Tuesday, January 09, 2007

224.வீரபாண்டிய முஷாரப்

அமெரிக்க ச ுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு முஷாரப் பாகிஸ்தான் திரும்பினார். ஓய்வெடுக்க வீட்டுக்கு சென்றார். பள்ளிக்கூடத்திலிருந்து ஓடிவந்த அவரது பேரன் தாத்தா என ஆசையோடு அவரை கட்டிக்கொண்டான். "அமெரிக்க சுற்றுப்பயணம் எப்படி இருந்தது தாத்தா?" என்று ஆர்வத்தோடு வினாவினான்.

"சுற்றுப்பயணத்தில் நல்லதும் இருந்தது, கெட்டதும் இருந்தது" என்றார் முஷாரப்."பையன் களைப்பாய் வந்திருக்கிறான். ஹார்லிக்ஸ் கொடு" என தன் மனைவியிடம் சொன்னார்.

"நானும் தான் உங்களுடன் டூர் வந்தேன். எனக்கு களைப்பாக இருக்காதா?" என அவரது மனைவி முணுமுணுத்தார்."ஒரு நாளைக்குத்தான் நீங்கள் உங்கள் கையால் ஹார்லிக்ஸ் வைத்து கொடுங்களேன்.அதென்னவோ ஆயிரம் வேலைக்காரர்கள் இருந்தாலும் இவனுக்கு நானோ,இவனது அம்மாவோ தான் ஹார்லிக்ஸ் வைத்து தரவேண்டும் என அப்படி ஒரு பிடிவாதம்.."

"பாகிஸ்தான் ஜனாதிபதி சமைப்பதா?என்ன சொல்கிறாய் நீ?இன்னும் ஐந்து நிமிடத்தில் ஹார்லிக்ஸ் வரவில்லை என்றால் உன்னை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் பிடித்து உள்ளே போட்டுவிடுவேன்" என செல்லமாக மிரட்டினார் முஷாரப்.

"அப்படியாவது செய்யுங்கள்.உங்களுடன் குப்பை கொட்டுவதை விட அதுவே மேல்" என சலித்துக்கொண்டு ஹார்லிக்ஸ் வைக்க சென்றார் பாகிஸ்தானின் முதல் பெண்மணி.

"தாத்தா...அமெரிக்க சுற்றுப்பயணத்தில் என்னென்ன நடந்தது என சொல்லு தாத்தா?என்னவோ கெட்டது நடந்தது என்ராயே?அது என்ன/" என்று ஆவலுடன் கேட்டான் பேரன்.

"அதை ஏன்டா கண்ணா கேட்கிறாய்?" என சலித்துக்கொண்டார் முஷாரப்."என்னை வரம்புமீறி கேவலப்படுத்தினார்கள், அவமானப்படுத்தினார்கள்...ஆனால் அதற்கெல்லாம் சேர்த்து கடைசியில் வட்டியும் முதலுமாக திருப்பி கொடுத்து விட்டேன்" என்றார் முஷாரப்.

"உங்களை கேவலப்படுத்தினார்களா?யார் தாத்தா அப்படி செய்தது/' என ஆவேசத்துடன் கேட்டான் பேரன். தாத்தா மீது அவனுக்கு அப்படி ஒரு பாசம்.

"ஒருத்தரா, ரெண்டு பேரா?எல்லா பையலும் அல்லவா சேர்ந்து கேவலப்படுத்தினார்?" என்று பெருமூச்செறிந்தார் முஷாரப். "என் விமானம் தரையில் இறங்கியதும் என்னை வரவேற்க மிகவும் ஜூனியரான ஒரு அதிகாரியை அனுப்பினார்கள்.நியாயத்துக்கு நான் அந்த வரவேற்பை நிராகரித்திருக்க வேண்டும்.ஆனால் பெருந்தன்மையுடன் அதை ஏற்றுக்கொண்டது நான் செய்த முதல் தவறு.."

"ஜூனியர் அதிகாரியை அனுப்பினார்களா?என்ன திமிர் தாத்தா இவன்களுக்கு?" என ஆவேசத்துடன் கேட்டான் பேரன்."அப்புறம் என்ன நடந்தது?"

"அப்புறம் என்ன?என்னை எந்த ஓட்டலில் தங்க வைக்க போகிறீர்கள் என்று கேட்டேன்.அதற்கு "சூப்பர் 8 மோட்டலில்" என்று நையாண்டி செய்தார் அந்த அதிகாரி.நான் முகம் சுளித்ததும் எனக்கு சென்ஸ் ஆஃப் ஹியூமரே இல்லை என்று சொன்னார்.அதன்பிறகு எனக்கு மிகவும் கோபம் வந்து "ஒரு ஜனாதிபதியிடம் பேசும் முறை இதுவல்ல" என்றேன்.அதற்கு அவர்..."

"அதற்கு அவன் என்ன சொன்னான் தாத்தா..?' என ஆவேசத்துடன் கேட்டான் பேரன்.கோபத்தில் அவன் உடல் நடுங்கியது.

"அந்த நாதாரி நாய் ஏதாவ்து பதில் சொல்லியிருந்தால் கூட பரவாயில்லை.நான் திட்டியதற்கு பதில் சொல்லாமல் தொப்பை குலுங்க விழுந்து,விழுந்து சிரித்தான்.போதாகுறைக்கு "யூ ஆர் அ வெரி ஃபன்னி ஃபெல்லோ" என்று சொல்லி என் தொடையில் ஒரு தட்டும் தட்டி சிரித்தான்" என்று அழாக்குறையாக சொன்னார் முஷாரப்.

"என்ன திமிர் அந்த நாய்க்கு? அவனை சுட்டுகொல்ல வேண்டும்" என்று ஆவேசத்துடன் சத்தம் போட்டான் சிறுவன்.கோபத்தில் அவனது உடல் ஆடியது.

"இவனாவது பரவாயில்லை.அதற்கு பிறகு என்ன சந்தித்த காண்டலீசா ரைஸ் நடந்துகொண்ட விதம் இருக்கிறதே, என்னை திட்டிய திட்டு இருக்கிறதே,அவள் புருஷனை கூட அவள் அப்படி திட்டி இருப்பாளா என்பது சந்தேகம் தான்.அப்படி திட்டித்தீர்த்தாள் அந்த சிறுக்கி" என பல்லை நற,நற என கடித்தார் முஷாரப்.

"ஒரு பொம்பளையிடமா திட்டு வாங்கினீர்கள்?என்ன கேவலம் இது தாத்தா?" என்று கூக்குரலிட்டான் சிறுவன்."அதுதான் இத்தனைநாளாக காண்டலீசா காலால் இட்ட எல்லா உத்தரவையும் தலையால் நிறைவேற்றினீர்களே?இன்னும் என்ன வேண்டுமாம் அந்த சதிகாரிக்கு?" என கோபத்துடன் கேட்டான் பேரன்.

"அதை ஏன்டா கண்ணு கேட்கிறாய்?" என சோகத்துடன் சொன்னார் முஷாரப்."இத்தனை செய்தும் அவளுக்கு போதவில்லை.இன்னும் ஆறு மாதத்தில் ஒசாமாவை பிடித்து தரவில்லை என்றால் என்னை பதவிநீக்கம் செய்துவிட்டு வேறு ஜனாதிபதியை நியமித்து, என்னை சதாம் உசேனை போல் தூக்கில் போட்டுவிடுவேன் என்றெல்லாம் மிரட்டினாளடா அவள்" என்று சொல்லி ஓவென்று அழுதார் முஷாரப்.

"யாரை யார் மிரட்டுவது?பாகிஸ்தான் ஒரு சுதந்திர நாடு.அதன் ஜனாதிபதியை நீக்குவேன், தூக்கில் போடுவேன் என்று சொல்ல இவள் யார்?என்ன தகுதி இருக்கிறது இவளுக்கு?ஜார்ஜ் புஷ் மிரட்டியிருந்தாலாவது ஏதோ அமெரிக்க ஜனாதிபதியே மிரட்டினார் என்று கொஞ்சம் கவுரவமாவது மிஞ்சியிருக்கும். கிராதகி,அரக்கி.." என உறுமினான் பேரன்.

"ஜார்ஜ்புஷ்.." என உறுமினார் முஷாரப்."...இவர்கள் செய்த அவமானத்துக்கு எல்லாம் வட்டியும் முதலுமாக சேர்த்து புஷ்ஷுக்கு திருப்பி கொடுத்துவிட்டேன்"

"தாத்தா..நீ சொல்வது உண்மையா?அப்படி என்ன செய்தாய் நீ?" என குதூகலத்துடன் கேட்டான் பேரன்.

""புஷ் எனக்கு வெள்ளை மாளிகையில் விருந்து வைத்தார்.அதற்கு நான் பாகிஸ்தானின் பாரம்பரிய உடையான ஷெர்வாணி மற்றும் ஜிப்பா அணிண்துகொண்டு போனேன்.அதை பார்த்ததும் அந்த கடங்காரன் புஷ் ஏதோ கோமாளியை பார்ப்பது போல் விழுந்து,விழுந்து சிரித்தான்.'யூ லூக் ரியல்லி ஃபன்னி' என்று சொல்லி என் விலாவில் ஒரு இடியும் இடித்தான்.அப்புறம் 'இதென்ன உன் தலைமுடி நரைத்திருக்கிறது?வயதாகிவிட்டதா?என்னைப்போல் விக் வைத்துக்கொள்ள வேண்டியதுதானே" என கேட்டான்...

"இவன் விக் வைத்துக்கொண்டால் நீங்களும் வைத்துக்கொள்ள வேண்டுமா?அப்புறம் என்ன சொன்னான்?" என ஆவேசத்துடன் கேட்டான் பேரன்.

"அப்புறம் ஏன் உன் முகத்தில் இப்படி வேர்க்கிறது? முகப்பவுடர் போட்டுக்கொள்ள வேண்டியதுதானே?" என்று கேட்டான்.

'அப்புறம்.." என கோபத்துடன் கேட்டான் பேரன்.

"என்னோடு உன் பாட்டியும் விருந்துக்கு வந்திருந்தாள்.அவள் கொண்டை அணிந்திருந்ததை பார்த்து லாரா புஷ் 'ஏன் கொண்டை போட்டிருக்கிறாய்?இரட்டை சடை பின்னி ரிப்பன் கட்டிக்கொள்ள வேண்டியதுதானே என ஜோக் அடித்தாள்.."

"இவள் யார் இதை எல்லாம் சொல்ல?..தாத்தா நீங்கள் ஏதோ சூடாக திருப்பி கொடுத்தீர்கள் என்றீர்களே?அது என்ன தாத்தா?" என்று ஆவலுடன் கேட்டான் பேரன்.

"இத்தனை கேவலத்துக்கு பின்னும் நான் சிரித்தமாதிரி நடித்துக்கொண்டு அவனிடம் பேசினேன்.எல்லோரும் மேஜையில் அமர்ந்து விருந்து சாப்பிட்டோம்.மேஜையில் சின்னதாக அமெரிக்க மற்றும் பாகிஸ்தான் கொடிகள் வைக்கப்பட்டிருந்தின.என்னை கிண்டலடித்தபடி சாப்பிட்டு முடித்த புஷ் சாப்பிட்டபின் அவருக்கு பக்கத்திலிருந்த பாகிஸ்தான் கொடியை எடுத்து கையையும், முகத்தையும் துடைத்தார்.எனக்கு ரத்தம் கொதித்தது. என்னை கேவலப்படுத்துவதை கூட தாங்கிக்கொள்வேன்.ஆனால் நாட்டுக்கொடியை......"என பல்லை கடித்தார் முஷாரப்.

"என்ன செய்தீர்கள் தாத்தா?" என அளவில்லாத சீற்றத்துடன் கேட்டான் பேரன்.

"அடேய் திமிர் பிடித்த புஷ்...சடை வாளாகாது, முகப்பவுடர் வெடிமருந்தாகாது, விக் தலைக்கவசமாகாது....உன்னைப்போல் கோட் சூட்டு போட்டு திரிய நான் அமெரிக்கனில்லையடா,,நான் தன்மானம் உள்ள ஒரு பாகிஸ்தானி.எங்கள் நாடு ஏழை நாடாக இருக்கலாம்.ஆனால் அதற்காக எங்கள் மானத்தையும், கவுரவத்தையும் உன்னிடம் விற்று பிழைப்பவர்களில்லை நாங்கள்.இன்றிலிருந்து நாங்கள் சோறுதண்ணிரின்றி மானத்துடன் செத்தாலும் சாவோமே அன்றி நீ போடும் எலும்புத்துண்டுக்கு வாலை ஆட்டமாட்டோம்' என ஆவேசத்துடன் சொன்னேன்." என்ரார் முஷாரப்.

"தாத்தா..தாத்தா..நீ சரியான ஆம்பளை..மாவிரன் என்பதை அவனுக்கு நிருபித்து விட்டாய்" என பரவசத்துடன் சொன்னான் பேரன்."வாழ்க பாகிஸ்தான்..வாழ்ந்தால் தன்மானத்தோடு வாழ்வோம்...வீழ்ந்தால் விதையாய் வீழ்வோம்.வாழ்க தேசம்..வாழ்க பாகிஸ்தானின் புகழ்" என ஆவேசத்துடன் முழக்கமிட்டான் பேரன்.

"ஆமாம்டா கண்னா.சரி..சரி..இந்தா பாட்டி ஹார்லிக்ஸ் கொண்டுவந்து விட்டார்.குடித்துவிட்டு போய் விளையாடு" என்று சொன்னார் முஷாரப்.

பேரன் அந்தபக்கம் போனதும் முஷாரப்பின் மனைவி அவரை உற்றுப்பார்த்தாள்.

"நீங்க அந்த வீரவசனத்தை பேசியதை பேரனிடம் சொன்னீர்கள்.சரி.ஆனால் புஷ்ஷுக்கு உருது தெரியாது என்பதை பேரனிடம் சொன்னீர்களா?" என கேட்டாள்.

"இப்ப இது ரொம்ப முக்கியமா?பேசாம போக மாட்டியா?" என கோபத்துடன் சத்தம் போட்டார் முஷாரப்.

"ஆமாம்.ஒரு வார்த்தை சொன்னா என்னை திட்டுவீங்க.காண்டலீசா அத்தனை திட்டு திட்டுவா..வாயை திறக்காம வாங்கிக்குவீங்க" என முணுமுணுத்தபடி அகன்றார் முஷாரப்பின் மனைவி.

"சத்தம் வெளியே வந்ததோ..தொலைச்ச்புடுவேன்,தொலைச்சு.." என செல்லமாக மிரட்டினார் முஷாரப்.

16 comments:

Anonymous said...

sollappatta visayam nejama??? (comedy kalanthu solli irukkingala? illa 100% karpanaiya)

chinnathambi

Unknown said...

That's 100% fiction chinna thambi.But actually musharraf was humiliated in bush's visit to pakistan in a different way.Will write about it later on.

Anonymous said...

Really hilarious.couldnt control my laughter.

Raj

மாசிலா said...

//musharraf was humiliated in bush's visit to pakistan in a different way//
அமெரிக்காவுக்கு தேவைப்பட்டால் நண்பன் தேவையில்லை என்றால் யாரோ. இதுதான் அவர்களின் கொள்கை.

Unknown said...

Thanks raj

Unknown said...

உண்மையான கருத்து மாசிலா.

நன்றி

அன்புடன்
செல்வன்

குசும்பன் said...

கொண்டலீஸா ரைஸு செல்வி என்பது செல்வனாருக்குத் தெரியாதோ? :-) மத்தபடி பேரனுக்கு முஷாரப் கொடுத்த செவ்வி ஜூப்பர் :-)

Unknown said...

நன்றி தலைவா குசும்பரே,

அது முஷாரப் கோபத்தில சொன்ன வார்த்தை. மத்தபடி காமடி கதையில் லாஜிக் எல்லாம் பார்க்க கூடாது சொல்லிபுட்டேன்:-)

குசும்பன் said...

அப்டிப் போடுங்க அருவாள... நம்மள தலீவரெல்லாம் ஆக்காதீங்ணா... நம்ம ஒரு சாதா"ரண" தொண்டர் "அடி"ப்பொடி தான். ;-)

dondu(#11168674346665545885) said...

"அவள் புருஷனை கூட அவள் அப்படி திட்டி இருப்பாளா என்பது சந்தேகம் தான்.அப்படி திட்டித்தீர்த்தாள் அந்த சிறுக்கி"
சரி, சரி அவ பாய் ஃபிரண்டுன்னு மாத்திட்டா போச்சு.

இன்னொரு விஷயம் முஷர்ரஃப் நிஜமாகவே உருதுவில் இதையெல்லாம் சொல்லியிருந்தால் அவருக்கு நிஜமாகவே சங்குதான், ஏனெனில் அங்கு கண்டிப்பாக ஒரு உருது<>ஆங்கில மொழிபெயர்ப்பாளர் இருந்து புஷ்ஷிடம் வத்தி வைத்திருப்பார். :)))

அன்புடன்,
டோண்டு ராகவன்

Unknown said...

குசும்பரே,

அப்படி எல்லாம் இல்லை. அங்கதப்பதிவு எழுதுவதில் நீங்க தான் இங்கே முன்னோடி.அதனால் தான் உங்களை தலைவர் என்கிறது.

ஒன்றே இணையம்,ஒருவனே குசும்பன்.

Unknown said...

வாருங்கள் டோண்டு ஐயா,

முஷாரப்ப் மிக அழகாக ஆங்கில பேசுவார்.அதனால் அவர் ஆங்கில மொழிபெயர்ப்பாளர்களை பயன்படுத்துவதில்லை. கதையில் முஷாரப் ஆங்கிலத்தில் திட்ட பயந்துகொண்டு தான் உருதுவில் திட்டிவிட்டு வந்ததாக எழுதினேன்.

கால்கரி சிவா said...

டோண்டு சார், எங்கே போனாலும் பிசினஸ் ப்ராஸ்பெக்டைப் பார்க்கீறீர்கள்

Unknown said...

சிவா,

செய்யும் தொழிலே தெய்வம் என நினைப்பவர் டோண்டு சார்:-)

dondu(#11168674346665545885) said...

"முஷாரஃப் மிக அழகாக ஆங்கிலம் பேசுவார்.அதனால் அவர் ஆங்கில மொழிபெயர்ப்பாளர்களை பயன்படுத்துவதில்லை."
நீங்க வேற. முஷர்ரஃபா மொழிபெயர்ப்பாளர் வைத்துக் கொள்வார்? அதை அமெரிக்கர்களே ஏற்பாடு செய்து கொள்வார்கள். ஆனால் என்ன, அவர்கள் இருப்பது முஷர்ரஃபுக்கு தெரியாது. அதுவும் ஆங்கிலம் தெரிந்த விசிட்டர் தன் உதவியாளர்களுடன் பேசுவதை அவர்கள் அப்படித்தான் கண்டு பிடிப்பார்கள். அவர்கள் மட்டுமல்ல, எல்லோருமேதான்.

விளையாட்டுக்கு கூறவில்லை, உண்மையாகவே கூறுகிறேன். நான் ஒரு முறை ஃபிரெஞ்ச் மொழிபெயர்ப்புக்கு சென்ற போது ஃபிரெஞ்சுக்காரர் பிரான்ஸிலுள்ள தன் கம்பெனியுடன் விசிட் சம்பந்தமாக பேச வேண்டியிருந்தது. என் வாடிக்கையாளர் என்னை அடுத்த அறைக்கு அனுப்பி எக்ஸ்டென்ஷன் ஃபோனில் அவர் தன் கம்பெனியுடன் என்ன பேசுகிறார் என்பதைக் கூறுமாறு பணித்தார். அதையும் செய்ய வேண்டியிருந்தது.

கால்கரி சிவா அவர்களே, எங்கும் எப்போதும் கண், காது இவற்றை திறந்து வைத்துக் கொள்ள வேண்டும். அப்போதுதான் தொழிலில் முன்னேற முடியும். வாய்ப்புக்கள் எந்த ரூபத்திலும் வரலாம்.

பிளாக்கர் சந்திப்பில் கூட நான் என் விசிட்டிங் கார்டுகளை வினியோகம் செய்வதே அவை தேவையானவரிடம் போய் சேர வேண்டும் என்பதே.

இம்முறையில் மா.சிவகுமார் அவர்கள் ஒரு பெரிய வேலை கொடுத்தார். சென்னையிலிருந்து தில்லி ரயிலில் செல்லும்போது பல வாடிக்கையாளர்களை இம்முறையில் பிடித்துள்ளேன். தெருவோரம் செருப்புக் கடை வைத்திருப்பவனும் பாதசாரிகள் காலைத்தான் கவனிப்பான் என்பது எல்லோரும் அறிந்த உண்மை. யார் செருப்பேனும் பிய்ந்து போயிருந்தால் உடனே அதை சரி செய்வித்து கொள்ள அவருக்கு அழைப்பு விடுப்பான்.

வாடிக்கையாளர்களை அணுகுவது எப்படி என்னும் வரிசையில் போட்ட 10 பதிவுகளில் இரண்டாவதில் வாடிக்கையாளரை எப்படி பிடிப்பது என்பது பற்றியும் எழுதியுள்ளேன்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

Unknown said...

//கால்கரி சிவா அவர்களே, எங்கும் எப்போதும் கண், காது இவற்றை திறந்து வைத்துக் கொள்ள வேண்டும். அப்போதுதான் தொழிலில் முன்னேற முடியும். வாய்ப்புக்கள் எந்த ரூபத்திலும் வரலாம்.//

மிகவும் உண்மையான கருத்து டோண்டு அய்யா.செய்யும் தொழிலில் கண்ணாக இருந்து கிடைக்கும் சந்தர்ப்பங்களை பயன்படுத்தி முன்னேறுவது அனைவரும் செய்ய வேண்டிய ஒன்று.

//பிளாக்கர் சந்திப்பில் கூட நான் என் விசிட்டிங் கார்டுகளை வினியோகம் செய்வதே அவை தேவையானவரிடம் போய் சேர வேண்டும் என்பதே.//

சந்தையியலில் இதை referals என அழைப்பார்கள்.இதன்மூலம் நல்ல வாடிக்கையாளர்கள் கிடைக்க வாய்ப்புண்டு.

அன்புடன்
செல்வன்