Saturday, July 14, 2007

315. பெட்ரோலில் வழுக்கிய புல்லட்

யோவ் 404..ஏதோ மறியல், தீக்குளிப்பு போர்ன்னு அனுப்பி வெச்சா ஒருத்தனையும் காணொமே? தீக்குளிப்பு போர் இன்னைக்கா நாளைக்கா?தந்திய வாங்கிப்பாரய்யா.."

404 தினத்தந்தியை வாங்கிவந்தார்."தமிழர் பின்னேற்ற கழகத்தின் சார்பில் தீகுளிப்பு போர் கோவை கலெக்டர் அலுவலகத்தில் காலை 12 மணிக்கு நடைபெறும்.கழகத்தின் கோவை பொதுசெயலாளர் புல்லட் பாண்டி கலந்துகொள்கிறார்" என்று சத்தமாக படித்தார்.

"12 மணிக்கு தீகுளிப்பு போருன்னான்..மணி 12.30 ஆச்சு..இன்னமும் ஒரு காக்காய் குருவியை கூட காணலை.வெயில் வேற கொளுத்தி தள்ளுது" என புலம்பினார் 312.

"ஆமா...புல்லட் பாண்டி இன்னைக்கு தீகுளிக்க போறது நிசமா?" என்று கேட்டார் 404.

"யார்ரா வெவரம் தெரியாதவனா இருக்கான்..த.பி.கவோட விளம்பரத்தை படி.விவரம் தெரியும்" என்றார் 312.

"பெட்ரோல் விலை உயர்வை எதிர்த்து காலை 12 மணிக்கு புல்லட் தலைமையில் தீகுளிப்பு போராட்டம். சாயந்திரம் ஐந்து மணிக்கு புல்லட் தலைமையில் பேரணி மற்றும் 7 மணிக்கு தீகுளிப்பு போரில் ஈடுபட்ட வீரர்களை பாராட்டி கேடயம் வழங்கும் விழா" என்று உரக்க படித்தார் 404.

"பாத்தியா. 12 மணிக்கு தீகுளிக்கறானாம். 7 மணிக்கு பேரணில கலந்துக்கறானாம். அப்ப இவன் எந்த லட்சணத்துல தீகுளிக்க போறான்னு நீயே பாரு" என்றார் 312.

இவர்களுக்கு பக்கத்தில் காமிராவுடன் நிருபர் ஒருவர் வந்து நின்றார்.."என்னண்னே..இன்னமும் யாரையும் காணோம்?" என்று 312இடம் கேட்டார்.

"பிரஸ்ஸுக்கே தெரியலை..எஙக்ளை கேட்டா?" என முணுமுணுத்தார் 404.

நிருபர் செல்போனை எடுத்தார்.."புல்லட் சார்..எத்தனை மணிக்கு வர்ரீங்க?12 மணிக்குன்னு சொல்லி இப்பவே மணி 12.30 ஆச்சு. 2 மணிக்குள் முடிச்சுட்டாதான் சாயந்திரம் பேப்பர்ல செய்தி வரும். இல்லைன்னா காலைல தான் வரும்" என்றார்.

"நீ ரிப்போர்ட்டை எழுதி அனுப்பிடய்யா...நான் சீக்கிரம் வந்துடறேன்" என்று போனை அனைத்தார் புல்லட்.

"ரிப்பொர்ட்டை எழுதி அனுப்பரதா?என்னன்னு?போரட்டம் நடந்தபின் தானே ரிப்பொர்ட் அனுப்பமுடியும்?" என முணுமுணுத்தார் நிருபர்.

"சார் தொழிலுக்கு புதுசா?" என்றார் 404."பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து மாபெரும் போர்.புல்லட் பாண்டி கைதானார்"ன்னு எழுதி அனுப்புங்க.

"என்னய்யா..பயர் எஞ்சின் ரெடியா இருக்கா?" என்று கேட்டுக்கொண்டே த.பி.க கோவை மாணவரணி செயலாளர் கோவிந்து வந்து சேர்ந்தார்.

"ஏண்னே லேட்டு?" என்றார் நிருபர்.

"சாயந்திரம் பேரணிக்கு ஏற்பாடு செய்திட்டிருந்தேன்..ஆமா லாரில ஆளுங்க வந்தாங்களே..இன்னமும் வரலையா என்ன?"

கோவிந்துவின் போன் அடித்தது. எடுத்து பேசியதும் கலவரமானார்."யாரை கேட்டு லாரியை பேரணி மைதானத்துக்கு அனுப்பினாங்க?யோவ்..தீகுளிப்பு முடிஞ்சுதான் பேரணி..இப்ப தீகுளிக்க ஆளுங்க இல்லாம நான் என்ன செய்வேன்?லாரியை திருப்பி இங்க அனுப்புங்க...என்னது ஆளுங்க சாப்பிட போயிட்டானுங்களா..என்னய்யா சொல்ரே?சீக்கிரம் அனுப்பி வையுய்யா..சாயந்திரம் பேப்பர்ல நியூஸ் வரணும்லே?"

புல்லட் வந்துசேர்ந்தபோது அங்கே அவரும் கோவிந்துவும் இன்னும் 5 பேர்தான் இருந்தார்கள்.

"7 பேரை வெச்சுட்டு என்னய்யா தீகுளிப்பு நடத்த முடியும்?" என கோபித்தார் புல்லட்.

"எதோ ஒண்ணு..சீக்கிரம் நடத்துங்கப்பா...போட்டோ எடுத்து அனுப்பணுமில்ல?" என்றார் நிருபர்.

"சரி..சரி..பெட்ரோல் கேனை எடு" என்றார் புல்லட். பெட்ரோலை எடுத்து மேலே ஊற்றிக்கொண்டார்.தீபெட்டியை எடுத்து உரச குச்சி வேலை செய்யவில்லை..

"லைட்டர் இருக்குண்ணே" என்று கொடுத்தார் 404.

"யார்ரா இவன்?விவரம் புரியாம?விட்டா நீயே கொளுத்திடுவே போலிருக்கே? தீகுச்சியை தண்ணிரில் நனைச்சு தான் கொண்டுவந்திருக்காங்க...அஞ்சு நிமிசம் பேச விட்டு அரெஸ்ட் பண்ணுவியா" என சத்தம் போட்டார் 312.

"சரி..அதென்ன தமிழர் பின்னேற்ற கழகம்னு ஒரு பேரு?" என கேட்டார் 404.

"தமிழனை சங்ககாலத்துக்கு பின்கொண்டு செல்லும் கழகம் தான் தமிழக பின்னேற்ற கழகம்..புரியுதா?சரி..சரி பேசி முடிச்சுட்டார் போலிருக்கு..அரெஸ்ட் பண்ணு" என்றார் 312.

புல்லட்டை போலிஸ் ஜீப்பில் ஏற்றி ஸ்டேஷன் கொண்டு சென்றார் 404...

புல்லட் போனதும் லாரியில் ஆட்கள் வந்து இறங்கினர்..கோவிந்து தலைமையில் பெட்ரோலை தலையில் ஊற்றிக்கொண்டு 400 பேர் கைதாகி ஒரே களேபரமாகி விட்டது. சாயந்திரம் பேப்பரில் புல்லட் தலைமையில் 6 பேர் கைது, கோவிந்து தலைமையில் 400 பேர் கைது என செய்தி வந்து த.பி.க கோவை கிளையில் ஒரே ரசாபாசமாகி விட்டது.

"ஏன்டா கோவிந்து எங்கிட்டயே பாலிடிகசா?தொலைச்சுபிடுவேன் தொலைச்சு" என உறுமினார் புல்லட்.

"அண்ணே கோவிச்சுகாதீங்க..லாரி இப்ப வந்துடும்ணேன்.நீங்க கேக்கலை" என்றார் கோவிந்து.

"அந்த பேப்பர்காரன் 2 மணிக்குள்ள நியூஸ் வேணும்னான்...ஒரு வேளை அவனும் நீயும் சேர்ந்து செஞ்ச சதியா இது?" என புலம்பினார் புல்லட்.

சாயந்திரம் நடந்த பேரணியில் பெரும்படையை திரட்டி தீகுளித்த கோவிந்துவை மாவட்ட செயலாளராக அறிவித்துவிட்டார் தலைவர்.

'நற,நற' என பல்லை கடித்தபடி வெளியே வந்தார் புல்லட்.

"புல்லட் அண்ணே..பதவி போனதால நீங்க எதிர்கட்சில சேரபோறதா சொல்ராங்களே உண்மையா?" என கேட்டார் நிருபர் ஒருவர்.

"எவண்டா அப்படி சொன்னது?நீயே புரளி கிளப்பி விட்டுடுவே போல் இருக்கே?" என கோபித்தார் புல்லட்.

"அப்படி சேர்ரதா இருந்தா இரவு 2 மணிக்குள் சேருங்கண்னே..அப்பத்தான் காலை பேப்பரில் செய்தி வரும்" என்றார் நிருபர்.

"இப்ப புரியுதடா விசயம்.நீ கோவிந்து கிட்ட கவர் வாங்கிட்டே" என உறுமினார் புல்லட்.நிருபரை அடிக்க துரத்தினார்...நிருபர் தப்பி தலைமறைவாகி விட்டார்.

5 comments:

சாலிசம்பர் said...

புல்லட் பாண்டிகளிடமிருந்து கடவுள் தான் நம்மை காப்பாற்ற வேண்டும்.
செய்வாரா?

வவ்வால் said...

செல்வன் இது என்ன சர் ரியலிஸ்டிக் மற்றும் மாஜிக்கல் ரியலிஸ கலவை கதையா?(எனக்கு புரியலைனா இப்படி தான் எதாவது சொல்வேன் :-)))

Unknown said...

ஜாலி ஜம்ப்பர்

வர வர புல்லட் பாண்டிகளிடமிருந்து கடவுளை நாம் தான் காப்பாற்ற வேண்டும் போலுள்ளது:)

வவ்வால்,

சும்மா ஒரு அங்கதக் கதை:) அவ்வளவுதான்

கால்கரி சிவா said...

//"சரி..அதென்ன தமிழர் பின்னேற்ற கழகம்னு ஒரு பேரு?" என கேட்டார் 404.

"தமிழனை சங்ககாலத்துக்கு பின்கொண்டு செல்லும் கழகம் தான் தமிழக பின்னேற்ற கழகம்..புரியுதா?சரி..சரி பேசி முடிச்சுட்டார் போலிருக்கு..அரெஸ்ட் பண்ணு" என்றார் 312.

//

சூப்பர்..

தமிழ் மிக பின்னேற்ற கழகம் என்று வரும் அதாவது தமிழனை லெமூரிய கண்டத்துக்கு கொண்டு செல்பவர்கள்.

இப்படியே பின்னேற்றி தமிழனை மீண்டும் குரங்காக்கி விடுவார்கள் குரங்காட்டிகள்

Anonymous said...

யோவ் கால்கறி, நீ மொதல்ல ச(ா)வுராஸ்ட்ராவுக்கு திரும்பி ஓடி போ, அப்புறம் தமிழன,் லெமூரியா பற்றி பேசலாம். இருக்க இடம் கொடுத்த படுக்க பாய் கேட்பியோ?