Sunday, January 17, 2016

தமிழர் மறந்த தமிழ்க்கடவுளர்: பலராமனும், நப்பின்னையும்


தமிழர் மறந்த தமிழ்க்கடவுளர்: பலராமனும், நப்பின்னையும்

பலராமனை நம்மில் பெரும்பாலானோர் மகாபாரதத்தின் மூலமே அறிவோம். பாரதத்தை படித்தால் பலராமன் ஹீரோவா, வில்லனா என்றே கண்டுபிடிக்க முடியாது. பலராமன் கண்ணனின் அண்ணன். தசாவதாரத்தில் ஒரு அவதாரம். ஆனால் கிட்டத்தட்ட கெஸ்ட்ரோல் தான். கடைசியில் துரியோதனனுக்கு சப்போர்ட் வேறு செய்வார். ஆக வடமொழி இலக்கியங்களை படித்தால் பலராமன் மேல் நமக்கு பெரிய ஈர்ப்பு வருவதில்லை என்பதே உண்மை.

ஆனால் தமிழ் இலக்கியங்களை படித்தால் நமக்கு தெரியவரும் உண்மை என்னவெனில் பலராமன் தொல்காப்பியத்தில் வணங்கபட்ட வேளாண்மைக்கடவுள் என்பதே. தமிழர் பண்டிகை எனப்படும் பொங்கலின் துவக்கத்தில் கொண்டாடப்படும் போகியின் தெய்வம் அவனே. மதுபானபிரியனான பலராமனே முன்பு போகி என அழைக்கபட்டதாக பாண்டியர் கல்வெட்டு கூறுகிறது. மதுபானபிரியனான பலராமனை வணங்கி மதுவை படைத்து கொண்டாடப்படும் பொங்கல் மதுப்பொங்கல் என அழைக்கபடும். இன்றைக்கும் பல ஊர்களில் அம்மன் கோயிலில் மதுப்பொங்கல் கொண்டாடபடுவதை காணலாம்.

பலராமன் என சமஸ்கிருதத்தில் அழைக்கப்பட்டாலும் அவனது தமிழ்ப்பெயர் வாலியோன் என்பதே. வாலியோன் என்றால் வெண்ணிறமுள்ளவன் எனப்பொருள். வெண்ணிறம் என்றவுடன் உடனே பஞ்சாபியரின் கோதுமை நிறம், அதனால் அவன் வடமாநிலத்தவன் என கற்பனை செய்யவேண்டாம். நம் ஊரில் கொஞ்சம் வெள்ளையாக இருந்தாலே வெள்ளையம்மா, வெள்ளையத்தேவன், சிகப்பி என்பது போன்ற பெயர்களை சூடுவது வழக்கம் என்பதை உணர்ந்தால் இப்பெயரின் காரணம் புரியும். இவனது தம்பியான மாயோன் கருநிறத்தவன். அவனோடு ஒப்பிடுகையில் வாலியோன் சற்று வெண்மை நிறத்தவன்.




மாயோனும், வாலியோனும் அன்றைய விவசாயக் குடிகளின் இரட்டை தெய்வங்கள். இதை நற்றிணை

மாயோன் அன்ன மால்வரைக் கவாஅன்
வாலியோன் அன்ன வயங்குவெள் அருவி (நற்றிணை 32)

எனக்கூறும்.

மாயோன் - கண்ணன், அன்ன- போன்ற, மால்வரைகவாந் மலைப்பக்கம், வாலியோந் பலதேவன் அன்ன- ஒத்த, வயங்குவெள் அருவி- வெண்ணிறமுடைய அருவி

அதாவது கருமலையில் வீழ்கின்ற வெள்ளருவியை பார்த்து "இம்மலை கண்ணனின் கருமை நிறத்தை ஒத்ததாக இருக்கிறது. அதில் விழும் வெண்ணிற அருவி வாலியோனை ஒத்து இருக்கிறது" என இந்த நற்றிணைப்பாடல் கூறுகிறது

பலராமனின் நிறம் வெள்ளை. ஆயுதம் கலப்பை. ஆனால் அவனது கொடி வடநாட்டில் எங்கேயும் காணமுடியாத தமிழ்நாட்டில் மட்டுமே காணக்கிடைக்கும் பனைமரக்கொடி. இதனால் சங்க இலக்கியங்கள் அவனை பனைக்கொடியோன் என அழைத்தன.

நாஞ்சில் என்றால் கலப்பை. கலப்பையை ஏந்திய பலதேவனை "நாஞ்சில் வலவன்" எனக்குறிக்கும் வழக்கமும் சங்க இலக்கியத்தில் காணப்படுகிறது. (காண்க: "நாஞ்சில் வலவனிறம் போல பூஞ்சினை..." எனத்துவங்கும் .கார் நாற்பது பாடல்)

தமிழ்நாட்டு வாலியோன் வடநாட்டில் பலராமனானது எப்படி என யோசித்தால்

தமிழில் வங்கம், வடக்கே பங்கம் (பங்க்ளாதேஷ்) என வ, ப ஆவது போல வாலியோன் திரிந்து பலராமன் ஆகியிருக்கலாம் என யூகிக்கலாம்.

பலராமன் கண்ணனின் அண்ணன் மட்டுமல்ல, விளையாட்டுதோழனும் கூட. இளவயதில் கண்ணன், பலராமன் என்ற இரட்டையருடன் சேர்ந்த மூன்றாம் ஒரு விளையாட்டு தோழி உண்டு. அவரே நப்பின்னை. இந்த மூவரும் ஆயர்குடியில் விளையாடி மகிழ்ந்தவர்கள்.

நப்பின்னை யசோதையின் அண்ணன் மகள். யசோதையின் அண்ணன் கும்பகன். அவன் மகள் நப்பின்னை. கண்ணனுக்கு மாமன் மகள். "நந்தகோபாலன் மருமகளே நப்பின்னாய்" என கோதைநாச்சியார் இவளை அன்புடன் அழைக்கிறார். நப்பின்னை மற்றும் கண்ணனின் காதல் தெய்வீக காதல் என அறிகிறோம். இவள் கண்னனை விட்டு பிரிய மனமே இல்லாதவள். கண்ணனை தன் பேச்சை கேட்கவைக்க அவளுக்கு பேசவேண்டிய அவசியம் கூட இல்லை. மையேந்திய விழியால் ஒரு கட்டளையிட்டாலே போதும். அவன் அதை மீறமாட்டான்.


 "கந்தங் கமழும் குழலி (நறுமணமுள்ள கூந்தலை உடையவளே), மைத்தடங்கண்ணிணாய் (மையேந்திய விழியால் கணவனை கட்டுபடுத்துபவளே) எத்தனை போதும் உன் மணாளனை பிரியமாட்டாயா?" என கோதை நாச்சியார் இவளை அன்புடன் கடிகிறார்.

மாமன் மகளை மணக்கும் முறையுள்ள தமிழகத்தில் மட்டுமே சிறப்பிக்கபடும் தமிழ்த்தெய்வம் நப்பின்னை. வடக்கே நப்பின்னை என்றால் யாருக்கும் தெரியாது. ராதை என்றால் தான் தெரியும். நப்பின்னையை போல ராதையும் ஆயர் குலத்தவளே. ஆக நப்பின்னையே ராதையாக ஆகியிருக்கலாம் என்றும் யூகிக்கலாம்.

சிறுவராக இருக்கையில் நப்பின்னையும், கண்ணனும், பலராமனும் ஆயர்பாடியில் தெருக்களில் குறவைகூத்து ஆடி மகிழ்ந்தார்கள். இச்செய்தியை சிலப்பதிகாரத்தில் காணலாம்

மண்ணின் மாதர்க்கு அணி ஆகிய
கண்ணகியும் தான் காண
ஆயர் பாடியில் எருமன்றத்து
மாயவனுடன் தம்முன் ஆடிய
வாலசரிதை நாடகங்களில்
வேல் நெடுங்கண் பிஞ்ஞையோடு ஆடிய
குரவை ஆடுதும் யாம்

இதே போல நப்பின்னை கண்ணனுடன் பந்து விளையாடியுமிருக்கலாம் என தெரிகிறது. இதை கோதை நாச்சியார்

"மாதவிப் பந்தல் மேல் பல்கால் குயில் இனங்கள் கூவின காண்
பந்தார் விரலி! உன் மைத்துனன் பேர் பாட"

என அழைக்கிறார் (பந்தார் விரலி..பந்தை பற்றியிருக்கும் விரல்களை உடையவள்)

இளவயதில் கண்ணன் உடலெங்கும் புழுதி பூசிக்கொண்டு குளிக்கவராமல் அடம்பிடிக்க அவன் தாய் யசோதை அவனைப்பார்த்து "அட வெட்கம் கெட்டவனே...இப்படி உடலெங்கும் புழுதிபூசிக்கொண்டு நின்றால் உன் மாமன் மகள் நப்பின்னை உன்னை பார்த்து சிரிக்க மாட்டாளா? குளிக்க வாடா.." என்கிறாள்.

பூணித் தொழுவினிற் புக்குப்
புழுதியளைந்த பொன்மேனி
காணப் பெரிதும் உகப்பன்
ஆகிலும் கண்டார் பழிப்பர்
நாண் இத்தனையும் இலாதாய்!
நப்பின்னை காணிற் சிரிக்கும்
மாணிக்கமே என் மணியே!
மஞ்சனம் ஆடநீ வாராய்! (பெரியாழ்வார் திருமொழி)

இப்படி சிறுவயது முதல் பழகி காதலித்து ஈருடல் ஓருயிராய் வளர்ந்த நப்பின்னை- கண்ணன் காதல் கல்யாணத்தில் முடியவேண்டுமல்லவா? ஆனால் அன்று ஆயர்குலத்தில் பெண்கள் ஏறுதழுவும் ஆணையே மணக்கும் விதிமுறை வழக்கில் இருந்தது

கொல்லேற்றுக் கோடஞ்சுவானை மறுமையும்
புல்லாளே ஆய மகள (கலித்தொகை)

கூடிக் கொல்லுகின்ற ஏற்றினுடைய (காளையினுடைய) கோட்டிற்கு (கொம்புக்கு) அஞ்சும் பொதுவனை மறு பிறப்பினும் ஆயர் மகள் தழுவாள்- நச்சினார்க்கினியர் உரை

ஆக இவ்விதிமுறைப்படி நப்பின்னையை மணக்க கண்ணன் ஏறுதழுவவேண்டும். இதன்படி கண்ணன் ஒன்றல்ல, ஏழு ஏறுகளை தழுவி தன் காதலியான நப்பின்னையை மணந்தான்

சூட்டுநன் மாலைகள் தூயன வேந்தவிண் ணோர்கள்நன்னீர்

ஆட்டியந் தூபம் தராநிற்க வேயங்குஓர் மாயையினால்

ஈட்டிய வெண்ணை தொடுவுண்ணப் போந்திமி லேற்றுவன்கூன்

கோட்டிடை யாடினை கூத்துஅட லாயர்தம் கொம்பினுக்கே. (பிரபந்தம்)

(பொருள்: வலிமையையுடைய இடையரது குலத்திற் பிறந்த பூங்கொம்புபோன்ற மகளான நப்பின்னையை மணஞ்செய்து கொள்வதற்காக, முசுப்பையுடைய, (ஏழு) எருதுகளினுடைய வலியவளைந்த கொம்புகளின் நடுவிலே கூத்தாடி யருளினாய்)

இப்படி ஏழு காளைகளையடக்கி நப்பின்னையை மணம் செய்தான் கண்ணன். நப்பின்னையும், கண்ணனும், பலராமனும் குரவைக்கூத்து ஆடிய காட்சி தான் திருவுருவ சிலையாக பூரி ஜெகன்னாதர் கோயில் சிற்பமாக சித்தரிக்கபட்டு உள்ளது. ஆனால் நப்பின்னையை அறியாத வடக்கே அது கண்ணனின் தங்கையான சுபத்திரையாக கருதப்படுகிறது. பூரி ஜெகன்னாதர் கோயிலை 12ம் நூற்றாண்டில் கட்டியவர் அன்றைய சோழநாட்டின் பகுதியான கங்கநாட்டை சேர்ந்த அனந்தவர்ம சோழ கங்கர் என்பவர். இவர் வேறு யாருமல்ல ராஜேந்திர சோழனின் மகள் வயிற்று பேரன். கங்கநாட்டு மன்னர்.

பூரி ஜெகன்னாதர் கோயிலில் நிற்கும் குரவைக்குத்தாடும் கண்ணன், நப்பின்னை, பலதேவர் சிற்பங்கள் இன்று இஸ்கான் ஆலயங்களில் உலகெங்கும் காணக்கிடைப்பது மகிழ்ச்சியான விசயம்.




No comments: