Friday, November 16, 2012

இந்தியா- ஆட்டோமான் பேரரசு ராஜ்ஜிய உறவுகளின் வரலாறு

இந்தியாவை முஸ்லிம் மன்னர்கள் ஆண்டபோது மேற்கேயும் துருக்கியை ஒரு இஸ்லாமிய பேரரசு ஆண்டுகொன்டிருந்தது. இரண்டும் சுன்னா முஸ்லிம் அரசுகள் என்பதால் அவர்களுக்கிடையே இயல்பான நட்புறவு இருந்தது. ஆனால் இரண்டு சாம்ராஜ்ஜியங்களும் இணைய விடாமல் நடுவே நந்தி மாதிரி ஷியா பாரசிக பேரரசு இருந்தது.

துருக்கியை ஆண்ட ஆட்டோமான் சாம்ராஜ்ஜியம் வடக்கே ஆஸ்திரிய தலைநகர் வியன்னா வரையும், கிழக்கே பாக்தாத் வரையும், மேற்கே எகிப்து வரையும் பரவி இருந்தது. அதற்கு எதிரிகள் என்பது மேற்கே ஐரோப்பாவின் கிறிஸ்தவ மன்னர்கள் மற்றும் கிழக்கே பாரசிக பேரரசு. இந்தியாவை ஆன்ட முகலாயர்களுக்கு அந்த காலக்ட்டத்தில் ஐரோப்பியர்கள் எதிரிகள் அல்லர் எனினும் இந்திய மன்னர்கள் அவர்களுக்கு ஓயாமல் தொல்லை கொடுத்து வந்தனர். பாரசிக, ஆப்கானிய பகுதிகளும் அவர்களுக்கு தொல்லை அளித்து வந்தன.

ஜஹாங்கீர், ஷாஜகான் காலத்தில் ஆட்டோமான் பேரரசு மற்றும் முகலாயரிடயே நல்லுறவு ஏற்பட்டது. தாஜ்மகாலை கட்டி கொடுத்த சிற்பிகளில் பலர் ஆட்டோமான் சுல்தானால் அனுப்பபட்டவர்கள்.பின்னாளில் பாரசிக நாதிர்ஷா டெல்லியை சூறையாடி மயிலாசனத்தையும், கோகினூர் வைரத்தையும் கொள்ளையடித்து வந்தபோது முகலாயருக்கு உதவ அன்றைய ஆட்டோமான் கலிபா மஹ்மூத் பாரசிகர் மேல் படை எடுத்தார். ஆனால் நாதிர்ஷாவின் படைகள் அன்று மிக வலிமை பெற்று விளங்கியதால் அந்த போரில் சுல்தானால் வெற்றி காண இயலவில்லை.

அதன்பின் முகலாய சாம்ராஜ்ஜியம் சரிந்தது. பல ஆண்டுகள் கழித்து ஆட்டோமான் சுல்தான் சலிமுக்கும், பிரெஞ்சு பேரரசர் நெப்போலியன் போனபார்ட்டுக்கும் மைசூர் என்ற அவர்கள் கேள்வியே பட்டிராத ஊரின் மன்னனான திப்பு சுல்தானிடமிருந்து உதவி கோரி தூதுவர்கள் வந்தனர். நெப்போலியன் ப்ரிட்டிஷாரின் பரம விரோதி. சுல்தான் ப்ரிட்டிஷாரின் நல்ல நண்பர். இந்த சூழலில் திப்புவுக்கும் ப்ரிட்டிஷாருக்கும் இடையே சமாதானம் செய்து வைப்பதாக சுல்தான் மடல் அனுப்ப திப்பு அதை பிடிவாதமாக மறுத்தார். திப்புவுக்கு உதவியே ஆகவேன்டும் என்ற வெறியில் நெப்போலியன் சுல்தான் சலீமின் பிடியில் இருந்த எகிப்தை 1798ல் படை எடுத்து பிடித்தார். அன்று சூயஸ் கால்வாய் இல்லை என்பதால் எகிப்தை பிடிப்பவர்கள் இந்திய கடல் வழியில் ஆதிக்கம் செலுத்துவார்கள்.

இப்படி திப்புவால் எகிப்தை இழந்த சலீம் திப்பு மேல் கடும் கோபம் அடைந்தார். அதற்குள் திப்புவின் நிலை கடும் மோசமாகி நான்காம் மைசூர் போரில் தோற்று உயிரை இழந்தார்.

ஆக முகலாய சக்ரவர்த்திகள் முதல் திப்புசுல்தான் வரை பலரும் அடைய முயன்ற ஆட்டோமான் சுல்தான்களின் நட்பு கடைசியில் எதிர்பாராதவிதமாக இன்னொரு இந்திய மன்னருக்கு மேலும் நூறு ஆண்டுகள் கழித்து கிடைத்தது. அவர் தான் ஐதராபாத் நிஜாம்.

ஆட்டோமான் பேரரசின் கடைசி சுல்தான் அப்துல்மஜீத். அவரது மகள் துரு ஷிவாரை மணக்க அன்றைய பாரசிக இளவரசர், எகிப்து இளவரசர் மற்றும் ஐதராபாத் நிஜாமின் மகன் ஆஸம் ஷா ஆகியோர் போட்டி இட்டனர். இவர்களில் ஐதராபாத் நிஜாம் அன்று உலகின் மிக பெரிய பணகாரராக கருதப்பட்டவர். இன்றைய பிரான்சுக்கு சமமான நிலபரப்பை ஆண்டவர். ஆஸம் ஷாவை துரு ஷிவார் மணந்தார்.
 
Inline image 1
முகரம் ஜாவுடன் துரு ஷிவார்
 
அதற்குள் துருக்கியில் புரட்சி நடந்து முஸ்தபா கமல் அட்டாடுர்க் சுல்தானேட் ஆட்சியை அகற்றிவிட்டார். இந்தியாவில் சுதந்திரம் வந்து நிஜாம் ஆட்சி அகற்றபட்டுவிட்டது. துரு ஷிவாரின் மகன் நிஜாம் முகர்ரம் ஜா நேருவுக்கு நல்ல நண்பர். அவருக்கு அரசியலில் நல்ல பதவி அளித்து அல்லது இச்லாமிய நாடுகளுக்கு இந்தியாவின் தூதராக நியமித்து அந்த நாடுகளில் கலிபாவுக்கு உள்ள நல்ல பெயரை இந்தியாவுக்கு சாதகமாக பயன்படுத்த நேரு விரும்பினார். ஆனால் அன்று மிகபெரும் செல்வந்தராக இருந்த நிஜாமுக்கு இம்மாதிரி பதவிகள் எல்லாம் சில்லறை பதவிகளாக தெரிந்தன. சுல்தானாக இருந்துவிட்டு மந்திரியாவது, எம்பி ஆவது, தூதர் ஆவது எல்லாம் யாருக்காவது பிடிக்குமா என்ன?

ஆஸ்திரேலியாவில் அழகாக செட்டில் ஆகி வசித்து வருகிறார் நிஜாம் முகர்ரம் ஜா.


No comments: