Sunday, June 04, 2006

97.*நட்சத்திரம்*என்னை படைத்த என் உலகம்

சில வருடங்களுக்கு முன்பு அமெரிக்காவில் காலடி எடுத்து வைத்தபோது எனக்கு இங்கு யாரையும் தெரியாது.தப்பி பிழைத்த அகதிபோல் தனிஆளாய் ஒரு புதிய தேசத்தில் இரண்டு சூட்கேஸ்களுடன் வந்து இறங்கினேன். ஒன்றுமே தெரியாத இந்த தேசத்தில் எனக்கு கிடைத்த முதல் நண்பர் ஒர் மதகுரு தான்.எதேச்சையாய் உணவகத்தில் சந்தித்து நண்பரானார்.அடிக்கடி அவர் வழிபாட்டு ஸ்தலத்துக்கு போவேன்.அங்கு நிறைய சினேகிதர்கள் கிடைத்தனர்.வாரா வாரம் மதம்,கடவுள் பற்றி பேச ஒரு மீட்டிங் உண்டு.கடவுள் யார்,பிற மதங்கள்,வழிபாட்டின் மகத்துவம்,கடவுள் இருப்பது உண்மையா போன்ற தலைப்பில் கணக்கற்ற விவாதங்கள் நடந்து கொண்டே இருக்கும். இன்னொருபுறம் கல்லூரியில் அமெரிக்க புரபசர் ஒருவர் தன் சித்தாந்தத்தை போதிக்க துவங்கினார்.அவர் அமெரிக்காவின் தலைசிறந்த தத்துவஞானி. அமெரிக்க தத்துவதுறையின் தேர்ந்தெடுத்த முத்துக்களை அவர் எனக்கு கற்பித்தார். தத்துவம் கால் காசுக்கு பெறாது என்ற நிலையை மாற்றி தனிவாழ்வுக்கும்,பொருள் சேர்க்கவும் உதவும் என்ற நம்பிக்கையை நான் படித்த மேற்கத்திய தத்துவஞான புத்தகங்கள் எனக்கு அளித்தன. இப்படி முற்றிலும் வேறுபட்ட இந்த இரு வேறு சித்தாந்தங்களுக்கு இடையே நடந்த இந்த உரையாடலில் மெதுமெதுவே என் வாழ்வின் வழி அமையத் துவங்கியது.பலகலைகழக மாணவர் சங்கம் மூலம் பல வகையான குழுக்கள் எனக்கு பரிச்சயமாயின.என் கல்லூரியில் உள்ள பலவகைப்பட்ட சித்தாந்த அடிப்படையிலான குழுக்களோடு உரையாடி அவர்கள் அளித்த நூல்களை ஆழ்ந்து படித்ததில் நிறைய விஷயங்களை அறிந்து கொள்ள முடிந்தது.சில சமயங்களில் ஒரே மாதிரியான கேள்விகளுக்கு இவர்கள் அனைவரும் வேறு வேறு பதில்கள் வைத்திருப்பதை அறிய முடிந்தது. அவர்கள் வைத்திருக்கும் பதில்களை விட அப்பதில்களை அவர்கள் அடைந்த விதம் தான் என்னை ஈர்த்தது. அந்த பதிலை அடைய அவர்கள் கடைபிடித்த வழி சரி இல்லை என்றால் அந்த பதிலை - அது எவ்வளவு கவர்ச்சிகரமானதாக தோன்றிய போதும் - ஒதுக்கிவிட நான் பயின்றேன்.என் கல்வியின் மிகப்பெரும் பயனாக நான் கருதுவது இதையே. இங்கு நான் கற்கும் கல்வி என்னை சுற்றியுள்ள உலகை நான் பார்க்கும் விதத்தை மாற்றியது.என் பார்வை மாறியதால் என் செயல்பாடுகளும் மாறின.கல்வியின் நோக்கம் சுதந்திரமே என்பதை தற்போது உணர்கிறேன்.மெய்ஞ்ஞானம் என்பது மனிதனை தெய்வமாக்குவதல்ல என்பதும் அவனிடம் உள்ள மிருக உணர்ச்சியை அவன் சுயமுன்னேற்றத்துக்கு பயன்படுத்தும் ஒரு கருவியே சமூகம என்பதை உணர்கிறேன்.ஒரு நாகரீக சமுதாயம் சுதந்திரத்தை கட்டிக்காத்தால் அந்த சுதந்திரம் அச்சமுதாயத்தை நிச்சயம் கட்டிக்காக்கும் என நம்புகிறேன். இங்கு தடை இன்றி கிடைத்த இணைய தொடர்பு எனக்கு ஒரு புது உலகத்தை அறிமுகப்படுத்தியது.முதல் முதலாக மரத்தடி யாகூ குழுமத்தில் சேர்ந்தேன்.அங்கு இதுவரை ஒரு கட்டுரை கூட எழுதியதில்லை.திஸ்கியில் தெரிந்த சீன எழுத்துக்களை வெறித்து பார்த்துக்கொண்டே இருந்தேன்.எப்படியோ தக்குமுக்காடி யுனிகோட் தட்டச்சு மெதுவே பழகினேன். பிறகு கூகிள் தமிழ் குழுக்களை பற்றி தெரிந்தது.மெதுவே கூகிளில் உள்ள யுனிகோடு குழுமங்களில் சேர்ந்தேன்.என் எழுத்தை சிலர் ரசிக்க கூட செய்வார்கள் என்பதை அக்குழுக்களில் தான் கண்டேன்.அது எனக்கு அப்போது மிகுந்த ஆச்சரியத்தை அளித்தது.ஆனால் நாட்கள் செல்ல செல்ல எனக்கு ஏராளமான நண்பர்கள் கூகிள் குழுக்கள் மூலம் கிடைத்தனர். வலைபதிவின் மேல் நீண்ட நாட்களாக ஒரு கண்.ஒரு சுபயோக சுபதினத்தில் தட்டுத்தடுமாறி இந்த வலைபதிவை ஆரம்பித்தேன். எத்தனை நண்பர்களை என் எழுத்து எனக்கு பெற்றுத்தந்தது என எண்ணிப்பார்த்தால் வியப்பாக இருக்கிறது.முத்தமிழ் குழுவின் 210 சொந்தங்களையும்,நம்பிக்கை குழுவின் 200 சொந்தங்களையும்,தமிழ்மணத்தின் மூலம் கிடைத்த உங்கள் அனைவரையும் நான் அடைந்தது என் அதிர்ஷ்டம் என்று தான் சொல்ல வேண்டும். என் படைப்புக்களை வெளியிட்டு ஊக்கமளித்த நிலாச்சாரல் ஆசிரியர் நிலாராஜ், தமிழோவியம் ஆசிரியர் கணேஷ் சந்திரா,திண்ணை ஆசிரியர் கோபால் ராஜாராம், ஆகியோரை என்றும் மறக்கவே முடியாது. தமிழ்மணம் என்ற ஒரு ஆலமரத்தை நிறுவி நமக்கெல்லாம் ஒரு கூடு அமைக்க வழி செய்த காசிக்கும்,தமிழ்மண நிர்வாக குழுவுக்கும் என்ன சொல்லித்தான் நம் நன்றியை தெரிவிக்க முடியும்?தமிழ்மணத்துக்கு அவர்கள் செய்யும் சேவையை தமிழன்னைக்கு அவர்கள் சூட்டும் பூமாலையாகத்தான் எதிர்காலம் கருதும்.இணைய தமிழ் வரலாற்றை எழுதும்போது தமிழ்மணத்தின் பெயரையும்,காசியின் பெயரையும் பிள்ளையார் சுழிக்கு அடுத்ததாக எழுதவேண்டி வரும். தமிழ்மணம் மூலம் எனக்கு கிடைத்தது நட்பும்,சொந்தங்களும் தான்.யார் பேரை சொல்ல,யார் பேரை விட? எந்துரோ மகானுபாவலு அத்தனை பேருக்கும் என் வணக்கம் என் சக்திக்கு எட்டியவரை நல்ல படைப்புக்களை உங்களுக்கு இந்த நட்சத்திர வாரத்தில் தரவேண்டும் என நினைத்துள்ளேன். இந்த நட்சத்திர வாரத்தில் எழுதவிருக்கும் சில subjects. 1.கம்யூனிசம் 2.சிம்ரன் 3.பேன்டேஜ் பாண்டியன் 4.கேள்வி கேட்பது 5.கற்பின் அரசி கண்ணகி 6.மசாலா தோசையும் வெங்காய சாம்பாரும் (Subject ஒரு மாதிரியாக இருக்கிறதே என்று பயந்து விடாதீர்கள்.வழக்கமாக இப்படித்தான் கோக்குமாக்காக எழுதுவேன்.நட்சத்திர வாரத்தில் மட்டும் புதுசாவா எளுத முடியும்?:-))))) மொத்தம் 10 கட்டுரைகளை இந்த நட்சத்திர வாரத்தில் இட எண்ணி உள்ளேன்.நிறைய எழுதினால் உங்களுக்கே அலுப்பு தட்டிவிடும். யாதுமாகி நின்ற பரம்பொருளை வணங்கி என் நட்சத்திர வாரத்தை இனிதே துவங்குகிறேன்.அனைவருக்கும் என் அன்பான நன்றி மாறா அன்புடன் செல்வன் (தற்போது கிடைத்த ஒரு நல்ல செய்தி.இந்த பதிவிலேயே அப்டேட் செய்து விடுகிறேன்.நிலாச்சாரல் நடத்திய நிலவு சுடர் போட்டியில் என் ரஜினி வாய்ஸ்:ஒரு மனோதத்துவ ஆய்வு எனுக் கட்டுரை பரிசுக்குரியதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.நட்சத்திர வார மகிழ்வோடு இதுவும் சேர்ந்து இரட்டை சந்தோஷம்.நிலாச்சாரலுக்கு என் நன்றி.சூப்பர் ஸ்டார் வாய்ஸை பற்றி கட்டுரை எழுதினாலே பரிசு கிடைக்கிறதே.அவர் பெயருக்குள் காந்தம் உண்டு என்பது உண்மைதான் போலும்.:-)))
Post a Comment