Monday, May 15, 2006

86.கண்டதும் காதல்

ராமனும் சீதையும் ஒருவரை ஒருவர் கண்டு மையலில் வீழ்வது வெகு பிரசித்தியானது.ஆனால் கம்ப ராமாயணம் முழுக்க அவர்கள் இருவரையும் முதல் முதல் கண்டவர்கள் காதலில் வீழ்ந்த கதைகளை கம்பன் சுவாரசியமாக சொல்லுகிறான். மிதிலையில் ராமன் உலா வருகிறான்.அவனை கண்ட மகளிர் அந்த விநாடியே மையலில் வீழ்ந்தனராம். பஞ்சு அணி விரலினார் தம் படை நெடுங் கண்கள் எல்லாம், செஞ்செவே ஐயன் மெய்யின் கருமையைச் சேர்ந்தவோ தாம்?மஞ்சு அன மேனியான் தன் மணி நிறம், மாதரார் தம் அஞ்சன நோக்கம் போர்க்க, இருண்டதோ? அறிகிலேமால் அத்தனை கருவிழிகள் காகுத்தன் மேனி சேர்ந்து தான் அவன் மேனி கருத்ததோ என வியக்கிறான் கம்பன். ராமனின் முழு உருவையும் பார்த்து மையலில் யாரும் வீழவில்லையாம்.அவன் தோளை கண்டவர் தோளை மட்டுமே பார்த்தனராம்.தோளைகண்டவருக்கு கண்னை அதிலிருந்து எடுக்கவே மனதில்லையாம்.தாளை கண்டார் தாளையே பார்த்தனராம்.அவன் முழு வடிவையும் எந்த வாள் விழியும் காணவில்லையாம்.(அடிமுடி காண முடியாத பரப்பிரம்மத்தின் முழு உருவையும் மானிடரால் காண முடியாதன்றோ?) தோள் கண்டார், தோளே கண்டார்; தொடு கழல் கமலம் அன்ன தாள் கண்டார், தாளே கண்டார்; தடக் கை கண்டாரும், அஃதே; வாள் கொண்ட கண்ணார் யாரே, வடிவினை முடியக் கண்டார்? - அம்புகளை எறிந்து எறிந்து பொன் சிலை போலும் அழகு படைத்த காமனுக்கு அம்புறாத்தூணியே தீர்ந்து போய்விட்டதாம்.இத்தனை பெண்கள் ஒரே நேரத்தில் மையலில் வீழ்ந்தால் அம்புகளுக்கு அவன் எங்கு போவான்?அர்ச்சுனன் போல் அம்புகள் தீரா தூணியையா வைத்திருக்கிறான் காமன்?அம்புகள் தீர்ந்ததால் உடைவாளை எடுக்க வேண்டிவந்ததாம் காமனுக்கு. வையம் பற்றிய மங்கையர் எண்ணிலர், ஐயன் பொற்புக்கு அளவு இலை ஆதலால், எய்யும் பொன் சிலை மாரனும், என் செய்வான்? கை அம்பு அற்று, உடைவாளினும் கை வைத்தான் காதலை மறைக்க எண்ணினாளாம் ஒரு பெண்.மனதை மறைக்கலாம்.முகத்தை கூடவா மறைக்க முடியும்?முகத்தில் தோன்றும் காதல் உணர்ச்சியை அவளால் மறைக்கவே முடியவில்லையாம் புனம் கொள் கார் மயில் போலும் ஓர் பொற்கொடி, மனம் கொள் காதல் மறைத்தலை எண்ணினாள்; அனங்கவேள், அது அறிந்தனன்; - அற்றம் தான், மனங்கள் போல, முகமும் மறைக்குமே? இந்த பெண்களாவது பரவாயில்லை.சீதையை கண்ட ராவனன் நிலை மிகவும் மோசமாகிவிடுகிறது.அதுவும் கண்டதும் காதல் தான்.10 தலை,20 கண்கள் படைத்த ராவனன் சீதையை கண்டதும் தான் தன் 20 கண்களின் சிறுமையை உணர்கிறானாம்.காணக்கண்கோடி வேண்டும் சீதையின் அழகை காண வெறும் 20 கண்கள் தானா என்று அவனுக்கு தோன்றுகிறது.ஆயிரம் கண்களாவது வேண்டாமா இவள் அழகை காண?வெறும் 20 கண்கள் எதற்கு போதும் என வருந்துகிறானாம். 'சேயிதழ் தாமரைச் சேக்கை தீர்ந்து இவண் மேயவன் மணி நிறம் மேனி காணுதற்கு ஏயுமே இருபது? இங்கு இமைப்பு இல் நாட்டங்கள் ஆயிரம் இல்லை!' என்று, அல்லல் எய்தினான் கஷ்டப்பட்டு பிடித்த மூவுலகங்களையும் இவள் காலடியில் ஒப்புவித்துவிட்டு,தன் தேவிமாரையும்,தான் பிடித்த இந்திரன் முதலான தேவ்ர்களையும் இவளுக்கு அடிமையாய் தந்துவிட்டு மூவுலகையும் இவள் ஆள இவளுக்கு நானும் அடிமையாய் இருந்து இனி ஏவல் செய்வேன் என மூவுலகும் ஆளும் லங்காபதி எண்ணுகிறானாம். 'தேவரும், அவுணரும், தேவிமாரொடும், கூவல்செய் தொழிலினர், குடிமை செய்திட, மூஉலகமும் இவர் முறையின் ஆள, யான் ஏவல் செய்து உய்குவென், இனி' என்று உன்னினான் தன் தங்கை சூர்ப்பனகை மீது அவனுக்கு திடீர் பாசம் வந்துவிடுகிறது.அவள் அன்றோ இப்படி ஒரு புவன மோகினியை தனக்கு காட்டினாள்?அவளுக்கு என்ன பரிசு கொடுத்தால் தகும்?தன் ராஜ்ஜியம் முழுவதையும் பரிசாக தந்தாலும் தகுமே என எண்ணுகிறானாம் இராவனன். தளை அவிழ் குழல் இவட் கண்டு தந்த என் இளையவட்கு அளிப்பென், என் அரசு' என்று எண்ணினான்

24 comments:

குமரன் (Kumaran) said...

என்ன செல்வன் திடீரென்று கம்பரின் இராமாவதாரத்தில் இறங்கிவிட்டீர்கள்? அண்மையில் அந்த நூலைப் படித்தீர்களா? நான் இப்போது தான் ஹரிகிருஷ்ணன் அவர்களின் கட்டுரைகளை மீண்டும் படிக்கத் தொடங்கியிருக்கிறேன். பாஞ்சாலி சபதம் தொடங்கியிருக்கிறேன். அது முடிந்த பின் கம்பராமாயணக் கட்டுரைகளைப் படிக்கவேண்டும்.

Prabu Raja said...

///தோள் கண்டார், தோளே கண்டார்; தொடு கழல் கமலம் அன்ன
தாள் கண்டார், தாளே கண்டார்; தடக் கை கண்டாரும், அஃதே;
வாள் கொண்ட கண்ணார் யாரே, வடிவினை முடியக் கண்டார்? -///

இந்த வரிகள் எனக்கு மிகவும் பிடித்திருக்கின்றன.

கொடுத்தமைக்கு நன்றி.

Unknown said...

இந்த கட்டுரையை முத்தமிழ் குழுவில் எழுதி பல மாதங்களாகிறது குமரன்.சென்ற வார திண்ணை இதழில் கூட இதை வெளியிட்டிருந்தேன்.கம்பனை பற்றி பல கட்டுரைகளை எழுத இயலும்.தமிழ்மணத்தில் கவிதையை பற்றிய கட்டுரைகளுக்கு வரவேற்பு இருக்காது என சொல்கிறார்கள்.அதனால் தான் தயங்குகிறேன்.

குமரன் (Kumaran) said...

//தமிழ்மணத்தில் கவிதையை பற்றிய கட்டுரைகளுக்கு வரவேற்பு இருக்காது என சொல்கிறார்கள்.//

அப்படியா?

Unknown said...

ஆமாம்.

கவிதைகளை மட்டுமே எழுதும் ****** பதிவுக்கு பின்னூட்டமே கிடையாது.**** பதிவுக்கும் பின்னூட்டங்கள் குறைவு.**** ***** கம்பனை பற்றி எழுதுகிறார்.யாரும் படிக்க காணோம்.

(நாம் ஏன் இன்னொரு பதிவுக்கு பின்னூட்டம் குறைவு என சொல்ல வேண்டும் என நினைத்து தான் பெயரை எடுத்துவிட்டேன்.)

Unknown said...

நன்றி பிரபு ராஜா
அனைத்து புகழும் கம்ப நாட்டரசனுக்கே

Sivabalan said...

அருமையான பதிவு!!


நன்றி!!

குமரன் (Kumaran) said...

யார் கம்பனைப் பற்றி எழுதுகிறார் என்று மட்டும் சொல்லுங்கள். தனிமடல் ஆனாலும் பரவாயில்லை. நான் போய் படிக்கிறேன்.

Unknown said...

இந்த வலைபதிவை தனிமடலில் அனுப்பலாமா என யோசித்து அதன் பின் பொதுவிலேயே இடுகிறேன்.அப்படியாவது 4 பேர் கண்ணில் படாதா என்றுதான்.நேற்று தான் இதை பார்த்தேன்.முனைவர் பழனியப்பன் மிகவும் அருமையான இலக்கிய கட்டுரைகளை எழுதுகிறார்

http://manidal.blogspot.com/2006/01/blog-post_113773923440267665.html

Unknown said...

மிக்க நன்றி சிவபாலன்

அன்புடன்
செல்வன்

குமரன் (Kumaran) said...

மிக்க நன்றி செல்வன். தொடர்ந்து படிக்கவேண்டிய வலைப்பூக்களில் ஒன்றாக முனைவரின் வலைப்பூவைக் குறித்துக் கொண்டேன்.

கம்ப நாட்டரசரா? யாரவர்?

Unknown said...

கம்ப நாட்டரசர் கம்பன் தான் குமரன்.

கம்ப நாடுடைய வள்ளல் என அவரை புகழ்வர்.

"அம்பிலே சிலையை நாட்டி அமரர்க்கு அன்று அமுதம் ஈந்த
தம்பிரான் என்ன, தானும் தமிழிலே தாலை நாட்டி,
கம்ப நாடு உடைய வள்ளல், கவிச் சக்ரவர்த்தி, பார்மேல்
நம்பு பாமாலையாலே நரர்க்கும் இன் அமுதம் ஈந்தான்.

குமரன் (Kumaran) said...

தெரிந்தது செல்வன். கம்ப நாடன், கம்ப நாட்டாழ்வார், கம்ப நாடுடைய வள்ளல் என்றெல்லாம் படித்திருக்கிறேன். கம்பநாட்டரசர் என்று படித்தது இது தான் முதன்முறை. :-) அவர் எந்த நாட்டையும் ஆண்டதாகத் தெரியவில்லை. கம்பநாடன் என்பது அவர் இயற்பெயர்; ஆனால் கம்பன் என்று கூறுவதே தற்போது வழக்கில் இருக்கிறது. கம்ப நாடுடைய வள்ளல் என்றும் கம்ப நாட்டாழ்வார் என்றும் கூறுவது அவரைப் புகழ்ந்து தானே ஒழிய அவர் எந்த நாட்டையும் ஆண்டதாகத் தெரியவில்லை - கம்பநாட்டரசர் என்பது அவர் ஒரு நாட்டுக்க்கு அரசர் என்று பொருள் தருகிறது.

Unknown said...

கம்ப நாட்டரசர் என்பது நான் எழுதியதுதான் குமரன்.:-))

அவர் (கவி) சக்ரவர்த்தி தானே?கம்ப நாடுடைய சக்ரவர்த்தியை கம்ப நாட்டரசர் என குறிப்பிட்டேன்.

நரியா said...

வணக்கம் செல்வன்,

இந்தக் கட்டுறையிலிருந்து நான் தெரிந்து கொண்டது "கண்டதும் காதல்" என்பது புற அழகை பார்த்து வருவது என்பதும் காதலிப்பரை எல்லாம் கல்யானம் செய்து கொள்ள முடியாது என்பதும் ஆகும் :)

நன்றி,
நரியா

VSK said...

'நரியா'வின் முதல் தமிழ்மடல்!
வாழ்த்துகள்!!

Unknown said...

வாழ்த்துகள் நரியா.

That was a very good beginning.Congrats.

Anbudan
selvan

வவ்வால் said...

வணக்கம் செல்வன்,

நல்லப்பதிவுகளை இடுகிறீர்கள். ஆனால் சில சமயம் ஏன் இந்தப்பதிவு என்று கேட்கும் வண்ணம் சில பதிவுகளும் வருகின்றது.எல்லாம் அவன் செயலா :-))

//கம்பனை பற்றி பல கட்டுரைகளை எழுத இயலும்.தமிழ்மணத்தில் கவிதையை பற்றிய கட்டுரைகளுக்கு வரவேற்பு இருக்காது என சொல்கிறார்கள்.அதனால் தான் தயங்குகிறேன்.//

//கவிதைகளை மட்டுமே எழுதும் ****** பதிவுக்கு பின்னூட்டமே கிடையாது.**** பதிவுக்கும் பின்னூட்டங்கள் குறைவு.**** ***** கம்பனை பற்றி எழுதுகிறார்.யாரும் படிக்க காணோம்//

பின்னூட்டங்களுக்காக மட்டுமே எழுதுவது என்பது தவறான ஒன்று.நிறைய பேர் பின்னூட்டம் இடமால் படித்து செல்கிறார்கள்.மேலும் சிலர் பின்னூட்டம் இடாமல் செல்லக் காரணம் அந்த வலைபதிவில் பின்னூட்டத்திற்கு வைத்துள்ள கட்டுப்பாடுகளே.அதனைப் பற்றி நான் எழுதிய பதிவில் கூட உங்கள் கருத்துகளை கூறியுள்ளீர்கள்.

மேலும் பலர் அவர்களுக்கு சாதகமான பின்னூட்டங்கள் வருவதையே விரும்புகிறார்கள்.கொஞ்சம் காட்டமாக சுட்டிக்காட்டினாலும் மட்டுறுத்தல் என்ற பெயரில் நீக்கி விடுகிறார்கள்.மேலும் தங்களுக்கு என்று ஒரு சாதகமான குழு ஒன்றை உருவாக்கிக்கொண்டு இட்லி உப்புமா செய்வது எப்படி என்று பதிவுப்போட்டு ஒரு 4, அல்லது 5 பேரே மீண்டும் மீண்டும் பதில் போட்டு 100,200 என பின்னூட்டம் வாங்கி புளகாங்கிதம் அடைகிறார்கள்.அப்படி இருக்கும் போது கவிதை மற்றும் கம்பன் கு எல்லாம் பின்னூட்டம் வரவில்லை என வருத்தப்பட்டால் எழுத முடியாது. எழுதுவோர் தம் கடன் எழுதுவது என எழுதி குவிக்க வேண்டும் நிச்சயம் தேவைபடுவோரை சென்றடையும்.

எவ்வாறு பின்னூட்டங்களில் பாகு பாடு உள்ளது என்பதற்கு ஒரு உதாரணம் மட்டும் கூறுகிறேன்.நீங்கள் திராவிட தமிழர்கள் வலைப்பதிவில் எனக்கு ஒரு பதில் பின்னுட்டம் இட்டு இருந்தீர்கள்,அதற்கு எனது பதில் இது வரவில்லை என நீங்கள் நினைத்து இருக்க கூடும் ,என் சார்பாக ஒரு விளக்கம் அளித்து பின்னுட்டம் அளித்தேன் இது வரை வரவில்லை.இந்த விவாதம் தொடர்வதை விரும்பவில்லை போலும். ஏன் வெளியிடவில்லை என யாரையும் கேட்கப்போவதில்லை.வலைப்பதிவோரிடம் ஒரு பாரபட்சமற்ற தன்மையில்லாத போது எப்படி எல்லாரும் பின்னூட்டமிட முன்வருவார்கள்.

என்னுடைய பதிவிலும் பெரும்பாலும் கவிதைகள் அவ்வபோது சில கட்டுரைகள் என வரும்.பின்னூட்டங்கள் குறைவாக வந்தாலும் கவலைப்படுவது இல்லை.ஏனெனில் பலர் படித்துவிட்டு போவார்கள் பின்னூட்டம் இடுவதில்லை,பல நண்பர்கள் இதனை என்னிடம் சொல்லியுள்ளார்கள்.எனவே யாறும் படிப்பதில்லை என எல்லாம் விட்டு விட முடியாது எழுதுவது முதலில் நமது எண்ணங்களுக்கு வடிகால்.எனவே தொடர்ந்து எழுதுங்கள்.பலனை எதிர்பாரதே கடமையை ஆற்று தானே கீதாபதேசம்!

Unknown said...

வணக்கம் வவ்வால்,

என் அனைத்து பதிவுகளும் அனைவருக்கும் பிடிக்க வேண்டும் என்று தான் எனக்கு ஆசை.ஆனால் அப்படி எழுத ஒரு திறமை வேண்டுமல்லவா?அது எனக்கு இல்லை.காலப்போக்கில் வரும் என நம்புகிறேன்.

திராவிட தமிழர் வலைபதிவில் உங்கள் பின்னூட்டத்தை அனுமதிக்காதது குறித்து ஏதும் கூற விரும்பவில்லை.ஏனெனில் அது அவர்கள் வலைதளம்.அதை பற்றி நான் ஏதும் சொல்லுதல் முறையாக இருக்காது.என் வலைதளத்தை பொறுத்தவரை ஆபாச வார்த்தைகள் இல்லாத எந்த பின்னூட்டத்தையும் அனுமதிப்பது என்ற முடிவோடு தான் இருக்கிறேன்.என்னை கடுமையாக விமர்சனம் செய்து வரும் பல பின்னூட்டங்கள் என்னை சீர்படுத்த உதவும் என்பதால் அவற்றை நான் மிகவும் மதிக்கிறேன்.எந்த பின்னூட்டத்தையும் தடை செய்ய நான் விரும்புவதே இல்லை.

நீங்கள் சொன்னதுபோல் பின்னூட்டத்துக்கு மட்டுமே நான் எழுதுவதில்லை.சர்ச்சையை கிளப்பும்படி பதிவு போட்டால் பின்னூட்டங்கள் தானே வந்து குவியும்.ஆனால் சுத்தமாக பின்னூட்டமே வராமல் இருந்தால் பதிவர் மனம் தளர்ந்து போவது உண்மை.ஆக ஓரளவு நல்ல எண்ணிக்கையில் பின்னூட்டங்கள் வந்தால் பதிவரின் மனம் நிறைவடையும் என்பது என் எண்ணம்.யாருமே ரசிக்கவில்லை என்றால் எழுதுவது எதற்கு என்ற எண்ணம் படைப்பாளியின் மனதில் உருவாகுமல்லவா?
என்னளவில் நான் ரசிக்கும் அனைத்து படைப்புகளுக்கும் பின்னூட்டம் இட்டு என் பாராட்டை தெரிவிக்க வேண்டும் என நினைப்பவன்.அது என் கொள்கையே தவிர வேறொன்றுமல்ல.

நீங்கள் உங்கள் விமர்சனங்களை எப்போது இட்டாலும் மகீழ்வுடன் விவாதிக்க காத்திருக்கிறேன்.உங்கள் பின்னூட்டங்களில் நல்ல பல கருத்துக்கள் உள்ளன.அவற்றை நான் மிக விரும்புகிறேன்.

வருகைக்கும் கருத்துக்கும் என் நெஞ்சார்ந்த நன்றி

அன்புடன்
செல்வன்

நரியா said...

நன்றி எஸ்.கெ மற்றும் செல்வன்.

தந்களின் பாராட்டுகள் என்னை மிகவும் உற்சாகப்படுத்துகிறது.

நன்றி,
நரியா

palaniappan said...

நன்றி நண்பரே
என்னை அடையாளப் படுத்தி பரவச் செய்தமைக்கு
தொடர்வோம்

palaniappan said...

நன்றி நண்பரே
என்னை அடையாளப் படுத்தி பரவச் செய்தமைக்கு
தொடர்வோம்

Unknown said...

ஐயா
தங்கள் கட்டுரைகளை பலமுறை படித்து அவற்றின் சொற்சுவையில் மயங்கி இருக்கிறேன்.தங்கள் தமிழ்ப்பணி என்றும் தொடர விரும்புகிறேன்.

அன்புடன்
செல்வன்

Unknown said...

பழனியப்பன் ஐயா

உங்கள் பதிவில் தற்போது பின்னூட்டம் இட முயன்றேன்.ஏனோ பிளாக்கர் சொதப்புகிறது.உங்கள் பதிவில் பின்னூட்டம் இட முடிகிறதா என சரிபாருங்கள்.

அன்புடன்
செல்வன்