதுபடங்கள் செகண்ட் ரிலீசுக்கு விரைவில் இங்கே வந்துவிடும் என்பதால் அடிக்கடி இங்கே போய்விடுவேன். Just got nostalgic.....
Post a Comment