Sunday, March 04, 2012

சங்கர்லால்சங்கர்லால்

80களில் விழுந்து விழுந்து படித்த கதாபாத்திரம்.அதன்பின் கிரைம் நாவல், சுஜாதா, ஷிட்னி ஷெல்டன், ஸ்டீஃபன் கிங் என திசைமாறினாலும் முதல் முதலில் மனதில் படிந்த இந்த கதாபாத்திரம் மனதில் பசுமையாக இருந்து வந்தது. சுமார்  20, 25 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் சங்கர்லால் நாவல்கள் சிலவற்றை இந்தியாவிலிருந்து தருவித்து படித்தேன்.

அன்று இருந்த பிரமிப்பு இன்று இல்லை எனினும் இன்றும் ரசிக்க முடிகிறது. நாவலை எடுத்தால் படிக்காமல் கீழே வைக்க முடிவதில்லை. நாவலில் அன்று கண்டுபிடிக்க முடியாத குறைகள் இன்று தெரிகின்றன (உதா: ஜப்பானியர் நிர்வாணமாக தான் நீந்துவார்கள் என்பதுபோன்ற அபத்தங்கள்). இந்த காரக்டரை முதலில் சாதாரண துப்பறியும் நிபுணராக துவக்கிய தமிழ்வாணன் போக போக மிகபெரும் ஹீரோ வர்ஷீப்பை இதற்கு அளித்துள்ளார். திருமணமாகாத இளைஞனாக சங்கர்லாலும், போலிஸ் இன்ஸ்பெக்டராக வரும் வகாப்பும், டீ வைத்து வரும் மாதுவும் வரும் நாவல்கள் நன்றாக உள்ளன. அதன்பின் காரக்டர் பிரபலம் ஆக, ஆக சங்கர்லாலுக்கு பணம் சேர்கிறது. 13 லட்சம் ரூபாயில் தனி விமானம் நிறுத்தும் ரன்வேயுடன் எஸ்டேட் வாங்குகிறார் (எந்த காலமோ?).

42 லாரிகளில் பொருட்களை எஸ்டேட்டுக்கு கொண்டு செல்கிரார். அவர் பழைய வீட்டில் இருந்து புதிய வீட்டுக்கு செல்வதை இந்திய அரசின் திரைப்படதுறை படம் பிடிக்கிறது.வழியெங்கும் போலிஸ் காவல், தடுப்புகட்டைகளில் வாழ்த்தொலி எழுப்பும் ஆயிரமாயிரம் மக்கள். உச்சகட்டமாக சங்கர்லாலுக்கு டாக்டர் பட்டத்தை கூட சென்னை பல்கலைகழகம் மூலம் அளிக்கிறார் தமிழ்வாணன்.மனைவி, குழந்தை எல்லாம் வந்து சேர்கிறார்கள்.இதுபோன்ற தொடர் கதாபாத்திரங்களுக்கு குழந்தை, மனைவி எல்லாம் வருவது வேஸ்ட். மனைவியுடன் ரொமான்ஸ் செய்வது போல் கதை எழுதுவதில் என்ன திரில்?அதுவும் இந்திரா வழக்கமான அந்த கால சினிமாவில் வரும் தமிழ் மனைவி மாதிரி தான். கணவனை எங்கும் வெளியே அனுப்ப அவருக்கு விருப்பம் இல்லை, கணவனுக்கு யார் டீ வைத்து தருவது என்பதில் மாதுவுடன் ஈகோ மோதல் வந்து அதற்கு நாள் முழுக்க அழுகிறார்.இதே தவறை பின்னாளில் ராஜேஷ்குமாரும் செய்தார்.விவேக்குக்கும் கல்யாணம் செய்து கையில் குழந்தையை கொடுத்து விட்டார்.

சுபாவும், பிகேபியும் தம் கதாபாத்திரங்களுக்கு கல்யாணம் செய்து வைக்கமால் ஒரு காதலியை கூட சுற்ற விட்டார்கள்.சுஜாதாவின் வசந்துக்கு, ஜேம்ஸ்பாண்டை போல ஒவ்வொரு நாவலிலும் ஒரு லவ்வர். 

சங்கர்லால் தமிழ்வாணனின் ஆல்டர் ஈகோவாக இருந்தாலும் சங்கர்லால் செலப்ரிடி ஆனதும் தமிழ்வாணன் அந்த கேரக்டரை அதன்பின் பில்ட் செய்ய முடியாமல் தன்னை நாயகனாக வைத்து "சிகாகோவில் தமிழ்வாணன், டோக்கியோவில் தமிழ்வாணன்" என மர்மநாவல்கள் எழுத துவங்கிய நினைவு.தன்னையே நாயகனாக்கியதால் அதில் எந்த நாவலிலும் தமிழ்வாணனுக்கு ஜோடி இல்லாமல் போனது. வீட்டில் இல்லாள் இருக்க நாவலில் யாரை ஜோடி ஆக்குவது?

சங்கர்லால் தமிழ்நாட்டின் அந்த கால ஜேம்ஸ்பாண்ட். அவர் நாவல்கள் பல இப்போதும் திரைபடமாக்கும் தகுதி பெற்றவை (உதா: எஸ்.எஸ். 66).ஆந்தை விழிகள் அன்று திரைபடமாக எடுத்திருந்தால் ஓடியிருக்கும். மொத்தத்தில் காலம் கடந்தும் ரசிக்க முடிவது, குறிப்பாக ஆரம்பகட்ட நாவல்களை ரசிக்க இயல்வது தமிழ்வாணனின் எழுத்து திறமைக்கு ஒரு சான்று.


Inline image 1

No comments: