தாமுவுக்கு தூக்கி வாரிபோட்டது.
"தொழிலையே மாத்திருவீங்க போலிருக்கு முதலாளி...பொம்பள புரோக்கர கல்யாண புரோக்கர் வேலை பார்க்க சொல்றீங்க?"
"பேசி மடக்கறதுல நீதாண்டா கிங்கு.நல்லசாமியை பேசி மடக்கு..அந்த பொண்ணை கோயில்ல பார்த்தேன். நல்ல பொண்ணு மாதிரி தெரிஞ்சது..எத்தனைநாள் தான் மைனராவே சுத்திகிட்டு இருக்கறது? நானும் பிள்ளை,குட்டின்னு செட்டிலாக வேண்டாமா?"
சொல்லிவிட்டு ஜமீன் வேகமாக நடந்து மறைந்தார்
தாமு தலையில் கையை வைத்துகொண்டு உட்கார்ந்தார்.
----
"நெசமாதான் சொல்றீங்களா? ஜமீந்தார் மாப்பிள்ளையா?" நல்லசாமி மறுபடி கேட்டார்.
"இதையே எத்தனை தரம் கேப்பீங்க" தாமு சலித்துகொண்டார்.
"நம்ப முடியாம தான் கேக்கறேன்.கொட்டாம்பட்டி ஜமீன் நம்ம ஊட்ல பொண்ணெடுக்க என்ன காரணம்னு ஒண்ணும் புரியலை.நான் சாதா சமையல்காரன்.."
"அதான் முன்னாடியே சொன்னேனெ?ஜமீந்தார் நல்ல வசதியானவர். ஜமீனை எல்லாம் கவருமெண்டு புடுங்கிட்டாலும் நிலம்,நீச்சு எல்லாம் அப்படியே இருக்கு.ஒரே பையன்னதால் கொஞ்சம் செல்லமா வளர்த்துட்டாங்க.கொஞ்சம் அப்படி இப்படி இருந்துட்டார்.வயசும் முப்பத்தி ஏழு ஆயிடுச்சு. இனி மேல் கல்யாணம் ஆகி செட்டில் ஆகலாம்னு முடிவு பண்ணி "ஏதோ ஏழை பொண்னா பாருடா தாமுன்னார்".."
"அதனால எம்பொண்ன கேக்கறீங்களா?" நல்லசாமி முகத்தில் சற்று கோபம் எட்டி பார்த்தது...
"இதோ பாருங்க நல்லசாமி. உங்களுக்கு நாலு பொண்ணு.ஊர் பூரா கடன். பொண்டாட்டிக்கு பக்கவாதம். இந்த மாதிரி சம்பந்தம் எந்த ஜென்மத்திலும் கிடைக்காது. உன் கடனை எல்லாம் ஜமீந்தார் கட்டிடுவார்.மத்த பொண்ணுகளுக்கும் கல்யாணம் பண்ணி குடுத்துடுவார். நீ உம்னு ஒரு வார்த்தை சொல்லு. பத்து லச்சத்தை சுளையா வாங்கி குடுத்தடறேன்"
"பத்து லச்சத்துக்கு எம் பொண்ணை விக்க சொல்றீங்களா?" நல்லசாமி கோபமானார்
"அப்புறம் எவ்ளோதான் வேணும்?"
"ஒரு பதினஞ்சா குடுக்க சொல்லுங்க.."
"சரி..அப்ப கல்யாணம்?"
"அடுத்த முகூர்த்தத்துலயே வெச்சுடலாம்.."
-------
"ஐயா உங்களை பார்க்க நம்ம நல்லசாமி பொண்ணு வந்திருக்குங்க"
ஜமின் புருவங்களை உயர்த்தினார்.."வரசொல்லு" என்றார்
அவள் அவர் எதிரே வந்து நின்றாள். ஏழ்மை அவள் அழகை குலைக்க முயன்று தோற்று விட்டிருந்தது.அவர் தன்னை அறியாமல் அவள் முகத்தையே உற்றுபார்த்து கொண்டிருந்தார்
"என்னை உங்களுக்கு கட்டி வெக்கறதா முடிவு பண்ணிருக்கறதா அப்பா சொன்னார்"
"ஆமாம்..."
"இந்த கல்யாணத்தில் எனக்கு விருப்பமில்லை"
"ஏன்?"
"எனக்கு உங்களை பிடிக்கலை"
"ஏன் பிடிக்கலை?"
அவள் பதில் சொல்லவில்லை. தரையை பார்த்துகொண்டு நின்றாள்.
"இப்பதான் உங்கப்பாக்கு கொடுக்க 15 லட்சத்தை பாங்கிலிருந்து எடுத்துட்டு வந்தேன்" என்றார் ஜமீன்.
"அந்த காசை நீங்களே வெச்சுகுங்க..எனக்கு ஒரு ரெண்டு லச்சத்தை மட்டும் கடனா கொடுங்க.எனக்கு காலேஜ்ல சீட்டு கெடச்சிருக்கு.படிக்கணும்னு ஆசை.காசு இல்லை.படிச்சு முடிச்சு வட்டியும், முதலுமா காசை திருப்பி தந்துடறேன்..."
ஜமீந்தார் அவளையே பார்த்தார்.
"ஊர்ல எத்தனையோ பேருக்கு கடன் கொடுத்திருக்கீங்க.எனக்கும் கொடுங்க...சும்மா குடுக்க வேண்டாம்.இன்னும் அஞ்சு வருசத்தில் காசை வட்டியுடன் திருப்பி தரலைன்னா நானே திரும்ப இந்த ஊர்க்கு வந்து உங்களை கல்யாணம் செய்துகொள்கிறேன்" என்றாள் அவள்.
"என்ன டீல் இது" ஜமீந்தாருக்கு சிரிப்பு வந்துவிட்டது.
"நீ ஒண்ணும் காசை திருப்பி தர வேண்டாம். இந்த கல்யாணமும் வேண்டாம். இந்தா இந்த பதினஞ்சு லச்சத்துல உனக்கு எவ்ளோ வேணுமோ அதை எடுத்துகிட்டு மிச்சத்தை கொண்டு போய் உங்கப்பன் கிட்ட குடுத்துடு." ஜமீந்தார் பெட்டியை நீட்டினார்.
அவள் கண்ணில் தாரை,தாரையாஇ நீர் பெருகியது
"உங்களை பத்தி தப்பா பேசினதுக்கு.."
"செண்டிமெண்ட் எல்லாம் ஆகாது" என்றார் ஜமீந்தார்."உனக்கு தான் என்னை பிடிக்காதே?அப்புறம் என்ன பேச்சு.பெட்டிய எடுத்துகிட்டு கிளம்பு."
---
"சூப்பர் பார்ட்டி ஒண்ணு வந்திருக்கு ஜமீந்தாரே" தாமு மெதுவாக பேச்சை ஆரம்பித்தார்
"வேணாண்டா தாமு" ஜமீந்தார் பெருமூச்செறிந்தார்.
"இன்னுமா நல்லசாமி மகளையே நெனச்சுகிட்டிருக்கீங்க?இத மட்டும் ஒருதரம் பாருங்க..அப்புறம் வேற எந்த பொண்ணையும் தேடவே மாட்டீங்க.."
"வேணாண்டா.."
"சும்மாருங்க...இந்தாம்மா..உள்ளே வா" தாமு குரல் கொடுத்தார்
அவள் உள்ளே நுழைந்தாள்.
நல்லசாமி மகள்...
ஜமீன் இமைக்க மறந்து அவள் முகத்தையே பார்த்தார்.
அவளும் அவர் முகத்தையே உற்றுபார்த்தாள்.
"நான் வரட்டுங்களா?" தாமு மெதுவாக வினவினார்
ஜமீன் பதிலே சொல்லவில்லை.தாமு சொன்னது அவர் காதில் விழவே இல்லை.
"இனி இங்கே நமக்கென்ன வேலை?" தாமு ஜமீந்தாருக்கு ஒரு கும்பிடு போட்டுவிட்டு நடையை கட்டினார்
No comments:
Post a Comment