Sunday, November 01, 2015

பாண்டாகரடியும் பரிணாமமும்


சீனாவில் உள்ள பாண்டாகரடிகள் மேல் உலகமே பைத்தியமாக இருப்பதும், அதற்கு பல நூறு கோடிகள் செலவிடபடுவதும் பலருக்கும் எரிச்சலை கிளப்பி, விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது. இதன் இரு கோணங்களை இப்போது காண்போம்.

பின்புலம்: பாண்டாகரடி பிளாக் அன்ட் ஒயிட் நிறத்தில் அப்பாவிமாதிரி காட்சியளிக்கும் ஒருவகை கரடி. உலகில் சீனாவில் மாத்திரமே பாண்டாகரடிகள் உள்ளன. கரடிகள் மாமிச உண்ணிகள் எனினும் உலகின் ஒரே தாவரபட்சிணி பாண்டா என்பதால் அது விஞ்ஞானிகளிடையேயும், பொதுமக்களிடையேயும் பான்டாவை நன்றாக பிரபலம் ஆக்கிவிட்டது. அதிலும் பாண்டா சாதா சைவம் அல்ல. உணவாக மூங்கில் குருத்துக்களை மட்டுமே சாப்பிடும். தினமும் ஒரு பாண்டாவுக்கு குத்துமதிப்பாக 14 கிலோ மூங்கில் குருத்துக்கள் தேவைப்படும்.




ஆனால் காடுகள் அழிவால் பாண்டாகரடிகள் எண்ணிக்கையும் குறைந்து வருகிறது. சீனாவில் ஒரு நானூறு ஐணூறு பாண்டா மற்றும் உலகின் பல்வேறு ஜூக்களில் ஒரு 100 பாண்டாகரடிகள் என மொத்தமே ஆயிரத்துக்குள் தான் பாண்டாவின் எண்ணிக்கை இருக்கிறது. அதிலும் உலகில் உள்ள ஜூக்களில் உள்ள பாண்டாகரடிகள் அனைத்துமே சீனாவுக்கு தான் சொந்தம். அவற்றை சீனா ஜூக்களுக்கு கடனாக மட்டுமே கொடுத்துள்ளது. பாண்டாக்களுக்கு ஜூவில் குட்டிகள் பிறந்தால் அதையும் சீனாவுக்கு திருப்பி கொடுத்துவிடவேண்டும்.

பாண்டாகரடிகளை மக்கள் நேசிக்க காரணம் என்ன?

1) அவை அழகாக இருப்பது தான்

பாண்டாகரடிகளை சில விஞ்ஞானிகள் வெறுக்க காரணம் என்ன?

1) அது கரடிகளில் ஒருவகை மட்டுமே. இதுக்கு ஏன் இத்தனை ஆயிரம் கோடியை செலவு செய்யணும்?

2) அது டயட்டில் ரொம்ப செலக்டிவா இருக்கு. மூங்கில் குருத்தை மட்டுமே சாப்பிடுவேன்னா அது என்ன வகை டயட்?

3) பான்டா ஒரு சாமியார் கரடி. ஜூவில் இனப்பெருக்கம் செய்யலாம்னு ரெண்டு கரடியை ஒண்னாவிட்டால் அது பிரம்மசரிய விரதம் அனுஷ்டிக்குது. உலகில் ஜூக்களில் பிறந்த பான்டா என இரண்டே இரண்டு பாண்டாதான் இருக்கு..இப்படி இருந்தால் அந்த இனத்தை எப்படி காப்பாற்றி கரைசேர்ப்பது?

4)பாண்டா படுசோம்பேறி. நாள் முழுக்க தூங்கிட்டே இருக்கும். தினம் 40 தடவை டூபாத்ரூம் போகும்.

5)ஆக இத்தனை டார்ச்சர் கொடுக்கும் பாண்டாகரடியை காப்பாத்துவதுக்கு பதில் அந்த காசில் எதாவது வேறு மிருகத்தை காப்பாத்தலாமே?

பாண்டாகரடி மேல் உள்ள குற்ரசாட்டுக்களை ஒவ்வொண்ணா ஆராயலாம்.

1) பாண்டா ஏன் மூங்கில் குருத்தை மட்டுமே சாப்பிடுவேன்னு அடம்பிடிக்குது?

பரிணாம வளர்ச்சியே காரணம்...ஒரே காட்டில் சிம்பன்ஸியும், கொரில்லாவும் வசிக்கையில் சிம்பன்ஸி மாமிசம் சாப்பிட்டால், அதனோடு போட்டிபோட்டு இறைச்சியை தின்னாமல் கொரில்லாக்கள் சைவ உணவுக்கு பழகிவிட்டன. அதே மாதிரி மற்ற கரடிகள் புலாலை தேடி, தேடி உண்ணுகையில், அவை உண்ணாத மூங்கில் குருத்தை உண்ண பாண்டாக்கள் பழகிவிட்டன. இதனால் போட்டி, மோதல் இன்றி ஒரே காடுகளில் இருவகை மிருகங்கள் வேறு வகை உணவுகள் மூலம் சர்வைவ் ஆவது சாத்தியமானது

மற்றபடி இயற்கையில் எந்த வகை உணவுகள் வீணாக போகிறதோ, அதை எக்ஸ்ப்ளாயிட் செய்ய இன்னொரு உயிரினம் தோன்றியே தீரும். உதாரணமாக மரபிசினில் ஏராளமான பூச்சிகள் முட்டை போடும். அதனால் மரப்பிசின் ஊட்டசத்துக்கள் நிரம்பிய அதியற்புத உணவாகும். இதனால் ஒரு பறவை மரத்தை குத்தி எடுத்து மரபிசினை உண்ணும் வகையில் மூக்கை நீளமாக வளர்த்தது. அதுவே மரங்கொத்தி பறவை. மரங்கொத்தி இல்லாத மடகாஸ்கர் தீவில் லெமூர் குரங்குகள் மரப்பிசினை தோண்டி எடுக்கும் அளவு நீளமான விரல்களுடன் பரிணாம வளர்ச்சியில் உருவாகின. ஆக ஒரு உணவு ஏராளமாக இருக்கும் பகுதியில் அதை வீணாக்காமல் உண்ண இன்னொரு உயிரினம் தோன்றும் என்பதே இயற்கை நியதி.

மூங்கிலை உண்பது இப்போது பைத்தியகாரத்தனமாக இருந்தாலும்..மூங்கில் புல்வகை. ஒரு காலகட்டத்தில் ஏராளமாக செழித்து வளர்ந்தது. மூங்கில் மரத்தில் ஏறி குருத்தை உண்ணும் சக்தி ஆடு,மாடு,மான்களுக்கு கிடையாது. மூங்கில் இலை மற்ற இலைகளைபோல் அன்றி ஏராளமான புரதம் உள்ள இலையாகும். அதனால் போட்டியின்றி கிடைக்கும் அற்புதமான ஊட்டசத்தை உண்ணும் வாய்ப்பு பாண்டாக்களுக்கு கிடைத்தது. பாண்டாக்கள் உலகில் தோன்றி 30 லட்சம் ஆன்டுகள் ஆகின்றன. நாம் தோன்றி 20 லட்சம் ஆன்டுகளே ஆகின்றன. ஆக அவை நமக்கும் முன்பிருந்தே மூன்கில் இலையை நம்பி சர்வைவ் ஆகிவருபவை

2) பாண்டா ஏன் ரொம்பநேரம் தூங்குது?

சில வகை மிருகங்கள் ஆறுமாதம் வரை துங்கி ஹைபர்நேட் செய்யும். காரணம் குளிர்காலத்தில் உணவுகிடைப்பது சிரமம். அப்ப முழிச்சிருந்தால் நடந்து, ஓடி நிறைய எனெர்ஜி வேஸ்ட் ஆகும். அதனால் எனெர்ஜியை பாதுகாக்க கோடையில் நல்லா புல்கட்டு கட்டிட்டு, குளிர்காலத்தில் ஹைபர்நேட் எனப்படும் ஆழ்தூக்கத்துக்கு போய்விடும். ஆக அதிக உறக்கம் என்பது ஒரு சர்வைவல் ஸ்ட்ராடஜியே

3) பாண்டா ஏன் ஜுவில் செக்ஸ் வைத்துகொள்வதில்லை?

ஜூவில் ஒரு ஆணையும், முன்பின் பழக்கமில்லாத பெண்ணையும் பிடிச்சு கூன்டில் அடைச்சு செக்ஸ் வெச்சுக்கன்னா அது எப்படி வெச்சுக்கும்? அது மனசுக்கு பிடிக்க வேண்டாமா? அதை தன் மனதுக்கேற்ற காதல் ஜோடியை தேடி கல்யாணம் செய்யவிடாமல் இப்படி ஜூ அதிகாரிகளால் நிச்சயிக்கபட்ட நிர்ப்பந்த கல்யாணத்துக்கு அதை ஒத்துக்கொள்ள வைக்க முயல்வது எந்த விதத்தில் சரி?

ஆக மனிதர்கள் செய்யும் தவறுகளுக்கு அப்பாவி பாண்டாகரடி மேல் பழிபோடுவதை நிறுத்துவோம். அதன் இருப்பிடத்தை அழிக்காம அதை இயற்கையா வாழவிட்டாலே அது தன் சர்வைவலை தானே பார்த்துக்கும்.

No comments: