"யார் அது?" இஸ்கந்தர் என்றழைக்கபட்ட மாமன்னர் அலெக்சாந்தர் வினவினார்
"சசிகோடஸ் என்பவர்..பாடலி நாட்டின் முன்னாள் அரசனாம்.இப்போதைய நந்த வம்ச அரசன் அவரது நாட்டை பிடுங்கிகொண்டு அவரை துரத்தி விட்டான். அந்த நாட்டின் மேல் நீங்கள் படையெடுக்க போவதை அறிந்து உங்களை சந்திக்க வந்துள்ளார்"
'நந்தர்களை நான் ஜெயித்தால் பாடலிபுதிரத்தின் ஆட்சியை என்னிடம் கேட்டு பெறபோகிறாரா?நல்லது..நந்தர்களை ஜெயிக்க எனக்கு இவர் உதவவேண்டும்.முடியுமா என பார்க்கலாம்.வரச்சொல்.."
சசிகோடஸ், அவரது மகன் சந்திரகோடஸ், கூட ஒரு பண்டிதர் மூவரும் அந்த கூடாரத்தினுள் நுழைந்தார்கள்.
சிறுவனான சந்திரகோடஸ் அங்கே கண்ட காட்சி அவனால் வாழ்நாள் முழுக்க மறக்க இயலாத காட்சி
சிம்மாசனம் ஒன்றில் வேலை கையில் ஏந்தி மாமன்னர் இஸ்கந்தர் வீற்றிருந்தார்.அருகே பட்டத்து அரசி ரோக்சேனா அமர்ந்திருந்தார்.
"உலகம் இதுவரை கண்டிராத கேட்டிராத வீரர் இவர்" பண்டிதர் சந்திரகோடஸின் காதுகளில் முணுமுணுத்தார்.
சசிகோடஸ் மன்னருக்கு வணக்கம் செலுத்தினார்
"நந்தர்களை ஜெயித்து இந்தியாவை பிடிக்க எனக்கு உதவபோகிறாயா சசிகோடஸ்?" இஸ்கந்தர் வினவினார்.
"இல்லை மன்னா...நந்தர்களை ஜெயிக்க தங்களால் இயலாது என்பதை தெரிவிக்கவே வந்தேன்"
"என்னால் இயலாதா?" இஸ்கந்தர் சிரித்தார்.கூடவே கிரேக்க தளபதிகள் அனைவரும் சிரித்தார்கள்.
"மாசிடோனியம் முதல் எகிப்து வரை,பாரசிகம் முதல் சிந்துநதிவரை ஜெயித்தவன் நான்.நான் ஜெயிக்காத போர் இல்லை.பாரசிக மன்னன் டேரியஸை விட உன் தன நந்தன் வலிமையானவனா?"
"மன்னரே...நீங்கள் இதுவரை பார்த்ததிலேயே மிக பெரிய நதியான கங்கை நதியின் மறுகரையில் தனநந்தன் தன் படைகளுடன் உங்களுக்காக காத்திருக்கிறான்.அதில் பத்து லட்சம் வீரர்கள் உள்ளனர்.ஆயிரகணகான யானைகள் உள்ளன.கங்கைநதியில் உங்களை எதிர்கொள்ள ஆயிரகணக்கில் படகுகளில் வீரர்கள் உள்ளனர்.நீங்கள் இந்த போரில் ஜெயித்தாலும் உங்கள் படையில் முக்கால்வாசி பேர் அழிந்துவிடுவார்கள்..மீதமுள்ளவர்களை வைத்துகொண்டு நீங்கள் மேலே முன்னேறமுடியாது..நீங்கள் திரும்ப பாரசிகம் சென்றுவிடுவதே புத்திசாலித்தனம்.."
இஸ்கந்தரின் தளபதிகள் முகத்தில் கவலை படர்ந்தது.மாசிடோனியாவை விட்டு அவர்கள் வந்து ஆண்டுகள் 12 ஆகியிருந்தன.வந்தவர்களில் பாதிபேர் இன்று இல்லை...10 லட்சம் பேர் தனநந்தனின் படையில் உள்ளனர் என்பதை அறிந்ததும் ஏனோ அவர்களிடம் கவலை தோன்றிவிட்டது.
"நீ தனநந்தனின் எதிரி என நினைத்தேன்" என்றார் இஸ்கந்தர்."ஆனால் அவனை என்னிடம் இருந்து காக்க முனைகிறாய்.ஏன்?"
"நான் மகதத்தை அதிகம் நேசிக்கிறேன் சக்ரவர்த்தி" என்றார் பணிவுடன் சசிகோடஸ்
"அதனால் பொய் சொல்கிறாய்" என்றார் இஸ்கந்தர்
"இல்லை" என்றார் கூட வந்த பண்டிதர்.."மன்னா...உன் ஜாதகப்படி நீ ஜெயித்த கடைசி யுத்தம் போனவாரத்துடன் முடிவடைந்தது.இனி நீ எந்த யுத்தத்தில் இறங்கினாலும் தோல்வியையே அடைவாய்"
"உன் குதிரை மேல் ஏறி நீ போரிடும்வரை உனக்கு தோல்வி என்பதே இல்லை" எகிப்தில் பூசாரிகள் சொன்ன வார்த்தை அலெக்சாந்தர் மனதில் நிழலாடியது.இந்த பண்டிதரும் அதே போல சொன்னதை கேட்டதும் அவர் சிந்திக்க தொடங்கினார்
"சரி...நீ இப்போதைக்கு செல்லலாம்" மன்னர் கைகாட்டினார்
சிறுவன் அவரையே உற்றுபார்த்தான்."உங்களை போல நானும் பெரிய ராஜ்ஜியத்தை அமைப்பேன்" என்றான்
ராணி ரோக்சேனாவுக்கு சிரிப்பு வந்துவிட்டது."இந்தா.." என கணவனின் வேலை எடுத்து சந்திரகோடஸிடம் அளித்தாள்."இது உலகம் முழுவதையும் ஜெயித்தவேல். வைத்துக்கொள்..நீயும் இதேபோல உலகை ஜெயித்து காட்டு"
மூவரும் மன்னரை வணங்கிவிட்டு வெளியே வந்தனர்.
"என்னை ஏன் சசிகோடஸ் என்கிறார்கள்?" சசிகுப்தர் ஆச்சரியபட்டார்.
"குப்தன் என அவர்களுக்கு சொல்ல வராது.குப்தனை கிரேக்கமொழியில் கோடஸ் என்பார்கள்" என்றார் பண்டிதர் சாணக்கியர்.
"உள்ளே இருந்த மன்னர் கடவுளா?" என்றான் சிறுவன் சந்திரகோடஸ்."அவர் கடவுள் என எல்லோரும் சொல்கிறார்கள்"
சானக்கியர் அவனை உற்றுபார்த்தார்.
"ஆம்.அவர் பெயர் ஸ்கந்தர்.கூட இருந்தது அவர் மனைவி தேவசேனா.அவர் கையில் வேலை வாங்கிய நீ தனநந்தனை ஜெயித்து மாபெரும் சாம்ராஜ்ஜியம் ஒன்ரை நிறுவாமல் ஓயகூடாது"
"நிச்சயம் ஓயமாட்டேன்.ஸ்கந்த கடவுள் அளித்த வேலின் மேல் ஆணை" என முழங்கினான் சந்திரகோடஸ் எனப்படும் சந்திரகுப்தன்.
No comments:
Post a Comment