Tuesday, September 20, 2011

கூடங்குளம்-- அத்தியாவசியமா, ஆபத்தா?


அதீதம் இதழில் கூடங்குளம் குறித்து நான் எழுதிய கட்டுரை

கூடங்குளம்: அத்தியாவசியமா, ஆபத்தா?

reactor_533f.jpg

கூடங்குளம் அணுமின் நிலையம் மீண்டும் சர்ச்சைகுள்ளாகி இருக்கிறது.முதல்வர்,எதிர்கட்சி தலைவர் உட்பட பலரும் இதை எதிர்த்துள்ளார்கள். அந்த ஊர் மக்களும் இதை எதிர்க்கிறார்கள்.சுமார் 1 லட்சம் பேர் வரை திரண்டு போராடுவதாக தெரிகிறது.மேதா பட்கர், அருந்ததி ராய் உட்பட பிற சுற்றுபுற சூழலியலாலர்களும் இதில் களமிறங்கலாம் என தெரிகிறது.இந்த சூழலில் இந்த அணுமின் நிலையம் தேவையா என ஆராயலாம்.

மின்சாரம் நம் நாட்டுக்கு தேவை.நம் நாட்டில் கடும் மின் தட்டுபாடு உண்டு.இந்த சூழலில் "இந்த வகை மின்சாரம் நமக்கு வேண்டாம், அது வேண்டும்" என தேர்ந்தெடுக்கும் நிலையில் நாம் இல்லை.நமக்கான தேர்வுகள் வெகு சிலவே.அதனால் அனைத்து வகை மின்சாரத்தையும் ஏற்கும் நிலையில் தான் நாம் இருக்கிறோம்.எதையும் தள்ளும் நிலையில் இல்லை.

அனல் மின்சாரம், புனல் மின்சாரம்,அணு மின்சாரம் போன்றவை பாரம்பரிய மின்சார தயாரிப்பு முறைகள்.இதில் நீரிலிருந்து எடுக்கபடும் மின்சாரம் நதிநீரை அடிப்படையாக கொண்டது.நம் நதிகள் பலவும் மழைநீரை அடிப்படையாக கொண்டவை.மழை வராவிடில் மின்சாரம் நின்றுவிடும்.அதனால் கோடையில் நாட்டில் கடும் மின் தட்டுபாடு ஏற்படுகிறது.

புனல் மின்சாரம் எடுக்க நிலக்கரியை வெட்டி எடுத்து அல்லது இறக்குமதி செய்து எரித்து மின்சாரம் எடுக்கவேண்டும்.சுற்றுசூழல் இயக்கங்கள் உலகெங்கும் இதை எதிர்த்து வருகின்றன.இவ்வகை மின்சாரத்தால் கரியமலவாயு அதிகரிக்கும்,புகை வந்து மாசுபடும் என்ற குற்றசாட்டுகள் உண்டு.ஆனால் இதை நாம் பொருட்படுத்த வேண்டியதில்லை என்பது என் கருத்து.இந்தியாவில் சுமார் 70% மின்சாரம் நிலக்கரி மூலம் தான் கிடைக்கிறது.இதை எத்தனை தூரம் விரிவாக்க இயலும் என்பது கேள்விக்குரியது.காரணம் நிலக்கரி எல்லா மாநிலங்களிலும் கிடைப்பதில்லை.பெரும் தொலைவுகளுக்கு நிலக்கரியை கொண்டு செல்ல நிறைய செலவு ஆகிறது.அதனால் இந்தியா தன் நிலக்கரியில் சுமார் 12% இறக்குமதி செய்கிறது.

காற்றாலை மின்சாரம், சூரிய சக்தி மின்சாரம் ஆகியவை தற்போது பிரபலம் ஆகி வருகின்றன.இவற்றால் ஒரு எல்லை வரைதான் உற்பத்தியை அளிக்க இயலுமே ஒழிய பெருமளவில் நம் நாட்டின் மின் தேவையை பூர்த்தி செய்யும் வலிமை இவற்றுக்கு இல்லை.காற்று வந்தால் தான் மின்சாரம் என்பது காற்றாலைகளின் நிலை.சூரிய சக்தி மின்சாரம் தயாரிக்க யூனிட் ஒன்றுக்கு 15 முதல் 30 ரூபாய் வரை செலவு ஆகிறது.இது வழக்கமான உற்பத்தி செலவை விட மூன்று நான்கு மடங்கு அதிகம்.ஏழைநாட்டின் தேவைக்கு ஏற்ற மின் உற்பத்தி முறை அல்ல இது.

ஆக அணுமின்சாரம் தான் நம் நாட்டின் மிந்தேவையை பூர்த்தி செய்யும் வலிமை வாய்ந்தது.ஆனால் இது பாதுகாப்பானதா என்ற கேள்வி எழுகிறது.அதற்கான விடைகளை பார்ப்போம்.

கூடங்குளம் பகுதி பூகம்பம் வராத நிலபகுதி - ஸோன் 2.ஜப்பானில் பூகம்பம் வந்தது போல இங்கே பூகம்பம் வரும் வாய்ப்பு இல்லை.

ஜப்பானில் விபத்து நடந்த புக்யுஷீமா அணு உலை 1971ல் கட்டபட்டது.தற்போது உள்ள பல பாதுகாப்பு ஏற்பாடுகள் அதில் இல்லை.பழைய அணு உலை என்றாலும் அது வெடிக்காமல் ரிச்டர் ஸ்கேல் 9 அளவு உள்ள பூகம்பத்தையும், சுனாமியையும் தாங்கி நின்றது.புதிய அணு உலைகள் இதை விட வலிமையான பூகம்பத்தையும், சுனாமியையும் தாங்கும் சக்தி கொண்டவை.உதாரணமாக கூடங்குளம் உலை சுனாமி தாக்கும் அபாயத்தை கணக்கில் கொண்டு கட்டபட்டது.2004ல் தமிழகத்தை சுனாமி தாக்கியபோது இந்த பாதுகபபு ஏற்பாடு பரிட்சித்து பார்க்கபட்டது.அது நன்றாக வேலை செய்வதும் தெரிந்தது.

புகுயுஷிமா அணு உலையின் பாதுகபபு ஏற்பாடுகள் பூகம்பத்தால் மின்சாரம் தடைபட்டதும் செயலிழந்தன.கூடங்குளத்தில் உள்ல உலை மூன்றாம் தலைமுரை அணு உலை.என்ன பூகம்பம் வந்தாலும் செயல்படும் ஜெனெரேட்டர்கள் நிறுவபட்டுள்ளன.ஜெனெரேட்டர்கள் செயல்படவில்லையெனினும் அணு உலையில் ஆபத்தான அளவு ஹைட்ரஜன் தேங்காத வண்ணம் மாற்று ஏற்பாடுகள் செய்யபட்டு உள்ளன.இவை இந்தியா - ரஷ்யாவில் உள்ள மதிப்புமிக்க அணுவிஞ்ஞானிகளால் சோதிக்கபட்டு இந்திய அணுசக்தி கழகத்தின் சான்றிதழை பெற்றுள்ளன.அதனால் ஜப்பானில் நடந்தது போன்ற சம்பவம் இந்தியாவில் நடக்கும் வாய்ப்பு இல்லை.

மற்றபடி வர்ஸ்ட் கேஸ் சினாரியோ என பார்த்தால் மேட்டுர் அணையில் பூகம்பம் வந்தால் எத்தனை லட்சம் பேர் மடிவார்கள், அதனால் மூடு மேட்டூர் அணையை என சொன்னால் எப்படி இருக்குமோ அதுபோன்றதுதான் கூடங்குளத்தில் விபத்து நடந்தால் எத்தனை லட்சம் பேர் மடிவார்கள் என்ற கணக்கு எல்லாம்.கேரள அரசு இதைபோன்ற பீதியை கிளப்பிதான் முல்லைபெரியார் அணையில் நீர்மட்டம் உயர்த்துவதை தடுத்துள்ளது.அதை நாம் ஒருபுறம் எதிர்த்துகொண்டு மறுபுறம் அதே கணக்கை சொல்லி கூடங்குள அணு உலையை தடுப்பது சரியா என நம்மை நாமே கேட்டுகொள்ள வேண்டும்.

சீன அரசு தற்போது சீனாவில் 25 அணு உலைகளை வேக வேகமாக கட்டி வருகிறது.இன்னும் 75 அணு உலைகளை 2020க்குள் கட்ட திட்டமிட்டு பணிகள் நடந்து வருகின்றன.நம் நாட்டில் நமக்கு தேவைப்படும் மின்சாரத்தை தயாரிக்க தற்போதுள்ள மின்நிலையங்கள் போதாது.புதிதாக கட்டவும் முன்னே சொன்னதுபோல நிலக்கரி,நீர்,காற்று ஆகியவற்ரை நம்புவதில் சிக்கல்கள் உள்ளன.இந்த சிக்கல் எதுவுமின்றி எக்காலத்திலும் இயங்ககூடிய சக்தி படைத்து அணு உலை மட்டுமே.

ஆக நம் நாட்டுக்கு நிறைய அணு உலைகள் தேவை.அணு உலை ஆபத்தானது அல்ல.அணைக்கட்டு, புனல் மின் நிலையம் ஆகியவை போல அதிலும் ரிஸ்க் உண்டுதான்.ஆனால் அது எல்லாவற்ரையும் விட பெரிய ரிஸ்க் மின்சாரம் இல்லாமல் இருப்பதுதான்.மின்சாரம் இல்லாமல் ஏற்படும் உற்பத்தி இழப்பு, உயிர் இழப்பு, பொருளாதார இழப்பு எல்லாவற்றையும் கணக்கு போடவேண்டும். ஜப்பானில் பூகம்பம் வந்ததுபோல மேட்டூரில் வந்து அணை இடிந்து விழுந்தால் எத்தனை லட்சம் பேர் சாவார்கள், பாகிஸ்தானிய பயங்கரவாதிகள் பக்ராநங்கலில் குண்டு வைத்தால் எத்தனை லட்சம் பேர் இறப்பார்கள் என்பது போன்ற கணக்குகளை போடும் நபர்கள் முன்பு இருந்திருந்தால் இந்த அணைகள் கட்டபட்டு இருக்காது. 

இந்தியாவில் அனைத்து மாநிலங்களிலும் அணு உலைகள் கட்டபட்டு மின்சார தட்டுபாடே நாட்டில் இல்லை என்ற நிலை வரவேண்டும்.



No comments: