Monday, June 09, 2008

375. சங்கர்லாலும் வந்தியத்தேவனும் பிராண்டுகளாவார்களா?

ஒரே கதாபாத்திரங்களை வைத்து வருடக்கணக்கில் கதை எழுதுவது மிகவும் சிரமம்.சில எழுத்தாளர்கள் தாம் சிருஷ்டித்த கதாபாத்திரத்தின் கைதியாகி விட்டு மீள முடியாமல் அவதிப்படுவார்கள்.ஒரு கட்டத்தில் அவர்களது கற்பனைத்திறனே வரண்டுபோய் அந்த கதாபாத்திரத்தை வைத்து பிரடிக்டபிள் கதைகளை வைத்து ஒப்பேற்றும் நிலை வந்துவிடும்...அந்த பாத்திரத்தை விட்டு தொலைக்கவும் முடியாது..வாசகர் வட்டம் அதே கதாபாத்திரத்தை பற்றிய கதைகளை கேட்கும்.பப்ளிஷர்கள் அந்த பாத்திரத்தின் கதை தான் விற்கும் என்பதால் அதையே கேட்பார்கள்..

ஷெர்லக் ஹோம்ஸ் எழுதிய ஆர்தர் கானன் டாயிலுக்கும் இது தான் நடந்தது.அந்த பாத்திரம் புகழ் பெற,புகழ் பெற அவர் ஷெர்லக் கோம்சை பற்றி மட்டுமே எழுத வேண்டிய நிர்ப்பந்தம் உருவானது..ஒரு வட்டத்தில் சிக்குவதை அறிந்த டாயில் ஒரு கதையில் ஷெர்லக் ஹோம்சை கொன்றே விட்டார்.பிறகு பல வருடங்கள் கழித்து ஹோம்சை உயிர்ப்பிக்க வேண்டி வந்தது.

தமிழ்வாணன் சங்கர்லால் பாத்திரத்திடம் சிக்கிக்கொண்டார்.ஒரு கட்டத்தில் தன்னையே நாயகனாக்கி கதை எழுத துவங்கினார்...அது வெற்றிபெறவில்லை.கல்கண்டின் வாசகருக்காகவும், மணிமேகலை பிரசுரத்துக்காகவும் சங்கர்லால் தேவைப்பட்டார்...தமிழ்வாணன் மறைவுக்கு பிறகு சங்கர்லால் கதைகளை லேனா தமிழ்வாணன் எழுதினார்.ஆனால் எடுபடவில்லை.

ராஜேஷ்குமாரும் விவேக்கிடம் கைதியாகி விட்டது போல் தான் தெரிகிறது.அந்த பாத்திரத்துக்கு ஒரு வாசகர் வட்டம் வந்துவிட்டது.ஒரு கதையில் ரூபலாவை இடுப்பை பிடித்து வில்லன் தூக்குவது போல் ஒரு காட்சி..அடுத்த இதழில் வாசகர்கள் பொங்கி விட்டார்கள் பொங்கி...

சுஜாதா கணேஷ் வசந்த் பிரச்சனையை அழகாக சமாளித்தார்.கணேஷ் வசந்தை செமி வில்லனாக காட்டிவிட்டார்.உண்மையில் வசந்தும் கணேஷும் ஒரே ஆள்தான்..வசந்த் கணேஷின் இளவயது ஆல்டர் ஈகோ...இருவரும் ப்ளேபாய்கள்..கணேஷ் அலைச்சான் கேசில்லை,ஆனால் கல்யாணமாகாமல் சில பெண்களுடன் தொடர்பு வைத்திருப்பான்...அதை பற்றி அலட்டிக்கொள்ளாமல் இருப்பான்.வசந்த் செக்ஸ் ஜோக் அடித்தும் தனது கேர்ள்பிரண்டுகளைப்பற்றி பீற்றியும் அதை வெளிக்காட்டுவான்.

ராஜேஷ்குமார் தனது கதாநாயகனுக்கு கல்யாணம் செய்து வைத்து,குழந்தையையும் கையில் கொடுத்து விட்டார்.அது அந்த பாத்திரத்துக்கு சமாதி கட்டியதாகிப்போனது.எல்லா கதைக்கும் ஒரே நாயகி...கனவன் மனைவிக்கிடையே என்ன ரொமான்சை பெரிதாக நாவலில் எழுத முடியும்? போதாகுறைக்கு குழந்தை வேறு...எத்தனை வருடத்துக்குத்தான் அதை குழந்தையாகவே காட்ட முடியும்?அதை ஸ்கூல்லுக்கு அனுப்பவேண்டும்,காலேஜுக்கு அனுப்பவேண்டும்,கல்யானம் செய்து வைக்க வேண்டும்..அப்ப விவேக் ரூபலா கிழவியாகிவிடுவார்கள்...கதை தள்ளாடிவிடும்..

சுஜாதா அந்த தப்பை கடைசிவரை செய்யவே இல்லை...இன்னும் சில வருடங்கள் எழுதியிருந்தால் இன்ஸ்பெக்டர் இன்பாவை கணேஷுக்கு கட்டி வைத்திருப்பாரோ என்னவோ?

தமிழ் நாவல் உலகின் புகழ் பெற்ற இந்த பாத்திரங்கள் அனைத்தும் அந்தந்த ஆசிரியருடன் முற்றுப்பெறுவது தான் சோகம்.அந்த ஆசிரியரின் வெறுப்பு விருப்புகளுக்கு இந்த பாத்திரங்கள் அவ்வப்போது பலியாகி வந்திருக்கின்றன."ப்ரியா" நாவலை சினிமாவில் சொதப்பியதும் சுஜாதா பயங்கர காண்டாகி ப்ரியா பார்ட் டூ எழுதி அதில் ப்ரியாவுடன் கணேஷ் உடலுறவு வைத்துக்கொள்வது போல் எழுதி தனது கடுப்பை காட்டினார்...வசந்த் காரக்டருக்கு ஒய்ஜிமகேந்திரனை போட்டு, லண்டனில் நடக்கும் கதையை சிங்கப்பூரில் நடப்பது போல் எழுதினால் அவர் கடுப்பாக மாட்டாரா என்ன?

ஆங்கில பளிஷிங் துறை இதை அழகாக சமாளித்தது. ஒரு பிரபல கதாபாத்திரத்தை ஒரு பப்ளிஷிங் கம்பனி உரிமையாக்கி கொள்கிறது.அந்த கதாபாத்திரத்தின் இமேஜ்,வாசகர் வட்டம் எல்லாம் ஒரு பிராண்டை போல் பாதுகாக்கப்படுகிறது.பல எழுத்தாளர்கள் அந்த பாத்திரத்தை பற்றி கதைகளை எழுதுகிறார்கள்.இதன்மூலம் ஒரு எழுத்தாளரின் விருப்பு வெருப்புக்கு ஒரு பாத்திரம் பலியாவதும், ஒரு பாத்திரத்தின் புகழுக்கு ஒரு எழுத்தாளர் அடிமையாவதும் தவிர்க்கப்படுகிறது.

ஹார்டி பாய்ஸ் நாவலை எழுதுபவர் ப்ராங்க்ளின் டிக்சான்..ஆனால் இந்த பெயரில் யாரும் கிடையாது.இது ஒரு கற்பனை பெயர்.பல ஆசிரியர்கள் இந்த பெயரில் ஜோ ஹார்டி, ப்ராங்க் ஹார்டி கதைகளை எழுதுகின்றனர்.நான்சி ட்ரூ கதையை எழுதுவதும் அதே போல் பல ஆசிரியர்களே.ஜேம்ஸ் பாண்ட் பாத்திரமும் இதேபோல் ப்ராண்டாக பாதுகாக்கப்படுகிறது.

சந்தையியல் உத்திகளை ஆங்கில நாவல் இலக்கியம் அழகாக பயன்படுத்தியது.தமிழ்நாட்டிலும் அதே போல் நடந்தால் சாம்பு,சங்கர்லால், வந்தியத்தேவன்,விவேக், நரேன் போன்ற பாத்திரங்கள் காலம் கடந்து நிற்கும்...

Post a Comment