Thursday, June 04, 2015

சமணத்தின் வரலாறு

ஜைனத்தின் வரலாறு





ஜைன மதத்தின் உண்மையான ஸ்தாபகர் என மகாவீரரைக் கூறலாம். இவரது காலம் சுமார் கிமு ஆறாம் நூற்றாண்டு. ஆனால் மத ஸ்பாபகரான இவரை கடைசி தீர்த்தங்கரர் என ஜைனர்கள் கருதுகிறார்கள். இவருக்கு முன் 23 தீர்த்தங்கரர்கள் இருந்ததாக கூறுகிறார்கள். ஜைனர்கள் வரலாற்றை எடுத்துக்கொண்டால் மகாவீரருக்கு முன் இருப்பதெல்லாம் நம்பகமானதாக தெரியவில்லை. உதாரணமாக ரிஷபதேவர் 2 மைல் உயரம் இருந்ததாகவும், பலகோடி ஆண்டுகள் அவரது ஆயுள் இருந்ததாகவும் கூறுவார்கள். ஆனால் பின்னாளில் ஒவ்வொரு தீர்த்தங்கரரின் ஆயுளும் குறைந்துகொண்டே வந்து பார்சுவநாதர் எனும் மகாவீரருக்கு முந்தைய தீர்த்தங்கரர் கிமு 8ம் நூற்ராண்டில் பிறந்து 100 ஆண்டுகள் மட்டுமே வாழ்ந்ததாக குறிப்புகள் உள்ளன. மகாவீரருக்கு முன் இருந்த தீர்த்தங்கரர்களில் இவர் மட்டுமே வரலாற்று நாயகனாக இருக்கும் வாய்ப்புகள் உள்ளன. பிறர் கற்பனை கதாபாத்திரமாக இருக்கலாம்

பேராசிரியர் ஜேகோபி முதலானோர் பார்சுவநாதரையே உண்மையான ஜைன மத ஸ்தாபகராக கருதுகிறார்கள். பார்சுவநாதர் ஜைனர்களுக்கு நான்கு விதிகளை விதித்தார்

எவ்வுயுரையும் துன்புறூத்தலாகாது
உண்மை பேசவேண்டும்
திருடகூடாது
சொத்து வைத்திருக்ககூடாது

பார்சுவநாதர் ஜைன துறவிகளை மேலாடையும், கீழாடையும் அணிய அனுமதித்தார். அவர்கள் திருமணத்தை தடுக்கவில்லை. மகாவீரர் ஒருபடி மேலே போய் ஐந்தாம் விதியாக "திருமணம் செய்யாதிருத்தல்" என்பதையும் கொண்டுவந்து சன்னியாசிகள் உடையையும் துறக்கவேண்டும் எனக்கூறினார். ஆக பார்சுவநாதரை ஜைன மதத்தின் ஸ்தாபகர் என்றால் மகாவீரரை அதன் சீர்த்திருத்தவாதி என அழைக்கலாம்.

ஜைனத்தின் பழைய நூல் ஒன்று இந்த சீர்திருத்தங்களால் ஜைனமதத்தில் பிளவு ஏற்பட்டதாக குறிப்பிடுகிறது. மகாவீரர் காலத்துக்கு பின் மகாவீரரின் சீடரான கவுதமர் என்பவரும் கேசின் எனும் பார்சுவரின் சீடரும் சந்தித்து பேசி இந்த வேறுபாடுகளை ஆராய்ந்தார்கள். இன்றைய ஸ்வேதாம்பரர் எனும் ஆடை அணியும் ஜைனர்கள் பார்சுவநாதரின் வழி வந்தவர்கள் என்றும் திகம்பரர்கள் மகாவீரரின் வழி வந்தவர்கள் எனவும் கருதலாம் என சில வரலாற்று ஆய்வாசிரியர்கள் கருதினாலும் இந்த இரு பிரிவுகளில் உருவான காலகட்டம் மிக பிந்தைய காலகட்டம் என்பதால் இது எந்த அளவு உண்மை என்பது சந்தேகத்துகுரியது

ஜைனர்களுக்கும், பவுத்தர்களுக்கும் இடையே அன்று நல்லுறவு நிலவவில்லை. மகாவீரரும், புத்தரும் சமகாலத்தவர் என கருதபட்டாலும் மகாவீரர் புத்தர் தன் பிரசாரத்தை துவக்கு முன்பே இறந்துவிட்டார் என கூறலாம். அதற்கேற்றார்போல ஜைன நூல்கள் பவுத்தம் பற்றி எதுவும் கூறவில்லை எனினும் பவுத்த நூல்கள் ஜைனர்களுக்கும், பவுத்ததுக்கும் இடையே எழுந்த விவாதங்களை குறிப்பிடுகின்றன. மகத நாட்டின் சக்ரவர்த்தி அஜாதசத்ரு மகாவீரரை பலமுறை தரிசித்து ஜைனர் ஆனதாக ஜைன இலக்கியங்கள் கூறுகின்றன. மகாவீரர் 30 ஆண்டுகள் பிகாரில் கிழக்கும், நெடுக்குமாக பிரச்சாரம் செய்து மகதப்பேரரசில் பலரை மதம் மாற்றியிருந்தார்.

ஆனால் பவுத்தநூல்கள் அஜாதசத்ரு மகாவீரரிடம் பல கேள்விகளை கேட்டு விடை தெரியாமல் குழப்ப நிலையில் ஜைன மதத்தில் இருந்து வந்ததாகவும், மகாவீரரின் மரணத்துக்கு பின் புத்தரிடம் அக்கேள்விகளுக்கு விடை கிடைத்ததால் அவர் புத்த மதத்துக்கு மாறியதாகவும் கூறுகின்றன.  உபாலி நாட்டரசர் ராஜகிருஹர் எனும் சமணர் புத்தரையே சமண சமயத்துக்கு மாற்றமுயன்றதாகவும் தெரிகிறது. ஆனால் புத்தர் அவரது கேள்விகளுக்கு எளிதில் விடையளித்து அவரை பவுத்த சமயத்துக்கு மாற்றிவிட்டார்.

ஆனால் இதனால் எல்லாம் அன்று சமணர்களுக்கும், பவுத்தர்களுக்கும் இடையே மோதல் இருந்ததாக பொருள் கொள்ள முடியாது. இந்துமதம் பெரும்பான்மையாக இருந்த காலகட்டத்தில் இவ்விரு மதங்களும் தம் மதத்தை பரப்ப முயன்றன. அதில் சில சமயம் ஒரே நபரை இரு மதங்களும் குறிவைத்ததால் சில விவாதங்கள் எழுந்தன

பின்னாளில் பவுத்தம் ஜைனத்தை விட பெரும் செல்வாக்கு பெற்ராலும் ஜைனம் பவுத்தத்திடம் இருந்து தன்னை காத்துக்கொண்டது. ஆனால் மகாவீரரின் காலகட்டத்தில் மகாவீரருக்கு போட்டியாக மூன்றாவது நாத்திக மதம் ஒன்று எழுந்தது. அதுவே ஆசிவக மதம்

ஆசிவக மதத்தின் ஸ்தாபகர் கோசலர் ஆவார். பிறப்பால் பிராமணரான இவர் துவக்கிய ஆசிவக மதம் குறித்து இன்று நேரடியான எந்த நூலும், தகவல்களும் நம்மிடம் இல்லை. ஆசிவகம் குறித்து தெரிவதெல்லாம் ஜைன, பவுத்த, இந்து சமய நூல்கள் மூலமே

மகாவீரரின் காலக்ட்டத்தில் ஆசீவகம் பெருமளவில் வளர்ந்தது. கோசலர் கோசாலை எனும் மாட்டு தொழுவத்தில் பிறந்தவர். அதனால் அவருக்கு கோசாலர் என பெயர். அவர் மகாவீரரின் அத்யந்த சீடராக ஆறுவருடம் இருந்தார். அதன்பின் மகாவீரருக்கும் அவருக்குமிடையே பிரிவு ஏற்பட்டது. அதன்பின் மகாவீரரிடம் தான் கற்றதை வைத்து கூட மேலும் சில விஷயங்களை சேர்த்து ஆசிவக மதத்தை துவக்கினார் கோசாலர். சிராவஸ்தி நகரில் அவரது செல்வாக்கு பெருமளவில் பெருகியது. பல சமணர்கள் ஆசிவக மதத்தில் சேர்ந்தார்கள். மகாவீரர் சிராவஸ்தி நகருக்கு விஜயம் செய்து கோசாலரை எதிர்கொள்ள சென்று அவரை வாதில் முறியடித்ததாகவும் அதன்பின் கோசாலர் மரணமடைந்ததாகவும் ஒரு குறிப்பு உள்ளது. ஆனால் ஜைன இலக்கியங்கள் கோசாலருக்கு இறப்புக்குபின் மறுபிறப்புக்களில் நேரவிருக்கும் மிகப்பெரும் தண்டனைகளை மகாவீரர் உரைப்பதாக கூறுவதாக் இவ்விரு மதங்களுக்கும் இடையே சுமுக உறவு நிலவவில்லை என அறியலாம்.

கோசாலருக்கு பின் மகாவீரருக்கு எதிராக ஜைனமதத்தில் இருவர் புரட்சி செய்தார்கள். ஒன்று அவரது மகளை மணந்த மருமகனான ஜமாலி என்பவர். அவர் மகாவீரரை விட்டு பிரிந்து தனியே ஒரு மதத்தை துவக்கினார். ஆனால் அவரும் விரைவில் இறந்துவிட அம்மதமும் அழிந்துவிட்டது. அதன்பின் திசகுத்தர் எனும் சீடர் மகாவீரரின் சில கொள்கைகளை பற்றி கேள்வி எழுப்பினார். ஆனால் திசகுத்தர் மனம் மாறினாலும் இறுதிவரை மனம் மாறாமல் ஜமாலி ஜைனராக இல்லாமல் எதிர்ப்புநிலையிலேயே மரணம் அடைந்ததாக ஜைன நூல்கள் கூறுகின்றன

கோசலரின் எதிர்ப்பை பதினாறு வருடம் சமாளித்து வென்றார் மகாவீரர். சிறு மதம் எனும் நிலையில் இருந்த சமணம் ஒரு அரசியல் மாற்றத்தால் மிகப்பெரும் மாற்றம் கண்டது. அன்றைய இந்தியாவின் வல்லரசு மகதம். அதன் மன்னர் பிம்பிசாரர். அவர் மகன் அஜாதசத்ரு. தந்தையைகொன்று ஆட்சிக்கு வந்த அஜாதசத்ரு தன் பிழையால் மனம் கலங்கி நின்ற சமயம் மகாவீரரின் உபதேசத்தால் மனம் மாறி சமணர் ஆகிறார். சமணமதம் அதன்பின் பெருவளர்ச்சியைக்காண்கிறது.

மகாவீரரின் மரணத்துக்கு பிந்தைய சமணத்தின் வரலாறு அடுத்த பதிவில்.....

No comments: