Sunday, January 01, 2012

நெஞ்சை அள்ளும் ஜூல்ஸ் வெர்ன் நாவல்கள்

ஜூல்ஸ் வேர்ன் பற்றி எழுதுவதும் பூக்கடைக்கு விளம்பரம் செய்வதும் இரண்டும் ஒன்றுதான். ஆனால் விஞ்ஞான புனைகதை இலக்கியம் தமிழில் சுஜாதாவை தாண்டி வளராத நிலையில் வெர்னை பற்றி தமிழில் எழுதுவதும் அவரது சிறந்த நாவல்களை பட்டியலிடுவதும் அவசியம் ஆகிறது.

ஜூல்ஸ் வெர்ன் 19ம் நூற்றாண்டில் வாழ்ந்த பிரெஞ்சு நாவல் ஆசிரியர். பிரெஞ்சு மொழியில் இவரது விஞ்ஞான புனைகதைகள் (சயன்ஸ் பிக்ஷன் நாவல்கள்) வெளியானதால் ஆங்கிலம் பேசும் உலகில் இவர் சற்று தாமதமாக தான் பிரபலமானார். இவரது நாவல்களில் "உலகை சுற்றி வர எண்பது நாட்கள் (Around the world in 80 days)" என்ற நாவல் மிக பிரபலமான பிளாக்பஸ்டர் நாவல். 19ம் நூற்றாண்டில் உலகை எண்பது நாட்களில் சுற்றிவர இயலும் என்ற கான்செப்டை மையமாக வைத்து எழுதப்பட்ட நாவல். ஜூல்ஸ் வெர்னின் நாவல்களை படிக்காதவர்கள் இதிலிருந்து துவங்கலாம். நாயகி அவுதா இந்தியர். உடன்கட்டை ஏறுவதிலிருந்து ப்ளியாஸ் போக்கினால் மீட்கபடுபவர்.நாவல் மிக விறுவிறுப்பாக செல்லும். உலகை சுற்றி வந்தால் நேர வித்தியாசத்தில் ஒரு நாள் குறையும் என்பது இதில் உள்ள மெயின் ட்விஸ்ட்.இன்று சர்வதேச விமானபயணம் மேற்கொள்ளும் எவருக்கும் தெரிந்த இந்த விஷயம் நூற்றியிருபது ஆண்டுகளுக்கு முன்பு மிக புதுமையான விஷயமாக இருந்திருப்பது வியப்பளிக்கிறது.

around-80days.jpg

Journey to the center of the Earth (பூமியின் மையபகுதிக்கு ஒரு பயணம்) என்ற நாவலும் வெர்னின் இன்னொரு பிளாக் பஸ்டர் நாவல். உலகை சுற்றி வர எண்பது நாட்கள் நாவலில் ரியாலிட்டி அதிகம், பிக்ஷன் குறைவு. அந்த குறையை ஈடுகட்டும் விதத்தில் இந்த நாவலில் முழுக்க பிக்ஷன் தான்.19ம் நூற்ராண்டில் எட்கார் ரைஸ் பர்ரொஸ் (டார்சான் நாவல் ஆசிரியர்), ஜூல்ஸ் வெர்ன் போன்றவர்கள் பூமிக்கு மத்தியில் இன்னொரு பூமி இருப்பது போல நாவல்களை எழுதினார்கள்.

வெர்னின் நாவல்களில் என் மனதை அள்ளிய நாவல் The Adventures of Captain Hatteras (கேப்டன் ஹட்டிரஸின் சாக்சங்கள்)"  எனும் நாவலே.வடதுருவம், தெந்துருவம், எவெரெஸ்ட் ஆகியவை மனிதனால் வெற்றி கொள்ளபடாத காலகட்டத்தில் எழுதப்பட்ட நாவல் இது. 90 டிகிரி நார்த், 90 டிகிரி சவுத் ஆகியவற்றை தொடவேண்டும் என பலரும் முயன்று தோற்ற காலகட்டத்தில் எழுதப்பட்ட நாவல். நாவலில் கேப்டன் ஹட்டிரஸின் வடதுருவ பயணம் விவரிக்கபடுகிறது. துருவ பகுதியில் நடுக்கும் குளிரில் உணவுக்கும், வெப்பத்துக்கும் போராடுவதும் அதை எல்லாம் வென்று இறுதியில் கேப்டன் ஹட்டிரஸ் வடதுருவ மைய பகுதியை அடைந்து  90 டிகிரி நார்த்தில் கால்வைப்பதும் மெய்சிலிர்ப்பூட்டும் விதத்தில் விவரிக்கபட்டுள்ளது.அன்று 90 டிகிரி நார்த்தில் என்ன இருந்தது என யாருக்கும் தெரியாது. அதனால் வெர்ன் அங்கே ஒரு தீவும் எரிமலையும் இருப்பதாக கற்பனை செய்து எழுதினார்.

41lGYn9haxL._BO2,204,203,200_PIsitb-sticker-arrow-click,TopRight,35,-76_AA300_SH20_OU01_.jpg

Mysterious island (மர்ம தீவு) என்ற நாவலும் வெர்னின் நாவல்களில் முக்கியமானது.

நிலவுக்கு சென்று மீள்வது (From the earth to the moon)  என்ற நாவலில் மனிதர்களுக்கு அன்று கனவாக இருந்த நிலவு பயணத்தை வெர்ன் சாத்தியமாக்குகிறார். பீரங்கி குண்டின் மூலம் நிலவுக்கு செல்ல முடியும் என வெர்ன் இந்த நாவலில் கூறினார். சோவியத் கணிதமேதை யா. பெரெல்மான் எழுதிய நூல் ஒன்றில் இந்த கணிப்பு தவறானது என்பதை விளக்குகிறார் (பெரெல்மேனின் நூல்களை படிக்கவில்லையெனில் மறக்காமல் வாங்கி படியுங்கள். நியூ செஞ்சுரி புக் ஹவுஸின் புண்ணீயத்தில் அவரது நூல்கள் தமிழிலும் வெளிவந்துள்ளன. Mathematics Can Be Fun, Fun with Maths & Physics என்ர யா. பெரெல்மான் நூல்கள் மூர் மார்க்கட்டில் கிடைக்கலாம். கிடைத்தால் மறக்காமல் வாங்கி படியுங்கள்).

வெர்னின் நாவல்கள் காப்பிரைட் முடிவடைந்ததால் இலவசமாக இனையத்தில் கிடைக்கும். கூடென்பர்க் தளத்தில் முயன்று பாருங்கள்

உங்களுக்கு பிடித்த ஜூல்ஸ் வெர்னின் நாவலை, கதாபாத்திரங்களை இங்கே குறிப்பிடுங்கள்.வெர்னின் நாவல்களை விவாதித்து இன்புறுவோம்.

No comments: