Wednesday, October 26, 2016

அஸ்ட்ரநாட்டின் சடலம் மூலம் உயிர்கள் உருவாகமுடியுமா

விண்வெளியில் ஒரு அஸ்ட்ரநாட் மரணம் அடைகிறார் என வைத்துகொள்வோம். அந்த அஸ்ட்ரநாட்டின் சடலம் மூலம் புதியதொரு கிரகத்தில் உயிர்கள் உருவாகமுடியுமா என்ற சுவாரசியமான கட்டுரையை படித்தேன்.

இது இப்போது நடக்கும் சாத்தியகூறு குறைவே. ஆனால் நடக்காது என சொல்லமுடியாது. அடிக்கடி பல அஸ்ட்ரநாட்டுகள் விண்வெளிக்கு செல்கிறார்கள். அதில் யாராவது மரணம் அடைந்தால் அவரது உடலை பூமிக்கு கொண்டுவருவதுக்கு பதில் விண்ணில் ஒரு காப்ஸ்யூலில் மிதக்கும் சடலமாக பூமியின் சுற்றுபாதையை தான்டி அனுப்பினால் என்ன ஆகும்?

ஏன் அப்படி அனுப்பவேண்டும்? ஏனெனில் அவர் அதை விரும்பலாம். உயிலாக எழுதிவைக்கலாம். "நான் விண்பயணத்தில் இருக்கையில் இறந்தால் என் சடலத்தை விண்வெளியிலேயே இருக்கவிடுங்கள்" என எழுதலாம். அல்லது செவ்வாய், நிலாவுக்கு செல்கையில் மரணமடைந்தால் விண்கப்பல் அதன்பின் சுதந்திரமாக விண்வெளியில் அவரது சடலத்துடன் பறக்கும். ஆக இது என்றோ நடக்கும் வாய்ப்பு உண்டு.

இப்படி ஒரு சடலத்துடன் ஒரு காப்ஸ்யூல் விண்வெளியில் பறக்கிறது...அப்ப என்ன ஆகும்?

விண்வெளியில் மிக கொடூரமான குளிர் நிலவுவதால் சடலம் ஒரு எல்லைக்கு மேல் அழுகாமல் பத்திரமாக இருக்கும். அதனுள் இருக்கும் பாக்டிரியாக்கள், மைக்ரோப்புகள் எல்லாம் அக்குளிரில் உறைந்தாலும் அவை மீண்டும் மில்லியன்கணக்கான ஆண்டுகள் கழித்து உயிர்த்தெழும் தன்மை கொண்டவை. அண்டார்டிகாவில் கடும்குளிரில் உறைந்த கடல், ஏரிகளில் மில்லியன்கணக்கான ஆண்டுகளாக உறைந்து, மீண்டும் உயிர்த்தெழுந்த பாக்டிரியாக்கள், மைக்ரோப்புகள் உள்ளன. ஆக இந்த விண்வெளி சடலம் ஒரு விதையை போல அவற்றை பத்திரமாக வைத்திருக்கும்.

அதன்பின் என்ன ஆகும்? முதலில் சடலம் பூமியின் சுற்றுபாதையில் மாட்டாமல் தப்பவேண்டும். அது நடக்கிறது என வைத்துகொண்டால் அது அதன்பின் விண்வெளி அனாதைதான். மிதந்துகொண்டே இருக்கும். செவ்வாய், வியாழன் என கோள்கள் எதன் சுற்றுபாதையிலும் மாட்டாது சூரிய குடும்பத்தை அது கடப்பது அபூர்வமே. ஆனால் நடக்காது என சொல்லமுடியாது. விண்கப்பல் எதேனும் ஒன்றால் இது சாத்தியமாகலாம்.

அப்படி சூரியகுடும்பத்தை தாண்டி அடுத்துள்ல ஆண்ட்ரோமிடா காலக்சிக்கு அது ஒரு மில்லியன் ஆண்டுகளில் போய்சேர்கிறது என வைத்துகொள்வோம். அங்கே ஏதோ ஒரு கிரகத்தின் புவியீர்ப்பு விசையில் அது மாட்டுகிறது. மாட்டி கீழே இழுபடுகிறது.

அதன்பின் அடுத்த சவால் அது எரியாமல் கீழெ இறங்கவேண்டும். இறங்கி பூமியை மோதும் அதிர்ச்சியில் பெட்டி அல்லது விண்கலன் சுக்குநூறாக உடைந்து சடலம் புதியதொரு பூமியில் விழுந்தால், அங்கே இந்த நுண்ணுயிர்கள் உயிர்பெற்று புதியதொரு உலகில் ஏலியன் உயிரினமாக அவை உருவாகும் என்கிறார்கள்.

ஒரே சவால்: இந்த புதியபூமி வீனஸ் அல்லது மெர்க்குரி போல உயிர்கள் சுத்தமாக வாழமுடியாத வெப்பத்தில் இருக்ககூடாது. அங்கே கடலோ, நீரோ, பனியோ, கடும்குளிரோ, சகாராவுக்கு ஒப்பான வெப்பமோ என எது இருந்தாலும், அப்பூமியில் மைக்ரோப்புகள் பிழைத்து தளிர்த்துவிடும். அதன்பின் சில பில்லியன் ஆண்டுகளில் அவை மனிதர்களை விட சிறப்பான பரிணாம வளர்ச்சியை எட்டலாம். பூமியில் உயிர்கள் இதேபோல ஒரு செல் உயிரினமாக தான் தோன்றின.

அல்லது மைக்ரோப்புகள் கூட பிழைக்க முடியாத அளவு பல மில்லியன் ஆன்டுகள் கழித்து சடலம் போய் சேர்ந்தாலும், சடலத்தில் உள்ல புரதம், கொழுப்பு, ஆகிய அமினோ அமிலங்கள் மூலமாக அந்த கிரகத்தின் மண்,நீரில் வேதிவினை ஏற்பட்டு முதல் செல் உயிரினம் உருவாகலாம் எனவும் ஒரு கருத்தாக்கம் உண்டு.

ஆனால் இது தற்செய்லாக நடப்பதை விட எதோ ஒரு காலக்ஸியை குறிவைத்து சின்னதாக ஒரு காஸ்யூலை உரைய வைத்த செலக்டிவான நுண்ணுயிர்களுடன் அனுப்பினால் வெற்றிக்கான வாய்ப்புகள் இன்னும் பிரகாசம்.

ஆயிரகணகான காப்ஸ்யூல்களை அனுப்பினால் அதில் எதோ ஒன்று எப்போதாவது, ஏதோ ஒரு கிரகத்தில் சில மில்லியன் ஆண்டுகளில் ஒரு புதிய வம்சாவளியை உருவாக்க இயலும்.

ஒரு மில்லியன் ஆண்டுகள் நம் காலகனக்கில் பெரிது. ஆனால் நவீனமனிதனுக்கு சற்று மூத்த மனிதன் 1 மில்லியன் ஆண்டுக்கு முன்பு பூமியில் நடமாடினான். ஆக புவியின் காலகணக்கில் 1 மில்லியன் ஆன்டு என்பது ஒன்றுமே இல்லாத எண்.

ஆனால் நம் பூமியில் ஏன் உயிர்கள் இப்படி தோன்றிருக்ககூடாது என விஞ்ஞானிகள் கேட்கிறார்கள். கடல்கள், மலைகள் உருவாகி பூமியில் உயிர்வாழ தோதான சூழல் இருந்து, ஆனால் உயிர்கள் தோன்றாத நிலையில் ஏன் இப்படி ஒரு காப்ஸ்யூல் பூமியில் வீழ்ந்து முதல் உயிரினம் தோன்றியிருக்ககூடாது? அது ஏலியன் காப்ஸ்யூலாக இருக்கும் அவசியம் கூட இல்லை. செவ்வாயில் முன்பு கடல்களும் ஏரிகளும் இருந்தன. அங்கே நுண்ணுயிரிகள் இருந்திருக்கலாம். செவ்வாயில் விண்கல் மோதி செவ்வாயின் பலதுகள்கள் விண்ணில் சிதறி அவற்றில் சில பூமியையும் வந்தடைந்துள்ளன. அக்கல் ஒன்றில் நுண்ணுயிர்கள் இருந்திருந்தால் அவை பூமியில் உயிர்களை முன்பு தோற்றுவித்திருக்கலாம். சில நுண்ணுயிர்கள் விண்வெளியின் கடும்குளிரை தாங்ககூடியவை.

சரி இது நடக்குமா? சடலம் காஸ்யூலில் வைத்து அனுப்பப்பட்டு வேறு கிரகத்தில் உயிர்கள் தோன்றுமா?

மில்லியன் ஆண்டுகள் கழித்து இதற்கான விடை தெரியும். அதுவரை பேலியோ டயட் எடுத்தால் நாம் உயிர்வாழ்ந்து இதை நேரடியாக பார்க்கவும் இயலும் :-) காமன் மேன் டயட் எடுத்தால் சிரமம் தான் :-)


No comments: