Monday, June 09, 2008

375. சங்கர்லாலும் வந்தியத்தேவனும் பிராண்டுகளாவார்களா?

ஒரே கதாபாத்திரங்களை வைத்து வருடக்கணக்கில் கதை எழுதுவது மிகவும் சிரமம்.சில எழுத்தாளர்கள் தாம் சிருஷ்டித்த கதாபாத்திரத்தின் கைதியாகி விட்டு மீள முடியாமல் அவதிப்படுவார்கள்.ஒரு கட்டத்தில் அவர்களது கற்பனைத்திறனே வரண்டுபோய் அந்த கதாபாத்திரத்தை வைத்து பிரடிக்டபிள் கதைகளை வைத்து ஒப்பேற்றும் நிலை வந்துவிடும்...அந்த பாத்திரத்தை விட்டு தொலைக்கவும் முடியாது..வாசகர் வட்டம் அதே கதாபாத்திரத்தை பற்றிய கதைகளை கேட்கும்.பப்ளிஷர்கள் அந்த பாத்திரத்தின் கதை தான் விற்கும் என்பதால் அதையே கேட்பார்கள்..

ஷெர்லக் ஹோம்ஸ் எழுதிய ஆர்தர் கானன் டாயிலுக்கும் இது தான் நடந்தது.அந்த பாத்திரம் புகழ் பெற,புகழ் பெற அவர் ஷெர்லக் கோம்சை பற்றி மட்டுமே எழுத வேண்டிய நிர்ப்பந்தம் உருவானது..ஒரு வட்டத்தில் சிக்குவதை அறிந்த டாயில் ஒரு கதையில் ஷெர்லக் ஹோம்சை கொன்றே விட்டார்.பிறகு பல வருடங்கள் கழித்து ஹோம்சை உயிர்ப்பிக்க வேண்டி வந்தது.

தமிழ்வாணன் சங்கர்லால் பாத்திரத்திடம் சிக்கிக்கொண்டார்.ஒரு கட்டத்தில் தன்னையே நாயகனாக்கி கதை எழுத துவங்கினார்...அது வெற்றிபெறவில்லை.கல்கண்டின் வாசகருக்காகவும், மணிமேகலை பிரசுரத்துக்காகவும் சங்கர்லால் தேவைப்பட்டார்...தமிழ்வாணன் மறைவுக்கு பிறகு சங்கர்லால் கதைகளை லேனா தமிழ்வாணன் எழுதினார்.ஆனால் எடுபடவில்லை.

ராஜேஷ்குமாரும் விவேக்கிடம் கைதியாகி விட்டது போல் தான் தெரிகிறது.அந்த பாத்திரத்துக்கு ஒரு வாசகர் வட்டம் வந்துவிட்டது.ஒரு கதையில் ரூபலாவை இடுப்பை பிடித்து வில்லன் தூக்குவது போல் ஒரு காட்சி..அடுத்த இதழில் வாசகர்கள் பொங்கி விட்டார்கள் பொங்கி...

சுஜாதா கணேஷ் வசந்த் பிரச்சனையை அழகாக சமாளித்தார்.கணேஷ் வசந்தை செமி வில்லனாக காட்டிவிட்டார்.உண்மையில் வசந்தும் கணேஷும் ஒரே ஆள்தான்..வசந்த் கணேஷின் இளவயது ஆல்டர் ஈகோ...இருவரும் ப்ளேபாய்கள்..கணேஷ் அலைச்சான் கேசில்லை,ஆனால் கல்யாணமாகாமல் சில பெண்களுடன் தொடர்பு வைத்திருப்பான்...அதை பற்றி அலட்டிக்கொள்ளாமல் இருப்பான்.வசந்த் செக்ஸ் ஜோக் அடித்தும் தனது கேர்ள்பிரண்டுகளைப்பற்றி பீற்றியும் அதை வெளிக்காட்டுவான்.

ராஜேஷ்குமார் தனது கதாநாயகனுக்கு கல்யாணம் செய்து வைத்து,குழந்தையையும் கையில் கொடுத்து விட்டார்.அது அந்த பாத்திரத்துக்கு சமாதி கட்டியதாகிப்போனது.எல்லா கதைக்கும் ஒரே நாயகி...கனவன் மனைவிக்கிடையே என்ன ரொமான்சை பெரிதாக நாவலில் எழுத முடியும்? போதாகுறைக்கு குழந்தை வேறு...எத்தனை வருடத்துக்குத்தான் அதை குழந்தையாகவே காட்ட முடியும்?அதை ஸ்கூல்லுக்கு அனுப்பவேண்டும்,காலேஜுக்கு அனுப்பவேண்டும்,கல்யானம் செய்து வைக்க வேண்டும்..அப்ப விவேக் ரூபலா கிழவியாகிவிடுவார்கள்...கதை தள்ளாடிவிடும்..

சுஜாதா அந்த தப்பை கடைசிவரை செய்யவே இல்லை...இன்னும் சில வருடங்கள் எழுதியிருந்தால் இன்ஸ்பெக்டர் இன்பாவை கணேஷுக்கு கட்டி வைத்திருப்பாரோ என்னவோ?

தமிழ் நாவல் உலகின் புகழ் பெற்ற இந்த பாத்திரங்கள் அனைத்தும் அந்தந்த ஆசிரியருடன் முற்றுப்பெறுவது தான் சோகம்.அந்த ஆசிரியரின் வெறுப்பு விருப்புகளுக்கு இந்த பாத்திரங்கள் அவ்வப்போது பலியாகி வந்திருக்கின்றன."ப்ரியா" நாவலை சினிமாவில் சொதப்பியதும் சுஜாதா பயங்கர காண்டாகி ப்ரியா பார்ட் டூ எழுதி அதில் ப்ரியாவுடன் கணேஷ் உடலுறவு வைத்துக்கொள்வது போல் எழுதி தனது கடுப்பை காட்டினார்...வசந்த் காரக்டருக்கு ஒய்ஜிமகேந்திரனை போட்டு, லண்டனில் நடக்கும் கதையை சிங்கப்பூரில் நடப்பது போல் எழுதினால் அவர் கடுப்பாக மாட்டாரா என்ன?

ஆங்கில பளிஷிங் துறை இதை அழகாக சமாளித்தது. ஒரு பிரபல கதாபாத்திரத்தை ஒரு பப்ளிஷிங் கம்பனி உரிமையாக்கி கொள்கிறது.அந்த கதாபாத்திரத்தின் இமேஜ்,வாசகர் வட்டம் எல்லாம் ஒரு பிராண்டை போல் பாதுகாக்கப்படுகிறது.பல எழுத்தாளர்கள் அந்த பாத்திரத்தை பற்றி கதைகளை எழுதுகிறார்கள்.இதன்மூலம் ஒரு எழுத்தாளரின் விருப்பு வெருப்புக்கு ஒரு பாத்திரம் பலியாவதும், ஒரு பாத்திரத்தின் புகழுக்கு ஒரு எழுத்தாளர் அடிமையாவதும் தவிர்க்கப்படுகிறது.

ஹார்டி பாய்ஸ் நாவலை எழுதுபவர் ப்ராங்க்ளின் டிக்சான்..ஆனால் இந்த பெயரில் யாரும் கிடையாது.இது ஒரு கற்பனை பெயர்.பல ஆசிரியர்கள் இந்த பெயரில் ஜோ ஹார்டி, ப்ராங்க் ஹார்டி கதைகளை எழுதுகின்றனர்.நான்சி ட்ரூ கதையை எழுதுவதும் அதே போல் பல ஆசிரியர்களே.ஜேம்ஸ் பாண்ட் பாத்திரமும் இதேபோல் ப்ராண்டாக பாதுகாக்கப்படுகிறது.

சந்தையியல் உத்திகளை ஆங்கில நாவல் இலக்கியம் அழகாக பயன்படுத்தியது.தமிழ்நாட்டிலும் அதே போல் நடந்தால் சாம்பு,சங்கர்லால், வந்தியத்தேவன்,விவேக், நரேன் போன்ற பாத்திரங்கள் காலம் கடந்து நிற்கும்...

10 comments:

தமிழ்மணி said...

செல்வன்,

எங்கே ஆளையே காணோம்?

சொரணையே இல்லையாடா நமக்கு என்று கம்யூனிஸ்டுகள் எழுதியதற்கு பதிலாக

மூளையே இல்லையாடா உங்களுக்கு?

என்று பெட்ரோல் விலையேற்றத்தை பற்றி எழுதியிருக்கிறேன்.
உங்கள் கருத்துக்களை அறியத்தாருங்கள்

KARTHIK said...

வணக்கம் செல்வம்
ஆறு மாத இடைவெளிக்கு பின் ஒரு நல்ல பதிவு.

ஹாரி பார்ட்டர் கதையின் நாயகனும் அடுத்த பாகத்தில் கொள்ளப்படுகிறாராம்.

சுஜாதாவின் இன்னொரு நாயகர்களான ஆத்மாவுக்கும் நித்யாவுக்கும் கூட குழந்தை இருப்பது போல காட்டுவார்.
ஆனால் அந்தக்கதாபாத்திரம் கணேஷ் வசந்த் போல எடுபடவில்லை.

மங்களூர் சிவா said...

செல்வன் இவ்ளொ புத்தகம் படிப்பீங்களா?????

மங்களூர் சிவா said...

சிறுவயதில் தமிழ்வாணன் துப்பறியும் நாவல்கள் எனக்கும் மிகவும் பிடிக்கும். ராஜேஷ்குமார், சுபா, பிகேபி, சுஜாதா எல்லாரையும் படிப்பேன்.

ஆனால் இந்த மாதிரி யோசித்தது இல்லை.

ராஜேஷ்குமார் எப்படி மாதத்திற்கு 4 , 5 நாவல் எழுதுகிறார் என்பது இன்னும் எனக்கு ஆச்சரியம்.

SP.VR. SUBBIAH said...

////தமிழ் நாவல் உலகின் புகழ் பெற்ற இந்த பாத்திரங்கள் அனைத்தும் அந்தந்த ஆசிரியருடன் முற்றுப்பெறுவது தான் சோகம்.///

உண்மை செல்வன்.
வெகுநாட்களுக்குப் பிறகு உங்கள் பதிவு. மிக்க மகிழ்ச்சி!
வாரம் ஒருறையாவது எழுதுங்கள்
உங்கள் பழைய டெம்ப்ளேட் என்ன ஆயிற்று?
இது நன்றாக இல்லை!

✨முருகு தமிழ் அறிவன்✨ said...

வித்தியாசமான தளப்பதிவு.

//சுஜாதா கணேஷ் வசந்த் பிரச்சனையை அழகாக சமாளித்தார்.கணேஷ் வசந்தை செமி வில்லனாக காட்டிவிட்டார்.//

இது ஒரு காரணமா என்ன? வசந்த்'ஐ வேண்டுமானால் அந்த குறும்புக்காக செமி வில்லன்' என சொல்வதை ஏற்றுக் கொள்ளலாம்,ஆனால் கணேஷை எப்படி அப்படி சொல்வீர்கள்?

என்னைக் கேட்டால் கணேஷ் சுஜாதா'வின் ஆதர்ச நாயகன் வடிவம்;வசந்த் அவருக்குள்ளிருந்த விளையாட்டுப் பிள்ளை வடிவம்.

யோசித்துப் பார்த்தால் நம் அனைவருக்குள்ளுமே இவ்வித இரு விதமான(சிலருக்கு பல விதமான) குணாதிசயங்கள் இருக்கின்றன.

அவர்கள் இருவரின் கதாபாத்திரம் உயிர்ப்புடன் கடைசிவரை இருந்ததற்கான-சொல்லப்போனால் இன்னும் இருப்பதற்கான- காரணம் சுஜாதாவின் அகன்ற வாசிப்பு,அதனால் பரிமளித்த அவரின் அகடமிக் இண்டலிஜன்ஸ் அந்த கதாபத்திரங்களிலும் பிரதிபலித்ததே.

அப்ஸ்ட்ராட்டாக சொன்னால்,அனிதா இளம் மனைவியிலோ,நைலான் கயிறிலோ வரும் கணேஷ்,பிற்காலக் கதைகளின் வசந்த் போலதான் பிஹேவ் செய்வான்.ஆனால் யவனிகாவின் கணேஷ் சொல்லமுடியாத அளவில் முதிர்ச்சியைக் காண்பிப்பான்.

போகப் போக சுஜாதாவின் வாசிப்புகளின் பிரதிபலிப்புகள் அந்த பாத்திரங்களில் இருந்ததுதான் அவற்றின் என்றுமான வெற்றிக்கான காரணம்;அவரின் வாசிப்பு என்றுமே-கடைசிவரை- உயிர்ப்புடன் இருந்தது !

Unknown said...

தமிழ்மணி, கார்த்திக், மங்களூர் சிவா,வாத்தியார் ஐயா,அறிவன்,

பல நாட்கள் கழித்து உங்கள் அனைவருடனும் உரையாடுவதில் மிக்க மகிழ்ச்சி..வாழ்த்துக்களுக்கு நன்றி.

தமிழ்மணி,

கண்டிப்பாக படித்து விட்டு கருத்து எழுதுகிறேன்..சற்று வேலை இருப்பதால் இத்தனை நாள் எழுத முடியவில்லை.

கார்த்திக்,

வாழ்த்துக்கு நன்றி.ஹாரி பாட்டர் படிக்கலை...ஆனாலும் கேள்விப்பட்ட வரை ஜேகே ரவுலிங் ஏழு நாவலுடன் முடிக்க போவதாக சொல்லியிருந்தது நினைவுக்கு வருகிறது..அந்த பாத்திரத்தை அப்படியே ஏழு நாவலுடன் விட்டுவிட்டால் அது பிற்காலத்தில் ஒரு கல்ட் ஸ்டேடசை அடைந்துவிடும் என நினைக்கிறேன்.

மங்களூர் சிவா,

சின்ன வயதில் நிறைய படிப்பேன்....அம்புலிமாமாவில் துவங்கிய படிக்கும் வழக்கம் இன்றைக்கு முனைவர் படிப்பு வரை கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறது.படித்திராவிட்டால் நான் இன்று வெறும் ஜீரோ...வாசிப்பு பழக்கத்தை ஏற்படுத்திய நாவல்களுக்கும் காமிக்சுகளுக்கும் நிறைய நன்றிக்கடன் பட்டிருக்கிறேன்.

வாத்தியார் ஐயா

நன்றி..வாழ்த்தியதற்கு மிக்க மகிழ்ச்சி...பழைய டெம்ப்ளேட் எதோ பட்டனை அமுக்கியதில் அழிந்துவிட்டது...அடுத்த மாதம் மீண்டும் எல்லா செட்டிங்சையும் மாற்றுவேன்

Unknown said...

அறிவன்,

கணேஷ், வசந்த் இருவரும் அறிமுகமான காலத்தில் நாவல் நாயகனுக்கு இருந்த எல்லா லட்சணத்தையும் உடைத்தார்கள்..அப்பல்லாம் வந்த சினிமா, கதைகளை பார்த்தால் வில்லன் தான் குடிப்பான், பெண்களுடன் கூத்தடிப்பான்,..கதாநாயகன் மிஸ்டர் பரிசுத்தமாக இருப்பான்.சிகரெட் கூட பிடிக்க மாட்டான்.

இந்த இமேஜை எல்லாம் கணேஷ், வசந்த் உடைத்தெறிந்தனர்.அதனால் தான் இவர்களை செமி வில்லன் என்றேன்...சட்டத்தின் ஒருபுறம் இவர்களும் மறுபுறம் வில்லன்களும் நின்றதை தவிர இவர்களுக்கும் கதையின் வில்லன்களுக்கும் இடையே பெரிய வித்தியாசம் எதுவுமில்லை..அதனால் தான் செமி வில்லன் என்றேன்.

//அவர்கள் இருவரின் கதாபாத்திரம் உயிர்ப்புடன் கடைசிவரை இருந்ததற்கான-சொல்லப்போனால் இன்னும் இருப்பதற்கான- காரணம் சுஜாதாவின் அகன்ற வாசிப்பு,அதனால் பரிமளித்த அவரின் அகடமிக் இண்டலிஜன்ஸ் அந்த கதாபத்திரங்களிலும் பிரதிபலித்ததே.//

கண்டிப்பாக..சுஜாதா இத்தனை படித்திராவிட்டால் கணேஷ் பாத்திரத்தை உருவாக்கி இருக்கவே முடியாது.வக்கிலே கதை எழுதுவது போல் ஆராய்ச்சி செய்து சட்ட பாயிண்டுகளை கணேஷ் வாயில் இருந்து சொல்ல வைத்தார்.அதனால் தான் இன்னமும் அந்த பாத்திரத்தை மறக்க முடியவில்லை.

கணேஷ் வசந்த் இருவரையும் சாதாரண மனிதர்களாக, சராசரி மனிதனின் பலவீனத்துடன் காட்டி ஒரு சூப்பர் ஹீரோ இமேஜை தராதது தான் சுஜாதாவின் திறமை.

கால்கரி சிவா said...

வருக வருக அனைத்து தளங்களிலும் தங்களின் முகம் காட்டுக

Unknown said...

நன்றி சிவா..இன்னும் ரெண்டே மாசம்..அப்புறம் முழுமூச்சா பதிவுகள் போட ஆரம்பிச்சுடலாம்