Thursday, September 21, 2006

166.கூவத்தை மணக்க வைக்கும் தமிழ்....

ஒரு உண்மை கதை தெரிந்த ஒருவரின் மூலமாக அவருக்கு மைசூரில் ஒரு கன்னடரின் புது கம்பெனியில் ஃபோர்மென் வேலை கிடைத்தது. சொல்லப்பட்ட சம்பளம் திருப்தியாக இருந்ததினாலும், வேலையின் தேவையாலும் அதை ஒத்துக் கொள்ள வேண்டிய நிர்பந்தம். அவர் ஒத்துக் கொண்டார். கம்பெனி நன்றாக நிலைப்பெற்றபின், இவரது தேவை தேவையில்லாது போனது. எப்படி கழட்டி விடுவது? சொல்லப்பட்ட சம்பளத்தில் நாலில் ஒரு பங்கு தான் இனி சம்பளம் என்று ஆக்கினர். இவர் அவர்களது கருத்தை புரிந்துக் கொண்டு, வேலை வேண்டாம் எனக் கூறி இது வரை இருந்ததற்காகவும் சென்னை திரும்பவும் பணம் கேட்டார். ஏனெனில் அவரிடம் சென்னை திரும்பவும் பணம் இல்லை. கம்பெனி அனைத்திற்கும் மறுத்து விட்டது. மைசூரில் இருந்த்து பெங்களூருக்கு வந்து சேர்ந்தார். கையில் இருந்த பணத்தைக் கொண்டு பஸ்ஸில் ஊருக்கு திரும்ப இயலாது. பஸ் கட்டணத்திற்கு தேவையானதை விடவும் கையில் பணம் குறைவு. தன்னிடமிருந்த ஒரு விலையுயர்ந்த பொருளை விற்க வேண்டிய நிலை. அது ஒரு நண்பர் வெளிநாட்டில் இருந்து அன்போடு இவருக்கு வாங்கி தந்தது. இவரது நிலையை உணர்ந்தோ அல்லது நேரம் சரியில்லையோ, அதை பத்தில் ஒரு பங்கு விலையிற்குதான் விற்க முடிந்தது. அந்த பணம் பஸ்ஸில் செல்ல போதாது. சரி...லாரியில் செல்லலாம் என தீர்மானித்து ஒரு லாரி டிரைவரிடம் அதை தர, அவன் 'இங்கு இருங்கள்' என கூறி விட்டு சென்றான்; திரும்பவேயில்லை. கையில் வெறும் ஒரு ரூபாய், நாற்பது காசுகள் மாத்திரமே இருந்தன. தெருவோரத்தில் படுத்துக் கொண்டார்; என்ன செய்வது என்று புரியவில்லை; சுற்றிலும் மனிதர்கள் இருந்தும் உண்மையில் யாருமில்லை; அங்கிருந்த டீக்கடை பெஞ்சில் அமர்வார்; பிறகு நடைப்பாதையிற்கு வருவார். வேதனை தாங்காமல் தமிழ்தாயை கடைசியாக மனம் விட்டு அழைத்து வெண்பாவாய் சொன்னார்: மகனே ! மகனே! எனவாய் இனிக்க மகனை அழைத்து மகிழ்ந்து - நகத்தில்மண் பட்டால் துடித்து பதறி எடுத்தணைத்து விட்டால் தமிழ்மடியில் தான். பிறந்திருந்த மண்விட்டு பெங்களூர் மண்ணில் இறந்து கிடக்கின்றேன்! எந்தாய் - மறந்தனையோ செந்தமிழ் ஒன்றையே சிந்தை தனில்நிறைத்து வந்தானைக் காப்பாற்று வா! அப்போது அங்கு திடுமென வந்த ஒரு கன்னடியர் இவரை விசாரித்து தனக்கு தெரிந்த ஒரு லாரி உரிமையாளரிடம் பணத்தை தந்து இவரை சென்னையில் விட்டு விடுமாறு கேட்டுக் கொண்டார். அந்த உரிமையாளரே, ஓட்டுநரும் ஆவார். இவரை அவர் வண்டியில் ஏற்றிக்கொண்டு வழிநெடுக தான் உண்ணும் வகைகளை இவருக்கும் வாங்கித் தந்து சென்னையில்,பச்சையப்பன் கல்லூரி அருகில் இறக்கி விட்டார். பின் தன்னிடம் அந்த கன்னடியர் தந்த பணத்தையும் இவருக்கே தந்து விட்டு சென்றார். ஒலியாகவும், வரிவடிவமாகவும்,எழுத்தாகவும் அறியப்படும் தமிழ் இவரால் உணர்வாகவும் அறியப்பட்டது. இவர் அழைத்தார் ....ஒடி வந்தது.என்ன தமிழ் அன்பு இருந்தால் உரிமையோடு 'நான் உன்னுடையவன் வா" என்று அழைத்திருப்பார். இன்று வரை அப்படிதான் இருக்கிறார். அதனால் தான் இன்று வரை இவர் தமிழை தாயாக நினைக்கிறார். தமிழும் இவர் இழுத்த இழுப்பிற்கு வருகிறாள். என்ன நான் சொல்வதை நம்ப கடினமாக இருக்கிறதா? சந்தேகமானால் முனைவர். இரவாவை கேட்டுப் பாருங்களேன். அவள் ஒடி வந்ததை இன்னும் உணர்வோடு சொல்வார். முத்தமிழ் குழுவில் இதை எழுதியவர் காழியூரான் -------------------------------------------- நண்பர்களே இதைப் படித்ததும் நெஞ்சம் உருகிவிட்டது.குறளாசான் என முத்தமிழ் குழுவில் நாங்கள் அன்போடு அழைக்கும் புலவர் இரா.வாசுதேவன் கபிலனின் வாழ்க்கைக்கையில் நிகழ்ந்த ஒரு சம்பவத்தைத்தான் தான் நீங்கள் மேலே படித்தது. கூவம் நதியைப்பற்றி இரவா ஐயா எழுதிய ஒரு கவிதையையும் படியுங்கள் காவியப் பெண்ணே! என் காதல் கண்ணே! சென்னைமா நகரைச் சுற்றும் சீரற்ற நதியே! பெண்ணே! முன்னையோர் ஈன்றெ டுத்த மூளியே சென்னைப் பெண்ணே! உன்னையும் பெண்ணே என்றும் உரைத்தவன் பிறந்த துண்டா?! சென்னையைச் சுற்றிச் சுற்றிச் சேர்த்திட்ட சிறப்பைக் கூறாய்! பெருகிடும் தொழிற்கூ டங்கள் பிதுக்கிடும் கசடில் மூழ்கி எருமையின் கழிவை மேனி எழிலுக்குப் பூசு கின்றாய்? பெருகிய சென்னை மக்கள் பேணிடாக் கழிவின் நெய்யை அருமையாம் கூந்த லுக்கு அழகுடன் பூசு கின்றாய்? ஆனந்தம் ஆன மேனி அழுக்கினை கழுவு கின்றாய்? 'நானிந்த நகரி லுள்ள நங்கையர் தலைவி' என்று மேனியை மினுக்கிக் கொண்டு மென்நடை போடு கின்றாய்? கூனமும் நரையும் போகக் கொழுத்ததைக் கூறு வாயா? உன்னுடல் நாற்றம் மட்டும் ஊரெலாம் மணக்கும் என்பார்! உன்னுடன் தொட்டான் என்றால் உயிரினை இழப்பான் என்பார்! உன்னுடல் கற்பு தீக்குள் உலகமே நடுங்கு மென்பார்! உன்னுட னிருக்கு மிந்த உயர்வுக்குப் பொருள்தான் என்னே? மண்ணிலே உன்னைப் போல மக்களும் இருப்பார்! அன்னார் மண்ணிடும் பொருளுக் காக மயங்குவார் அலைவார் நாளும்! கண்ணிய மாக உன்போல் கற்புடன் வாழ்வ தற்குப் புண்ணிய அறத்தீ நீயே பூமிக்கே விளக்கும் ஆனாய்! எத்தனை நாள்க ளாக இயங்குவாய், தணியாத் தீயாய்! எத்தனை விதமாய் மக்கள் இருந்தனர்! எவரும் உன்னை முத்தமும் கேட்டு வந்து மோகமும் கொண்ட துண்டா? சித்தமாய் இத்தை மட்டும் சீறாமல் கூற வேண்டும்! முன்னோர்கள் உன்னைப் பற்றி முன்னூறு சேதி சொன்னார்! அன்னோர்கள் சொல்லைக் கேட்டே அதிர்ச்சியில் உறைந்து போனேன்! இந்நாளில் இருப்போர் கூட ஏதேதோ பேசு கின்றார்! அன்னோர்கள் சொன்ன சொல்லால் ஆசையை வளர்த்துக் கொண்டேன்! உன்முகம் கருப்பா? அந்தி உழுதிடும் சிகப்பா? இல்லை, நின்முகம் சாம்பல் போலா? நெடுங்கடல் நீலம் போலா? அன்னம்போல் வெண்மை யாமா? அடர்ந்திடும் பச்சை போலா? புன்னகை என்ற ஒன்றைப் பிறந்து நீ பார்த்த துண்டா? பெண்களின் தலையில் வாழும் பிறவிகள் உறவு மில்லை! கண்களை அலைய விட்டுக் காதலைத் தோண்டு கின்ற பெண்குணம் ஒன்றும் உந்தன் பிறப்பொடு வந்த தில்லை! அண்டையில் உன்னைத் தேடி ஆருமே வருவ தில்லை! ஏனிந்த துறவுக் கோலம்? எவனிடம் மனத்தை விற்றாய்? நாணமும் அச்சம் என்னும் நாற்குணம் ஒன்று மின்றி மேனியைப் போற்றிக் காத்து மேய்ந்திடா கழனி யானாய்! தீனிக்குச் சுற்று கின்ற தீமைக்கும் பயந்தாய் யில்லை! யாருமே துணைவ ரின்றி வாடிடும் பெண்ணே உன்றன் ஊரையும் பேரும் கேட்டே உறவுடன் ஓடி வந்தேன்! ஆருக்கும் உன்னைக் கண்டால் ஆசைதான் முந்தி நிற்கும்! சீருற்றுக் குலுங்கும் மேனிச் சேவிக்க விரும்பி னேனே! பத்தரை மாற்றுப் பொண்ணின் பதங்கமாய் இருந்தி ருந்தால் முத்தமிழ் கேட்கும் சென்னை மூளியாய் ஆகு வாயா? சத்திய வான்கள் கூட சாதியால் கெடுதல் போல நித்தமும் மோக னத்தால் நிலைதளர்ந்தி ருக்கின் றாயே! எங்கெங்கோ அறிவைத் தேடி இளைத்திடும் அறிஞன் கூடத் திங்களின் வடிவாய் உன்னைச் செய்திட இளைத்துப் போவான்! சிங்கமாய் வருவோர் எல்லாம் சீண்டினால் உன்னைத் தொட்டால் பங்கமாய்ப் போவார்! என்றால், பாசமும் கொள்ளு வாரா? கொங்கைபோல் மலரின் மொட்டு குவியிதழ் மலரின் ஏடு! பொங்கிடும் அமுத ஊற்றாய்ப் பூரிக்கும் சொல்லின் தேறல்! சங்கெலாம் கழுத்துப் போலாம் -------------------------- கூவத்தையே மணக்க வைக்கும் சக்தி தமிழுக்கு உண்டு என்பது உண்மைதானோ? தாய்த்தமிழே உன் தலைமகன் இரவா கவிதை கேட்டு கூவமே மணக்குதம்மா.
Post a Comment