Wednesday, June 07, 2006

101.மண்ணில் உயிர்க்கு சிம்ரனே தெய்வம்

மண்ணில் உயிர்க்கு சிம்ரனே தெய்வம் "சென்னையில் உள்ள புகழ்பெற்ற கல்லூரியின் "அழகு" மாணவி நான். இந்த வருடம் எங்கள் கல்லூரியில் கல்சுரல்ஸ் ஆரம்பமானது. பங்ஷனில் சிறப்பு விருந்தினராக, சாக்லெட் பாயை அழைத்திருந்தோம்... அதாங்க, நம்ப சினிமா நடிகர் மாதவன்... அவருக்கு இத்தனை ரசிகைகள் இருப்பார்கள் என்று நாங்களும், எங்கள் கல்லூரி ஆசிரியர்களும் நினைக்கவே இல்லை.காலையில் இருந்தே, "மேடி...மேடி...' என, மாதவன் பைத்தியம் பிடிக்க ஆரம்பித்தது எல்லாருக்கும். மாதவனுக்காக காத்திருந்தனர் மாணவியர். மாதவனின் கார் கல்லூரியில் நுழைய அத்தனை மாணவியரும் அவரது காரை நோக்கிப் பாய்ந்து ஓட ஆரம்பித்தனர். அரண்டு போன ஆசிரியர்கள், ஸ்டேஜின் அருகிலேயே மாதவனது காரைக் கொண்டு வந்து நிறுத்த வைத்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அவரை இறக்கினர்.அப்படியும் பல கல்லூரி மாணவியர் அவரைத் தொட்டுப் பார்க்க ஆசைப்பட்டு, அவர் மேல் பாய்ந்து, நகங்களால் அவர் கைகளைக் கீறினர். துடித்துப்போன மாதவன், ஒரு வழியாக ஸ்டேஜில் ஏறினார்.மீண்டும் அவரை பத்திரமாக அனுப்பி வைப்பதற்குள் போலீஸ் வெகுவாகத் திண்டாடியது; மாணவியர் மீது தடியடி நடத்தாத குறைதான். "மேடி... மேடி...' என்ற கோஷமடங்க, அரைமணி நேரம் ஆனது." இங்கு நாம் பார்த்தது என்ன? ஒரு புதிய மதத்தை. ஒரு புதிய கடவுளை. செலெபிரிடி வர்ஷிப் எனும் மதத்தை நாம் இங்கு பார்த்தோம்.இங்கு பிரபலமே கடவுள்.ரசிகர்களே பக்தர்கள். சமூக அறிவியல் மற்றும் உயிரியல் ஆய்வாளர்கள் இதை ஒரு அங்கீகரிக்கப்படாத மதமாக தான் கருதுகின்றனர்.அதனால் தான் இதை செலெபிரிடி வர்ஷிப்(பிரபலத்தை வழிபடுதல்) என குறிப்பிடுகின்றனர். பிரபலத்தை வழிபடுதல் மிகவும் நல்ல பழக்கம் என ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிடுகின்றனர்.பிரபலத்தை வழிபடுதல் நம் வாழ்வை வெற்றிகரமாக வாழ உதவுகிறதாம்.ஒரு துறையில் வெற்றி அடைந்த மனிதரை வழிபடுதல் இயல்பானதே என உயிரியல் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.பழங்காலத்தில் பிரபலமான வேடர்களை மக்கள் வழிபட்டனராம்.இப்போது வேட்டை அவ்வளவு முக்கியத்துவமில்லாதது என்பதால் பணக்காரர்களையும் நட்சத்திரங்களையும் விளையாட்டு வீரர்களையும் வழிபடுகிறோமாம். இதுபற்றி ஒரு மனோதத்துவ ஆய்வை மெக்கட்சியான்,ஜேம்ஸ் அவுரான் ஆகிய ஆய்வாளர்கள் நடத்தினர்.சுமார் 600 பேரை ஆராய்ந்து பார்த்ததில் கீழ்க்கண்ட விவரங்கள் தெரியவந்தன.கிட்டத்தட்ட 20% மக்கள் ஒரு பிரபலத்தை கூர்ந்து கவனித்து அவரின் ரசிகராக இருப்பார்களாம்.இது harmless fun எனும் வகையறாவை சேர்ந்தது.கிட்டத்தட்ட 10% பேர் பக்தர்கள் ரேஞ்சுக்கு போய்விடுவார்களாம்.தமக்கும் அந்த பிரபலத்துக்கும் இடையே ஒரு "தெய்வீக உறவு" நிலவுவதாக அவர்கள் நம்புவார்களாம்.இதற்கும் அடுத்த கட்டம் "மனநிலை பாதித்த கட்டம்".பிரபலத்துக்காக அடுத்தவரை அடித்தல்,வன்முறையில் ஈடுபடுதல் ஆகியவற்றுக்கும் அவர்கள் தயாராகிவிடுவார்களாம்.இக்கட்டத்தை "borderline-pathological" என ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர். டீனேஜ் தான் பிரபலத்தை வழிபடுவதற்கு ஏதுவான இடமாம்.இந்த வயதில் தான் தம் வாழ்க்கை பாதையை எப்படி அமைத்துக்கொள்வது என இளைஞர்கள் யோசிப்பார்களாம்.அப்போது தான் அதற்கு ஏதுவான ஒரு பிரபலத்தை தேர்ந்தெடுத்து வழிபட துவங்குவார்களாம். இப்படி ஒரு பிரபலத்தை வழிபடுவது டீனேஜ் இளைஞர்களுக்கு நல்லதாம்.டீனேஜர்கள் இளைஞர்களாக விரைவில் வளர்ச்சி அடைய இது உதவுகிறது என பிரிட்டனில் செய்யப்பட்ட ஒரு ஆய்வு தெரிவிக்கிறது.11 முதல் 16 வயதிலான டீனேஜ் இளைஞர்களுக்கு பிரபலங்களை வழிபடுவது socialize செய்ய மிகவும் உதவிகரமானதாக இருக்கிறதாம்.இதை செய்யாவிட்டால் தமது வகுப்புதோழர்களை பற்றி negative gossip செய்வார்களாம்.பிரபலங்களை வழிபடுவதால் இது தவிர்க்கப்படுகிறதாம். பிரபலத்தை வழிபடுதலில் தீமைகளும் உள்ளன.அளவுக்கு மீறிய மதப்பற்று பிரச்சனையாகத்தானே வந்து முடியும்?பிரபலங்களை வழிபடுதலும் இதற்கு விதிவிலக்கல்ல.கடவுள் பக்தர்கள் தம் சொந்த வாழ்வை கடவுளுக்கு அர்ப்பணித்து வெறி பிடித்த பக்தர்களாக மாறுவதுபோல் இம்மதத்திலும் உண்டாம்.அளவுக்கு அதிகமான கடவுள் பக்தி வந்தவர்கள் வழிபாட்டுத்தலமே கதி என கிடப்பதுபோல் இந்த பக்தர்களும் தம் நட்சத்திரத்தை உலகின் எந்த மூலைக்கு சென்றாலும் பின் தொடர்வார்களாம். நாம் ஏன் பிரபலத்தை வழிபடுகிறோம்? இது நம் தப்பே இல்லை என்கின்றனர் விஞ்ஞானிகள். பிரபலத்தை வழிபடுதல் நம் டி.என்.ஏவில் புரொக்ராம் செய்யப்பட்ட ஒன்றாம்.ஒரு பிரபலத்தை தேர்ந்தெடுத்து அவரை வழிபடுதல் நம் டி.என்.ஏவில் புரொக்ராம் செய்யப்பட்ட குணாதிசியமாம். "மனிதன் ஒரு சமூக விலங்கு. பிரபலத்தை வழிபட,பின் தொடர நாம் புரொக்ராம் செய்யப்பட்டுள்ளோம்" என்கிறார் விஞ்ஞானி ஃபிஸ்சாப். ஆனால் சிலர் இந்த டி.என்.ஏவை எளிதில் வெல்ல,கையாளத் தெரிந்தவர்களாம். அவர்கள் பிரபலத்தை வழிபட மாட்டார்களாம். இவர்கள் பிரபலத்தை வழிபடுபவர்களை கிண்டல் செய்வார்களாம். பிரபலங்கள் தப்பு செய்தால் அவர்கள் மீது கொண்ட பக்தி என்ன ஆகும்? ஒன்றும் ஆகாதாம். பிரபலங்களின் பக்தர்கள் அந்த செயல் தப்பே இல்லை என வாதிடுவார்களாம்.அந்த பிரபலம் செய்ததாலே அந்த செயல் நியாயப்படுத்தப்படுமாம். பக்தர்கள் தம் ரோல்மாடல் செய்ததாலேயே அந்த செயலை செய்வார்களாம். பிரபலம் சிகரெட் குடித்தால்,மது அருந்தினால் அவர் பக்தர்களும் அருந்துவார்களாம். சின்ன வீடு செட்டப் செய்தால் பக்தர்களும் செய்வார்களாம்.பிரபலம் தற்கொலை செய்து கொண்டால் பக்தர்களும் தற்கொலை செய்துகொள்வார்களாம். மர்லின் மன்றோ தற்கொலை செய்துகொண்டதும் அமெரிக்க தற்கொலை விகிதம் 12% அதிகரித்ததாம். சுருக்கமாக சொன்னால் typical copycat syndrome. பிரபலம் செய்வது எல்லாம் நியாயம்.அவர் சொல்வது அனைத்தும் சரி. கண்ணை மூடிக்கொண்டு அவர் வாழ்ந்தது போலவே வாழ்வது தான் வாழ்வில் உய்வடைய சரியான வழி. சுருக்கமாக சொன்னால் இது ஒரு மதம். மதப்பற்றின் அனைத்து நன்மை தீமைகளும் அச்சு அசல் மாறாமல் இம்மதத்திலும் உள்ளன. References: 1) http://www.dinamalar.com/2006may14varamalar/ithu.asp 2) http://news.bbc.co.uk/1/hi/health/3147343.stm 3) http://www.theage.com.au/articles/2003/08/14/1060588497208.html 4) http://www.bellaonline.com/articles/art31383.asp 5) http://tvguide.webmd.com/content/article/119/113311.htm?pagenumber=2 6) http://news.bbc.co.uk/1/hi/health/2861429.stm (தமிழோவியத்தில் வந்த என் கட்டுரை.பிரசுரித்த தமிழோவியத்துக்கு என் நன்றி)
Post a Comment