Friday, November 09, 2012

நனவான கனவு உலகம்

1961ல் ட்ரிஸ்டன் ட கந்கா தீவுகளில் எரிமலை வெடிக்கும் அபாயம் இருந்ததால் அந்த தீவில் இருந்த சுமார் 200 பேரை ப்ரிட்டிஷ் அரசு லண்டன் கொண்டுவந்தது. அப்போதுதான் ப்ரிட்டிஷார் பலரும் அப்படி ஒரு தீவு ப்ரிட்டிஷ் சாம்ராஜ்ஜ்யத்தில் இருப்பதையே அறிந்தனர். ட்ரிஸ்டன் மக்களை பற்றி பத்திரிக்கைகள் பத்தி பத்தியாக எழுதின.
 
 
Inline image 1
 
 
ட்ரிஸ்டன் தீவுகள்
 
 

ட்ரிஸ்டன் மக்கள் அதுநாள்வரை கார்களை பார்த்தது இல்லை, தொலைகாட்சியை பார்த்தது இல்லை. ரேடியோ அங்கே வேலை செய்யாது.நாளிதழ் இல்லை. விமானம் இல்லை, படகு மூலம் அங்கே போகமுடியாது. மனித நடமாட்டம் வேண்டுமெனில் அந்த தீவிலிருந்து 2000 மைல் தள்ளி இருக்கும் தென்னாபிரிக்காவின் கேப்டவுனுக்கு தான் போகவேண்டும்.

"லண்டன் பற்றி என்ன நினைக்கிறீர்கள்" என தீவு பெண் ஒருவரிடம் கேட்டதற்கு "லண்டன் நல்ல ஊர். ஆனால் ட்ரிஸ்டன் மாதிரி வராது" என்றார். "இங்கே எதற்கு எடுத்தாலும் பணம் தேவைபடுது. அங்கே எங்களுக்கு எது வேண்டுமோ அது பூமியிலேயே கிடைக்குது"

ட்ரிஸ்டன் பணமே தேவைபடாத ஊர். ஸ்டெர்லிங் பவுன்டு தான் அங்கும் கரன்சி. ப்ரிட்டிஷ் அரசி தான் அதற்கும் அரசி. ஆனால் அந்த ஊரில் அரசியலும் தேவையில்லை, பணமும் தேவையில்லை. தேவைபடும் உணவை அவர்களே விளைவிக்கிறார்கள். கோழிகளும், மாடுகளும் வளர்க்கிறார்கள். கடலில் மீன் கிடைக்கிறது. வீடு கட்டவேண்டுமெனில் ஒட்டுமொத்த தீவும் திரண்டு வந்து கட்டிகொடுக்கிறது.பிக்னிக்/சுற்றுலா போகவேண்டுமெனில் தீவு முழுக்க அழகிய கடற்கரைகளில் பிக்னிக் போகலாம். அப்புறம் எதுக்கு பணம்?

அங்கே யாரிடமும் திருட எதுவும் இல்லாததால் கதவுகளுக்கு பூட்டு என்ற கான்செப்டே இல்லை.
 

200 ஆண்டுகளாக அந்த தீவுகளுக்கு தலைவர், கவர்னர் மாதிரி யாரும் இல்லை. ப்ரிட்டிஷ் அரசு பல வருடங்களாக "கவர்னர், ட்ரிஸ்டன் ட கந்கா" என்ற முகவரிக்கு அஞ்சல்களை அனுப்பி வந்தது. பல வருடங்களாக பதில் இல்லை. என்ன,ஏது என விசாரித்ததில் அந்த கடிதங்களை யாரும் பிரிக்க கூட இல்லை என தெரிந்தது. "இங்கே கவர்னர் என யாரும் இல்லை. புதுசா கவர்னர் என யாராவது வருவார்களோ என நினைத்து பிரிக்கலை" என அப்பாவிகளாக பதில் சொன்னார்கள்.

எந்த தலைமையும் இல்லாமல் தீவு நிர்வாகம் எப்படி நடக்கிறது? நிர்வாகம் என ஒன்று அங்கே இல்லை. அங்கே 200 ஆன்டுகளில் சன்டை, வெட்டு,குத்து என எதுவும் நடந்தது இல்லை.

ஆரோக்கியம்? யாருக்காவது உடல் நலம் சரியில்லை எனில் என்ன செய்வது?

தீவில் அடிப்ப்டை சிகிச்சைகளை அளிக்க பயிற்சி பெற்றவர்கள் உள்ளனர். ஆனால் ஹார்ட் அட்டாக் மாதிரி வியாதி வந்தால் கப்பல் எதாவது ஒன்று அந்த வழியே வந்தால் அதில் ஏறி கேப்டவுன் போகணும்.அதுக்கு எத்தனை மாதம் வேண்டுமனாலும் ஆகலாம். ஆனால் அம்மாதிரி வியாதிகள் யாருக்கும் வருவது இல்லை. தீவில் சர்வசாதாரணமாக நூறு ஆண்டு வாழ்பவர்கள் அதிகம்.

ட்ரிஸ்டன் தீவுவாசிகளின் ஆரோக்கியம் மருத்துவர்கள் பலரையும் வியப்பில் ஆழ்த்தியது. 200 ஆண்டுகளாக 100, 200 பேர் மட்டுமே அங்கே குடியிருக்கின்ரனர். அவர்களுக்குளேயே திருமணம் செய்துகொண்டு இன்ப்ரீடிங் எனப்படும் உறவுமுறைக்குள் நடக்கும் திருமணங்கள் தான் அங்கே அதிகம்.அங்கே இருக்கும் எந்த இரன்டுபேரும் குறைந்தது பத்து தலைமுறையாக ஐம்பது வழிகளில் உறவினர்களாக இருப்பார்கள். ஜெனெடிக் குறைபாடால் தீவில் பலருக்கும் ஆஸ்துமா. ஆனால் இதனால் எல்லாம் யார் ஆரோகியமும் கெடுவது இல்லை.

தீவுவாசிகள் பல் விளக்குவது பற்றி கேட்டதுக்கு அவர்களுக்கு அப்படி என்றால் என்ன என்ரே தெரியவில்லை. அப்புறம் பிரஷ்ஷை வைத்து பல் விளக்குவதை நடித்து காட்டியபோது அவர்களுக்கு ஒரே சிரிப்பு.அவர்கள் பல்துலக்குவதே கிடையாதாம். பல்லை சோதித்ததில் துளி சொத்தை இன்றி அத்தனை ஆரோக்கியமாக இருந்தது. அதற்கு காரணம் நவீன பதப்படுத்தபட்ட உணவை உண்ணாமல் அங்கே இயற்கையாக கிடைப்பதை உண்டு அங்கே பெருமளவில் விளையும் பாலையும், பால்பொருட்களையும் உண்பதே என கண்டுபிடித்தார்கள்.

ட்ரிஸ்டன் ட கந்கா என்பது ஆபிரிக்காவுக்கும், தென்னமெரிக்காவுக்கும் இடையே இருக்கும் தீவு. 1000 மைல் தள்ளி உள்ள செயின்ட் ஹெலினா தீவில் நெப்போலியன் சிறைவைக்கபட்டபோது அவர் தப்பி அருகில் உள்ள தீவுகளில் பதுங்கலாம் என்ற அச்சத்தில் ப்ரிட்டிஷ் அரசு ட்ரிஸ்டன் தீவில் ஒரு காவல்படையை நிறுத்தியது. அவர்களில் க்ரீன் என்பவர் பின்னாளில் தான் அங்கேயே தங்குவதாக வேன்ட அரசு அனுமதித்தது.அப்படி துவங்கியதுதான் ட்ரிஸ்டன் வாழ்க்கை.

ட்ரிஸ்டன்வாசிகளை லண்டனில் குடியேற்ற ப்ரிட்டிஷ் அரசு பல முயர்சிகளை எடுத்தது. பெண்களுக்கு பணம் எண்ணும் வேலை தரப்பட்டது.அவர்களுக்கு அதை எப்படி செய்வது,மக்களோடு எப்படி கலந்து பழகுவது என்பது கூட தெரியவில்லை. இறுதியில் எரிமலை அபாயம் முடிந்தபின் ட்ரிஸ்டன் தீவுவாசிகள் அனைவரும் சொந்த ஊர் திரும்பிவிட்டனர்.லண்டன்வாசிகள் இருவரை காதலித்தா இரு பெண்களை தவிர வேறு யாரும் லண்டனில் வசிக்க விரும்பவில்லை.

ட்ரிஸ்டனில் 19ம் நூற்ரான்டில் வாழ்க்கை எப்படி இருந்ததோ இப்போதும் அபப்டிதான் வாழ்க்கை உள்ளது. உலகின் மிக தொலைவான குடியிருப்பு. டூரிஸ்டுகளை அவ்வப்போது அனுமதிக்கிறார்கள்.

2 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

இந்த தகவல்கள் தெரியாது நண்பரே... அறிந்து கொள்ள வைத்தமைக்கு நன்றி...

ஆத்மா said...

வினோதமானதும் சுவாரஷ்யமானதுமான தகவல்கள்...
பகிர்வுக்கு நன்றி