Sunday, January 07, 2007

223.அமெரிக்காவில் படிக்க ஆசையா?-பாகம் இரண்டு

அமெரிக்காவில் சீட் கிடைப்பதை விட விசா கிடைப்பது மிக கடினம் என்பதை முதலில் நினைவு வைத்து கொள்ளுங்கள்.அதனால் அமெரிக்க பல்கலைகழகங்களுக்கு விண்ணப்பம் போடும்போது கூடவே ஆஸ்திரேலியா, கனடா போன்ற நாடுகளுக்கும் விண்ணப்பம் போட்டுவிடுங்கள். குறிப்பாக கனடாவில் மிக நல்ல தரம் வாய்ந்த கால்கரி ,க்வீன்ஸ் போன்ற பல பல்கலைகழகங்கள் உண்டு.அமெரிக்க விசா கிடைக்கவில்லை என்றால் இரண்டாவது விருப்ப தேர்வாக இந்த நாடுகளை தேர்ந்தெடுத்து கொள்ளலாம்..

அமெரிக்க விசா அலுவலகத்துக்கு போகுமுன் கீழ்கண்டவை உங்களிடம் இருந்தால் விசா கிடைக்க உங்களுக்கு ஓரளவு வாய்ப்பிருக்கிறது என சொல்லலாம்.

1.ஜி.மேட், டோபெலில் நல்ல மதிப்பெண்கள்.

2.அமெரிக்காவில் நல்ல கல்லூரியில் இடம் (உதவித்தொகை இருந்தால் மிக நன்று)

3.உங்கள் நிதிநிலைமை பற்றிய திருப்திகரமான அறிக்கை மற்றும் பத்திரங்கள்.

போன பதிவில் ஒரு தகவலை குறிப்பிட்டிருந்தேன்.

"அமெரிக்காவிலுள்ள நல்ல பல்கலைகழகங்களில் சேர ஒன்று பெரும் பணக்காரனாயிருக்க வேண்டும் அல்லது மிகவும் புத்திசாலியாக இருக்க வேண்டும்"

இதை சற்று விளக்க விரும்புகிறேன்.

நீங்கள் ஜிமேட்/ஜிஆர்.ஈ, டோபலில் ஓரளவு நல்ல மதிப்பெண்கள் பெற்றால் அமெரிக்க பல்கலைகழகங்களில் சீட் கிடைக்கும்.விசாவும் கிடைத்து இங்கே வந்து விட்டீர்கள் என்றால் உதவித்தொகை கிடைக்காவிட்டால் உங்கள் ஒரு வருட செலவுகள் சுமார் $35,000 (அதாவது சுமார் 15 லட்சம்)

இரண்டு அல்லது மூன்று வருடங்களுக்கு சுமார் 30 முதல் 45 லட்சம் செலவு செய்ய முடிந்தால், அல்லது தயாராக இருந்தால் தைரியமாக இங்கே வரலாம்.

இங்கே இருக்கும் பல மாணவர்கள் இத்தனை செலவு செய்ய கூடியவர்கள் அல்ல. நிதி நிலை அறிக்கைகளில் கோல்மால் செய்து விசா வாங்கிவிடுவார்கள். இங்கே வந்து உதவித்தொகைக்கு அலையோ, அலை என அலைந்து வாங்கிவிடுவார்கள். இது மிக ஆபத்தான வழி என்பது குறிப்பிடத்தக்கது. ஏனெனில் உதவித்தொகை என்பது படிக்கும் பல்கலைகழகம், நீங்கள் இருக்கும் துறை ஆகியவற்றை பொறுத்து கிடைப்பது. சில சமயம் உதவித்தொகை கிடைக்காமல் போய்விட்டால் இந்த மாணவர்கள் நடுத்தெருவில் நிற்பார்கள். பல மாணவர்கள் உதவித்தொகை கிடைக்க படாத பாடுபட்டு அது கிடைக்காமல் அப்பாவிடம் 5 லட்சம் அனுப்பு, 10 லட்சம் அனுப்பு என கேட்டு அந்த பெற்றோர் படும் வேதனை கண்கொண்டு பார்க்க இயலாது.

இங்கிருக்கும் சில மாணவர்கள் இப்படி குறுக்கு வழியில் போவது உண்மை. அதில் பலர் எப்படியோ இதில் வெற்றிபெறுவதும் உண்டு. பலர் தோல்வி அடைவதும் உண்டு. சில மானவர்கள் சட்டவிரோதமாக கேஸ் ஸ்டேஷன், இந்திய உணவு விடுதிகள் ஆகியவற்றில் வேலை பார்த்து காசு சேர்ப்பதும் உண்டு. ஆனால் இப்படி எல்லாம் கோல்மால் செய்து சிக்கினால் விளைவுகள் மிக மோசமாக இருக்கும் என்பதை சொல்ல வேண்டியதில்லை.

இந்த குறுக்கு வழியில் போவது மிகவும் ரிஸ்கான விஷயம் என்பதால் தான் "அமெரிக்காவிலுள்ள நல்ல பல்கலைகழகங்களில் சேர ஒன்று பெரும் பணக்காரனாயிருக்க வேண்டும் அல்லது மிகவும் புத்திசாலியாக இருக்க வேண்டும்(உதவித்தொகை பெற)" என்று குறிப்பிட்டேன். ஒன்று வரும்போதே உதவித்தொகையுடன் வாருங்கள். அல்லது உதவித்தொகை கிடைக்காவிட்டால் கைகாசு செலவு செய்ய தயாராக வாருங்கள். நிதி அறிக்கையில் கோல்மால் செய்து இங்கே வந்து வேலை செய்து சம்பாதிக்கலாம் , அல்லது எப்படியோ அலைந்து திரிந்து உதவித்தொகை வாங்கிவிடலாம் என்ற நினைப்பில் வருவது மிக ரிஸ்கான விஷயம்.(அமெரிக்க சிறைகளில் என்னென்ன நடக்கும் என்பதை பற்றி பல வதந்திகள் உலா வருகின்றன.)

எனக்கு தெரிந்து இப்படி ரிஸ்க் எடுத்து ஜெயித்தவர்களும் உண்டு, தோற்றவர்களும் உண்டு. தோற்றவர்களின் நிலை மிக பயங்கரமாக இருக்கும். அவர்களின் குடும்பம் படும் வேதனை கண்கொண்டு சொல்ல முடியாது. கேஸ் ஸ்டேஷனில் வேலை பார்ப்பது, உண்டு விடுதி அல்லது குஜராத்தி மோட்டல்களில் வேலை பார்ப்பது, அவுட் ஆஃப் ஸ்டேட்டஸ் ஆகி, ஐ,என்.எஸின் தேடப்படும் நபர் பட்டியலில் வருவது, பாதி படிப்பில் ஊருக்கு திரும்பி போவது என பலருக்கு நேர்ந்திருக்கிறது.

சரி..இப்போது மீண்டும் ஜிஆர் ஈ, டோபலுக்கு வருவோம். இவற்றில் நல்ல மதிப்பெண்கள் எடுப்பது மிக முக்கியம். அப்போதுதான் பெரிய பல்கலைகழகங்களில் சேரவே முடியும்.

உங்கள் ஜிஆர்.ஈ மதிப்பெண்ணை பொறுத்து பல்கலைகழகங்களில் விண்ணப்பம் போடுங்கள். ஒரு விண்ணப்பத்துக்கு எப்படியும் 5000 முதல் 10,000 வரை செலவு ஆகும்.கோர்சை பொறுத்து குறைந்தது 3 அல்லது 4 பல்கலைகழகங்களுக்கு விண்ணப்பம் போட வேண்டும்.ஆக இதற்கு ஒரு 20,000 முதல் 40,000 வரை செலவு ஆகும்.

ஜிஆரீ, டோபலில் குறைவான மதிப்பெண் வாங்கினால் அமெரிக்காவுக்கு விண்ணப்பம் போடவே வேண்டாம் என்றுதான் சொல்வேன்.உங்கள் மதிப்பெண் குறைய,குறைய உங்களுக்கு பெரிய பல்கலைகழகங்களில் சீட் கிடைக்கும் வாய்ப்பு குறையும். தரக்குறைவான பல்கலைகழகங்களில் தான் சீட் கிடைக்கும். இம்மாதிரி ஆகாவழி பல்கலைகழகங்களில் உதவித்தொகை கிடைக்காது. கல்விக்கட்டணமும் மிக அதிகமாக இருக்கும்.இம்மாதிரி பல்கலைகழகங்கள் என்றால் கண்ணை மூடிக்கொண்டு உங்கள் விசா நிராகரிக்கப்படும்.

நுழைவுத்தேர்வுகளுக்கு உயிரை கொடுத்து படிக்க வேண்டும்.ஒரு தரம் எழுத 5000 முதல் 10000 வரை ஆகும் என்பதால் ஒரே முயற்சியில் நல்ல மதிப்பெண் பெற முயலவேண்டும். அதுபோக நீங்கள் நாலைந்து தரம் ஜிமேட் எழுதி மோசமாக மதிப்பெண் பெற்று ஐந்தாம் தரம் நல்ல மதிப்பெண் பெறுகிறீர்கள் என வைத்துகொள்ளுங்கள். ஜீமேட் நடத்தும் நிறுவனத்தார் உங்கள் பழைய மதிப்பெண்களை எல்லாம் நீங்கள் விண்ணப்பம் போடும் கல்லூரிக்கு அனுப்பி வைப்பார்கள். அம்மாதிரி சூழலில் உங்கள் விண்ணப்பம் நிராகரிக்கபடும் அபாயம் உண்டு.

அதனால் தான் சொல்கிறேன். மிகக்கடும் முயற்சி எடுத்து நுழைவுத்தேர்வுகளில் ஒரே முயற்சியில் நல்ல மதிப்பெண் பெற வேண்டும். இப்போது ஜிமேட், ஜிஆரீ, டோபலுக்கு பல சாப்ட்வேர்கள் வந்துள்ளன. அவற்றில் மாடல் டெஸ்ட் எழுதி நல்ல மதிப்பெண் பெற்றால் மட்டும் பரிட்சை எழுத செல்லுங்கள். இல்லாவிட்டால் நுழைவுதேர்வு எழுத போகவே வேண்டாம்.

நுழைவுதேர்வு எழுதும் முன்னரே எந்த பல்கலைகழகங்களுக்கு விண்ணப்பம் போடவேண்டும் என்பதை முடிவு செய்வது அவசியம். நாலைந்து பல்கலைகழகங்களுக்கு இலவசமாக உங்கள் மதிப்பெண்னை அந்த நிறுவனத்தார் அனுப்பி வைப்பார்கள். அதுபோக நீங்கள் அந்த பரிட்சையை எழுதி முடித்ததும் நீங்கள் எத்தனை மதிப்பெண் பெற்றீர்கள் என தோராயமாக கணிணி சொல்லிவிடும். அந்த மதிப்பெண்ணை பொறுத்து அப்போதே நீங்கள் எந்த பல்கலைகழகத்துக்கு உங்கள் ஜிஆரீ/ஜிமேட்/டோபல் மதிப்பெண்ணை அனுப்ப விரும்புகிறீர்கள் என சொன்னால் கொஞ்சம் காசு மிச்சமாகும்.

இல்லாவிட்டாலும் ஒன்றும் பாதகமில்லை.அதன்பின் விண்ணப்பம் போடும் ஒவ்வொரு பல்கலைகழகத்துக்கும் தனித்தனியாக பணம் கட்டி நுழைவுத்தேர்வு மதிப்பெண்களை அனுப்ப வேண்டியிருக்கும்.

(தொடரும்)

பாகம் 1

15 comments:

Anonymous said...

"அமெரிக்காவிலுள்ள நல்ல பல்கலைகழகங்களில் சேர ஒன்று பெரும் பணக்காரனாயிருக்க வேண்டும் அல்லது மிகவும் புத்திசாலியாக இருக்க வேண்டும்"

இதை சற்று விளக்க விரும்புகிறேன். "

good that u've explained more on this.

i know some students they can still survive by student loan(without any oncampus and offcampus jobs). after their graudation, they all will be in debts of 30k+.

you can also probably write how most telugus are surviving:)

+any one with different background can come to US(with 4 yrs of edcation in india)

arunagiri said...

செல்வன்,

பதிவுக்கு அத்தனை தொடர்பற்ற கேள்விதான் என்றாலும், இன்றைய நிலையில் இந்தியாவிலிருந்து மேற்படிப்பு படிக்க அமெரிக்காவிற்கு ஏன் வருகிறார்கள், என்ன மோடிவேஷன் என்ற கேள்விகள் எனக்கு எழுந்ததால் இதனை எழுதுகிறேன்.

பத்து இருபது வருடங்களுக்கு முன் பிஇ படித்து விட்டு நல்ல வேலையும், சம்பாத்தியமும் கிடைக்கும் வாய்ப்புக் குறைவு என்பதனால் பலர் வந்தார்கள்; அல்லது அப்ளைட் சைன்ஸ் (மெடிக்கல் பிஸிக்ஸ், மெட்டீரியல் சைன்ஸ் போன்ற) துறைகளில் உயர் ஆராய்ச்சியில் ஈடுபடுவோருக்கோ, அத்தகைய படிப்புக்கேற்ற வேலைக்கோ இந்தியா தோதாக இல்லை என்பதால் வர முனைந்தார்கள். இரண்டாவதாக சொன்ன காரணம் (கட்டிங் எட்ஜ் துறைகளில் ஆராய்ச்சி) இன்னும் கூட உண்மையாய் இருக்கலாம்- எனக்குத் தெரியவில்லை. முதற்சொன்ன காரணங்களுக்காக இன்று யுஎஸ் வருவது அவ்வளவு உசிதமா?

கம்ப்யூட்டர் படிப்பு மற்றும் வேலைக்காக என்றால் இன்றைய நிலையில் இந்தியாவிலிருந்து அமெரிக்காவிற்கு படிப்பதற்கு ஏன் வருகிறார்கள் (வர வேண்டும்)? ஐடி-யில் பல கட்டிங் எட்ஜ் ஆராய்ச்சிகளும், வேலைகளும் இந்தியாவிலேயே (சில விஷயங்களில் அமெரிக்காவில் இருப்பதை விட அதிகமாக) உள்ளன.

அமெரிக்காவில் செட்டில் ஆவதுதான் மோடிவேஷன் என்றால் ஓக்கேதான். இங்கே வந்து செட்டில் ஆகி இங்கிருக்கும் அன்செர்ட்டனிட்டியை அனுபவித்தபின் இதற்குத்தானே ஆசைப்பட்டாய் அமெரிக்க விரும்பியே என்று தனக்குதானே சொல்லிக் கொள்வார்கள் :)

இன்றைய நிலையில் இங்கு செட்டில் ஆகும் பலரும் குடும்ப நிலை அல்லது குழந்தைகள் மிடில் ஸ்கூல் அளவில் படிப்பில் இங்கு கமிட் ஆகி விட்டது என்பது போன்ற காரணங்கள் இருந்தாலொழிய இங்கேயே இருக்க காரணங்கள் அரிதாகி வருகின்றன என்றுதான் சொல்லத் தோன்றுகின்றது.

கால்கரி சிவா said...

//கனடாவில் மிக நல்ல தரம் வாய்ந்த கால்கரி ,க்வீன்ஸ்//

கால்கரி பல்கலைகழகத்திற்கு நல்ல பெயர் இருக்கிறதா?. என் பையனுக்கு முதல் லிஸ்ட்டில் அட்மிஷன் தந்துவிட்டார்கள். அதனால் சொத்தை பல்கலைகழகம் என நினைத்துள்ளேன். கனடாவில் க்வீன்ஸ், டோராண்டோ, வாட்டர்லூ, ப்ரிட்டிஷ் கொலம்பியா மற்றும் அல்பர்ட்டா தரம் வாய்ந்தவை.

Unknown said...

Anonymous,

Student loan is certainly an option.But for visa it's unwise to show student loan as a source of funds.Also I think there are lots of formalities in Indian banks to get student loans.

Telugus live as a well knit society here.I dont think they support each other financially,but certainly they help their brethren by passing on info,sharing apartments,job info etc.

Unknown said...

அருணகிரி,

கல்வித்தரம்,புரபசர்களின் தகுதி மற்றும் ஆய்வுக்கான வசதிகள் ஆகியவற்றில் இந்திய பல்கலைகழகங்கள் அமெரிக்க பல்கலைகழகங்களை விட பல மடங்கு பின் தங்கியுள்ளன என்பது என் கருத்து.மலைக்கும், மடுவுக்கும் நடுவே உள்ள வித்யாசம் தான் இவ்விரண்டுக்கும் நடுவே உள்ளது.(வெகு சில அபூர்வ விதிவிலக்குகள் இருக்கலாம்)

ஒரு உதாரணம் சொல்லவேண்டுமெனில் ஹார்வேர்ட் பல்கலைகழகத்தின் நிதி கையிருப்பு ஐம்பது பில்லியன் டாலர்.பல நாடுகள்கூட இத்தனை நிதியை கைவசம் வைத்திருக்காது.

அதுபோக திறமை உள்ள மாணவர்களையும், புரொபசர்களையும்,ஆய்வாளர்களையும் ஊக்குவிப்பதில் அமெரிக்க பல்கலைகழகங்கள் மிக திறமையானவை.

இந்தியா இன்னும் போகவேண்டிய தூரம் ஏராளம் இருக்கிறது.

அமெரிக்காவில் செட்டில் ஆகவேண்டிய காரணம்

1.வாழ்க்கைதரம்.

2.திறமையான பணியாளர்களுக்கு நிறுவனத்தில் கிடைக்கும் மரியாதை.பணியாளர்களை அடிமையாக நடத்தாமல் மனிதர்களாக நடத்துவார்கள்.

Unknown said...

சிவா,

மற்ற படிப்புகளில் கால்கரி பல்கலைகழகம் எப்படி என தெரியாது.சந்தையியல் மற்றும் மேலாண்மை ஆகிய படிப்புகளில் நல்ல தரமான கல்வி, ஊக்கத்தொகை ஆகியவற்றை அளிக்கின்றனர்.

இந்த சுட்டியில் கால்கரி பல்கலைகழக எம்.பி.ஏ பற்றிய தகவல்கள் உள்ளன.

http://www.businessweek.com/bschools/04/full_time_profiles/calgary.htm

சராசரியாக எம்.பி.ஏ அட்மிஷனுக்கு ஜிமேட்டில் 621 மதிப்பெண்கள் பெறவேண்டும்.இது மிக அதிகமான தகுதி என்பதாலேயே இது தரமான பல்கலைகழகம் என அறியலாம்

கால்கரி சிவா said...

செல்வன், நன்றி. கால்கரி பல்கலைகழகம் வேதியியல் பொறியியல் மற்றும் மண்ணியலில் மிக புகழ்பெற்றது. என் நண்பரின் மகன் பிஸினஸ் படிக்க க்யீன்ஸ் போயிருக்கிறான்.

அருணகிரி,

இங்கே பல்கலைகழகங்கள், ஆசிரியர்கள் மாணவர்கள் ஆகியோரின் தரம் மிக அருமை. நான் இங்கு எஞ்ஜினியரிங் எகானமிக்ஸ் என்ற கோர்ஸ் படித்தேன்.

என் மகனுடன் படிப்பவர்களில் பாதிபேர் பள்ளிப் படிப்பை முடித்துவிட்டு வேலைக்கோ அல்லது கைத்தொழில் (தச்சு,கொத்தானர் வேலை கார் மெக்கானிக், ப்ளம்பர் ஆகியவை) கற்கவோ போக இருக்கின்றனர். அவ்வாறு செல்பவர்கள் ஓரளவு நல்ல சம்பளம், ஒரு ப்ளாண்ட் கேர்ள் ப்ரெண்ட் கிடைத்து செட்டில் ஆகி விடுகின்றனர்.

வேலைக்காக படிக்க பல்கலைகழகம் செல்ல தேவையில்லாத நிலை இங்கே. கற்க வேண்டும் ஆவலில் பல்கலைகழகம் வருபவர் அதிகம்.
மேலும் நம் நாட்டை போலில்லாமல் கல்லூரி ஆசிரியர்களுக்கு நல்ல சம்பளம் இங்கு கிடைக்கின்றது.

நம்நாட்டில் ஆசிரியர் நிலை பரிதாபம் அதனால் ஆசிரிய வேலைக்கு வருபவர்களின் தரம் மிக பரிதாபமாக் உள்ளது. வேறு வழியே இல்லாமல் ஆசிரியர் வேலைக்கு வருபவர்கள்தான் அதிகம்.

இப்பொதல்லாம் அன்செர்டனிட்டி இந்தியாவில் கூட வந்துவிட்டது. வேலையில் தரமில்லையென்றால் பணிநீக்கம் உறுதி. இங்கே போலவே இந்தியாவிலும் கடனில் வீடு கார் வாங்கி அவஸ்தை படுபவர்களை அறிவேன்

arunagiri said...

செல்வன்,

நீங்களும் சிவாவும் கல்வித்தரம், புரொபசர்களின் தகுதி ஆகியவை குறித்துச் சொன்னதை அப்படியே ஏற்கிறேன். எனக்கு இது பற்றி அவ்வளவாகத் தெரியாதுதான். அதே சமயம் ஒரு கல்விக்கூடம் எவ்வளவு பில்லியன் வைத்திருக்கிறது என்பதை வைத்து மட்டுமே அதன் கல்வித்தரத்தை எடை போட்டுவிட முடியாதுதான். இங்குள்ள சப்பை பல்கலைக்கழகங்கள் கூட நம்மூர் ஆர்.இ.சிக்களை விட அதிக துட்டு கையிருப்பில் வைத்திருக்கும் - காஸ்ட் ஆப் லிவிங் வித்தியாசத்தால். ஹார்வார்டு போன்ற பல்கலைக்கழகங்களுடன் நம்மூர் ஐஐஎம்களை ஒப்பிட்டால், முதலீடு செய்த ஒவ்வொரு டாலருக்கும் கிடைக்கும் கல்வித்தரம் என்ற அளவில் பார்த்தால், ஐஐஎம்கள் ஒன்றும் அத்தனை பின்தங்கியிருக்காது என்றே எண்ணுகிறேன் - இது போலவே ஐஐடிக்களையையும் சொல்லலாம் (காஸ்ட் ஆப் லிவிங் வேறுபாடுதான் முதன்மைக்காரணம்). மைக்கேல் விட்ஸல் போன்ற குப்பைகளும் இதே ஹார்வார்டில்தான் நாற்காலி தேய்த்துக்கொண்டு இருக்கின்றன என்பது உதிரிச் செய்தி.

அமெரிக்க ஈர்ப்புக்கு நீங்கள் சொன்ன இரண்டு காரணங்களில் வாழ்க்கைத்தரத்தை ஒப்புக்கொள்கிறேன். அடிமை போல நடத்துவது என்பதெல்லாம் மிக வேகமாய் மாறி வருகிறது என்றும் திறமையான பொறியாளர்கள் (ஐடி துறையில்) இங்குள்ளதை விட அதிகமாகவே pamper பண்ணப்படுகிறார்கள் எனவும் அறிகிறேன்- ஒவ்வொரு ப்ராஜக்ட் மேனேஜருக்கும் அவரது ப்ராஜக்ட் சரியான வெற்றி அளவைகளை எட்டிப்பிடிப்பது என்பது திறமையாளர்களைத் தக்க வைப்பதில் உள்ளது என்பதால், திறமையாளர்களை மட்டமாக நடத்துவது எல்லாம் குறிப்பாக கடந்த ஐந்து வருடங்களில் வெகுவாகக் குறைந்திருப்பதாக அறிகிறேன்.

ஆனால் இதன் மறுபகுதியாக இங்குள்ளதை விட எல்லா லெவல்களிலும் ப்ரஷர் மிக அதிகம் எனவும் கேள்விப்பட்டேன்- டெலிவரி ப்ரஷர், ப்ரமோஷன் ப்ரஷர், சக பணியாளரிடம் peer pressure என்று பலவிதமாக.

இங்குள்ளது போல் கொத்து கொத்தாக லே ஆப் செய்யப்படும் பிரச்சனை குறைந்தது அடுத்த 10-15 வருடங்களுக்கு இருக்காது என்றாலும், நான் சந்தித்த பல மேனேஜர்கள் மற்றும் பணியாளர்களிடம் 'career வளர்ச்சியில் நாம் பின் தங்கி விடுவோமோ, நமக்குப் பின்னால் உள்ளவன் overtake செய்து விடுவானோ' என்ற insecurity தென்படுகிறது. நம்மை விட வயதில் ஜூனியருக்கு ரிப்போர்ட் செய்வது இன்னும் நம் நாட்டில் மனதளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட விஷயமாக இல்லை என்பதும் இதற்கு முக்கியக் காரணம்.

உங்கள் கட்டுரையைத் தொடருங்கள். நல்ல முயற்சி.

பி.கு: இது போலவே மேற்கில் பல ஆண்டுகள் வேலைசெய்து விட்டு மீண்டும் இந்தியாவிற்குப் போய் தென்னிந்தியாவில் செட்டில் ஆன அனுபவத்தை யாராவது தமிழில் எழுதினால் நன்றாக இருக்கும்.

Anonymous said...

Arunagiri: //அதே சமயம் ஒரு கல்விக்கூடம் எவ்வளவு பில்லியன் வைத்திருக்கிறது என்பதை வைத்து மட்டுமே அதன் கல்வித்தரத்தை எடை போட்டுவிட முடியாதுதான். இங்குள்ள சப்பை பல்கலைக்கழகங்கள் கூட நம்மூர் ஆர்.இ.சிக்களை விட அதிக துட்டு கையிருப்பில் வைத்திருக்கும்//--- -

Best schools use the endowment money as a carrot to attract best professors, best research and best students. Only then they can stay on the top.
Many of the students excel later (alumni) in the life and pay a handsome contribution along with name and fame. That’s how the system runs here. Bigger the endowment, better the colleges are!! Each colleges present their teaching staff- professors— how many are Nobel Prize winners or outstanding research they have contributed.
(you can’t compare to some of our dubakur colleges where the founder is a member of the “most wanted club” .)

Another advantage is the students have an excellent network in terms of jobs/ employment etc.


Selvan: Schools with Financial Aid for International Undergraduate Students.

Profile of Top students: usually top 1% scorer in SAT exams, and at least 3 SAT II subject exams, Have done lot of Internation baccularate (IB) or AP courses, Regional/ national/ state level achiever in athletics music communiyt service etc.,

Following colleges are need-blind toward international students as of now:(list was relatively old)
Harvard
MIT
Princeton
Williams
Yale
Univ. of Pennsylvania

Some US schools are more likely than others to offer financial aid for international undergraduate students.

The lists below indicate which schools offer aid (including grants, loans, and jobs) to the largest numbers of international students. [The lists are based on a list originally compiled by Douglas C. Thompson.-But I have included only selective colleges and are reasonably popular--- but after choosing a college check the facts yourself if you are very interested].

To be included in the following lists, the schools must have an average award that is greater than 1/5 of the cost of attendance. The financial aid may include grants, loans, and jobs, and often includes both merit and need-based awards. Within each group, schools are listed in alphabetical order.

(Remember that a much greater number of schools provide financial aid for international graduate students (i.e MS) in the form of teaching and research assistantships. For information about financial aid for graduate study in the US, you should contact the schools that interest you even if they aren't included in the lists below.)

Schools with Awards to More than 150 Students

Grinnell College (IA)
Harvard (MA)
Illinois Inst. of Tech. (IL)
Louisiana State Univ. (LA)
MIT (MA)
Ohio Wesleyan Univ. (OH)
Princeton (NJ)
Univ. of Pennsylvania (PA)
Univ. of South Florida (FL)

Schools with Awards to 100-149 Students

Brown Univ. (RI)
Dordt College (IA)
Middlebury College (VT)
Northeast Louisiana (LA)
Stanford (CA)
Tri-State Univ. (IN)
Univ. of Miami (FL)
Univ. of Rochester (NY)
Yale (CT)


Schools with Awards to 50-99 Students

Brandeis Univ. (MA)
Columbia Univ. (NY)
Concordia Coll. (MN)
Cornell Univ. (NY)
Rochester Inst. of Tech. (NY)
Trinity College (CT)
Tulane Univ. (LA)

Schools with Awards to 15-49 Students

Amherst College (MA)
CalTech (CA)
Central College (IA)
Colgate Univ. (NY)
Davidson College (NC)
Johns Hopkins (MD)

- extracted from diff sources by thiyagarajan

வடுவூர் குமார் said...

ஆஹா!! இதுக்கு பேரு தான் பதிவு.
பதிவு ஒரு பக்கம் என்றாலும் வந்து பின்னூட்டம் தெரிவிக்கும் கருத்துகளும் எவ்வளவு நேர்த்தி,இந்த மாதிரி பல பதிவுகள் வந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்.
இங்கு வந்திருக்கும் பல விஷயங்கள் எனக்கு இன்னும் கொஞ்ச நாளில் தேவைப்படும் என்று நினைக்கிறேன்.
நல்ல பதிவை கொடுத்தவர்க்கு வாழ்த்துக்கள்

Unknown said...

அருணகிரி,

உங்கள் கேள்விகளுக்கு சிவாவும், தியாகராஜனும் சிறப்பாக பதிலளித்துள்ளனர்.அதற்கு மேல் நான் சொல்ல விரும்புவது என்னவென்றால் தொழிலாளியை சக மனிதனாக நினைக்கும் மனப்போக்கு இந்தியாவில் இல்லை என்பதே. இந்திய கல்வி முறையிலும் மாணவர்களை மதிப்பது இல்லை. பெரும்பாலான கல்வி நிலையங்களில் மாணவர்கள் ஒன்று ரவுடிகளை போல் நடந்து கொள்கிறார்கள்,அல்லது அடிமைகளை போல் நடக்கிறார்கள். சுருக்கமாக புரொபஷ்னலிசம் என்பது சுத்தமாக இல்லை. இது மிகவும் வேதனைக்குரிய விஷயம்.

Unknown said...

தியாகராஜன்,

மிகவும் சிரமப்பட்டு விரிவான தகவல்களை தந்துள்ளீர்கள். வடுவூர் குமார் சொன்னதுபோல் பதிவை விட நல்ல தகவல்களை தரும் பின்னூட்டங்களை நீங்களும், சிவாவும், அருணகிரியும் இட்டுள்ளீர்கள். மாணவர்களுக்கு கண்டிப்பாக இவை பயன்படும் என நம்புகிறேன்.மிக்க நன்றி

வடுவூர் குமார்,

கண்டிப்பாக அமெரிக்கா வர முயற்சி செய்யுங்கள்.என்னால் முடிந்த அத்தனை உதவிகளையும் செய்கிறேன்.நீங்கள் சொன்னதுபோல் அருமையான தகவல்களை பின்னூட்டமாக அளிக்கும் வாசகர்கள் இருப்பது எனக்கு மிகவும் மனநிறைவையும் மகிழ்ச்சியையும் அளிக்கிறது.

Anonymous said...

Mr Vaduvur Kumar: I realized you are from Singapore. One of the best university and very affordable for your son/daughter is University of Texas at Austin . There is a very BIG crowd of Singapore Indians admitted year after year. The tuition and boarding costs are about 20K to 22K/ year. Engineering and Business schools are very popular. Weather is also not very cold here.

Thyagarajan

வடுவூர் குமார் said...

திரு செல்வன்
அழைத்தற்கும், உதவி செய்ய தயாராக இருப்பதற்கும் மிக்க மிக்க நன்றி.
அவசியம் ஏற்பட்டால் கேட்கிறேன்.

திரு தியாகராஜன்
தங்கள் விபரத்துக்கும் நன்றி,ஞாபகம் வைத்துக்கொள்கிறேன்.
தேவையான நிதிக்கு இன்னும் சில ஆண்டுகள் இங்கு வேலை செய்யவேண்டிருக்கும் என நினைக்கிறேன்.
:-))

Anonymous said...

Great post. Keep posting such informational topics.

~Srinivasan