Monday, May 15, 2006

86.கண்டதும் காதல்

ராமனும் சீதையும் ஒருவரை ஒருவர் கண்டு மையலில் வீழ்வது வெகு பிரசித்தியானது.ஆனால் கம்ப ராமாயணம் முழுக்க அவர்கள் இருவரையும் முதல் முதல் கண்டவர்கள் காதலில் வீழ்ந்த கதைகளை கம்பன் சுவாரசியமாக சொல்லுகிறான். மிதிலையில் ராமன் உலா வருகிறான்.அவனை கண்ட மகளிர் அந்த விநாடியே மையலில் வீழ்ந்தனராம். பஞ்சு அணி விரலினார் தம் படை நெடுங் கண்கள் எல்லாம், செஞ்செவே ஐயன் மெய்யின் கருமையைச் சேர்ந்தவோ தாம்?மஞ்சு அன மேனியான் தன் மணி நிறம், மாதரார் தம் அஞ்சன நோக்கம் போர்க்க, இருண்டதோ? அறிகிலேமால் அத்தனை கருவிழிகள் காகுத்தன் மேனி சேர்ந்து தான் அவன் மேனி கருத்ததோ என வியக்கிறான் கம்பன். ராமனின் முழு உருவையும் பார்த்து மையலில் யாரும் வீழவில்லையாம்.அவன் தோளை கண்டவர் தோளை மட்டுமே பார்த்தனராம்.தோளைகண்டவருக்கு கண்னை அதிலிருந்து எடுக்கவே மனதில்லையாம்.தாளை கண்டார் தாளையே பார்த்தனராம்.அவன் முழு வடிவையும் எந்த வாள் விழியும் காணவில்லையாம்.(அடிமுடி காண முடியாத பரப்பிரம்மத்தின் முழு உருவையும் மானிடரால் காண முடியாதன்றோ?) தோள் கண்டார், தோளே கண்டார்; தொடு கழல் கமலம் அன்ன தாள் கண்டார், தாளே கண்டார்; தடக் கை கண்டாரும், அஃதே; வாள் கொண்ட கண்ணார் யாரே, வடிவினை முடியக் கண்டார்? - அம்புகளை எறிந்து எறிந்து பொன் சிலை போலும் அழகு படைத்த காமனுக்கு அம்புறாத்தூணியே தீர்ந்து போய்விட்டதாம்.இத்தனை பெண்கள் ஒரே நேரத்தில் மையலில் வீழ்ந்தால் அம்புகளுக்கு அவன் எங்கு போவான்?அர்ச்சுனன் போல் அம்புகள் தீரா தூணியையா வைத்திருக்கிறான் காமன்?அம்புகள் தீர்ந்ததால் உடைவாளை எடுக்க வேண்டிவந்ததாம் காமனுக்கு. வையம் பற்றிய மங்கையர் எண்ணிலர், ஐயன் பொற்புக்கு அளவு இலை ஆதலால், எய்யும் பொன் சிலை மாரனும், என் செய்வான்? கை அம்பு அற்று, உடைவாளினும் கை வைத்தான் காதலை மறைக்க எண்ணினாளாம் ஒரு பெண்.மனதை மறைக்கலாம்.முகத்தை கூடவா மறைக்க முடியும்?முகத்தில் தோன்றும் காதல் உணர்ச்சியை அவளால் மறைக்கவே முடியவில்லையாம் புனம் கொள் கார் மயில் போலும் ஓர் பொற்கொடி, மனம் கொள் காதல் மறைத்தலை எண்ணினாள்; அனங்கவேள், அது அறிந்தனன்; - அற்றம் தான், மனங்கள் போல, முகமும் மறைக்குமே? இந்த பெண்களாவது பரவாயில்லை.சீதையை கண்ட ராவனன் நிலை மிகவும் மோசமாகிவிடுகிறது.அதுவும் கண்டதும் காதல் தான்.10 தலை,20 கண்கள் படைத்த ராவனன் சீதையை கண்டதும் தான் தன் 20 கண்களின் சிறுமையை உணர்கிறானாம்.காணக்கண்கோடி வேண்டும் சீதையின் அழகை காண வெறும் 20 கண்கள் தானா என்று அவனுக்கு தோன்றுகிறது.ஆயிரம் கண்களாவது வேண்டாமா இவள் அழகை காண?வெறும் 20 கண்கள் எதற்கு போதும் என வருந்துகிறானாம். 'சேயிதழ் தாமரைச் சேக்கை தீர்ந்து இவண் மேயவன் மணி நிறம் மேனி காணுதற்கு ஏயுமே இருபது? இங்கு இமைப்பு இல் நாட்டங்கள் ஆயிரம் இல்லை!' என்று, அல்லல் எய்தினான் கஷ்டப்பட்டு பிடித்த மூவுலகங்களையும் இவள் காலடியில் ஒப்புவித்துவிட்டு,தன் தேவிமாரையும்,தான் பிடித்த இந்திரன் முதலான தேவ்ர்களையும் இவளுக்கு அடிமையாய் தந்துவிட்டு மூவுலகையும் இவள் ஆள இவளுக்கு நானும் அடிமையாய் இருந்து இனி ஏவல் செய்வேன் என மூவுலகும் ஆளும் லங்காபதி எண்ணுகிறானாம். 'தேவரும், அவுணரும், தேவிமாரொடும், கூவல்செய் தொழிலினர், குடிமை செய்திட, மூஉலகமும் இவர் முறையின் ஆள, யான் ஏவல் செய்து உய்குவென், இனி' என்று உன்னினான் தன் தங்கை சூர்ப்பனகை மீது அவனுக்கு திடீர் பாசம் வந்துவிடுகிறது.அவள் அன்றோ இப்படி ஒரு புவன மோகினியை தனக்கு காட்டினாள்?அவளுக்கு என்ன பரிசு கொடுத்தால் தகும்?தன் ராஜ்ஜியம் முழுவதையும் பரிசாக தந்தாலும் தகுமே என எண்ணுகிறானாம் இராவனன். தளை அவிழ் குழல் இவட் கண்டு தந்த என் இளையவட்கு அளிப்பென், என் அரசு' என்று எண்ணினான்
Post a Comment