Friday, January 12, 2007

228. தமிழகத்தை குறிவைக்கும் தீவிரவாதிகள்

திடீரென்று சென்னை போலீஸின் உளவுத் துறையினருக்கு தூக்கமில்லை. சுறுசுறுப்பாய், ரகசியமாய், பரபரப்பாய் இயங்கிக் கொண்டிருக்கிறார்கள். காரணம், சமீபத்தில் பெங்களூரிலும் டெல்லியிலும் கைது செய்யப்பட்ட லஷ்கர் ஈ தொய்பா தீவிரவாதிகள்.

விசாரணையில் அவர்கள் கூறிய விஜயங்களைப் பார்த்தால் சென்னைவாசிகளுக்கும் தமிழக மக்களுக்கும் தூக்கம் வராது.

‘‘எங்கள் அடுத்த இலக்கு சென்னைதான். அதற்காக இரண்டு மாதங்களுக்கு முன்பு சென்னைக்கு வந்து தங்கியிருந்தோம். வெடிகுண்டு வைத்துத் தகர்க்க சென்னையின் முக்கியமான இடங்களைக் கண்காணித்தோம்’’_டெல்லியில் கைது செய்யப்பட்ட சபியுல்லா, அலி அகமது என்ற லஷ்கர் ஈ தொய்பா தீவிரவாதிகளின் வாக்குமூலம் இது.

இது ஒற்றைச் சம்பவம் அல்ல. சில மாதங்களுக்கு முன்பு திருச்சி விமான நிலையத்துக்கு தீவிரவாதிகளிடமிருந்து மிரட்டல் வந்தது. சாதாரண தீவிரவாத இயக்கத்திலிருந்து அல்ல, தீவிரவாதிகளின் தலைமைச் செயலகமான அல்கொய்தாவிடமிருந்து. ஆனால் உடனடியாக இந்தச் செய்தி மறுக்கப்பட்டது. இந்தியாவில் அல்கொய்தா இல்லை என்று சொல்லப்பட்டது.

ஆனால், இந்த டிசம்பரில் இன்னொரு திடுக்கிடும் செய்தி. இது நம் உளவுத்துறையிடமிருந்து அல்ல; உலகிலேயே மிகச் சிறந்த உளவுத்துறையான இஸ்ரேலின் மொஸாத்திடமிருந்து. ‘இஸ்ரேல் நாட்டவர் யாரும் இந்தியாவுக்குப் போகவேண்டாம். முக்கியமாய் புத்தாண்டுக் கொண்டாட்டத்துக்காக கோவாக் கடற்கரைப் பக்கம் போய்விடாதீர்கள். குறிவைத்து அடிக்க அல் கொய்தா காத்திருக்கிறது’ என்றது அந்தச் செய்தி. ஆகவே, இந்தியாவுக்கு அல்கொய்தா ஆபத்து இருக்கிறது. அதுமட்டுமில்லை, முன்பு தீவிரவாதிகள் என்றால் ஏதோ வடஇந்திய சமாசாரம் என்று நாம் எட்டி நின்று வேடிக்கை பார்ப்போம். நியூஸ் சேனல் மாற்றுவோம். ஆனால் இன்று நம் வீட்டுக் கொல்லைப்புறத்திலேயே கொலைகாரர்கள் காத்துக்கொண்டிருக்கிறார்கள். கொஞ்சம் பகீரென்றுதான் இருக்கிறது.

இதற்கு பிள்ளையார் சுழி போட்ட சம்பவம்தான், 2005 டிசம்பரில் பெங்களூர் விஞ்ஞானிகள் மாநாட்டில் நடந்த தீவிரவாதிகளின் தாக்குதல். அதில் ஒரு விஞ்ஞானி கொல்லப்பட்டார். எம்.டி.ஆரில் டிபன், காபி சாப்பிட்டுவிட்டு ராஜ்குமார் படங்களை அலுப்பில்லாமல் பார்த்துக்கொண்டிருக்கும் பெங்களூர்வாசிகளுக்கு தீவிரவாதம் புதிது. அதிர்ந்து போனார்கள். அவர்கள் அதிர்ந்தது மட்டுமல்ல மொத்த தென்னிந்தியாவுமே அதிர்ந்தது. காரணம், அந்தச் சம்பவத்தில் கைதான தீவிரவாதிகளின் வாக்குமூலம்.

‘‘கர்நாடகாவிலுள்ள அணுசக்தி நிலையத்தைத் தகர்க்க திட்டமிட்டோம். அல்மாட்டி அணையை உடைக்க எண்ணியிருந்தோம். ஷராவதி மின்சக்தி இணைப்புகளைத் துண்டிக்க திட்டமிட்டோம்...’’ இப்படி ஏதோ மளிகைக்கடை லிஸ்ட்போல் தாக்குதல் லிஸ்ட்டை சொல்லச் சொல்ல உளவுத்துறைக்கு அதிர்ச்சி.

இதில் கைதான ராஜி உர் ரஹ்மான் என்ற அப்துல் ரஹ்மான், லஷ்கர் ஈ தொய்பாவின் தென்னிந்திய கொடூரச் செயல்களுக்கு தலைமை தாங்கிக் கொண்டிருந்தவன். இவன் பதின்மூன்று வருடங்கள் சவுதிஅரேபியாவில் இருந்து லஷ்கர் ஈ தொய்பாவுக்கு நிதி மந்திரியாக செயல்பட்டிருக்கிறான்.

இது என்ன லஷ்கர் ஈ தொய்பா அடிக்கடி வருகிறதே என்று புருவத்தை உயர்த்துபவர்களுக்கு, இது காஷ்மீரைச் சேர்த்த பயங்கரமான தீவிரவாத இயக்கம். பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ உளவுத் துறையினரால் சீராட்டி பாராட்டி பணமூட்டி வளர்க்கப்படும் படுபாதக இயக்கம்.

வடஇந்தியா, காஷ்மீர், பெங்களூர் எல்லாம் ஓகே; தமிழ் நாட்டுக்கும் இத்தனை ஆபத்து இருக்கிறதா? இங்கே உளவுத்துறை அதிகாரிகளிடம் விசாரித்தோம். பெயர் குறிப்பிட வேண்டாம் என்று கேட்டுக் கொண்டார்.

‘‘முன்பு இருந்த தமிழ்நாடு வேறு. இப்போதுள்ள தமிழ்நாடு வேறு. முன்னேற்றப்பாதையில் படு வேகமாக வளர்ந்து வருகிறது. முக்கியமாய் கம்ப்யூட்டர் நிறுவனங்கள் ஏராளமாய் பெருகிவிட்டன. இந்த கம்ப்யூட்டர் நிறுவனங்களில் தொண்ணூறு சதவீதம் அமெரிக்காவுடன் வர்த்தகத் தொடர்புகள் வைத்திருக்கின்றன. இந்த நிறுவனங்களையோ அல்லது சென்னையின் மற்ற இடங்களையோ தாக்குவதன்மூலம் உலகின் கவனத்தைக் கவர முடியும். அதேசமயம் இந்தியாவுக்கு வரும் முதலீடுகளையும் தடுக்க இயலும்.

இங்கு இயங்கிக் கொண்டிருக்கும் கால் சென்டர்கள், பி.பி.ஓ.க்களை நம்பி பல அமெரிக்க கம்பெனிகள் இருக்கின்றன. இவற்றை சீர்குலைப்பதன் மூலம் அமெரிக்க கம்பெனிகளை தடுமாறச் செய்ய முடியும். வட இந்தியாவில் இதுபோன்ற விஷயங்கள் இல்லை. சமீபகாலமாக இந்தியாவின் பொருளாதார இதயமாக தென்னிந்தியா மாறி வருகிறது. இந்தப் பகுதிகளைத் தாக்குவதன் மூலம் ஏராளமான நஷ்டத்தை ஏற்படுத்த இயலும். அதனால் நாம் எப்போதும் உஷார் நிலையில் இருப்பது நல்லது.’’ என்று சொல்கிறார்கள் அந்த அதிகாரிகள்.

ஆனால் அவர்கள் கூறிய தகவல்களில் நம்மை லேசாக நிம்மதியடைய வைக்கும் செய்தியும் இருக்கிறது.

‘‘வட இந்தியாவில் தீவிரவாதத்தை எளிதில் வளர்த்து விட முடியும். ஏனென்றால் அங்கே மத சகிப்புத் தன்மை கொஞ்சம் குறைவு. அதை வைத்து தீவிரவாத இயக்கங்களுக்கு ஆள் பிடித்து விடுவார்கள். ஆனால் தென்னிந்தியாவில் இந்தவித இயக்கங்களுக்கு ஆள் பிடிப்பது சிரமமான காரியம். அதுவும் தமிழ்நாட்டில் மிக மிகச் சில பகுதிகளில்தான் இளைஞர்கள் தீவிரவாதத்தை நோக்கிச் செல்கிறார்கள். கேரளாவிலும், கர்நாடகாவிலும் காலூன்றிய அளவு தமிழகத்தில் அதிபயங்கர தீவிரவாதிகள் யாரும் ஊடுறுவவில்லை. ஆனால் இதே நிலை நீடிக்கும் என்று சொல்ல இயலாது’’ என்கிறார்கள்அதிகாரிகள்.

இளைஞர்களைத் தீவிரவாதத்துக்குள் இழுக்க இரண்டுவித முறைகளை தீவிரவாத இயக்கங்கள் பயன்படுத்துகின்றன. ஒன்று_மத வெறி. மற்றொன்று_ வேலை வாய்ப்பு. துபாய், சவுதி, குவைத் போன்ற எண்ணெய் வள நாடுகளுக்கு வேலைக்கு அழைத்துச் செல்கிறேன் என்று சொல்லி மத்திய கிழக்கு நாடுகளுக்கு இளைஞர்களை அழைத்துச் சென்று, அங்கு மூளைச் சலவை செய்து ஏதாவது ஒரு வகையில் தீவிரவாத இயக்கத்துக்கு உதவ வைத்து விடுகிறார்களாம்.

அதனால் அந்தப் பிரதேசங்களில் வேலைக்குச் செல்வதற்குமுன், யார் மூலம் போகிறோம் என்பதைப் பார்ப்பது நல்லது. இந்த உளவுத்துறை அதிகாரிகளிடம் கடைசியாக ஒரு கேள்வி கேட்டோம்.

‘‘தீவிரவாதிகளின் தாக்குதலிலிருந்து தமிழகத்தைப் பாதுகாக்க முடியுமா? அதற்கு என்ன செய்ய வேண்டும்?’’

‘‘கண்டிப்பாய் பாதுகாக்க முடியும். அதற்கு பொதுமக்களும் உதவ வேண்டும். அவர்கள் மதங்களைப் பார்க்காமல் மனித மனங்களைப் பார்த்தால் எந்தவித தீவிரவாதமும் கால் பதிக்க இங்கே இடம் கிடைக்காது. காவல்துறை சார்பில் நாங்களும் மிகவும் விழிப்புடன் இருக்கிறோம். எத்தனையோ ஆபத்துக்களைத் தடுத்திருக்கிறோம். இதையும் தடுப்போம்’’.

அதிகாரிகள் அதிக நம்பிக்கையுடன் சொல்கிறார்கள். நாமும் நம்புவோம்.

_திருவேங்கிமலை சரவணன்,

படங்கள்: ஆர். சண்முகம். நன்றி: குமுதம் 01-17-2007 Issue

Post a Comment