Thursday, September 21, 2006

166.கூவத்தை மணக்க வைக்கும் தமிழ்....

ஒரு உண்மை கதை தெரிந்த ஒருவரின் மூலமாக அவருக்கு மைசூரில் ஒரு கன்னடரின் புது கம்பெனியில் ஃபோர்மென் வேலை கிடைத்தது. சொல்லப்பட்ட சம்பளம் திருப்தியாக இருந்ததினாலும், வேலையின் தேவையாலும் அதை ஒத்துக் கொள்ள வேண்டிய நிர்பந்தம். அவர் ஒத்துக் கொண்டார். கம்பெனி நன்றாக நிலைப்பெற்றபின், இவரது தேவை தேவையில்லாது போனது. எப்படி கழட்டி விடுவது? சொல்லப்பட்ட சம்பளத்தில் நாலில் ஒரு பங்கு தான் இனி சம்பளம் என்று ஆக்கினர். இவர் அவர்களது கருத்தை புரிந்துக் கொண்டு, வேலை வேண்டாம் எனக் கூறி இது வரை இருந்ததற்காகவும் சென்னை திரும்பவும் பணம் கேட்டார். ஏனெனில் அவரிடம் சென்னை திரும்பவும் பணம் இல்லை. கம்பெனி அனைத்திற்கும் மறுத்து விட்டது. மைசூரில் இருந்த்து பெங்களூருக்கு வந்து சேர்ந்தார். கையில் இருந்த பணத்தைக் கொண்டு பஸ்ஸில் ஊருக்கு திரும்ப இயலாது. பஸ் கட்டணத்திற்கு தேவையானதை விடவும் கையில் பணம் குறைவு. தன்னிடமிருந்த ஒரு விலையுயர்ந்த பொருளை விற்க வேண்டிய நிலை. அது ஒரு நண்பர் வெளிநாட்டில் இருந்து அன்போடு இவருக்கு வாங்கி தந்தது. இவரது நிலையை உணர்ந்தோ அல்லது நேரம் சரியில்லையோ, அதை பத்தில் ஒரு பங்கு விலையிற்குதான் விற்க முடிந்தது. அந்த பணம் பஸ்ஸில் செல்ல போதாது. சரி...லாரியில் செல்லலாம் என தீர்மானித்து ஒரு லாரி டிரைவரிடம் அதை தர, அவன் 'இங்கு இருங்கள்' என கூறி விட்டு சென்றான்; திரும்பவேயில்லை. கையில் வெறும் ஒரு ரூபாய், நாற்பது காசுகள் மாத்திரமே இருந்தன. தெருவோரத்தில் படுத்துக் கொண்டார்; என்ன செய்வது என்று புரியவில்லை; சுற்றிலும் மனிதர்கள் இருந்தும் உண்மையில் யாருமில்லை; அங்கிருந்த டீக்கடை பெஞ்சில் அமர்வார்; பிறகு நடைப்பாதையிற்கு வருவார். வேதனை தாங்காமல் தமிழ்தாயை கடைசியாக மனம் விட்டு அழைத்து வெண்பாவாய் சொன்னார்: மகனே ! மகனே! எனவாய் இனிக்க மகனை அழைத்து மகிழ்ந்து - நகத்தில்மண் பட்டால் துடித்து பதறி எடுத்தணைத்து விட்டால் தமிழ்மடியில் தான். பிறந்திருந்த மண்விட்டு பெங்களூர் மண்ணில் இறந்து கிடக்கின்றேன்! எந்தாய் - மறந்தனையோ செந்தமிழ் ஒன்றையே சிந்தை தனில்நிறைத்து வந்தானைக் காப்பாற்று வா! அப்போது அங்கு திடுமென வந்த ஒரு கன்னடியர் இவரை விசாரித்து தனக்கு தெரிந்த ஒரு லாரி உரிமையாளரிடம் பணத்தை தந்து இவரை சென்னையில் விட்டு விடுமாறு கேட்டுக் கொண்டார். அந்த உரிமையாளரே, ஓட்டுநரும் ஆவார். இவரை அவர் வண்டியில் ஏற்றிக்கொண்டு வழிநெடுக தான் உண்ணும் வகைகளை இவருக்கும் வாங்கித் தந்து சென்னையில்,பச்சையப்பன் கல்லூரி அருகில் இறக்கி விட்டார். பின் தன்னிடம் அந்த கன்னடியர் தந்த பணத்தையும் இவருக்கே தந்து விட்டு சென்றார். ஒலியாகவும், வரிவடிவமாகவும்,எழுத்தாகவும் அறியப்படும் தமிழ் இவரால் உணர்வாகவும் அறியப்பட்டது. இவர் அழைத்தார் ....ஒடி வந்தது.என்ன தமிழ் அன்பு இருந்தால் உரிமையோடு 'நான் உன்னுடையவன் வா" என்று அழைத்திருப்பார். இன்று வரை அப்படிதான் இருக்கிறார். அதனால் தான் இன்று வரை இவர் தமிழை தாயாக நினைக்கிறார். தமிழும் இவர் இழுத்த இழுப்பிற்கு வருகிறாள். என்ன நான் சொல்வதை நம்ப கடினமாக இருக்கிறதா? சந்தேகமானால் முனைவர். இரவாவை கேட்டுப் பாருங்களேன். அவள் ஒடி வந்ததை இன்னும் உணர்வோடு சொல்வார். முத்தமிழ் குழுவில் இதை எழுதியவர் காழியூரான் -------------------------------------------- நண்பர்களே இதைப் படித்ததும் நெஞ்சம் உருகிவிட்டது.குறளாசான் என முத்தமிழ் குழுவில் நாங்கள் அன்போடு அழைக்கும் புலவர் இரா.வாசுதேவன் கபிலனின் வாழ்க்கைக்கையில் நிகழ்ந்த ஒரு சம்பவத்தைத்தான் தான் நீங்கள் மேலே படித்தது. கூவம் நதியைப்பற்றி இரவா ஐயா எழுதிய ஒரு கவிதையையும் படியுங்கள் காவியப் பெண்ணே! என் காதல் கண்ணே! சென்னைமா நகரைச் சுற்றும் சீரற்ற நதியே! பெண்ணே! முன்னையோர் ஈன்றெ டுத்த மூளியே சென்னைப் பெண்ணே! உன்னையும் பெண்ணே என்றும் உரைத்தவன் பிறந்த துண்டா?! சென்னையைச் சுற்றிச் சுற்றிச் சேர்த்திட்ட சிறப்பைக் கூறாய்! பெருகிடும் தொழிற்கூ டங்கள் பிதுக்கிடும் கசடில் மூழ்கி எருமையின் கழிவை மேனி எழிலுக்குப் பூசு கின்றாய்? பெருகிய சென்னை மக்கள் பேணிடாக் கழிவின் நெய்யை அருமையாம் கூந்த லுக்கு அழகுடன் பூசு கின்றாய்? ஆனந்தம் ஆன மேனி அழுக்கினை கழுவு கின்றாய்? 'நானிந்த நகரி லுள்ள நங்கையர் தலைவி' என்று மேனியை மினுக்கிக் கொண்டு மென்நடை போடு கின்றாய்? கூனமும் நரையும் போகக் கொழுத்ததைக் கூறு வாயா? உன்னுடல் நாற்றம் மட்டும் ஊரெலாம் மணக்கும் என்பார்! உன்னுடன் தொட்டான் என்றால் உயிரினை இழப்பான் என்பார்! உன்னுடல் கற்பு தீக்குள் உலகமே நடுங்கு மென்பார்! உன்னுட னிருக்கு மிந்த உயர்வுக்குப் பொருள்தான் என்னே? மண்ணிலே உன்னைப் போல மக்களும் இருப்பார்! அன்னார் மண்ணிடும் பொருளுக் காக மயங்குவார் அலைவார் நாளும்! கண்ணிய மாக உன்போல் கற்புடன் வாழ்வ தற்குப் புண்ணிய அறத்தீ நீயே பூமிக்கே விளக்கும் ஆனாய்! எத்தனை நாள்க ளாக இயங்குவாய், தணியாத் தீயாய்! எத்தனை விதமாய் மக்கள் இருந்தனர்! எவரும் உன்னை முத்தமும் கேட்டு வந்து மோகமும் கொண்ட துண்டா? சித்தமாய் இத்தை மட்டும் சீறாமல் கூற வேண்டும்! முன்னோர்கள் உன்னைப் பற்றி முன்னூறு சேதி சொன்னார்! அன்னோர்கள் சொல்லைக் கேட்டே அதிர்ச்சியில் உறைந்து போனேன்! இந்நாளில் இருப்போர் கூட ஏதேதோ பேசு கின்றார்! அன்னோர்கள் சொன்ன சொல்லால் ஆசையை வளர்த்துக் கொண்டேன்! உன்முகம் கருப்பா? அந்தி உழுதிடும் சிகப்பா? இல்லை, நின்முகம் சாம்பல் போலா? நெடுங்கடல் நீலம் போலா? அன்னம்போல் வெண்மை யாமா? அடர்ந்திடும் பச்சை போலா? புன்னகை என்ற ஒன்றைப் பிறந்து நீ பார்த்த துண்டா? பெண்களின் தலையில் வாழும் பிறவிகள் உறவு மில்லை! கண்களை அலைய விட்டுக் காதலைத் தோண்டு கின்ற பெண்குணம் ஒன்றும் உந்தன் பிறப்பொடு வந்த தில்லை! அண்டையில் உன்னைத் தேடி ஆருமே வருவ தில்லை! ஏனிந்த துறவுக் கோலம்? எவனிடம் மனத்தை விற்றாய்? நாணமும் அச்சம் என்னும் நாற்குணம் ஒன்று மின்றி மேனியைப் போற்றிக் காத்து மேய்ந்திடா கழனி யானாய்! தீனிக்குச் சுற்று கின்ற தீமைக்கும் பயந்தாய் யில்லை! யாருமே துணைவ ரின்றி வாடிடும் பெண்ணே உன்றன் ஊரையும் பேரும் கேட்டே உறவுடன் ஓடி வந்தேன்! ஆருக்கும் உன்னைக் கண்டால் ஆசைதான் முந்தி நிற்கும்! சீருற்றுக் குலுங்கும் மேனிச் சேவிக்க விரும்பி னேனே! பத்தரை மாற்றுப் பொண்ணின் பதங்கமாய் இருந்தி ருந்தால் முத்தமிழ் கேட்கும் சென்னை மூளியாய் ஆகு வாயா? சத்திய வான்கள் கூட சாதியால் கெடுதல் போல நித்தமும் மோக னத்தால் நிலைதளர்ந்தி ருக்கின் றாயே! எங்கெங்கோ அறிவைத் தேடி இளைத்திடும் அறிஞன் கூடத் திங்களின் வடிவாய் உன்னைச் செய்திட இளைத்துப் போவான்! சிங்கமாய் வருவோர் எல்லாம் சீண்டினால் உன்னைத் தொட்டால் பங்கமாய்ப் போவார்! என்றால், பாசமும் கொள்ளு வாரா? கொங்கைபோல் மலரின் மொட்டு குவியிதழ் மலரின் ஏடு! பொங்கிடும் அமுத ஊற்றாய்ப் பூரிக்கும் சொல்லின் தேறல்! சங்கெலாம் கழுத்துப் போலாம் -------------------------- கூவத்தையே மணக்க வைக்கும் சக்தி தமிழுக்கு உண்டு என்பது உண்மைதானோ? தாய்த்தமிழே உன் தலைமகன் இரவா கவிதை கேட்டு கூவமே மணக்குதம்மா.

23 comments:

SP.VR. SUBBIAH said...

// புலவர் இரா.வாசுதேவன் கபிலனின் வாழ்க்கைக்கையில் நிகழ்ந்த ஒரு சம்பவத்தைத்தான் தான் நீங்கள் மேலே படித்தது.

கூவம் நதியைப்பற்றி இரவா ஐயா எழுதிய ஒரு கவிதையையும் படியுங்கள் //

ஆகா! சிங்காரச் சென்னைக்கு கூவத்தை வைத்து கூந்தல் முடிந்திருக்கின்றாரே!
சிறப்பாக உள்ளது!

Unknown said...

நன்றி வாத்தியார் ஐயா

இரவாவின் தமிழால் கூவம் மட்டுமல்ல,கூவம் போல் மனம் படைத்தவனும் மணப்பான்

இரவா ஐயாவின் புகைப்படத்தை அப்டேட் செய்துள்ளேன்.

நன்றி

அன்புடன்
செல்வன்

ENNAR said...

கண்ணதாசன்,கலைஞர், சிவாஜிகணேசன் இவர்களுக்கு இப்படிப்பட்ட நிலை வந்ததாக அவர்களே சொல்லக்கேட்டிருக்கேன் அதனால் தான் அவர்கள் உயர முடிந்தது போல

வெற்றி said...

செல்வன்,
மிகவும் அருமையான பதிவு.

Unknown said...

என்னார் ஐயா,வெற்றி

மிக்க நன்றி

அன்புடன்
செல்வன்

VSK said...

கூவமே உன் பெருமை உரைப்பேன் கேளிங்கு
போவோமே நாமிங்கு உன் பெருமை உணர மறுத்தால்
ஏனிந்தக் கோலமிங்கு உனக்கு வந்தது
எம்மக்கள் உனைச் செய்த துயரிங்கு
உரைத்திடவோ மொழியில்லை

ஊருக்கு ஒரு நதியாய் நீயிங்கே இருக்கையிலே
பேருக்குத் தாயெனச் சொல்லி புறத்தே தள்ளிவிடும்
புலையரின் நிலை போல உனையிங்கு ஒதுக்கி விட்டார்
தாயவளே நீயவரை மன்னித்து அருள் புரிவாய்

நீ கண்ட வரலாறு ஒருவருமே கண்டதில்லை
நீ நடந்த தடயங்கள் யாரிங்கும் உணர்ந்ததில்லை
நீ பட்ட பாட்டினையே எவருமிங்கு நினைப்பதில்லை
நின் பெருமை பெசுதற்கோ எனக்கேதும் சொல் வரவில்லை

சென்னப்பன் முதல் இன்றிருக்கும் கருணாநிதிவரைக்கும்
அத்தனை பேரும் உனை மறந்தார் ஆனாலும் தாயே நீ
எதுவும் நடகாதது போல நிமிர்ந்து நடை போடுகிறாய்
நின்னுள்ளே கழிவதனையும் கழித்த பின்னும்!

வளமாக நீ பாய்ந்த நாளுனக்கு நினைவிருக்கும்
வளம் பெருக்கி மாந்தரையே போற்றியதும் நினைவிருக்கும்
உளம் கறுத்து உனையிங்கு அவமதித்த காரணத்தால்
இலம் இன்றித் திரிகின்றார் இனிய தமிழ் நாட்டவரும்!

உனை மதிக்கும் நாளெதுவோ அதுவன்றோ உய்யும் நாள்
என நினைக்க மறந்தாரே இங்கிருக்கும் ஆட்சியாளர்
இருந்தாலும் நீயென்றும் பொங்கியதாய் சரித்திரமும்
இதுவரைக்கும் யாமிங்கு கண்டதில்லை கேட்டதில்லை

அதுவன்றோ நின் பெருமை தாயவளே போற்றுகின்றேன்
எதுவரையில் உன் பொறுமை எமக்கிங்கு தெரியாது
ஏசுநாதரை யாமிங்கு நேரிலே கண்டதில்லை
ஏசுபவர்க்கும் இன்முகம் காடும் பொன்மகளே நீ வாழ்க!

ஏதுமறியா பாலகர் ஏதுமறியாமல் செய்கின்ற
பேதமைச் செயல்களால் மனம் வருந்தாமல் நீயும்
அவர் மீது கோவிக்காமல் கருணை காட்டி
இருக்கவே வேண்டுகிறேன் ஏதும் செய்ய இயலாத யான்!

Unknown said...

ஆஹா...
கூவம் செய்த பாக்கியம் தான் என்ன?

எஸ்.கேவும்,இரவாவும் கவிபாட புண்ணியம் தேடிக்கொண்டது கூவம் நதி.

எஸ்.கே,இந்த கவிதையை முத்தமிழ் குழுவில் இட்டுவிட்டேன்.இரவா நிச்சயம் மனம் மகிழ்வார்.

வாழ்க எஸ்.கேவின் தமிழ்.

Unknown said...

எஸ்.கே

இதை பதிவாகவே போடலாம்.அல்லது திண்னைக்கு அனுப்பினாலும் நிச்சயம் வெளிவரும்.மிக அருமையான கவிதை.இதை பின்னூட்டமாக மட்டும் விட்டுவிடாதீர்கள்.

VSK said...

படித்தவுடன் ஏற்பட்ட பாதிப்பால் விளைந்த சொற்கள் அவை!
எழுதி முடித்ததும் உண்மையில் அழுதேன் நான்!
மற்றபடி முத்தமிழில் வெளியிட்டதற்கு மிக்க நன்றி.
முடிந்தால், நீங்களே எனக்காக திண்ணைக்கு அனுப்புங்கள்!
எனக்கு எப்படி எனத் தெரியாது என்பதால்!

VSK said...

சொல்ல மறந்தேன் உணர்ச்சி வேகத்தில், செல்வன்!
மிக அருமையான விழிப்புணர்வு பதிவு இது!
வாழ்த்துகள்!

Unknown said...

எஸ்.கே

திண்ணைக்கு நிச்சயம் அனுப்புகிறேன்.தமிழுக்கும்,இலக்கியத்துக்கும் தொண்டாற்றி வரும் திண்ணை இதை வெளியிடும் என்ற நம்பிக்கை உள்ளது.

தமிழ் துள்ளி விளாயாடும் பதிவாக இது ஆனதில் மிகுந்த மகிழ்ச்சி.

கூவத்தையும் மணக்க வைக்கும் அன்னை தமிழே நீ வாழ்க

துளசி கோபால் said...

அட... நம்ம இரா.வா அவர்களுக்கா இந்த நிலை? நல்லவேளை தமிழ்த்தாய் காப்பாற்றினார்.

அருமையானவர். போனமுறை ச்சென்னையில் சந்தித்தேன்.

Unknown said...

துளசி அக்கா

இந்த சம்பவம் நடந்து பல ஆண்டுகள் இருக்கும்.இப்போது இரவா ஐயாவை தமிழ் அன்னை நல்ல நிலையில் வைத்திருக்கிறாள்.அவரும் தன் தமிழ் தாயை தன் சேய் போல பார்த்துக்கொள்கிறார்

Unknown said...

14

Unknown said...

எஸ்.கே

திண்ணைக்கு அனுப்பிவிட்டேன்.

திண்ணையில் உங்கள் தமிழ் துள்ளி விளையாடுவதை காண ஆவலாக இருக்கிறேன்.உங்கள் மற்ற படைப்புக்களையும் திண்ணைக்கு அனுப்புங்கள்.நிச்சயம் வெளியிடுவார்கள் என நம்புகிரேன்

VSK said...

என்ன பண்ணனும்னு ஒரு தனி மடலிலாவது சொல்லவும்! நன்றி, செல்வன்

Unknown said...

எஸ்.கே

தனிமடல் அனுப்பிவிட்டேன்.அது ஒன்றும் பெரிய விஷயமில்லை.editor@thinnai.com என்ற முகவரிக்கு நம் படைப்புக்களை அனுப்பினால் சிறந்ததாக இருந்தால் நிச்சயம் வெளியிடுவார்கள்.வாராவாரம் வியாழன் நள்ளிரவன்று திண்ணையை அப்டேட் செய்வார்கள்.செவ்வாய்,புதனுக்குள் படைப்புக்களை அனுப்பினால் அந்த வார திண்ணையில் வரும்.

மஞ்சூர் ராசா said...

கூவத்தையும் இரவாவையும் ஒப்பிட்டு பார்த்தால் ஒரு உண்மை விளங்கும்.....


கூவத்தின் மகத்துவம் அறியாத நாம் அதை அசிங்கப்படுத்துகிறோம்.

இரவாவின் மகத்துவம் வெளியில் தெரியவில்லை.


இரண்டும் வளம்பெறவேண்டும் என நாம் நினைக்கிறோம். ஒரு சில நேரங்களில் அதற்காக சில காரியங்களும் நடக்கின்றன. ஆனால் பிறகு கிணற்றில் இட்ட கல்லாக அவை அப்படியே நின்று விடுகின்றன.

இவ்வளவு துன்பங்களுக்கிடெயேயும், நமது இரவா தொடர்ந்துப் படித்து தமிழில் புலமைப் பெற்று இன்று முனைவர், புலவர் இரா. வாசுதேவன் என பலராலும் போற்றப்படுகிறார். பெரிய அளவில் அவர் அறியப்படாதிருந்தாலும், இணைய உலகில் ஓரளவுக்கு பரிச்சயம் ஏற்பட்டிருப்பது நமக்கு மகிழ்ச்சியை கொடுக்கிறது.

அது போலவே கூவத்தின் அருமைப் பெருமைகள் அவ்வப்போது வெளியுலகிற்கு தெரியத்தான் வருகின்றது.

நண்பர்களே இந்தக் கதையை நமக்கு அழகாக எடுத்துரைத்த நண்பர் காழியூராரும் ஒரு மிகச்சிறந்த தமிழறிஞர். குடத்திலிட்ட விளக்காக, நம்மிடையே இருக்கிறார் என்பது நமக்கெல்லாம் பெருமை.

இரவாவிடமும், காழியூராரிடமும் நாம் பேச ஆரம்பித்தால் சோறு தண்ணி எதுவும் நினைவில் வராது.

அன்பு செல்வனுக்கும் பின்னூட்டமிட்ட அனைவருக்கும் மிகவும் நன்றி.

இவர்கள் ஆக்கங்களையும் உரையாடல்களையும் மேலும் படிக்க:
http://groups.google.com/group/muththamiz
http://groups.google.com/group/nambikkai

Unknown said...

நன்றி மஞ்சூர் அண்னா,

நீங்களும்,காழியூராரும்,இரவாவும் வசிக்கும் முத்தமிழ் குழு இனைய தமிழர்களுக்கு ஒரு பல்கலைகழகம் என்றுதான் சொல்ல வேண்டும்.இப்படி ஒரு அருமையான குழுவில் இணைந்து தமிழுக்கு தொண்டு செய்யும் பெருமை கிட்டியதற்கு மிகவும் மகிழ்கிறேன்

Anonymous said...

பதிவை இட்டமைக்கு நன்றி செல்வன்

Unknown said...

கம்பர் ஐயா

மிக்க நன்றி.தாங்கள் என் பதிவுக்கு வருகை தந்தமைக்கு மிகவும் மகிழ்கிறேன்

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

செல்வன்!
மிக ஆழமான கவிதை; கூவம் பற்றி ஈழத்தவனான நான் கேள்விப்பட்டுள்ளேன். கூவத்தைப் பயன் படுத்தாதது. பெரிய தவறு. இரா.வா; எஸ்கே. போன்றோரால் ;கூவம் சுகந்தம் வீசுகிறது.
கவிதைக்கு நன்றி
யோகன் பாரிஸ்

Unknown said...

நன்றி யோகன் பாரீஸ்,

கூவம் போல அடையாறு என்ற ஒரு ஆறும் சென்னையில் உண்டு.அதையும் சுத்தமாக அழித்து விட்டார்கள்.கூவத்தை சுத்தமாக வைத்திருந்தால் சென்னையில் குடிநீர் பஞ்சமே வந்திருக்காது