Tuesday, December 20, 2011

மொட்டை மாமா

"மாமா..அம்மா, அப்பா செத்ததுக்கப்புறம் என்னை அனாதையாக விடாமல் எடுத்து வளர்த்தீர்கள்"

"உங்கப்பனுக்கு முப்பது கோடி ரூபாய் சொத்து இருக்கே அதனால் தான்" என பிரபுலிங்கம் மனதுக்குள் நினைத்து கொண்டார். தங்கராசு தொடர்ந்தான்.

"அதேமாதிரி பல வருடங்களுக்கு முந்தி அறுவை சிகிச்சை செய்துகொண்டபோது மருத்துவர்கள் தவறால் எய்ட்ஸ் இருக்கும் ரத்தத்தை எனக்கு ஏற்றி எனக்கும் எய்ட்ஸ் வரவைத்து விட்டார்கள்.அப்போதும் நீங்கள் என்னை துரத்தாமல் அன்புகாட்டி வந்தீர்கள்.."

"எப்படி துரத்துவேன்?ஒண்ணா, ரெண்டா, முப்பது கோடிடா..முப்பது கோடி.அதுக்காக தானே எய்ட்ஸ் வந்தும் இன்னும் உன்னை ஒரே வீட்டில் வெச்சிருக்கேன்.நீயும் இன்னைக்கு சாவாய்,நாளைக்கு சாவாய்ன்னு பாத்துகிட்டிருக்கேன்.நீ சாகமாட்டேங்கறே.உன்னை ஆள்விட்டு கொல்லவும் பயமா இருக்கு" பிரபுலிங்கம் மனதுக்குள் புலம்பிகொண்டார்.

"அதனால் மாமா...நான் ஒரு முடிவுக்கு வந்துட்டேன்.நான் எப்படி எய்ட்ஸ் வந்து இந்த சின்னவயதில் எந்த சுகத்தையும் அனுபவிக்கமால் சாகபோறேனோ அந்த நிலை இனி யாருக்கும் வரகூடாது.அதனால் என் சொத்து முழுவதையும் உலக எய்ட்ஸ் ஒழிப்பு பவுண்டேஷனுக்கு எழுதி வைக்கபோகிறேன்"

பிரபுலிங்கம் மயக்கம் போட்டு விழுந்தார்.

------

"முப்பது கோடியையுமா தானதருமம் பண்றேங்கறான். ஒரு பத்து கோடியாச்சும் எனக்கு குடுன்னு கேக்க கூடாதா" தாஸ் அங்கலாய்த்தான்.

"எங்கே கேக்கறது?அதான் எல்லா சொத்தையும் உயில் எழுதி வெச்சுட்டானே?இனி பேசி அவனை வழிக்கு கொண்டுவந்து சொத்தை எழுதி வாங்கறதுக்குள் தாவு தீந்துடும்.அப்பவும் குடுப்பானோ,மாட்டானோ?யார் கண்டா?" பிரபு அலுத்துகொண்டார்

கார் பரிமளா வீட்டுக்குள் நுழைந்தது.

"வாங்க சார்..என்ன ரொம்ப நாளா காணோம்?மும்பைலருந்து புதுசா மூணு குட்டிக வந்திருக்கு.பாக்கறீங்களா?" பரிமளம் வரவேற்றார்

"புதுசெல்லாம் வேணாம். சண்டிதனம் பண்ணும். அதெல்லாம் தாசுக்கு தான் சரிப்படும். நமக்கு வழக்கமா அனுப்பறதுங்கள்ளேயே எதுனாச்சும் இருந்தா அனுப்பு" என அலுத்துகொண்டே சொன்னார் பிரபு.கொஞ்ச நேரத்தில் காமினியும், மாலினியும் உள்ளே நுழைந்தார்கள்.

காமினியை பார்த்ததும் பிரபுவுக்கு டக்கென அந்த ஐடியா வந்தது...

"மாலினி நீ வெளியே போ" என்றார்

காமினியை முறைத்தபடி மாலினி வெளியேறினாள்.

"காமினி..நான் சொல்றபடி கேட்டால் உனக்கு ரெண்டுகோடி ரூபாய் கிடைக்கும்.நீ இந்த தொழிலை விட்டுட்டு நல்ல தொழிலில் செட்டில் ஆயிடலாம்" என்றார் பிரபு

"நிஜமாதான் சொல்றீங்களா சார்?" என்றாள் காமினி.

"நிஜமாதான்" என்றார் பிரபு."இது யாருக்கும் தெரியகூடாது.ரொம்ப சீக்ரட்டா இருக்கணும்.அதாவது என் தங்கச்சி மகனுக்கு எய்ட்ஸ்.ஆனால் அவனுக்கு நிரைய சொத்து இருக்கு. எய்ட்ஸ் இருக்குன்னு அவனும் யாரையும் கட்டிக்கலை, யாரும் அவனை கட்டவும் முன்வரலை. உன்னை என் நண்பரின் மகள்ன்னு சொல்லி எங்க வீட்டுக்கு கூட்டிபோறேன்.நீ எப்படியாச்சும் அவனை காதலிக்கற மாதிரி நடிச்சு கல்யாணமும் பண்ணிக்கணும்.கல்யானம் ஆகி அதுக்கப்புறம் அவன் செத்தால் சொத்து முழுக்க உன்பேரில் வந்துடும்.அதை என் பேரில் எழுதிவெச்சுட்டு நான் கொடுக்கும் ரெண்டுகோடியை எடுத்துகிட்டு நீ பிரச்சனை பண்னாம போயிடணும்" என்றார்

"எய்டஸ் வந்தவர்ன்னு சொல்றீங்க.அவரை கட்டிகிட்டா" என இழுத்தாள் காமினி.

"அதை எல்லாமா உனக்கு சமாளிக்க தெரியாது?சும்மா இல்லை.ரெண்டுகோடி" என ஆசைகாட்டினார் பிரபு.

"சரி" என்றாள் காமினி.

----------

"அவள் உங்களை ஏமாத்தினால் என்ன செய்யறது சார்?" என கேட்டான் தாஸ்.

"தாசு..நாம பார்ட்னரா எத்தனை வருசம் பிசினஸ் பண்றோம்?என் சாமர்த்தியம் உனக்கு தெரியாதா?அவ ஏமாத்தகூடாதுன்னுதான் அவகிட்ட முப்பதுகோடிக்கு புரோநோட்டு எழுதி வாங்கிருக்கேன்"

"புரோநோட்டு இருந்தால் போதுமா? அஞ்சு லச்சத்துக்கு மேல எல்லா கடனும் செக்கா தானே கொடுக்கணும்?" என்றான் தாஸ்.

"அதையும் நம்ம பரிமளத்துக்கு தெரிஞ்ச பாங்க் மேனேஜர் ஒருத்தரை வெச்சு சமாளிச்சாச்சு.30 கோடி செக் என் அக்கவுண்டில் இருந்து அவள் அக்கவுண்டுக்கு போய் அதை அவள் கேஷா வித்ட்ரா செஞ்சதா பாஸ்புக்கில் என்ட்ரியும் ஆயிருக்கு" என்றார் பிரபு.

போன் அடித்தது.

"மாமா...நான் தங்கராசு..சொன்னா ரொம்ப ஆச்சரியபடுவீங்க.ஆனால் நானும் உங்க நண்பர் மகள் ரேணுகாவும் (காமினியின் சொந்த பெயர்) கல்யாணம் பண்ணிகறதா முடிவு பண்ணிருக்கோம்.உங்க ஆசிர்வாதம் தேவை"

"நேத்து தானடா அவளை நீ முதல் முதல்ல பார்த்தாய்?ஒரே நாளில் காதல்,கல்யாணம் என்கிறாய்.என்னடா இது?" என்றார் பிரபு.

"அதெல்லாம் கேக்காதீங்க மாமா..ரொம்ப வெக்கமா இருக்கு.நீங்க சீக்கிரம் வீட்டுக்கு வாங்க.கல்யாண ஏற்பாடு பண்னணும்" என்றான் தங்கராசு

-----------------

மூன்று வருடங்கள் கழிந்தன...

"சாரி மிஸ்டர் பிரபு..உங்கள் மருமகன் இறந்துவிட்டார்" டாக்டர் வருத்தத்துடன் கூறினார்

பிரபுவுக்கு ஆனந்தத்தில் மனம் கூத்தாடியது. ஆனால் சோகமாக முகத்தை வைத்துகொண்டார்.ரேணுகா எங்கே என தேடினார்.அவள் தூரத்தில் அழுதுகொண்டிருப்பது தெரிந்தது.

கொஞ்ச நேரத்தில் ஒரு பெரிய பட்டாளமே அவர் வீட்டில் வந்து இறங்கியது.

"மாமா..இதான் எங்க பெரிய அண்ணன் பாஸ்கர்.இது என் சின்ன அண்ணன் எதிராஜு" என அறிமுகபடுத்தினாள் ரேணுகா.

"இத்தனை நாளா இல்லாம இவங்க எதுக்கு இப்ப வந்திருக்காங்க?" என கோபத்துடன் கேட்டார் பிரபு.

"குடும்ப வறுமை.என்னென்னவோ ஆயிடுச்சு.அதை விடுங்க.இப்ப நாங்க பழசை எல்லாம் மறந்து ஒண்ணு சேந்துட்டோம்.தங்கச்சி மாப்பிள்ளை செத்துட்டார்ன்னு தெரிஞ்சும் நாங்க வராம இருக்க முடியுமா?" என உருக்கமாக கூறினார் பாஸ்கர்.

ரேணுகாவை தனியே இழுத்துகொண்டு போனார் பிரபு.

"இந்தா ரொம்ப கூட்டம் போடாதே.டக்குன்னு சொத்தை எம்பேர்ல எழுதிவெச்சுட்டு ரெண்டுகோடியை வாங்கிட்டு நடையை கட்டு" என்றார்

"என் வீட்டுலருந்து நான் ஏன் வெளியே போகணும்? நீங்க போங்க வெளியே" என்றாள் ரேணுகா.

"என்னடி சொல்றே?" அதிர்ந்தார் பிரபு."நீ இப்படி செய்வேன்னு தெரிஞ்சுதான் உன் கிட்ட புரோநோட்டு எழுதி வாங்கீருக்கேன்.கேஸ்போட்டால் உனக்கு அந்த ரெண்டுகோடியும் கிடைக்காது.ஞாபகம் வெச்சுக்க"

"முப்பது கோடியை தான் திருப்பி கொடுத்தாச்சே?" என்றாள் ரேணுகா.

"எப்படி திருப்பி கொடுத்தே?யார் கிட்ட கதை விடறே?"

"நீங்க எப்படி எனக்கு முப்பது கோடியை கொடுத்தீங்களோ அதே மாதிரிதான்.அதே பாங்க் மானேஜர் உங்களை விட எனக்கு ரொம்ப நெருக்கம்.இன்னிக்கு காலையில் என் அக்கவுண்டில் இருந்து உங்க அக்கவுண்டுக்கு முப்பது கோடி டிரான்ஸ்பர் ஆனமாதிரி என்ட்ரி போட்டு அதை நீங்க செல்ஃப் செக்கா வித்ட்ரா பண்ன மாதிரி செட்டப்பும் செஞ்சாச்சு"

"என் கையெழுத்து போட்ட செல்ஃப் செக் உனக்கு எப்படி கிடைச்சது" என்றார் பிரபு அதிர்ச்சியுடன்.

"போனமாசம் என் வீட்டுகாரர் உங்க கிட்ட ஒரு பிளாங்க் செக் வாங்கினாரே?ஞாபகம் இருக்கா?" என்றாள் ரேணுகா.

"அடி பாவி..கிரிமினல்..உன்னை" என ஆவேசத்துடன் உறுமினார் பிரபு.

அவளது இருபுறமும் அவள் அண்ணன்கள் வந்து நின்றனர்.

"என்ன தங்கச்சி..ஏதோ சத்தம் கேட்டதே? என்ன" என்றார் எதிராஜு.

"ஒண்ணும் இல்லை. இவங்க வழக்கபடி மருமகன் செத்ததால் மாமாவுக்கு மொட்டை அடிக்கணும் என ஒரு சம்பிரதாயம் இருக்காம்.நீங்க போய் ஒரு நல்ல பார்பரா கூட்டிகிட்டு வந்து இவருக்கு மொட்டை அடிச்சு விடுங்க" என்றாள் ரேணுகா

"அதான் ஏற்கனவே அடிச்சாச்சே?" என சொல்லியபடி நடையை கட்டினார் பிரபு


--
செல்வன்

"உலகெங்கும் தோன்றும் நதியெல்லாம்
இறுதியிலே கடலில் சென்று
சங்கமாகுதல் போல்
சீர்மிகு மதம் பலவும் அகிலமெங்கும்
தோன்றி னாலும் அவையெல்லாம்
எம்பெருமான் உனை
அடைகின்ற ஆறேயன்றோ!" - விவேகானந்தர்

No comments: