Monday, June 05, 2006

98.இந்து வளர்ச்சி விகிதத்தை அழித்த மன்மோகன் சிங்

இந்தியா சுதந்திரம் பெற்றதும் நேரு சோஷலிசப்பாதையில் இந்தியாவை கொண்டு சென்றார்.ரஷ்யாவை ரோல்மாடலாகக் கொண்ட இம்முறையில் உற்பத்தியை விட வினியோகமே முக்கியமானதாகக் கருதப்பட்டது.இம்போர்ட் சப்ஸ்டிட்யூஷன் எனும் கொள்கையை கண்ணை மூடிக்கொண்டு இந்தியா பின்பற்றியது.Be Indian,buy Indian- garibi hatavo என்பது போன்ற கவர்ச்சிக் கோஷங்களும் இந்தியா முழுவதும் உச்சரிக்கப்பட்டன.தேசியமயமாக்கல்,பொதுவுடமை என்பது போன்ற சொற்றொடர்கள் சர்வசாதாரணமாக புழக்கத்தில் வந்தன. 1947 முதல் 1992 வரையிலான காலகட்டத்தை பொருளாதார நிபுணர்கள் பல கிண்டலான பெயர்களில் அழைப்பார்கள்.லைசன்ஸ் ராஜ்,price control, control regime என்பார்கள்.அதாவது ஒரு தொழிற்சாலை தனது உற்பத்தியை பெருக்க வேண்டுமானால் அரசிடம் அனுமதியோ லைசன்ஸோ பெற வேண்டும்.டில்லிக்கு காவடி தூக்கி அந்த துறையை பற்றி சுத்தமாக எதுவும் தெரியாத ஐ.பி.எஸ் அதிகாரியிடமோ அல்லது அமைச்சரிடமோ உற்பத்தியை அதிகரிக்க அனுமதி வாங்க வேண்டும்.3000 மூட்டை சிமென்ட் உற்பத்தி செய்யும் கம்பனி 4000 மூட்டையாக உற்பத்தியை அதிகரிக்க வேண்டுமானால் டில்லியில் உள்ள ஐ.பி.எஸ் அதிகாரியிடம் அனுமதி பெற வேண்டும்.(லஞ்சம் கொடுக்க வேண்டும் என்பது எழுதப்படாத சட்டம்) வெள்ளையர்கள் மீதான அவநம்பிக்கை தான் இறக்குமதி மறுப்பு கொள்கைக்கு முக்கிய காரணம்.இக்கொள்கை நமது தொழில்துறையை கிட்டத்தட்ட முடக்கி குட்டிச்சுவராக்கியது.நவீன இயந்திரங்கள்,தொழில்நுட்பம் கிடைக்காததால் இந்திய தொழிற்சாலைகள் உலகின் மற்ற நாடுகளின் தொழிற்சாலைகளை விட பின் தங்கின.லைசன்ஸ் முறை போட்டியை ஒழித்ததால் இத்தொழிற்சாலைகள் உள்ளூர் சந்தையில் தாக்குப்பிடித்தன. ஒரு உதாரணம் சொல்ல வேண்டுமெனில் 1960ல் இருந்து 1992 வரை ஒரே வடிவமைப்பில் வந்த அம்பாசிடர் காரை குறிப்பிடலாம்.உலகின் ஆடொமொபைல் துறை இக்காலகட்டத்தில் அசுர வளர்ச்சி அடைந்தது.டயோட்டா,Honda போன்ற கம்பனிகள் புதுப்புது மாடல்களுடன் போட்டி போட்டுக்கொண்டு உலக சந்தையை ஆகிரமித்து அசுர வளர்ச்சி அடைந்தன.தீவிர போட்டியால் விலைகுறைப்பு,புது தொழில் நுட்பம்,புது டிசைன்கள்,எரிபொருள் சேமிப்பு என பலவற்றை செய்தே தீரவேண்டிய கட்டாயம் இன்னுறுவனங்களுக்கு ஏற்பட்டன.அதனால் வாடிக்கையாளருக்கு நன்மையும் ஏற்பட்டது.இக்கம்பனிகளும் திறமை வாய்ந்தவையாயின,. அம்பாசிடர் கம்பனிக்கு இந்த போட்டி போடும் பிரச்சனை எல்லாம் கிடையாது.கார் இறக்குமதி,புதுகார்கம்பனி ஆரம்பிப்பது,பழைய கார்கம்பனிகள் உற்பத்தியை பெருக்குவது இவை அனைத்தும் அரசால் தடை செய்யப்பட்டிருந்தன,அதனால் அம்பாசிடர் கம்பனிக்கு போட்டி என்பதே இல்லாமல் போனது.உற்பத்தியை விட தேவை மிக அதிகம் என்பதால் விற்பனை செய்யவும் சிரமப்படவேண்டியதில்லை.விளம்பரமும் தேவைஇல்லை.நவீன தொழில்நுட்பமும் தேவை இல்லை.தரத்தை உயர்த்த வேண்டிய சிரமமும் இல்லை. அம்பாசிடர் என்றில்லை,அனைத்து துறைகளிலும் இந்நிலை தான் காணப்பட்டது.ஸ்கூட்டரில் லம்பிரெட்டா,பஜாஜ் என இரண்டே கம்பனிகள் தான்.முழுபணத்தையும் கட்டி 1 வருடம் காத்திருந்தால் மட்டுமே ஸ்கூட்டர் கிடைக்கும் என்ற நிலை.தரம்,எரிபொருள் சிக்கனம்..மூச்ச்.... எதை உற்பத்தி செய்தாலும் விற்கும் என்ற நிலைதான் அப்போது நிலவியது.இறக்குமதியை தடை செய்து உள்நாட்டு உற்பத்தியை கட்டுபடுத்தியதால் குறிப்பிட்ட சிலர் மட்டும் பணம் சம்பாதிக்கவும்,வேலை இல்லா திண்டாட்டம் அதிகரிக்கவும் இந்நிலை வழிவகுத்தது. ஐந்தாண்டு திட்டங்களை சோவியத் ரஷ்யாவிடமிருந்து இந்தியா காப்பியடித்தது இந்நிலையை மேலும் மோசமாக்கியது.இரண்டாம் ஐந்தாண்டு திட்டத்திலிருந்து நாசம் துவங்கியது என சொல்லலாம்.இரண்டாம் ஐந்தாண்டு திட்டத்தை(1956 - 1961) மகலனோபிஸ் எனும் வங்காள பொருளாதார நிபுணர் உருவாக்கினார்.உருவாக்கினார் என்பதே தவறு.வரிக்கு வரி ரஷ்ய ஐந்தாண்டு திட்டத்தை காப்பி அடித்து கொடுத்து விட்டார்.அத்திட்டத்துக்கு மகலனோபிஸ் திட்டம் என்றே பெயர். இந்த இரண்டாம் ஐந்தாண்டு திட்டத்தால் சர்வநாசம் ஏற்பட்டது.ரஷ்ய சோஷலிசத்தோடு காந்திய சோஷலிசத்தையும் கலந்த இத்திட்டத்தின் கீழ் 17 தொழில் துறைகள் தேசியமயமாக்கப்பட்டன.புது கம்பனிகளை ஆரம்பிக்க,உற்பத்தியை பெருக்க,புது பொருட்களை தயாரிக்க அரசு லைசன்ஸ் கட்டாயமாக்கப்பட்டது.கம்பனிகளை மூடவும் அரசு அனுமதி தேவைப்பட்டது.ஒரு தொழிற்சாலை நஷ்டத்தில் ஓடினால் அரசு உதவித்தொகை கொடுக்கும் என சட்டம் போடப்பட்டதால் முதலாளிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர்.லாபம் வந்தால் பணம்,நஷ்டம் வந்தாலும் பணம் என்றால் சந்தோஷத்துக்கு கேட்கவா வேண்டும்? லாபம் வரும்படி கம்பனி நடத்துவதை விட நஷ்டம் வரும்படி கம்பனி நடத்துவது லாபகரமாகப் போனது.நஷ்டம் வந்தால் மிஷின்களை விற்றுவிட்டு தொடர்ந்து நஷ்டத்திலேயே கம்பனியை முதலாலிகள் ஓட்டுவர்.அரசு உதவித்தொகை தான் கிடைக்கிறதே?ரொம்ப நஷ்டம் வந்தால் அரசு அத்தொழிலை எடுத்துக்கொள்ளும்.நிலம்,மிஷின்கள்,பாக்டரி என அனைத்தின் மேலும் கடன் வாங்கிவிட்டு அரசிடம் நஷ்ட ஈடாக கணிசமான ஒரு தொகையையும் பெற்றுக்கொண்டு ஜாலியாக முதலாளிகள் எஸ்கேப் ஆயினர்.ஒரு அரசியல்வாதியை அந்நிறுவனத்தலைவராக அரசு அறிவிக்கும்.அவரும் இஷ்டத்துக்கு சுருட்டுவார்.கம்பனி தொடர்ந்து நஷ்டத்தில் ஓடும்.சம்பளத்தை அரசு கொடுப்பதால் தொழிலாளிகள் அரசு ஊழியர் என்ற தகுதியோடு ஜாலியாக இருப்பார்கள். நேருவுக்கு பின்வந்த இந்திரா காந்தி கிட்டத்தட்ட தொழில் துறையை முடித்தே கட்டினார் என்றுதான் சொல்ல வேண்டும்.தேசியமயமாக்கல் என்பதை ஒரு வெறியோடு அவர் செயல்படுத்தினார்.எல்.ஐ.சி,வங்கிகள் ஆகியவை அரசுமயமாக்கப்பட்டன. இந்திராவுக்கு பின்வந்த ஜனதா அரசு துக்ளக் ராஜ்ஜியம் தான் நடத்தியது.கோக்,ஐபிஎம் ஆகியவற்றை ஜார்ஜ் பெர்ணான்டஸ் இந்தியாவை விட்டு துரத்தினார்.இறக்குமதியை தடை செய்ததால் உணவுபஞ்சம் வந்தது.உணவை இறக்குமதி செய்வதை விட்டுவிட்டு திங்கட்கிழமை தோறும் நாட்டு மக்கள் உபவாசம் இருக்க வேண்டும் எனும் புரட்சிகரமான திட்டத்தை மொரார்ஜி தேசாய் அறிவித்தார்.அவரும் திங்கட்கிழமைகளில் உண்ணாவிரதம் இருக்க துவங்கினார்.ஆசிய விளையாட்டு போட்டியை இந்தியாவில் நடத்த வாய்ப்பு வந்தபோது அது ஆடம்பரம் என்று சொல்லி அதை இந்தியாவில் நடத்த மொரார்ஜி அரசும் சரண்சிங் அரசும் அதை நடத்த மறுத்தன. 1980 வரை இவர்கள் அடித்த கூத்துக்கு எல்லையே இல்லை என சொல்லலாம்.1950- 1960, 1960- 1970, 1970- 1980 ஆகிய இக்காலகட்டத்தில் இந்திய மொத்த உற்பத்தி வளர்ச்சி விகிதம் 3.5% ஆக மட்டுமே இருந்தது.(இக்காலகட்டத்தில் ஜனத்தொகை 2.5% ஆக முன்னேறியதால் உண்மையான வளர்ச்சி விகிதம் 1% தான்)இந்த பெருமை மிகுந்த(!) வளர்ச்சி விகிதத்தை "இந்து வளர்ச்சி விகிதம்" என உலக பொருளாதார நிபுணர்கள் கிண்டலடித்தனர். இந்து வளர்ச்சி விகிதம் என குறிப்பிட காரணம் அப்போதைய கிழக்காசிய டைகர் எகானமி நாடுகளின் வளர்ச்சி விகிதம் தான்.தென்கிழக்கு ஆசிய நாடுகள்(பவுத்தம்) அசுர வேகத்தில் பாய்ந்து முன்னேறின.மேற்கத்திய நாடுகள்(கிறிஸ்துவம்) பெரும் வளர்ச்சி அடைந்தன.பெட்ரோல் காசு இஸ்லாமிய நாடுகளை பெரும் செல்வந்தர்களின் நாடாக்கியது.இப்படி அனைத்து மத நாடுகளும் அசுர வேகத்தில் முன்னேற, இந்தியா தேவ வேகத்தில்(இந்து வளர்ச்சி விகிதத்தில்) முன்னேறியதால் இவ்வளர்ச்சி விகிதத்தை இந்து வளர்ச்சி விகிதம் என கிண்டலாக பொருளாதார நிபுணர்கள் குறிப்பிட்டனர். 1984ல் இந்திய பொருளாதாரத்தை ஆய்வு செய்த எகானமிஸ்ட் பத்திரிக்கை "இது பூட்ட கேஸ்" என்றது."லைசன்ஸ் ராஜ்,உற்பத்தி கட்டுப்பாடு என்றதன் விளைவால் இந்தியாவுக்கு கம்யூனிசம்,முதலாளித்துவம் ஆகிய இரு கோட்பாடுகளின் தீமைகளும் ஒரே சமயத்தில் கிடைத்தன.இந்திய சிறுதொழில்கள் திறமையற்ற உதவாக்கரை கம்பனிகள்.இந்திய பெருங்கம்பனிகள் கொள்ளையடிக்கும் monopolies" என்றது எகானமிஸ்ட் 1985ல் ராஜிவ் அரசு சில தீர்திருத்தங்களை கொண்டுவந்தது.கம்ப்யூட்டர் இறக்குமதிக்கு அனுமதி,தொலை தொடர்பு துறையில் முன்னேற்றம்,லைசன்ஸ் ராஜில் தளர்த்தம் என சீர்திருத்தங்களை ராஜிவ் அரசு கொண்டுவந்தது.ராஜிவ் ஆட்சிக்கு பின்வந்த விபிசிங் ஆட்சி காலம் ஒரே கலாட்டா காமெடி ஆட்சிக்காலம் தான்.அவருக்கு பின்வந்த சந்திரசேகர் காலத்தில் மிகப்பெரும் தலைகுனிவு இந்திய பொருளாதாரத்துக்கு ஏற்பட்டது.பெட்ரோல் இறக்குமதி செய்ய காசில்லாமல் உலகின் எந்த நிதி நிறுவனமும் கடன் தர மறுத்த பின் ரிசர்வ் வங்கியில் இருந்த தங்கத்தை பாங் ஆப் இங்கிலாந்திடம் அடகுவைத்து கடன் பெற்ற கதையும் நடந்தது. அதன்பின் 1991ல் நரசிம்மராவ் ஆட்சிக்கட்டிலை ஏறினார்.மன்மோகன் சிங் நிதி அமைச்சரானார்.1992 ஜூலையில் இந்திய வரலாற்றை மாற்றி அமைத்த அதிநவீன பட்ஜெட்டை அறிமுகப்படுத்தினார்.சிங் பட்ஜெட்டை படிக்க படிக்க பங்கு சந்தை குறியிட்டு எண் விஷம் போல் ஏறியது.சோஷலிஸ்டுகளின் ரத்த அழுத்தம் அதை விட அதிக வேகத்தில் ஏறியது.தம் பரம்பரை பகைவன் இந்தியாவில் வேறூன்றி விட்டதை அவர்கள் அறிந்தனர்.புதிய ஒரு இறுதிப்போருக்கு அவர்கள் தயாராயினர்.ஆனால் சிங் பட்ஜெட்டை படித்து முடித்ததும் பொருளாதார நிபுணர்கள் ஆனந்தக்கண்ணீர் வடித்தனர்.புதிய இந்தியா 1992ல் பிறந்தது. வளர்ச்சி அடைந்த புதிய வல்லரசின்,மக்கள் நலன் பேணும் நல்லரசின் விதைகள் அன்று மன்மோகனாலும்,நரசிம்மராவாலும் விதைக்கப்பட்டன.நாரயணமூர்த்தி,ஆசிம் பிரேம்ஜி போன்றவர்களை உருவாக்கி,பல கோடி இளைஞர்களின் வாழ்வில் ஒளிவிளக்கை ஏற்றிவைத்தார் மன்மோகன்.மன்மோகன் ஏற்றிய ஒளிவிளக்கை சிதம்பரமும்,ஜஸ்வந்த் சிங்கும்,யஷ்வந் சின்காவும் அதன் பின் மீண்டும் சிதம்பரமும் அணையாமல் கொண்டு சென்றனர். இந்து வளர்ச்சி விகிதத்தை ஒழித்துக்கட்டி, நவீன இந்தியாவை படைத்த மன்மோகனுக்கு கோயில் கட்டி கும்பாபிஷேகம் நடத்தினாலும் நாம் அவருக்கு பட்ட நன்றிக்கடன் தீராது

46 comments:

Anonymous said...

சூப்பர். ரொம்ப நாளாச்சு இந்த மாதிரி நல்ல ஆர்டிகிள் நீங்க எழுதி. நல்ல தகவல். ஆமா? இதெல்லாம் நீங்க சமீபத்தில் படிச்சதா? இல்லை ஆரம்பத்துல இருந்து follow பண்ணிட்டு வந்து summary குடுக்கரீங்களா? Very impressive. One question? What was the most important thing Manmohan Singh changed that caused this? Is it the green signal for importing?
எல்லாம் சரி. தலைப்பு மட்டும் பாசிடிவா குடுத்து இருக்கலாமே. அதிர்ச்சி ஆயிட்டேன் தலைப்பைப் பார்த்து. Drawing attention? Keep up the good work.

Unknown said...

இப்போது தான் பிளாக்கர் கொஞ்சம் சரியாக வேலை செய்கிறது.எத்தனை பின்னூட்டங்களை விழுங்கியதோ தெரியலை

அஷ்லின்..மன்மோகன் செய்தது லைன்சன்ஸ் கன்ட்ரோல் ஒழிப்பு மற்றும் பன்னாட்டு நிறுவனங்களை அனுமதித்தது ஆகும்.இறக்குமதிக்கு முழு அனுமதி இல்லை எனினும் அதை தாராளமயமாக்கினார்

அப்புரம் இது நக்கலா பாராட்டான்னு தெரியலையே:-)))))

//ரொம்ப நாளாச்சு இந்த மாதிரி நல்ல ஆர்டிகிள் நீங்க எழுதி.//

Sivabalan said...

செல்வன்

நல்ல பதிவு.

1980 களில் இந்திய பொருளாதாரம் உலகில் முதல் பத்து இடங்களில் இருந்ததாக படித்த ஞாபகம்.

ஆனால். LMW போன்ற கம்பெனிகள் கானாமல் போனது 1992 பிறகு என நான் நினைகிறேன்.

செல்வன், விளக்கவும்.

VSK said...

பயனுள்ள, தேவையான பதிவு!

அது சரி, திங்கட்கிழமை உபவாசம், பாகிஸ்தான் போரின் போது லால் பஹதூர் சாஸ்திரி கொண்டு வந்ததல்லவோ?

மொரார்ஜி கொண்டுவந்தது தங்கக் கட்டுப்பாடு .

மொத்தப் பொற்கொல்லர்களையும், கண்ணகிக்குப் பின் அழித்த மஹான்!


Super title!!

Anonymous said...

செல்வன்,

நட்சத்திர வாரத்திற்கு என் வாழ்த்துக்கள்.

தலைப்பு - தமிழ் கட்டுரைகளுக்கே உண்டான குறும்பு,

சரி, மன்மோகனின் பொருளாதர கொள்கையை பாராட்ட சுதந்திர இந்தியாவின் அனைத்து பொருளாதார கொள்கைகளும் ஏதோ மடத்தனவை என்பது போல் எழுதியிருப்பது நம்பகத்தன்மையாக இல்லை. கொஞ்சம் விரிவாய் நடுநிலையாய் ( ????) எழுதியிருக்கலாம் என்று நினைக்கிறேன்.

அன்புடன்,
விக்னேஷ்

Unknown said...

சிவபாலன்,

இந்திய பொருளாதாரம் 1980'ல் 10 இடங்களுக்குள் எல்லாம் கிடையாது.G8 எனப்படும் உலகின் வளர்ந்த நாடுகள் தான் முதல் 8 இடங்களில்.அதன்பின் கிழக்காசியா,சீனா,வளைகுடா நாடுகள் என ஏராளமான நாடுகள் இருந்தன.

இந்தியா உலக வர்த்தகத்தில் 1% பங்கு கூட பெற்றதில்லை அப்போது.

எல்.எம்.டபிள்யு 80களில் தொடர்ந்து நலைவடைந்து கொண்டே வந்தது.போட்டியை தாக்குபிடிக்க முடியாமல் காணாமல் போய்விட்டது

Unknown said...

அன்பின் எஸ்.கே

அது மொரார்ஜி சொன்ன திட்டம் தான் என படித்திருக்கிறேன்.லால்பகதூர் காலத்தில் உணவுபஞ்சம் வந்த மாதிரி தெரியவில்லை.

தலைப்பை பார்த்து மனம் வருந்தாதீர்கள்.இம்மாதிரி நிறைய சித்து வேலைகள் இந்தியாவில் நடந்துள்ளன.இப்போதும் பாட புத்தகங்களில் அப்படித்தான் குறிப்பிடப்படுகிறது.

Unknown said...

அன்பின் விக்னேஷ்

கட்டுரை இப்போதே நீளம் அதிகம் என நினைக்கிறேன்.50 ஆண்டு பொருளாதார வரலாற்றை எத்தனை பதிவுகள் போட்டாலும் விளக்க முடியாது.சுருக்கமாக ஒரு introduction only கொடுத்துள்ளேன்.

மற்ற பொருளாதார கொள்கைகள் குறித்து குறிப்பாக communisam பற்றி பேசவில்லை.நேருவின் சோஷலிசம் பற்றி mixed economy எனும் economic மாடல் பற்றித்தான் எழுதினேன்.

நன்றி விக்னேஷ்

Sivabalan said...

நன்றி!! செல்வன்.

Unknown said...

அஷ்லின்

பணத்தில் மட்டுமே குறியாய் இருக்க கூடாது.சமூக பொறுப்புணர்வும் வேண்டுமாக்கும்.என்னோட ரம்ப கட்டுரைகளில் சமூக பொறுப்புணர்வு இருந்ததாக்கும்..(எப்படி சமாளிச்சேன் பாத்தீங்களா?.:-))))

Unknown said...

டாலர் போட்டது தமிழ்மணத்துல இன்னொரு செல்வன் இருப்பதால்.நிறையபேர் குழம்பி போயிட்டாங்க.அதான் டாலர் போட்டுகிட்டேன்.

//மன்மோகன் சிங் கிட்ட வந்து புது பொருளாதாரக் கொள்கையை சீர்திருத்த சொன்னாங்களாம், அதுக்கு அவர் "அந்த பேச்சுக்கே இடம் இல்லை" நு சொல்லிட்டாராம் :))) ஜோக்கு!!! //

இதெல்லாம் ஜோக்குன்னு எந்த மடையன் சொன்னது?:-)))

Anonymous said...

நன்றாக இருக்கு.ஆனா நீளம் அதிகம்.இரண்டு பகுதியாக வெளியிடலாம்

Unknown said...

Thanks gopal.It would have been difficult for people to remember two parts,hence I published it as one part itself

(sorry no tamil computer is availaible now)

Machi said...

சும்மா சொல்லக்கூடாது, தலைப்பு ஈர்க்கும் படியா உள்ளது. :-)
பதிவும் நன்று. (தலைப்பு தான் ஈர்க்குதா சரக்கு எப்படின்னு கேட்பீங்கில்ல :-)) )
பொருளாதாரம் பற்றி நிறைய எழுதுங்க.

விண்ணப்பம்:- இதை ஒரு தொடர் பதிவாக போடவும்.

Unknown said...

குறும்பன்
தலைப்பை எப்போதும் கோக்குமாக்காக வைத்து வாங்கிக் கட்டிக்கொள்வது எனக்கு வழக்கம் தான்:-)).

ஆனான் நீங்க என்னை விட குறும்பர் தான்.

//தலைப்பு தான் ஈர்க்குதா சரக்கு எப்படின்னு கேட்பீங்கில்ல :-)) )//

இப்படி ஒரு கேள்வியை நீங்களே கேட்டுகிட்டு பதில் சொல்லாம சிரிச்சுட்டு போனா நியாயமா,தருமமா?:-)))

ஜோக்குங்க....தொடர்பதிவா எழுதுங்கன்னு சொன்னப்பவே புடிச்சதுன்னு தெரிஞ்சுகிட்டேன்.நன்றி..

இதை விரிவாக வரும் வாரங்களில் எழுதிகிறேன்.

நன்றி குறும்பன்

Chellamuthu Kuppusamy said...

செல்வன், அனைத்துப் பின்னூட்டங்களையும் இன்னும் நான் படிக்கவில்லை. இருப்பினும் உங்கள் பார்வையை த் தெளிவாக விவரித்துள்ளீர்கள். பாராட்டுகள்.

-குப்புசாமி செல்லமுத்து

Unknown said...

நன்றி குப்புசாமி செல்லமுத்து.பதிவின் நீளம் தான் சற்று அதிகமாக போட்டுவிட்டேன் என தோன்றுகிறது.

நன்றி

செல்வன்

Anonymous said...

இதுபோல யாரையாவது திட்டி யாரையாவது வாழ்த்தினால்தான் வளர முடியும் போல

ஏதோ தண்டத்துக்கு எழுதின போல இருக்கு

வெற்றி said...

செல்வன்,
நல்ல பதிவு.

நன்றி.

அன்புடன்,
வெற்றி

Unknown said...

கருத்துக்கு நன்றி அனானி சகோதரரே,

நாம் எப்போதும் கெட்டதை திட்டுவோம்.நல்லதை வரவேற்போம்.அப்போதுதான் சமூகம் வளரும்.

இடிப்பார் இலா ஏமரா மன்னன்
கெடுப்பாரிலனும் கெடும்

நன்றி அனானி

Unknown said...

வாருங்கள் வெற்றி.

உங்கள் கருத்துக்கு என் நன்றி.

அன்புடன்
செல்வன்

dondu(#11168674346665545885) said...

சில பொருட்குற்றங்கள்.

திங்கட்கிழமை விரதம் லால் பஹதூர் சாஸ்திரி அவர்கள் சமீபத்தில் 1965-ல் கொண்டு வந்தது, இந்திய பாக்கிஸ்தான் யுத்தம் சமயத்தில். அப்போது மொரார்ஜி அவர்கள் பதவியிலேயே இல்லை. அதே காலக் கட்டத்தில் வியாழன் அன்று உபவாசத்தை தமிழக அப்போதைய முதல் மந்திரி பக்தவத்சலம் அவர்கள் கொண்டு வந்தார்.

1962-ல் இந்தோ சைனா யுத்தத்தின்போது தங்கக் கட்டுப்பாடு வந்தது, 22 கிராமுக்கு பதில் 18 கிராம் சுத்த தங்கம் என்று வந்தது. அப்போது நிதி மந்திரி மொரார்ஜி தேசாய் அவர்கள். ஆனால் எல்லோரும் கூறுவது போல அவர் மட்டும் அதற்கு பொறுப்பில்லை. அவர் நேருவின் கீழ் மந்திரி. மீதியை உங்கள் ஊகத்துக்கே விட்டு விடுகிறேன்.

1977-லிருந்து 1979 வரைதான் ஜனதா கட்சி பதவியிலிருந்தது. அந்த இரண்டு ஆண்டுகளில் விலைவாசி கட்டுப்பாட்டில் வந்தது என்பதை நான் நேரடியாகப் பார்த்தவன் என்ற முறையில் அறிவேன். வேறு பல அரசியல் காரணங்களால் நாடின் நிர்வாகம் மறுபடியும் சர்வாதிகாரி இந்திராவிடம் சென்றது.

"லால்பகதூர் காலத்தில் உணவுபஞ்சம் வந்த மாதிரி தெரியவில்லை."
உங்களுக்கு தெரிந்தது அவ்வளவுதான். பி.எல். 480-ல் அமெரிக்க கோதுமை வந்துதான் அறுபதுகளில் நம்மைப் பஞ்சத்திலிருந்து காப்பாற்றியது. கோதுமையை இந்திய ரூபாயில் அமெரிக்கர் தந்தனர். அந்த ரூபாய்களை மார்க்கெட்டில் விட்டிருந்தால் இந்தியப் பொருளாதாரமே சீரழிந்திருக்கும். அதை செய்யாமல் வெறுமனே ரூபாய்களை அப்படியே வைத்திருந்தது அமெரிக்கா. அதற்கு நன்றி எல்லாம் இந்தியா கூறாது, சோவியத் யூனியனோடு சேர்ந்து கொண்டு ஐ.நா. பொதுச் சபையில் அமெரிக்காவை வசை பாடியது.

அதெல்லாம் வேறு கதை. உங்கள் பதிவில் உள்ள பொருட்குற்றத்தை சுட்டிக் காட்டிக் கொள்வதுடன் நிறுத்திக் கொள்கிறேன்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

மன்மோஹன் சிங் ஒன்றும் புதிதாகச் செய்யவில்லை. மாமேதை ராஜாஜி அவர்களது சுதந்திரக் கட்சியின் திட்டங்களைத்தான் அவர் நிறைவேற்றினார்.

இது பற்றி ராஜாஜி பற்றிய என் பதிவுகளில் கூறியுள்ளேன்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

Unknown said...

டோண்டு ஐயா

மொரார்ஜி தேசாய் காலத்தில் உபவாசம் என்று நான் சொன்னது தப்பு என்று நீங்கள் சொன்னதன் மூலம் ஊர்ஜிதமாகிறது.மந்திரியாக இருந்த காலத்தில் தான் உண்ணாவிரத ஐடியா வந்தது என்பதை போட்டு குழப்பிவிட்டேன் போலிருக்கிறது.பிழையை சுட்டிக்காட்டிய உங்களுக்கும் எஸ்.கேவுக்கும் நன்றி.

தங்ககட்டுப்பாடு பற்றி நான் எழுதவில்லை.பதிவின் நீளம் அதிகமாகிவிடும் என்பதால்.ஒரு காலகட்டத்தில் நேருவின் பஞ்சசீல கொள்கையை பேசி,பேசியே நாம் உருப்படாமல் போய்விட்டோம்.சுயநலவாத கொள்கையை கடைபிடிக்காமல் நீதி நேர்மை என்று பேசியே நாம் 45 ஆண்டுகளை வீணடித்து விட்டோம்.

மன்மோகன் பொருளாதார கொள்கையை கொண்டுவந்தபின் பொற்கொல்லர்களும் தங்கவியாபாரிகளும் தான் முதலில் பட்டாசு வெடித்தனர்.வெளிநாட்டு இந்தியர்கள் ஐந்துகிலோ தங்கம் கொண்டுவரலாம் என்று அவர் சொன்னது அப்போது பரபரப்பாக பேசப்பட்டது

அன்புடன்
செல்வன்

Unknown said...

ஆம்.ராஜாஜியின் தாராள பொருளாதார கொள்கைகளை அப்போதைய கம்யூனிஸ்டுகள் எதிர்த்தனர்.1967ல் திமுக கூட்டணியில் சுதந்திரா கட்சி சேர அவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததாக ஞாபகம்.

வவ்வால் said...

வணக்கம் செல்வன்!

இந்த பதிவு எனக்கு ஏமாற்றத்தையே தருகிறது! ஒரு தலைப்பட்சமாக பிட்ஸா சாப்பிடும் மேல் தட்டு வர்க்கத்தின் பொருளாதார பார்வையாக உள்ளது!

விளக்கமாக சொல்ல வேண்டிய நிலை ஆனால் எங்கே மட்டையடிகிறான் என முத்திரை குத்தப்படுமோ என தயக்கம் தடுக்கிறது! எனினும் சில கருத்துகளை சொல்லாமல் இருக்க முடியாதே!

//ஒரு உதாரணம் சொல்ல வேண்டுமெனில் 1960ல் இருந்து 1992 வரை ஒரே வடிவமைப்பில் வந்த அம்பாசிடர் காரை குறிப்பிடலாம்//

இதில் அம்பாசிடர் வியாபார ரீதியாக தன்னை மாற்றிக்கொள்ளவில்லை என்று பார்ப்பது தவறு நெல்லை இருட்டு கடை அல்வா கேள்விப் பட்டு இருக்கிறீர்களா, அகர்வால் இனிப்பகம்,ச்ரி கிருஷ்ணா இனிப்பகம் போன்று எல்லாம் அலங்காரமாக இருக்காது ஆனால் திருநெல்வேலி அல்வா என்றால் இருட்டு கடை அல்வா தான்.ஏன் அவர்கள் அழகான கடை கட்டவில்லை,காரணம் கொள்கை முடிவு,ஒரு பாரம்பரியம் காப்பது என்ற எண்ணம்!

ஹார்லீ டேவிட்சன் மோட்டார் சைக்கிள்,ரோல்ஸ் ராய்ஸ் கார், போன்றவையின் சிறப்பு என்ன தெரியுமா ,மோட்டார் வாகன தயாரிப்பில் அசெம்பிலி லைன் என்ற தானியங்கி வாகன தயாரிபை ஜெனரல் மோட்டார்ஸ் கொண்டு வந்து புரட்சி செய்தார்கள்,ஆனால் இன்று வரை மனிதர்களை கொண்டே இந்த இரண்டு வாகனங்களும் தயாரித்து பொருத்தப்படுகிறது.ஏன் அவர்களுக்கு தொழில் நுட்பம் தெரியாமல் போய்விட்டதா? அவர்கள் தங்கள் தனி தன்மையை தொடர்ந்து வைத்திருக்க விரும்புபுகிறார்கள்,வாங்குவதற்கும் ஆட்கள் இருக்கிறார்கள்.ரோலக்ச் கைக்கடிகாரங்களும் அப்படியே கையால் தயாரிக்கப்படும் எந்திர வகை அவை.இந்த மூன்று நிறுவனங்களும் இந்தியாவில் இல்லை.

வியாபார உலகத்திலும் தங்கள் அடையாளம் இழக்காமல் இருக்க அம்பாசிடர் விரும்புகிறது.அதனை வாங்க விரும்பும் மக்களும் இருக்கிறார்கள்.இந்திய மோட்டார் வாகனங்களின் பாரம்பரிய அடையாளம் அம்பாசிடர்.அதனை பொருளாதார கொள்கையுடன் சம்பந்த படுத்துவது தவறான பார்வையே! அம்பாசிடர் கார்களை தயாரிப்பது பிர்லா குழுமம் அவர்கள் நினைத்தால் எந்த வடிவிலும் தயாரிக்க தங்களை மாற்றிக் கொள்ள முடியும்.தங்களை வித்தியாசபடுத்திக்காட்டவே அதே மாடலில் தயாரிக்கிறார்கள்.இதே வடிவுல் அம்பாசிடர்கார்கள் இங்கிலாந்திற்கு ஏற்றுமதி கூட ஆகிறது காரணம் இதன் வடிவம்! பழமையானது என்பதாலே!

தரம் குறைவானவை போல சொல்கிறீர்கள் பஜாஜ்,லாம்ப்ரட்டா போன்றவை உண்மையில் அந்த வண்டிகள் உழைத்த அளவுக்கு இப்போதைய வண்டிகள் உழைப்பதில்லை என்பதை அவற்றை பயன்படுத்தியோரை கேட்டால் சொல்வார்கள்.

//இந்திரா காந்தி கிட்டத்தட்ட தொழில் துறையை முடித்தே கட்டினார் என்றுதான் சொல்ல வேண்டும்.தேசியமயமாக்கல் என்பதை ஒரு வெறியோடு அவர் செயல்படுத்தினார்.எல்.ஐ.சி,வங்கிகள் ஆகியவை அரசுமயமாக்கப்பட்டன//

வங்கிகள் தேசிய மயமாக்கப்பட்டது உண்மையில் ஒரு புரட்சி.அந்த காலத்தில் வங்கிகள் ஒரு சில சமூக மக்களின் வங்கியாகவே செயல்பட்டு வந்தன.சாதாரண குப்பனும் ,சுப்பனும் கடன் வாங்குவது ,ஏன் கணக்கு துவங்கவே முடியாது.தற்போது தமிழ் நாடு மெர்கண்டைல் வங்கி எப்படி செயல் படுகிறது,அதில் கணக்கு வைத்து இருப்போர் கடன் வாங்கியோர் எனப் பார்த்தால் அது ஒரு சமூக மக்களுக்காகவே செயல் படுவது புரியும்.அதே போன்ற ஒரு நிலையை ஒழித்து அனைவருக்கும் சம வாய்ப்பு ஏற்படுத்தியவர் தான் இந்திராகாந்தி!

இதனாலேயே மன்னர் மானியம் ஒழிப்பு வங்கிகள் தேசியமயமாக்களுக்கு பிந்திய பொது தேர்தலில் இந்திரா அமோக வெற்றி பெற்றார்!

சில பன்னாட்டு நிறுவங்களை வெளியெற்ற காரணம் அவர்களின் தேச விரோத நடவடிக்கையே, இந்தியாவில் இருந்த ஷெல் எண்ணை நிறுவனம் பங்களாதேச போரின் போது அமெரிக்க அரசின் பேச்சை கேட்டு இந்தியா ராணுவத்திற்கு எரி பொருள் தரமால் காலை வாரியது எனவே தான் பதில் நடவடிக்கையா அந்நிறுவனம் துறத்தப்பட்டு ONGC துவங்கப்பட்டது!

உண்மையில் நேரு ,இந்திரா கால கட்டத்தில் தான் இந்தியா முழுதும் பெரிய ,அணைக்கட்டுகள்,பன்னோக்கு திட்டங்கள் ,தொழிற்சாலைகள் கொண்டுவரப்பட்டது. தனியார்கள் மிக அதிகமாக லாப நோக்கோடு தான் செயல்படுகிறார்கள் எனவே அவர்கள் எல்லா துறைகளிலும் தொழில் துவங்க முன்வருவதில்லை எனவே அரசின் செயல் பாடு தேவைப்படுகிறது.

இந்தியா சுதந்திரம் அடைந்த போது அனைத்து தொழில்களிலும் பின் தங்கி பொருளாதாரம் பலவீனமாக இருந்தது முதலில் அதனை நாமே சீரமைத்த பிறகே இப்போது உள்ளது போல் ஒரு திறந்த சந்தை நிலைக்கு போக முடியும்.எனவே அவரிகள் செய்தது இந்தியாவை சீரமைத்த பணியே, அந்த அடித்தளத்தின் மீதே இப்போது நமது பொருளாதாரம் வளர்ந்து நிற்கிறது!

தற்போதையா திறந்த சந்தை தான் சிறந்தது என்பது போல் ஒரு கருத்து சொல்லி இருக்கிறீர்கள் அதனை விவாதிக்க போனால் நீண்டு விடும் பிறிதொரு சந்தர்பத்தில் விரிவாகா பேசலாம்!

இந்தியா பொருளாதாரத்தை முடக்கினார்கள் என்பது உண்மை தெரியாமல் தற்போதைய ஆங்கில பத்திரிகைகளில் வரும் பொருளாதார கட்டுரைகளை படித்து அப்படியே எழுதினால் இப்படி தான் இருக்கும்.

Unknown said...

விரிவான பின்னூட்டத்துக்கு நன்றி வவ்வால்.

இதற்கு விரிவாக நாளை பதில் சொல்கிறேன்.நேரம் நள்ளிரவை தாண்டிவிட்டது.இருப்பினும் இப்போது ஒரு சில வைக்கிறேன்.

அம்பாசிடர் கம்பனி மாறாமல் இருக்க காரணம் பாரம்பரியம் என்றீர்கள்.ஆனால் இந்தியாவில் இருந்தது அதுவும் பியட்டும் மட்டுமே.பியட்டும் தன் மாடலை மாற்றிக் கொள்ளவில்லை.100 கோடி மக்கள் தொகை கொண்ட நாட்டில் இரண்டே இரண்டு மாடல்க் கார்கள் 40 வருடமாக விற்றுள்ளன.இதே காலகட்டத்தில் உலக கார்சந்தை எப்படி வளர்ந்தது என பாருங்கள்.டயோட்டா கம்பனி இன்று எப்படி உள்ளது,ஹூண்டாய் எப்படி உள்ளது(இந்த கம்பனிகள் அம்பாசிடர் கம்பனிக்கு பிறகு துவங்கப்பட்டவை)

வங்கிதேசிய மயம் வங்கிகளின் வளர்ச்சியை முடக்கியது.ஸிடிவங்கி,பாங்க் ஆப் அமெரிக்கா போன்ற வங்கிகள் எப்படி வளர்ந்தன என்று பாருங்கள்.குப்பனுக்கும் சுப்பனுக்கும் லோன் தரவேண்டியதுதான்.வேண்டாம் என்று சொல்லவில்லை.அரசு பின் எதற்கு இருப்பது?ஒரு சில வங்கிகளையாவது தனியார் வசம் விட்டு வைத்திருக்கலாமே?ரிசர்வ் வங்கியின் பல கட்டுப்பாடுகள் இருந்த ஒரு சில தனியார் வங்கிகளையும் முடக்கிதான் வைத்திருந்தன.

Unknown said...

செல்வன், நல்ல கட்டுரை. எந்தெந்த பொருட்களை வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்வது என்பது கவனமாக முடிவெடுக்கவேண்டிய ஒன்று. அமெரிக்கா இந்த விஷயத்தில் சாமர்த்தியமாக இயங்கும். இந்தியாவைப்பொறுத்தவரை காரை இறக்குமதி செய்யலாம், உணவுப்பொருட்களை ஏகத்துக்கு இறக்குமதி செய்தால் ஆந்திராவில் நடந்தமாதிரி விவசாயிகள் தம் விளைபொருட்களை விற்கமுடியாமல் தற்கொலை செய்துகொள்வார்கள். உலகமயமாக்கம் என்பது அணையை திறந்துவிடுவதுபோல. வெளிப்படும் காட்டாற்று வெள்ளத்தில் இடைப்படுபவை எல்லாம் நாசமாகும்.

மன்மோகன்சிங் IT துறையை வளர்க்க பெரிதும் உதவினார், ஒத்துக்கொள்கிறேன். ஆனால், அதே மன்மோகன்சிங் இப்போது 50% இட ஒதுக்கீட்டுக்கும் கையெழுத்து போட்டிருக்கிறாரே. இட ஒதுக்கீடு அவசியம் தேவை. ஆனால் இப்போது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளவாறு செய்வதால் உள்ள பிரச்சனைகளை இந்த பதிவில் சொல்லியிருந்தேன்.

http://silandhivalai.blogspot.com/2006/04/blog-post.html

அவர் வாக்கு கொடுத்திருப்பதுபோல் IIT, IIM, AIIMSல் இடங்களை அதிகரிக்காவிட்டால, அல்லது தனியார் நிறுவனங்களில் இட ஒதுக்கீட்டை force செய்தால், இப்போதுள்ள 7%, 8% GDP வளர்ச்சி தொடர்ந்து நிலைக்குமா என்பது சந்தேகமே.

Muthu said...

செல்வன்,

ஒரு வரலாற்று பார்வையை தந்துள்ளீர்கள்.ஆனால் ஒரு பக்கச்சார்பாக உள்ளது. தவறில்லை.ஆனால் எதிர்சைடில் உள்ள எந்த ஒரு நியாயத்தையும் கணக்கில் எடுக்காமல் எழுதப்பட்டுள்ளது.

ஆனால் மிகவும் தேவையான ஒரு பதிவு. என்னை போன்றவர்களுக்கு ஆர்வமூட்டும் வகையில் எழுதப்பட்டுள்ளது.வாழ்த்துக்கள்

Unknown said...

அன்பின் வெங்கட்

விவசாயிகள் முன்பு தம் விளைபொருட்களை ஏற்றுமதி செய்வதிலிருந்து தடுக்கப்பட்டனர்.பஞ்சு விவசாயிகள் பஞ்சை ஏற்றுமதி செய்ய முன்பு மில் அதிபர்கள் அரசிடம் பேசி தடை பெற்றுக்கொண்டிருந்தனர்.வெங்காயம்,உணவுபொருட்கள் ஏற்றுமதி செய்ய தடை இருந்ததால் விவசாயிகள் வாழ்வு சீரழிந்தது என்பதுதான் உண்மை.

நீங்கள் சொன்னதுபோல் எதை இறக்குமதி செய்கிறோம் என்பதை பார்த்து தான் செய்யவேண்டும்.தடை இல்லா வாணிகத்தை நான் வலியுறுத்தவில்லை.அதீத கட்டுப்பாடுகளையே சுட்டிக்காட்டினேன்.

இடஒதுக்கீடு பற்றி இந்த பதிவில் ஏதும் சொல்லவில்லை ரமணி அவர்களே.பொருளாதாரம் குறித்தே பேசினேன்.ஐ.ஐடிக்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது ஒருவிதத்தில் நல்லதுதான்.ஆனால் தகுந்த infrastructure ஏற்படுத்த வேண்டியது அவசியம்.இன்னும் அதிக ஆசிரியர்களை நியமித்து அதிக நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்.அதிக ஐ.ஐ.டிக்கள் உருவானால் இந்திய தொழில்துறைக்கு நல்லதுதானே?

உங்கள் பதிவை படித்து என் கருத்தை இடுகிறேன்.

நன்றி வெங்கட்

அன்புடன்
செல்வன்

Unknown said...

அன்பின் முத்து,

நன்றி.முன்பிருந்த பொருளாதார மாடலின் குறைகளையே பட்டியலிட்டேன்.நிறைகளும் இருந்தன.ஆனால் என்னை பொறுத்தவரை நாம் அதன் மூலம் அடைந்த வளர்ச்சி போதவே போதாது என்றே சொல்வேன்.3.5% வளர்ச்சி 40 வருடமாக தந்த ஒரு பொருளாதார கொள்கையை விமர்சிக்கும் போது குறைபாடுகளே அதிகம் கண்ணுக்கு தென்படும்.இதன் இன்னொரு பகுதியை அடுத்த வாரம் இட்டு நிறைகளை எழுதுகிறேன்.சுட்டிக்காட்டியதற்கு நன்றி முத்து.

வவ்வால் said...

வணக்கம் செல்வன்!

பியட் கார்கள் பற்றி சொல்ல நினைத்தேன் நீளம் கருதியே தவிர்த்தேன். அந்த காலத்திலேயே இத்தாலிய பியட் நிறுவனத்துடன் கூட்டாக இந்தியாவில் துவங்கப்பட்ட ஒன்று பியட். அவர்களும் புதிய மாடல் எல்லாம் விட்டு பார்த்து விட்டு இப்போது தயாரிப்பையே நிறுத்தி விட்டார்கள்.சியல்லோ கார் அந்நிய கூட்டில் புதிய மாடலில் தான் தயாரிக்கப்பட்டது மூடிவிட்டு போகவில்லையா. ஆனால் அம்பாசிடர் இன்றும் லாபகரமாக இயங்குகிறது. தனித்தன்மை இழக்காமல் இருப்பதும் தேவையே.

இந்த இரண்டை தவிர வேறு உற்பத்தியாளர்கள் முன் வரவில்லை காரணம் அப்போதைய இந்தியர்களின் வாங்கும் சக்தி அவ்வளவு தான்.இடையில் கொஞ்ச காலம் ஸ்டாண்டர்டு மோட்டார்ஸ் வந்தது ,இதன் நிறுவனர் நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி சந்திரசேகரின் மகன் ஆனால் தொடர்ந்து செயல் படமுடியாமல் மூடப்பட்டது.எனவே சந்தை நிலவரம் ,வாங்கும் திறன் எல்லாம் பார்க்காமல் தயாரித்து விட முடியாது,தற்போது தான் காலம் கனிந்து வருகிறது இந்தியா பக்கம் எனவே பொத்தாம் போதுவாக அந்த காலத்தில் குட்டி சுவராக ஆக்கிவிட்டார்கள் என்பது சரியல்லவே.

எனவே அந்த காலகட்டத்தில் பல கார் தயாரிப்பு நிறுவனங்களை துவக்குவது வணிக ரீதியாக லாப கரமாக இல்லை.இப்போது வேறு பல மாடல்கள்,விலைகளில் தேவை ஏற்பட்டுள்ளது எனவே சாத்தியமாகிறது.டொயொட்டா போல ஏன் வளரவில்லை எனக்கேட்கலாம் நாம் மோட்டார் வாகன தயாரிப்பில் ஆராய்ச்சி,மற்றும் மேம்பாட்டில் முதலீடு செய்யவில்லை. ஒரு மாடல் எந்திரத்தை தயாரிக்க ராயல்டி கொடுத்து வாங்கியே தாயாரிக்க பழகி விட்டோம் ,தயாரிப்பு உரிமை தரும் போது சில கட்டுப்பாடுகள் விதித்தே தருவார்கள் எனவே தான் பெரும்பாலும் ஏற்றுமதி செய்ய முடியவில்லை.நமது எந்திரங்களின் குதிரை திறனும் குறைவு.

டாடா கனரக வாகனத்தின் எந்திரம் பென்ஸ் வடிவமைப்பு,அஷோக் லெய்லான்ட் ,லெய்லான்ட் பிரிட்டன் வடிவமைப்பு அம்பாசிடர் ரினால்ட் ,வடிவைப்பு ,பியாட் இத்தாலிய பியாட் வடிவமைப்பு, மாருதி சுசுகி ஜப்பான் வடிவமைப்பு ,இப்போது தான் கொஞ்சம் சுயமாக வடிவமைக்க துவங்கி உள்ளோம் டாடா இன்டிகா போன்ற கார்களை.மோட்டார் சைக்கிள்களில் பஜாஜ்,TVS மட்டுமே சுயமாக வடிவமைக்கின்றன.

இவர்களும் ஆரம்பத்தில் இரவல் வடிவமைப்பை தான் நம்பி இருந்தார்கள்! அயல் நாட்டு வடிவமைப்பிற்கு தர வேண்டிய உரிமத்தொகை அதிகம் ஆகவே சொந்தமாக வடிவமைக்க ஆரம்பித்தார்கள்.சொந்த வடிவமைப்பு சிக்கனமா வெளியில் வாங்கி தயாரிப்பது சிக்னமா எனப்பார்த்து இவ்வாறு மாறிக்கொள்கிறார்கள். எனவே சந்தை நிலவரத்திற்கு ஏற்ப தான் செயல் பட முடியும் ஒரு நிறுவனம். அதிகம் மக்கள் வாங்கும் போது துணிந்து பல மாடல்கள் தயாரிக்க முதலீடு செய்ய முன்வருவார்கள். அந்த காலத்தில் இதனாலேயே சாத்தியப்படவில்லை இவை எல்லாம்

Prabu Raja said...

//மன்மோஹன் சிங் ஒன்றும் புதிதாகச் செய்யவில்லை. மாமேதை ராஜாஜி அவர்களது சுதந்திரக் கட்சியின் திட்டங்களைத்தான் அவர் நிறைவேற்றினார்.//

யார் திட்டத்தை யார் நிரைவேற்றினால் என்ன? இடையில் பல பேர் செய்யாததை செய்திருக்கிறாரே.

இந்தியர்கள் செய்த நல்வினைகள் 1991ல் ஒரு அரசியல்வாதி அல்லாத பொருளாதார நிபுணர் நிதி அமைச்சராக வர உறுதுணையாய் இருந்தது.

இதை அரசியல் கண்ணோட்டத்தில் பார்க்கத் தேவையில்லை.

1991ல் இந்திய பொருளாதாரம் எப்படி இருந்தது என்பது எல்லோருக்கும் தெரியும்.

செல்வன் அவரை பாராட்டுவதில் தவறேதும் இருப்பதாய் தெரியவில்லை.

Anonymous said...

நான் 1978 இரண்டும் சிறு தொழில்கள் கோவையில் தொடங்கினேன். தொழில் என்றால் தொலைபேசி இல்லாமல் இயலுமா> ஆயிரம் ருப்பாய் முன்பணம் கட்டி விண்ணப்பி்த்தேன்.

1988 ல் அமெரிக்கா புலம் பெயரும் வரையில் தொலைபேசி வரவில்லை.
கொடுமை இதனினும் உண்டோ?

ஒரு பக்கம் பொருளுக்கு தேவை உள்ளது. அதை செய்யும் தொழில் நுணுக்கமும் உள்ளது, இருந்தும் ஏன் செய்யப்படவில்லை. அதுவே அரசின் தொழிற்கொள்கை. பணம் இல்லை என்றால் நான் கட்டிய 1000 எவன் சாப்பிட்டான்?

இன்று நரிக்குறவனிடம் கூட அலைபேசி.

இது மாயமோ மருட்கைத்தே!!
---------
வேந்தன் அரசு
சின்சின்னாட்டி
(வள்ளுவம் என் சமயம்)
--~--~---------~--~----~------------~-------~--~----~

Unknown said...

அன்பின் வவ்வால்

//சில பன்னாட்டு நிறுவங்களை வெளியெற்ற காரணம் அவர்களின் தேச விரோத நடவடிக்கையே,//

முழு உண்மை.சில பன்னாட்டு நிறுவனங்கள் அப்படி செய்தது உண்மைதான்.அப்படிப்பட்ட சமயங்களில் சம்பந்தப்பட்டவர்களை கைது செய்தால் கூட தப்பில்லை.உதாரணத்துக்கு போபால் சம்பவத்துக்கு காரணமான பன்னாட்டு கம்பனி நிர்வாகத்தை சொல்லலாம்.ஆனால் அனைத்து பன்னாட்டு நிறுவனங்களும் அப்படி அல்ல.உதாரணத்துக்கு கோக் ஐபிஎம் ஆகிய கம்பனிகளை இந்தியாவை விட்டு துரத்தியதற்கு எக்காரணமும் இல்லை.

//உண்மையில் நேரு ,இந்திரா கால கட்டத்தில் தான் இந்தியா முழுதும் பெரிய ,அணைக்கட்டுகள்,பன்னோக்கு திட்டங்கள் ,தொழிற்சாலைகள் கொண்டுவரப்பட்டது.//

அணைகள் சரி.ஆனால் அவர்கள் துவக்கிய பல கம்பனிகள் நஷ்டத்தில் மூழ்கின.இந்திய பொதுதுறை நிறுவனங்கள் வெள்ளை யானை என்று பல கமிட்டிகள் சொல்ல்யிருக்கின்றன.மக்கள் வரிபணம் பல்லாயிரம் கோடிகளை இவை விழுங்கியுள்ளன.

//பியட் கார்கள் பற்றி சொல்ல நினைத்தேன் நீளம் கருதியே தவிர்த்தேன். அந்த காலத்திலேயே இத்தாலிய பியட் நிறுவனத்துடன் கூட்டாக இந்தியாவில் துவங்கப்பட்ட ஒன்று பியட். அவர்களும் புதிய மாடல் எல்லாம் விட்டு பார்த்து விட்டு இப்போது தயாரிப்பையே நிறுத்தி விட்டார்கள்.சியல்லோ கார் அந்நிய கூட்டில் புதிய மாடலில் தான் தயாரிக்கப்பட்டது மூடிவிட்டு போகவில்லையா. ஆனால் அம்பாசிடர் இன்றும் லாபகரமாக இயங்குகிறது. தனித்தன்மை இழக்காமல் இருப்பதும் தேவையே.///

45 ஆண்டுகளாக தனிக்காட்டு ராஜாவாக இருந்த சந்தையில் ஒரு நிறுவனம் லாபம் சம்பாதிப்பதிலும்,விசுவாசமான வாடிக்கையாளர்களை சம்பாதிப்பதிலும் அதிசயமில்லை வவ்வால்.இந்திய ஆட்டொமொபைல் சந்தையே அம்பாசிடர் எனும் ஒரே கம்பனி தயாரித்த ஒரே மாடலுக்குள் அடங்கிவிட்டதே என்ற வருத்தம் எனக்கு அதிகம் உண்டு.நிரைய கம்பனிகள் இருந்திருந்தால் இன்று இந்திய சந்தையில் இத்தனை வெளிநாட்டு கார்கள் வந்து குவிந்திருக்காது அல்லவா?

நான் குற்றம் சாடுவது அம்பாசிடர் மீது மட்டும் அல்ல.அதற்கு காரணமான பொருளாதார கொள்கையையே.

///டொயொட்டா போல ஏன் வளரவில்லை எனக்கேட்கலாம் நாம் மோட்டார் வாகன தயாரிப்பில் ஆராய்ச்சி,மற்றும் மேம்பாட்டில் முதலீடு செய்யவில்லை. ஒரு மாடல் எந்திரத்தை தயாரிக்க ராயல்டி கொடுத்து வாங்கியே தாயாரிக்க பழகி விட்டோம் ,தயாரிப்பு உரிமை தரும் போது சில கட்டுப்பாடுகள் விதித்தே தருவார்கள் எனவே தான் பெரும்பாலும் ஏற்றுமதி செய்ய முடியவில்லை.நமது எந்திரங்களின் குதிரை திறனும் குறைவு.///

இது அனைத்துக்கும் காரணம் என நான் சொல்வது நாம் பின்பற்றிய தவறான பொறுளாதார கொள்கையே.

நன்றி வவ்வால்

Unknown said...

இந்தியர்கள் செய்த நல்வினைகள் 1991ல் ஒரு அரசியல்வாதி அல்லாத பொருளாதார நிபுணர் நிதி அமைச்சராக வர உறுதுணையாய் இருந்தது.

இதை அரசியல் கண்ணோட்டத்தில் பார்க்கத் தேவையில்லை.///

முற்றிலும் உண்மை பிரபுராஜா.இந்தியா செய்த பெரும்பேறு நிதி மன்மோகன் அமைச்சராக வந்தது.அவர் இல்லாவிட்டால் இன்போசிஸ்,சத்யம்,விப்ரோ என எதுவும் இல்லை.

நன்றி பிரபுராஜா.

Anonymous said...

பொருளாதாரக் கொள்கைகள் பற்றியோ, பங்குச்சந்தை, வளர்ச்சி விகிதம் பற்றியோ துறைசார் அறிவு இல்லாத எம்மைப்போன்ற பாமரன் முதலில் படிக்கும்போது வியப்பாக இருந்தது. நல்ல பொருளுடன் கூடிய பதிவு. பின்னர் வவ்வால், வெங்கட்ரமணி ஆகியோரின் மாற்றுக்கருத்துக்களுடன் மீண்டும் வாசிக்கும் போது கொஞ்சமாவது நாட்டு நடப்பு புரிகிறது. ஏதோ எழுதனும்கிறதுக்காக போறபோக்கில் பொகையப் போட்டுட்டு போகாம இந்த மாதிரி தேவையான விசயங்களை எழுதுவதற்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். மொரார்ஜி உபவாசம் இருந்தாரா, லால்பகதூர் சாஸ்திரி இருந்தாரா என்பதில் அதிக கவனம் செலுத்தத் தேவையில்லை. அப்படிப்பட்ட குப்பைகளை தேவைப்பட்டோர் மட்டும் சேகரித்து வைத்துக் கொள்ளட்டும். எவ்வித சார்புமின்றி விளக்கமாகவே எழுதுங்கள். பத்திரிக்கைகளில் வரும் துணுக்குகளையே காலங்காலமா தின்னு செரித்தவர்களுக்குத்தான் இது நீ...ளமான கட்டுரை. பேசுபொருளின் அவசியம் கருதி ஆழமாகவே எழுதுங்கள். உங்களைப் போல் பொருளாதாரம், சந்தைப்படுத்துதல் துறையில் ஆய்வு செய்யும் வல்லுனர்களே நம் நாட்டின் உண்மையான ஊன்றுகோல்கள்.

வாழ்த்துக்கள் செல்வன்.

வவ்வால், வெங்கட்ரமணி மற்றும் இதுபோன்ற ஆக்கப்பூர்வமான பதிவுகளில் பின்னூட்டமிட்ட நண்பர்கள் அனைவருக்கும் நன்றி. எல்லா இடத்திலயும் உலவும் ஜோக்கர்களுக்கும் நன்றி.

அன்புடன் அய்யாக்கண்ணு

Unknown said...

அய்யாக்கண்ணு

நன்றி.பங்கு சந்தை பற்றி முன்பு சில பதிவுகள் எழுதினேன்.அவ்வப்போது வணீகம் தொடர்பாக எழுதியே வருகிறேன்.வவ்வால் நல்ல வாதங்களை முன்வைத்தார்.அவருக்கு என் நன்றி.

அருமையான பின்னூட்டம் இட்ட உங்களுக்கும் நன்றி.என்னை வணிக சம்பந்தமாக எழுத இது மிகவும் ஊக்கமளிக்கிறது

நன்றி ஐயாக்கண்ணு

யாத்ரீகன் said...

இத்தகைய விஷயங்களை எழுதப்போக நிறைய கட்டுரைகள் சுவாரசியத்தை இழந்துள்ளன.. ஆனால் உங்கள் கட்டுரை சுவாரசியமாகவே இருந்தது.. அந்த வகையில் உங்களுக்கு வெற்றி :-)

பலர் சொன்னதை போல், ஒருதலைபட்சமாகவே உள்ளதாக காண்கின்றேன்... முந்தைய ஆட்சிகள் இதில் செய்த தவற்களை சுட்டிக்காட்டும்போது, அவர்கள் எடுத்த சில நல்ல முடிவுகளையும் பாராட்டவே வேண்டும் .. குறைந்தபட்சம் சுட்டிக்காட்டவாவது வேண்டும்..

இந்த கருத்தில், அடுத்த கட்டுரைகளை ஆவலுடன் எதிர்பார்திருக்கின்றேன்..

குமரன் (Kumaran) said...

நல்ல கட்டுரை செல்வன். பின்னூட்டங்களும் நல்ல தகவல்கள் தந்தன. மிக்க நன்றி.

Unknown said...

நன்றி யாத்ரீகன்.

//பலர் சொன்னதை போல், ஒருதலைபட்சமாகவே உள்ளதாக காண்கின்றேன்... முந்தைய ஆட்சிகள் இதில் செய்த தவற்களை சுட்டிக்காட்டும்போது, அவர்கள் எடுத்த சில நல்ல முடிவுகளையும் பாராட்டவே வேண்டும் .. குறைந்தபட்சம் சுட்டிக்காட்டவாவது வேண்டும்.. //

ஆமாங்க.தமிழினி முத்து கூட இந்த கருத்தை தான் சொன்னார்.அடுத்த கட்டுரையில் இதை சரி செய்ய முயல்கிறேன்

நன்றி யாத்ரிகன்

Unknown said...

குமரன் நன்றி.

பின்னூட்டம் இட்ட பலர் நல்ல கருத்துக்களை சொன்னார்கள்.என்னுடைய சில பதிவுகளில் பின்னூட்டமிட்ட சிலர் பதிவை விட சூப்பரான கருத்துக்களை சொன்னார்கள்.(eg:இந்தி திணிப்பு பதிவு,பங்கு சந்தை பதிவு)இந்த மாதிரி பின்னூட்டங்கள் கிடைப்பது நம் அதிர்ஷ்டம் என்று தான் சொல்லணும்.

மணியன் said...

அருமையான இடுகை. இந்திய பொருளாதார கொள்கையின் வரலாற்றை அழகாக படம் பிடித்துள்ளீர்கள்.
என்னைப் பொறுத்தவரை இக்கொள்கைகள் அவை எடுக்கப்படும் சூழல், காலம் மற்றும் ஏனய பிற காரணங்களால் ஏற்புடையவையாகின்றனவே தவிர ஒரு மனிதரால் திசை திருப்பப் படுவதாக சொல்ல இயலவில்லை. இந்திய பொருளாதாரத்தின் நல்லகாலம் அந்த திருப்பத்தின் துவக்கத்தின்போது தகுதியானவர் அமைந்ததுதான். மற்றபடி சுதந்திர இந்தியாவின் ஆரம்பகாலங்களில் இருந்த பற்றாக்குறை காலத்தில்,இருக்கும் ஆக்கசக்தியை மக்களுக்கு வேண்டிய வளர்ச்சிப் பணிகளில் ஒதுக்கிவிட அரசின் கட்டுப்பாடுகளும் பொதுத்துறை நிறுவனங்களும் வேண்டியிருந்தன. அரசு அமைத்த IIT,IIMதானே இன்று அசுர வளர்ச்சிக்கு வித்துட்டுள்ளன. கணினி கள் 1980களில் வர ஆரம்பித்தபிறகே குறைந்த மூலதனத்தில் தொழில் ஆரம்பிக்க முடிந்ததது. அதற்கு முன் அரசு கனரக தொழிற்சாலைகளை அமைத்ததாலே தானே வேலைவாய்ப்பு கொடுக்க முடிந்தது. இன்று இந்தியா பல துறைகளில் தன்னிறைவு தேசமாக உள்ளது; ஆசிய புலிகள் அவ்வாறு சொல்ல முடியுமா ?

திராவிட் 3.5 ரேட்டில் அமைத்துக் கொடுத்த தளத்தில்தான் இன்று தோனி 8.5% அடிக்கமுடிகிறது :) மேலும் டீம் ஒத்துழைப்பு இல்லாமல் அதே மன்மோகனும் தடுமாறுகிறார்தானே.

வஜ்ரா said...

//
திராவிட் 3.5 ரேட்டில் அமைத்துக் கொடுத்த தளத்தில்தான் இன்று தோனி 8.5% அடிக்கமுடிகிறது :) மேலும் டீம் ஒத்துழைப்பு இல்லாமல் அதே மன்மோகனும் தடுமாறுகிறார்தானே.
//

திராவிட் 3.5 ரேட்டில் அடிப்பதற்காக தெண்டுல்கரையெல்லாம் விரட்டிவிட்டது எங்கே போய்ச் சொல்வது...அன்றே தெண்டுல்கர் ரேஞ்சில் அடித்திருக்கவேண்டியது...இன்று சீனாவை முந்தியிருக்கலாம், லேட் பிக் அப் ஆனது தப்பு என்பதை மறுக்கமுடியாது.

Anonymous said...

ஒரு பத்தாயிரம் பணியாளர்கள் கொழுத்து வாழ நாட்டின் எதிர்காலத்துக்கு முட்டுகட்டை போட்டு கலைஞர் குழாம் விடுத்த "நடுவண் அரசில் இருந்து விலகல்" எச்சரிக்கை மிகவும் கண்டிக்கதக்கது.

ஒரு வேளை கஞ்சிக்கு இல்லாமல் கும்பி காய்பர்கள் கோடானு கோடி இந்த நாட்டில் இருக்கும்போது அரசு இவர்களுக்கு மட்டும் வேலை உத்திரவாதம் கொடுக்க வேண்டுமா?

இவர்களுடைய திறமைக்குறைவால் மின்சாரம் அதன் உண்மையான விலைக்கு விற்கப்படாமல் அதிக விலைகொடுத்து நாட்டுமக்கள் பல்லாயிரம் கோடி இழக்கிறார்கள். அது யார் கண்னிலும் படவில்லையா?இந்திய பொருட்களின் உற்பத்தி செல்வு கூடுவதால் வெளி நாட்டு வணிகத்தொடு போட்டி இடமுடியாமல் தொழில் அதிபர்கள் திண்டாடுகிறார்கள்.

ஒரு 10 விழுக்காடு பங்குகளை தனியாருக்கு விற்று அந்த பணத்தை கொண்டு கட்டுமான பணிகளை செய்யலாமே. எத்தனையோ ஏழைகளுக்கு நன்மைகள் செய்யலாம்.

டாடா, ரெலைன்யன்ஸ் போன்ற தனியார் தொழில்களில் வேலை செய்பவர்கள் எல்லாம் மனிதர்கள் இல்லையா? இவர்களுக்கு வேலை செய்வதற்கு என்ன கேடு.
கலைஞருக்கு இன்னமும் பொதுவுடைமை என்ற சனி விட‌வில்லை.

மங்களூர் சிவா said...

மிக அருமையான பதிவு.

பல புதிய விசயங்கள் தெரிந்துகொள்ள முடிந்தது.

ஆரோக்கியமான பின்னூட்டங்களும் மிக அருமை.

நன்றி செல்வன்.