Monday, March 19, 2012

மானுடம் கொண்டாடுவோம்- சரித்திரம் படைத்த சாமான்யர்கள்


மானுடம் கொண்டாடுவோம்- சரித்திரம் படைத்த சாமான்யர்கள்

சகஜீவ்யா 

Inline image 1

சகஜீவியா அமெரிக்காவில் வசித்த பூர்விக பழங்குடி இன பெண்மணி. சுமார் 200 ஆண்டுகளுக்கு முன் பூர்விக இந்திய குடிகளுக்கிடையேயான யுத்தத்தில் 12 வயது சிறுமையாக இருந்தபோதே அடிமையாக பிடித்து செல்லபட்டு 13 வயதில் ஒரு பிரெஞ்சுகாரருக்கு மனைவி ஆனார் சகஜேவ்யா. 1804, 1805ல் அமெரிக்காவை ஆராய அமெரிக்க அரசு அமைத்த கிளார்க், லூயிஸ் குழு வடக்கு டகோடா மாநிலம் வந்தது. என்ன முழிக்கிறீர்கள்?அமெரிக்காவை அமெரிக்க அரசு ஆராய்வதா என்றா?ஆம்...அன்றைய அமெரிக்க அரசு கிழக்கு கடற்கரையோரம் தான் இருந்தது. மேற்கு கடற்கரையோரம் வரை உள்ள உள்நாட்டு பகுதிகளை அவர்கள் அறிந்திலர்.அதனால் அதை ஆராய லூயிஸ்,கிளார்க் குழுவினரை அனுப்பி வைத்தனர்.

அந்த குழுவினரை சந்தித்தபோது சகஜீவ்யா கர்ப்பமாக இருந்தார். ஆனால் அதை பொருட்படுத்தாது அவர்களுக்கு உதவ முன்வந்தார். இந்திய குடிகளின் மொழி அறிந்தவர் என்பது குழுவினருக்கு பேருதவியாக இருந்தது. மேற்கு நோக்கி சென்ற லூயிஸ்,கிளார்க் குழுவினரை ஒரு இந்திய குடி வழிமறித்தது. அவர்களிடம் சமாதானம் பேசபோன சகஜீவ்யாவுக்கு இன்ப அதிர்ச்சி அளிக்கும் வகையில் தங்களை மறித்தது தன் உடன்பிறந்த சகோதரனே என்பதையும், அது தான் சிறுவயதில் இருந்து கடத்தபட்ட குடி என்பதையும் அறிந்தார். பிரிந்தவர் கூடினால் பேசவும் வேண்டுமோ? பழங்கதை எல்லாம் பேசிமுடித்து பிரியாவிடை பெற்று லூயிஸ்,கிளார்க்குடன் பசிபிக் சமுத்திரம் வரை சென்று அவர்கள் ஆய்வு வெல்ல உறுதுணையாக இருந்தார்.அதன்பின் லூயிஸும்,கிளார்க்கும் சகஜீவ்யாவை மிசவுரிக்கு அழைத்து வந்து நகர்புறத்தில் குடியேற்றினர். ஆனால் அதன்பின் சகஜீவ்யா 25 வயதில் இறந்துவிட்டார்.

ஆனால் பிற்காலத்தில் கிடைத்த செய்திகளின்படி சகஜீவ்யா தன் கணவனை பிரிந்து மீண்டும் தன் கிராமத்துக்கு திரும்பி இன்னொரு திருமணம் செய்து பாட்டியாகி 84 வயதில் இறந்ததாக இன்னொரு மாற்று கதையாடல் உலா வருகிறது. அதுவே உண்மையாக இருக்கவேண்டும் எனவும் நாம் நம்புவோம்.

20ம் நூற்றாண்டில் சகஜீவ்யா அமெரிக்க அரசால் கலாசார,பாரம்பரிய பிரதிநிதியாக கொண்டாடபட்டு அமெரிக்க வரலாற்றில் அழியாபுகழ் பெற்றார். இன்று அவர் பெயரில் அமெரிக்காவில் மலைகள், ஏரிகள்,குளங்கள்,பூங்காக்கள், ஆறுகள், சிலைகள் பலவும் உள்ளன


லியொ ப்ரிகோ

Inline image 3


லியொ ப்ரிகோ விஸ்கான்ஸின் மாநிலத்தில் பிறந்த ஒரு எளிமையான குடும்பத்தை சேர்ந்தவர். ராணுவ வீரர். வடகொரியாவில் போர்முனையில் தாய்நாட்டுக்காக போரிட்டு வீடு திரும்பிய பின்னர் ஓய்வு பெற்று சிவிலியன் வாழ்க்கைக்கு திரும்பினார். ப்ரிகோ சீஸ் கார்ப்பரேஷன் எனும் கம்பனியில் பிரசிடெண்டாக உயர்ந்து ஓய்வும் பெற்றார்.

அதன்பின் அக்கடா என ரிடையர் ஆகவில்லை. தன்னை சுற்றிலும் இருந்த வறுமையை கண்டார். ஒருபுறம் சூப்பார் மார்க்கட்டுகளும், பேரங்காடிகளும் விற்காமல் போன கேன் உணவுகளை, பாலை, மாமிசத்தை, காய்கறிகளை குப்பையில் கொட்டி கொண்டிருந்தன. அதை பொறுக்க உணவு இன்றி பசியால் வாடும் ஏழைகள் போட்டி போட்டார்கள். "இவர்கள் ஏன் வீணாக போகும் உணவுகளை குப்பையில் கொட்டாமால் ஏழைகளுக்கு அளிக்க கூடாது?" என யோசித்தார். சூப்பர் மார்க்கட்டுகளிடம் சென்று விற்காமல் போன உணவுகளை குப்பையில் கொட்டாமல் தன்னிடம் அளிக்குமாறும், அதை தான் ஏழைகளுக்கு வினியோகிப்பதாகவும் கூறினார்.

"இதற்கு எல்லாம் மேலிடத்தில் உத்தரவு வாங்கவேண்டும்" என கூறி சூப்பர் மார்க்கட்டுகள் மறுத்தன. அதன்பின் மீண்டும் குப்பை தொட்டியில் உணவுகளை அவர்கள் வீச துவங்கினர். அதன்பின் லியோ ப்ரிகோ செய்த செயல் தான் அனைவரையும் அதிர வைத்தது. தானே குப்பைதொட்டியில் குதித்து மீதமான கேன்களை எடுத்து வந்து அதில் தேதி முடியாத கேன்களை ஏழைகளுக்கு வினியோகிக்க துவங்கினார். ஒரு மிகபெரிய கம்பனியின் முன்னாள் பிரசிடெண்ட் இவ்வண்ணம் செய்யலாம என கேட்டதற்கு

"குப்பை தொட்டிக்கு ஏழைகள் போவதை தடுக்க தான் நான் அதற்குள் போகிறேன். இதனால் அவர்கள் சுயமரியாதையும், என் சுயமரியாதையும் இதனால் பத்திரமாக இருக்கும்" என்றார்.

அதன்பின் மனம் மாறிய சூப்பர் மார்க்கட்டுகள் மீதமான உணவுகளையும், கேன்களையும் லியோ ப்ரிகோவுக்கு அளிக்க முன்வந்தன. அதை வைத்து பால்ஸ் பேண்ட்ரி என்ற சூப் கிட்சனை துவக்கி ஏழைகளுக்கு உணவளித்தார் லியோ ப்ரிகோ. ஒருதரம் தன் சூப் கிட்சனுக்கு லாரி நிறைய உணவு கேன்களை ஏற்றி வருகையில் லாரி ஆற்றில் கவிழ்ந்து அவர் இன்னுயிரும் பூமியை விட்டு மறைந்தது. ஆனால் அவரை விஸ்கான்ஸின் மக்கள் இன்னும் மறக்கவில்லை.

1 comment:

மதுரை அழகு said...

பயனுள்ள பதிவு நண்பரே!